கதவு திறந்து விட்டது மலர்விழிதான். கதவின் வாசலில் தள்ளாடி நின்ற கேசவனை பார்த்ததும், அவளது மார்பு கூட்டுக்குள் இருந்த இதயம் சுக்கு நூறாய் உடைந்து போனதை போல வலி உண்டானது . அவள் கை விரல்கள் நடுங்கியது . அவன் கண்கள் சிவந்து, தலைமுடி கலைந்து . மதுவின் அறிந்திருந்த மதுவின் வாசம் அவனது நாசியிலிருந்து வெளி வந்தது.
மலர்விழி அசையாமல் நின்றாள். அவளது கண்களில் மெல்ல மெல்ல கண்ணீர் வழிந்தது.
அவள் முன்னே தள்ளாடி நின்றவன் “நீ எதுக்குடி இங்க வந்த? உன்னை யாரு என் வீட்டுக்குள்ள வரச்சொன்னது? என் நெஞ்சுல கத்தியால குத்தி ரத்தம் வரவச்சிட்டு போனவ, என் முன்னாடி வந்து நிற்குற?” அவன் கர்ஜித்த குரலில், அவள் திடுக்கிட்டு ஒரு அடி தள்ளி நின்றவளுக்கு பேச முடியாமல் வார்த்தைகள் வராது தொண்டையில் சிக்கிக் உதடுகள் துடிக்க “ஏன் இப்படி மாறிட்டீங்க கேசவ் ” என்று அவள் பதறி அவனது கையை பிடிக்க போனாள்
“சீ எ.என் கையை தொட உ.உனக்கு உரிமை கிடையாதுடி” என்று அவள் கையை வேகமாக தட்டி விட்டு தள்ளாடி சுவற்றில் மோத போனவனை எங்கே கீழே விழுந்து விடுவானோவென்று அச்சத்தில் “கேசவ்” என்று பரிதவிப்போடு அவனை தாங்கி பிடித்தாள் மலர்விழி
“வி.. விடுடி” என்று அவளிடமிருந்து திமிறி நின்ற திடகாத்திரமான ஆண்பிள்ளையை பலவீனமானவளால் தாங்கி பிடிக்க முடியாமல் தடுமாற இருவரும் சேர்ந்து தரையில் விழுந்தனர்.
அவளது கழுத்திலிருந்த தாலி அவன் நெஞ்சை முட்டியது. ஆனால் அவன் கவனம் தாலியில் விழவில்லை .. அவன் மனதில் இருந்தது எல்லாம் பழைய காயம் மட்டுமே ஆறாத ரணமாக முளை விட்டு கிடந்தது
“ஏ.ஏய் என் மேல ஏன்டி விழுந்த ராட்சசி என் வாழ்க்கையை சீர் குலைக்க வந்த பிசாசு நீ என்கிட்ட இருந்து எழுந்து போடி” காட்டு மிராண்டியாய் மாறினான் அவனுக்கு நிதானம் துளி கூட இருக்கவில்லை.
“நீ.. நீங்க தான் என் மேல விழுந்து இருக்கீங்க கேசவ் நீங்க தான் எழுந்திரிக்கணும்” என்று மூச்சு விட சிரமப்பட்டு கட்டுமரம் போல உடம்பின் பாரம் தாங்கி பிடிக்க முடியாமல் தவித்தாள் பெண்ணவள்
அவனோ உன்மேல நானா என்று இதழை சுளித்தவன் கண்ணை அகல விழித்து அவளை பார்த்தவன் தான் அவள் மேல படர்ந்து கிடப்பதை கண்டு நெருப்பை தொட்டது போல அவள் மேல் இருந்து எழுந்திருக்க கையை ஊன்றி எழுந்தவன் போதை மயக்கத்தில் அவள் அவள் மார்பில் சரிந்து அவள் தேகத்தை பார்க்கமல் அடுத்த நொடி எழுத்து டைல்ஸ் தரையில் உட்கார்ந்து “எ.என் கீர்த்தி என்னை விட்டு போய்ட்டா அவ எனக்கு வேணும்டி.. என் தேவதை என்னை மாமா மாமான்னு என் அழகி சுத்தி சுத்தி வருவா தெரியுமா அவ முகம் பார்க்க முடியாம என்னால தூங்க முடியலடி இப்ப கூட என் நெஞ்சுக்குள்ள இருக்கா அவ இல்லாததை என்னால தாங்கிக்க முடியல” என்று அம்மா இல்லாத குழந்தை போல ஏங்கி அழத்துவங்கி விட்டான்.
“கேசவ் அழாதீங்க காலம் யார் கையிலும் இல்லை” என்று அவன் பக்கம் சென்றவளை “பக்கத்துல வராதேடி அடிச்சுருவேன் மெத்தையில் நானும் என் மகளும் தான் தூங்குவோம் நீ நீ எங்க அறை பக்கம் வந்திடாதே ” என்று விரல் நீட்டி எச்சரித்தவன் அவன் பக்கம் இருந்த சோபாவை பிடித்து எழுந்தவன் தள்ளாடி கொண்டு தன்னுடைய அறைக்குள் சென்றான்
மெத்தையில் தன் பாச மகள் டெடி பியர் டாலை அணைத்தபடி உறங்கி கொண்டிருந்தாள் தியா.
“ஜிஞ்சு குட்டி அப்பா வந்துட்டேன்” என்று மகள் அணைப்பிலிருந்து பொம்மையை எடுத்து விட “ப்பா வந்துட்டீங்களா” என்று குழந்தை தூக்க கலக்கத்தில் தந்தையை அணைத்து கொண்டது தியா. மகளின் நெற்றியில் முத்தமிட்டு உறங்க ஆரம்பித்தான் கேசவன்.
கீர்த்தி கேசவன் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது அறிந்து கொண்ட மலர்விழிக்கு மீண்டும் தன்னவன் மனதில் இடம் கிடைக்காது என்ற கவலையெல்லாம் அவளுக்கு எள்ளளவும் இல்லை. குடிபோதைக்கு அடிமையாகி கிடப்பவனை அதிலிருந்து மீட்க வேண்டும். தியாவுக்கு தாய் இல்லை என்ற குறை தெரிய கூடாது என்பது மட்டுமே அவள் மனதில் ஓடி கொண்டிருந்தது
கண்ணீரை துடைத்து கொண்டு எழுந்து சென்று அறைக்குள் பார்க்க தியா கேசவன் வயிறில் கால் போட்டு மார்பில் சாய்ந்தபடி குட்டி இதழ் விரித்து உறங்கி கொண்டிருந்தது. கேசவனோ மகளை அடைகாக்கும் கோழி போல அணைத்து கொண்டு உறங்கி கொண்டிருந்தான்.
மலர்விழிக்கு தூக்கம் கண்ணை சுழட்டியது சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தாள்.. கடிகாரம் மணி பனிரெண்டை காட்டியது அறைக்குள் வரக்கூடாது என்று மிரட்டி இருந்தானே இப்போது எங்கே படுப்பது என்று கவலையில் நின்றிருந்தாள்
“அழகி..! அழகி..!” என்று கேசவன் தூக்கத்தில் உளற மெதுவாய் அவன் பக்கம் மெதுவாய் நடந்து வந்த மலர்விழியோ அவன் விழித்திருக்கிறானோவென்று அவன் முகத்தை பார்த்தாள். போதை மயக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாலும் அவன் உதடுகள் அழகி என்று முணுமுணுத்துக்கொண்டு இருந்தது . ஆனால் அவன் கீர்த்தியைதான் அழகி என்று அழை த்திருக்கிறான் போலும் என்ற மெல்லிய சிரிப்புடன் காற்றில் ஆடும் அவன் சிகையை மெல்ல தடவி கொடுக்க அவனது உளறல் நின்று போனது.
“அம்மாடி மலரு தியா குட்டி நடு ஜாமத்துல எழுந்து உட்கார்ந்து அம்மா அம்மானு அழுக ஆரம்பிச்சுடுவா கொஞ்சம் பார்த்துக்கோமா ரொம்ப அழுதானா என்னை கூப்பிடு” என்று மகேஷ்வரி கூறியது மலர்விழிக்கு நினைவு வர “நான் இந்த அறையை விட்டு போக மாட்டேன் அத்தை அவர் எழுந்து என்னை திட்டினாலும் பரவாயில்லை.. என்று குழந்தையின் மறுபுறம் சென்று உட்கார்ந்தபடியே கண்ணை மூடி அமர்ந்து கொண்டாள் மலர்விழி.
அவளது கடந்த கால வாழ்க்கையில் தேவைக்கு தன்னை பயன்படுத்தி சக்கையாய் பிழிந்து காயப்போட்டதெல்லாம் அவள் கண் முன்னே நிழல் ஆடியது. கண்ணீர் குளம் கட்டியது மலர்விழிக்கு.. உறக்கம் வரமாட்டேனென்று அடம் பிடித்தது. நீ இப்போ ஒரு குழந்தைக்கு அம்மா காலையில் எழுந்து அவளுக்கு உணவு தயாரிக்கணும்.. உன்னை நம்பி குடும்ப பொறுப்பை கொடுத்திருக்கும் மாமியாருக்கு பணிவிடைகள் பார்க்கணும்.. தூங்கு மலர் என்று அவளுக்குள் சொல்லி கொண்டாள். பாலைவனத்தில் இருந்தவளுக்கு இப்போது மலர்சோலையில் ஒரு இடம் கிடைத்து விட்டது.. ரோஜாவாய் இருக்கும் கணவன் தன் பேச்சால் முள்ளாய் குத்துவான் ஆனால் ரோஜாவைதன்னால் வெறுக்க முடியாது! தன்னவனை ஏமாற்றி விட்டு சென்றத்துக்கு தண்டனை கொடுக்கிறான் என்று மனது ஏற்றுக்கொண்டாலும் நீதான் பழைய வாழ்க்கையில் நரக வேதனையை அனுபவித்து விட்டாயா என்று அவள் இன்னொரு மனம் கூற இல்ல ..! இல்ல..! என் கேசவ் கொடுக்கும் தண்டனையை நான் தங்கிப்பேன் என்று தன்னை தேற்றி கொண்டு கண்ணை மூடினாள் மலர்விழி
அடுத்த நாள் அதிகாலையில் மெல்ல கண் விழித்தாள் மலர்விழி.. நல்லவேளை கேசவன் கண் விழிக்க வில்லை.. குட்டி பாப்பாவும் இன்னும் உறங்கி கொண்டிருந்தது.
“ம்மா” என்று சிணுங்கியை குழந்தையின் முதுகில் தட்டி கொடுக்க உறங்கி விட்டது தியா
தந்தைக்கும் மகளுக்கும் தாயாக மாறினாள் மலர்விழி.
கோலி குண்டு கண்கள், குண்டு கன்னம். பால் மனம் மாறாத குழந்தையை கண் எடுக்காமல் பார்த்திருந்தாள் மலர்விழி
கேசவன் உடலை அசைக்க தான் மெத்தையில் இருப்பதை கண்டால் ஆட்டம் அடிவிடுவானே என்று பயந்து அவசரமாக மெத்தையை விட்டு இறங்கி தான் கொண்டு வந்த பேக்கிலிருந்து சேலையையும் ரவிக்கையையும் எடுத்துக்கொண்டு குளியறைக்குள் ஓடிவிட்டாள்
குளித்து விட்டு சேலையை அங்கேயே கட்டிகொண்டு வெளியே வந்தாள்.. தான் ரவிக்கை பாவாடையுடன் அறைக்குள் வந்து சேலையை கட்டும் நேரம் கேசவன் கண் விழித்து விட்டால் கையில் அருவாள் இல்லாத கருப்ப சாமியாய் மாறி விடுவானே என்று பயந்து குளியலறைக்குள் தண்ணீர் ஈரமாக இருந்தாலும் பரவாலை என்று அங்கேயே உடை மாற்றி கொண்டு வந்தவள் பூஜை அறைக்கு வெளியே கீர்த்தியின் மாலையிட்ட போட்டோவில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்து மகாலக்ஷ்மி போல கை எடுத்து கூப்பிடும் அழகு கீர்த்தி. வாய் நிறைய புன்னகையுடன் சிரித்து கொண்டிருந்தாள்.
கண்ணுக்கு நிறைந்த புருஷன்.. அம்மா அம்மானு பாசத்துக்கு ஏங்கும் குழந்தை ஏன்மா கீர்த்தி உனக்கு என்ன அவசரம்.. இவர்களை விட்டு ஏன் போன! என்னோட இடத்தை நீ நிரப்பிட்ட ஆனா நான் உன்னோட இடத்தை என்னால பூர்த்தி பண்ண முடியுமா தெரியல கீர்த்தி! உன்னோட மகளை என் மகளாய் கண்ணுக்குள்ள பொத்தி வைச்சு பார்த்துப்பேன்! ஆனா உன் மாமாவை உன்கிட்ட இருந்து என்னால பிரிக்க முடியாது அதுமட்டும் நிதர்சனம்.. உன்மேல உள்ள காதலை நானும் பிரிக்க மாட்டேன் கீர்த்தி.. என்று பெருமூச்சு விட்டு பூஜை அறைக்குள் சென்று விளக்கு ஏற்றி விட்டு சாமி கும்பிட்டு வெளியே வர “ம்மா பசிக்குது” என்று தியா வாயில் விரலை வைத்து கொண்டு மலர்விழியின் முந்தானையை பிடித்து கொண்டது
“தங்கத்துக்கு பசிக்குதா! செல்லத்துக்கு குடிக்க என்ன வேணும்?” என்று குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்து கொண்டு சமையல் கட்டுக்குள் நுழைந்தாள் மலர்விழி
“பூ..பூஸ்ட் வேணும்?” என்று தலையை சாய்த்து கேட்டது குட்டி வாண்டு
“ஐஞ்சு நிமிசத்துல போட்டு தரேன்” என்றவள் தியாவை அடுப்பு திண்டில் உட்காரவைத்து விட்டு அடுப்பில் பாலை காய்ச்சி பூஸ்ட் பவுடர் போட்டு கலக்கி ஆற வைத்து கப்பில் ஊற்றி கொண்டு
” பாப்பா பிரஷ் பண்ணிட்டிங்களா” என்று புன்னகை பூத்த முகத்துடன் கேட்கவும்
“ம்ம் பிரஸ் பண்ணிட்டேன்” என்று வேகமாக தலையை ஆட்டியது
“குட் கேர்ள்” என்று குழந்தையின் தலையில் முத்தம் கொடுத்து தியா கையில் பூஸ்ட் கப்பை கொடுத்தாள் மலர்விழி
பூஸ்ட் குடித்து விட்டு கப்பை தாயிடம் நீட்டியதும் “பாப்பாக்கு பிரேக் பாஸ்ட் என்ன வேணும்” என்றவள் பூஸ்ட் கப்பை வாங்கி சிங்கிள் கழுவி வைத்து திருப்பி தியாவை பார்த்தாள்
“ம்மா எனக்கு குட்டி குட்டி ஹார்டின் சேப் தோசை வேணும் சுட்டு கொடுங்க” என்று உரிமையாக குட்டி கை விரல்களை ஹார்டின் சிம்பிள் வைத்து காட்டியது
“அவ்ளோதானே உடனே சுட்டு தரேன் நீங்க சமத்தா உட்காருங்க” என்று குழந்தையின் கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்து சாம்பார் வைக்க காய் கறிகளை நறுக்க ஆரம்பித்தாள்
சில நொடிகள் களித்து “ம்மா நீங்க என்னை அடிப்பீங்களா” என்று தியாவின் மழலை குரலை கேட்டு விசுக்கென்று நிமிர்ந்தாள்
“யாரு சொன்னாங்க நான் உன்னை அடிப்பேன்னு” என்றதும்
“பக்கத்து வீடு பாட்டி தான் நாளைக்கு உன் சித்தி வந்துட்டா அவ போடுற சாப்பாடை சத்தமில்லாம சாப்பிடணும் இல்லனா காலுல சூடு போடுவாங்கனு சொன்னாங்”க என்று குழந்தையின் குரல் நடுங்கி வந்தது
“பாப்பா” என்று தியாவை அணைத்து கொண்டு அம்மா ஒருநாளும் உன்னை அடிக்க மாட்டேன் “சாமி என் பட்டு” என்று குழந்தையின் முகம் முழுவதும் முத்தமிட்டவள் தோளில் தூக்கி போட்டு கொண்டாள் மலர்விழி
இருவரின் சம்பாஷணைகளை கையை கட்டி பார்த்துக்கொண்டிருந்தான் கேசவன்
“அப்பா வந்துட்டாங்க” தாயின் இடுப்பிலிருந்து இறங்கி தந்தையின் காலை கட்டி கொண்டது
“பாப்பா பூஸ்ட் குடிச்சாச்சா” என்ற கேட்டபடியே பிள்ளையை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டு கேட்டான் கேசவன்
“ஓ அம்மா போட்டு கொடுத்தாங்க குடிச்சுட்டேன் பா” என்று வேகமாய் தலையை ஆட்டியது
கேசவனிடம் சூடாக ஆவி பறக்க காபி கப்பை நீட்டினாள் மலர்விழி
“பாப்பு பாட்டி எழுந்துட்டாங்களானு பார்த்துட்டு வாங்க” என்று மகளை இறக்கி விட்டான் கேசவன்
தியா குடுகுடுவென மகேஷ்வரியின் அறைக்கு ஓடியது
” இந்த வீட்டுல நீ என் பிள்ளையை கவனிக்க வந்த கேர் டேக்கர் நீ அவ்ளோதான் ” என்ற விதமாக அவளை முறைத்து பார்த்தவன் அவளை தாண்டி சென்று அடுப்பில் பாலை ஊற்றி வைத்து காபி போட்டு குடித்தவனை எதுவும் சொல்ல முடியாமல் கண்கள் கலங்க நின்றாள் மலர்விழி
