ATM Tamil Romantic Novels

காதல் தானடி என் மீது உனக்கு!-15&16 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு? 

      [15]

 

அன்றிரவு.. பரிதியின் வீட்டின்.. அவனறையோடு ஒட்டியிருந்த டெராஸின் வழியாகத் தெரிந்த வானத்தில்…. காய்ந்து கொண்டிருந்தது முழுமதி நிலவு!!! 

அதனைச் சூழ நின்ற வெண்பஞ்சு மேகங்கள்… நிலவைக் கடந்து போகையிலே.. ஏழுவகையான நிறப்பிரிகைகளைக் காட்டி.. வானவில்லைத் தோற்றுவிக்க.. அதுவும் கூட அந்த ஏகாந்தமான இரவு வேளையில்.. ரம்மியமாகவே இருந்தது.

நடுச்சாமத்தை அண்மிக்கும் போது.. மரங்களைத் தழுவிய உற்சாகத்தில்.. வீசும் குளிர்ந்த தென்றல் காற்று.. நாடி, நரம்பெங்கும் ஊடுருவக் கூடும்!! 

ஆனால் அந்த குளிர் காற்று ‘தன்னை ஏதும் செய்து விடாது’ என்பது போல… திடகாத்திரமாக அமர்ந்திருந்தான் அவன்!! 

அந்த டெராஸில் இருந்த டீபோய் மற்றும் சோபாவில் அமர்ந்த வண்ணம்… 

கண்களில் உணர்ச்சியேயற்ற.. ஒரு வெறித்தப் பார்வையுடன்.. தன் கையில் லார்ஜ் க்ளாஸ் ஒன்றை ஏந்திய வண்ணம்…

 நில்லாமல் மது அருந்திக் கொண்டே இருந்தான் பரிதிவேல் வீரன்!! 

அவனுடைய டிரேட் மார்க் உடைகளான “வேஷ்டி, சட்டை” எங்கேயோ மாயமாகி விட்டிருக்க, வெறும் ஆர்ம்லெஸ் உள்பெனியனுடனும், ஷார்ட்ஸூடனும் அமர்ந்திருந்த பரிதி அன்று.. வித்தியாசமாக இருந்தான்!! 

‘அவன் வருவான்.. வருவான்’என்று காத்திருந்த அவனது மனைவி… அதற்கு மேலும் பொறுமை காக்க மாட்டாமல், தன் சூரியத்தலைவனை நாடி.. டெராஸ் பக்கம் சென்றாள்!! 

அங்கே.. அவர்களுடைய இனிய இரவான ‘முதலிரவிலேயே’ பரிதி சாவதானமாக அமர்ந்து… குடித்துக் கொண்டிருப்பது… மென்னிலாவின் மனதில் சின்ன நெருடலைக் கொடுக்கவாரம்பித்தது!! 

அதிலும்.. பரிதியின் முகம் பிரதிபலித்துக் காட்டிக் கொண்டிருந்த விரக்தி பாவம்?? 

அது மென்னிலாவின் புருவ மத்தியில் சின்ன முடிச்சை உருவாக்கவே செய்தது!! 

வீட்டை விட்டு தாத்தா மற்றும் தன் தாயின் ஆசிர்வாதம் இல்லாமலேயே… ‘கொண்டவனே துணை’ என்று வந்த பின்னும் கூட… அவர்களைப் பற்றிய மனமுரண்டல்.. அவளுள் இருந்து கொண்டே தான் இருந்தது. 

அந்த மனமுரண்டலைப் போக்கும் விதமாக.. ‘தலைவன் ஆறுதல் மொழிகள் மொழிவான்’ என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லையாயினும்…. அதையும் விட மனத்தை முரண்டச் செய்தது.. தலைவனின் விரக்தி பாவம்!! 

அவள் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது கூட அறியாமல், விட்டத்தை வெறித்துப் பார்க்கும் அவனது சிவந்த கண்களும், மேலேறியிருந்த ஒற்றைப் புருவமும்.. கவலையைக் கொடுத்தது மென்னிலாவுக்கு!! 

அவன் வாங்கித் தந்திருந்த உடைகளில்.. ‘சீ த்ரூ’வகையிலான.. மெல்லிய நைட்டியை அணிந்து கொண்டவள், மன்மதனின் கவனம் கலைக்கும் வண்ணம் நடந்து வந்து.. 

‘மனைவி’ என்ற உரிமையுடன் பரிதியின் மடியில் அமர்ந்து கொண்டவள், அவனது கழுத்தோடு ஒரு கையிட்டு, மறுகையால் அவனது தாடியடர்ந்த கன்னம் தாங்கி, 

“என் மாமாவுக்கு என்னாச்சுஹ்?”என்று கருணையுடன் கேட்டாள். 

விட்டத்தை விடுத்து.. தன் மனைவியையே அதே முகபாவம் மாறாமல் பார்த்துக் கொண்டேயிருந்தவனுக்கு, அவளது மையல் ததும்பும் விழிகளைக் காணவும், மெல்ல மெல்ல இளகியது அவன் முகத்தின் இறுக்கம். 

சற்றே கண்கள் கலங்கியிருக்க.. தன் கன்னம் தாங்கிய அவளது உள்ளங்கை எடுத்து.. காதலுடன் முத்தம் வைத்தான் பரிதி!! 

அந்த ஒற்றை முத்தத்தில் தலைவனின் நேசம் புரிபட.. மெல்ல குனிந்து.. அவனது பரந்த நெற்றியில் முத்தம் வைத்தாள் அவள்!! 

உள்ளுக்குள் ஏதேதோ மனத்தீ.. கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தாலும் கூட.. அமைதியாக வாய் திறந்தவன், 

“எனக்கு அம்மா இல்லை ஆண்டாளு.. அம்மா இல்லாதது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமாஹ்? பத்து வயசா இருக்கும் போது அவங்க தவறிட்டாங்க..”என்று சொல்ல… அவன் சோகம்.. அவளையும் தாக்க, 

தன் மார்பு மேட்டுக் குழிக்குள்.. தன் தலைவனை அன்போடு தழுவிக் கொண்டாள் பெண். 

அவன் காதல் மட்டுமே முதன்மையாகக் கருதியவள்.. என்றுமே அவனது குடும்பம் மற்றும் பால்யகால விவரங்களைக் கேட்க நாடியதே இல்லை!!

‘அப்படிக் கேட்காமல் விட்டதும் குற்றமோ?அவன் விரக்தி பாவத்துக்கு காரணம்.. தாயின் நினைவுகளோ?’என்றும் தோன்ற, அவனைத் தன்னோடு அணைத்துக் கொண்டே சொன்னாள் பெண், 

“அதான் உங்களுக்கு நான் இருக்கேல்ல மாமாஹ்? ஒரு அம்மாவாஹ்.. தோழியாஹ்.. காதலியாஹ்.. நல்ல மனைவியாஹ்.. என் பரிதிக்கேத்த.. நிலாவாஹ்.. கண்ணனுக்கேத்த ஆண்டாளாஹ்!!”என்று. 

அதில் ஒருவிதமான குளிர்ச்சி இதயத்தில் பரவினாலும், ஏனோ மீண்டும் இறுகிப் போனது அவனது உள்ளம்!! 

அந்த இறுக்கம்.. அவனுடைய போதையை முற்றாக இறக்க, “ அதுக்கப்புறம் என்னய வளர்த்தது என் அக்கா தான்..”என்று தன் ‘புது உறவொன்றை’ அவளுக்கு அறிமுகப்படுத்தி வைக்க, சற்றே அதிர்ந்து தான் போனாள் அவள். 

தன் தலைவனுக்கு ‘வாசு’ என்ற மாமா இருப்பது தெரியும்? 

அது போக, புதிதாக யார் இந்த ‘அக்கா?’என்று தோன்ற.. மெல்ல விரிந்தது அவளது போதையேற்றும் அதரங்கள்!!! 

“அக்காவா?? மாமாஹ்.. உங்களுக்கு அக்கா இருக்காங்களாஹ் என்ன??”என்று அவனது கன்னம் தாங்கியவளாகவே இவள் கேட்க, 

யோசனை முடிச்சிட்ட முகத்துடன், “என்னோட கூடப்பிறந்த அக்கா இல்ல ஆண்டாளு அவங்க? .. என் அம்மாவோட கூடப்பிறந்த தங்கச்சி அவங்க.. பேர் பார்வதியம்மாள்!!”என்று மேலதிக விளக்கமும் சொன்னான் அவன்!! 

“அப்படீன்னா உங்களுக்கு சித்தி முறை தானே மாமா?..”- சின்னக்குழந்தைகள் போல மனதில் எந்த கபடமும் இல்லாமல் கேட்ட.. மனைவியின் முகத்தைக் கண்டதும்.. உள்ளே வாடியது மனம்!! 

அவன் அமைதி நிறைந்த வதனத்துடன், “ம்.. ஆமா.. வாசு மாமாவுக்கு.. அவங்க அக்கா!! மாமா ‘அக்கா அக்கா’ன்னு கூப்பிடுறதைக் கேட்டு..எனக்கும் அவங்க சின்ன வயசுலயிருந்து அக்கா ஆகிட்டாங்க..”என்று அவன் சித்தியை “அக்கா”என்றழைப்பதற்கான விளக்கம் சொன்ன போது, சற்றே விகசித்தது அவன் முகம்!! 

பின் மீண்டும் அவன் கண்கள் சிவந்து, புருவங்கள் மேலேறி, முகத்தில் விரக்தி பாவம் தஞ்சமடைந்ததைக் காணுங்கால், மென்னிலாவுக்குத் தான் சோகம் பரவியது. 

அவனது இதழ்கள் மெல்ல முணுமுணுக்கும் தோரணையில், “அக்கா நாளை வருவாங்க..”என்று சொன்னது துல்லியமாகவே அடைந்தது அவள் காதுகளை!! 

தன் சித்தியின் வருகை ஏன்.. தலைவனுக்கு இத்தனை பெரிய விரக்தி பாவத்தைக் கொடுக்கிறது? 

ஒருவேளை.. பெரியார் சம்மதமின்றி.. வாசுமாமா முன்னிலையில் நடந்த திருமணம் என்பதால்.. தன் தலைவன் மேல் சினம் கொண்டு விட்டாரோ அந்தப் பெண்?? 

இல்லை அந்தப்பெண்மணி வேறு யாராவது.. பரிதிக்கு மணவாட்டி பார்த்து வைத்து.. இடையில் இவளை மணந்ததால் வந்த உரிமைக் கோபமோ?? 

தலைவனின் சோகம் அறிந்ததும்…. அவளையும் ‘யோசனை’என்னும் கொடிய நோய் தொற்றிக் கொள்ளவாரம்பித்தது!! 

இப்படி மேற்கொண்டு அவள் சிந்திக்க முடியாத வண்ணம் செய்தது அவன் செய்கை!! 

கையில் ஏந்தியிருந்த க்ளாஸில் இருந்த ஒட்டு மொத்த மதுவையும், ஒரே மிடராக வாய்க்குள் சரித்து விட்டு..கண்ணாடி டீபோயில் க்ளாஸை வைத்தவனின் கைகள்.. 

‘சீ த்ரூ’நைட்டியில் நளினமாகத் தெரிந்த.. அவள் இடையில் தவழ்ந்து வீணை மீட்டலானது!! 

மறு கை.. அவளது முதுகோடு கையிட்டு அணைக்க.. அவனது திண்ணிய மார்போடு மோதி நின்றது அவளது முன்னெழில்கள்!! 

அதில் யோசனை அகன்று ஓர் கிறக்கம் பிறக்க.. இடையை வருடிய அவன் கை அழுத்திப் பிடித்தது அவளதை!! 

அவனது கைகள் தந்த வலி தாள மாட்டாமல்.. கீழுதட்டை அழுத்திக் கடித்து.. விழிகள் இரண்டும் மேலே போய் சொக்கி நிற்க, ஒரு மாய உலகத்தில் தள்ளப்பட்டாள் அவள்!! 

மனைவியின் உணர்ச்சிப் பெருக்கு மல்கி நிற்கும் மதி போல ஒளிரும் வதனத்தைக் கண்டதும்.. தாபத்தில் ஒரு உஷ்ணம் பரவியது அவனது நாடி, நரம்பெங்கும்!! 

அதில்.. அவள் உடல் தந்த மென்மையில்… ஒரு ஆசைப்பித்தனாக மாறிப் போனவன், அவளது பிடரி மயிர்களூடு கையிட்டு சரித்து.. தன்னை நோக்கி அவளை முரட்டுத்தனமாக இழுத்தெடுத்து… 

அவளது கீழுதட்டைக் கடித்துச் சுவைக்கலானான். 

மன்னவனின் மையல் கிறக்கத்தைக் கூட்ட வேண்டும் என்பதற்காகவே, “சாக்லேட் ப்ளேவர்” உதட்டுச்சாயம் பூசியிருந்தது தான் மங்கையவள் செய்த தவறோ?? 

சாக்லேட்டின் வாசம்.. அதன் சுவை இரண்டும்.. அவனை ஒரு ஆழ்ந்த மயக்கத்தில் தள்ள…. சுவைக்கும் எண்ணமின்றி.. கடிக்கச் செய்தான் சூரியத் தலைவன்!! 

அவளுக்கு அவனது முரட்டுத்தனம் வலிக்க.. “ஸ்ஸ்ஸ்” என்ற மெல்லிய முணகல் ஒலி வெளிப்பட்டது இதழ்களில் இருந்தும்!! 

அந்த முணகல் ஒலி.. அவனது தாபத்தைக் கூட்ட.. இன்னும் இன்னும் அவளது ஆழ்ந்த இதழ்கள் எனும் கிணற்றில் இறங்கி தூர்வாரலானான் பரிதிவேல் வீரன்!! 

முரடனின் ஒற்றை முத்தத்தின் வீரியம் தாங்க மாட்டாமல்.. உடலெல்லாம் துணுக்கமுற்று.. தளர்ந்து போனது போல இருக்க, ‘தன் மேல் இத்தனை ஆசை வைத்திருந்த பரிதியா இது??’ என்னும் ஐயமும் வலுத்தது அவளுக்கு!! 

அடுத்தது எல்லாமே முரட்டுத்தனத்துடன் இணைந்த வேகமாக அமைய, உள்ளூற ஒரு புயல் எச்சரிக்கை மணி அடிப்பது போல இருந்தது அவளுக்கு. 

கள்ளூறும் இதழ்களில் இருந்து.. பிரியவே மனமில்லாதவனாக, அவளை இரு கைகளாலும் அள்ளி அணைத்து… இடைவெளி கொடாது முத்தமிட்டவாறே…. டெராஸிலிருந்து எழுந்தவன்… வேகமாக மஞ்சத்தை அடைந்து.. அவளை கிடத்தியவன்… தன் உள்பெனியனை.. தலைக்கு மேலாகக் கழற்றி வீசி விட்டு அவள் மீது படர்ந்தான்!!! 

அவன் விட்ட சீரான தகிக்கும் மூச்சுக்களும், அவள் காட்டிய ஆயிரத்தெட்டு உணர்ச்சி பாவங்களும்…. அவனை ஓர் கிறுக்கனாக மாற்ற… அன்று.. தன்னைக் காதலித்த சூடிக் கொடுத்த நாச்சியாரை… கொஞ்சம் மூர்க்கத்தனமாகவே கையாண்டான் அவன். 

அழகான மெல்லிய பெண்ணின் கழுத்துக்கு கீழான பிரதேசங்களில்… அவனுடைய பற்கள் பதிந்த தருணம் எல்லாம் ஒரு வேதனை எழுந்தது அவளுக்கு!! 

முரடனாக இருந்தாலும்.. தன்னிடம் இத்தனை காலமும் காதலிக்கும் போது ‘மென்மையிஸம்’ காட்டியவன், தற்போது கல்யாணத்துக்குப் பின்.. அவளுக்கு வேதனைத் தருவிக்கும் ‘வன்மையிஸம்’ காட்டுவதன் அர்த்தம் தான் யாது?? 

அவனது தாடி குறுகுறுக்கும் அதரங்களும், கூடவே அந்தப் பற்களும்.. அவள் உடலில் காற்றும் புகாத இடங்களில் நுழைந்து… 

கொஞ்சம் சித்திரவதை செய்யவாரம்பிக்க, காதலோடு சமுத்திரனைக் கலக்க வந்த கங்கைக்கு… மனதில் ஒரு நெருடல் தோன்றவாரம்பித்தது!! 

அவளது கைகள் வேறு… அவளுடலில் அவள் காட்டாத வன்மைக்கும் மேலாக.. அழுத்தம் பிரயோகித்து அழுத்திப் பிடிக்க, அதற்கு மேலும் காதலோடு ஒன்ற முடியாமல்.. சட்டென்று தலை தூக்கி.. அவனது முகத்தைப் பார்த்தாள் மென்னிலா!! 

அந்த முகத்தில் தெரிந்தது ஒரு விரக்திப் பார்வை!! எதையோ ஜெயித்து விட்ட வெற்றிக்களிப்புடன் இணைந்த விரக்திக் பார்வை!! 

அவள் அவனிடம் பழகிய நாட்களில்.. தோன்றாத ஓர் உணர்ச்சி பாவம்.. அவனுள் மிளிர்வதைக் கண்டவளுக்கு… அனிச்சையாக இதயம் ‘திக் திக்’ என்று அச்சத்தில் அடித்துக் கொள்ளவாரம்பித்தது. 

‘ஏன்? அவனுக்கு என்னாயிற்று?? காதலையும் மீறி.. ஒரு விரக்தியான வெற்றிக்களிப்பு பார்வை’ அவனில் தோன்றுவதும் ஏன்??’

அவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவனின் விழிகள் இன்னும் கொஞ்சம்… பிரகாசிக்க… சட்டென மேலேறி வந்த வண்ணமே… அதிரடித்தனமாக… அனைத்தையும் தொடங்கலானான்!! 

நிலாவுக்கோ… மனம் உடைந்து போன ஒரு மனநிலை பிறக்க, ‘வேண்டாம்’ என்று சொல்ல வாய் திறக்கப் போனதையும் அறிந்து கொண்டானோ அந்த முரடனும்?? 

அவளைப் பேச விடாமல்… அவளது இதழ்களைக் கவ்விக் கொண்டவன்.. தன் தேவை தீர்ந்த பின்னரும் கூட… அவற்றை விடவேயில்லை!! 

அவளுடனான அந்த வாழ்க்கை.. ‘இதற்குமேல் இல்லை’ என்று எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஜோதிடர்கள் யாரையாவது சந்தித்தானோ என்னவோ?? 

அன்றிரவு முழுவதும்.. விடிய விடிய அவளை திரும்பத் திரும்ப.. துவைத்து எடுத்தான் பரிதி!! 

கூடலின் முடிவில்.. அவளைத் தன் வெற்றுமார்பில்.. இரும்புப் பிடியாக அணைத்துக் கொண்டு அவன் உறங்கி விட… விடியலின் ஆரம்பத்தில் கூட உறக்கமே வராமல் விழித்திருந்தாள் மென்னிலா. 

தன்தலையை மெல்லக் குனித்து.. தன் உடலை சுய பரிசோதனை செய்து கொண்டவளுக்கு.. எங்கும் சிவந்த பற்தடங்களும், நகத்தடங்களும் இருக்க.. உடல் வலித்தது!! 

‘இது என்ன மாதிரியான கூடல் இது??” 

அந்தக் கண்கள்.. அவனது கண்களில்.. அந்த நேரத்தில்.. ஏன் அவளுக்கான காதல் இல்லவேயில்லை?? 

இது அவளது மனோ பிரம்மையா?? 

இல்லை கணவனின் சுபாவமே இது தானா? 

இது இப்படியே தொடரும் பட்சத்தில்.. அவளில் முகிழ்த்திருக்கும் அழகிய காதலும்.. இல்லாமல் போய் விடுமோ? என்ற ஐயமும் சட்டென பிறந்தது அவளுக்கு!! 

இல்லை.. அந்த எண்ணம் தோன்றியதும்.. மனதோரம் வலி எழுந்தது அவளுக்கு. 

காற்றுக்கு கேசம் ஆட.. பள்ளிகொள்ளும் பெருமாளை நிகர்த்த அழகுடன்.. துயிலும் தன் கண்ணனைப் பார்த்த ஆண்டாளுக்கு, அவன் மீதிருக்கும் காதல்.. இன்னும் அதிகமாகவே செய்தது!! 

‘சில ஆண்கள்.. பெண்மைக்கு வன்மை தான் பிடிக்கும் என்று தவறாகக் கற்பிதம் செய்து கொள்வதும் உண்டல்லவா? அது போலவா இதுவும்!! 

காலை எழுந்ததும்.. அவன் தந்த உள்க்காயங்கள் கண்டு.. அவனே இரங்குவான் பாரேன்!!’என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன், 

மெல்ல எம்பி.. அவனது நெற்றியில் முத்தம் வைத்தவள், ‘அவன் ஒரு முரட்டுக்குழந்தை’என்று கன்னம் கிள்ளி செல்லங்கொஞ்சியவளாக உறங்கிப் போனாள் அவள்!! 

அவனது வீட்டில்.. அடுத்த நாள் விடிந்த விடியல்.. தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் திருப்பிப் போடும் என்று அறியாதவள்… மணமான பெண்களின் முகத்தில் தோன்றும் மங்கலத்துடனேயே எழுந்து கொண்டாள். 

கணவன் இன்னமும் துயின்று கொண்டிருக்க.. அவன் தூக்கம் களையாத வண்ணம்.. கண் விழித்தவள், குளியலறை சென்று தலைக்கு குளித்து விட்டு… 

வாட்ரோப்பில் இருக்கும் மிக நளினமான பட்டுடுத்தி… நெற்றி வகிட்டில்.. குங்குமம் இட்டு, வெளியே வந்தவளின் விழிகளில்… விழுந்தார் ஓர் பெண்மணி!! 

சோபாவில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்மணியின் பக்கவாட்டுத் தோற்றம் தான் புலப்பட்டதாயினும் கூட,

 அவர்ப் பார்த்ததுமே ஐம்பது, ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க.. கொஞ்சம் வயதான தோற்றம் தெரியவே செய்தது!! 

வீட்டின் எப்பாகத்தினையும் ஆராயாது, துலாவாது..சோபாவில் அமர்ந்து.. வாசல் தாண்டி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கோர விழிகள் மட்டும் ஆழி அளவுக்கு விரிந்திருந்தது பார்க்க படுபயங்கரமாக இருந்தது!! 

‘யார் இந்த பெண்மணி?? நேற்று அவள் மாலையும், கழுத்துமாக, இங்கே நுழைந்த போது இருந்த ஒரே ஜீவன் “வாசு மாமா” மட்டும் தான்!! 

இன்று காலை.. புதிதாக வந்து இறங்கியிருக்கும் இப்பெண்மணி யார்?? என்று யோசித்தவளுக்கு.. நேற்றிரவு கணவன் சொன்ன ‘அக்கா அலைஸ் சித்தி’ ஞாபகம் வந்தது. 

அவராக இருக்குமோ? என்று எண்ணிய கணம்.. மெல்ல மெல்ல மாடிப்படியிறங்கி வந்தவளின் ஐயத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் வந்த வாசு மாமா.. அந்தப் பெண்மணியைக் கண்டதும் தவிக்கும் விழிகளுடன், 

“அக்கா… என்ன..?. திடுதிப்புன்னு காலையில வந்து இறங்கியிருக்கீங்க??”என்று கேட்க, சீறிப் பாய்ந்து வந்தது அந்தப் பெண்மணியின் குரல்!!

“எம்மவன நான் ப்பார்க்க வரப்படாதோஓஓ?? ப்போ.. ப்போய் ‘நான் வந்திருக்கேன்’னு சொல்லி.. ப்பரிதிய எழுப்பூஊஊ!!!”என்று கட்டளையிடும் தோரணையில் கத்துவதைக் கண்டவளுக்கு, ‘ஓ இவரே தானா அது?’என்று ஊர்ஜிதமேயாயிற்று!! 

பார்வதியம்மாளின் ரௌத்திர விழிகளிலும் சரி.. வாசுவின் அடங்கிப் போகும் விழிகளும் சரி..என்று இருவர் விழிகளிலும் விழுந்து தொலைக்காமல், சட்டென்று

 சமையலறைக்குள் நுழைந்தவளுக்கு, அந்தப் பெண்ணின் முகத்தில் வெடித்த எள்ளும், கொள்ளும்… யோசிக்க வைத்தது. 

‘வளர்ப்பு மகன்.. தன்னிடம் சொல்லாமல், கொள்ளாமல் திருமணம் முடித்துக் கொண்டதால் விளைந்திருக்கும் ரௌத்திரம்’ என்று எண்ணிக் கொண்டவள், பார்வதியம்மாளின் கோபத்தை.. சற்றே மலையிறக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்!! 

அதிலும் ‘‘பரிதி தேர்ந்தெடுத்த பெண் நல்ல பெண் தான்’என்ற எண்ணம் அவருள் பிறக்க வேண்டும்’ என்று முடிவு செய்து கொண்டவள், சமைலயறையில் இருந்த பணியாளர்களின் உதவியுடன்.. தானாகவே தேநீர் தயாரித்தாள். 

இன்முகம் மாறமல் அவரை நோக்கிச் சென்று… குனிந்து, இதழ்களில் தவழ்ந்த புன்னகையுடன், “அத்தை டீ” என்று டிரேயை நீட்ட, 

அவளை நிமிர்ந்து பார்த்த பார்வதியம்மாளின் முகம்… கடுகடுவென்றானது;விழிகள் அவளை விழுங்கி விடும் அளவுக்கு பெரிதானது;விலாக்கள் இரண்டும் ஏறி இறங்கி.. தாறுமாறாக மூச்சு வாங்கலானது. 

நெற்றிக் கண் இருந்திருப்பின்.. அதைத் திறந்து.. அவளை பஸ்பமாக்கவும் அவர் தங்கியிருக்கவே மாட்டார்!! 

‘நிலாவின் அதிர்ஷ்டம்.. அப்படியொரு மூன்றாம் கண்ணை பிரம்மன் அவருக்கு கொடுக்காமல் போனது!! 

தன் கை நீட்டி.. அநாயசமாக அதைத் தட்டிவிட்டவர்,”ந்நாஆஆன் உன்கிட்ட ட்டீஈஈ.. வ்வேணும்னு கேட்டேனாக்கும்??”என்று உறுத்து விழித்தவராகக் கேட்க, 

அவர் தட்டிவிட்ட டீயின் பாதி.. சுடச்சுட தன் அங்கமெல்லாம் கொட்டிப்பட்ட உஷ்ணம் தாங்க முடியாமல்… பதறி நின்றாள் மென்னிலா!! 

சருமத்தின் ஆழம் வரை.. விறுவிறுவென ஏறியது தேநீரின் வெப்பம்!! 

வீட்டில் கூட சூடான தேநீர் குடித்துப் பழகியிராதவளுக்கு.. அது தன் மேனியில் கொட்டிப்பட்ட வலியில், “ஐய்யோ.. அம்மாஆஆஆஆ”என்று பதறியத்துக் கொண்டு.. 

அவளடைந்த வேதனை கண்டு.. கொஞ்சம் கூட இளக்கம் காட்டாத அந்தக் கொடூரியின் கைகள்.. மென்னிலாவின் பிடரி மயிர்களை எல்லாம் ஒரே பிடியில் கொத்தாகப் பற்றிக் கொண்டது!! 

அவரது அழுத்தம் தாங்க மாட்டாமல்.. அவரது கையைப் பற்றிக் கொண்டு.. வலியில் அரற்றினாள் அந்த மெல்லினத்துப் பெண்!! 

“ஆஆஹ்… விடுங்கத்தை… எ… எனக்கு.. . வ்வலிக்.. குதூஹ்ஹ்!!”என்று அரற்றியவளின் விழிகளில் இருந்து சரேலென எட்டிப் பார்த்தது ஒரு துளி நீர்!! 

அந்தப் பெரிய விழியுடைய ரௌத்திரப் பெண்மணி.. அவள் கேசத்தைத் தன்னை நோக்கி இழுத்து, அவள் முகத்தை அண்மையில் நாடிப் போனவராக, 

அழுத்தமான தொனியில், “ந்நாஆஆன் என்ன்ன உன் க்கல்யாஆஆணத்ததுக்கூஊ… வாழ்த்து சொல்ல வ்வந்திர்ருக்கேன்னு நெனச்சிக்கிட்டீஈஈய்யோ?? இன்னைக்கு சரித்திரம் திரும்பும் ந்நாஆஆள்!! ”என்று கர்ஜித்தவர், 

தன் முன்னாடி வந்து.. சட்டை, வேஷ்டி சகிதம் ஆயத்தமாகி நின்ற பரிதியைக் கண்டவர், “ப்பரிதீஈஈஈ.. வ்வண்டிய்யய எடூஊஊ!!”என்று கட்டளையிட.. 

மனைவியின் நலன் பற்றி சட்டையே செய்யாத.. ஒரு கொடூரக்கணவன் போல.. தன் வண்டியை எடுக்கச் சென்றான் பரிதி!! 

தான் ஒரு அகோரத்தனமான பெண்மணியிடம் சிக்கிக் கொண்டிருக்க.. தன்னைக் கவனித்தும் கவனியாதது போலச் செல்வது அவளது கணவனா?? 

சரேலென்று ஒருதுளிக் கண்ணீர் நெஞ்சின் உஷ்ணம் தாங்க மாட்டாது வடிய, “மாஹ்… மாஹ்”என்றாள் ஈனஸ்வரத்தில்.. தன்னை விட்டும் செல்லும் தன் கணவனின் புறமுதுகு பார்த்து. 

பரிதியின் நடை.. வாசலோடு தடைப்பட்டு நின்றது;அவளது மொழிகள் கேட்டு.. உடல் விறைக்க, கைமுஷ்டி இறுக்கி நின்றவன், மறந்தும் கூட திரும்பி தன் மனைவியைப் பார்க்கவேயில்லை!! 

பரிதியின் தடைப்பட்ட நடை.. பார்வதியம்மாளுக்கு ஒரு திடுக்கிடலைக் கொடுக்கவே செய்தது. 

‘அந்தளவுக்கு மயக்கி வைத்திருக்கிறாளா இந்தச் சிறுக்கீஈஈ’என்று உள்ளுக்குள் தோன்ற..இன்னும் கொஞ்சம் அழுத்திப் பிடித்தார் அவளது பின்னந்தலை மயிரை!! 

அந்த வலியில் விம்பங்கள் இரண்டிரண்டாக தெளிவற்றுத் தெரிய வழிந்த கண்ணீரில், ‘ஆஆஆஆஆ’என்று கத்தினாள் மென்னிலா!! 

அதில் பரிதியின் உடல் இன்னும் விறைத்தது. 

கூடவே கேட்டது பார்வதியம்மாளின் குரல், “என்ன நின்னுட்டிருக்க பரிதிக்கண்ணாஆ… ப்போஓஓ!!” என்று அவர் உரைத்த ‘பரிதிக்கண்ணா’என்ற ஒற்றை வாசகத்தில்.. என்ன தோன்றியதோ.. மீண்டும் போர்டிகோவை நாடிப் போனான் பரிதிவேல் வீரன்!! 

அங்கே நின்றிருந்த பரிதியின் உறவுகளில்.. “வாசு மாமா’ மாத்திரம் தான்… இயலாமை நிறைந்த… கலங்கும் விழிகளுடன் நின்றிருந்த ஒரே ஜீவன்!! 

கார் வண்டி உருமிக் கொண்டு வந்து போர்டிகோவில் நிற்க.. அவள் திமிறத் திமிற.. பின்னந்தலையை அழுத்திப் பற்றியவாறு.. தரதரவென்று இழுத்து வந்து… வாசற்படி தாண்ட… 

படியின் இடுக்கில்.. மென்னிலாவின் சின்னக்கால்விரல் பட்டு.. நகம் தாறுமாறாக உடைந்து.. இரத்தமும் எட்டிப் பார்க்கலானது!! 

அந்த வலியிலும் “ஸ்ஸ்.. மாமாஆஆ” என்றே கத்தினாள் பரிதி மேல் உயிரையும் வைத்திருந்த நிலாப்பெண்!! 

அவள் ஒவ்வொரு முறை.. “மாமா.. மாமா” என்ற போதும்.. உடல் விறைத்து… முகம் இறுக நின்றவன்.. இம்முறை கியரை அழுத்திப் போட்டு.. வண்டியை உறுமச் செய்த வண்ணம்.. விட்டத்தை வெறித்துப் பார்த்த வண்ணம் நின்றான்!! 

வண்டி போட்ட நாராசமான உறுமல் சத்தத்தில்.. அவளது வேதனையான மொழிகள்.. அவனது செவிகளை அடையாமலே போயிற்று!!! 

அதற்காகத் தான்… அவனும் வண்டியை அதிமித ஒலியுடன் உறுமச் செய்தானோ??? 

அந்தகணம்.. நெஞ்சு பொறுக்க மாட்டாத விழிகளுடன்.. வாசு மாமா.. போர்ட்டிகோவுக்கு வர, அவர் கண்களில் தனக்கான கழிவிரக்கம் மிகுவதைக் கண்டவள், 

அந்த அகோரப் பெண்மணியின் கையிலிருந்து நழுவி, வாசுவின் கால்களில் விழுந்து.. அவற்றைக் கட்டிக் கொண்டே, 

“வாசு…மாமா…நீங்க பரிதிக்கு மாமான்னா… எனக்கு சித்தப்பா.. என் அப்பாவா நெனச்சு கேட்கிறேன்.. இங்கே என்ன நடக்குது?? ஏன் இவங்க என்கிட்ட இத்தன கொடூரமா நடந்துக்கு.. றாங்க..?? நான் அவங்களுக்கு.. என்.. ன பாவம் பண்ணேன்னு.. ஒண்ணுமே.. புரி.. மய மாட்டேங்.. குது.. சித்தப்பா..ப்ளீஈஈஸ்… அவங்க கிட்டேயிருந்து என்னை காப்பாத்துங்க சித்.. தப்பா.. நான் கெட்.. டவள் கெடையாது சித்த.. ப்பா.. இங்கே ஏ.. ஏதோ தப்பா.. மிஸ்அன்டர்.. ஸ்டேன்டி….”என்று ஒரு குழந்தை போல அழுது கொண்டே அவள் கெஞ்ச, 

மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு நிற்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு. 

தன்னை விட்டு.. தன் தம்பியிடம்.. அவள் கெஞ்சுவதை.. ஒரு அசிங்கத்தை பார்ப்பது போல பார்த்த அந்தக் குரூரப் பெண்மணி.. அவள் தலைமயிரை மீண்டும் கொத்தாகப் பற்றி.. அவளது பட்டுக்கன்னங்களுக்கு, 

ஓயாமல் மாற்றி மாற்றி அறை வைக்க.. பட்டுக் கன்னங்கள் இரண்டும் விண் விண்ணென்று சிவந்து வீங்கிப் போனதோடு நில்லாமல் மூக்கிலிருந்தும், இதழோரத்திலும் குபுக்கென்று வழிந்தது கடுஞ்சிவப்பு நிற இரத்தம்!! 

அப்போதும் அதைக் கண்டு மனம் இளகாத அந்த அகோரி, “என்னடீ… நீ என்ன அழுது புரண்டாலும்.. உன்னய காப்பாத்த ஒரு பய வ்வர மாட்டாஆன்..!!! ஏறுடீஈஈ”என்று 

அவளை வண்டியில் அடாவடியாகத் தள்ளி ஏற்றிய பார்வதியம்மாள், பரிதியைப் பார்த்து, “ம்ம்.. கெளம்பூஊஊ”என்று கட்டளையிட,

 ‘அவர் பேச்சுக்கு மறுபேச்சில்லை’ என்பதைப் போல, வண்டியைக் கண்மண் தெரியாத வேகத்தில் விடலானான் பரிதி!! . 

வண்டிக்குள் இருந்தவளுக்கோ, ஒன்றுமே புரியவில்லையாயினும், ஒரு சூழ்நிலைக்கைதியாக தான் மாற்றப்பட்டது மட்டும் புரிந்து விட, தன் பிடரிமயிரை அப்போதும் விடாமல் அழுத்திப் பற்றியிருக்கும், 

அந்தப் பெண்ணை நோக்கி, கண்ணீர் விட்டு அழுது கொண்டே, “ய்யாஆர் ந்நீங்க?? ந்நான்.. உங்களுக்கு என்ன ப்பாவ்வம் பண்ணேன்னு.. இப்.. படி பண்றீ… ஈஈங்க?? எனக்கு நீங்க யாரு.. ன்னே தெரியாது… உங்க.. ளை என் வாழ்நாள்லேயே இன்னைக்கு தான்.. முதல்.. முறைய்யாஆஆ.. ப்பார்க்.. றேன்… நான் உங்களுக்கு… எந்தத் தப்பும் செய்யலை.. யே.. ஏன் அப்படி நடந்.. துக்குறீஈஈங்க?? ”என்று கூச்சலிட்டுக் கேட்டும் அவரிடம் விடையில்லை!!! 

அதிலும்.. அவளது காதல் கணவன்.. தன்னை அவனது சித்தி இத்தனை கொடுமை செய்வதை கண்கூடாகப் பார்த்த பின்னும், அமைதியாக இருப்பது தேள்கொட்டியது போல வலித்தது!! 

ரியர் வியூவ் கண்ணாடியில் தெரிந்த.. அவனது மூர்க்கத்தனமான பார்வையை… இயலாதவளாகப் பார்த்தவள், “நீங்களும் ஏன்.. மாமாஹ்.. இப்படிய்.. யெல்லாம் பண்றீங்கஹ்? எனக்கு ஏன் ஒஒ.. ண்ணும்.. புரிய மாட்டேஏஏங்.. க்குது..?ஏன்..மாமாஆஆ வ்வாய்யே த்தெறக்க ம்மாட்டேஏஏங்குறீங்க??”என்று கேட்டவளுக்கு, மீண்டும் வழிந்தது கண்ணீர். 

அவனோ காதுகள் கேளாதது போல.. இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியவனாக.. அன்று அவள்.. தன் வீடேறி வந்து.. காதலிப்பதாக நடுவிரவில் சொன்ன தருணம்.. எங்கு கொண்டு வந்து அவளை விட்டானோ?? 

அங்கேயே கொண்டு வந்து வண்டியை நிறுத்தலானான்!! 

முற்பகலில்.. அனைவரும் புழங்கும் ஊர்க்கோயில் தெரு முன்பாக, புழுதி மூன்றரையடி உயரத்துக்கு எழுந்து பறக்க.. வண்டியை ‘யூடர்ன்’ அடித்து நிறுத்தினான் பரிதிவேல் வீரன்!! 

மென்னிலாவின் பக்கக் கார் கதவினைத் திறந்த அந்த மோசமான பெண்மணி.. மென்னிலாவைக் கொடூரமாக.. வெளியில் தள்ளி விட.. 

அந்தத் தள்ளலை தாள மாட்டாமல்.. சமநிலையின்றி தரையில் உருண்டு விழுந்து எழுந்தவளின்.. 

முழங்கால், முழங்கை முட்டி எல்லாம் சிராய்ந்து… குபுக்கென்று எட்டிப் பார்க்கலானது இரத்தம்!! 

காரில் இருந்து.. முற்காலத்தில் ராவணனின் அரக்கப்படையில் இருந்த அரக்கி போன்ற அகோரமான முகபாவனையுடன் இறங்கி வந்தவள், 

அப்பாவி மென்னிலாவின் விழிகளை எரித்து விடுவது போல பார்த்தாள்!! 

வண்டியை விட்டும்.. அந்தப் பெண்மணியைத் தொடர்ந்து இறங்கிய பரிதிவேலின் விழிகள்.. தன் ஆண்டாளைப் பாராமல், வேறெங்கோ வெறித்துப் பார்க்க.. 

அவனை அண்ணாந்து பார்த்தவள் கண்டு கொண்டாள்..நேற்றிரவு அவன் முகத்தில் துளிர் விட்ட அதே விரக்தி பாவத்தை!! 

கண்கள் சிவந்து.. புருவங்கள் மேலேறித் தெரிந்த அதே விரக்தி பாவம்!! 

‘தன் மூலமாக என்ன பிழை நேர்ந்தது?’ என்றறியாத பெண்ணவள், தன் கணவனே கண் கண்ட தெய்வமெனக் கருதி.. இரு கரங்கள் கூப்பி நின்று, 

கண்ணீர் ததும்பும் விழிகளுடன், “மாமாஹ்.. .. என்ன தப்பு பண்ணியிருந்தாலும்.. எ.. என்னை.. மன்னிச்சிடுங்க மா.. மா..வீட்டுக்கு ப்போய்.. என.. எனக்கு என்ன தண்டனை வேணும்னாஆஆலும் கொடுங்.. க மாமா… இப்படி நடுத்தெருவுல எனக்கு அவமானமா இருக்குஹ்!!..”என்று இயம்ப, அந்தக் கொடியவன்.. கை முஷ்டி மடக்கியவனாக, கழுத்து நரம்புகள் புடைத்து வெளித் தெரிய, 

‘உனக்கும்,எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை’என்பது போல வேறெங்கோ பார்த்த படி நின்றான்.

கொஞ்சம் கொஞ்சமாக சம்பவ இடத்தில் கூடிய.. ஊராருக்கோ.. அங்கே நிராதரவான நிலையில் ‘ராஜமாணிக்கத்தின்’ பேத்தியைக் கண்டதும்.. ஊர் வாய்கள் எல்லாம் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ளலாயினர்!! 

ஊரில் இருந்த பெருசுகளுக்கோ அந்த முச்சந்தியில் நடப்பது எப்போதோ பார்த்ததின், ‘மீள் அரங்கேற்றம்’ போலத் தோன்ற…

 இளசுகளுக்கோ.. நடப்பது ஒரு ‘அநீதி’ என்பது புரிந்திருந்தும், அங்கே நின்றிருந்த பரிதியைத் தாண்டி, வாய் திறக்கவும் அச்சம் கொண்டவர்களாக.. வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கலாயினர்!! 

அந்தோ பரிதாபம்.. யாரும் அந்த நிலாப் பெண்ணுக்கு ஆதரவாகப் பேச முன்வரவில்லை. 

அவளைக் கொன்று விடும் வெறியுடன் தன் விலாக்கள் இரண்டும் ஏறி இறங்க மூச்சு வாங்கிக் கொண்டே, அவளை நாடிப் போய் ஒரு காலை மண்டியிட்டும், மறுகாலை தரையில் குத்திட்டும் அமர்ந்த அந்தப் பெண்மணி, 

அவள் சேலை மாராப்பை கொத்தாகப் பற்றி.. தன் முகத்துக்கு நேரே மென்னிலா முகம் கொண்டு வந்தவராக, 

பற்களைக் கடித்துக் கொண்டு, “அவ்வ்வமா.. னத்தைப் பத்தி ர்ராஜமாணிக்கத்தோட ப்பேத்தி ந்நீஈஈ.. ப்பேசுறீய்யாஆ?? ஆம்பள சொகத்துக்காக.. ப்பொட்ட நாய் ம்மாதிரி… நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு வ்வந்தவ.. த்தானேடீ ந்நீந்நீஈஈ…??”என்று கேட்க, மனதில் அடிபட்டவளாக.. தன் தலைவனையே வலி சுமந்த கண்ணீர் விழிகளுடன் இமைக்காது பார்த்தாள் மென்னிலா!! 

இந்தப் பெண்மணி.. இத்தனை பேச்சு பேசுகிறாள். அவன் மீது அவள் பூண்ட காதலை ‘ஆண்சுகம்’ என்கின்றாள்!! அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தும் அமைதியே உருவாக நிற்கின்றானே அவளது கணவன்..?? 

உயிர் மரித்துப் போன பிணம் போல பரிதியை… நாசி நுனி அழுகையின் விளைவால் செக்கச் செவேலென சிவக்கப் பார்த்தவள், 

வேதனை கமழும் குரலில், “நான் அப்படி.. ப்பட்டவளா மாமாஹ்?? ஆம்பள சுகத்துக்கு நாக்க தொங்க போட்டுக்கிட்டு போறவ.. ளாஹ்.. மாமாஹ்??”என்று கேட்க அமைதியாக இருந்தவனின் செயலில் விம்மி விம்மி அழுகை வந்தது அவளுக்கு. 

இதழ்கள் அஷ்டகோணலாக அழுகையில் வளைய, அடிக்குரலில் இருந்து சீறிப்பாயும் தொனியில், 

“ஏஏஏன் ப்பேஏஏசாம நிற்குறீஈஈங்க மாமாஆஆஆஹ்?? நான் அப்படியான பொண்ணாயிருந்தாஆஆஆ..கொழும்பிலேயே எவன்கூடவோ போயிருப்பேனேஏ மாமா இல்லை சரவணன் மாமா கூடவே போயிருப்பேனே.. சொல்லுங்க மாமாஆஆஆ.. நான் அப்படிப்பட்டவளாஆஆ?”என்று கத்திக் கேட்டும் அவனிடம் பதில் இல்லை!! 

தன்னை விட்டும் பரிதியைப் பார்த்த அவள் முகத்தை.. இரு கன்னங்களைப்பற்றி தன்னை நோக்கி திருப்பிய அப்பெண்மணி, 

“அது தானேஏஏ உண்மை.. உன் ப்பின்னாடி அவன் வ்வர வேண்டிய தேவையே இல்லாம.. நீ தானே அவன் பின்னாடி வ்வந்த?? .. அப்போ ஆம்பள சுகம் தேடி வ்வந்தது ந்நீஈஈ இல்லாம ய்யாஆர்ரு??..”என்று கேட்க.. அவரது சொற்களின் வீரியம் கேட்டு.. அதிர்ந்து விழித்தாள் அவள். 

மென்னிலா இன்னும் அதிர்ச்சியாகும் வண்ணம் இன்னும் பல விஷயங்கள் சொன்னாள் அந்தப் பெண்மணி!! 

‘அவனது காதலே ஒரு சூழ்ச்சியான நடிப்பு’ என்று தெள்ளத்தெளிவாகச் சொன்னாள் அந்தப் பெண்மணி!! 

அவளது தாடையை ஒற்றைக் கையால் அழுத்திப் பிடிக்க, அவளது இதழ்கள் ‘ஓ’ வடிவில் கூம்ப, 

அவளது கண்ணீர் வழியும் விழிகளை.. பழிவாங்கும் வெறியுடன் பார்த்தவர், 

“நீ எல்லாமே.. க்காதல்னு நெனச்சிட்டிருக்க.. அது தான் இல்ல.. எல்லாமே செட்டிங்கு.. ஆக்டிங்கு.!! மாட்டுவண்டி பந்தயத்துல மிரண்டு போன.. . காளை ஏன் அத்தனை பேர் இருந்தப்போ உன்னை முட்ட தேடி வந்தது??.. கரெக்ட்டா என் மவன் வந்து ஏன் உன்னய க்காப்பாத்தணும்? யோசிச்சுப் பார்த்தீயா.. எல்லாமே செட்டிங்கு.. நீ தான் என் ம்மவன் அழகுல முதல் பார்வையிலேயே… மயங்கி நின்னு யோசிக்க மறந்துட்டீய்யே..?”என்று கேட்க, அவரது அழுத்தம் வலித்தது அவளுக்கு!! 

அவள் மனக்கண்ணோரம்.. காளையின் திமிலை.. அநாயசமாகப் பற்றி நின்ற பரிதி.. முதல் பார்வையிலேயே இனம் புரியாத பந்தத்தை உருவாக்கி விட்டுப் போன பரிதி வந்து போனான்!! 

அப்படியென்றால்.. அன்று விரிக்கப்பட்டது காதல் வலை அல்லவா?? சூழ்ச்சி வலையா?? 

அதனால் தான் இவன் ஏற்பாடு செய்த.. இவன் வளர்த்த காளை என்பதனாலா.. அதன் காதில் ஏதேதோ சொல்லியதும்… அதுவும் கேட்டு அடங்கிப் போனது!! 

இவன் கண் அசைத்த பின்னர் வந்த பணியாளர்கள் காளையை அழைத்துச் சென்றது எல்லாமே சூழ்ச்சி தானா?? 

இவள் தான் அவனை ‘உயிர்காக்க வந்த ஆபத்பாந்தவன், ஆதிமூலன்’ என்றெல்லாம் தலைக்கு மேலே தூக்கி வைத்து எண்ணிக் கொண்டாளா?? 

அவளது சிந்தனையைக் கலைக்குமுகமாக மீண்டும் கேட்டது அந்தக் குரல்!! 

“எல்லாமே ஸெட்டிங் தான்.. உன்னைக் காப்பாத்தி.. ஒரு இம்பரஷன உர்ருவ்வாக்கீஈஈ…. உன்னய காதலிக்கலாம்னு பார்த்தான்.. 

ஆனா அதுக்கு அவசியமே… இல்லாம நீயே நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு… என் மவன் பின்னாடி நாயா வ்வந்த?? அவன் ‘நீ தான் வேணும்’னு சொன்ன ஒத்த சொல்லுக்காக.. உன்னயவே தர தயாரா இருந்த?? .. எங்களுக்கு வேல சுளுவா போயிருச்சு.. நாங்க பண்ணதெல்லாம்.. நம்ம ப்ளான்ல சின்ன மாற்றம் தான்.. அவன் உன்னய காதலிக்கவேயில்லைன்ற மாதிரி பிகு பண்ணது.. அப்புறம் காதிலிக்குற மாதிரி நடிச்சது தான்.. அம்புட்டு தான்.. ”என்று அவர்களுக்குள் நடந்த அந்தரங்கமான விஷயங்களை எல்லாம் பிட்டுப் பிட்டு வைக்க ஆடிப் போனாள் அவள்!! 

அந்தப் பெண்மணி உரைக்காத ஒரே விஷயம்… இருபத்து நான்கு மணி நேரம்.. இருவரும், தனிமையில்.. எந்த எல்லையும் மீறாமல் ‘குறுந்தீவி’ல் கழித்தது!! 

‘அதுவும் அந்த அரக்கிக்குத் தெரியுமா?? இல்லை வீணாக எதற்கு மூச்சிரைக்க பேச வேண்டும்’ என்று விட்டு விட்டாளா?? 

அவள் உரைத்த அந்த சின்ன மாற்றமும் யாதோ? 

அவன்.. அவளது காதலை ஏற்றுக் கொள்ளாமல் பிகு பண்ணியது போல நடித்ததும், கல்யாணத்திற்கு முன்னர் அவளைத் தொடாத கண்ணியவான் போல நடித்ததா அந்தத் திட்டத்தில் அவர்கள் நிகழ்த்திய சின்ன மாற்றம்?? 

எல்லாமே நடிப்பு தானா?? அவளது தலைவனின் காதல் எல்லாமே நடிப்பு தானா?? ஒருமுறையேனும் அவன் காதலின் ஆழத்தை அவன் உணரவேயில்லையா?? 

எல்லாமும் சிறுகச் சிறுகப் புரிந்தாலும், ‘ஏன்? எதற்கு?’என்ற கேள்வி மட்டும் அவளிடம் நிலைபெற்று நின்றுவிட ஆயத்தமானது. 

அந்த கணம் வாய் திறந்த அந்தப் பெண்மணி,

அநாயசமாகத் தன் விழிகளைப் பெரிதாக்கி, “ராஜமாணிக்கத்துடைய குடும்பத்துக்கு நான் தலைகுனிவை ஏற்படுத்தணுமுன்னு ஆசைப்பட்டேன்.. திருவிழா அப்போ.. உன்னய ப்ளேன் பண்ணி குடோனுக்கு வரவைச்சு, அங்கேயே உன் குடும்ப மானத்தை வாங்கலாம்னு முடிவு பண்ணது தான்.. உன் மாமா சரவணன் வந்ததால தப்பிச்ச.. ..ஆனால் நீயாகவே தேடித் தந்தது பாரு?? .. இது தான் பெரிய்ய் தலைகுனிவூஊஊ!! .. வீட்டை விட்டு வந்து கல்யாணம் பண்ண பொண்ணு.. அடுத்த நாள் வாழாவெட்டியா வந்து நிற்கப்போற பாரூஊஊ.. அது தான் பெரிய்ய்ய தலைகுனிவூஊஊ”என்று பயங்கரத் தொனியில் உரைத்தவர், 

அவளை வன்மம் தீரப்போகும் சந்தோஷம் தவழும் விஷமப் புன்னகை சிந்திக் கொண்டே பார்த்தவாறு

“பரிதீஈஈ..”என்று கத்தி விட்டு எழுந்து கொள்ள, இது தான் சரியான தருணம் என்று அவளை நோக்கிக் குனிந்தான் பரிதிவேல் வீரன்!! 

அவனது முகம்.. ஏனோ இறுகிக் கறுத்து வாடிப் போயிருந்தது. 

அவள் விழிகள் ‘ஏமாற்றி விட்டாயே பாவீஈஈ’என்பது போல குற்றம் சாட்ட, அதைக் கணக்கில் கொள்ளாதவனாக… அவள் கழுத்தில்.. நேற்று அவனாகவே கட்டிய தாலியை.. 

ஆழ உள்ளிழுத்த மூச்சுடன், விழிகளை மூடிக் கொண்டே, பிடுங்கிப் பறித்தான். 

தாலி பறிக்கப்பட்டதும், உயிரே போவது போல வலிக்க, “மா.. மாஹ்..”என்று கத்தினாள் பெண்!! 

பரிதிவேல் வீரன்.. தாலி அடக்கப்பட்ட கையை அழுந்த மூடிக் கொண்டு அவளை உணர்ச்சி சுத்தமாக துடைத்த பார்வையுடன் பார்த்துக் கொண்டே நின்றான். 

அந்த கணம் அந்தக் கொடூரப் பெண்மணி.. கூட்டத்தில் யாருக்கோ “ம்” கண்களால் சைகை செய்ய.. 

அந்த கண்ணசைவுக்காகவென்றே தயாராக இருந்தது போல இருந்த இரு பணியாளர்கள், இரு வாளிகளுடன்.. ஓடி வந்து சாணி கரைத்த தண்ணீரை.. அவள் மீது ஊற்ற… வழிந்த கண்ணீர் தடைப்பட…சாணியின் மொச்சை மணமும், நீரும் தன்னுடலில் இருந்து சொட்டு சொட்டாக வழிய.. 

அப்போதும் தான் நேசித்த மணாளனையே… ‘இந்தக் கொடுமையிலிருந்து காப்பாற்ற மாட்டானா?’ என்ற நிராசையுடன்… அப்படியே தரையிலேயே அமர்ந்திருந்த வண்ணம், 

அவனை அண்ணாந்து.. இமைக்காமல் பார்த்தாள் பெண். 

அவளது ஏக்கப்பார்வை.. தன்னையொன்றும் செய்து விடாது என்பது போல…தாலி அடங்கிய கையுடன்.. கருணையேயற்று நின்றான் பரிதிவேல் வீரன்!! 

அவளை உயிருக்கு உயிராக காதலித்தது போல நடித்த பரிதிவேல் வீரன்!! 

நடக்கும் அநியாயத்தைக் கண்டு.. பிளந்த வாய்களை மனிதர்கள் விரல் வைத்து.. அடைத்துக் கொண்டாலும்… யாரும் வாய் திறந்து.. அன்றும் நீதி கேட்கவில்லை;இன்று இந்நொடியும் நீதி கேட்கவில்லை. 

அவளை நோக்கி குத்திட்டு அமர்ந்தவன்.. அவள் காதை நாடிப் போய்.. காதோரம்.. வன்மம் தெறிக்கும் குரலில், “எல்லாமே நாங்களே சொல்லிட்டா எப்படீஈ?? ப்போய் உன் தாத்தாக்கிட்ட கேளு… ஆஹ்.. அப்புறம்.. வள்ளியம்மை ம்மகன்.. உன் தாத்தா ராஜமாணிக்கத்தை கேட்டான்னு ம்மறக்காம.. சொல்லூஊஊ..”என்றவன்..இறுகிய முகத்துடன் எழுந்து கொண்டான்!! 

குழுமியிருந்த கூட்டத்தைக் கண்டு அகங்காரமான தொனியில்.. சுட்டுவிரல் காட்டி எச்சரிக்க நாடிய அந்தப் பெண்மணி, 

“ஏய்.. இந்த சிறுக்கிக்கு யாராவது உதவி பண்ணீஈஈங்க? ..மாறு கால்.. மாறு கை வாங்கிருவ்வேன்… ஜாக்கிரதை!! ..”என்று அன்று ராஜமாணிக்கம் உரைத்த அதே வாசகத்தை.. பார்வதியம்மாள் வாயிலாகக் கேட்டதும்.. நடுநடுங்கிப் போனது ஊர் பெருசுகளின் உள்ளம்!! 

அவள்.. அவனையே அப்போதும் காதலும், வலியும் சுமந்த விழிகளுடன் பார்த்திருக்க, வண்டியில் ஏறிய கொடூரர்கள் இருவரும் பயணமானார்கள் காரைக் கிளப்பிக் கொண்டு. 

தட்டுத் தடுமாறி எழுந்தவளுக்கு சித்தம் கலங்கி விட்டதோ? என்று பிறர் ஐயுறத்தக்களவுக்கு, தன்னை வெறுத்து ஒதுக்கி விட்டுச் செல்லும், தன் கணவனின் பின்னாலேயே.. அடிவாங்கிய குழந்தை தாயை நோக்கி ஓடுவது போல ஓடினாள் மென்னிலா. 

“மாமாஆஆ.. .. மாமாஆஆஆ.. என்னை விட்டுப் போகாதீங்க மாமாஆ.. நான்.. உங்க ஆண்டாளு மாமாஆஆ..”என்று கத்திக் கொண்டே செல்லும் வண்டியைப் பார்த்தவள் நேசத்துடன் கத்திக் கொண்டே ஓடி வர,

 ஸ்டியரிங்கில் கைகள் பதித்திருந்தவன் முகம் எந்த முகபாவத்தையும் காட்டவில்லை!! 

காதல் பித்தம்.. அந்நொடி.. அந்நொடி தான் தெளிந்தது போல ஓட்டம் தடைப்பட நின்றவள்.. தன்னை அவமானப்படுத்தி விட்டு, தாலியையும் பறித்து விட்டு செல்லும் அவனை.. வெறுப்பு கமழ… உணர்ச்சியற்ற முகத்துடன்… பார்த்தாள். 

அதில் அவனுக்காக துளிர்விட்ட நேசம் எள்ளளவும் இருக்கவில்லை!! உயிர் துறந்த உடலின் நிலை அது!! உணர்ச்சிகள் மறுத்துப் போன நிலை அது!! 

அவனது புழுதி கிளப்பிக் கொண்டு செல்லும் காரைப் பார்த்தவள், “இதைஐஐஐ… நான் மறக்க ம்மாஏஏட்டேன்.. என் வாழ்நாளோட கடைசி நாள் வரை மறக்கவ்வே ம்..மாட்டேஏஏன்.. இதுக்கு நீ அனுபவிப்ப பரிதீஈஈஈஈஈ!! ஒரு ப்பொண்ணோஓஓஓட காதல க்கொச்ச.. சப்.. படுத்திட்ட.. ஏல்ல.. நீ.. இதுக்கு அனுபவிப்ப!!!! ”என்று கத்தியவளுக்கு, கால்கள் தள்ளாட, தரையிலேயே இரண்டாக மடிந்து அமர்ந்து..வெடித்து அழுதாள் அவள். 

அவளின் அழுகை… இன்னொரு மாதுவின் அதே அழுகையை ஒத்திருக்க…. அவளின் அழுகையைக் கண்டு.. வானமும் பதறியதோ?? இல்லை அவள் மேல் ஊற்றப்பட்ட களங்கத்தை போக்க நாடியதோ?? 

வரண்ட அந்த பூமியில்.. அடுத்து ஊற்றிப் பெய்தது.. அகோரமான மழை!!! 

அந்த மழையில்.. ஊரார் என்னும் கோழைகள் தங்கள் கொட்டிலுக்குள் ஒதுங்கிக் கொள்ள.. ஈரத்தரையை கைகளால் அடித்து அடித்து… ஏமாற்றப்பட்ட வலியை தாள முடியாமல்… கதறிக் கதறி அழுதாள் மென்னிலா!! 

காதல் தானடி என் மீதுனக்கு? 

          [16]

 

தன் அரிசி ஆலையிலிருந்து… மதிய உணவுக்காக.. தன் கார் வண்டியில்… வீடு நோக்கி.. சரவணன் பயணித்துக் கொண்டிருந்த வேளை…. பாதி வழியில்.. எங்கேயோ கருக்கொண்ட மேகத்தினால்.. வானில் ஓர் அடர்ந்த இருள் பரவி… 

தெருவோரங்களில் நின்றிருக்கும் முருங்கை மரங்கள் கூட… அடிக்கும் பேய்க்காற்றுக்கு… ஆங்காரமாக ஆட, அடுத்த கணம்.. அடித்து ஊற்றிப் பெய்யவாரம்பித்தது மழை!! 

‘எங்கிருந்து பிடித்துக் கொண்டது இந்த கொடும் மழை?’என்று மனதுக்குள் சின்ன எரிச்சல் மீதூற எண்ணிக் கொண்டவன், 

தன் காரின்.. வைப்பரினால் கண்ணாடியில் விழுந்த.. பெருத்த பெருத்த மழைத் துளிகளைத்.. துடைத்துக் கொண்டே..

சரவணன் தன் முறுக்கேறிய கைத்தசைகளால் ஸ்டியரிங்கினை சுழற்றி… ஊர்க்கோயில் தெருப்பக்கமாக திருப்பி.. வண்டியை விட்ட போது, 

நடுத்தெருவில் யாரோ ஒரு பெண்… வண்டிக்கு வழிவிடாமல்.. வீம்புக்காக.. நடந்து சென்று கொண்டிருப்பது புரிந்தது அவனுக்கு. 

இரண்டு, மூன்று தடவைகள், ‘ஹாரன்’ அடித்துப் பார்த்தும், அந்த நாராசமான ‘ஹாரன்’ ஒலியில் கூட.. அந்தப் பெண்.. வழியை விட்டும் அகலாது இருக்கவே, சின்ன சீற்றம் இழையோட… 

‘காரின் ஜன்னல் வழியாக..இலேசாக தலை நீட்டி எட்டிப் பார்த்த போது.. அது.. அது அவனது ‘மென்னிலா’ என்பது புரிய, உள்ளுக்குள்.. இனம்புரியாத திடீர்க்கலக்கமொன்று தோன்றவாரம்பித்தது சரவணனுக்கு. 

‘அவளெப்படி இங்கே? அதுவும் கொட்டும் மழையில்? நடுத்தெருவில்?’ என்ற கேள்வியெழ, நிமிடமும் தாமதியாமல்.. 

சட்டென காரை விட்டும் இறங்கியவன், அடித்து ஊற்றிப் பெய்து கொண்டிருந்த மழையில்… ஓடிச் சென்று அவளது முன்னங்கைப் பற்றி, 

களேபரம் சிந்தும் தவிக்கும் விழிகளுடன், “நிலாஆஆ!!”என்று அழைக்க, திரும்பிப் பார்த்தாள் மென்னிலா!! 

ஆனால் அவளது முகத்தில், அவன் என்ன கண்டு கொண்டானோ? மனமெல்லாம் ஒரு வெறுமைத்தீ எழுந்து தகிக்கவாரம்பித்தது அவனை!! 

மென்னிலாவின் முகத்திலோ பிரக்ஞையே இல்லை!!ஏதோ தூக்கத்தில் எழுந்து நடப்பதைப் போல.. அவளது விழிகள்.. உணர்ச்சிகளேயற்று சோர்ந்து கிடந்தது!! 

ஆனால் சரவணனின் விழிகள்.. தன் உயிரினும் மேலான பெண்ணை.. ஆதி முதல் அந்தம் வரை பதற்றத்துடன் ஆராய்ந்ததோடு நில்லாமல், அவளது உடலியல் மாற்றங்களைக் கண்டு கொண்டதும்.. ஒரு வலி பட்டென்று எழுந்து இதயத்தை தாக்குவது போல இருந்தது.

நேற்று முற்பகல் பரிதி கட்டிய மாங்கல்யத்தோடு.. வீடு வந்திருந்தவளின் கழுத்து.. இன்றோ வெற்றுக் கழுத்தாக இருந்தது!! 

நாசித்துவாரத்தின் வழியேயும்.. இதழ்க்கடையோரமும் வழிவது தெரிந்தது இரத்தத் தடம்!! 

கூடவே.. கைகளிலே ஆங்காங்கே உராய்ப்பு!! … என எல்லாத்தையும் ஒன்று விடாமல் அவதானித்தவனின்.. மனம் ஏதோ செய்ய.. அவளது ஜீவனற்ற விழிகள் வேறு.. அவனை உயிருடன் கொன்றது!! 

‘ஏன் இவள் சாபம் கொண்ட அகலிகை போல கல்லாய் சமைந்து நிற்கிறாள்?’ என்ற ஐயம் பிறக்க, 

சற்றே உரத்த குரலில், “நிலாஆ..” என்று திரும்பவும் அழைத்தான் சரவணன். 

மென்னிலாவின் செவிகள் அடைபட்டு இருந்தனவோ?? மழைத்துளி ஓசையே கேட்காத போது, மழைத்துளியோடு இசைந்து வந்த சரவணனின் அழைப்பா அவள் செவிகளில் நிறைக்கக் கூடும்?? 

எதுவுமே பேசாது திக்பிரமை பிடித்தாற் போன்று நின்றிருக்கும் அவளைக் கண்டு.. இதயம் நின்று துடிக்க, அவளது இருகைச்சந்தினையும் பற்றி..வலிமையாக ஒரு உலுக்கு உலுக்கியவன், 

“நிலாஆஆஆஆ??” என்று மழையையும் விட உயர்ந்த தொனியில்.. அதட்டி அழைத்தான். 

அந்த உலுக்கலில் தான்.. சட்டென சுய உணர்வு பெற்ற மாதுவின் விழிகளுக்கு, முன்னாடி நின்றிருந்தவனின் முகத்தைக் காணும் முன்பு.. 

அவளது விழிகளில் பட்டது ‘வெள்ளை வேஷ்டி சட்டை’!!

அதைக் கண்டதும்.. தன்னை விட்டுச் சென்ற கணவன் தான்.. அவளது பிரிவைத் தாள மாட்டாமல்.. ‘அவளை அழைத்துச் செல்ல மீள வந்து விட்டான்’ என்று ஒரு தோற்றமயக்க எண்ணம் தோன்ற, 

கண்ணீர் உடைப்பெடுக்க, “மாமாஹ்.. வந்துட்டீங்களாஹ்?” என்ற வண்ணமே.. அவன் இடுப்பில் கையிட்டு.. அந்தப் பரந்த நெஞ்சில்.. சாய்ந்து.. இறுக்கிக் கட்டிக் கொண்டவள்… தேம்பித் தேம்பியழ ஆரம்பித்தாள். 

அவளது செய்கைகளின் காரணம் புரியாத சரவணனுக்கோ அவள் ‘மாமா’ என்றழைத்தது தன்னை அல்ல!! 

அவளது கணவனைத் தான் என்று இறுதிவரை புரியாமலேயே போனது!! 

அவளது கண்ணீருக்கான காரணமும், களங்கப்பட்ட மனத்துக்கான காரணமும் அறியாதவன்,பதறிப் போனவனாக, “என்னடா ஆச்சு?? நீ.. இப்படி அழுறதை பார்க்க முடியலடா.. என்னாச்சு நிலா.. சொல்லும்மா” என்று இளகிய குரலில் கேட்ட போது தான்… அது, ‘தன் தலைவனல்ல’ என்பது புரிந்தது அவளுக்கு!! 

அவனது இதயப்பக்கத்தில் தலை வைத்திருந்தவளுக்கு.. தற்போது ஒலித்த குரல்… கணவனை விடவும் வித்தியாசமானதாக இருப்பதைக் கண்டவள்…

சட்டென்று தலை தூக்கிப் பார்த்ததும்.. அங்கே..எதிர்பாராத முகமாக.. சரவணனின் முகம் இருப்பது புரிய அவளால் நிதர்சனதுக்கும், நிழலுக்கும் கற்பனை செய்து பார்க்க முடியாமல் போனது.

ஏற்கனவே சோர்வுற்றிருந்த மூளை.. இன்னும் குழப்பமடைந்து, விம்பங்கள் இரண்டிரண்டாகத் தெரிய.. அவன் மார்பிலேயே மூர்ச்சையுற்றாள் மென்னிலா. 

தன் மார்பில் மயக்கமானவளின் கன்னங்களில் தட்டியவாறு.. “நிலா.. நிலா.. இங்கே பாரு.. நிலாஆஆ?..”என்று அழைத்துப் பார்க்க, அவளது சித்தம் தெளியாததால் பதறிப் போனவன்… 

அவளை அநாயசமாக இரு கைகளிலும் தூக்கிக் கொண்டு காரை நாடிப் போய்.. பின்னாடி ஸீட்டில் கிடத்தி விட்டு.. வண்டியைத் தன்னில்லம் நோக்கி வேகமாக விடலானான் . 

போர்டிகோவில் வேகத்துடன் நின்ற காரிலிருந்து…. மருமகன் யாரோ ஒரு பெண்ணை கையில் தூக்கியவாறு.. உள்ளே வருவதைக் கண்ட சிவகாமியம்மாளுக்கு.. அந்தப் பெண்ணை உற்றுப் பார்க்கவும் தான் அந்தப் பெண்… தன் மகள் என்பதே புரிந்தது. 

பெற்ற தாயுள்ளம் அல்லவா? மகளின் நிராதரவான நிலை கண்டு.. உள்ளம் வெடவெடக்க, கண்களில் அனிச்சையாக நீர் கோர்க்க, 

“ஐய்யோ.. நிலா.. என்னாடியம்மா ஆச்சு உனக்கூஊ??..”என்று வாய்விட்டு கதறியவர், 

‘நேற்று திருமண கோலத்தில்.. புது ரோஜாப்பூ போல வந்து நின்ற மகள், இன்று வாடி வதங்கிய மலர் மாலையின் கோலத்தில் வந்து நிற்கக் கூடும்’ என்று எதிர்பார்த்திருக்கவேயில்லை. 

கூடவே வந்து நின்ற மஞ்சுவுக்கு.. தன் சின்ன எஜமானியம்மாளைக் காணவும்… முதலாளி விசுவாசத்தில் விளையும் பாசத்தில்.. இதயம் பாரமானது போல வலித்தது. 

ஈரம் சொட்டச் சொட்ட அவளைத் தூக்கிக் கொண்டு வந்து.. தன் மஞ்சத்தில் கிடத்திய சரவணன், அவசரம் மிகும் குரலில், 

“அ. அத்த.. அவளுக்கு ஒண்ணுமில்ல.. கொஞ்சம் மயங்கியிருக்கா அவ்வளவு தான்.. இப்போ எதுவும் என்கிட்ட கேட்காதீங்க.. ஏன்னா எனக்குமே என்ன நடந்ததுன்னு தெரியாது அத்த.. நீங்களும், மஞ்சுவும் சேர்ந்து.. ஈரமான அவ ட்ரஸை கழட்டி.. தலையை துவட்டி.. வேற ட்ரஸ் போடுங்க.. நான் உடனே… போய் டாக்டரை கூட்டியாரேன்..” என்று மொழிந்தவன், 

“நம்ம நிலாவுக்கு ஒண்ணுமில்ல.. ஒண்ணுமில்ல” என்று அத்தையை சமாதானப்படுத்தக் கூறினானோ, இல்லை பலவீனப்பட்டிருக்கும் தன் இதயத்தை திடப்படுத்திக் கொள்ளச் சொன்னானோ?? அது அவனுக்கே வெளிச்சம்!! 

அதன் பின்.. அங்கே மேற்கொண்டு நில்லாமல், டாக்டரை அழைத்து வர ஓடிப் போனான் சரவணன். 

மஞ்சுளா ஓடிச் சென்று வெந்நீர் எடுத்து வர, விழிகளிலே ஓயாத உவர்நீருடன், சிவகாமியம்மாளும்… சேர்ந்து… அவள் அணிந்திருந்த சேலையைக் கழற்றி… நிலாவின் உடலுக்கு தளர்வான வகையில்… இலகுவான கவுனொன்றை அணிவித்து.. ஈரத்தலையைத் துவட்டத் தொடங்கிய நேரம்.. உடம்பெல்லாம் நெருப்பில் சுட்டது போல காய்ச்சல் காயத் தொடங்கியது மென்னிலாவுக்கு. 

அந்த சூட்டின் தகிப்பைத் தாங்க மாட்டாமல் தாய், அவள் நெற்றிக்கு ஒத்தடம் வைக்கும் வகையில் புது வெந்நீர் எடுத்து வரச் சென்ற நேரம்.. மஞ்சுளாவுக்கோ.. அவளைக் காணக் காண ஆயாசமாக இருந்தது. 

மகாராணி போல வளைய வந்த அவளுடைய ‘சின்னம்மா’முகமெல்லாம் சோர்ந்து போய்… படுத்த படுக்கையாகி கிடப்பது… அவளுக்கும் கூட சொல்லொணா சோகத்தையே கொடுத்தது. 

மென்னிலாவின் முகத்தையே.. கண்ணோரம் கண்ணீர் துளிர்க்க அவள் பார்த்துக் கொண்டிருந்த நேரம் தான்.. நடுக்கூடத்திலிருந்து… உரத்த தொனியில்.. அவள் மேனியை கிடுகிடுக்கச் செய்த வண்ணம் கேட்டது கிழவனின் குரல்!!! 

“ம்மஞ்சூஊஊ..!!!”என்று அவர் அவள் பெயரை.. ஆங்காரமான தொனியில் அழைக்க இரண்டாம் முறை பெரியவர் அழைக்கும் முன்பாக, கை கால்கள் எல்லாம் வெளவெளக்க, 

“ஐய்யாஆ..”என்ற வண்ணம் பவ்வியமாக.. விரைந்து வந்து அவர் முன்னே நின்றிருந்தாள் மஞ்சுளா. 

பெரியவரின் விழிகளை ஏறெடுத்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது அந்தச் சின்னப் பெண்ணுக்கு!! 

அவரது ரௌத்திரம் கமழும் விழிகளில் ஓடிய உஷ்ணச்சிவப்பு தொண்டையில் அடைத்ததை விழுங்கச் செய்தது மஞ்சுளாவுக்கு!! 

அவரது கழுத்து நரம்புகள் புடைத்து வெளித் தெரியும் பாங்கே… ‘எல்லாமே இந்தப் பெரியவருக்கு தெரிய வந்திருக்கிறது’ என்பதை பறைசாற்றியது. 

ஆம், கிழவருக்கு, பேத்தி அவமானப்படுத்தப்பட்டது உட்பட, சரவணன் மென்னிலாவைத் தூக்கிக் கொண்டு சென்றது வரை.. எல்லாமே தெரிந்தே தான் இருந்தது. 

ஆனால், சரவணன், ‘மென்னிலாவை எங்கே தூக்கிச் சென்றான்?’ என்பது தான் தெரியவில்லை. அதை அறிய நாடி வீடு வந்தவர், பணிப்பெண் மஞ்சுவிடம் கடுங்கோபம் கொண்ட புலியாகவே நடந்து கொண்டார். 

அவளை உறுத்து விழித்தவர், “சரவணன் எங்கேஏஏ?? .. சரவணன் எங்கேஏஏடீஈ??..”என்று கேட்கக் கேட்க, அழுந்த வாய் மூடியவளாக, தரை பார்த்து அவள் குனிந்து நிற்க, 

“நான் தான்.. ன் கேக்.. கேக்க… கல்லு மாதிரி நின்னுட்டிருக்க?? எங்கேஏஏடீஈஈ அவன்??”என்று அவர் அதட்டிக் கேட்க, அந்த அச்சத்திலேயே.. பட்டென்று வந்தது பதில்!! 

“டா.. டாக்.. டாக்டரை கூட்டிவர.. வெ.. வெ.. ளியே போயிருக்காரு..”-திக்கித் திணறியே சொன்னாள் மஞ்சு. 

“எதுக்கூஊ?..”

“அ..அது..அது.. வ.. வந்து”- நாவு வரை வந்தது பதில்கள்!!

 வாய் திறந்து சொன்னால்.. ஏற்படப் போகும் விபரீதங்கள் பற்றி விளைந்த அச்சத்தின் காரணமாக…. கைகளை பிசைந்து கொண்டு நின்றாள் அவள். 

“கேக்குறேஏஏஏஏன்ல?” பற்களைக் கடித்துக் கொண்டு சூடாகியவர் அதட்டிக் கேட்க, தூக்கிவாரிப் போட்டது மஞ்சுவுக்கு. 

அதற்கு மேலும் உண்மையை மறைக்க முடியாமல்.. படபடவென்று அனைத்தையும் உளறிக் கொட்டி விட்டாள் மஞ்சு. 

‘மென்னிலா’ இங்கே வந்திருக்கும் செய்தி கேட்டு… உடம்பெல்லாம் எரிமலை சீற்றம் விரவிப் பரவ, 

சட்டென்று சூடாகியவர்… அவளை ரௌத்திரம் கமழும் விழிகளுடன் பார்த்த வண்ணமே.. தன் பேரனின் அறையை நோக்கி நடந்தார் மதம் கொண்ட ஒரு காட்டுயானைப்போல. 

அங்கே சரவணனின் மஞ்சத்தில் தூங்கிக் கொண்டிருந்த மென்னிலாவின் நிலையோ பெரும் பரிதாப நிலைக்குரியதாக இருந்தது. 

தூக்கத்திலும் கூட.. சரிவர உறங்க முடியாமல், கணவன் வந்து.. அவளது தாலியைப் பறிப்பது போன்ற அகோரமான துர்க்கனவுகள் தோன்ற.. அதை சகிக்க மாட்டாதவளின் துயிலும் கருமணிகள் அங்குமிங்கும் அசைந்தன.

 உள்ளுக்குள் ஏதேதோ அசம்பாவித இதயத்துடிப்பு எகிறல்கள் அதிகமாக.. தன் கழுத்தில் கையிட்டு.. கணவன் தாலி பறித்த அந்நொடி.. கழுத்தைப் பிடித்துக் கொண்டே பட்டென்று எழுந்தவள், 

‘வெறுங்கழுத்தை’ தொட்டுப் பார்த்துக் கொண்டே, ஆழ ஆழ பெருமூச்சுக்களை விட்ட போது தான்.. அந்நிகழ்வு தன்னை எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகவே புரிந்தது. 

 உடலின் வெப்பம் வேறு அவளை வாட்டியெடுக்கத் தொடங்கியது;கண்களில் நில்லாமல் வழிந்தது கண்ணீர்!! 

சுற்றிவர கண்களை சுழற்றிப் பார்த்தவளுக்கு.. அவள் எப்படி சரவணன் அறைக்கு வந்தாள்?? அதுவும் மாற்றப்பட்ட தளர்வான கவுனுடன்?? 

அப்போது தான் விழித்தவளின் சிந்தையில் சிறுகச் சிறுக ஞாபகம் வந்தது… கணவனென்று எண்ணி.. சரவணன் மார்பில் சாய்ந்தது!! 

சரவணன் தான், ‘இங்கே அழைத்து வந்திருக்க வேண்டும்?’ என்று தோன்றினாலும் கூட.. அவள் வீடு அந்நொடி அந்நியமாகப்பட்டது!! 

சரவணனின் பஞ்சு மெத்தை மஞ்சம் நெருஞ்சி முள்ளாகக் குத்தியது!! 

அந்த கணம் அவளே எதிர்பார்த்திருக்காத தருணத்தில்.. ஒரு முரட்டுக்கரம்.. பிடரிமயிரை இழுத்துக் கொத்தாகப் பிடிக்க, மீண்டுமொருமுறை அந்த குரூரியின் நினைவு வந்து போனது அவளுக்கு. 

ஆனால் பிடித்திருந்தது அந்தக் குரூரி அல்ல. அவளுடைய தாத்தா!! 

அவளது பிடரிமயிரைப் பிடித்து.. மஞ்சத்திலிருந்து தூக்கி.. நிலத்தை நோக்கித் தள்ளியவரின் விழிகள், சிவந்து பெரிதாகிப் போயிருந்தது. 

அவள் அவரை நிராதரவான முகத்துடன் பார்க்க, “ப்பொடட்க் கழுத!!! .. ******,****.. நாயே..”என்று ஒரு பேத்தியைப் பார்த்து.. தாத்தா சொல்லக் கூடாத தூற்றும் மொழிகளை அவர் நாக்கூசாமல் வெளியிட, காதுகளைக் கூடப் பொத்திக் கொள்ளத் தோன்றாமல் நின்றாள் மென்னிலா!! 

அந்த மொழிகள் எல்லாம் அவள் மனதை எள்ளளவும் கூட புண்ணாக்கவில்லை. 

‘ஆண்சுகம் தேடி.. நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தவள்’ என்று அந்தக் கொடூரியின் வாயிலாகக் கேட்டு, அதைப் பரிதியும் ஆமோதித்த பின், அந்நொடி செத்த மனம்.. செத்ததாகவே இருந்தது. 

அதனால் தாத்தாவின் வார்த்தைகள் அவள் மனத்தை பாதிக்கவேயில்லை. 

அவளது மென்மையான கன்னங்களில்.. ஆவேசமாக மாறி மாறி இடியென இறங்கி அறை வைத்தது அவருடைய முரட்டு உள்ளங்கைகள்!! 

“.. மான ரோசம் இருந்திருந்தாஆஆஆ.. இந்த வீட்டுக்கு வந்திருப்பீய்யாஆ?? .. உன் புருஷன்.. உன்னய விரட்டி விட்டுட்டான்ல? ஆத்துலயோ, குளத்துலேயே விழுந்து செத்திருக்கணும்டீஈஈ ந்நீயீஈஈஈ.. அதவுட்டுட்டு எந்த மூஞ்ச வைச்சுக்குட்டு இங்க வ்வ்வந்த??..”என்று கேட்டுக் கொண்டே திரும்பத் திரும்ப அடிக்க, அவள் கன்னம் வீங்கி.. 

இதழ்க்கடையோரம் காய்ந்த காயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வந்தது கடுஞ்சிவப்பு நிற இரத்தம்!! 

அவள் அப்போதும் பேசாமலேயே நின்றிருந்தாள்!! 

பெரியவர் தன் மேல் வைத்த நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டு.. ஒரு கெட்டவனின் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு சென்றதுக்கு.. ‘இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்’ என்று எண்ணியவளுக்கு மனம் இரணத்துப் போயிருந்தது!! 

ஆனால் உடல்??

 ஏற்கனவே காய்ச்சலில் நடுங்கும் உடலாயிற்றே அது?? அவரது ஒற்றை அறையைத் தாள மாட்டாமலேயே துணுக்குறத் தொடங்கியது. 

ராஜமாணிக்கத்தைப் பொறுத்தவரை.. ஓடிச்சென்று கல்யாணம் செய்தது ஓர் கௌரவக் குறைவு என்றால்.. அடுத்த நாளே வாழாவெட்டியாக வந்திருப்பது இன்னும் கௌரவக் குறைச்சல்!! 

ஒரு இரவு மட்டும் ஒரு பெண்ணை சுகித்த ஆண், மறுநாள் காலை விட்டுப் பிரிந்திருப்பது.. அவரளவில்.. மென்னிலாவின் பெண்மையில் ஒரு குறைபாடு!! ஆணை வசீகரிக்கத் தெரியாத.. ஒரு நிலைப்பாடு!! என்றே எண்ணியும் கொண்டவருக்கு.. உண்மை காரணம் அப்போது தெரிந்திருக்கவில்லை!! 

ராஜமாணிக்கத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்த வேண்டும், பழிவாங்க வேண்டும் என்று இந்த இழிசெயலை செய்த பரிதி மட்டும்.. ராஜமாணிக்கத்தின் இந்தக் கோரமான செயலைக் கண்டிருப்பின்.. 

‘பேத்தியை அடித்தால் தாத்தாவுக்கு வலிக்கும்’ என்று கற்பனைக் கோட்டைக் கட்டியது எத்துனை பெரும் பிழை?’ என்று கண்டு கொண்டிருப்பான்!! 

ஆனால் அதைக் காணாமல் போனது அவனது துரதிர்ஷ்டம்!! 

வெந்நீருடன் வந்த சிவகாமியம்மாள், தந்தையின் கோரச்செயல் கண்டு, வெந்நீர் பாத்திரத்தை தரையிலேயே நழுவ விட்டவராக, 

நெஞ்சில் அறைந்து கொண்டே ஓடி வந்து, “ஐய்யோ.. அப்பாஆ… அவளே முடியாம இருக்காய்யாஆ.. .. பாவம்ப்பா விட்டிருங்கப்பா..”என்று கண்ணீர் மல்க, கெஞ்ச, சிவகாமியம்மாளின் கன்னத்துக்கும் சேர்ந்து விழுந்தது அடி!! 

“ந்நீஈஈ வ்வளர்த்த வ்வளர்ப்பு தான்டீஈஈ.. இந்தளவு.. தூரத்துக்கக்கூஊ… வ்வந்து நிற்குது??”என்று எகிறியவாறு மறு அறை.. அவருக்கும் விழவே செய்தது!! 

கொண்டவனும் கைவிட,உறவினர்களும் கைவிட.. இனி என்ன தான் இருக்கின்றது வாழ்க்கையில்?? 

காதல் தந்த நம்பிக்கைத் துரோகத்தின் வலியில்.. கொடுரத் தாத்தனின் கைகளில்.. இறக்கவும் கூட சித்தமாகியிருந்தாள் அந்த அபலைப் பெண்!! 

தன் மகளைத் தள்ளி விட்டு.. பேத்தியை நாடி வந்த அந்த அரக்கக் குணம் படைத்த கிழவன்.. பேத்தியைக் கால்களால் எட்டி உதைத்து.. அவளுக்கு தாறுமாறாக அடிக்கவும் செய்தார். 

“வ்வெளியே த்தலைகாட்ட ம்முடியலடீ.. ஓடுகாலி சிறுக்கீஈஈ.. இப்போ வ்வாழாஆ.. வெட்டியா வந்து.. இன்னும் என் குடும்ப கௌரதய.. கெடுக்குறீய்யேஏஏ.. … உன்னய அன்னைக்கே வெட்டி பொலி போட்டிருக்கோணும்…பரவாயில்ல இன்னைக்கு அத செஞ்சிடுறேன்”என்று கத்தியவர், மஞ்சுவும், சிவகாமியம்மாளும் தடுக்க, தடுக்க 

சரவணனது அறைச் சுவற்றில் இருக்கும் பழங்கால வாளை உருவி.. அவளது மென்மையான கழுத்தை நோக்கிக் கொண்டு செல்ல.. 

கண்கள் மூடி.. மூச்சை ஆழ உள்ளிழுத்த வண்ணம்.. தான் செய்த பிழைக்காக சாவை ஏற்கத் தயாராக நின்றாள் அவள்!! 

ஆனால் அப்படியேதும் அசம்பாவிதங்கள் நிகழாமல், தாத்தாவுக்கும், பேத்திக்கும் இடையில் வந்து நின்ற சரவணன்.. தன் கைகளின் வாள் முனை கீறி.. இரத்தம் வழிய வழிய அதைப் பிடித்தபடி நின்றான். 

அவனோடு.. இல்லம் நாடி வந்த டாக்டர்.. அங்கு நடப்பவற்றைப் பார்த்து பதைபதைக்க நின்று விட, மஞ்சுவினதும், தாயினதும் நிலையோ தலைகீழ்!!. 

விழிகள் சிவக்க தாத்தாவை எரித்து விடுவது போலப் பார்த்த சரவணன், “தாத்தாவை அடிச்சிட்டான் பேரன்னு ஊர் முழுக்க சொல்ல வைச்சிடாதீங்க.. கொஞ்சமாவது மனுஷத்தன்மையோட நடந்துக்குங்க தாத்தாஆஆ..”என்று தாத்தாவை எச்சரித்தவன், 

ஒவ்வொரு வார்த்தையாக சற்றே அழுத்தம் கொடுத்து, ‘எனக்க்கூஊ.. ந்நிலாஆஆ.. வ்வேஏஏணும்’என்று சொல்ல.. அந்த கண்களில் என்ன தெரிந்ததோ?? 

கிழவனின் வாளேந்திய கைகள்.. மெல்ல கீழிறங்கியது!! 

மாமனின் கடைசி வார்த்தையில் சரிவரக் கவனம் பதிக்காத மென்னிலாவோ.. சரவணனைத் தள்ளி விட்டு, தாத்தா முன்னிலையில் போய் நின்றவளாக, 

ஈனஸ்வரத்தில், “விடுங்க மாமாஹ்.. அவரை விடுங்க.. நான் பண்ணது தப்பு தான்.. ஒரு கேடு கெட்டவனை காதலிச்சேனில்லையா?.. அவனை நம்பி… உங்க எல்லாரையும் தூக்கியெறிஞ்சுட்டு அவன் பின்னாடி போனேனில்லையா?? எனக்கு இதுவும் வேணும்.. விடுங்க மாமா…. என்னை விடுங்க”என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லவாரம்பிக்க.. அவளுடைய மனோநிலையைக் கண்டு உள்ளூற வலித்தது அவளுக்கு.

தாத்தா தன்னை முறைத்துப் பார்ப்பது அறிந்தும்.. அதற்கு அஞ்சாமல்.. மென்னிலாவின் விழிநீரைத் துடைத்து விட்டவனாக, 

“அப்படியெல்லாம் இல்லைடா.. அவனை நம்பினது உன் தப்பில்லை.. உன்னய நம்ப வைச்சான் பாரு?? .. அது தான் அவன் பண்ண பெரீய்ய..தப்பு..பாரு உடம்பெல்லாம் கொதிக்குது..” என்றவன், 

அவளது சுடும் இதழ்கள் மீது, விரல் வைத்தவனாக ஒலியெழுப்பி, 

“உஷ்ஷ்.. அமைதியாக இரு..எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்”என்று தன் முறைப்பெண்ணை சமாதானப்படுத்தியவன், 

அவளை மீண்டுமொருமுறை அலேக்காகத் தூக்கி வந்து.. மஞ்சத்தில் படுக்க வைத்தவன், “டாக்டரைத் தவிர.. எல்லாஆஆரும் வ்வெளியே ப்போகலாம்”என்று அழுத்திக் கூற… அந்த முரட்டு தாத்தனும் கூட.. தோள்புஜங்கள் ஏறி இறங்க.. மூச்செடுத்துக் கொண்டே வெளியேறலானார். 

எல்லாரும் வெளியானதும் ஒரு நிம்மதி பிறக்க, மெல்ல கண்களை மூடிக் கொண்டாள் மென்னிலா. 

அவளது வீங்கிய கன்னம் காணக் காண.. உள்ளே.. ஏதேதோ செய்தது சரவணனுக்கு!! 

அவளைப் பரிசோதித்த டாக்டர், சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்தவராக, “ரொம்ப ஜூரம்.. இந்த மருந்த வாங்கிக் குடுங்க.. ப்ளட் டெஸ்ட் கண்டிப்பா செக் பண்ணி பார்த்துர்றது நல்லது.. கொஞ்சம் அவங்களுக்கு நடக்கமுடியுமானதும் கிளினிக் கூட்டி வாங்க.. இப்போ நல்லா தூங்கட்டும்..”என்றவர்,

 அவர்களது குடும்ப விவகாரத்தில் தலையிடவில்லையாயினும் மனிதாபிமானம் கொண்டவராக.. 

வாள் கீறுபட்ட.. சரவணனின் உள்ளங்கைக்கு மருந்திட்டு விட்டு, அதற்கென்று தனி.. ஃபீஸ் வாங்காமலேயே சென்று விட்டார். 

ஆழ்ந்த உறக்கத்திற்கு சொற்ப நேரத்திலேயே மென்னிலா சென்று விட்டாள் என்பதைக் காட்டிக் கொண்டிருந்தது தனங்கள் ஏறி இறங்க சீராக வந்து கொண்டிருந்த அவளுடைய மூச்சுக் காற்று!! 

அவளை விட்டும் அங்குமிங்கும் நகராமல்.. அவளது பக்கத்திலேயே ஏக்கத்துடன் அமர்ந்திருந்தான் சரவணன்.

டாக்டரை அழைத்து வரும் வழியில்.. தன் நெருங்கிய வலது கை மூலமாக.. ஊர்க்கோயில் தெரு முன்பாக நடந்த, பழிவெறியாட்டத்தை… அறிந்தே வந்திருந்தவனுக்கு.. மனம் ஒருநிலையில் நில்லாமல் தகித்துக் கொண்டிருந்தது. 

 படிப்பை முடித்து வீடு வந்தவளிடம், ‘வேலை வேலை’ என்று சுற்றித் திரிந்திருக்காமல், வேலையை எல்லாம் மூட்டைக் கட்டி ஒதுக்கி விட்டு, உள்ளத்தை உள்ளவாறு மனம் திறந்து காட்டியிருந்தால்… அவனது காதலை ஏற்று.. இந்நேரம் அவள் தனக்கு சொந்தமாகியிருப்பாளோ? 

என்று நினைக்கும் போதே.. தன் தோல்வியை எண்ணி.. அவமானமும் மிகுந்தது அவனுக்கு!! 

விடிய விடிய அவள் பக்கத்திலேயே அமர்ந்திருந்த சரவணனுக்கு… நடுநிசியில் இலேசாக உறக்கம் வந்து கண்ணை சுழற்ற.. மஞ்சத்தின் அருகே அமர்ந்திருந்த நிலையிலேயே விழிகள் அயர்ந்தான் சரவணன்!! 

நடு இரவில் காய்ச்சல் சற்றே குறைந்து.. தூங்க முடியாமல் விழித்துக் கொண்டவளுக்கு.. நேற்றிரவு கணவனின் மார்பணைப்பில்.. கைவளைவில்..அதுவே சுவர்க்கம் என்று கொண்டு.. உலகம் மறந்து துயின்ற ஞாபகம் வந்தது. 

அவனுக்கும் அப்படித் தான் இருக்குமா இங்கணமும்?? இந்நேரம் இந்த இரவில்… அவளோடு நடந்த கூடலை எண்ணிய படி.. விரகதாபத்தில் ஏங்கித் தவித்துக் கொண்டிருப்பானா அவளது தலைவன்?? 

எல்லாமே நடிப்பு!! காதலிக்கப்படவில்லை என்பது தெரிய மாட்டாத என்னே பக்காவான நடிப்பு?? 

வலி.. இதயம் முழுவதும் ஒரு வலி.. கத்தியின்றி, இரத்தமின்றி.. அவள் இதயத்தை பெயர்த்தெடுத்தது போன்ற தாங்க மாட்டாத ஓர் வலி எழுந்து பரவ, கண்ணிலிருந்து நில்லாமல் உற்பத்தியாகிக் கொண்டே இருந்தது கண்ணீர்!!.. 

வலி தாங்க மாட்டாமல்.. நெற்றியில் கை வைத்துக் கொண்டு, கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டு, சத்தம் வராமல் இருக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு… 

அழுதவளின் விம்மல் ஒலியில்.. அந்தக் கேவலில்.. சட்டென்று விழிப்புத் தட்டிய சரவணனுக்கு முறைப்பெண் அழும் காரணம் புரியவில்லையாயினும் சோகம் குடிகொண்டது.

அவளைப் பார்த்து சற்றே பதறியவனாக, “என்னாச்சுடா நிலா.. உடம்பேதும் வலிக்குதா??..”என்று சொல்ல அவள் சொன்னாளே ஓர் பதில்!!

 அந்த பதிலில் பரிதியைக் கொல்ல வேண்டும் என்ற வெறி மிகுந்தது அவனுக்கு!! 

அப்படி என்ன சொன்னாள் அவள்? 

அழுதழுது ஞமஞமத்துப் போன குரலில், “ம்ஹூஹூம்.. மனசு வலிக்குது மாமா”என்றது மட்டும் தான் தாமதம், 

அவளை நெஞ்சோடு அள்ளி அணைத்துக் கொண்டவன், அவளது முதுகை தடவிக் கொடுத்துக் கொண்டேயிருக்க, அவனுக்கு என்ன சொல்லித் தேற்றுவது என்று புரியவில்லை. 

அவளோ ஒரு தோள் கிடைத்த நிம்மதியில்.. அவனை ஓர் தந்தையாகவே கொண்டவள்.. மனதில் இருக்கும் கவலைகளை எல்லாம் கொட்டி, தேம்பித் தேம்பியழுதாள். 

ஒரு கட்டத்தில் முயன்று தன் அழுகையை நிறுத்திக் கொண்டவள், அவன் நெஞ்சாங்கூட்டில் இருந்து தலையை எடுத்து, சரவணனின் முகம் பார்த்தவளாக, 

இடையிடையே பெரும் பெரும் கேவலுடன், “மாமா.. வள்ளியம்மை.. ஹ்… ன்னு யாராவதுஹ்… உங்களுக்கு.. தெரியுமா.. மாமா?”என்று கேட்க, “இல்லை”என்பதைப் போல தானாகவே ஆடியது அவன் தலை. 

அவள் தொடர்ந்து சொன்னாள், “என்.. தாஹ்… தாலியை அவ.. அவன்.. பறிக்கும் போது… “நா.. நாஹ்… வள்ளியம்மை மகன்னு சொன்னான்”.. நம்ம குடும்பத்துக்.. கும்ஹ்.. வள்ளியம்மை குடும்பத்.. துக்கும்ஹ்.. ஏஹ்.. தாஹ்.. வதுஹ்.. பகையாஹ் மாமாஹ்?”என்று கேட்க மெல்ல இடுங்கியது சரவணனின் புருவங்கள். 

“வள்ளியம்மை”-இந்தப் பெண் யாராக இருக்கக் கூடும்?? அதற்கும், பரிதியின் செயலுக்கும் ஏதாவது தொடர்புகள் இருக்கக் கூடுமோ? என்ற பெருத்த யோசனைகள் ஓடலாயிற்று அவனுக்கு. 

ஆனால், அறையினுள் நடப்பதை எல்லாம்.. ‘ஒட்டுக் கேட்க வேண்டிய தேவையே’ இன்றி.. 

இன்னும் உறக்கம் வராமல் ஹாலில் குறுக்கும், நெடுக்குமாக நடைபயின்றவாறு.. நின்று கேட்டுக் கொண்டிருந்த தாத்தாவின் செவிகளில், “வள்ளியம்மை மகன்” என்ற வாசகம் கேட்டதும்.. 

இதுவரை இடிமுழக்கம் கேட்டாலும் அஞ்சாத ஆள், நெஞ்சமெல்லாம் விதிர் விதிர்த்துப் போய் நின்று விட்டார். 

‘என்ன?? பரிதி வள்ளியம்மையின் மகனா? அவர் அறிந்த ஒரே வள்ளியம்மையின் மகனா? ’என்ற கேள்வி பிறக்க, ஊர்க்கோயில் நடந்தது அனைத்தும் எதற்காக.. என்ற காரணம்.. உள்ளங்கை நெல்லிக்கனி போல புலப்பட்டு விட.. திகைப்பூண்டை மிதித்தாற் போன்று ஆனார் கிழவர்!! 

‘பரிதிவேல் வீரன்’ பிறந்து வளர்ந்ததில் இருந்து சிறுத்தோப்புக் காரன் அல்லன்!! 

மாறாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் சிறுத்தோப்பு அல்லது சிறுத்தோட்டம்’ என்று இரு பெயர்களாலும் அழைக்கப்படும் கிராமத்துக்கு வந்து குடியேறியிருந்தான். 

மன்னார் மாவட்டத்தில் எங்கு திரும்பினும், இந்த இரண்டு வருடங்களாக “ பரிதி மில்ஸ், பரிதி டிராவல்ஸ், பரிதி ஃபார்ம்ஸ்.. பரிதி க்ரூப்ஸ் ஆப் கம்பனீஸ்” என எல்லாவிடமும் ‘பரிதி பரிதி’ என்று ‘பரிதி நாமம்’ ஜெபிக்கப்பட்டதில், வாலிப வயதிலேயே உயர்ந்திருக்கும் ‘பரிதிவேல் வீரன்’ மேல் ஒரு மரியாதை இயற்கையிலேயே தோன்ற, 

அவனது குலம், கோத்திரம் பற்றி அறியாமலேயே.. தேடிப் பார்க்காமலேயே அவனுடன் வியாபாரம் செய்யவும் ஒத்துக் கொண்டார் தாத்தா. 

குலம், கோத்திரம் அறியாத ஒரு ஆடவனைத் தான் பேத்தி கல்யாணம் செய்து வந்த போது.. அதனால் கொலைவெறி மிகும் அளவுக்கு கடுப்பாகவும் செய்தார் பெரியவர். 

பரிதியைப் பற்றி.. அவன் ‘வள்ளியம்மையின்’ மகன் என்பது பற்றி, அவனது குரோதம் பற்றி, பழியுணர்ச்சி பற்றி.. முன்னாடியே தேடிப் பார்த்து.. அறிந்து வைத்திருக்காதது அவர் பிழையோ?? 

எங்கே பிழையிருக்கிறது என்பதை.. எந்நொடி அறிந்து கொண்டாரோ.. அதன் பிறகு.. மென்னிலாவிடம் கடுமையாக நடந்து கொள்ளும் போக்கு மாறிப்போனது அவரிடமிருந்து!! 

அதற்காக வெளிப்படையாக கரிசனை காட்டினார் என்று சொல்லவும் முடியாமல்.. அவளை துன்புறுத்தாமல் நடந்து கொள்ளலானார் ராஜமாணிக்கம்!! 

இப்படியாக ஒரு வாரம் கழிந்து போக, றுஹூணு கேம்பஸில் இருந்து பரீட்சை பெறுபேறுகளும் வெளியாகி.. அதில் முதல்தரம் வாங்கியிருந்தவளுக்கு.. ‘இடைக்கால விரிவுரையாளராக’ பணியாற்றும் நல்வாய்ப்பும் கிடைத்தது. 

ஆனால் கொஞ்சம் பிரளமயாகவே கழிந்த அந்த ஒரு வாரத்தில்.. பேத்தி லண்டன் செல்ல டிக்கெட், விசா என அனைத்தும் கனகச்சிதமாக ஏற்பாடு செய்தவர், வெண்ணிலாவை இரவோடிரவாக.. யாரும் அறியாமல்.. 

குறிப்பாக.. பரிதி.. ‘மென்னிலா எங்கிருக்கிறாள்?’ என்பதை அறிய நேராத வண்ணம்… லண்டன் அனுப்பி விடவே நாடினார். 

ராஜமாணிக்கத்தின் திட்டம் தெரிய வந்ததும்.. மென்னிலாவை திரும்ப ஒருமுறை பிரிய மனமற்று, தன்னுடனேயே அவளை வைத்துக் கொள்ள ஆசை கொண்டிருந்த சரவணன் எவ்வளவோ மறுத்துப் பேசியும், 

ரொம்ப ரொம்ப திட்டவட்டமான குரலில், “இந்த விஷயத்துல என் முடிவு தான் இறுதியா இருக்கணும்.. இனி அவள் இங்கே இருக்கக் கூடாது.. லண்டன் போகட்டும்.. அங்கே அவ படிப்புக்குத் தகுந்த வேலை நான் ஏற்பாடு பண்ணியிருக்கேன்.. அங்கே வேலை பார்த்துக்கிட்டே.. சுதந்திரமா இருக்கட்டும்!! இங்கே நான் சொல்லும் போது வந்தா போதும்!! ”என்று விட… தாத்தா செய்தால் ஒரு காரணம் இருக்கும் என்று அமைதியாகிப் போனான்!! 

*****

அன்றிரவு லண்டன் போனவள் தான், தாய் சுகயீனமுற்றிருப்பது கேள்விப்பட்டு.. இரண்டு வருடங்களுக்குப் பிறகு தன் தோழனுடன் மீண்டும் வந்தவள்… திரும்பவும் ஒரு முறை ஊழ்வினையின் பக்கம் சிக்கிக் கொண்டாள்!! 

ஆனால் மெய்யாகவும் இம்முறை ஊழ்வினையின் பக்கம் சிக்கிக் கொண்டது தகிக்கும் மென்னிலவா?? குளிரும் சூரியனா?

காதல் தானடி என் மீதுனக்கு? 

(பதில் விரைவில் நவில்வாள்).. 

 

3 thoughts on “காதல் தானடி என் மீது உனக்கு!-15&16 (விஷ்ணுப்ரியா)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top