அத்தியாயம் 22
அடுத்த நாள் காலையில் ராயன் வீட்டு முன்னால் “பூங்கொடி வெளியே வா உன்னை விட்டு என்னால ஒரு ராத்திரி கூட தனியா இருக்க முடியல. தியா பாப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுறேன் குழந்தையை பார்க்கணும் போல இருக்கு என்கூட வந்துருடி” என்று கதறிக்கொண்டிருந்தான் தென்னரசு.
அப்போதுதான் சாப்பிட டைனிங் ரூம்குள் போக புறப்பட்ட ராயன் தலையை திரும்பி வாசலை பார்த்தான். அவனோ “என் பொண்டாட்டியை என்கூட அனுப்பி வைங்க ராயன் அண்ணா” என ராயனுக்கு மரியாதை கொடுத்து பரிதாபமாய் பார்த்தான்.
தென்னரசு எப்படியும் காலையில் வருவான் என்று தெரியும் ராயனுக்கு. வாசலை பார்த்து நின்ற முல்லையை “புள்ள இட்லி வை அங்க என்ன வேடிக்கை” எனக்கு டிபன் வை என்றதும் அவள் “தென்னரசு மாமா இந்த வீட்டு மாப்பிள்ளை என்ன சண்டையா இருந்தாலும் வீட்டுக்குள்ள கூப்பிடணும்லங்க” என்றாள் தயங்கியபடியே.
“இந்த வீட்டு மாப்பிள்ளை பட்டத்தை அவன் நேத்தே காத்துல பறக்க விட்டுட்டான்” என தென்னரசு காதில் விழுமாறு சொல்லிவிட்டு டைனிங் ரூம்குள் சென்றுவிட்டான்.
பூங்கொடி ஹாலில் இருந்த சோபாவில்தான் உட்கார்ந்து குழந்தைக்கு செர்லாக் ஊட்டிக்கொண்டிருந்தாள். தென்னரசு பேசுவது அவள் காதில் விழுந்தாலும் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தாள்.
நீலகண்டனும் அழகம்மையும் பூங்கொடியை பார்த்தனர். அவளோ நீங்க வெளியே போகக்கூடாது என்று கண்ணால் மிரட்டி வைத்தாள்.
தெய்வநாயகமோ தோட்டத்தில் வாக்கிங் சென்றிருந்தவர் தென்னரசுவின் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்ததும் “பெரியப்பா என் பொண்டாட்டியை என்கூட அனுப்பி வைங்க அப்பாவை காப்பாத்த எனக்கு வேற வழி தெரியலை அதான் பூங்கொடியை தள்ளி வைக்குறேன்னு சொல்லிட்டேன் என்னை மன்னிச்சுடுங்க ப்ளீஸ் பூங்கொடியையும் பிள்ளையையும் விட்டு என்னால இருக்க முடியலை என்கூட அனுப்பி வைங்கப்பா” என்று கண்ணீர் விட்டான்.
“புருசன் பொண்டாட்டி சண்டைக்குள்ள நான் வரமாட்டேன்ப்பா என் மகனா இருந்தாலும் நான் இடையில போகமாட்டேன் வீட்டுக்குள்ள வா வெளியே நின்னு சத்தம் போடாதே. பூங்கொடிகிட்ட சண்டை போடாதே மன்னிப்பு கேட்டு அன்பா கூப்பிட்டு பாரு. அவளுக்கு விருப்பம் இருந்தா வரட்டும் அவளுக்கு விருப்பம் இல்லனா டிபன் ரெடியா இருக்கு சாப்பிட்டு கிளம்பு எங்கவீட்டுக்கு எதிரியே வந்தாலும் சாப்பாடு போட்டுத்தான் பழக்கம்” என தன்மையாக பேசியவர் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
ரோசம் மானம் பார்க்ககூடாதென மடித்துக் கட்டியிருந்த வேஷ்டியை அவிழ்த்து விட்டு வீட்டுக்குள் சென்றான் தென்னரசு.
“இங்க எதுக்கு வந்த வெளியே போ” என்று வாசலை நீட்டி கையை காட்டினாள் பூங்கொடி அவளது கோபம் எள்ளளவும் குறையாமல் பேசினாள்.
“எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்டி வா” பூங்கொடியின் இடுப்பிலிருந்த தியாவை தூக்கிக்கொண்டான்.
குழந்தையோ “ப்பா ப்பா” என்று அவனது தோளில் சாய்ந்துக் கொண்டது.
“பார்த்தியாடி என் குழந்தை என்னை பார்க்காம ஏங்கி கிடக்குது!” என்றான் தவிப்பாக.
“நேத்து நீ பேசின பேச்சுல நான் சுக்கு நூறா உடைஞ்சு போய் கிடக்குறேன்டா ஒரு நிமிஷம் என்னை யோசித்து பேசி இருக்கணும் நீ” என்று தென்னரசுவின் நெஞ்சில் கையை வைத்து தள்ளினாள்.
“தப்புதான் டி உன்னை வேணாம்னு சொன்னது தப்புதான் டி என்னை அடிச்சிரு” என்று அவளது கையை பிடித்து கன்னத்தில் அடித்துக்கொண்டான்.
“போடா நான் உன்னோட வரமுடியாது” என்று கண்ணீருடன் கூடிய கோபத்தில் வெடித்தாள்.
அழகம்மையோ “ஏய் வாடா போடா பேசாதேடி” என்று மகளை அந்த நிலையிலும் அதட்டினார்.
“அத்தை என் பொண்டாட்டி வாடா போடானு கூப்பிடட்டும் எனக்கு கவலையில்லை என்கூட அவளை வரச்சொல்லுங்க அத்தை” என்று அழகம்மையிடம் கெஞ்சினான். அவரோ மகளை பார்க்க “நான் தேடிக்கிட்ட வாழ்க்கைதானே யாரும் இடையில வராதீங்க” என்றாள் திடமான வார்த்தைகளில்.
ராயனோ சாப்பிட்டு விட்டு டைனிங் அறையில் யாரும் இல்லையென்று உறுதிப்படுத்தி முல்லையின் முந்தானையில் வாயை துடைத்துக்கொண்டு “புருசன் பொண்டாட்டி சண்டையை பாருடி” என்று அவன் இதழ்களில் குறுநகை புரிந்தான்.
“அங்க சண்டை நடக்குது உங்களுக்கு கிளுகிளுப்பா இருக்கா மச்சான்” என்று கணவனை முறைத்தாள்.
“ஆமா எனக்கு உன் மேல கிளுகிளுப்பு சீக்கிரமா கிளம்பு மாட்டுப்பண்ணைக்கு கிளம்பலாம்” என்று அவளது கன்னத்தை தட்டி ஹாலுக்கு வந்தான் ராயன்.
ராயன் தலையை கண்டதும் “அண்ணா நான் பேசியது தவறுதான் அதுக்காக என்னை விட்டு வந்துட்டாளே. பூங்கொடியை அனுப்பி வைங்க அண்ணா” வார்த்தைக்கு வார்த்தை அண்ணா போட்டு கெஞ்சினான்.
ராயனுக்கு சிரிப்பு வந்தது ஆனால் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு “என் அத்தை பொண்ணு வந்தா கூட்டிட்டு போ இல்லைனா டிபன் சாப்பிட்டு நடையை கட்டு” என்றான்.
கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு தென்னரசு மேல் கோபம் இருந்தாலும் பூங்கொடியின் கண்களில் தென்னரசு மீது கோபம்தான் தெரிகிறதே தவிர அவன் மேல் உள்ள காதல் குறையவில்லை என்று படம் போட்டுக் காட்டியது. தென்னரசு தன்னிடம் பேசும் போது அவளது பார்வையை கவனித்துவிட்டான் ராயன்.
“பூங்கொடி என்னோட வாடி”‘ என்று அவளது கையை பிடித்து கெஞ்சினான்.
“சரி வரேன் நாம தனி வீட்டுல இருக்கணும் உன் அப்பாவை விட்டு நீ என்னோட வரணும்” என்றாள் தீர்க்கமான குரலில்.
தென்னரசு பேசாமல் அமைதியாய் நின்றான். “ஏய் அப்பாவுக்கு என்னை தவிர வேற யாரும் இல்லையேடி அவரை எப்படி தனியா விட முடியும் இனிமே அப்பாவை தப்பு பண்ண விடமாட்டேன்டி என்னை நம்பி வாடி” என்று பெரும்மூச்சு விட்டான்.
“அப்பாவா பொண்டாட்டியானு முடிவு பண்ணு” என்று அவன் முன் அழுத்தமான பார்வையுடன் கையை கட்டி நின்றாள்.
“எனக்கு ரெண்டு பேரும் வேணும்டி” என்றான் ஆற்றாமையாக.
தியாவை வாங்கிக்கொண்டவள் “உன் அப்பாகூட இருக்கும் வரை நான் உன் கூட வாழமாட்டேன்” என்றவேளா அவனை முறைத்து அவளது அறைக்குள் சென்று கதவை படாரென்று மூடிவிட்டு கதவில் சாய்ந்து கொண்டு அழுக ஆரம்பித்தாள்.
தென்னரசுவோ மனம் உடைந்து போய் நடை தளர்ந்து வெளியே சென்றவன் படிக்கட்டில் தடுமாறி கீழே விழப்போனவனின் கையை பிடித்த ராயனோ “உன் அப்பாவை தினமும் கண்காணி என்ன பண்ணுறாருனு தெரியும் அவரை திருத்தப்பாரு” என்றவனோ காரில் ஏறிவிட்டான்.
ராஜமாணிக்கம் பண்ணும் பெரிய தவறுகளை தென்னரசுவிற்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார். தென்னரசுவிற்கு தெரியாமல் ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி ஒரு பொண்ணும் இருப்பது மகனுக்கு மட்டும் அல்ல ஊர்காரர்களுக்கும் தெரியாமல் மறைத்துவிட்டார். ஆனால் ராயனின் கழுகு கண்ணுக்கு தெரிந்து விட்டது. ராஜமாணிக்கம் பெண்கள் விசயத்தில் படுமோசம். தென்னரசு வீட்டுக்கு வேலைக்கு வரும் பெண்கள் பயந்துதான் வருவார்கள் பூங்கொடி ஒரு முறை கவனித்து தென்னரசுவிடம் கூறியதும் “என் அப்பாவை பத்தி தப்பா பேசாதே எனக்காக எங்கப்பா கல்யாணம் பண்ணாம வாழ்ந்திட்டிருக்காரு” என்று பூங்கொடியிடம் சண்டைக்கே சென்றுவிட்டான்.
‘ஒருநாள் உங்கப்பா தப்பானவருனு தெரியும் போது ரொம்ப வருத்தப்படுவீங்க’ என்று மட்டும் சொல்லிருந்தாள் பூங்கொடி.
இப்போது இருதலைக்கொள்ளி எறும்பாக தலைகுனிந்து ராயன் வீட்டிலிருந்து வெளியேச் சென்றான் தென்னரசு.
ராயன் கல்யாண வேலையாக வெளியேச் சென்றிருந்தவன் வீட்டுக்கு வந்தவன் முல்லை புறப்படாமல் இருக்க “உன்னை கிளம்பி இருக்கச் சொன்னேனே இன்னும் கிளம்பாம இருக்க” என்று அவன் புருவம் சுருக்கியதும்
“சின்ன அத்தையும் அழகு அம்மாவும் பூங்கொடி அக்கா பக்கம் இருக்காங்க அம்மா ஒருத்தரா சமையல்கட்டுல வேலை பார்த்திட்டு இருந்தாங்க மச்சான் அதான் அவங்களுக்கு ஒத்தாசையா இருந்தேன் இதோ ஐஞ்சு நிமிசத்துல புறப்பட்டு வரேன்” என்று மாடிப்படிகளில் ஏறினாள்.
“ராயா கண்ணன் கல்யாண சாப்பாட்டுக்கு நம்ம மூர்த்தி ஐயர் கிட்ட சொல்லிடலாம். அவங்க காலம் காலமா நம்ம வீட்டு விசேஷத்திற்கு சமையல் பண்ணுறாங்க அவங்களை அழைப்போம் நல்ல நாள் பார்த்து அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துடலாம்” என்றவரிடம்
“நல்லதுங்கப்பா வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்கு அட்வான்ஸ் கொடுத்து வந்துடலாம் நானும் முல்லையும் மாட்டுப் பண்ணைக்கு போய்ட்டு வந்துடறோம்” என்ற நேரம் முல்லை கிளம்பி வந்தாள்.
தையல்நாயகியோ கையில் தியாவுடன் வந்தவர் “ரெண்டு பேரும் ஒருநாள் அங்கே தங்கி இருந்துட்டு வாங்கப்பா” என்றார்.
“சரிங்கம்மா” என்றவனோ தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தியாவை “பட்டுக் குட்டி பெரியப்பாகிட்ட வாங்க” என்று கையை விரித்தான் தியாவோ கிளுக்கி சிரித்து ராயனிடம் தாவியது.
குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுத்து “பெரியப்பாவுக்கு முத்தா கொடுங்க” என்று கன்னத்தை காட்டினான் குழந்தையும் ராயன் கன்னத்தில் முத்தம் கொடுத்தது. தியாவுக்கோ அவன் கன்னத்தில் இருந்த குறுந்தாடி குத்தியதில் முகத்தை சுருக்கியது.
“ஹாஹஹா தாடி குத்துதாடி தங்கம்” என்று குழந்தையின் கன்னத்தில் தாடியை வைத்து கூச வைத்தான். குழந்தையோ கூச்சத்தில் கிளுக்கி சிரித்தது.
மகளை தூக்கி வைத்து கொஞ்சும் தென்னரசுவின் முகம் அவள் எதிரே வந்து போனது. அழுகையை அடக்கிக்கொண்டு ராயன் பக்கம் சென்றவள் “பெரியப்பா வெளியே போய்ட்டு வருவாங்கடா வாங்க” என்று தியாவை தூக்கி வைத்துக்கொண்டாள் பூங்கொடி.
ராயனும் முல்லையும் மாட்டுப்பண்ணைக்கு கிளம்பிவிட்டனர். தென்னரசு வீட்டுக்குச் சென்றதும் “நீ ஏன் டா அந்த வீட்டுக்கு போன உன் மேல உன் பொண்டாட்டிக்கு அன்பு கிடையாது என் மேல இருக்க பாசத்தால அவளை தள்ளி வச்சிடுவனு சொல்லிட்ட அதுக்கு போய் கோவிச்சுக்கிட்டு உடனே அப்பன் வீட்டுக்கு கிளம்பிப் போயிடணுமா! அடுத்த மாசமே உனக்கு நான் கல்யாணம் ஏற்பாடு பண்ணுறேன் கதறியடிச்சுகிட்டு வருவா பாரு” என்றார் நாராச சிரிப்புடன்.
“அப்பா நான் இராமன் என் மனசுல என் பூங்கொடிக்கு மட்டும்தான் இடம் இருக்கு சும்மா கிறுக்குத்தனமா எதையும் பண்ணி வைக்காதீங்க” என்று இதுவரை தன்னை எதிர்த்து பேசாத மகன் இன்று அவன் பொண்டாட்டிக்காக எதிர்த்து விட்டுச் செல்கிறானே என்று நிலைகுலைந்து நின்றவர் இதற்கெல்லாம் காரணமாய் இருந்த ராயனை ஒழித்து கட்டணும் என்று ப்ளான் போட ஆரம்பித்தார்.
சென்னையில் பரமசிவம் தனது செல்வாக்கை காட்ட வேண்டுமென்று மகளின் கல்யாணத்துக்கு தேவையான சீர்வரிசை பொருட்களை வாங்கி குவித்துக் கொண்டிருந்தார்.
“டாடி இப்பவே இத்தனையும் வாங்கணுமா நானும் கண்ணனும் தனியா வந்த பிறகு இந்த திங்க்ஸ் எல்லாம் வாங்கிக்கலாம்ல” என்று சலித்துக் கொண்ட மகளிடம் “உனக்கு சூட்சமம் தெரியாது சும்மா இரு தீபா சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கப்போறேன்” என்றார் விஷமச் சிரிப்புடன்.
“ஓ நம்ம வீட்டு சீர்வரிசையை கொண்டு போனாத்தான் ராயன் அவங்க தங்கச்சிக்கு சீர்வரிசை அள்ளிக்கொடுப்பாருனு ப்ளான் போட்டு பண்ணுறீங்களா செம டாடி” என்று தந்தையை பெருமையாக பார்த்தாள்.
ப்ரனேஷோ “நதியாவுக்கு என்னை பிடிக்கல போல அதுக்குள்ள ரெண்டு பேரும் என்னோட கல்யாணத்துக்கு சீர்வரிசை வரும்னு கனவு காணாதீங்க டாட் நான் கம்பெனிக்கு கிளம்புறேன்” என்று கிளம்பிவிட்டான்.
மாட்டுப் பண்ணைக்குள் கார் சென்றதும் மூக்காயி ஆரத்தி தட்டுடன் நின்றிருந்தார். “எங்க வீட்டு மருமகளே வாங்க வாங்க” என்றார் வாய் முழுக்க புன்னகையுடன்.
“இவங்க எல்லாரும் எனக்கு இன்னொரு குடும்பம் போல கொடி எல்லார்கிட்டயும் நல்லா சிரிச்சு பேசு தயங்கி நிற்காதே” என்று காரை விட்டு இறங்கி முல்லைக்கொடியோடு சேர்ந்து நின்றான் ராயன்.
மூக்காயியோ “ஆத்தி அழகு ரதியை கல்யாணம் பண்ணியிருக்கீங்க எங்க சாமி” சந்தோசத்துடன் ஆரத்தி எடுத்தவர் “தட்டுல காசு போடுங்க இந்த ஆத்தால ஏமாத்தி புடாதீங்க சாமி” என்றார் நமட்டுச் சிரிப்புடன்.
ராயன் குறுச்சிரிப்புடன் பாக்கெட்டிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை தட்டில் போடவும் “நான் விளையாட்டுக்கு சொன்னேன் என் சாமி எனக்கு பணமா போட்டிருச்சு இந்த பணத்தை எடுத்து பொக்கிஷமா வச்சிப்பேன்” என்று பணத்தை எடுத்துக்கொண்டு ஆரத்தியை வெளியே ஊற்றி வந்தார்.
அங்கே இருந்த ஆட்கள் கேட்ட கேள்விக்கும் பதில் கூறிக்கொண்டே வந்தாள். அங்கே இருக்கும் சிறுவர்களுக்கு சாக்லேட்களை பையிலிருந்து எடுத்துக்கொடுத்தாள். குழந்தைகள் “தேங்க்ஸ் அக்கா” என்று வாங்கிக்கொண்டனர்.
ஆரத்தியை ஊற்றி வந்த மூக்காயி “இன்னிக்கு மதிய விருந்து என்னோட கையாலதான் சாப்பிடணும் சொல்லிப்புட்டேன்” என்று ஆர்டர் போட்டார்.
“சரி சமைச்சு என்னோட அறைக்கு கொண்டு வாங்க” என்றவனோ முல்லையின் கை பிடித்து அவன் எப்போது வந்தாலும் தங்க கட்டியிருக்கும் வீட்டிற்கு அழைத்து வந்தான். ஒரு சமையல்கட்டு, பெரிய ஹால், டைனிங் அறை. இரண்டு பெட்ரூம், சாமி அறையென்று நல்ல விஸ்தாரமாக கட்டி வைத்திருந்தான்.
முல்லையோ ஹாலின் ஜன்னலை திறந்து விட்டவளின் முகத்தில் தென்னங்கீற்றின் காற்று அவள் முகத்தில் தென்றலாக அடித்தது. மரத்தில் கிளிகள் இரண்டும் கொஞ்சிக்கொண்டிருந்தது. கண்ணை விரித்து பசுமையை ரசித்துக் கொண்டிருந்தாள். அவளின் பின்னால் வந்த ராயனோ அவளின் இடுப்போடு கை போட்டு அணைத்து அவளது தோள்பட்டையில் முகம் புதைத்து “என்ன புள்ள இடம் பிடிச்சிருக்கா?” என்றான் அவளது கன்னத்தோடு தன் கன்னத்தை உரசியபடியே.
“ரொம்ப பிடிச்சிருக்கு மச்சான்” என்று முகத்தை திருப்பி அவனது கன்னத்தில் முத்தமிட்டாள். ராயனோ “ஜன்னல் வழியே பார்த்து ரசிக்கிறதை விட நேர்ல போய் எல்லா இடத்தையும் சுத்தி காட்டுறேன்” என்றான் அவளது கன்னத்தில் முத்தமிட்டு.
“வாங்க வாங்க போகலாம்” என்று துள்ளல் சிரிப்போடு அவனது கையை பிடித்துக்கொண்டு வெளியேச் சென்றாள்.
முதலில் மாடுகளை பார்க்க கூட்டிச்சென்றான். மாடுகள் பக்கம் சென்று மாடுகளை தொட்டுப்பார்த்தாள் காயம் பட்ட மாடுகளை கண்டு அவளுக்கு அழுகையே வந்துவிட்டது.
“மாடுகளுக்கு வலிச்சிருக்கும்ல ராஜமாணிக்கம் ஐயாவுக்கு தக்க பாடம் புகட்டணும் மச்சான்” என்றாள் கோபத்துடன்.
“நான் பார்த்துக்குறேன்டி இப்ப நாம சந்தோசமா இருக்க வந்திருக்கோம் இந்த நிமிசத்தை வீண் பண்ணாதே ஜாலியா என்ஜாய் பண்ணு” என்று கண்ணைச்சிமிட்டினான்.
அடுத்து ஆடுகள் கட்டியிருக்கும் இடத்திற்குச் சென்றதும் அங்கே ஆடு ஒன்று அப்போதுதான் குட்டிகளை ஈன்றுயிருந்தது. குட்டிகளின் மேல் இருக்கும் கோளைகளை நாவால் சுத்தம் செய்தது ஆடு. குட்டிகள் எழுந்து நடக்க முடியாமல் தத்தி தத்தி விழவும் ஓடிப்போய் வெள்ளை நிறத்தில் இருந்த ஆட்டுக்குட்டியை தூக்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.
ஆட்டுக்குட்டிக்கு பசித்ததோ என்னவோ அது மே மே என்று கத்தியதும் ஆட்டுக்கு பிரசவம் பார்த்த பெண்ணோ “குட்டிக்கு பசிக்கும் கீழ விடுங்கம்மா” என்றதும்
குட்டியை தாய் ஆடு அருகே விட்டாள் முல்லை. குட்டியோ தாயின் மார்பில் முட்டி முட்டி பாலைகுடிக்கவும் முல்லைக்கு வெட்கம் வந்ததுவிட்டது நானும் சீக்கிரம் தாய் ஆகணும் என்று சிரித்துக்கொண்டாள்.
“மச்சான் நானும் சீக்கிரமா குழந்தை பெத்துக்கணும் ஆசையா இருக்கு அதுவும் ஒரே பிரசவத்துல இரண்டு குழந்தை வரணும்” என்றாள் அவன் காதோரம் ரகசியமாய்.
“அதுக்கு தீயாய் வேலை பார்க்கணும் இப்படியே நின்னு ஆட்டுக்குட்டியை பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி” என உதடுகடித்து புருவம் உயர்த்தினான்.
“அச்சோ மச்சான் சும்மா இருங்க எல்லாரும் நம்மைதான் பார்க்குறாங்க” என்று வெட்கிச்
சிரித்தாள்.
“மூக்காயி ஆத்தா நமக்காக சமைச்சு வச்சு காத்திருப்பாங்க வா சாப்பிட போகலாம்” என்றதும் ஆட்டுக்குட்டியை பார்த்துக்கொண்டே பக்கத்திலிருந்த பைப்பில் கையை கழுவிவிட்டு ராயனுடன் நடந்தாள்.
மூக்காயி நாட்டுக்கோழிக்குழம்பும் வறுவலும் பொரித்த மீனும் என்று அசைவ வகைகளாக அடுக்கி வைத்திருந்தார். அதுவும் மண்பானை சமையல் முறையில்.
ராயனுக்கும் முல்லைக்கும் இலையில் அசைவ வகைகளை பரிமாறினார் மூக்காயி. ஒருவாய் நாட்டுக்கோழிக்குழம்புடன் சாப்பாட்டை பிசைந்து சாப்பிட்டதும் “ஆத்தா குழம்பு செம டேஸ்ட் உங்க கைப்பக்குவத்துக்கு நான் அடிமை எப்படி செய்தீங்கனு எனக்கு சொல்லிக்கொடுங்க நானும் செய்து பார்க்குறேன்” என்றபடியே சப்புக்கொட்டி சாப்பிட்டாள் முல்லை.
“ரொம்ப சந்தோசம் இதோ மீன்குழம்பு இருக்கு ஊத்தி சாப்பிடு தாயி” என்று சமைத்ததை கொஞ்சமாக பரிமாறினார்.
ராயனோ “மூக்காயி ஆத்தா என்னையும் கொஞ்சம் கவனிப்பீங்களா?” என்றான் சிரிப்புடன்.
“இதோ உங்களை கவனிக்காம இருப்பேனா உங்களுக்கு பிடிச்ச ஈரல் கறி மசால் போட்டு வறுத்து இருக்கிறேன்” என்று சந்தோச முகத்துடன் பரிமாறினார்.
முல்லை வயிறு முட்ட சாப்பிட்டவளுக்கு மீண்டும் சாப்பாடு வைத்தார் மூக்காயி. “ஆத்தா இதுக்கு மேல என்னால முடியாது போதும்” என்று எழுந்து விட்டாள்.
“இப்படி சாப்பிட்டா எதுக்கு காணும் கண்ணு புள்ள வலி தாங்கணும்ல” என குமட்டில் கைவைத்து சிரித்தார்.
“போங்க அப்பத்தா” என்று கன்னம் சிவந்து எழுந்து கைகழுவச் சென்றாள்.
சமைத்த பாத்திரங்களை மூக்காயி கழுவ கொண்டு போக “நானும் உங்களுக்கு உதவி பண்ணுறேன் ஆத்தா” என்றவளை “நீங்க ரெஸ்ட் எடுக்க வந்திருக்கீங்க தாயி போங்க நான் பார்த்துக்குறேன்” என்ற பெரியவரை “நீங்க அமைதியா உட்காருங்க நான் கழுவி வைக்குறேன்” என்று மூக்காயின் கையை பிடித்து அங்கிருந்த நாற்காலியில் உட்கார வைக்க “அச்சோ இந்த நாற்காலியில் எல்லாம் உட்கார மாட்டேன் எனக்கு தரையில காலை நீட்டி உட்காரணும் தாயி” என்றவரோ சட்டென்று தரையில் உட்கார்ந்துவிட்டார்.
மூக்காயிடம் பேசிக்கொண்டே பாத்திரங்களை கழுவி வைத்தவளோ “உங்க பசங்களெல்லாம் என்ன பண்ணுறாங்க ஆத்தா?” என்றதும் மூக்காயி அழுக ஆரம்பித்தார்.
“என் பசங்க ரெண்டும் என்னை கவனிக்காம என்கிட்ட இருந்த வீடு, தோப்பு எல்லாம் என்னை ஏமாத்தி புடுங்கிக்கிட்டாங்க நானும் என் பசங்கதானே அனுபவிச்சிட்டு போறானுங்கனு விட்டுட்டு ராயன் சாமி பண்ணைக்கு வேலைக்கு வந்துட்டேன். ராயன் சாமி என் விசயம் தெரிந்து என் பசங்களை மிரட்டி என் காலுல விழவச்சாரு. ஆனா என்னை வேணாம்னு உதாசீனம் செய்தவங்க கூட இருக்க பிடிக்கலைனு சொல்லிட்டேன். ராயன் சாமி துணையா இருக்கும் போது எனக்கு என்ன கவலை தாயி” என்றார் ஆனந்த கண்ணீரோடு. ராயன் மேல் இன்னும் காதல் அவளுக்கு பெருகியது.
மூக்காயியோ “ரெஸ்ட் எடுங்க தாயி நான் கிளம்புறேன் விட்டா நீங்க என்கிட்ட பேசிக்கிட்டே இருப்பீங்க” என்று பெரும்மூச்சு விட்டு கையை நிலத்தில் ஊன்றி எழுந்தார்.
வீட்டின் முன்னே போட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருந்த ராயனுக்கு வெத்தலையை மடித்து ராயன் வாய்க்குள் ஊட்டி விட்டாள்.
“உனக்கு வேணாமா புள்ள?” என்றான் வெத்தலையை மென்றுக் கொண்டே.
“இருந்த வெத்தலையை உங்களுக்கு கொடுத்துட்டேனே” என்றாள் கண்களை சுழட்டி.
அடுத்த நொடி அவனது வாய்க்குள் இருந்த பாதி வெத்தலை முல்லைக்குள் இடம் மாறியது.
அவளோ “என்ன இது வெட்டவெளியில” என்று சிணுங்கி சிவந்தாள்.
“இங்க யாரும் வரமாட்டாங்க புள்ள என் மனசுக்கு ஏதும் பாராம இருந்தா இந்த வீட்டுக்கு வந்துடுவேன் யாரும் என்னை தொந்தரவு பண்ணமாட்டாங்க” என்றவனோ தன்னவளை தோளில் கைபோட்டு நெருக்கிக் கொண்டான்.
“இப்ப உங்க மனசு பாராம இருக்கா மச்சான்?” என்று முட்டைக்கண்ணை விரித்ததும் “நீ பக்கம் இருக்கும் போது என் மனசு மயிலறகு போல லேசா ஆகிடும் புள்ள” என்று அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
This is very interesting, You are a very skilled blogger.
I’ve joined your rss eed andd look forward to seeking more of your great post.
Also, I have shared your site in my social networks!
Feel free to visit my blog – чиллер для охлаждения воды замкнутая система промышленный