ATM Tamil Romantic Novels

காதல் தானடி என் மீது உனக்கு!-13&14(விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு? 

    [13]

அன்றைய நாளின் பின் வீடு வந்தவளுக்கு, உடற்சோர்வும், பிரயாணக்களைப்பும் சேர்ந்து கொள்ள, நாள் முழுவதையும் தூக்கத்திலேயே கழித்தாள் நிலா. 

வடமேல் இலங்கையிலிருந்து, தென்னிலங்கை வரை பயணம் என்பது கொஞ்சம் அலுப்பும் தரக்கூடியது என்பதை அறிந்திருந்த மென்னிலாவின் தாயாரும் சரி, அவளது மாமாவும் சரி… நாள் பொழுதில் கூட உறங்கும் மென்னிலாவை யாரும் ஏதும் சொல்லவுமில்லை. 

‘முக்கியமான டாக்குமென்ட்” என்று சொல்லி.. றுஹூணு கேம்பஸ் வரை சென்றாயே? எங்கே அந்த முக்கிய ஆவணங்களைக் காட்டு’ என்று யாரும் அவளை சந்தேகிக்கவுமில்லை. 

பள்ளிப்பருவ நாட்களில் இருந்து.. மன்னாரை விட்டு வெளியே தான் படித்திருந்தாலும் கூட… இது வரை ‘குடும்ப மானம்’ கெடும்படியாக.. மென்னிலா ஒரு அவதூறைக் கூட வாங்கிக் கொடுத்திராதது அவர்களுக்குள் பலமான நம்பிக்கையைத் தோற்றுவித்திருக்க வேண்டும். 

ஆனால் மென்னிலாவின் அதரங்களோ, உறங்கும் போதிலும் கூட.. மென்மையாக விரிந்தே இருக்க,.. மூடிய விழிகள் பின்னாடியிருந்து.. அவன் வந்து கட்டியணைப்பதாகத் தோன்றியது அவளுக்கு. 

தன் முறைப்பெண் மென்னிலா.. மனதுக்குள் இன்னொரு ஆடவனை நினைந்து கொண்டிருப்பதை அறியாது.. ‘திருவிழா முடிந்ததும் கல்யாண ஏற்பாடு’ என்று தாத்தா சொன்ன வாசகத்திலேயே.. 

கால்கள் தரையில் பாவாத.. ஒரு காதல் மனோநிலையில்.. திருவிழா வேலைகளையெல்லாம் அநாசயமாக.. தன் தலை மேல் போட்டு செய்து கொண்டிருந்தான் அப்பாவி சரவணன்!! 

இப்படியாக நாட்கள் கழிய.. கடைசித் திருவிழா நாள் அரங்கேறிய உசிதமான நாளும் வந்தது. அந்த நாள்.. அவள் வாழ்க்கையை அடியோடு திருப்பிப் போடவும் செய்தது. 

மன்னாரைச் சுற்றியிருந்த அனைத்து ஊர்களும் குழிமியிருந்தது அன்று.. அந்த சிறுத்தோப்பு கிராமத்தின் மன்னார்த்திடலில்!! 

மைதானத்தின் மையத்தில்.. இராட்சத ரங்க ராட்டினம் அமைக்கப்பட்டிருக்க.. சிறுவர்களும், பெண்களும் என.. அதில் பயணிக்க.. கூட்டமே கூடியிருந்தது பெரும் திரள் அளவிற்கு!! 

இன்னொரு பக்கம்.. சின்னச் சின்ன ஸ்டால்களில்.. குழந்தைகளுக்கான மலிவு விலை விளையாட்டுப் பொருட்கள், கலர் கலர் கண்ணாடிகள் மற்றும் பெண்களுக்கான வளையல், ஆபரணங்கள், தீனிப் பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகள் என்று மாபெரும் திருவிழாச் சந்தையும் நடைபெற்றுக் கொண்டிருக்க, 

எங்கு பார்த்தாலும் மக்கள் திரள் கசகசவென்று இருந்ததைப் பார்த்த.. மென்னிலாவுக்கு.. அந்தத் திருவிழா புது அனுபவமாக இருந்தது. 

நாவல் நிறத்தில் சேலை உடுத்தி.. தலை நிறைய மல்லிப்பூச்சூடி.. 

கூடவே இருகைகளிலும் அதே நிறத்துக்கு தோதான வளையல் அணிந்து.. கழுத்திலே தங்கத்தில் நாவல் நிற கற்கள் பதித்த அட்டிகை அணிந்து.. அதே டிசைனில் செய்யப்பட்ட.. நாவல் நிற கல் மணிகள் ஆடும் லோலாக்கும் பூண்டு, 

அனிச்சம்பூப் பாதங்களில் .. அவன் காதலோடு அணிவித்து விட்ட.. தங்கக் கொலுசு “சலக் சலக்” என்று ஒலியெழுப்ப.. நடந்து வந்தவள்.. ரம்பையோ, ஊர்வசியோ என்று யாரும் ஐயுறத்தக்களவுக்கு.. அழகுடன் அந்தத் திருவிழாவில் வளைய வந்து கொண்டிருந்தாள். 

கூடவே.. அவளுக்கு ஒத்தாசையாக பணியாளப் பெண் மஞ்சுவும், அவளோடு இணைந்து நடந்து வர, மென்னிலாவின் முகமோ சற்றே வாடியே இருந்தது. 

பின்னே… திருவிழாவுக்கு வந்தால்.. பரிதியைக் காணலாம் என்ற பேராவலுடன் வந்தவளுக்கு, அவளது சூரியத் தலைவன்.. கண்களில் படாமலேயே போக்குக் காட்ட.. அவளது மிருதுவான வதனம்.. களை கட்டாமல் சோபையிழக்காமல் என்ன செய்யும்?. 

மஞ்சுவோ.. அங்கிருந்த ஸ்டால்களில்.. கடலை மிட்டாயும், நிலக்கடலையும் பாக்கெட் பாக்கெட்டாக வாங்கி கைகளில் திணித்த வண்ணம்.. இன்னும் சிலதை அள்ளி வாய்க்குள்ளும் திணித்துக் கொண்டே வர, 

மாதுவின் விழிகளோ.. கூட்டத்தில் தெரியும் வாட்டசாட்டமான இளைஞர்களையே ஆராய்ந்தது. 

அந்த இளைஞர் கூட்டத்திலாவது அவன் தெய்வாதீனமாக இருந்து.. அப்படியாவது தன்னவனின் விழிகளில்.. தான் விழுந்து தொலைக்க மாட்டோமா? என்று ஏங்கித் தவித்தது சுரூபினிப் பெண்ணின் இதயம்!! 

அந்த கணம் அவளைத் தாண்டி.. ஒரு ஆடவர் கூட்டம் செல்ல, சேலையின் ஜாக்கெட் வழியாகத் தெரிந்த.. வெண்ணெய்யில் குழைத்துச் செய்தாற் போன்றிருந்த அவளது முதுகில்.. 

ஒரு ஆடவனின் மீசை சூழ் அதரங்கள் குறுகுறுத்து, “ம்ப்ச்” என்ற ஒலியுடன் முத்தம் வைக்க, இதயம் தூக்கிவாரிப்போட சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் அவள். 

தன்னை அத்துமீறித் தொட்ட ஆடவன் முகத்தை அவளால் சரிவர பார்க்க முடியாதளவுக்கு ஜனநெரிசல், அவளையும், அந்த ஆடவனையும் நெருக்க, 

தன்னை தன் சம்மதமின்றி தொட்ட ஆடவன்பால் எரிமலைச்சீற்றம் மிக, தன்னைத் தீண்டிய ஆடவன் யாரென்று.. அந்த ஜனத்திரளுக்குள் துலாவியது அவளது சீற்றம் கமழும் விழிகள். 

அந்த கணம் அவளுடைய வளைகை.. யாரும் எதிர்பாராத தருணம் பற்றப்பட்டு, அவளே அதிர்ந்து நிமிரும் முன்னர், 

அவளது முன்னங்கை மென்மையை தன் விரல்களால் வருடிய வண்ணம், வளையல் அணிவித்தது பச்சை நரம்போடிய மாநிறக்கையொன்று!! 

ஆனால் என்னேவொரு துரதிர்ஷ்டம்?? அவளால் தான்.. தனக்கு வளையல் மாட்டிவிட்ட ஆடவனை கண்கூடாகப் பார்க்க முடியாமல் போனது!! 

தன்னைக் கடந்து செல்லும் மக்கள் திரளை.. வளையல் மாட்டிய கையை புரியாத விழிகளுடன் பார்த்துக் கொண்டே.. நிமிர்ந்த வேளை, 

அந்தக் கூட்டத்திலிருந்தும்.. சட்டென்று திரும்பிய ஒரு ஆடவன்.. அவளைப் பார்த்து குறும்புத் தாண்டவமாட நகைத்து வைத்தான்!! 

மக்கள் சூழ்ந்திருக்கும் வேளையில்.. ஊரார் மதிக்கும் ராஜமாணிக்கத்தின் பேத்தியை.. லாவகமாக.. அதே சமயம் சூட்சுமமாக.. யாரும் அறியாமல்.. முதுகில் முத்தம் வைத்து.. சில்மிஷம் செய்யும் திராணி.. அங்கே யாருக்குத் தான் உண்டு? 

அந்தத் தைரியம் வாய்க்கப் பெற்ற ஒரே ஆண்மகன்.. சாட்ஷாத் பரிதிவேல் வீரனே தான்!! 

அந்த நேரம்.. உள்ளுக்குள் அவனைக் கண்டதும் இதயவானில் ஆயிரம் மத்தாப்பூ சிதறியது போல ஒரு ஜில்லென்ற உணர்வு, மனம் முழுவதும் விரவிப் பரவியது அவளுக்குள். 

அதன் விளைவாக இதழ்க்கடையோரம் ஓர் மெல்லிய காதல் புன்னகை அரும்பினாலும், தன்னை இத்தனை நேரம் பதற வைத்த பரிதியை.. போலிக் கோபத்துடன் முறைத்துப் பார்த்தாள் நிலா. 

நிலாவின் சினத்தில்.. அவளது கன்னக்கதுப்புக்கள் சிவப்பது கண்டு.. அவளையே இமைக்க மறந்து பார்த்திருந்தான் அவன்!! 

அப்போது தான்.. மென்னிலாவை நாடி வந்து கொண்டிருந்த சரவணனுக்கு.. கோபத்துடன் முறைக்கும் நிலாவும், தாபம் சிந்தப் பார்க்கும் பரிதியும் விழுந்து தொலைக்க வேண்டும்?? 

சரவணனுக்கோ.. பரிதி தன் முறைப்பெண்ணின் மீது பதிக்கும் பார்வையில் சந்தேகமும் முளைத்தது. அதில் வேறு.. மென்னிலாவின் கோபப் பார்வை.. ஏதேனும் விபரீதங்கள் நேர்ந்திருக்கக் கூடுமோ? என்ற கேள்வியை கொடுக்க, 

மென்னிலாவை நாடிப் போனவன் புருவ மத்தியில் முடிச்சிட்ட விழிகளுடன், “என்னம்மா.. ஏதாவது பிரச்சினையா?”என்று கேட்க, அப்போது தான் சரவணன் அங்கு வந்து நிற்பதையே அவதானித்தாள் மென்னிலா. 

“ஆத்தீஈஈ… இவன்.. என்னை பரிதி பார்த்து வைத்த பொல்லாத பார்வையை கண்டுகொண்டிருப்பானோ?’ என்று உள்ளூற பக்பக்கென்று அடித்தது அவளுக்கு. 

இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல், “ச்சேச்சே.. அப்படியொண்ணும் இல்லை மாமா..” என்று மழுப்பியவள்.. விழிகள் திருப்பிப் பார்த்த வேளை.. உடனிருந்த மஞ்சுப்பெண் காணாமல் போயிருப்பதை அந்நேரம் தான் பார்த்தாள் மென்னிலா. 

‘இந்த மஞ்சு எங்கே போய் தொலைஞ்சா?’ என்று முணுமுணுத்துக் கொண்டே கூட்டத்தில் துலாவிய போது.. மைதான எல்லையைத் தாண்டி.. 

பச்சை மற்றும் மஞ்சள் தாவணி உடுத்தியிருந்த மஞ்சுப் பெண் செல்வது புரிந்தது. 

‘இவ எதுக்கு அந்தப் பக்கம் போறா?”என்று தோன்ற.. அவசரம் தொனிக்கும் குரலில் மாமாவைப் பார்த்து, “மாமா.. கொஞ்சம் இருங்க.. வந்திட்றேன்!!”என்றவள், 

“ஹேய் எங்க போற? சொல்லிட்டுப் போ நிலா” என்று சரவணன் கத்தக் கத்த கேட்காததவளாக, ஒரு மான்குட்டியைப் போல துள்ளிக்குதித்து ஓடினாள்.. மஞ்சுவை நோக்கி. 

ஜனத்திரளுக்குள் புகுந்த அத்தை மகளை பின்தொடர்ந்த அவனது கண்களின் கவனத்தைக் கலைக்குமுகமாக ஒலித்தது அவனுடைய செல்.

பார்த்தால் அழைப்பெடுத்திருந்தது.. அரிசி ஆலை நிர்வாகத்துக்கு பொறுப்பான.. கொழும்பு நிர்வாகி!! முக்கியமான அழைப்பு என்பதால்.. அதை மறுக்க முடியாமல்.. உரையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டான் சரவணன்!! 

அங்கே மஞ்சுவை பின்தொடர்ந்தே வந்தவளுக்கு.. அவள்.. மைதானம் தாண்டி.. ஊர்த்தெருவுக்குள் நடப்பது போல இருக்க, மென்னிலாவின் விழிகள் சற்றே இடுங்கியது. 

“இந்த நேரத்துல திருவிழாவுல இருக்காமல்.. இங்கே என்ன பண்ணுறா?”என்ற கேள்வி மென்னிலாவை ஆட்டிப்படைக்க.. ஆள் அரவமற்ற சாலையில்.. மஞ்சுவைத் தொடர்ந்து நடந்தாள் மென்னிலா. 

பாவம், அப்பாவி மென்னிலாவுக்கு.. அது மஞ்சு அல்ல. மஞ்சுவைப் போலவே… ஆடை அணிந்திருக்கும் பெண் என்று அப்போது புரிந்திருக்க வாய்ப்பேயில்லை. 

திடீரென்று வலதுபுறம் திரும்பிய சந்தில்.. அந்தப் பெண் திரும்ப, இவளும் அவளைத் தொடர்ந்து திரும்ப.. என்னவொரு ஆச்சரியம்?? 

மஞ்சுவோ வந்த சுவடே இல்லாமல் மாயமாகி விட்டிருந்தாள்!! 

‘எங்கே மஞ்சு?” என்று விழிகள் வியப்பில் விரிய, அவளது கண்கள்.. அங்கிருந்த குடில்களின் பக்கம் மஞ்சுவை வேகவேகமாகத் தேடியது. 

எங்கும் அவள் இல்லை!! 

குடிசைக் கதவுகள் எல்லாம் மூடப்பட்டிருக்க.. திறந்திருந்தது என்னவோ.. அரிசி குடோன் மட்டும் தான்!! 

மாலை சூழ்ந்த அந்த வேளையில்.. திறந்திருக்கும் குடோனில் தான் மஞ்சு நுழைந்திருக்க வேண்டும் என்று ஆணித்தரமாக நம்பியது அவள் மனது. 

நிமிடமும் தாமதியாமல்.. உள்ளே நுழைந்தவளின் கொலுசணிந்த பாதங்களின் சலசலக்கும் ஒலி.. அந்த அரிசி குடோனின்.. நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டிருந்தது!! 

அங்கே.. அந்த அரிசி குடோனில் மஞ்சு இருக்கவேயில்லை!! மாறாக, உள்ளேயிருந்து.. செல்லில் பேசியபடி வெளியே வந்தது பரிதிவேல் வீரன்!!! 

அவனை எதிர்பாராமல் கண்டதும்.. அவள் கல்லாய் சமைந்து நிற்க, உள்ளுக்குள் தோன்றியது எல்லாம், ‘இங்கே இவளை வரவழைக்கத் தான் இந்த ஏற்பாடா?’என்று தான். 

ஆனால்… அவளுடைய சித்தத்தில் விளைந்ததை எல்லாம் தவிடுபொடியாக்கும் வண்ணம், சற்றே அதிர்ந்த விழிகளுடன், செல்லை அணைத்து பாக்கெட்டில் இட்டவாறு கேட்டான் பரிதி, 

“நீ இங்கன என்ன பண்ணுற ஆண்டாளு?”என்று. 

அவளுக்குள் ஆயிரம் கேள்விகள்.. மலையளவு கொட்டிக்கிடந்தாலும் அதை உடனடியாக ஒப்புவிக்காமல், சந்தேக விழிகளுடன் அவனை ஏறிட்டவள், அதே கேள்வியை அவனைப் பார்த்து கேட்டாள். 

“நீங்க இங்கே என்ன பண்ணுறீங்க மாமா?”என்று. 

அவனது விழிகளில் எந்த சஞ்சலமோ, சில்மிஷமோ இன்றி நேரடியாக.. அதுவும் உறுதியான குரலில் வெளிவந்தது பதில்!! 

திருவிழாவுக்கென அலங்காரம் பூண்டிருக்கும் தன் பெண்தேவதையை இரசித்துப் பார்க்கும் விழிகளோடு, “நான்.. என் வாசுமாமாவ தேடி வந்தேன் ஆண்டாளு.. நீ?”என்று புருவங்கள் உயர்த்திக் கேட்டான் அவன். 

அப்படியானால் நிஜமாகவே இது அவனது செயல் அல்ல போலும் என்ற ஊர்ஜிதம் பிறக்க, பாழும் பெருமூச்சை விட்டுக் கொண்டே, 

“நான்.. என் மஞ்சுவைத் தேடி வந்தேன்!”என்று சொல்லிக் கொண்டிருந்த வேளை, அரிசி குடோனின் பாரிய கதவுகள்.. “தடார்” என்ற ஒலியுடன் அடித்துச் சாத்தப்பட்டது. 

அந்த நாராசமான ஒலியில்.. இதயம்.. துடிப்பதை ஒருகணம் நிறுத்த… அச்சம் தாளமாட்டாமல்.. அனிச்சை செயல் போல.. அருகில் இருந்த தன் தலைவனை இறுக்கிக் கட்டியணைத்திருந்தாள் அவள்!! 

தன் காதலியின் இறுகிய அணைப்பில்.. தாம் எத்தகைய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்? என்று யோசிக்க விடாது செய்தது.. 

பெண்ணவளின் மென்மைக் கோலங்கள்.. இரண்டும் பரந்த மாரில் நச்சென்று பதிய.. அவள் தந்த இறுகிய அணைப்பு!!! 

அவளை அணைக்கத்துடித்த கைகளை கை முஷ்டி மடக்கி.. தன்னாசைகளை கட்டுப்படுத்திக் கொண்டவனுக்கு, இது காதலிக்கும் நேரம் அல்ல!! 

அந்த காதலைக் காண்பிக்கும் நேரம் என்று புரிந்தது!! 

அவள் முதுகை மென்மையாக தட்டிக் கொடுத்த வண்ணம், “ஹேய் ஆண்டாளு.. இங்கே பாரு.. ஒண்ணுமில்லை.. நான் பக்கத்துல தான் இருக்கேன்” என்று ஆறுதல் வார்த்தைகள் மொழிய, 

மெல்ல மனம் தேறி.. அவனிலிருந்து விலகிக் கொண்டவளின் கண் முன்னே.. எங்கும் கும்மிருட்டு. தன்னைத் தவிர இன்னொரு ஜீவனும் அங்கே இருக்கின்றதை பார்க்க முடியாதளவுக்கு ஒரு கடுமையான இருட்டு.

இருப்பினும் தன் முன்னாடி நின்றிருந்த ஆண்மகன் விட்ட நெடுமூச்சுக்கள் அவள் காதுகளைத் தீண்டிக் கொண்டிருந்தன. 

அறையில் நிலவிய புழுக்கத்தினால், அவன் மேனியில் வழிந்த நூதனமான வியர்வை வாசமும் அவள் நாசியில், அவள் அனுமதி இன்றியே உள்நுழைந்து கொண்டிருந்தன. 

கூடவே அவ்வாண்மகனின் உடல் அசைந்த போது ஏற்பட்ட நுணுக்கமான ஒலி.. இவை தான் அவளைத் தவிர ஓர் ஜீவன் அங்கே இருக்கின்றது என்பதற்கு அவளால் ஆதாரம் காட்ட முடியுமானதாக இருந்தது. 

அது முழுதும் மரத்தினாலான பலகை வீடு. 

அவள் கண்கள் அவ்விடத்தைச் சூழ அலை பாய்ந்தன. இருட்டிலும் பார்க்கக் கூடிய பூனைக்கண்களைக் கடவுள் அவளுக்குப் பரிசளித்திருக்கக் கூடாதா? 

மனதோரம் ஓர் சின்ன அங்கலாய்ப்பு தோன்றி மறைந்தது. 

அங்கணம் அலைபாய்ந்த அவள் கண்கள், அந்தச்சுவர் பலகையின், ஓரத்தில், ஆறரையடி உயரத்துக்கும் மேலே இருந்த ஒரு சதுர வடிவத் துவாரத்தைக் கண்டு கொண்டன. 

அதன் வழியாக, வானத்திலே காய்ந்து கொண்டிருந்த முழுமதியை அவளால் கண்டு கொள்ள முடியுமானதாக இருந்தது. 

இத்தனை நேரமும் நிலவை, முகில் மறைத்திருக்கக் கூடும்!! 

 ஆசைக்காதலனான முகிலின் அணைப்பிலிருந்து வெளிவந்த நிலவு மங்கையின் முகம், முகில் காதலின் அணைப்பு தந்த மகிழ்ச்சியில் பிரகாசமாக ஒளிர்கின்றதோ?

மனதோரம் இம்முறை அவ்விக்கட்டான சூழ்நிலையிலும், கவித்துவமாக எண்ணியது மனம். 

நிலவின் ஒளி.. அந்த பலகைக்கூரை வீட்டையும் அடைய, அவள் விழிகளில் மதியின் ஒளி.. கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கப்படலாயிற்று. 

அவளால் அறையில் சுற்றிலுமுள்ள பொருட்களைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.அதுவொரு அரிசிமூட்டைகள் எல்லாம் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஓர் குடோன். 

கொஞ்சம் பழைய அரிசிமூட்டைகளும் இருந்திருக்க வேண்டும். பழைய அரிசிக்கு என்று வரும் இயற்கையான மணம் அந்தக் குடோன் முழுவதிலும் இருந்து குப்பென்று வீசிக் கொண்டிருந்தது. 

முதலில் மூக்கைப் பொத்திக் கொண்டவள் தான் அவள். தற்போது அந்த நாற்றம் பழகிவிட்டிருந்தது. 

தரையெங்கிலும் காய்ந்த சருகுகளோ, வைக்கோலோ நசநசவென்று மிதிமிதிபட்டுக் கொண்டிருந்தது. 

அவள் முன்னாடி நின்றிருந்தான் அவன்!! 

எப்பேர்ப்பட்ட நிலையிலும்.. அவனை மேலிருந்து கீழ் வரை அலசியது அவள் கண்கள்;பாழாய்ப்போன அவள் கண்கள்!!

அவனது கழுத்து வரை வளர்ந்திருந்த காற்றில் ஆடும் கேசம், புசுபுசுவென்று கனனங்களை மறைத்து வளர்ந்திருந்த தாடி.. 

இரு தசைக்குன்றுகளை அருகருகே வைத்தாற் போன்று என்று கம்பன் வர்ணித்த ஸ்ரீ இராமபிரான் போன்ற தோள்புஜங்கள்!! 

முறுக்கேறிய கைச்சந்தினை இறுக்கிப் பிடித்திருந்த வெள்ளை ஷேர்ட்டும்,இடுப்புக்கு கீழே வேட்டியும், 

 அந்த ஷேட்டின். திறந்திருந்த மேலிரண்டு பட்டன் வழி தெரிந்த திண்ணிய மார்பும், 

இடுப்பில் வைத்தபடி இருந்த கைகளும், அகல வைத்த கால்களும் என இராஜதோரணையுடன் நின்றிருந்தான் அவ்வாலிபன்!! 

அவனைப் பார்த்த வண்ணமே மேலேறிய அவள் கண்கள், அவனது கண்களை நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது.

 இத்தனை நேரம் அவள் தன்னை ஏறிடுவதையே பார்த்துக் கொண்டிருந்திருப்பான் போலும் அவனும். 

அவளைப் பார்த்ததும் மெல்ல மேலுயர்ந்தன அவன் புருவங்கள்.

 ‘என்ன?’ என்பது போல அவன் பார்த்து வைத்த பார்வை, ‘ஐய்யயோ அவ்வளவு அப்பட்டமாகவா பார்த்து வைத்தோம்” என்று அசடுவழிய வைத்தது எல்லாம் ஓரிரு நாழிகை தான். 

சட்டென இருக்கும் களேபரமான நிலவரம் புரிய,கைகள் நடுங்க, “இப்போ நாம் எப்படி வெளியில போறது?”என்று கேட்டாள் அவள். 

அவள் குரல் அவளுக்குக் கேட்டதே அதிசயம் போல இருந்தது அவளுக்கு. 

அவள் பயம் அவனுக்குப் புரிந்தது. இருட்டு குடோனில் அவனும், அவளும் மட்டும்!! 

இல்லை ஒரு ஆணும், பெண்ணும் மட்டும்!! பீதிகள் எழுவது இயற்கையே! 

இருவரும் இருவேறு தேவைகளுக்ககாக வந்து மாட்டிக் கொண்டார்கள். தற்போது வெளியில் செல்லும் வழிவகை அறியாது நிற்கின்றார்கள். 

அவள் கைவிரல்களைப் பிசைந்து கொண்டு நின்றாள். இரவில் தனிமையில் வந்து.. குடோனில் மாட்டிக் கொண்டாள் என்று பெரியவர் அறிந்தால் அவள் நிலை?? 

அவள் நெற்றியில் முத்து முத்தாக வியர்த்தது; கால்கள் ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் அசைந்து கொண்டேயிருந்தது. 

அவனது ஏகாந்தமான குரல், அந்த இருட்டையும், நிசப்தத்தையும் ஒரு சேரக் கலைத்தது போல ஓர் தோற்றமயக்கம் அவளுள் தோன்றவாரம்பித்தது. 

“பயப்புடாத… நான் உன் பக்கத்துல தானே இருக்கேன்?.. ஆராவது இந்தப் பக்கம் வர்றாங்களான்னு பார்த்துட்டு வந்துட்றேன்.. நீ இங்கனயே இரு..” என்று சொன்னவன்,அறையின் சதுரத் துவாரத்தை நோக்கி நடந்தான். 

அவன் பேசிய தமிழ்… ஒருவகையான இசைத்தமிழாக அவள் காதில் பாய்ந்தது. 

இருந்தாலும் இருட்டில் அவளுக்கு மிகப் பெரும் துணையாக இருக்கும் அவனை விட்டு அகல்வது, அவளுக்கு சரியான யோசனையாக தோன்றாது போகவே, 

அவள் கைகள் அவளையும் மீறி, அவனது ஷேர்ட்டின் பின்புற நுனியை பிடித்துக் கொண்டது. இதழ்கள் தானாக படபடத்தது. 

“இல்.. இ.. இல்லை.. எ.. எ.. எனக்கு ப.. ப்.. பயமா இருக்கு.. நா.. நான் உங்க கூடவே வரேன்..”என்றாள் அவள் மீண்டும் மென்மையாக. 

அவன் சட்டெனத் திரும்பி அவள் நயனங்களைப் பார்த்தான். அதில் என்ன தோன்றியதோ? ஆனால் அவன் ஓரிரு கணங்கள் இமைக்காது பார்த்துக் கொண்டேயிருந்தான். 

அவன் பார்வை, அவளுள் ஏதோ ஒன்றைச் செய்ய, சட்டென ஒரு தரம் கண்ணிமைத்து, தலை குனித்துக் கொண்டாள் அவள். 

மீண்டும் தலை நிமிர்ந்த போது.. அந்த ஆஜானுபாகுவான உருவம்.. அவளை விட்டும் இரண்டடி நடக்க, அவளும் அவன் பின்னாலேயே சென்றான். 

அந்தக் குடோனின் பாரிய பலகைக்கதவுகளின் இடுக்கு வழி வெளியே பார்க்க முயன்றான் அவன்;முடியவில்லை.பின் திரும்பி வந்து பலகைச் சுவர் மீதிருந்த சதுரத் துவார வழியே எட்டிப் பார்க்க முனைந்தான் அவன். 

சிறிது நேரம் எம்பி எம்பி சதுரத் துவாரத்திட்டைப் பிடிக்க முயன்றவனின் முயற்சி கை கூடியது. 

ஒருகட்டத்தில் அந்தத் துவாரம் வழியே இருகைகளையும் அழுத்திப் பிடித்தவன், வெளியே நடப்பவற்றை எல்லாம் அவதானிக்க முனைந்தான். 

தூரத்தே வண்ண ஒளிவிளக்குகளை சுழலவிட்டாற் போன்று, நில்லாது சுற்றிக் கொண்டிருந்தது ரங்கராட்டினம். கூடவே மினுமினுங்கிக் கொண்டிருந்தது அலங்கரிக்கப்பட்ட கோயில் கோபுரம்!! 

சினிமாப் பாடல்களின் சத்தம் ஒலிபெருக்கிகளே அதிரும் அளவுக்கு, காதைப் பிளந்து கொண்டிருந்தது.

 அறைக்குள் சரிவரப் புகாத ஒலி, அந்த ஓட்டை அருகே நாராசமாகவே.. வந்து கொண்டிருந்தது. 

அது ஊர்த்திருவிழா நடந்து கொண்டிருந்த இனிய இரவு ஊர்மக்களுக்கு!! இவர்களுக்கு? கொஞ்சம் படபடப்பான இரவு!! 

அந்தப்பக்கம் சென்ற மனிதத்தலைகளை நோக்கி, உதவி கேட்டு பெருங்குரலெடுத்துக் கத்தவாரம்பித்தான் அவன். ரொம்ப நேரம் கத்திக் கொண்டேயிருந்தான் அவன். 

உதவி கிடைக்கும் என்ற தன்னம்பிக்கையில்.. அவளும் அவனது பக்கவாட்டுத் தோற்றத்தையே பார்த்தபடியிருந்தான். 

அவனின் கூப்பாட்டை விடவும், ஒலிபெருக்கிகளின் ஒலி அடர்த்தியாகக் கேட்க, யாரும் அவன் குரலைக் கேட்பதாகவும் இல்லை; உதவியும் கிடைக்கவில்லை. 

இறுதியில் சோர்ந்து போனவனாக தரையில் குதித்தான் அவன். 

அவனது பரந்த நெற்றியில் பூத்த வியர்வை மணிகள், சந்திரனின் கிரணங்கள் பட்டு, முத்துப் போல பிரகாசித்தது தனியழகாக இருந்தது. 

அவள் எதுவும் கேட்கவில்லை. அவனது முகத்தில் தெரிந்த இறுக்கம், முயற்சி கை கூடவில்லை என்பதைப் பறைசாற்றியது. 

அத்தோடு நின்றானா அவன்? 

இரண்டெட்டில் தாவி வந்து, மூடப்பட்ட பாரிய கதவுகளின் குறுக்கே இருந்த இரும்புக் கொண்டிகளைக் கடினப்பட்டு உயர்த்த முனைந்தான். 

அவன் கால்கள் முன்னொன்றும், பின்னொன்றுமாகத் தரையில் ஊன்றிப் பதிந்தது. அவனது முறுக்கேறிய புஜங்கள் இன்னும் கொஞ்சம் இறுகியது. 

அவன் இன்னும் கொஞ்சம் வலு கொடுப்பதற்காக, பற்களை அழுந்தக் கடித்துக் கொண்டான். 

அவனது பெருமுயற்சியின் பலனாக, நூலளவு அசைந்தது அந்தக்கதவு. 

அவ்வளவு தான்.. அவ்வளவே தான்!! அதன் பிறகு அசைந்து கொடுக்கவே மாட்டேன் என்று பிடிவாதமாக நின்று விட்டது அந்தப் பாழும் பெரும் கதவு. 

துருப்பிடத்த இரும்பு முனைகள் குத்துப்படவே, சட்டென விரல்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான் அவன். 

அவன் தன் வலியை வெளிக்காட்டக் கத்தவில்லை. இருப்பினும், விரல் நுனியில் இரத்தம் கசிந்தது போலும், வாயில் வைத்து விரல்களை சூப்பிக் கொண்டான் அவன். 

அந்த மென்மையான மங்கைக்கோ வெளியேறுவதற்கு அவன் செய்யும் பிரயத்தனங்களைப் பார்க்க பாவமாகப் போயிற்று. 

பெரியவர் திட்டுவதைக் காட்டிலும், அவன் மேல் கழிவிரக்கம் மிக, மிருதுவான குரலில், 

“முடியலைன்னா விட்டுருங்க.. யாராவது வர்ற வரைக்கும் நாம இங்கேயே இருக்கலாம்.”என்றாள் அவள். 

அவன் மீண்டும் நிசப்தமாக அவளது நயனங்களைப் பார்த்தான். அவளது விழிகளை இந்தப் பார்வைப் பார்த்து வைக்கிறானே? நிஜமாகவே அவள் விழிகளில் என்ன தான் உள்ளது? 

“அப்படின்னா விடியுறவரை இங்கனயே கெடக்கோணும்.. பரவாயில்லீய்யா? நான் புழுக்கம் தாங்கிக்கிடுவேன்.. நீ?? சீமையில இருந்து வந்தவ.. புழுக்கம் தாங்கிக்கிடுவியா?”என்று கேட்டான் அவன். 

அவள் அதற்கு பதிலளிக்கவில்லை. அவளால் புழுக்கம் தாங்க முடியாது தான். ஆனால் சூழ்நிலை?? தாங்கித்தானேயாக வேண்டும்? 

அவள் அணிந்திருந்த வளையல்கள் ஒருபுறம் சலசலக்க, கொலுசும் ஓசையிட, அதை விட இனிமையான குரலில், 

“அப்படி ரொம்ப நேரம்லாம் இங்கே இருக்கணும்ன்ற தேவை வராதுன்னு நெனைக்கிறேன்.. சீக்கிரம் யாராவது வருவாங்க.. என்னை தேடிக்கிட்டு.. இல்ல.. உங்களை தேடிக்கிட்டு.. அப்போ போயிரலாம்”என்று அவள் கூற, 

அவன் தன் பின்புறம் இருந்த மூட்டைக்குவியலின் மீது அயர்வாக உட்கார்ந்த வண்ணம், 

“வெளியே என்ன நடந்துக்கிட்டு இருக்குன்னு பார்த்தேல்ல? திருவிழா.. பாதிபேர் குடிச்சுப்புட்டு மட்டையாகிட்டு கிடப்பானுக.. மீதிபேரு கறி, சோறுன்னு தின்னுட்டு கிடப்பானுக..ஆருக்கும் நம்ம பேச்சு இப்போதைக்கு கேக்காது.. நாம வெளியே போறது அவ்வளவு சுளு(இலகு) இல்ல..”என்றவன், தன் முழு உயரத்துக்குமாக நிமிர்ந்து நின்றான். 

அவளோ என்ன செய்கிறான் என்பது தெரியாமல் பார்த்துக் கொண்டேயிருக்க,

 அவனோ குடோனில் கிடந்த காய்ந்த வைக்கோல்களை ஒன்று சேர்த்து, தன் சட்டை பாக்கெட்டிலிருந்து எடுத்த லைட்டர் கொண்டு தீ மூட்டினான். 

திகுதிகுவென பற்றியெரிந்தது வைக்கோல் குவியல். 

அந்தச் சூட்டிலிருந்து வந்த கதகதப்பு வழியாக சற்றே புழுக்கம் அடங்க, மெல்ல மெல்ல தீப்பந்தலின் அருகே அமர்ந்து, முழந்தாளைக் கட்டிக் கொண்டாள் அவள். 

அந்தத் தீ தந்த பொன்னிறத்தில், தங்கத்தில் வார்த்த காவல் சிலை போல அமர்ந்திருந்த அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டேயிருக்க, 

அவனோ தன் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். 

வாயில் சிகரெட்டின் தலையை வைத்து அவன் இரண்டு முறை இழுத்து.. ஊதி, அதன் சுகத்தில் கண்களை மூட… இவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. 

 குரல் செருகிய வண்ணம், “நீ.. நீங்க.. சிகரெட் பிடிப்பீங்களா?..”என்று அவன் லைட்டர் எடுத்த போது, அவளுள் தோன்றிய சந்தேகத்தைக் கேட்க, அவனது விழிகளில் கனல் பறந்தது. 

வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டே அவளை வெறித்துப் பார்த்தவன், 

“ஏன்? சிகரெட் பிடிக்குறதுல என்ன தப்பு?”என்று அவன் தன் பெரிய விழிகளை உருட்டி அதட்டிக் கேட்க, சற்றே பயந்து தான் போனாள் அவள். 

அவள் தலை மறுப்பாக அங்குமிங்கும் ஆட, வாயோ சற்றே திக்க, “தத்.. தப்பேயில்லை.. நீங்க தாராஆஆளமா தம் அடிக்கலாம்..”என்றவள், அதற்கு மேலும் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்று கப்பென்று மூடிக் கொண்டாள் வாயை. 

அவளுடைய மௌனவிரதம் ரொம்ப நேரம் எல்லாம் நிலைக்கவில்லை. 

அவன் மீண்டும் அவளது நயனங்களையே பொல்லாத பார்வை பார்க்க ஆயத்தமானான். அவன் பார்வையில் அவள் உடலில் இருந்த ஒட்டு மொத்த உரோமங்களும் கூச்செறிந்தது. 

பின்பு.. அவனுடைய தோள்புஜங்கள் அவள் விட்ட உஷ்ணப்பெருமூச்சினால், உயர்ந்து தாழ, அவனது பார்வையின் வீரியம் அதிகமாகத் தொடங்கியது. 

அவளுக்குள்ளோ சற்றே உதறல் எடுக்கவாரம்பித்தது. 

‘ஐயோ.. இவன் ஏன் இப்படி பார்க்கிறான்.. ராமா.. உடனே மேலே பாய்ஞ்சிருவானோ?’ என்று எண்ணியவளின் இமைகள், அச்சத்தில் படபடத்தன. 

அவனோ பட்பட்டென்று சட்டை பட்டன்களைக் கழற்றி விட்டு, வெற்றுமார்புடன் நிற்க, 

இவளோ ஒரு கையால் இரு விழிகளையும் மூடிக் கொண்டே, பதற்றத்துடன் வாய் திறந்தாள்.

“ஐயோ ராமாஆஆ!!! என்ன பண்றீஈஈங்க?”-விரல்களின் இடுக்குவழி அவனைப் பார்த்துக் கொண்டே கத்தி விட்டாள் அவள். 

அவனோ சட்டையைக் கழற்றி, அதனில் இருந்த வியர்வையைப் பிழிந்த வண்ணம், “புழுக்கமா இருக்குன்னு சட்டைய கழட்டி காயப்போடறேன்..இதையெல்லாமா சொல்லிப்புட்டு செய்யோணும்?”என்று அவன் புரியாதவனாகக் கேட்க, அவளிடமிருந்து ஒரு ஆசுவாசப் பெருமூச்சு.. பின்பு ஓர் சிறிய புன்னகை வெளிப்பட்டது. 

கூடிய சீக்கிரம் அப்புன்னகை அசடு வழியும் புன்னகையாக மாற, ‘ஈஈ’ என்று இளித்து வைத்தாள். 

மஞ்சல்காமாலைக்காரன் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் போல இவளுக்கும் அவன் பார்வையெல்லாம் தப்பான பார்வை போல தோன்றுகின்றதோ? 

இருப்பினும் வெற்று மார்புடன் நின்றவனைப் பாராமல், தலை குனித்துக் கொண்டே அவள் இருந்த போது, அவளது பின்னங்காலை ஏதோக் கொட்டியது போல இருக்க, 

“ஸ்ஆ…”என்று விழிகள் மூடிக் கத்தினாள் அவள். 

எதிரே இருந்தவன் பதறவில்லை. கதறவில்லை. இருந்த இடத்திலேயே மலை போல நின்ற வண்ணம், 

“என்னாச்சு..?”என்று மட்டும் உணர்ச்சியேயற்ற குரலில் கேட்டான். 

அவள் தன் காலை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்த வண்ணம், விழிகளில் ஒரு துளி நீர் சரேலென வழிய, “த்.. த.. தெரியலைஹ்.. ஏதோ கக்.. கடிச்ச மாதிரி இருக்கு.. விறுவிறுன்னு இரத்தம் மேலேஹ்.. மேலேஹ்.. ஏறுற மாதிரி இருக்கு..”என்று சொல்ல, அப்போது தான் அவன் முகத்தில் சின்னப் புருவச் சுழிப்பு மட்டும் வந்து போனது. 

சட்டென அவளிடம் வந்து மண்டியிட்டவன், அவள் காலைப் பிடித்திழுத்து, மடியில் வைத்துக் கொண்டான். 

பூச்சி கொட்டிய வலியை விடவும், அவனது வலிய கரங்கள் பதித்து… அவன் இழுத்த முரட்டுத்தனமான இழுப்பு தான் அதிகம் வலித்தது அவளுக்கு. 

அந்த வலியில் அவனிடமிருந்து கால்களை.. அவன் எடுத்துக் கொள்ள முனைய, அவன் பிடி இன்னும் கொஞ்சம் இறுகியது. 

திருவிழாவுக்கென அவள் அணிந்த அழகிய தாவணியை அவள் அனுமதியின்றி முழங்கால்வரை மேலேற்றியவன், அந்த நெருப்பின் வெளிச்சத்தில் கடிபட்ட இடத்தைப் பார்க்கலானான். 

அவளது ஆடுதசைக்காலில் ஓரிடத்தில் மாத்திரம்.. சிவந்து வீங்கிப் போயிருந்தது. அடுத்த கணம் ஏதோ பூச்சி கடித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டவன், 

அவளைப் பார்த்து, “வலிக்கும்.. கொஞ்சம் பொறுத்துக்கிட வேண்டி வரும்”என்று மட்டும் தான் சொன்னான். 

அவன் சொன்ன வார்த்தைகளை அவள் மூளை உள்வாங்குவதற்குள், “ஆஆ”என்று உயிர் போவது போலக் கத்தினாள் அவள். 

அந்த திடகாத்திரமான ஆண்மகன், அவளைக் கடித்த பூச்சி விட்டுச்சென்ற கொடுக்கை, கண்ணிமைக்கும் நேரத்தில் நகங்களால் கிள்ளி வெளியேற்றியிருந்தான். 

அவனது கிள்ளலில்.. அவளுடைய வெளுத்த கால் இன்னும் கொஞ்சம் கன்றிச்சிவக்க, அவனது உடனடி வைத்தியம் மட்டும் தற்போது வலிக்கவாரம்பித்தது. 

அந்த முரட்டு ஆசாமிக்கும்.. அவள் விழியோரம் வந்து நின்ற கண்ணீர் ஏதோ செய்திருக்க வேண்டும். 

அவன் கைகள், அவளது ஆடுதசைக்காலை மென்மையாகத் தடவிக் கொடுத்தது. 

அந்தத் தடவல் கூட கொஞ்சம் முரட்டுத்தனமாகவே இருந்தாலும் கூட, அவன் தந்த வலிக்கு கொஞ்சம் இதமாகவே இருந்தது. 

மெல்ல மெல்ல வலி அகல, கண்களைத் திறந்தாள் அவள். 

அவன் விழிகளும், இவளது கண்மை தீட்டிய அஞ்சனங்களும் உலகம் மறந்து, ஒன்றிலொன்று மூழ்கிப் போகவாரம்பித்தது. 

உலகத்திலேயே அவளொருத்தி மாத்திரம் தான் பெண் என்பது போல.. அவளையே விழியெடுக்க மறந்து பார்த்துக் கொண்டேயிருந்தான் அவன். 

அவன் பார்த்த.. அந்த உயிர் உருக்கும் பார்வையில்.. அவளது மெழுகு இதயம் மெல்ல மெல்ல கரைந்து கொண்டேயிருந்தது.

அந்தகணம் தான்.. அவள் வாழ்வை திருப்பிப் போட்ட அது நடந்தேறியது!! 

அவளும், அவனும் மட்டும் தனிமையில்!! 

கூடவே இனிமையில்!!

 என மனம் கவிதைப் பாடிக் கொண்டிருந்த தருணம்.. அந்த அரிசி குடோனின் பாரிய கதவுகள்.. மீண்டும் “தடார்” என்ற ஒலியுடன் திறக்கப்பட்டது!! 

அவளது.. கிறக்கமூட்டும் ஆடுதசைக்கால்கள்.. அவன் மடியில் இருக்க.. சேலையின் உள்பாவாடையை.. அவளது பருத்த தொடைகள் வரை மேலேற்றி விட்டு, அவற்றைத் தடவிக் கொண்டிருக்கும் பரிதி!! 

அதுவும் ஒரு பெண்ணை.. அந்நிய ஆண் தொடக்கூடாத எக்குத்தப்பான இடத்தில் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த பரிதி கண்களில் விழ, 

விறுவிறுவென சீற்றம்.. கை நரம்பு வழியாக மேலேறி.. மூளையை அடைந்தது சரவணுக்கு!! 

முறைப்பெண்ணை மைதானத்தில் காணவில்லையென… தேடி வந்திருந்தவன்.. இப்படியான ஒரு கோலத்தை.. பரிதியிடம் இருந்து எதிர்பார்த்திருக்கவில்லை!! 

அதிலும் இன்று மாலை.. முறைப்பெண்ணை அசம்பாவித பார்வை பார்த்த பரிதியின் மேலேயே ஒட்டுமொத்த தவறும் இருப்பதாக புரிய, 

கை முஷ்டி மடக்கி நின்று, வஞ்சினம் கண்களைத் தாக்க, பற்களைக் கடித்துக் கொண்டு, “பரிதீஈஈஈஈ..”என்ற வண்ணம் உள்ளே வந்தான் சரவணன் . 

எதற்கும் அஞ்சாத பரிதி.. வருவது வரட்டும் என்பது போல அப்போதும் தன் மடிமீது கிடந்த.. தன் ஆண்டாளின் கால்களை விலக்காமலேயே இருக்க, ரொம்பவும் பரிதவித்துப் போனது என்னமோ மென்னிலா தான்!! 

கைகால்கள் எல்லாம் வெடவெடக்க, தனக்கே கேட்காத குரலில், “மா.. மா” என்ற வண்ணம் அவனைப் பார்த்தபடி மென்னிலா ஸ்தம்பித்து நின்றவளின் கால்கள், பரிதியின் மடியில் இருந்து அனிச்சை செயல் போல கீழே இறங்கியது. 

 பரிதிவேல் வீரனுக்கோ.. சரவணனைக் கண்டதும் தன் உள்ளங்கவர்ந்தாள் சட்டென கால்களைத் தன்னிடமிருந்து எடுத்துக் கொண்டு ஒதுங்கியது சிறு வேதனையைக் கொடுத்த அதே வேளை, 

இது நாள் வரை தன்னை காதலுடன் “மாமா” என்றழைத்த நிலா, பரிதியின் முன்னிலையிலேயே, அவனை “ மாமா” என்றழைப்பதில் முதன்முறையாக கோபம் வந்தது அவனுக்கு. 

அன்று.. அந்நொடி பரிதியின் மனதில் விதைக்கப்பட்ட பொஸஸிவ்னஸ் என்னும் ஒருவகை பொறாமை.. இறுதி வரை பரிதியின் இதயத்தை விட்டகலாதது மென்னிலாவின் துரதிர்ஷ்டம்!! 

ஈரெட்டில் பாய்ந்து வந்து, பரிதியின் சட்டை காலரை கொத்தாகப் பற்றித் தூக்கியெடுத்த சரவணன், கழுத்து நரம்புகள் புடைத்து வெளித் தெரிய, பற்களைக் கடித்துக் கொண்டு, 

, “என்ன த்தைர்ரிய்யம்மிருந்தா.. என் ம்மொர்றப்பொண்ணுக்கிட்டேயே இப்படி ந்நடந்துக்கிட்டிருப்ப?”என்று கேட்க, மென்னிலாவோ அரங்கேறும் பிரளயத்தைத் தடுக்கும் வழிவகை அறியாது.. கையாலாகாதவளாக நின்றாள்!! 

ஆனால் சரவணனின் கோபம், பரிதியிடம் இல்லாவிட்டாலும் கூட, தனக்கு சொந்தமான பொருளைத் தொட்டதைக் கேட்க இவன் யார்? என்ற எண்ணம் பிறந்து எரிச்சல் மிகுந்தது. 

அதிலும் தன் சட்டையின் நேர்த்தி, சரவணனின் கைகளில் கசங்குவதை பொறுக்க மாட்டாது,

தன் சட்டையில் இருக்கும் அவன் கையை அழுந்தப்பற்றியவனாக, “சரவணா.. நீ ரொம்ப உணர்ச்சி வசப்பட்டிருக்க.. முதல்ல சட்டையிலிருந்து க்கைய்ய எடு..”என்றான் எச்சரிக்கும் தொனியில்!! 

ஆனால் சரவணனுக்கு தன் மனைவியை இன்னொருவன் தொட்டது போல சினம் பொங்க, “ப்பண்றதையும் ப்பண்ணிட்டு நல்லவன் மாதிரி நடிக்கிறியாக்கும்??.. நிலா ஒரு குழந்தைடா.. அவள நீ என்ன பண்ண பார்த்த.. சொல்லூஊஊ..”என்று விழிகளைப் பெரிதாக்கியவண்ணம், 

கைமுஷ்டி மடக்கி.. பரிதியின் முரட்டுத் தாடைக்கே ஒரு குத்து விடப் போனான் அவன். 

அந்த குத்தை தன்னில் பட விடாமல்.. தன் உள்ளங்கையில், அவனது மடக்கப்பட்ட புறங்கையை அநாயசமாகத் தடுத்து நிறுத்தியவன், 

“சரவணாஆஆஆ!!” என்று இரைந்த வண்ணம், சரவணனை அடிக்க, 

தன் கையை ஓங்கப்போனவனுக்கு, சட்டென கண்களில் விழுந்தது விழித்திரை கலங்கியவளாக நின்றிருந்த மென்னிலாவின் முகம்!! 

அவளது முகத்தைக் கண்ட பின்னரும் கூட.. சரவணனை அடிக்க இயலாமல் போக, தன் தோள்புஜங்கள் ஏறி, இறங்க கோபத் தணல் மூச்சு விட்டுக் கொண்டு நின்றவன், தன்னவளுக்காக கையை இறக்கி நின்றான் அவன். 

பரிதிவேல் வீரன்.. தன் அத்தை மகள் மேல் காதல் வயப்பட்டிருப்பது அறியாமல், அவன் அத்துமீறி விட்டதாக எண்ணி, மீண்டும் அவனை நோக்கி, “ட்டேஏஏய்” என்று ஓங்கி அடிக்க முனைந்த கணம்.. சரவணனின் பின்னந்தலையை ஏதோ பலமாக வந்து இடித்தது போல இருக்க, உள்ளே சென்ற மூச்சு ‘ஹக்’ என்ற வண்ணம் இழுத்துப் பிடிப்பது போன்ற வலி எழுந்தது அவனுக்கு. 

விம்பங்கள் எல்லாம் இரண்டிரண்டாகத் தெரிய, பட்டென்று பரிதியின் சட்டையை விட்டவன், இரு கைகளாலும்

பின்னந்தலையைப் பிடித்துக் கொண்டு சரிந்து விழ, அவனது கலங்கிய விழித்திரை முன்னாடி.. ஒரு மரக்கட்டையுடன் வந்து நின்றாள்.. அவன் உயிருக்கு உயிராகக் காதலித்த மென்னிலா!! 

அப்படியானால் தன்னை அடித்தது தன் நிலாவா? என்று உள்ளம் வலிக்க, மூச்சை அடைத்த குரலில் அவன் கேட்டான், “ஏன்மாஆஆஹ்?”என்று. 

மென்னிலா தன் கையிலிருந்த கட்டையை படக்கென்று கீழே போட்டு விட்டு, சரவணன் முன்னிலையில் இரு கரம் கூப்பி நின்று, அழுகுரலில், 

“என்னை மன்னி.. ச்சிடுங்க மாமாஹ்..உங்.. களை நிறுத்.. ர.. எனக்கு வேற வழி தெரியலை.. நா.. நான் பரிதியை உயிருக்குயிரா காதலிக்கிறேன்!! ”என்றவளின் விழிகள் அதற்கு மேலும் சரவணனைப் பார்க்க பிரியப்படாதது போல பரிதியில் தஞ்சமடைந்தது. 

“, பரிதீஈஈ.. ப்பரிதி.. உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே..?” என்று அவனது இரு கன்னத்தையும் இரு கைகளாலும் பற்றிக் கொண்டு, காதலன் பரிதியை அவள் ஆராய்ந்தவள், சட்டெனத் தன் மார்போடு அவனை இறுக்கித் தழுவிக் கொண்டதைக் காண்கையில்.. மனம் வலித்தது அவனுக்கு. 

இறுதியாக விழிகள் மூடிக் கொண்டவனுக்கு, காதலின் ஏமாற்றம் மரணவலியைக் கொடுத்தது. 

காதல் தானடி என் மீதுனக்கு? 

     [14]

குடோனில்.. தன் முறைப்பெண்ணால் பின்னந்தலையில் அடிக்கப்பட்டு.. அங்கேயே மயங்கி விழுந்தவனைக் கொண்டு வந்து… ஊராரினால் “பெரிய வீடு” என்றழைக்கப்படும் ராஜமாணிக்கத்தின் வீட்டில் சேர்த்தது என்னமோ.. அவ்வூரின் இளசுகள் தான்!! 

‘சரவணன்-மென்னிலா- பரிதி’ ஆகியோர் அடங்கிய முக்கோணக் காதல்.. மூவருக்கும் தெரிய வந்த சம்பவத்திற்கு முன்னர், 

அதாவது, ‘மென்னிலாவைக் காணவில்லை’ என தேடி வந்த சரவணன், திறந்திருந்த அரிசி குடோனை, ‘யார் மூடியது?’என்ற சந்தேகத்துடன் திறக்க.. அங்கே அவன் கண்ட.. மனதை குலைக்கும் காட்சியிற்கு முன்னர்.. 

சரவணன் கொஞ்சம் அதிகமாகவே குடித்திருந்ததால்… சரவணன் குடித்து விட்டு மட்டையாகி.. குடோனில் கண்மண் தெரியாமல்.. சுயநினைவிழந்து விழுந்து கிடந்திருக்கிறான் என்றே ஊர் மக்களாலும், இன்னும் ஏன் பெரியவராலும் கூட நம்பப்பட்டது!!

சூரியன் வெளுத்தது கூட தெரியாதளவுக்கு.. இன்னும் பிரக்ஞை பெறாமல்.. சரவணன் அடித்துப் போட்டாற் போன்று.. (அட நிஜமாகவே அடித்துப் போட்டது தானே?) உறங்கிக் கொண்டிருக்க, குற்றவுணர்வு குறுகுறுக்கும் துக்க விழிகளுடன் ..அவன் பக்கத்திலேயே அமர்ந்திருந்தாள் மென்னிலா. 

‘தன்னால் தானே.. தன் மரியாதைக்குரிய மாமாவுக்கு இந்த கதி?’ என்று தோன்ற தோன்ற.. பெண்ணவளின் இதயத்தில் விம்மிப் புடைத்து வந்தது அழுகை!! 

ஆனால் ஐய்யனார் மீசை கொண்ட தாத்தாவோ.. கீழே ஹாலில் இருந்து… தன் அகங்காரமான மிடுக்குத் தொனியுடன், தன் பேரனின் நடத்தையைக் கொஞ்சம் கரித்துக் கொட்டிக் கொண்டேயிருந்தார். 

நடுக்கூடத்தில்.. நான்மூலைகளிலும் நின்றிருந்த பெருந்தூண்களில் ஒன்றில்.. தன் முழங்கையை ஊன்றி நின்றவராக, 

வஞ்சினத்துடன், “என்ன ப்பழக்கம் ப்பழகியிருக்கிறான் ப்பார்த்தீயா உன் ம்மருமவன்?? க்குடிச்சுப் போட்டு.. குடோனுல வுழுந்து கெடந்திருக்கான்!!! .. நம்ம குடும்பத்துலேயே இல்லாத பழக்கம்.. வர வர உம்மருமவன் போக்கினைய்யேஏஏ.. சரியில்ல??” என்று தன் மகளான சிவகாமியம்மாளைப் பார்த்து அவர் கடுகடுக்க, 

‘தந்தையை எப்படி மலையிறக்குவது?’ என்பது தெரியாமல் திண்டாடிப் போய் நின்றார் அந்தப் பேதைத் தாய். 

ஒருவாறு எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே தந்தையை அடைந்தவர், ராஜமாணிக்கத்தின் முன்னங்கையை இலேசாகப் பற்றியவராக, 

“அது ஏதோ..ஊர்த்திருவிழா..கடைசிகாலம்னு கொஞ்சம் குடிச்சியிருப்பான் போல.. இனி இப்படியாகாது.. நம்ம சரவணன் என்ன.. குடிகார மட்டையா என்ன?? நீங்க அவனப் பத்தி நெனச்சு.. மனசப்போட்டு குழப்பிக்காதீங்கப்பா..”என்று ஏதேதோ மொழிகள் கூறி.. சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்த கணம், அங்கே அவரது கோபத்தை மட்டுப்படுத்தும் வகையில்.. தெய்வாதீனமாக வந்தான் கணக்குப் பிள்ளை!! 

கணக்குப் பிள்ளை வந்ததும்.. பேரனின் நடத்தை மேல் இருந்த கோபம்.. முற்றாகத் தணிந்து.. மூளை.. வியாபாரக் கணக்கு வழக்குளை நாடிச் செல்லவாரம்பித்தது தாத்தாவுக்கு. 

“என்னய்யா?? எல்லா பற்றுக்கணக்கும்.. கரெக்ட்டா எழுதிக்கிட்டீருல்ல? பத்துரூவா மிஸ்ஸானாலும்.. உன் சம்பளத்துல தான் கைவைப்பேனாக்கும்” என்றபடி.. தன் கூன் விழாமல்.. கம்பீரமாகவே நடந்து சென்று.. அங்கிருந்த ஒற்றை சாய்நாற்காலியில் அவர் அமர்ந்து கொள்ள, 

எந்தவித கூச்சநாச்சமும் பாராத கணக்குப் பிள்ளையும் வெறுந்தரையில் அமர்ந்தான். 

எஜமான் நாற்காலியில் உட்காரும் போது.. அவருக்கு சரி சமமாக தானும் உட்கார்வதா? என்று தோன்றத் தான்… அவனும் கீழே அமர்ந்ததே!! அவனளவில் அதுவொரு சின்ன மரியாதை!! 

தலையை சொறிந்து கொண்டே நெளிந்தவனாக, “அப்படியெல்லாம் இருக்காதுங்க.. இருந்தாலும் நீங்களும் ஒரு எட்டு பார்த்துக்கிட்டீங்கன்னாஆ”என்று இழுத்தவண்ணம்.. கையோடு கொண்டு வந்த பேரேட்டைக் கொடுக்க, 

அதை வாங்கிக் கொண்டவரது கண்கள்.. மூக்குக் கண்ணாடி ஏதும் அணியாமலேயே..அந்த வயதிலும் காகிதங்களில் அநாயசமாக ஓடியது!! 

தாத்தா.. தன் மாமாவின் போக்கை துர்நடத்தையாக திட்டுவது.. கீழே ஹாலில் இருந்து நன்றாகவே.. சரவணனின் அறை வரை கேட்க, அது வேறு பெருங்கவலையைக் கொடுத்தது அவளுக்கு. 

மாமாவுக்கும், தனக்கும் ஆரம்பத்தில் இருந்து நிலவி வரும்… சரவணனைக் கண்டாலேயே மரியாதையோடு, அன்பும் ஊற்றெடுத்துவரும் உறவுக்கு.. என்ன பேர் வைப்பது என்று தான் புரியவேயில்லை!! 

‘மாமன்- மச்சினிச்சி’ என்னும் உறவால் விளையும் காதலா இது?? 

‘காதல்’என்னும் சொல்லே.. அவனுடனான.. அவளது உறவுக்கு அபத்தம் போல.. களங்கம் விளைவிப்பது போல இருந்தது அவளுக்கு!! 

‘சகோதரத்துவம்’ என்பதற்கும் மேலாக.. அவனிடம் உணரும் பாதுகாப்பு, கரிசனை என்பவற்றை காணுங்கால்… சிறுவயதிலிருந்து தவற விட்ட தந்தையன்பை… சரவணனின் வாயிலாக உணர்வதாகவே.. அவளுக்கு எப்போதும் தோன்றும்!! 

தாத்தாவிடம் கூட உணராத ஒன்றை சரவணனிடம் உணர்வதாலேயோ என்னவோ… தாத்தாவுடன் நிலவும் இறுக்கம் தளர்ந்து… சரவணனிடம் இலகுவாக அவளால் பேசிப் பழகவும் முடிந்தது. 

மனதளவில்.. தான் அனுபவித்தறியாத தந்தையன்பை தந்த மாமனை.. தன் கையால் அடித்ததை எண்ணும் போது.. உடல் வெளவெளத்து… குபீரென்று பொங்கிய ஒரு துளி கண்ணீர் இறங்கியது அவளது கன்னமேட்டிலிருந்து கீழ்நோக்கி. 

கைகள் அவளையும் மீறி.. கட்டிலில் துயிலும் சரவணனின் கையைப் பற்றித் தடவிக் கொடுக்கவாரம்பித்தது!! 

தன் கையைத் தீண்டிய மென்மையான ஸ்பரிசத்தில்.. இலேசாக விழிப்புத் தட்ட… சரவணன் கண்டதெல்லாம் தன்னெதிரே கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த அவனது ஆருயிர் மென்னிலாவைத் தான். 

காய்ந்த இதழ்களோடு வாய் திறந்தவன், ஈனஸ்வரத்தில்,

 “நிலாஆஹ்?”என்று அவன் அவளை அழைக்க, வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்தவளுக்கு, தன் முறைமாமன் கண் விழித்திருப்பது அப்போது தான் புரிந்தது. 

அவளது கண்களில் இத்தனை நேரம் வழிந்த கண்ணீர், அவன் கண் விழித்ததில் ஆனந்தக் கண்ணீராக மாற, அவனது புறங்கையை கண்களில் ஒற்றிக் கொண்டு.. நெஞ்சு பொரும.. வெடித்து அழுதாள் நிலா. 

“மா… மாஹ்!! .. என்.. என்னை மன்னிச்சிடுங்கஹ்.. மா.. மாஹ்!!! .. எனக்கு வேற வழி தெரிய..லை..!! நா..நான் எ.. என்ன சொன்னாலும்.. கேட்குற நிலைமையில் நீங்களும் இ.. இல்லை மாமாஹ்.. அ.. அதான் அப்படி பண்ணேன்!!”என்று மென்னிலா தன் தவறை எண்ணி.. அழுது கொண்டே இருக்க, அவளையே நெஞ்சில் வலி மீதூற வெறித்துப் பார்த்தான் சரவணன். 

“நான் பரிதியை உயிருக்குயிரா காதலிக்கிறேன்”என்று நேற்று அவள் இறுதியாகச் சொன்னது ஞாபகம் வர.. அவனது இதயம் மெல்ல கனத்தது!! 

சோர்ந்து போன விழிகளுடன் வாய் திறந்தவன், “ந்நீஹ்.. நீ.. என்னை காதலிக்கிறதா நம்ப வைச்சு ஏமாத்திட்டல்லஹ்?” என்று சரவணன் சொல்ல, 

அவனது புறங்கையை.. தன் கண்ணிலிருந்தும் அப்புறப்படுத்தியவளாக.. வெடுக்கென்று நிமிர்ந்து தன் முறைமாமனின் முகம் பார்த்தாள் மென்னிலா. 

“நா.. நான் எப்போ உங்களை காதலிக்குறதா நம்ப வைச்சு ஏமாத்தினேன்??.. என்ன சொல்றீங்க மாமா..??”என்று புரியாமல் கேட்க, 

கட்டிலில் எழுந்து.. தலைமாட்டில் முதுகுவைத்து சாய்ந்தமர்ந்து கொண்டே அவனும், கொஞ்சம் உரிமைக் கோபத்துடனேயே பேசினான். 

அளவுகடந்த தவிப்பும் கூட கலந்து கட்டி வந்த குரலில்,

 “அப்போ நீ என்னய காதலிக்கவேயில்லையா? ஒரு நாள் கூட உன் மனசுல என்னய பத்தின அபிப்பிராயம் தோணவேயில்லையா?”என்று அவனது தலைகால் புரியாத கேள்வியில்.. உள்ளுக்குள் ஓர் நெருடல் தோன்ற.. அவனைப் பற்றியிருந்த தன் கைகளை முழுமையாக அவனிடமிருந்து அப்புறப்படுத்திக் கொண்டாள் மென்னிலா. 

அவனை காதலன் என்ற நிலையில் எண்ணிப் பார்ப்பதா? அதுக்கு அவள் இறந்து போவதே மேல் அல்லவா? 

விழிகள் இரண்டும் இடுங்க இயலாமை மிகுந்த குரலில், “ஐய்யோ மாமாஹ்…. நா.. நான் உங்களை ஒரு நாள் என்ன??.. ஒரு மணிநேரம் கூட அந்த மாதிரி நெனச்சுப் பார்த்தது கூட கிடையாதூஊஊ..”என்றாள் அவள்!! 

அவள் மேல் பைத்தியக்காரத்தனமாக காதல் வைத்திருக்கும் அவனது மனம்.. நிலாவின் கூற்றை.. ஒருதுளியேனும் நம்ப மறுத்தது. 

தன் பலவீனப்பட்ட இதயத்தை தேற்றும் விதமாக, தனக்குத் தானே சொல்லிக் கொண்டானோ என்னவோ? திக்கிய தொனியில், 

“ந்நீ.. ந்நீஈஈ..ப்பொ..ப்பொய் சொல்ற ஆண்டாளு.. நீ.. நீ ஏதோ ஒரு காரணத்துக்காக பொய் சொல்ற..!!”என்று சொன்னவனைக் கண்டு.. உள்ளூற சிறு எரிச்சல் மீதூற, பட்டென்று அவனை விட்டும் எழுந்து கொண்டவள், நெஞ்சு நிமிர்த்தி.. அவனுக்கு புறமுதுகி காட்டியவளாக எழுந்து நின்றாள். 

பின்பு மிக மிக தீவிரமான குரலில், “நான் எதுக்கு ம்மாமா.. உங்க கிட்ட ப்பொய் சொல்லணும்??.. க்கண்ட நாள் முதலாக.. பரிதியைத் தான் உயிருக்குயிரா க்காதலிக்கிறேன்”என்று விட.. அதைக் கேட்கப் பிடிக்காமல் படுக்கையில் இருந்து மூர்க்கத்தனமாக எழுந்து கொண்டான் சரவணன். 

தன் கூற்றுக்குப் பிறகு.. அவனிடமிருந்து அரவமேயில்லாது போக.. ‘தன் மாமன் என்ன செய்கிறான்?’ என்ற சந்தேகத்துடன் சரவணனைத் திரும்பிப் பார்த்தாள் மென்னிலா. 

அவனோ.. தன் மஞ்சத்துக்கு அருகாமையில் இருக்கும் டிராயரை நாடிச் சென்றவன், அதைத் திறந்து, அதில் பத்திரப்படுத்தி வைத்திருந்த நான்காக மடிக்கப்பட்ட ஒரு கடிதத்தை எடுத்து வந்து.. 

அவள் முன்னே பிடித்தாட்டியவனாக, “அ.. அப்போ இந்த லெட்டர்?? .. இந்த லெ.. லெ.. லெட்டர்.. எ.. எதுக்கு ந்நீ.. எனக்காக எழுதணும்? ..”என்று கேட்க, எதிர்பாராமல் கண்முன்னாடி வந்த “அந்த கடிதத்தில்”சர்வமும் நிலைகுலைந்து போனாள் அவள். 

இது.. இது எப்படி இவனிடம்?? அவளது விழிகள் அதிர்ச்சியில் ஆழி அளவிற்கு விரிந்தன. அவள் பதில் பேச முடியாமல் வாயடைத்து நின்றாள். 

அவனின் மூர்க்கத்தனம் இன்னும் கொஞ்சம் அதிகரிக்க அவளது கைச்சந்தினை.. தன் வலிய விரல்களால் இறுக்கிப் பற்றியவன், அவளை அதட்டும் பயங்கரக் குரலில், “சொல்லூஊஊஊ.. ந்நிலாஆஆ??.. இந்த லெட்டர் எழுதினது எனக்காக தானே?.. நீ இப்படி.. நம்மூர் பொண்ணுங்க போல மாறியதும் எனக்காக தானே..?”என்று ஏக்கமும், நப்பாசையும் இழையோடக் கேட்டான் அவன். 

அவளுக்கோ அவனின் கேள்விகள் சரியாக மூளையைச் சென்றடையவில்லை போலும்!! 

அவளது கவனத்தை, கருத்தைக் கவர்ந்தது எல்லாம் அந்தக் காகிதம் தான்!! 

அதனை பட்டென்று பிடுங்கி.. விரித்துப் பார்த்தவளுக்கு.. அதில் இருந்த கையெழுத்தைப் பார்த்ததும்… சந்தேகமேயில்லை அதிலிருந்து அப்படியே அவள் கையெழுத்து தான் என்று புரிந்து போனது!! 

இறுகிய முகத்துடன், நாசி விறுவிறுவென சிவந்து போக, “இ.. இந்த லெட்டர் எப்படி.. உங்க கையில வந்ததுஹ்?? மஞ்சு தந்தாளாஹ்?”என்று கேட்க, 

அவன் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருக்க.. அவனது அமைதியே அவளது பதிலுக்கான விடையைக் காட்டிக் கொடுக்கலானது!! 

ஆம், அன்று மஞ்சு.. இவன் கையிலா கடிதத்தைக் கொடுத்தான்? அதனால் தான் பரிதியும் அன்றிரவு கடிதத்தைப் பற்றி ஏதும் தெரியாதவன் போல நடந்து கொள்ளவும் செய்தானா? 

தான் மரியாதை சுமந்த விழிகளுடன் நோக்கும் மாமா.. தன் மேல் காதல் அபிப்பிராயம் கொண்டது எங்கனம்? என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட…தன்னைத் தானே நொந்து கொண்டாள் அவள். 

அவளது மெல்லிய அதரங்கள் முணுமுணுத்தன, “மஞ்சுவால் தான் இத்தனை கன்ஃபியூஷனும்..”என்று. 

சரவணனை ஏறிட்டு நோக்கிய போது அவள் விழிகள்.. விரிந்த செந்தாமரை மலர் போல சற்றே சிவந்திருந்தது. 

அவனை கோபம் கனலும் விழிகளுடன் பார்த்தவள், “மாமா இந்த லெட்டர் எழுதினது ய்யாருக்காஆஆக.. த்தெரியுமா? ப்பரிதிக்காஆஆஆக!!!! நான் இப்படி மாறினது ய்யாருக்காஆஆக தெரியுமா??அதுவ்வும்.. ப்பரிதிக்காஆஆஆக..”என்றாள் சரவணனின் அறை மட்டும் நிறையும் இரைந்த குரலில்!! 

அத்தை மகள் உரைத்த ‘பரிதிக்காக’ என்னும் ஒற்றை வார்த்தையில் சித்தம் இழந்தவனாக நின்றான் அப்பித்தன்!! 

ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டிருந்த நிலா பேசிக் கொண்டே போனாள்!! 

“இன்னும் ஏஏஏன்?? … என் அம்மாவுக்கு.. கூட தெரியாத விஷயங்களை உங்க கிட்ட சொல்றேன்..!!! என்னைக்குஹ் பரிதிய மாட்டுவண்டி பந்தயத்துல பார்த்தேனோஹ்??.. அத்தனை பேர் இருக்கும் போது.. காளையை அடக்கி என் உயிரை காப்பாத்தினாரோஹ்?? … அப்போவே மென்னிலா அவருக்குத் தான் சொந்தம்னு முடிவெடுத்துட்டேன்.. அவரை மனசார நேசிக்க ஆரம்பிச்சிட்டேன்..” என்று நெஞ்சு முழுக்க.. அவன் பால் உள்ள நேசம் கிளர்ந்தெழ மொழிந்தவள், அந்தக் காகிதத்தை சுட்டிக் காட்டி, 

“இந்த லெட்டர் எழுதின மறுநாள் ஊர்கோயில் வாசல் முன்னாடி மயங்கிக் கிடந்தேனே யாருக்காகன்னு தெரியுமா மாமா? .. அதுவும் பரிதிக்காகஹ்!! .. றுஹூணு கேம்பஸ்க்கு போறதா பொய் சொல்லிட்டு.. குறுந்தீவு போயிருந்தேன்… யாருக்காகஹ்?? அதுவும்.. … ப்பரிதிக்காஆஆஆகஹ்!! … காலியில இருந்து வந்தப்புறம் இந்த கொலுசு போட்டுட்டிருக்கேனே?? இது நானே வாங்கிக்கிட்டதுன்னு நினைச்சிக்கிட்டிருக்கீங்க!! இல்லை.. இது என்னோட பிறந்தநாள் பரிசா பரிதி தந்தது… எல்லாமே பரிதிக்காஆஆஆகஹ் தாஆஆன்!!.” என்று அவள் உச்சஸ்தாயியில் பொங்க..

 அப்போது தான் தன் முறைப்பெண்ணின் அறிந்தவன் ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டான். 

அவனால் ஏனோ.. அவள் உரைத்த உண்மைகளை நம்ப மாட்டேன் என்று அடம்பிடித்தது மனம்!! 

அதிர்ச்சியில் அவளது மிருதுவான கைத்தசைகளைப் பிடித்துக் கொண்டவன், “நீ என்ன சொல்ற..??”என்று கேட்க, அவன் தொடுகையிலிருந்து வெளிவந்த வண்ணம் சீறினாள் மென்னிலா. 

“ஆ.. ஆமாஆஆ!! அந்த இருபத்தி மணிநாலு மணிநேரமும் அவர் கூட தான் இருந்தேன.. நான் அவரைக் காதலிக்கிறேன்.. அவரும் என்ன க்காதலிக்குறாரு.. அவர் இல்லைன்னா நான் செத்துப் போயிருவ்வேஏஏன்!!.. ப்பரிதி இல்லாத வாழ்க்கையை என்னால நெனச்சுக்கூட பார்க்க முடியாதூஊஊ”என்று தன் இதயத்தில் இருப்பதை ஆணித்தரமாக சொன்னவளுக்கு, ஏனோ இதயமும் காந்திக் கொண்டிருந்தது. 

சரவணனை தந்தையென்று எண்ண.. சரவணனுக்கு உரிய வயது இல்லை தான்!!

 இருப்பினும் அவனிடமிருந்து உணரும் தந்தையன்பின் பின்னரும் கூட.. அவனை கணவனாக எண்ண முரண்டியது உள்ளம்!! 

ஆனால் சரவணன் நிலையோ அந்தோ பரிதாபம்.. மென்னிலாவை மனைவியாகவே இதுநாள் வரை எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு.. அவள் உரைப்பதைக் கேட்கக் கேட்க, கடப்பாறையால் நெஞ்சைக் குத்திக் கழற்றுவது போல துன்பத்தைக் கொடுத்தது. 

அவனது விழிகள் நிராதரவாக அவள் விழிகளை நோக்கின. 

‘தன் காதலை அவள் உணர மாட்டாளா?’என்ற தவிப்புடன், “ந்நிலாஹ்.. ம்மீசை முளைச்ச நாள்ல இருந்துஹ்.. நீ தான் ‘என் பொஞ்சாதீஈஈஹ்.. நீ தான் என் பொஞ்சாதீஈஈஹ்’ன்னு.. நினைச்சு நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கேனே என் நெலம?? என் நிலையிலிருந்து கொஞ்சம் யோ..சிச்சுப் பார்த்தீயா??.. ஐ லவ் யூடீ..என் காதலை புரிஞ்சுக்கடீஈஈ” என்ற வண்ணம் அவளே எதிர்பார்த்திராத சமயம்… 

அவள் திமிறத் திமிற விடாது.. அவள் இடையூடு கையிட்டு.. தன்னை நோக்கி இறுக்கி அணைத்துக் கொண்டவனுக்கு, அது திறந்திருக்கும் கதவு என்பது கூட சிந்தையில் உறைக்காமல் போயிற்று. 

அவனுள் இருந்தது எல்லாம்.. தன் நெஞ்சு நிறைய கொட்டிக் கிடக்கும் காதலை அவளுக்கு உணர்த்தி விட வேண்டும் என்பதேயாகும்!! 

அந்தப்பக்கம் யாரும் வந்திராதது கூட.. அவனது இறுக்கமான பிடியில் சிக்கித்தவித்த மென்னிலாவுக்கு, துரதிர்ஷ்டமாகப் போக, அவளது இடையூடு ஒரு கை.. பின்னந்தலையூடு ஒரு கையிட்டவன்.. 

அவள் மறுக்க மறுக்க.. பட்டென்று குனிந்து.. அவளது சிவந்த ஈர அதரங்களைக் கவ்விக் கொண்டான். 

எவனொருவனை.. எந்த மாதிரி கோலத்திலும் கற்பனை செய்து பார்க்கவே முடியாது என்று உன்னதமான அந்தஸ்தில் வைத்திருந்தாளோ?? 

அவனே தன்னிடம் அத்துமீறி சில்மிஷங்கள் புரிவதில் வெறுத்துப் போனது மனம்!! 

தன் மறுப்பையும், வெறுப்பையும் காட்ட.. இதழ்களை அழுந்த மூடிக் கொண்டு,அவனைத் தன்னிலிருந்தும் விலக்க பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டு அவள் நிற்க.. அவள் மறுப்பு கூட.. சரிவர மூளையில் பதியாத அளவுக்கு,.. தன் இதழ்களின் வழி.. தன் காதலை சொல்ல விளைந்து கொண்டிருந்தான் சரவணன்!! 

தன் உடலின் வன்மையை.. அந்த மெல்லியலாளிடம் காட்டி விடும் அரக்கத்தனம் மிக, இடையில் பதிந்த.. கை.. அவள் மேனியில் எங்கெல்லாமோ பயணித்து.. அவளை இம்சை செய்யவாரம்பித்தது. 

அவனது முரட்டு அதரங்கள்… திறக்காத அந்தப் பெட்டகத்தை திறக்க முயன்று கொண்டேயிருக்க.. அவனது மார்பு மேல் அவள் கை வைத்து தள்ளிய தருணம் எல்லாம்…. அவனது உடலின் அண்மை இன்னும் இன்னும் அதிகமானது. 

அவன் எப்பேர்ப்பட்ட முட்டாள்?? 

பெண்ணவளின் மனம் திறக்காமல்.. அவள் உடலும் திறக்காது என்பதையறியாமல்.. ஆண்சுகத்தால்.. ஒரு பெண்ணை தன் நேசவலையில் சிக்க வைக்க முடியும் என்று ஆணித்தரமாக நம்பும் அவன் எப்பேர்ப்பட்ட முட்டாள்?? 

அவள்.. அங்கு கழியும் நொடிகளை.. முள்ளின் மேல் நடக்கும் கொடிய நொடிகளாகக் கழித்ததாலோ என்னவோ.. உதவி கேட்டுக் கத்தக் கூட நாவெழவில்லை அவளுக்கு!! 

தன் மென்னிலா மூச்செடுக்க சிரமப்படுவது கண்டு.. தானாகவே அவளைத் தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தியவனுக்கு, அவளது சிவந்த முகம்.. இம்மியளவும் கவனத்தில் பதியவில்லை. 

அந்தளவுக்கு காதல் தோல்வியைத் தாங்க முடியாமல் ஒரு மிருகம் போல மாறியிருந்தவன், தன் தோள்புஜங்கள் ஏறி இறங்க மூச்சு விட்டுக் கொண்டே, 

“ம்முடியாது மென்னிலாஆஆஹ்.. நீ எனக்கு தான்னு.. நீ பிறக்கறப்போவே ம்முடிவ்வூஊ.. ப்பண்ணது… தாத்தாவும் திருவிழா முடிஞ்சதும் நம்ம கல்யாணம்னு சொல்லிட்டாரு.. ப்பரிதின்ற ஒருத்தன்.. உன் வாழ்க்கையில வந்ததை மறந்துடு.. இனி உனக்கு… நான் மட்டும் தான்.. நானும் இங்கே.. ந்நீஈஈ.. ப்பரிதின்ற ஒருத்தனை பத்திப் பேசாதது போல மறந்துட்றேன்..”என்று சொன்னவனை.. ஒரு அசிங்கத்தைப் பார்ப்பது போல பார்த்தாள் மென்னிலா. 

ஒரு பெண்ணாகவே வந்து.. மனதுக்குள் இருப்பது நீயில்லை.. இன்னுமொருவன் என்கிறாள்!!! 

. ஆனால் அதை சட்டையே செய்யாதது போல.. நீ எனக்கு தான் என்று சொல்வது அவள் மரியாதை வைத்திருக்கும் அவளது முறை மாமாவா?? 

நிமிட நேரத்தில்.. அவள் இத்தனை வருடங்களாக.. அவனைப் பற்றிக் கட்டியிருந்த மரியாதை விம்பம் தகர்ந்து போக.. நிராசையுடன்.. மாமாவின்.. குற்றவுணர்வேயற்ற முகத்தை.. வெறித்துப் பார்த்தாள் மென்னிலா. 

அழுகை வரவில்லை அவளுக்கு!! இருப்பினும் கன்னத்தில் காய்ந்திருந்த கண்ணீர்க்கோடுகள்.. அழுது அழுது அதைத்துப் போயிருந்த அவள் வதனத்தை அப்பாவியாகக் காட்டியது!! 

அவள்.. அவனது முகத்தைக் கூட பார்க்க முடியாது அருவெறுத்து நிற்க, சரவணனின் மூளையில் ஓடிக் கொண்டிருந்த ஒரே தாரக மந்திரம், “அவளை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும்.. அடைந்தே தீர வேண்டும்”என்பதே!! 

அதனால் மூளைக்குள் ஏதேதோ உருப்போட்டுக் கொண்டவன்.. மென்னிலா தன்னை அருவெறுத்த பார்வை பார்த்தபடி நிற்பது கூட அவ்வளவாக சிந்தனையில் பதியாதவனாக, 

தடதடவென இரண்டு இரண்டு படிகளாகத் தாவி… ஹாலில் கணக்குப் பிள்ளையுடன்.. கணக்குவழக்குகளை சரிபார்த்துக் கொண்டிருக்கும் தன் தாத்தாவை நாடிப் போனான். 

கணக்கிலேயே முழுமூச்சாக சிந்தை பதித்திருந்தவருக்கு, திடீரென்று தன் முன்னே நிழலாடியதைக் காணவும்.. அண்ணாந்து பார்த்த போது.. அங்கே வந்ததும், வராததுமாக.. போதையில் இருந்து விழித்த பேரன் நின்றிருப்பதைக் கண்டார். 

ஆம், தாத்தா ராஜமாணிக்கத்தைப் பொறுத்தவரை.. பேரன் போதையில் இருந்து விழித்தவன் தான்!! 

ஆனால் சரவணனின் மயக்கத்துக்கு உண்மையான காரணம் அறிந்தது இருவரே இருவர் தான். 

ஒன்று அவன் நேசிக்கும் மென்னிலா!! இன்னொன்று.. அவன் தன் காதலுக்கு எதிரியாக கருதும் பரிதிவேல் வீரன்!! 

இருவருமே வாய் திறந்து.. அவன் எப்படி குடோனில் விழுந்து கிடந்தான்? என்ற உண்மையை சொல்லாத வரை.. சரவணன் ஊரார் பார்வையில், ‘போதையில் குடோனில் விழுந்து கிடந்தவனே!’

சரவணனுக்கு அன்று.. தன் காதலை தான் இழந்து விடுவோமோ என்று துளிர்விட்டிருந்த பதற்றம்…

தாத்தாவிடம் அவன் வழமையாக உரையாடும் போது வரும் இங்கிதத்தைக் கூட தவிடுபொடியாக்கச் செய்திருந்தது. 

உள்ளுக்குள் பொறுமையின் வாசம் கூட இல்லாமல்.. அலைக்கழிப்புடன் தாத்தாவைப் பார்த்தவன், மிக மிக தீவிரமான குரலில், 

“த்தாத்தாஆஆஹ்!!! .. இதுக்கு மேலேயும் என்னால வெயிட் பண்ண முடியாதூஊ.. எலவு காத்த கிளி.. எலவு காத்த கிளின்னு சொல்வாங்கல?? .. அந்த எலவு காத்த க்கிளிய்யாஆ ஆகிருவேனோன்னு பயமா இருக்கு..”என்று அவன் சொல்ல, புருவங்கள் இடுங்க சாய்நாற்காலியில் இருந்து எழுந்த.. தாத்தா பேரனை.. கேள்விக்கிடமாகப் பார்த்தார். 

பேரனின் இந்தப் பூடகமான அவரசப் பேச்சுக்குப் பின்னே.. ஏதோ வலுவான காரணம் இருக்கிறது என்று தெள்ளத்தெளிவாகப் புரிந்தது கிழவருக்கு!! 

ஆனால் அந்தக் கிழவர் ராஜமாணிக்கம்.. தன் மூத்த மகனின் மகன் சொல்வதை.. எந்தக் குறுக்கீடும் செய்யாமல் அமைதியாகவே கேட்கலானார். 

தாத்தா தன்னை அமைதியாக எடைபோடுவதை அறியாத சரவணனோ, அலைக்கழிப்பு சிந்தும் பார்வையுடன்,

 “அதான் நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.. அடுத்த முகூர்த்தத்திலேயே.. எனக்கும், நிலாவுக்கும் நீங்க கல்யாணம் பண்ணி வைக்கலேன்னா.. நான் நிலாவை அழைச்சிட்டுப் போய்.. கோயில்லேயாவது தாலி கட்டி.. எம்பொஞ்சாதியாக்கிக்கிடுவேன்!!”என்று, 

‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு”என்பது போல ஒரே போடாகப் போட.. ஸ்தம்பித்துப் போனது ராஜமாணிக்கம் மட்டுமல்ல!! 

தன் எஜமான் எழுந்ததும்.. மரியாதை நிமித்தம் தானும் எழுந்து நின்று.. பாட்டன்- பேரன் வார்த்தையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த கணக்குப் பிள்ளையும் தான்.. 

அங்கே மொட்டை மாடியில் மிளகாய் வற்றல் காயப் போடலாம் என்று சமையலறையில் இருந்து.. சுளகு நிறைய மிளகாய் எடுத்து வந்த மென்னிலாவின் தாயாரும் தான்.. 

மாமா ஹாலில் இருந்து சத்தம் போடுவது கண்டு..மேல்மாடி படிகள் பக்கம் நின்றவளாக.. அங்கிருந்தே.. ஹாலை எட்டிப் பார்த்த மென்னிலாவும் தான்.. 

வீட்டு நடுக்கூடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இதர பணியாளர்களும் தான்.. அப்படியே ஸ்தம்பித்து நின்று போயினர். 

ஆனால் அனுபவக்கார தாத்தாவோ.. உடனடியாக தன் வாய் திறந்து ஏதும் மொழிந்து விடவேயில்லை!! 

மாறாக தன் பேரனை மேலிருந்து கீழாக.. விழிகளையுருக்கிய வண்ணம் யோசனை மீதூறப் பார்த்தவருக்கு, ‘பேரன் திருமணத்துக்கு அலைகிறானோ?’ என்றும் கூட தோன்றலாயிற்று. 

அதேசமயம் பேத்தி மென்னிலா மீது அவன் வைத்திருக்கும் காதலும் அவர் அறிந்த ஒன்றல்லவா?? 

தன் மீசை சூழ்ந்த அதரங்களைத் திறந்தவரோ, சீற்றம் அடக்கப்பட்ட குரலில், “பொறு… ந்நிலாக்கிட்ட சம்மதம் கேட்டிருவோம்… அப்புறம் ம்முடிவு ப்பண்ணுவோம்”என்று சொல்ல, அங்கே மேல்மாடியில் நின்று…ஹாலை எட்டிப் பார்த்தவளிடம் இருந்து வெளிப்பட்டது ஒரு ஆறுதல் பெருமூச்சு!! 

மனமார தெய்வத்தை வேண்டிய அவள் கண்கள்.. அனிச்சைச் செயல் போல வானம் பார்த்து உயர்ந்தது;கண்களில் இருந்த பரிதவிப்புக் கலக்கம்.. ஆனந்தக்கலக்கமாகவும் மாறிப் போனது

தாத்தாவை மறுத்து இதுநாள் வரை.. ஒரு கோடு கூட கீறியிராதவளுக்கு… எங்கே தாத்தா திருமணத்துக்கு “சரி”என்று விட்டால்.. ‘தன்னால் மறுத்துப் பேச முடியாதே?’ என்ற அச்சம் அவளை பதைபதைக்க செய்து கொண்டேயிருந்தது. 

ஆனால் தாத்தாவும் அவள் சம்மதம் வேண்டி நிற்கவும் தான் விட்டு விட்டு துடித்த இதயம்.. இயல்பு நிலைக்கு மாறி சீராகத் துடிப்பது போல இருந்தது அவளுக்கு. 

‘ஹப்பாடா.. இந்தக் கல்யாணம் எனக்குப் பிடிக்கலை.. பரிதியை தான் எனக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட வேண்டியது தான்.. பரிதியை தாத்தா நிராகரிக்க ஒரு காரணமும் இல்லை.. பரிதி தாத்தாவின் வியாபாரப்பங்குதாரர் வேறு.. அதனால் மறுக்கவும் மாட்டார்’ என்று மனதுக்குள்ளேயே பேசிக் கொண்டவள், 

‘தாத்தா தன்னை அழைப்பார்.. சம்மதம் கேட்பார்’ என்ற ஆவலுடன் காத்திருக்கலானாள்;ஆனால் சரவணனோ.. அவளை அழைத்தால் தன் திட்டம் செயலிழந்து விடும் என்ற பதற்றத்துடன் கை முஷ்டி மடக்கி.. வரவழைக்கப்பட்ட பொறுமையுடன் நின்றிருந்தான். 

கடவுளும் சரவணனின் திட்டத்தை அங்கீகரிக்க நாடியது போல, அவளில் பூத்துக்கிடந்த.. அந்த ஆவல் எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கும் வண்ணம் கேட்டது நிலாவின் தாயின் குரல். 

தன் மருமகன் வாயிலாக…நல்ல விஷயம் கேட்ட சந்தோஷத்துடன் தன் தந்தையை அணுகிய சிவகாமியம்மாள், “இதுலென்ன சம்மதம் கேட்க இருக்குப்பா… மென்னிலாவுக்கு தான் சரவணன்னு முடிவானது தானே??? நீங்க ஐய்யரை வரச்சொல்லிருங்க.. மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்”என்று.. மகள் மேலுள்ள நம்பிக்கையில் சொல்ல, 

எப்போதும் தாத்தா முன்னிலையில் தன் விருப்பு, வெறுப்புக்களை பங்கிட்டுப் பழக்கப்படாத மென்னிலா… நாவு வரை வந்த தன் மறுப்பை வெளியிட முடியாமல்.. தூணை தன் மெல்லிய விரல்களால் இறுக்கிப் பிடித்த வண்ணம் கண்ணீர் மல்க நின்றாள்!! 

அவள் தாய்க்குக் கூட அவள் சம்மதம் வேண்ட வேண்டும் என்று புரியவேயில்லையா?? 

கால்கள் பரபரத்தன; உதடுகள் சும்மாயிராமல் குறுகுறுத்தன.. ஓடிச்சென்று.. தாத்தா முன்னிலையில்.. நின்று.. ‘எனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கவில்லைய்ய்ய்!!” என்று கதற வேண்டும் போல இருந்தது. 

ஆனால் ஏதோ ஒரு தடங்கல்.. மனதோடு ஒரு நெருடல் அழுகை நெஞ்சில் இருந்து வெடித்து.. கண்ணீர் பீறிட்டோடுமோ என்று பயந்தவள், அங்கே ஹாலை எட்டிப் பார்ப்பதை விட்டு விட்டு.. தன் அறையை நோக்கி விம்மி வந்த அழுகையை.. இரு கைகளாலும் பொத்திக் கொண்டு ஓடினாள். 

அவளுக்கு அழுகை விம்மி நெஞ்சை அடைத்தது. கதவைத் தாளிட்டவள், கட்டிலில் குப்புற வீழ்ந்து.. தலையணையைக் கட்டிக் கொண்டு… வெடித்து அழுதாள். 

எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் அவளால் முடியவில்லை!! 

அவளது கணவனாக.. பரிதியைத் தவிர இன்னொருவனை நினைப்பதா?? 

அதிலும்.. சரவணனின் குழந்தைகளை.. தன் வயிற்றில் சுமப்பதைப் போல கற்பனை செய்ய இயல்பாகவே வர மாட்டேன் என்றது அவளுக்கு!! 

இதே நிலையில் இங்கே இருக்கப் போவதா?? 

இன்று, ‘காதலை ஏற்றுக்கொள்’ என்று.. அத்துமீறிய மாமாவின் இதழ்களின் எச்சில்.. இன்னும் அதரங்களில் இருப்பது போல இருக்க, அவன் வாய் மணத்தை நாசி நுகர்வது போல இருக்க.. அதை ஏற்றுக் கொள்ள முடியாமல்.. குமட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு!! 

வாயில் வரை வந்த வாந்தியை.. இரு கைகளாலும் அழுந்தப் பொத்திக் கொண்டு.. 

அட்டாச்ட் பாத்ரூமில் இருக்கும் வாஷ்பேஸன் நாடிப் போனவள், குடலே வெளியே வந்து விடுமளவுக்கு வாந்தி எடுத்தாள்!! 

அவளுக்கு வீடு வெறுத்தது!! அந்த வீட்டில் மேற்கொண்டு இருக்கவே பிடிக்கவில்லை. 

இதுநாள் வரை.. ‘எந்த சபலைப்புத்தி கொண்ட ஆணும் தன்னை நெருங்க மாட்டான்’ என்ற நிச்சயத்துடன்.. இரவில் மனநிம்மதியுடன் உறங்கியவளுக்கு, இன்றைய அத்துமீறல் சம்பவத்துக்கு பின்னரும் கூட.. எவ்வாறு அங்கே துயில முடியும்?? 

மாமாவின் கண்களில் தெரிந்த காமவெறி அவள் விழிகளை மூடி நின்ற தருணம் எல்லாம் வந்து இம்சிக்க ஆரம்பித்தது. 

‘கல்யாணத்துக்கு முன்பு.. அவள் கிடைக்காமல் போய் விடுவாளோ?’ என்ற அச்சம் காரணமாக.. அவன் அத்துமீற மாட்டான்.. தன்னைத் தப்பான எண்ணத்தோடு தொடமாட்டான் என்று இனியும் என்ன நிச்சயம்?? .. 

அப்படி அத்துமீறல்கள் ஏதேனும் நடந்தேறினால்.. ‘தன்னவனுக்குத் தான் தன் உடல், பொருள், ஆவி என அனைத்தும்’ என்று காணிக்கையாக்கியிருப்பவள், பரிதியின் முகத்தில் எப்படி விழிக்க முடியும்??

பல்வேறு எண்ணங்கள் எழுந்து கன்னி அவள் மனதை அலைப்புறுதலுக்குள்ளாக்க ஆரம்பித்தது… அன்றைய நாள் முழுவதும் யோசனையிலேயே உழன்று தவித்தவள், தன் வாழ்க்கையில் ஓர் இக்கட்டான முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாள்!! 

*****

அடுத்த நாள் காலை.. எந்தவித மாற்றமும் அற்ற அழகான விடியல் பொழுது புலர்ந்தது.

கொல்லைப்பக்கம் இருந்த நீர்த்தொட்டியில்.. சூரிய ஒளி பட்டு.. தண்ணீர் தணல் போல தெரிந்து கொண்டிருக்க.. 

அதன் அருகாமையில் இருந்த ஒரு ஆள் உட்காரத்தக்களவுக்கு உயர்ந்த திட்டில், ஐய்யனார் சிலை போல.. தன் தொடை மீது இரு கைகளையும் வைத்த வண்ணம்.. சரவணன் இராஜதோரணையுடன் அமர்ந்திருந்தான்!! 

அவனது வெற்று மேனிக்கும்.. முறுக்கேறிய புஜங்களுக்கும்..மயிரடர்ந்த மார்புக்கும்.. சூடு பரவ.. நல்லெண்ணெய் மஸாஜ் செய்து கொண்டிருந்தான் பணியாளன் முருகன்!!

கண்கள் மூடி அந்த மசாஜை அனுபவித்துக் கொண்டிருந்தவனுக்கு, மஸாஜ் தந்த சுகம்.. அவனை இம்மியளவேனும் சுகிக்கவில்லை!! 

மாறாக, அவனது மூடியிருந்த கண் முன்னாடி.. நேற்று ‘தன் காதல் தோற்றுப் போகும்’ என்ற அச்சத்தில்.. நிதானமிழந்து அவன் இம்சித்த அவளது மெல்லிய அதரங்களின் சுவையே வந்து போனது! 

மென்னிலா மேல் பித்தாகித் திரிந்து கொண்டிருக்கும் சரவணனுக்கு,

 அப்படியே தன்னவள்.. இன்முகத்துடனேயே தன்னைத் தரின்.. என்ன மாதிரியான உணர்ச்சிப் பெருக்குகளை அவள் கண்கள் சிந்தியிருக்கும்??? என்று யோசித்த போது.. உள்ளுக்குள் ஆசைத்தீ துளிர்விட்டு பற்றியெரிவது போல தகித்தது மேனி!! 

அந்த கணம் அவனை நாடி வந்த மஞ்சு, தனது கைகளை உதறியவளாக பதற்றத்துடன்,

 “ஐய்யாஆஆஆ.. சின்னம்மாவ ரூமுல காணோம்!! ..”என்று சொல்ல, தன்னிடம் எத்தி வைக்கப்பட்டது ‘தன்னவள் பற்றிய தகவல்’ என்றானதும், சட்டென விழிகள் திறந்தவனுக்குள்ளும் ஓர் துணுக்கம் நிலவியது. 

இருந்தாலும் நிதானமாக, தன் ஏகாந்த மனநிலையைக் குலைத்த மஞ்சுளா மீது கோபம் பொங்க, எரிச்சலில் அதட்டும் குரலில், 

“ஏஹ்.. ச்சும்மா நிறுத்து!! காலையிலேயே எழுந்துருச்சு.. தோட்டத்துப்பக்கம் போயிருப்பா.. போய் பாரு ப்போஓஓ!! ..”என்று இயம்ப, அவ்விடத்தை விட்டும் இம்மியளவு நகராதவளாக நின்றாள் மஞ்சுளா. 

அவள் முகத்தை முற்றாக ஆராய்ந்தவனுக்கு.. அவளது பதற்றம், ஏதோ ஒரு அபசகுனமான நெருடலைக் கொடுத்தது. 

அதை உண்மையாக்குவது போல மஞ்சுளாவும், “ஐய்யோஓ..ஐய்யா..!! ரூம் உள்ளாற பூட்டி தான் கெடக்கு..நிலாம்மா இன்னும் வெளியே வரவேயில்லை.. ஜன்னல் வழியா பார்த்தப்போ சின்னம்மா ரூம்முல இல்லை..ஆனா பால்கனி கதவு தெறந்திருக்கு.. யாராவது அவங்கள தூக்கிட்டுப் போயிருப்பாங்களோன்னு பயமா இருக்கு!!”என்று நிலைமையை முழுமையாக தெளிவுறுத்த, 

“நீ என்ன சொல்ற??”என்று பதறியவனாக எழுந்தவன்,தலைக்கு நீர் வார்க்காமல், உள்ளம் துணுக்குற்றவனாக, அப்படியே.. வீட்டினுள்ளே நுழைய.. 

அவன் கண்களில் பட்டது ‘மகளைக் காணவில்லை’ என்று கண்ணீருடன் நின்ற அத்தையைத் தான். 

அறையிலும் இல்லை!! வீடு முழுக்க தேடியும் அவள் இல்லை!! 

அப்போதும் ஒரு பிழை சொல்ல முடியாத.. நிலாவின் அப்பழுக்கில்லாத.. நன்னடத்தையில்.. பெற்ற தாய்க்கோ.. அங்கே சம்பவ இடத்திலேயே நின்றிருந்த தாத்தாவுக்கோ.. நிலா மேல் எந்த தப்பான அபிப்பிராயமும் வரவில்லை!! 

சட்டென்று.. உள்ளுக்குள் ஏதோ உறுத்த.. பூட்டப்பட்ட கதவினை.. தன் வலிய கைத்தசைகளைக் கொண்டு.. இடித்துத் திறந்து சென்றவன்.. நிலா அறையைத் துலாவினான். 

திறந்திருந்த பால்கனி வழியாக.. ஓடிச்சென்று.. பார்த்த போதும் அங்கேயும் அவள் இல்லை!! 

வீட்டை விட்டு அவள் சென்றதற்கான தடயம் அணுவும் கூட இல்லாது வெறுமையாக இருந்தது அறை!! 

ஒருவேளை அறைக்குள், ‘திருடன் வந்திருப்பானோ?’ என்று தோன்ற.. அந்த வாட்ரோப்களை எல்லாம் பட்பட்டென்று திறந்து பார்த்தான் சரவணன்!! 

விலையுயர்ந்த ஆடை அணிமணிகள்.. நகைகள் என அனைத்தும்.. இம்மி கூட பிசகாமல் அங்கேயே இருக்க, ‘நிலா மட்டும் எங்கே?” என்ற பதற்றத்துடன் அப்படியே நின்றிருந்தான் சரவணன்!! 

அவனுக்குள் ஏதோ கையை மீறிப் போன உணர்வு எழுந்து.. அவனை துக்கத்திற்குள்ளாக்கிக் கொண்டேயிருந்தது. 

அந்த கணம் அறையில் நுழைந்த தாத்தாவின் கூரிய விழிகளில், தலையணைக்கு அடியில் ஒரு காகிதத் துண்டு.. காற்றில் ஊசலாடிக் கொண்டிருப்பது துல்லியமாகத் தெரிய, 

விரைந்து சென்று அதையெடுத்து வாசித்தவருக்கு, சுருசுருவென்று பொங்கிய கோபத்தை அடக்க.. இதழ்களை அழுந்த மூடிக் கொண்டார். இருப்பினும் செக்கச்செவேலென சிவந்து போனது அவர் முகம்!!! 

அறையில், ‘மகளுக்கு என்னானதோ?’ என்ற அவலநிலையில் நின்றிருந்த சிவகாமியைப் பார்த்தவர், “சிவகாமீஈஈஈ.. நாங்கலாம் மோசம் ப்போய்ட்டோம்!! நீ பெத்த குலவிளக்கு.. நம்ம குடும்ப கௌரவத்த… குழி தோண்டி புதைச்சுட்டாஆஆஆ”என்று இரைந்து கத்த… 

தாத்தா.. அந்த கடித்ததை வாசித்து விட்டு.. சினம் கொள்வதைக் கண்ட பேரனும், அவர் கையில் இருந்த காகிதத்தைப் பிடுங்கி வாசிக்க, அவன் கைகளுள் சிக்குண்ட காகிதம் நசுங்கிச் சின்னாபின்னமானது!!! 

அப்படி அந்தக் கடிதத்தில் என்ன தான் இருந்தது??

இதோ அந்தக் காகிதத்தில் இருந்தது எல்லாம் இவை தாம்!! 

“இந்த முறை கன்பியூஷன் வரக்கூடாதுன்னு பெயர் சுட்டியே எழுதுகிறேன்.. என்னை மன்னிச்சிடுங்க மாமா, தாத்தா, அம்மா..நான் எனக்குப் பிடிச்சவர் கூட போறேன்!!” என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது. 

அதைக் கண்ட சரவணனின் முகம் சிசிடுவென்று சினத்தில் பொங்க, விருவிருவென்று தன்னறைப்பக்கம் சென்று.. சட்டையை மாட்டிக் கொண்டவனுக்கு, ‘எங்கே சென்றால் மென்னிலா திரும்பவும் கிடைப்பாள்?’ என்று தெரிந்திருந்தது!! 

அங்கிருந்து, ‘அந்தப் பொல்லாத துரோகி!!’ என்று தான் கருதும் ‘அவன்’ வீட்டுக்கு.. சரவணன் கிளம்ப எத்தனிக்க, 

நிலாவைத் தேடிப் போக அவசியமேயில்லாமல், சட்டென்று வந்து நின்றது அந்த வீட்டுக்காரர்களுக்கு நன்கு பரிச்சயப்பட்ட ஒரு ஜீப் வண்டி!! 

அதிலிருந்து பட்டு வேஷ்டி, சட்டை சகிதம் அசல் மாப்பிள்ளை களையுடன்.. மாலையும், கழுத்துமாக பரிதிவேல் வீரனும்,

சிவப்பு நிற விவாஹாப்பட்டுப் புடவையில்… ஆதி முதம் அந்தம் வரை.. தங்காபரணங்கள் பூட்டி.. 

தலை நிறைய மல்லிப்பூச்சரம் தொங்க..கூடவே கழுத்தில் தாலியுடனும், மலர்மாலையுடனும்… ஒரு தேவதை போல.. மென்னிலாவும்.. திருமணக் கோலத்தில்.. அந்த வீட்டு போர்ட்டிகோ முன்னிலையில் இறங்கி நிற்க, 

‘அப்படியான கோலத்தில் மென்னிலா வந்து நிற்பாள்’ என்று எதிர்பார்த்திராதவர்கள் அனைவரும் கல்லாய் சமைந்து நின்றனர்!! 

சரவணன்… ‘வியாபாரப் பங்குதாரன்’ என்று சொல்லிக் கொண்டு வீடு நுழைந்து.. தன் முறைப்பெண்ணை அபகரித்த.. ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த’ மாபாதகனைப் போலப் பார்த்து வைத்தான் பரிதியை!! 

பரிதியோ.. நேற்றிரவு தன்னை நாடி வீடு வந்த மென்னிலா.. ‘சரவணனின் அத்துமீறல்கள்’ சொல்லி அழுததும்.. சரவணனின் கழுத்தைப் பிடித்துத் திருக வேண்டும் என்ற கொலை வெறி.. அந்நிமிடம் போலவே இந்நொடியும் உதிக்க.. பஸ்பமாக்குவது போலப் பார்க்கலானான்!! 

இத்தனைக்கும் முரடன் பரிதியை.. அப்படியேதும் அசம்பாவிதங்கள் நிகழ விடாமல் தடுத்தது.. தன்னைப் பற்றியிருந்த அவளது மிருதுவான கரங்களே!! 

மென்னிலாவுக்கோ… தன் தாயைக் கண்டதும்.. அவரது விழிகளைப் பார்க்க முடியாமல்.. ஒரு குற்றவுணர்வு வந்து தடுக்க, விழிகளைத் தாழ்த்திக் கொண்டு நின்றாள் அவள்!! 

இது எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அதிசயம் நடந்தேறியது!! 

இது நாள் வரை.. தாத்தாவின் மீதிருக்கும் அச்சத்தின் காரணமாக.. அவரது முகம் பார்த்து பேசத் தயங்கி நின்றவள், அன்று.. பரிதியின் கையால் தாலி வாங்கியதன் பின்பு, 

திருமதி. பரிதிவேல் வீரனாக மாறியதன் பின்பு.. எங்கிருந்து தான் தைரியம் விளைந்ததோ?? 

பரிதியின் கைகளை விட்டு விட்டு முன்னோக்கி வந்தவள், தன்னையே சுட்டெரிப்பது போல பார்க்கும் ‘ஐய்யனார் மீசை’ தாத்தாவை சிறிதும் அச்சமின்றி பார்த்தவள், 

இரு கை கூப்பி நின்று, “என்னை.. ம்மன்னிச்சிடுங்க தாத்தா… ‘சரவணனைக் கட்டிக்க சம்மதமா?’ன்னு என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருந்தா.. இந்த அவமரியாதை வந்திருக்காது..”என்று நடந்ததையெல்லாம் சொல்ல விளைய, அதைக் கேட்கும் நிலையில் பெரியவர் இல்லை!! 

தாய்க்கோ.., ‘தான் எங்கே தப்பு செய்திருக்கிறோம்?’ என்று புரிய.. கண்ணீர் வழிய மௌனமாக சமைந்து நின்றிருந்தார். 

அவளை சட்டெரிப்பது போல தன் தோள்புஜங்கள் ஏறியிறங்க கொடூர விழிகளுடன் பார்த்த ராஜமாணிக்கம், அடுத்த நிமிடம் மின்னல் வேகத்தில் .. வீட்டுக்குள் நுழைந்தவர்.. 

அங்கே நடுக்கூடத்தின் பிரம்மாண்ட சுவற்றின் முகப்பில்.. மாட்டப்பட்டிருந்த நீண்ட.. துப்பாக்கி எடுத்து வந்து, அவளது நெற்றிப்பொட்டை நோக்கி குறி வைத்தவராக, 

கழுத்து நரம்புகள் புடைத்து வெளித் தெரிய பற்களைக் கடித்துக் கொண்டு, “என்ன க்காரியம்டீஈஈ… ப்பண்ணிட்டு வந்திருக்க?? … நம்ம குடும்ப மானத்தையே குழி தோண்டி புதைச்சிட்டியேடீஈஈஈ??..”என்று கத்த, இதயம் நின்று துடித்தது நிலா தாய்க்கு!! 

ஆயிரம் தான் இருந்தாலும் பெற்ற தாய் அல்லவா?? 

வீட்டை விட்டும் ஓடிப் போன மகள்… ‘கட்டிய புடவையுடன் மாலையும், கழுத்துமாக வந்து நிற்பாள்’ என்று உள்ளூற எதிர்பார்த்திருந்தவருக்கு, 

அவள் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை அவ்வாறு செய்யாமல்.. அவனே தங்காபரணங்கள் பூணச் செய்து, விலையுயர்ந்த பட்டும் வாங்கிக் கொடுத்து… மகளைத் திருமணக் கோலத்திலேயே தாலி கட்டி அழைத்து வந்திருப்பது ரும் அபிப்பிராயத்தையே கொடுத்தது அவருக்கு. 

‘மகள் நல்ல நிலையில் வாழ்வாள்’என்று பிரயாசைப் பட்டவருக்கு, ‘தாய்ப்பாசம்’ இயற்கையாகவே மீதூற.. 

சட்டென்று பாய்ந்து தந்தையின் கால்களைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டார் சிவகாமியம்மாள். 

“அப்பாஆஆ.. வ்வேணாம்ப்பா.. என் பொண்ணு பண்ணது தப்பு தாம்பாஆஆ.. அதுக்காக எந்த தண்டனையையும் நான் ஏத்துக்குறன்ய்யாஆஆ.. .. என் பொண்ண விட்டுருங்கப்பாஆஆ.. அவள் வாழட்டும்ய்யாஆஆ”.என்று கண்ணீர் மல்க அழுது, தந்தையிடம் உயிர்ப்பிச்சைக் கேட்கலானார் சிவகாமியம்மாள். 

ஊரே மதிக்கும் தன்னையும், தன் குடும்ப கௌரவத்தையும் குழி தோண்டிப் புதைத்த பேத்தி செய்த செயல் தந்த .. ஆத்திரத்தின் வீரியத்தில்..

 மகளின் உயிர்ப்பிச்சை எரிச்சலைக் கொடுக்க, கண் மண் தெரியாத கோபத்தில்.. காலை உதறிவிட்டுக் கொண்டே, “ச்சீ போடீ நாய்யேஏஏ….”என்று கத்தினார் அவர். 

தாத்தா தாயை அவமதிப்பது கண்டு மனம் பொரும, “அம்மாஆஆஆ..”என்ற வண்ணம்.. தாய்க்காக.. அவள் இரங்க.. யாருக்கும் அஞ்சாமல். அவள் நெற்றிப் பொட்டில் குறிவைத்தார் சரவணனது தாத்தா. 

சரவணனுக்கோ, ‘என்ன இருந்தாலும் அவன் நம்ம வீட்டுப் பொண்ணு.. துரோகி அவன்!! . அவனை சுட்டுத் தள்ளுங்க தாத்தா’ என்று நாவுவரை வந்தது வார்த்தைகள்!! 

ஆனால் அதற்கு விடாமல் ஏதேதோ கொஞ்சம் சுவாரஸ்யமாகவே நடந்தது. 

சட்டென தன் மனைவிக்கு இடையில் புகுந்தவன்.. தற்போது தன் நெஞ்சைக் குறிபார்த்து நின்ற துப்பாக்கிமுனையை கையால் அநாயசமாகப் பிடித்தவனின் விழிகளில், மரண பயம் கிஞ்சித்தும் இருக்கவில்லை!! 

மாறாக எகத்தாளம் நிறைந்த குரலில், “ஐயா மண்ணிக்கணும்.. நேத்து வரை அவ உங்க பேத்தி.. அப்ப நீங்க அவ நெற்றிப்பொட்டுல.. இத்தாஆஆம் பெரீய்ய்ய.. துப்பாக்கி நீஈஈட்டியிருந்தா.. என்னால எதுவும் செஞ்சிருக்க ம்முடியாதூஊஊ!! 

ஆனாஆ… இந்நொடியிலிருந்து அவ என் மனைவி.. திருமதி. பரிதிவேல் வீஈஈரன்!! 

என் மனைவியை யாரும் அவமதிக்குறதயோ.. இந்த மாதிரி டகால்டி வேல காட்டுறதையோ… நான் பார்த்துட்டு இருக்க மாட்டேன்…”என்றவனின் இதழ்களோரம் வெளிப்பட்ட நமுட்டுப் புன்னகை.. ஒற்றை வார்த்தையில் சொல்வதானால் “கம்பீரம்”!! 

அந்தச் சிரிப்பு மாயமாக மறைய, “நானும் காண்டாகி உங்க மேல கைவைச்சேன்னாஆஆ??..” என்று தீவிரமான முகபாவத்துடன் கேட்டவன், 

மீண்டும் எகத்தாளம் சிந்தும் குரலில், “இளரத்தம்ல?? அப்படி தான் இர்ருப்பேஏஏன்.. ஆனா உங்க மானம் கெட்டுப்போயிரும்.. நல்லா யோசிச்சுக்குங்க.. ஏன்னா ஒரு தடவ போனா வ்வராது..”என்று இரட்டை அர்த்தத்தில் அவன் சொல்ல, பெரியவரின் விழிகள் மெல்ல இடுங்கியது. 

பின் மீண்டும் நமுட்டுப்புன்னகைப் பூக்க, லாவகமாக, “நான் மானத்த சொன்னேன்…”என்று எகத்தாளமாக சொன்னவன், மனைவியின் தோள் மீது காதல், உரிமை மற்றும் ஆசை வெறி என்று கலந்து கட்டி வர, 

“ஆண்டாளுஹ்… வா போகலாம்” என்றவன்.. அவளை அழைத்துச் செல்ல,

தனக்குச் சொந்தமானவளை.. அழைத்துச் செல்லும் அவனையே கையாலாகாதவனாகப் பார்த்திருந்தான் சரவணன். 

 

 

 

2 thoughts on “காதல் தானடி என் மீது உனக்கு!-13&14(விஷ்ணுப்ரியா)”

Leave a Reply to Rooparajesh Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top