அத்தியாயம் 26
தன் உயிர் சிசுவை சுமந்து நிற்கும் மனைவியை கோமளம் வார்த்தைகளால் வதைக்க கூடாதென மனைவிக்காக பெரியம்மாவின் காலில் விழுந்தான் வல்லவராயன். ஆனால் முல்லை மேல் உள்ள கோபம் அப்படியே தான் இருந்தது ராயன் மனதில்.
“மாசமா இருக்கறவளை காலுல விழவச்சேன்கிற பாவம் எனக்கு வரவேணாம் மன்னிச்சு விடறேன் எழுந்திருங்க ஆனா நீ ஓடிபோனவ கூட பேச கூடாது! என்னோட ப்ரண்ட் நான் பேசுவேன்னு தெரிஞ்சுதுனா நான் மனுசியா இருக்கமாட்டேன் முல்லை! எனக்கு என்னோட குடும்ப கௌரவம்தான் முக்கியம்” என்று முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டவர் ராயனை தன் காலில் விழவைத்துவிட்டோம் என்ற மமதையில் மிதந்தார்.
“நதியாவை இந்த வீட்டுல இருக்க யாரும் போய் பார்க்க கூடாது! அவ தனியா கிடந்து அழுகட்டும் அந்த கழுதைக்கும் அப்போதான் புத்தி வரும்” என்று புகைந்து தள்ளினார்.
“நம்ம வீட்டுப் பொண்ணு நல்லாயிருக்கணும்னு நினைங்க பெரியம்மா பாப்பாவுக்கு தண்டனை கொடுக்கணும்கிற அளவுக்கு அவ பெரிய கொலை குத்தம் பண்ணலை. நதியாவுக்கு சாபம் விடறது எல்லாம் வேண்டாம் பெரியம்மா” என்றவனோ முல்லையை ஒரு பார்வை பார்த்து விட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டான்.
அழகம்மையோ “இன்னும் என்ன இங்க நிற்குற வீட்டுக்குள்ள போமா” என்று முல்லையின் தோளை அழுத்தினார் மெதுவாக.
கண்ணீரை துடைத்துக்கொண்டு வேகமாக நடந்தவளை “பார்த்து நடமா வயித்துக்குள்ள புள்ள இருக்கு” என்றார் நீலகண்டன்.
அவர் பேசியதெல்லாம் அவள் காதில் விழவில்லை கணவனிடம் பேச வேண்டுமென்று ராயனின் பின்னே வயிற்றில் ஒரு கையை வைத்துக்கொண்டு படிகளில் நிதானமாக ஏறினாள்.
மனைவி பின்னால் வருகிறாளென்று தெரிந்தவனோ தனது நடையின் வேகத்தை குறைத்தான். அறைக்குள் சென்றவனோ டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றுவிட்டான்.
அவள் அறைக்குள்ளே வரும்போது அவனின் முதுகை மட்டுமே பார்க்க முடிந்தது. குளியலறையின் முன்னே கையை பிசைந்துக் கொண்டு நின்றிருந்தாள் எப்படியாவது கணவனிடம் பேசிவிடவேண்டுமென்று…
குளித்து விட்டு கதவை திறந்தவனோ தலையை துவட்டிக்கொண்டே அவள் மீது உரசாமல் நடந்தவன் பால்கனிக்குச் சென்றுவிட்டான்.
அவளோ குட்டி போட்ட பூனை போல ராயனின் பின்னே சென்று நின்றவள் “மச்சான் நான் சொல்ல வரதை கேட்பீங்களா கேட்கமாட்டீங்களா?” என்றாள் விசும்பலுடன்.
அவனோ துண்டை கழுத்தில் போட்டுக்கொண்டு திரும்பியவன் அவளை பார்க்காமல் அறைக்குள் சென்றுவிட்டான்.
“ரொம்பத்தான் பண்ணுறீங்க மச்சான்” என்று புலம்பிக்கொண்டே அறைக்குள் சென்று சட்டைக்கு பட்டன் போட்டுக்கொண்டிருந்தவன் முன்னே நின்றாள். அவனோ அவள் முகத்தை பார்க்காமல் தலையை வாரிக்கொண்டு கையில் வாட்ச்சை எடுத்து கட்டியவன் அவள் மீது உரசாமல் நடந்து கதவுவரை சென்றவனின் கையை பிடித்து நிறுத்தினாள்.
அவனோ அவளை முறைத்து வைத்தவன் அவளது கையை மெதுவாக எடுத்துவிட்டவன் கதவு திறந்துச் சென்றுவிட்டான்.
“மச்சான் நான் சொல்ல வருவதை கேட்கமாட்டேன்னு வம்படியா இருக்கீங்க” என்று மெத்தையில் படுத்து அழுதுக் கொண்டிருந்தாள் கட்டியிருந்த பட்டுப் புடவையை கூட மாற்றாமல்.
சில நொடிகளில் அமுதாவோ முல்லைக்கு மாதுளை ஜுஸ் கொண்டு வந்தவர் குலுங்கி அழுதுக் கொண்டிருக்கும் முல்லையின் தோளில் கையை வைத்ததும் தலையை நிமிர்ந்து பார்த்தவள் எழுந்து உட்கார்ந்து “அம்மா நான் வேணும்னு மச்சான்கிட்ட மறைக்கலமா அவர் என்கிட்ட பேசவேமாட்டேன்கிறாருமா அவர் என்னோட முகத்தை பார்க்க மாட்டேன்கிறாருமா” என்று விசனத்தோடு விசும்பினாள்.
“ராயன் தம்பி உன்னை ஒரு அடியோட நிறுத்தியிட்டாரு கொஞ்சமாச்சும் பெரிய வீட்டு மருமக போல நடந்துக்கிட்டியாடி ராயன் தம்பி உன் மேல பாசமா இருக்கறதை நான் கண்கூடா பார்த்திருக்கேன் புருசன் பொண்டாட்டிக்குள்ள ஒளிவு மறைவு இருக்கக்கூடாது..! நதியா பொண்ணு காதல் விசயத்தை நீ தம்பிகிட்ட சொல்ல ஒரு ஐஞ்சு நிமிசம் கிடைக்காம போச்சாடி உனக்கு..! உனக்காக யாருக்கும் தலைவணங்கா மனுசன் பெரியம்மா காலுல விழுந்திருக்காருடி மாசமா இருக்க தருணத்துல சந்தோசமா இருக்கணும் இப்படி அழுது வயித்துக்குள்ள இருக்க கருவுக்கு துன்பத்தை கொடுக்காதே இந்த ஜுஸை குடி…” என்று மகளின் கையில் கொடுத்து விட்டு முல்லையின் கண்ணீரை முந்தானையால் துடைத்து விட்டார்.
“அம்மா நான் என்ன பண்ணினா மச்சான் என்கிட்ட பேசுவாரு” என்றாள் கையிலிருந்த ஜுஸை குடிக்காமல்.
“இப்ப ஜுஸை குடிக்கிறியா இல்லையா?” என்று அமுதா அதட்டவும் அழுது அழுது தெம்பில்லாமல் இருக்க ஜுஸை குடித்துவிட்டாள்.
அழகம்மை முல்லையின் அறைக்கு வந்ததும் அமுதா மெத்தையிலிருந்து எழுந்து நின்றதும் “உட்காரு அமுதா” என்று அவரின் தோளை பற்றி அமர வைத்து விட்டு “முல்லை சும்மா அழக்கூடாது கோபம் இருக்கும் இடத்துலதான் குணம் இருக்குனு சொல்லுவாங்க ராயன் கோபம் படிபடியாக குறைஞ்சிடும் நீ கொஞ்ச நாள் பொறுமையா இருந்துதான் ஆகணும் சரியா..! சாய்ந்தரம் ஹாஸ்பிட்டல்க்கு உன்னை அழைச்சிட்டு வரச்சொல்லியிருக்கான்” என்றதும் அவள் அழகம்மை கூறியதை நம்பமுடியாமல் “நிஜமா அவரு ஹாஸ்பிட்டல் வரேன்னு சொன்னாரா அம்மா?” என்றாள் உதடுகள் துடிக்க.
“ஆமாடி தங்கம் கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடு சாய்ந்தரம் ஹாஸ்பிட்டல் போகலாம்” என்றதும்
“எ.எனக்கு தூக்கம் வரலைமா என் மனசுக்குள் அழுத்தமா இருக்கு” என்றாள் மனம் சுணக்கத்துடன்.
பூங்கொடி தியாவுடன் ராயனின் அறைக்குள் வந்தவள் தியாவை முல்லையிடம் கொடுத்தாள். அவள் மனம் குழந்தையுடன் ஒன்றி அழுகையை நிறுத்திவிடுவாளென்று…
தியாவோ முல்லையின் கண்ணீரை துடைத்து விட்டது. “பெரியம்மா அழலை குட்டி” என்று குழந்தையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.
பூங்கொடியை முல்லையுடன் இருக்க வைத்துவிட்டு அமுதாவும் அழகம்மையும் கீழே வந்துவிட்டனர்.
பூங்கொடியிடமும் “நான் வேணும்னு பண்ணலை” என்று பேச்சை ஆரம்பிக்க அவளோ “இந்த பேச்சை விடு முல்லை நடந்ததை மாத்த முடியாது குழந்தை கூட விளையாடு நான் வரேன்” என்று அவளும் கீழே வந்துவிட்டாள்.
தியாவோ முல்லையுடன் விளையாட கொஞ்சம் மனம் லேசானது முல்லைக்கு. இருப்பினும் கணவனை மீண்டும் எப்போது பார்ப்போம் பேசுவது எப்போது என்று அவள் மனம் துடித்துக்கொண்டுதான் இருந்தது.
பாலாஜி இத்தனை நாளாக சம்பாரித்த பணத்தில் ராயன் வீட்டுக்கு ரெண்டு தெரு தள்ளி கொஞ்ச நாள் முன்னே வீடு ஒன்றை வாங்கியிருந்தான். ஒரு சமையல்கட்டு கொஞ்சம் பெரிய ஹால் ஒரு பெட்ரூம் அட்டாச்டு பாத்ரூம் கொஞ்சம் வெளியே காலி இடம் மட்டும் இருந்தது. காரும் இஎம்ஐயில் வாங்கியிருந்தான்.
நதியாவுடன் காரை விட்டு இறங்கியவன் பாக்கெட்டில் வைத்திருந்த சாவி எடுத்து கதவை திறந்து விட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டான். அவள் அப்படியே நின்றிருக்க வெளியே வந்தவன் “உனக்கு இங்க ஆரத்தி எடுத்து வரவேற்க யாரும் கிடையாது உள்ள வாடி” என்று முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டான்.
அவளோ இந்தளவு பேசுகிறானே என்று பெரும்மூச்சு விட்டு வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள். இப்போதுதான் பெயிட் அடித்திருக்க பெயின்ட் வாசம் அடித்தது. வீட்டை சுற்றிப்பார்த்தவள் “நான் எங்க குளிக்கறது?” என்றாள் தயங்கியபடியே.
“உங்க வீடு போல அறைக்கு அறைக்கு பாத்ரூம் கிடையாது இங்க இருக்கறது ஒரு பெட்ரூம்தான் அதுக்குள்ளதான இருக்கும் அதுலதான் குளிக்கணும் கதவை பூட்டிக்கோ நான் வெளியே போய்ட்டு வந்துடறேன்” என்று காய்ந்து விழுந்தவன் வெளியே சென்றுவிட்டான்.
பெட்ரூம்க்குள் சென்றவள் அறையை சுற்றிப்பார்த்தாள் அறையில் ஃபேன் கூட மாட்டவில்லை கட்டில் எதுவும் இல்லை. “இன்னிக்கு வெறும் தரையிலதான் தூங்கணுமா” என்று பெரும்மூச்சு விட்டு குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டாள். குளித்து முடித்தவள் இப்போ எந்த ட்ரஸ் போடுறது என்று யோசனையில் போட்டிருந்த பாலாஜியின் சட்டையை எடுத்து மேல போட்டுக்கொண்டு கதவை திறந்தாள் தரையில் ஒரு கட்டப்பை இருந்தது.
“அட என்மேல கோபமா இருந்தாலும் பொண்டாட்டிக்கு புதுதுணி எடுத்துட்டு வந்துருக்காரு” என்று ஆசையாக கட்டைப் பையை எடுத்து பார்க்க நாலைந்து சுடிதார் இருந்தது.
மஞ்சள் நிறத்தில் இருந்த சுடிதாரை எடுத்து போட்டுக்கொண்டு ரெண்டு புது துண்டுகளும் இருக்க துண்டை எடுத்து தலையை கொண்டை போட்டுக்கொண்டு வெளியே வர அவளுக்கு சாப்பிட சாப்பாடு வாங்கி வந்திருந்தான் அவளுக்கும் பசியாக இருக்க பார்சலை பார்த்திருந்தாள். பாலாஜியோ கிராம்டன் ஃபேனை ஃபிட் பண்ணிக்கொண்டிருந்தான்.
“ம்க்கும்” என்று அவள் தொண்டையை செரும அவனோ நிமிர்ந்து பார்க்காமல் ஃபேனை ஃபிட் பண்ணி முடித்து ஹாலுக்கு வரவும் அவளோ கையை பிசைந்துக் கொண்டு உணவு பொட்டலத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“இப்போதைக்கு மட்டும் சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கேன் நைட்டுக்கு நீதான் சமைக்கணும்” என்றவனோ அறைக்குள் சென்று குளித்து முடித்து வேறு ஆடைக்கு மாறி வெளியே வந்தபோது அவள் சாப்பிடாமல் உட்கார்ந்திருந்தாள்.
“உனக்கு ஊட்டி விடணுமாடி சாப்பிடத்தெரியாதா?” என சுள்லென்று எரிந்து விழுந்தான்.
“நீ.நீங்களும் சாப்பிட வருவீங்கனு வெயிட் பண்ணுறேன்” என்றாள் தயங்கிக்கொண்டு.
“ஆமா நாம ரெண்டு பேரும் காதல் கிளிகள் உன்னை கொஞ்சிக்கிட்டே சாப்பிடணுமாடி என்னால ஒரு நிமிசம் நிம்மதியா இருக்க முடியல நண்பணுக்கு துரோகம் பண்ணிட்டு வந்துட்டேன்னு மனசுக்குள்ள நெருஞ்சி முள்ளு குத்தினதுபோல வலிக்குது… உன் முகத்துல கொஞ்சம் கூட கவலை இல்லை சாப்பிடணும்னு நாயா அலையுற உன்னை போல ஒரு பொண்ணை நான் பார்க்கவே இல்லைடி” என்று முகத்தை சுளித்து வெளியே சென்றுவிட்டான்.
“நீங்க எப்படி வேணா என்னை திட்டுங்க பாலாஜி உங்க மேல எனக்கு கோவமே வராது..! என் வீட்டை விட்டு வந்தது எனக்கு கவலையில்லைனா சொல்லுறீங்க எங்க அம்மாவை தவிர எங்க வீட்ல இருக்க எல்லாரும் என்னை தலையில வச்சு தாங்கினாங்க அவங்க அன்பை விட்டு வந்தேனா வான் அளவு உங்க மேல காதல் வச்சிருக்கேன் பாலாஜி” என்றவளின் கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. சாப்பிடாமலேயே அறைக்குள் சென்று கதவை மூடி படுத்துக்கொண்டாள்.
ஹாஸ்பிட்டலில் ராயன் முல்லை வருவதற்கு முன்பே டோக்கன் போட்டு வைத்துவிட்டான். நீலகண்டனும் அழகம்மையும் முல்லையை அழைத்து வந்திருந்தனர் ஹாஸ்பிட்டலுக்கு.
ராயன் டாக்ரின் அறைக்கு முன்னே கையை கட்டிக் கொண்டு நின்றிருந்தான். ராயனை எப்போதடா பார்ப்போம் என்று ஏக்கத்தோடு ராயன் பக்கம் போய் நின்றாள் முல்லை. அவனோ முகத்தை திருப்பிக்கொண்டு நீலகண்டன் பக்கம் நின்றவன் “அடுத்து நாமதான் போகணும் மாமா” என்றான் இறுகிய குரலுடன்.
தாய் குழந்தையிடம் கோபித்துக்கொண்டு நிற்கும்போது குழந்தை தாயை ஏக்கமாய் பார்த்து இதழ் பிதுக்கி அழுகுமே அது போல இதழ் பிதுக்கி அழத்தோன்றிய நிலையில்தான் நின்றாள் முல்லை.
டாக்டரின் அறைக்குள் சென்றதும் 60களின் தொடக்கத்தில் இருந்த டாக்டர் கவிதா ராயனையும் முல்லையும் உட்காரச் சொல்லி கையை காட்டினார்.
அழகம்மையும் நீலகண்டனும் டாக்டர் அறைக்குள் செல்லவில்லை.
“எத்தனை நாள் தள்ளிப்போயிருக்குமா?” என்றார் புன்னகையுடன்.
“ந.நாற்பத்தைஞ்சு நாள் ஆகியிருக்கு மேடம்” என்றாள் மெல்லிய குரலுடன் அவள் முகத்தில் சிரிப்பு மறைந்து இருந்ததை கண்ட டாக்டரோ “ஏன்மா உனக்கு இந்த குழந்தை வந்ததுல சந்தோம் இல்லையா என்னை பார்க்க முதல் பிரசவத்துக்கு வரும் பொண்ணுங்க முகத்துல தாய்மை பூரிப்போடு வருவாங்க உன் முகத்துல மருந்துக்கு கூட சிரிப்பில்லையே?” என்றவரோ இருவரையும் மாறி மாறி பார்த்தார்.
ராயனோ “அவ கொஞ்சம் பயந்திருக்கா டாக்டர் மத்தபடி அவ சந்தோசமா இருக்கா” என்றான் லேசான இதழ் விரிப்புடன் .
கணவன் வெளி இடத்தில் தன்னை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறான் தனிமையில் இருக்கும்போது தன்னிடம் பேசாமல் தண்டனை கொடுக்கிறான் என்று புரிந்துக் கொண்டவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
“பயம் எதுக்குமா உன் ஹஸ்பண்ட் உன்னை மிரட்டுவாரா?” என்று மூக்கு கண்ணாடியை சரி செய்தார்.
“அச்சோ எங்க வீட்டுக்காரர் என்னை திட்டவேமாட்டாரு தங்கம்” என்றாள் ராயனை பார்த்தவாறே.
“அப்புறம் என்ன பயம் உனக்கு இந்த மாதிரி நேரத்துல ஹேப்பியா இருக்கணும் அப்போதான் குழந்தை ஆரோக்கியமா இருக்கும்” என்றார் மலர்ந்த முகத்துடன்.
“நா.நான் சந்தோசமா இருப்பேன் டாக்டர்”
“சரி சில டெஸ்ட் எடுக்க சொல்லுறேன் யூரின் பிளட் கொடுத்துட்டு வாங்க ஸ்கேன் பண்ணிடலாம்” என்றதும் சரியென்று தலையசைத்து விட்டு லேப்பிற்கு வந்து யூரின் ப்ளட் கொடுத்துவிட்டு ஸ்கேன் அறைக்குச் சென்றனர்.
ஸ்கேனில் சிறு புள்ளியாய் தெரிந்த கருவினை காண்பித்தார் டாக்டர் ராயனிடம்.
என் உயிரில் உருவான குழந்தை என்று மானிட்டரில் தெரியும் கருவை ஆவலாக பார்த்துக்கொண்டிருந்தான். “பதட்டமா இருக்காதேமா” என்று முல்லையின் கையை பிடித்தார் டாக்டர்.
“ம்ம்” என்று தலையை ஆட்டி முகத்தில் ஆனந்தத்தோடு மானிட்டரை பார்த்துக்கொண்டிருந்த கணவனை பார்த்ததும் ராயனும் அவளைத்தான் பார்த்தான் ஆனால் முறைப்போடு திரும்பிக்கொண்டான்.
“கரு ஆரோக்கியமா இருக்கு எழுந்து வாங்கம்மா” என்ற டாக்டரோ அவரது அறைக்குள் சென்றுவிட்டார்.
அவள் இறங்க தடுமாற அங்கிருந்த குட்டி நாற்காலியை அவளது காலருகே தள்ளி வைத்துவிட்டு அங்கிருந்து டாக்டர் அறைக்குள் சென்றுவிட்டான் ராயன்.
“நான் பண்ணிய தவறுக்கு நீங்க எனக்கு கொடுக்கறது பெரிய தண்டனை மச்சான்” என்றவளுக்கு கண்ணில் கண்ணீர் கோர்த்துக்கொண்டது மெல்ல நாற்காலியில் கால் வைத்து டாக்டரின் அறைக்குள் வந்து மெல்லிய புன்னகையுடன் ராயனின் பக்கம் உட்கார்ந்துவிட்டாள்.
டெஸ்ட் ரிப்போர்ட்டை பார்த்தவர் “ஹீமோகுளோபின் குறைவா இருக்கு குழந்தை பெத்துக்க சத்து வேணும் சத்து மாத்திரை எழுதி கொடுக்குறேன் முதல் மூணு மாசத்துக்கு வாமிட் வரும் ரெண்டு பேரும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் இன்டிமேட்டா இருக்கக்கூடாது” என்றவரோ மாத்திரைகளை மருந்துச் சீட்டில் எழுதி ராயனிடம் நீட்டினார்.
“ஃப்ரூட்ஸ், வெஜிடப்புள்ஸ் நிறைய எடுத்துக்கணும் கொஞ்சம் வெயிட் தூக்காம பார்த்துக்கணும்” கர்ப்பிணிக்கு கூற வேண்டிய அறிவுரைகளை கூறி முடித்தவர் “அடுத்த முறை வரை வரும்போது இப்படி உம்னு முகத்தை வச்சிருக்க கூடாது சிரிச்சிக்கிட்டு வரணும்” என்றதும் இதழ் பிரித்து சிரித்தாள் முல்லை.
“நீ இப்படி சிரிச்சுக்கிட்டு இருந்தாதான் உன் குழந்தையும் ஆரோக்கியமா வளரும்” என்றார் சிரிப்புடன். முல்லையோ அதற்கும் மெல்லிய சிரிப்பை கொடுத்தாள் டாக்டரிடம்.
“தேங்க்ஸ் டாக்டர்” என்று எழுந்துக் கொண்டான் ராயன். முல்லையும் எழுந்து ராயனுடன் சென்றாள். வெளியே சென்றவுடன் நீலகண்டனோ “என்னப்பா கரு ஆரோக்கியமா இருக்குல்ல?” என்றார் ஆவலாக அழகம்மையும் அதே ஆவலுடன் முல்லையை பார்த்தார்.
“நல்லா ஆரோக்கியமா இருக்குங்கப்பா” என்றபடியே ராயனை பார்த்தாள் இப்போதாவது தன்னிடம் பேசுவானா என்று எதிர்பார்ப்புடன்.
அவனோ ஃபார்மஸிக்குச் சென்று மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வந்தவன் அழகம்மையிடம் மாத்திரைகளை கொடுத்து விட்டு “எனக்கு பால் பண்ணையில முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கு அத்தை நான் நைட் வர லேட் ஆகும் யாரும் எனக்காக தூங்காம காத்திருக்க வேணாம்” என்று முல்லையை திரும்பிகூட பார்க்காமல் ஹாஸ்பிட்டலை விட்டு வெளியேறி விட்டான் ராயன்.
“பார்த்தீங்களாம்மா உங்க மருமகனை என்கிட்டே பேசாம போறாரு கோபத்துல இன்னும் ரெண்டு அடி கூட அடிச்சிருக்கலாம் இப்படி பார்க்காம பேசாம போனா என்னால தாங்க முடியலை” என்று விசும்பியவளின் கையை பிடித்து “இது ஹாஸ்பிட்டல் முல்லை அழக்கூடாது எல்லாரும் நம்மைதான் பார்க்குறாங்க வா போகலாம்” என்று முல்லையை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றனர்.
கோமளமோ வீட்டுக்குச் சென்றதும் “கரு எப்படி இருக்குனு சொன்னாங்க கரு தரிச்சதும் குடும்பத்துல பிரச்சனை பிச்சுக்கிட்டு ஆடுது” என்றதும் தையல்நாயகிக்கு கோபம் வந்துவிட்டது குடும்பத்தில் இப்போது சண்டை போடக்கூடாது என்று பொறுமையை இழுத்து பிடித்து நின்றிருந்தார். முல்லைக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
அமுதாவுக்கோ அங்கே நிற்கவே முடியவில்லை. “என்ன பெரிய மனுசி இவங்க இப்படியா வயித்து புள்ளத்தாச்சிகிட்ட பேசுவாங்க” என்று அங்கலாய்ப்பில் சமையல்கட்டுக்குள் சென்றுவிட்டார்.
நீலகண்டனோ “அம்மாடி நீ உன்னோட அறைக்கு போடா” என்றதும் வாயில் கையை வைத்து மாடிப்படிகளில் மெல்லமாய் ஏறி அறைக்குள் சென்றதும் மெத்தையில் படுத்தவள் அழுதுக் கொண்டே உறங்கிவிட்டாள்.
தீபாவோ முதல் இரவு கொண்டாடவேண்டுமென்று அறைக்குள்ள உறங்கிக் கொண்டிருந்தாள்.
நதியாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சமையல்கட்டுக்குச் சென்று பார்த்தாள் பாத்திரங்கள் ஒன்றும் இல்லை. அப்படியே பாத்திரம் இருந்தாலும் அவளுக்கு சமைக்கத் தெரியாதே! வீட்டின் முன்னே டெம்போ வேன் சத்தம் கேட்க வெளியே வந்து எட்டிப்பார்த்தாள். பாலாஜி காரிலிருந்து இறங்கியவன் வீட்டிற்கு தேவையான பொருட்களை இறக்கி வைத்துக்கொண்டிருந்தான்.
அவளோ அவனையே பார்த்துக்கொண்டிருக்க அவனோ “பாத்திரங்களை எடுத்து போய் சமையல்கட்டுல வை அப்படியே மகாராணி போல நின்னுக்கிட்டு இருக்கா” என்று வேன் டிரைவர் முன்னால் அதட்டவும் அவளுக்கு கண்கள் கலங்கியது.
“இப்பவே அழுக ஆரம்பிச்சா எப்படி இன்னும் நிறைய இருக்கேடி” என்று அழுத்தி கூறியவன் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அவளை உரசாது எடுத்துச் சென்றான்.
வேன் டிரைவரோ நதியாவை பற்றி முழுதாக தெரியாமல் இருக்க அவளை பாவமாய் பார்த்தார். ஸ்டீல் சோபாவை ஒரே ஆளாக தூக்கி வந்து விட்டான். பாய் தலையணையும் நதியா எடுத்து வந்தாள். மரப்பீரோவை டிரைவரின் உதவியுடன் இறக்கி வீட்டுக்குள் கொண்டு வைத்து விட்டு டிரைவருக்கான கூலியை கொடுத்து விட்டு வீட்டுக்குள் வந்தவனுக்கு காலையிலிருந்து மனமும் உடலும் சோர்ந்து போயிருந்தன.
முகமெல்லாம் வியர்த்துக்கொட்ட துண்டை எடுத்து அவனுக்கு கொடுத்தாள் முகம் துடைக்க… அவனோ “நான் குளிச்சிட்டு வரதுக்குள்ள உப்புமா செஞ்சு வை ரொம்பத்தான் அக்கறை” என்று அதிகாரம் செய்து விட்டு துண்டை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றான்.
“எனக்கு சமைக்கத்தெரியாதே” என்றபடியே சமையல்கட்டுக்குள் சென்று பார்த்தாள் இன்டக்ஷன் அடுப்பு இருந்தது கேஸ் அடுப்பு வாங்கி வந்துவிட்டான். ஆனால் கேஸ் உடனே கிடைக்கவில்லை நாளைக்கு ஏற்பாடு செய்துக் கொள்ளலாம் என்று விட்டிருந்தான்.
நண்பனின் தங்கையை கல்யாணம் செய்து விட்டான் அவளை தன்னிடம் உள்ள வசதிக்காவது வைத்துக்கொள்ளவேண்டுமென்று மெனக்கெட்டு இத்தனையும் செய்து முடித்திருந்தான் பாலாஜி.
கோமளம் சமைக்க பழகுடி போன இடத்துல ரொம்ப கஷ்டப்படுவ என்று அவளை வசைபாடியது அவள் கண்முன்னே வந்து போனது. ‘இப்ப என்ன பண்ணறது போன் இருந்தாவாவது உப்புமா எப்படி செய்யறதுனு பார்த்து பண்ணலாம் போனும் இப்ப இல்லையே நான் என்ன பண்ணுவேன்?’ என்று புலம்பிக்கொண்டு நின்றிருந்தாள்.
தலையை துவட்டி கையில்லா பனியன் வேஷ்டியுடன் சமையல்கட்டுக்குள் வந்தவன் “என்ன உப்புமா செய்துட்டியா?” என்றான் மிரட்டலாகவே.
“எ.எனக்கு ச.சமைக்க தெரியாதுங்க” என்றாள் தயங்கியபடியே.
“என்னை கல்யாணம் பண்ணறது எப்படினு ப்ளான் மட்டும் போடத்தெரியுதுல ஒரு உப்புமா பண்ணத் தெரியாதா உனக்கு” என்று வள்ளென்று அவள் மீது பாய்ந்தவன் “இன்னிக்கு மட்டும் நான் சமைக்குறேன் என்ன பண்ணுவியோ தெரியாது நாளையிலிருந்து நீதான் சமைக்கணும்” என்றவனோ வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு வாங்கி வந்திருந்த சமையல்பொருட்கள் கூட எடுத்து வைக்காமல் இருக்க “மாடு மாதிரி நிற்குற வெங்காயம் காய்கறிகள் எல்லாம் எடுத்து கூடையில போட்டு வைக்கத்தெரியாதா உனக்கு” என்று அதற்கும் எரிந்து விழுந்தான்.
“மெ.மெல்ல பேசுங்க பாலாஜி” என்றவளுக்கு வாய் குளறியது.
“நா.நான் இப்படித்தான் பேசுவேன் இந்தா இந்த வெங்காயத்தை வெட்டிக்கொடு” என்றவனோ வெங்காயம் தக்காளி காய்கறிகளை கூடையில் பிரித்துப்போட்டு அழகாக சமையல்கட்டின் ஓரமாக வைத்து திரும்ப கண்ணில் கண்ணீருடன் வெங்காயத்தை உரித்துக்கொண்டிருந்தாள்.
“வெங்காயம் கூட நறுக்க தெரியாதா என்ன பொட்டபுள்ளைக்கு கொடு” என்று வெங்காயத்தை வெடுக்கென்று வாங்கி உரித்து பச்சை மிளகாயை கட் பண்ணி கறிவேப்பிலை போட்டு ஐந்து நிமிடத்தில் உப்புமாவை கிளறி வைத்து ஹாலில் கொண்டு போய் வைத்தான். ஹாலில் இன்னும் ஃபேன் மாட்டாமல் இருக்க புழுக்கமாக இருந்தது துண்டை எடுத்து முகத்தில் விசிறிக்கொண்டே ஹாலுக்கு வந்தவள் மேலே நிமிர்ந்து பார்த்து “ஃபேன் இல்லையா?” என்று முணுமுணுத்தாள்.
“ஓ அம்மணிக்கு வேர்க்குதா என்னோட வசதிக்கு ஹாலுக்கு ஏசியெல்லாம் போட முடியாது கொஞ்ச நேரத்துல ஃபேன் மாட்டி விடறேன்” என்றவனோ அவளை ஏற இறங்க பார்த்து “தரையில உப்புமாவை போட்டு சாப்பிட போறியா தட்டு யாருடி எடுத்துட்டு வருவாங்க?” என்று பல்லை கடித்தான்.
“இ.இதோ எடுத்துட்டு வரேன்” என்று சமையல் கட்டுக்குள் சென்றாள். நல்லவேளை முன்னாடியே புது தட்டு இருந்தது சிங்கில் தட்டை கழுவி எடுத்து வந்து தரையில் வைத்து உட்கார்ந்தாள்.
சூடாக உப்புமாவை தட்டில் போட்டவளுக்கு “இந்த உப்புமாவை நான் சாப்பிடமாட்டேன் எனக்கு நூடுல்ஸ் செய்து கொடுங்க சித்தி” என்று தையல்நாயகியிடம் அடம் பிடித்து சாப்பிடுபவளுக்கு இன்று உப்புமா தொண்டைக்குள் இறங்கமாட்டேன் என்று அவளை பார்த்து சிரித்தது.
பாலாஜியோ உப்புமாவை போட்டு சாப்பிட்டவன் தட்டை எடுத்துக்கொண்டு சிங்கில் கழுவி வைத்து விட்டு ஃபிரிட்ஜ்ஜை பார்த்தவன் காலையில ஆன் செய்துக்கலாம் என்று ஹாலுக்கு வந்தபோது உப்புமாவை சாப்பிட்டு முடித்தவள் உப்புமா பாத்திரத்தை எடுத்துக்கொண்டு சிங்கில் கழுவி வைத்து கிச்சன் திண்டை துடைத்து வைத்து ஹாலுக்குள் வர பாலாஜி ஹாலுக்குள் ஃபேனை மாட்டிக்கொண்டிருந்தான்.
“நா.நான் ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று வந்து நின்றவளை “என் நிம்மதியை கெடுக்காம போய் படுத்து தூங்குடி” என்று மீண்டும் சுள்லென்று விழுந்ததும் கண்ணில் முணுக்கென்று கண்ணீர் வந்து விட்டது.
“சும்மா அழுது சீன் போடாதடி ஒழுங்கா படுத்து தூங்கு இரிட்டேட் பண்ணிக்கிட்டு” என்றவனோ ஃபேனை மாட்டி மெதுவாக லேடரில் இறங்கினான்.
அவளோ “எ.எனக்கு தனியா படுக்க பயமா இருக்கும் எப்பவும் சி.சித்தி எ.என்கூட படுத்துப்பாங்க” என திக்கி திணறி பேசினாள்.
“ஓ மேடம்க்கு ஃபர்ஸ்ட் நைட் நடக்கணும் அதுக்குதானே என்னை கூப்பிடற” என்று சிவந்த கண்ணை உருட்டி விழித்தான்.
நதியாவோ அழுதுக் கொண்டே பெட்ரூம்க்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.
“எல்லாரோட மனசையும் காயப்படுத்திட்டு வந்திருக்கல்ல நல்லா அழணும்டி நீ” என்றவனோ கண்ணை மூடித்திறந்து அப்படியே சோபாவில் பொத்தென்று அமர்ந்தவன் போனில் தன் அக்கௌண்ட் பேலன்ஸை பார்த்தான். வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது கையில் இருந்த பணத்தில் வீட்டுக்கு தேவையானதை வாங்கி வந்து விட்டான். என்ன தொழில் பண்ணுவது. அப்படியே தொழில் தொடங்கினாலும் பணத்துக்கு என்ன செய்வது சேமிப்பாக வைத்திருந்த பணத்தில் வீடும் கொஞ்சம் பணம் கட்டி ஈஎம்ஐயில் காரும் வாங்கிவிட்டான். சேமிப்பும் கையிருப்பு இல்லை.
பாலாஜி மண்டைக்குள் ரயில் ஓடியது. “நண்பா உனக்கு துரோகம் பண்ணியதாலதான் எனக்கு இந்த நிலமைடா” என்றான் பெரும்மூச்சு விட்டு.
அடுத்த சில நொடிகளில் அவன் போனுக்கு மெசேஜ் வந்தது என்னவென்று பார்த்தான் அவனது அக்கௌண்டில் ஐந்து லட்சம் விழுந்திருந்தது யாரிடமிருந்தென்று பார்த்தான் ராயனின் பால்பண்ணை அக்கௌண்டிலிருந்துதான் வந்திருந்தது.
‘ஓ தங்கச்சிக்காக பணம் போட்டிருக்கானா இந்த பணத்தை திருப்பி அனுப்பிவிடுவோம்’ என்று யோசனையில் இருந்தவனின் போன் அடித்தது ராயனின் கம்பெனி அக்கௌண்ட்ஸ் ஹெச்ஆர் தான் போனில் வந்திருந்தார்.
“சார் இந்த மாச சம்பளமும் இத்தனை வருசம் உங்க சம்பளத்துல ஒரு தொகை பிடிச்சிட்டிருந்தோம் அந்த அமௌண்ட் உங்களுக்கு அனுப்பி கணக்கை முடிக்க சொல்லியிருந்தார் எம்.டி அதான் பணம் போட்டு விட்டோம்” என்றவரோ “சார் ராயன் சார் முகமே சரியில்ல என்ன நடந்துச்சு ஏன் நீங்க இப்படி பண்ணுனீங்க?” என்று தயங்கியபடியே கேட்டார் ஹெச்ஆர் ஆறுமுகம்.
“இப்ப என்னால எதுவும் சொல்ல முடியாது சார் நான் போனை வைக்குறேன்” என்றவனோ மனம் கேட்காமல் ராயனுக்கு போன் போட்டான் ராயனோ அவனது ஆபிஸ் சுழற்நாற்காலியில் கண்ணை மூடி தலைசாய்த்திருந்தவனின் போன் அடிக்கவும் கண்ணை திறந்து பார்த்தான் நண்பன் என்று வரவும் போனை கட் செய்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டான் ராயன்.