ATM Tamil Romantic Novels

நெஞ்சில் வடித்த கவிதை

கவிதை 25

இதற்கு மேல பொறுமை காக்க கூடாதென கரை புரண்டு வெள்ளம் போகும் போது அணைபோட்டு தடுத்து நிறுத்தாவிடில் தன் மகள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். மகள் மட்டும் அல்ல தன்னையும் மறுஜென்மம் எடுக்க வைத்த குடும்பத்திற்கு பாதகத்தை விளைவிக்க கூடாதென எண்ணிய சரோஜினியோ மீண்டும் பலத்தை எல்லாம் திரட்டி எழுந்து நின்று கற்சிலையாக நின்ற வர்மனின் கையை பிடித்து அபியின் முன்னே நின்றவர் “யாரை பார்த்து வெளியே போக சொல்லுற இந்த வீடு உன் அப்பன் பணத்துல சம்பாரிச்சது ஒண்ணும் கிடையாது… உன் அப்பன் என்னை கல்யாணம் பண்ணும்போது அவன் கையில ஒரு பைசா கிடையாது மாச சம்பளத்தை எதிர்ப்பார்க்கும் டாக்டர் அதுவும் பிஜி படிக்க உதவி பண்ணியது யாரு தெரியுமா வர்மன் அப்பா மணிமாறன் தான். என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணின பிறகு தான் உன் அப்பன் பணக்காரன்…

ஆனா வர்மன் பரம்பரை பணக்கார வீட்டு வாரிசு… இந்த வீடு வர்மன் தாத்தாவோடது தெரியுமா… உன் அப்பன் மணிமாறன் அண்ணா மனஉளைச்சலில் இருக்கும்போது உன் குடும்பத்தை கொன்னுடுவேன் என்னையும் உன்னையும் கொன்னுடுவேனு மிரட்டி எழுதி வாங்கின வீட்டை தான் இப்போ வர்மன் அவன் பேர்ல எழுதி வாங்கி இருக்கான் அதுல என்ன தப்பு இருக்கு. சொக்கத்தங்கம் என் மருமகன் அவன் மேல பழி சொல் போட்டு நிற்குறாளே இவ யாருனு தெரியுமா உன் அப்பா ரெண்டாவது பொண்டாட்டி கங்காவோட புள்ள அனிகா… உன் அப்பா அமெரிக்கா போனது ஒரு உயிரை காப்பாத்துறதுக்கு இல்ல பொண்டாட்டிகூட ஜாலியா ஊரை சுத்தி பார்க்க.

அப்பனும் மகளும் ரெண்டு பேரும் சேர்ந்து படிப்பு சொல்லிக்கொடுத்த வர்மன் மேல பழியை போட்டு உன்னை நம்ப வைச்சு வர்மனை வீட்டை விட்டு துரத்தி உன்னையும் என்னையும் கொன்னு போட்டு சொத்தையும் ஹாஸ்பிடலையும் எடுத்துக்க திட்டம் போட்டு வந்து இருக்காங்க தெரியுமாடி” என்று மகள் மேல் இருந்த கோபத்தில் அடிக்கவும் கையை ஓங்கி விட்டார் சரோஜினி.

“சரோ அபி உன் மகளா இருந்தாலும் மாசமா இருக்க என் மருமகளை அடிக்குற உரிமை இல்ல” என்று சரோஜினியின் கையை பிடித்துக் கொண்டார் மணிமாறன்.

“பாருடி இப்படி பட்ட உத்தம மனுஷனை வெளியே போங்கனு மனசாட்சியை கழட்டி வைச்சுட்டு சொல்லுறியாடி… படிச்சா மட்டும் போதாது நல்லவங்க யாரு கெட்டவங்க யாருனு படிக்க தெரியணும் உன்னோட உடம்புலயும் இந்த விஷக்கனியோட இரத்தம் ஓடும்போது நீ மட்டும் எப்படி நல்லவளா இருந்துற முடியும்” என்றார் அழுத்தமான வார்த்தைகளுடன்.

“அம்மா நான் தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னிச்சுடுங்க” என்று துவண்டு விழுந்தவளை “அம்மாடி அபி” என்று தாங்கி பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தார் வசந்தி.

சரோஜினி தன் மேல் உள்ள பயத்தில் எழுந்து நிற்க மாட்டாரென்று உறுதியாய் நம்பியிருந்தார் அன்புக்கனி.

பெண்புலியாக சீறி பாய்வார் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை திருடனுக்கு தேள் கொட்டியது போல நின்றிருந்தனர் அன்புக்கனியும் அனிகாவும்.

காஞ்சனாவோ “ச்சே உன்னையெல்லாம் என் தம்பினு சொல்லிக்கவே வேதனையா இருக்குடா என் முகத்துலயே முழிக்காதே உன்னையும் தலைமுழுகிட்டேன்” என்று அன்புக்கனியை புழுவை விட கேவலமாக பார்த்தார்.

“என்கிட்ட மன்னிப்பு கேட்டு ஒரு பிரயோஜனமும் கிடையாது அபி உன்னை அப்பாகிட்டயிருந்து காப்பாத்த வந்த என் மருமகன்கிட்ட மன்னிப்பு கேளு ஆனா அவன் உன்னை மன்னிப்பானா தெரியல. உன்னை அவன் ஆறு வயசுல பிஞ்சுக்குழந்தையா அவன் கையில கொடுத்தப்ப பாப்பாவோட கண்ணு அழகாயிருக்கு அத்தை எனக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிகொடுங்க நான் பத்திரமா பார்த்துப்பேனு சொன்னான் உன் மேல உயிரையே வச்சிருந்தவனை எப்படி சந்தேகப்பட முடிஞ்சது உன் வயித்துல புள்ளையை சுமக்கலைனா உன்னை இன்னும் ரெண்டு அடி சேர்த்து போட்டிருப்பேன் உன்னை போய் என் வயித்துல சுமந்து பெத்தேன் பாரு என்னை தான் அடிக்கணும்” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதவரின் கையை பிடித்த வர்மனோ “அத்தை நீங்க என்ன தப்பு செய்தீங்க உங்களை அடிச்சிக்குறீங்க இப்போதான் உங்க உடம்பு ரெக்கவர் ஆகியிருக்கு” என்று அவரின் கையை பிடித்துக்கொண்டான் வர்மன்.

“பார்த்தியாடி என் மருமகனை இத்தனைக்கும் மணிமாறன் அண்ணா என்னோட கூடப்பிறந்தவங்க கிடையாது உங்கப்பன் எனக்கு கெடுதல்தான் செய்தான் ஆனா ஒரு நல்லது பண்ணியிருக்கான்னா மணிமாறன் அண்ணா பேமிலியை ப்ரண்டா எனக்கு கொடுத்ததுதான்டி. உன் அப்பன் சாக்கடை, வர்மன் அப்பா சந்தனம் சந்தனம் தேய்ஞ்சு போனாலும் அதன் மணம் மாறாது அபி. நிலத்துல போட்ட நெல்லை அள்ளிடலாம் வாய் தவறி விட்ட வார்த்தையை அள்ள முடியாதுடி” என்றார் கண்டிப்பு மிக்க குரலில்.

அன்புக்கனியோ யாரும் எதிர்பார்க்காவண்ணம் சரோஜினியின் கழுத்தில் கத்தியை வைத்து “என்னடி ரொம்ப பேசுற இப்ப உன்னை கொன்னுபோட்டு ஜெயிலுக்கு போறேன் நான் யாருங்குற உண்மையை எல்லாருக்கும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியவளை கொன்னா தப்பில்ல” என்று ஆத்திரத்தில் என்ன செய்கிறோமென்று மதியிழந்துவிட்டார்.

“அம்மாஆஆ” என்று அபி அலறி மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள். அடுத்த நிமிடம் வர்மன் அன்புக்கனி பிடறியில் எட்டி உதைத்ததும் அவர் தடுமாறி கத்தியை கீழே போட்டு விழுந்துவிட்டார்.

“டேய் எங்கப்பாவையே அடிக்குறியா” என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்த அனிகாவின் கன்னத்தில் ஓங்கி பளாரென அறைவிட்டான் அவள் கன்னத்தை பிடித்துக்கொண்டு பயந்து நின்றாள்.

“பொண்ணுங்கிற காரணத்தால உன்னை ஒரு அடியோடு சும்மா விடறேன் இங்கிருந்து ஓடிப்போயிடு” என்று அவளுக்கு எச்சரிக்கை கொடுத்ததும் கீழே கிடந்த அன்புக்கனிக்கு கையை கொடுத்து தூக்கி விட்ட அனிகாவோ “வாங்கப்பா போகலாம்” என்று அன்புக்கனியை தூக்கி விட்டவள்

“டேய் வர்மன் உன்னை சும்மா விடமாட்டேன் பாரு” என்று பொங்கியவளை

“உன்னால ஒன்னும் ** பிடுங்க முடியாது இடத்தை காலி பண்ணுங்க இல்லனா போலீஸ்க்கு போன் போட்டு வரச்சொல்லி ரெண்டு பேரையும் ஜெயிலுக்கு அனுப்பிடுவேன்” என்று விரல் நீட்டி எச்சரிக்கை செய்து பல்லைக் கடித்தான்.

அன்புக்கனியோ “என் பொண்ணு மயக்கம் தெளியட்டும் நான் அவகிட்ட பேசணும்”

“என் பொண்ணுகிட்ட நீ எதுவும் பேச தேவையில்லை வெளியே போ…” என்று வாசலை கை காட்டியவர் “வர்மா இவனை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளு அத்தை சொல்லுறேன்” என ஆர்டர் போட்ட அடுத்த நொடி அன்புக்கனியின் கையை பிடித்துக்கொண்டு கேட்டிற்கு வெளியே கொண்டு நிறுத்தியிருந்தான் வர்மன்.

“அபிமா இவங்க சொல்றதெல்லாம் பொய்” என சத்தம் போட்டவரின் முகத்தில் குத்தப்போனவன் “என் பொண்டாட்டி பேரை சொல்றதுக்கு கூட உனக்கு அருகதை கிடையாது என் பொண்டாட்டியை கொல்லப்பார்த்தவனை உயிரோட விட்டு வச்சதே தப்புடா” என்று அன்புக்கனியை பிடித்து தள்ளிவிட்டான்.

அன்புக்கனி கீழே விழாமல் அவரது காரை பிடித்து நின்றுக் கொண்டார்.

அனிகாவோ “என் அப்பா கையை விடுறா” என்று வர்மனின் பின்னே ஓடிவந்தவள் அவமானத்தில் முகம் கருத்து போய் அன்புக்கனியின் பக்கம் வந்து நின்றுக் கொண்டாள்.

“நீ எப்படி எங்களை இந்த நாட்டை விட்டு அனுப்பு விட்டியோ அதுபோல உன்னையும் இந்த நாட்டை விட்டு அனுப்ப போறேன் பார்த்துக்கிட்டே இருடா” என்று சொடுக்கு போட்டான் வர்மன்.

“நான் ஏமாந்த நேரம் எல்லாம் சாதிச்சிட்டனு நினைக்காதடா மறுபடியும் வருவேன் நீ எழுந்து நிற்க முடியாதபடி உன்னை படுக்க வைப்பேன்டா” என்று வாய் சவடால் அடிக்கவும் “இருடா வரேன்” என்று குனிந்து கீழே கிடந்த கல்லைத்தூக்கிக்கொண்டு நிமிர அப்பனும் மகளும் அங்கே இல்லை காரில் ஏறியிருந்தனர்.

அன்புக்கனியின் கார் மறையும் வரை நின்று பார்த்தவன் இவன் மேல ஒரு கண்ணு வைக்கணும் அடிப்பட்டபாம்பாய் மாறுவான் எப்படியோ துஷ்டனை தூர விரட்டியடிச்சாச்சு என்று பெரும்மூச்சு விட்டு வீட்டுக்குள் செல்ல விருப்பம் இல்லாமல் தன் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

“காஞ்சனா உன் தம்பி இப்படி ஒரு மகா அயோக்கியனா இருந்திருப்பான்னு நினைக்கவே இல்லைடியம்மா கைராசிக்காரி டாக்டரை இப்படி படுக்க வச்சி வேடிக்கை பார்த்திருக்கான் பாரு” என்று அன்புக்கனியை கரித்து கொட்டினார் வளைகாப்பிற்கு வந்த சொந்தக்கார பெண் ஒருவர்.

“என் தம்பினு அவனை சொல்லாதீங்க அண்ணி” என்றவரோ “வளைகாப்பு சாப்பாடு சாப்பிட்டுதான் எல்லாரும் கிளம்பணும்” என்றவுடன்

“பொண்ணும் மாப்பிள்ளையும் முதலில் சாப்பிடணும்” என்றார் வயதான பெண் ஒருவர்.

“இப்போ இருக்க மனநிலையில வர்மன் வீட்டுக்கு வரமாட்டான் அவங்களுக்கு தனியா எடுத்து வச்சிடறோம் வாங்க எல்லாரும் வளைகாப்பு விசேஷ சாப்பாடு சாப்பிடலாம்” என்ற மணிமாறன் வந்தவர்களை சாப்பிட அழைத்துச்சென்றார்.

காஞ்சனாவோ “கவிதா ரெண்டு குழந்தைகளையும் கவனிக்க சிரமப்படுவா நீங்க கிளம்புங்க தம்பி” என்று அசோக்கை அனுப்பி வைத்திருந்தார்.

அபிலாஷினி கண்விழித்து விட்டாள் ஆனால் அவளுக்கு அழுகை நிற்கவில்லை. “வர்மன் எங்கே நான் அவருகிட்ட மன்னிப்பு கேட்கணும் ப்ளீஸ் அவரை வரச்சொல்லு லோகேஷ்” என்று முகத்தை பொத்தி கதறவும் அவளது முகம் வியர்த்து பிபி ரைஸ் ஆகவும் அவளுக்கு பிபி செக் பண்ணினான் லோகேஷ்.

மெதுவாய் நடந்து வந்த சரோஜினியை பார்த்த லோகேஷ் “மேம் பிபி அதிகமா இருக்கு ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போகணும்” என்றான் அவசரமாக.

சரோஜினியோ அபிலாஷினியின் உடல் நடுங்குவதை கண்டு பதட்டம் கொண்டு “லோகேஷ் கார் எடு” என்று அவசரப்படுத்தினார்.

“மேம் நீங்க எப்படி நான் ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போறேன்”

“என் பொண்ணுக்காகத்தான் நான் எழுந்து வந்திருக்கேன் லோகேஷ் என்னால முடியும் காரை எடு” என்றிருந்தார் சரோஜினி.

“அனிதா காஞ்சனா அம்மாகூட இரு நான் வந்து உன்னை அழைச்சிட்டு போறேன்” என்று அழுதுக் கொண்டிருந்த அபிலாஷினியின் கையைப் பிடித்து காரில் உட்கார வைத்ததும் சரோஜினியும் காரில் ஏறி அமர்ந்தார்.

வசந்தியோ “நானும் வரேன் சரோ உன்னால அபியை பார்த்துக்க முடியாது” என்று அவரும் காரில் ஏறிவிட்டார்.

ஹாஸ்பிட்டலில் அபிக்கு பிபி குறைய இன்ஜக்ஷன் போட்டு விட்டார். வெகுவருடங்கள் கழித்து மகளுக்குத்தான் முதலில் மருத்துவம் பார்த்தார். அவர் மருத்துவத்தை மறக்கவில்லை. அவரது மூளை எப்போதும் ஹாஸ்பிட்டலில் இருக்கும் தாய்மார்களை சுத்தியே தான் இருக்கும். ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்துவிட்டார் என்றால் அந்த ஹாஸ்பிட்டலே பரபரப்பாக மாறிவிடும்.

அபியை உறங்கவைத்த சரோஜினியோ மருமகன் அருள்மொழிவர்மனுக்கு போன் போட்டார். பலவருடங்கள் கழித்து தன் அத்தையின் போனிலிருந்து போன் வரவும் பட்டென்று எடுத்தவன் “சொல்லுங்கத்தை” என்றான் சுருதி குறைந்த குரலில்.

“எங்கப்பா இருக்க?”

“நான் பீச்ல இருக்கேன் அத்தை”

“அபிக்கு எமோசனல் ஆனதால பிபி ரைஸ் ஆகிடுச்சு”

“ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போய்ட்டீங்கதானே” சரோஜினி கண்டிப்பாக தன் பொம்மியை கூட்டிச் சென்றிருப்பார் என்ற நம்பிக்கையில் கேட்டான் பதட்டத்தை மறைத்துக் கொண்டு.

“ம்ம் இப்போ நம்ம ஹாஸ்பிட்டல்லதான் பிபி குறைய இன்ஜக்ஷன் போட்டு விட்டிருக்கேன். என் பொண்ணு மேல இன்னும் கோபமா இருக்கியா… அவ பேசியது தப்புதான் நான் இல்லைனு சொல்லமாட்டேன். அவ சார்பா நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்குறேன்பா. அவ நீ இல்லைனா இருக்க மாட்டானு உனக்கு தெரியும்தானே… என் பொண்ணை வந்து பாருடா பாவம்டா” என்றார் கண்ணீர் மல்க கமறிய குரலோடு.

“அத்தை என்னை மன்னிச்சிடுங்க அவளுக்கு என்னை பத்தி நினைவு கொஞ்சம் கூட வரலையா அப்படியே நினைவு வரலைனாலும் நான் அவகிட்ட காதலோட பழகியிருக்கேன். அவளை சின்ன வயசுல இருந்து நெஞ்சுக்குள்ள கவிதையா வடிச்சு வச்சிருக்கேன் அத்தை… அவ என்னை எப்படி அத்தை சந்தேகப்படலாம் அவ முகத்துல முழிக்காதேனு சொல்லிட்டாள்ல… நான் அவளை பார்க்க வரமாட்டேன் போங்க அதான் நீங்க இருக்கீங்கல்ல உங்க பொண்ணை பார்த்துக்கோங்க” என்றான் இன்னமும் கோபம் மாறாமல்.

“டேய் அவளுக்கு மட்டும் அந்த ஆக்சிடன்ட் நடக்கலைனா உன்னை மறந்திருப்பாளா சொல்லு. பாவம்டா என் பொண்ணுகூட ஒருத்தன் நெருக்கமா இருக்கற போட்டோவை ஃபேக்கா ரெடி பண்ணி உனக்கு அனுப்பி வச்சிருந்தா அந்த நிமிசம் நீயும் சந்தேகம்தான் பட்டிருப்படா”

“நோ..! நோ..! நான் எந்த சூழ்நிலையிலும் என் பொம்மியை சந்தேகப்பட்டிருக்க மாட்டேன் என்னோட ஒவ்வொரு அணுவிலும் அபி கலந்து இருக்கா அவளை பத்தின சந்தேகம் ஒருகாலமும் வராது அத்தை அவ தான் என் உயிர்னு உங்களுக்கு தெரியும் தெரிஞ்சிக்கிட்டே என்கிட்ட விதண்டாவாதம் பண்ணாதீங்க போனை வைங்க அத்தை” என்று போனை வைக்காமல் காதிலேயேதான் வைத்திருந்தான்.

“டேய் சாப்பிட்டியா?”

“என் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுங்க அவங்களை பட்டினி போடாதீங்க” என்றிருந்தான் மறைமுகமாக அவன் பொண்டாட்டிக்கு சாப்பாடு போடச் சொல்லி

“என் பொண்டாட்டியை சாப்பிட வைங்கனு சொல்லுடா படவா… என் பொண்ணு மேல ரொம்ப நேரம் உன்னால கோபத்தை இழுத்து பிடிச்சு வச்சிருக்க முடியாதுடா அவ இப்ப தூங்கிட்டு இருக்கா எழுந்தா உன்னைத்தான் கேட்பா ரெண்டு பேரும் நடந்ததை கெட்ட கனவா நினைச்சு மறந்துடுங்க வாடா வர்மா” என்றார் மருமகன் மகள் சண்டையை சமாதானம் செய்ய பார்த்தார்.

வர்மனோ “என் முகத்துல முழிக்காதீங்க போனு சொன்னாளே அவளை நான் பார்க்கமாட்டேன்” என்று முரட்டு பிடிவாதத்தோடு போனை வைத்துவிட்டான்.

இதற்கெல்லாம் காரணமாய் இருந்த அன்புக்கனியின் மீது ஆத்திரமாய் வந்தது சரோஜினிக்கு.

வர்மன் மனசு மாறிவிடுவான் அவன் கோபம் குறைந்து விடும் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார் சரோஜினி.

அபிலாஷினி கண்விழித்ததும் தன் பக்கம் அமர்ந்திருந்த சரோஜினியிடம் “வர்மன் எங்கம்மா?” என்றுதான் கேட்டாள்.

“என் கண் முன்னாடி நிற்காதீங்க போனு விரட்டிவிட்டு இப்போ வந்து வர்மன் எங்கேனு கேட்குறியாடி” என்று அத்தனை கோபத்தையும் மகள் மேல் காட்டினார்.

வசந்தியோ “அம்மாடி நீ சாப்பிட்டு ரொம்ப நேரம் ஆச்சு வயித்து புள்ளக்காரி வயித்தை காயப்போடக்கூடாது இந்த ஜுஸை குடிமா” என்று மாதுளை ஜுஸை நீட்டினார்.

“நான் வர்மன் வந்தாதான் எதுவும் குடிப்பேன்” என்று பிடிவாதம் பிடித்தாள் அபிலாஷினி.

“வயித்துல ரெட்டை புள்ள இருக்கு உனக்கு நினைவு இருக்கா குழந்தைகளுக்கு ஆகாரம் போகவேண்டாமா உன் புருசன் என் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுங்கனு போன் பண்ணியிருக்கான் தெரியுமா”

“அப்படியா என்னை சாப்பிடச் சொல்லலையா அவரு புள்ளைங்கதான் அவருக்கு முக்கியமா நான் முக்கியம் இல்லையா…” இவளுக்கு அவனை திட்டியது நினைவில் இல்லை போலும் இதழை பிதுக்கி சிறுபிள்ளை போல அழத்தயாரானாள்.

“நீ பேசின வார்த்தைகளை கேட்டு வர்மன் எப்படி இங்க வருவான்னு நினைக்குற ஒழுங்கா இந்த ஜுஸை குடி உங்க சண்டையில எங்க பேரப்பிள்ளைகளை இழுக்காதீங்க” என்று அவளை மிரட்டி ஜுஸை குடிக்க வைத்தார் சரோஜினி.

இருவரும் இருதுருவங்களாக பிரிந்து இருந்தனர். இவர்களை காலம்தான் இணைத்து வைக்கவேண்டும்.

2 thoughts on “நெஞ்சில் வடித்த கவிதை”

Leave a Reply to Vithya.V Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top