அத்தியாயம் 24
“யாரை பத்தி யாருக்கிட்ட வந்து கதை சொல்லுற என் நண்பன் உன்னை போல சாக்கடைனு நினைச்சியாடா” என்று நண்பனை பற்றி அவதூறாய் பழி போட்டதும் கோபத்தில் நாக்கை கடித்துக்கொண்டு கருப்பசாமியை போல அகங்காரமாக நின்றான்.
கன்னத்தை பிடித்துக்கொண்டு எழுந்து நின்ற ராஜமாணிக்கத்தின் ஆள் மாரியோ “நான் சொல்றது சத்தியம் அண்ணா நீங்க வேணா வந்து பாருங்க” என்று நதியா இருந்த அறைபக்கம் சென்றான்.
கண்ணனும் தீபாவும் சாப்பிடச் சென்றிருந்தனர்.
ராயனின் மனதில் ஏதோ உறுத்தல் இருந்துக்கொண்டே இருந்தது.
‘சிவபெருமானே என் நண்பன் நல்லவன் என் தங்கச்சியும் நல்ல பொண்ணு நாங்க அவளை தவறான முறையில வளர்க்கல எங்க வீட்டுப்பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு இவன் ஏதோ குடிச்சிபுட்டு வந்து உளறுறான்’ என்று நம்பிக்கையோடு வேக நடையுடன் நதியாவின் அறைக்குச் சென்றான்.
ஊர் தலைவர் ரங்கசாமியும், ராயனின் வீட்டு பங்காளிகளும் ராயன் பின்னே சென்றனர்.
“கதவை திறடி” என்று அறைக்கதவை தட்டிக்கொண்டிருந்தாள் முல்லைக்கொடி எந்த விபரமும் அறியாமல்.
‘பாலாஜி அண்ணா கிடைக்கலனு தவறான முடிவை எடுத்துட்டாளோ?’ என்று அவள் மனம் பதறியது.
மண்டபத்தில் காட்டுத் தீ போல பாலாஜி நதியாவின் அறைக்குள் இருப்பது பரவியது. ராயன் வீட்டு பெரியவர்களுக்கு விசயம் தெரிந்து விட கோமளமோ “பாவி மக என் வயித்துல நெருப்பை அள்ளி கொட்டிட்டாளே” என மகளை கரித்து கொட்டிக்கொண்டு நதியாவின் அறைக்கு புலம்பிக்கொண்டே வந்தார்.
தையல்நாயகியோ “அக்கா நம்ம வீட்டு புள்ள மேல நாம நம்பிக்கை வைக்கணும் சந்தர்ப்ப சூழ்நிலையோ என்னவோ தெரியல நாம போய் பார்த்துட்டு பேசுவோம் வாங்க” என்று கோமளத்தை சமாதானப்படுத்தி அவருடன் நடந்தார்.
நதியா அறை முன்னே கையில் ஜுஸுடன் நின்றிருந்த முல்லையோ கண்கள் சிவக்க வேங்கை போல நடந்து வரும் கணவனை கண்டு மிரண்டு விட்டாள்.
“இங்க எதுக்கு நிற்குற காவலுக்கா?” என்றான் கர்ஜனையாக.
“அ.அது வந்து நதியாவுக்கு ஜு. ஜுஸ் கொ.கொண்டு வந்தேன் மச்சான்” என்றவளுக்கு குரல் நடுங்கி வந்தது.
“தள்ளி நில்லு புள்ள” என்று குரலை உச்ச ஸ்தானத்தில் உயர்த்தியதும்
“எ.என்னாச்சு மச்சான் ஏன் உங்க முகம் கோபமா இருக்கு?” என்றாள் அச்சத்துடன்.
முல்லை பேசுவது ராயன் காதில் விழவில்லை. நெருங்கிய சொந்தங்கள் மட்டும் மண்டபத்தில் இருக்க அனைவரும் நதியாவின் அறை முன்னே வந்துவிட்டனர்.
“இந்த வீட்டு கல்யாணம் எப்போதும் பிரச்சனையோடதான் முடியும் போல” என்று குசுகுசுவென பேசிக்கொண்டனர் பெண்கள் கூட்டம்.
“நதியா கதவை திற” என்று கதவை உடைத்து விடும் அளவிற்கு தட்டினான் ராயன்.
பாலாஜியோ “என் நட்புக்கு துரோகம் பண்ண வச்சிட்டியேடி என் நண்பன் உடைஞ்சு போயிடுவான்டி நான் அவமானப்படறது கூட எனக்கு பெரிசா தெரியலை என் நண்பன் என்னால தலைகுனிஞ்சு அவமானப்படுவானே டி” என்றான் ஆற்றாமையாக.
நதியாவோ “எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க இந்த வழியை தவிர வேற எதுவும் எனக்கு தெரியலை பாலாஜி. அண்ணா நம்ம கல்யாணத்துக்கு ஓ.கே சொன்னாலும் எங்க அம்மா என்னை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கமாட்டாங்க அண்ணா வீட்டு பெரியவங்க பேச்சுக்கு மரியாதை கொடுப்பாரு நம்ம காதலுக்கு சரினு பச்சை கொடி காட்ட மாட்டாரு இப்போ நாம ஒண்ணா இருக்கறதை பார்த்தா என்னை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க” என்றாள் சுயநலமாக.
“உன் குடும்ப மானம் காத்துல பறக்கும்னு கொஞ்சம் கூட கவலை இல்லையாடி! நான் உங்க வீட்டு உப்பை தின்னுருக்கேன். எனக்கு இப்படியொரு நிலை வந்துடுச்சேனு என் மனசு உயிர் போற வலியா இருக்கு இதை விட என் நண்பன் வீட்டு பொண்ணு அவமானப்படக்கூடாதுனு கவலைப்படறேன்டி” என்று நெஞ்சை பிடித்தான் ஆதங்கத்துடன்.
ராயனோ “நதியா இப்போ கதவை திறக்குறியா இல்ல உடைச்சு உள்ளே வரட்டுமா?” என்று காலால் எட்டி உதைத்தான் ஆத்திரத்தில்.
“ஏய் நான் பேசற வரைக்கும் நீ வாயை திறக்கக்கூடாதுடி! சேலையை எடுத்து சீக்கிரம் கட்டு” என்றான் பல்லைக்கடித்து அவளோ “மாட்டேன்” என்று தலையை வேகமாய் ஆட்டினாள்.
“அறிவுக்கெட்டவளே நீயெல்லாம் ராயன் வீட்டு பொண்ணா சீ” என்று அவளை கடுப்பாக பார்த்தவன் தான் போட்டிருந்த சட்டையை கழட்டி நதியாவின் மேல் போட்டு “பட்டனை போடுடி” என்று கண்ணை உருட்டி மிரட்டினான்.
கதவை மெதுவாய் திறந்தான் பாலாஜி.
எதற்கும் கலங்கி நிற்காத ஆறடி ஆண்மகனின் கால்கள் நடுங்கியது. ராயனின் காலுக்கு கீழ் பூமி பந்து நழுவுவது போல இருந்தது.
அவனின் நெஞ்சை கூர்வாளால் அறுத்தது போல துடித்து நின்றான் ராயன் ஒரு நிமிடம் நெஞ்சை பிடித்துக்கொண்டான்.
“மச்சான்” என்ற பதறியவளை தலையை திருப்பி மெதுவாய் பார்த்த நெருப்பு பார்வையில் ஒரு அடி தள்ளி நின்றாள் முல்லை.
பாலாஜியின் பின்னால் நின்றிருந்த நதியாவோ பாலாஜியுடன் சேர்ந்து நின்றாள்.
கோமளமோ “ராயா இந்த நாயை வீட்டுக்குள்ள விடாதேனு சொன்னேன்ல நாயை குளிப்பாட்டி வச்சாலும் நாயோட குணம் இதுதான்னு காட்டிடும் இவன் நம்ம குடும்பத்தோட மானத்தை வாங்கிட்டான் பார்த்தியா” என்று கோபத்தில் எரிந்து விழுந்தார்.
பாலாஜியோடு ஒட்டி நின்ற நதியாவை கண்டு சினம் கொண்டு “ஏன் டி நான் உனக்கு பணக்கார வீட்டு மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கேன் கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னேன்! ஆனா நீயோ இப்படி இந்த அடுத்த வேளை சோத்துக்கு உன் அண்ணன் கையை எதிர்பார்த்து நிற்கறவன் கூட சேர்ந்து கூத்தடிச்சு நம்ம குல பெயரை நாசம் பண்ணிட்டியேடி” என்று பாலாஜியின் பக்கம் நின்ற நதியாவின் கையை பிடித்து இழுத்து நதியாவின் கன்னத்தில் மாறி மாறி அறைய ஆரம்பித்தார்.
“அம்மா நிறுத்துங்க நான் தான் பாலாஜியை என்” என்று நதியா ஆரம்பிக்கும் முன் “எனக்கு நதியாவை பிடிச்சிருந்துச்சு அவளுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணறது தெரிஞ்சுத்தான் நதியா அறைக்குள்ள போய் அவகிட்ட தவறா நடந்துக்கிட்டேன்” என்று அவனாக நண்பன் வீட்டு பெண்ணுக்கு கெட்ட பெயர் வரக்கூடாதென தன் மேல் பழியை தூக்கிப்போட்டான்.
“நானும் பாலாஜியை விரும்பினேன் அம்மா” என்றவளை கன்னத்தில் அறைந்தது கோமளம் கிடையாது ராயன்.
“மச்சான்” என்ற முல்லையின் பக்கம் திரும்பியவன் “ஓ நீ இவங்க ரெண்டு பேருக்கும் காவலா விளக்கு பிடிச்சு நின்னியாக்கும்” என்று அவளை விஷம் கொண்டு வார்த்தையை அம்பாக எய்தவனோ அவள் கன்னத்தில் தீப்பொறி பறக்க அறைந்தான்.
ராயன் அறைந்த வேகத்தில் “அம்மா” என்று முல்லை மயங்கி விழப்போக
“அச்சோ என் பொண்ணு” என்று அமுதா ஓடிவரும்முன்னே நீலகண்டன் ஓடிவந்து முல்லையை தாங்கிக்கொண்டார்.
“ராயா என்ன பண்ணுற மாசமா இருக்க பொண்ணை கைநீட்டி அடிக்குற! முல்லை என்ன தப்பு பண்ணினா?” என்று மருமகனிடம் சண்டைக்குச் சென்றார்.
“இவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க மாமா நதியா பாலாஜியை விரும்புறது இவளுக்கு தெரியாம இருக்குமா இவ என்கிட்ட உண்மையை மறைச்சிருக்கா இன்னும் என்ன உண்மையை என்கிட்ட மறைச்சு வைச்சுருக்க?” என்று அவன் முல்லையை அடிக்க கையை ஓங்கிக்கொண்டு போக “அப்பா” என்று நீலகண்டனின் தோளுக்குள் முகத்தை மறைத்துக்கொண்டவள் தன் கணவனின் வார்த்தைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் துவண்டு போய் நீலகண்டனின் தோளில் சாய்ந்துக் கொண்டு விசும்பினாள்.
“ராயா முல்லைக்கு எதுவும் தெரியாது எங்க மேலதான் தப்பு” என்ற பாலாஜியின் கன்னத்திலும் ஓங்கி அறைந்தவன் “நீயாடா என் குடும்பத்துக்கு துரோகம் பண்ணியிருக்க இல்ல என் நண்பன் துரோகம் பண்ணியிருக்க மாட்டான் நான் நம்ப மாட்டேன் என்ன நடந்துச்சுனு உண்மையை சொல்லுடா” என பாலாஜியின் கண்களை கூர்மையாக பார்த்தான்.
பாலாஜியோ கண்ணைமூடித்திறந்து நதியாவின் பேர் கெட்டு விடக்கூடாதென “நா.நான் தான் நதியா இருந்த அறைக்குள்ள போனேன் ராயா” என்று கூறுவதற்குள் பாலாஜி ஆயிரம் முறை செத்து பிழைத்தான்.
அவன் கண்கள் பொய் சொல்கிறது என்று ராயன் கண்டுபிடித்து விட்டான். ஆனால் தான் தான் குற்றம் செய்தேன் என்று ஒப்புக்கொள்ளும்போது ராயன் எந்த முடிவும் எடுக்கமுடியாமல் தடுமாறினான்.
தென்னரசுவும் கல்யாணத்துக்கு வந்திருந்தான். ராஜமாணிக்கத்தின் ஆள் ராஜமாணிக்கத்திற்கு போன் செய்து “ஐயா நீங்க சொன்னது படியே ராயன் குடும்ப மானம் காத்துல பறக்குது” என்று சொல்லும் நேரம் தென்னரசு அவனிடமிருந்து போனை வாங்கி காதில் வைத்த தருணம் “நான் இப்பவே வரேன்டா ராயன் குடும்பத்தை சந்தி சிரிக்க வைக்குறேன் நான் கேட்குற கேள்வியில் ராயன் குடும்பம் மொத்தமும் நாக்கை பிடுங்கிக்கிட்டு சாகணும்” என்றார் தன் எதிரி குடும்பத்தை பழிவாங்க போகும் குஷியில்.
“அப்பா நீங்க இங்க வரக்கூடாது போதும் பழி உணர்ச்சி இதோட நிறுத்திடுங்க என் பொண்டாட்டியோட குடும்பத்தோட மானம் முக்கியம் இங்க ஏற்கனவே எல்லாரும் நிலைகுலைஞ்சு போய் நின்னுட்டு இருக்காங்க. என் மேல் நீங்க உண்மையா பாசம் வைச்சிருக்கீங்கனா இங்க வரக்கூடாது” என்றான் திடமான குரலில்.
“டேய் உனக்கு ஒரு மண்ணும் தெரியாது” என்று மகனை ராஜமாணிக்கம் அதட்டினார்.
“நீங்க வரக்கூடாது அப்படி வந்தீங்கனா நான் உங்க கூட பேசமாட்டேன் வீட்டு பக்கம் தலை வைச்சு படுக்கமாட்டேன். உங்க மகனை நீங்க மறந்துடவேண்டியது தான்” என்றான் மிரட்டலாகவே.
“ம்ம் நான் வரலைடா எனக்கு நீ தான் முக்கியம் யாரோ எக்கேடோ போனா எனக்கென்ன” என்று போனை வைத்து சுவற்றில் கையை குத்திக்கொண்டார் ராஜமாணிக்கம். தன்னை அவமானப்படுத்திய ராயனை பழிவாங்க முடியாமல் போனதே என்று நெஞ்சுக்குள் குமுறினார்.
ஊர்த் தலைவரோ “ராயா உன் தங்கச்சியும் உன் நண்பன் பாலாஜியும் ரூம்க்குள்ள ஒண்ணா இருந்துருக்காங்க அதுவும் பாலாஜியோட சட்டையை நம்ம பொண்ணு நதியா போட்டிருக்கு இதுக்கு மேல நதியாவை வேற ஒரு பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறது முறையானது அல்ல. ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்கிறது தான் நியாயம்” என்றவரோ
தன் குடும்பதிற்கு இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டதே என்று மனம் வெதும்பி நின்ற தெய்வநாயகத்திடம் “என்னப்பா சொல்லுற தெய்வநாயகம்?” என்றதும்
தெய்வநாயகம் பேசும் முன் கோமளமோ “இவ எங்க வீட்டுப் பொண்ணு இல்ல இவளை நாங்க தலைமுழுகிட்டோம் எப்போ கட்டியிருந்த சேலையை விட்டு கண்ட அனாதையோட சட்டையை போட்டு நின்னாளோ அப்பவே எங்க வீட்டு பொண்ணு இல்ல” என்றார் ஆத்திரமாக.
“அம்மா” என்ற நதியாவை “என்னை அம்மானு கூப்பிடாதே வெளியே போடி உனக்கு ஒரு நயா பைசா சொத்து கிடையாது காசு பணத்தோட இவன் கூட வாழலாம்னு பார்த்தியா ராயா இவளுக்கு நம்ம வீட்டு சொத்துல ஒரு பைசா கூட கொடுக்ககூடாது வயிறெரிஞ்சு சொல்லுறேன் நீ நல்லாவே இருக்கமாட்ட டி” என்று சாபம் விட்டார் கோமளம்.
“அக்கா என்ன பேசுறீங்க நம்ம பொண்ணுக்கு நாமளே சாபம் கொடுக்கக்கூடாது !” என்றவர்
இன்னும் கோவம் தணியாது நின்ற மகனிடம் “ராயா அவசரப்பட்டு வார்த்தையை விடாதே பாலாஜி நல்ல பையன் நதியாவை பாலாஜிக்கு கல்யாணம் பண்ணிவச்சிடலாம்” என்றார் படபடப்புடன் மகன் இருக்கும் கோபத்தில் பாலாஜியை ஏதாவது ஏடாகூடமாக செய்துவிட்டால் அது நதியாவைத்தானே பாதிப்புக்குமென்று மருகினார் தையல்நாயகி.
ராயனின் பங்காளிகளோ “ஊர் பேர் தெரியாத அனாதைபயலுக்கு நம்ம வீட்டுப் பொண்ணை கொடுப்பதா அவன் நம்ம வீட்டு மாப்பிள்ளையா வரக்கூடாது ராயா! இந்த நாயோட கையை காலை உடைச்சு போடணும்” என்று பாலாஜியை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு வந்தான் ராயனின் பங்காளி.
“யாரும் எங்க குடும்ப விசயத்துல தலையிட வேணாம்! பாலாஜிக்கும் என் தங்கச்சி நதியாவுக்கும் கல்யாணம் நடக்கும் உங்களுக்கு விருப்பம் இல்லைனா இங்கிருந்து நடையை கட்டுங்க” என்றான் கர்ஜனையாக.
பங்காளிகளில் ஒருவரோ “எப்பா இளவட்டங்களா நம்ம ராயன் முடிவுல ஏதோ ஒரு காரணம் இருக்கும்” என்று ராயனை பகைத்துக்கொண்டு எந்த ஒரு காரியமும் பண்ண முடியாதென்று அனைவரும் ராயனின் முடிவுக்கு கட்டுப்பட்டு நின்றனர்.
கோமளமோ “ராயா நீ என்ன பேசுற எப்ப இந்த அனாதை நாயோட சட்டையை போட்டு நின்னாளோ இவ என்னோட பிள்ளை கிடையாது! என் முகத்துல முழிக்கக்கூடாது! இங்கிருந்து போடி வெளியே” நதியாவின் கழுத்தை பிடித்தார்.
பாலாஜியின் கையை இறுகப்பற்றிக்கொண்டாள் நதியா. பாலாஜியோ நதியாவின் கையை பிடிக்காமல் ராயனையே பார்த்திருந்தான்.
ராயனோ “பெரியம்மா நதியா விருப்பப்பட்ட வாழ்க்கையை நாம அமைச்சுக்கொடுக்கணும் நீங்க தடுத்தாலும் யார் தடுத்தாலும் பாலாஜிக்கும் நதியாவுக்கும் நான் கல்யாணம் பண்ணி வைப்பேன்” என்றான் உறுதியாக.
“ராயா நீ நம்ம குலத்துக்கு பங்கம் வரவைக்குற இது நல்லாயில்ல” என்று மிரட்டினார் கோமளம்.
“நம்ம குல சாமி நம்ம பொண்ணு சந்தோசமா இருக்கும்னுதான் நினைக்கும் பெரியம்மா அவளுக்கு பிடிக்காத வாழ்க்கையை அமைச்சு கொடுத்து அவ வாழ்க்கை நாசம் ஆகணும்னு நினைக்காது. நான் பாலாஜிக்கு நதியாவை கல்யாணம் பண்ணி வைப்பேன்” என்றவனோ மணவறையில் தாம்பூலத்தில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் சரடை எடுத்து பாலாஜியின் கையில் கொடுத்து “தாலியை கட்டுடா” என்றான் பாலாஜியின் முகம் பார்க்காமல்.
அவனோ “நீ என் முகத்தை பார்த்து சொல்லுடா” என்றான் கரகரப்பு குரலில்.
“உன் முகத்தை பார்க்க எனக்கு கோவமா வருதுடா” என்றதும் நொறுங்கிப்போனான் பாலாஜி.
“நீ நீ என் முகம் பார்க்காம உன் தங்கச்சி கழுத்துல தாலி கட்டமாட்டேன்” என்றவனின் குரல் தடுமாறியது.
பாலாஜியின் கன்னத்தில் ஓங்கி பளாரென அறைந்து “தாலியை கட்டுடா” என்று பல்லை கடித்தான்.
“இப்போ கட்டுறேன்டா” என்ற பாலாஜி கண்ணில் கண்ணீருடன் நதியாவின் முகம் பார்க்காமல் அவள் கழுத்தில் தாலிகட்டி முடித்தான்.
மண்டபத்தில் நின்றவர்கள் “இவங்க ரெண்டு பேரும் என்ன மாமன் மச்சான் உறவு கொண்டாடுறாங்களா ராயன் தனக்கு துரோகம் பண்ணியவங்களை மன்னிக்கவே மாட்டான். ஆனா இவன் தங்கச்சியை அவன் நண்பனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்குறான்” என்று ஒன்றும் புலப்படாமல் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
கோமளமோ நதியாவின் முன்னே வந்து நின்றவர் “உன் கழுத்துல காதுல எங்க வீட்டு நகை ஒரு பொட்டு தங்கம் இருக்கக்கூடாது எல்லாத்தையும் கழட்டி வச்சிட்டு அந்த அனாதை பயலோடு போடி” என்றார் ஈவு இரக்கமில்லாமல் குடும்ப கௌரவம்தான் முக்கியமென்று நின்றார்.
பாலாஜியோ நதியாவை பார்த்தான். அவளோ காதில் கழுத்தில் கையில் போட்டிருந்த அனைத்து நகைகளையும் கழட்டி வைத்தவள் போன வருடம் அவள் பிறந்த நாளுக்கு ராயன் வாங்கி போட்ட முத்து வைத்த கொலுசை கழட்ட முடியாமல் கண்ணீர் விட்டு ராயனை நிமிர்ந்து பார்த்தாள். அவனோ திரும்பி நின்றுக் கொண்டான் புறம்கை கட்டிக்கொண்டு.
“அ.அண்ணா” என்று நதியாவின் குரல் பிசிறி தட்டி வந்தது.
“நீ விருப்பப்பட்ட வாழ்க்கையை கொடுத்துட்டேன் நான் உன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை சீர் குலைய வச்சிட்டு இந்த அண்ணா கூட பேசாதே” என்ற விதமாக முகத்தில் கடுகடுவென வைத்திருந்தான் ராயன்.
தெய்வநாயகமோ நதியா கழட்டி கையில் வைத்திருந்த நகைகளை பார்த்தவர் “நதி பாப்பா இந்த நகையெல்லாம் வச்சிக்க அம்மா நீ இப்படி பண்ணிட்டங்குற ஆதங்கத்துல பேசுறாங்க” என்று மகளின் தலையை தடவிவிட்டார்.
“என் மேல கோபம் இல்லையா சித்தப்பா உங்களுக்கு” என்றாள் கண்ணில் வழிந்து வரும் கண்ணீரை துடைத்துக்கொண்டே.
“உன் மேல எங்களுக்கு கோவம் இல்லடா எங்ககிட்ட உன் மனசுல இருக்கறதை சொல்லலையேனு வருத்தம்தான்” என்றார் தெய்வநாயகம் மனத்தாங்கலாக.
“என்னை மன்னிச்சிடுங்க சித்தப்பா நான் தான்” என்று அவள் பேச ஆரம்பிக்கும் முன் “நதியா நகைகளை உங்க அம்மா கையில கொடுத்துட்டு வா” என்றவனோ அவளது காலில் ராயன் வாங்கிக்கொடுத்த கொலுசு கழட்டாமல் இருப்பதை பார்த்தவன் சட்டென்று நதியாவின் கால் பக்கம் குனிந்து அவளது காலிலிருந்த கொலுசின் திருகாணியை கழட்டி இதையும் “கொடுத்துட்டு வா உன்னை வைச்சு காப்பாத்த என் உடம்புலயும் மனசுலயும் தெம்பு இருக்கு” என்றான் ராயனை பார்த்துக்கொண்டு.
அவனோ கை முஷ்டியை இறுக்கிக்கொண்டு நின்றிருந்தான். தான் நம்பியவர்கள் தன்னை ஏமாற்றி விட்டார்களே என்று தவியாய் தவித்துக் கொண்டிருந்தான் ராயன்.
நதியாவோ தன் கைகளில் உள்ள நகைகளை “அம்மா இந்தாங்க உங்க நகையெல்லாம்” என்று கோமளத்திடம் கொடுக்க மகளை நிமிர்ந்து பார்த்தவர் “இப்படியே கழுத்துல மஞ்சள் கயிறோடு காலம் முழுக்க இருக்கப்போற அந்த அனாதை நாய்” என்று கோமளம் பேச ஆரம்பித்ததும்.
“அம்மா என் புருசனை அனாதைனு இன்னொரு முறை சொல்லாதீங்க அவருக்கு பொண்டாட்டி நான் இருக்கேன்! ஒரு நாளும் உங்க வீட்டுக்கு முன்னே கை ஏந்தி சாப்பாட்டுக்கு நிற்கமாட்டேன்” என்று கோமளத்திடம் சண்டைக்காரி போல நின்றாள்.
“போடி போடி போக்கத்தவளே பொழைக்க தெரியாதவளுக்கு வாய் ஒன்னுதான் கேடு! இன்னும் மூணு மாசத்துல வயித்துல ஆச்சுனா அப்பத்தெரியும் பணம் காசோட அருமை பிரசவம் பார்க்க உன் புருசன் கிட்ட பணம் இருக்கா வக்கத்த பயலுக்கு” என்றார் ஏளனத்தோடு.
“நதியா போகலாம்” என்றான் கோமளத்தின் அவமானப் பேச்சுக் கேட்கமுடியாமல் ராயனுக்காக கோமளத்தின் பேச்சை தாங்கிக் கொண்டு நின்றான் பாலாஜி.
தன்னை அனாதை என்று யாராவது ஏசினால் நான் இருக்கேன் என்று மார்தட்டி நிற்கும் என் நண்பன் இன்று வாய் பேசாமல் ஊமையாய் நிற்கிறானே என்று பெரும்கவலை பாலாஜிக்கு.
நதியாவின் கையை பிடித்துக்கொண்டவனோ அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கார் சாவியை ராயன் முன்னே சென்று நீட்டினான்.
சாவியை வாங்கிய ராயனோ “ஆபீஸ் சாவியை கொடுத்துட்டு போ என் ஆபிஸ்ல உனக்கு வேலை கிடையாது” என்றான் பாலாஜியின் முகம் பார்க்காமல் கையை மட்டும் நீட்டினான்.
“ராயா என்னை ஏன் டா இப்படி பண்ணினேனு நாலு அடி அடிடா! பேசாம நின்னு என்னை கொல்லாதேடா” என்று அவன் கையை பிடிக்க போக ராயனோ ஒரு அடி தள்ளி நின்றான்.
ஆபிஸ் சாவியையும் ராயன் கையில் கொடுத்தவன் கனத்த மனதுடன் நதியாவுடன் மண்டபத்தை விட்டு வெளியேறினான். இப்போது எங்கே போவது என்று திக்கு தெரியாமல் கால் நடையாக நடந்துச் சென்றான் நதியாவுடன்.
Sis semma ud pavam Balaji eni yanna akumo . Daily ud koduga plz nice story
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Ipo mullai da nilamai ennavo. Balaji um Nadhi um nalla vaalanum but balaji paavam
super sis next epi koncham sikkiram upload pannuga plsssss……