28 மோகவிழியால் எனை தைக்காதே
வள்ளியூர் கிராமத்தில் குளத்தில் பல வகையான மீன்கள் இருக்கும்.. குளத்தை ஏலம் எடுப்பதற்கு பல கிராமங்களிலிருந்து வருவது வழக்கம்.. ஆனால் குருமூர்த்திதான் எப்போதும் ஏலத்தில் எடுப்பார்.. அதில் தன் கிராமத்து மக்களுக்கு பல பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.. அதனால் யாருக்கும் குளத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்.. அப்படியிருக்க பக்கத்து கிராமத்தில் இருக்கும் பண்ணையார் நாகா அந்த குளத்தை ஏலத்தில் எடுக்க ஆசைப்பட்டான்.. குருமூர்த்தியிடம் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென அவரைப் பற்றி விசாரிக்க குருமூர்த்தியின் மனைவி பிரசவத்தில் இறந்ததாகவும் அவர் மனைவியுடன் ஒரு வருடமே வாழ்ந்திருக்கிறார் என்றும் இப்போது ஒரு கைக் குழந்தையுடன் இருக்கிறார்.. என்றும் தெரியவர.. குருமூர்த்திக்கு தன் தங்கையை திருமணம் செய்து வைக்க பிளான் போட்டு ஊர் பெரியவர்களை வைத்து குருமூர்த்தியிடம் பேச வைத்தான்.
ஊர்பெரியவர்களும் குருமூர்த்தி, நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ என்று கூற.. குருமூர்த்தியும் கிருஷ்ணாவை வளர்க்க சிரமப்பட்டார்.. கிருஷ்ணாவை பார்த்துக்க பத்மினியை வீட்டில் வைத்திருந்தார்.. அவரும் அவரது மகள் வீட்டுக்குப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட இப்போது குழந்தையை பார்த்துக்க முடியாமல் தான் இருந்தார் குருமூர்த்தி.
குருமூர்த்தியின் முதல் மனைவி கனகா குணத்தில் தங்கம்தான்.. இருவரின் சந்தோசத்தில் பிறந்தவன் தான் கிருஷ்ணா.. ஆனா காலன் கனகாவை எடுத்துக்கொண்டான்.
குருமூர்த்தி கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டார்.. நாகா, சாவித்ரியிடம் குருமூர்த்தியை பற்றிக்கூற.. அவரும் அண்ணன் சொல்லை மீறாமல் கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டார்.. அடுத்த முகூர்த்தத்தில் குருமூர்த்திக்கும், சாவித்ரிக்கும் திருமணம் நடந்தது.
அன்றிரவு முதல் ராத்திரி ஏற்பாடு செய்திருக்க.. கொலுக்மொழுக்கென்று கையை காலை ஆட்டிக்கொண்டு தொட்டிலில் படுத்திருக்கும் கிருஷ்ணாவை சாவித்ரிக்கு மிகவும் பிடித்துவிட்டது.. உடனே மடியில் தூக்கி வைத்து கொஞ்ச ஆரம்பித்தாள்.. கிருஷ்ணா பிறந்ததிலிருந்து தாயின் முகம் பார்த்ததில்லை.. சாவித்ரியின் முகம் பார்த்து கிளுக்கி சிரித்தான்.. அவனது சிரிப்பில் மயங்கிபோய் முதல் ராத்திரி அறைக்கு அவனை தூக்கிக் கொண்டு போக..
“சாவித்ரி ஒரு நிமிசம் நில்லுமா” என்று அங்கே வந்த நாகா “இவன் மூத்த தாரத்து பையன் இவனுக்கு ரொம்ப இடம் கொடுக்காத.. சீக்கிரமா உனக்குன்னு ஒரு பையனை பெத்துக்க” என சாவித்ரியிடம் விசமமாக பேசினார்.
“அண்ணா இன்னொரு முறை இப்படி பேசாதீங்க.. எனக்கு இவன்தான் முதல் பையன்” என்று கிருஷ்ணாவை முதலிரவு அறைக்குள் தூக்கிச்சென்றார் சாவித்ரி.
இவள வைச்சு நாம நிறைய ப்ளான் போட்டிருக்கோம்.. இவ என்ன இப்படி சொதப்புறா.. என்று தாடையை தேய்த்த நாகா.. நம்ம சொல்ல கேட்கலைன்னா போட்டிர வேண்டியதுதான்.. என்று கேவலமான புத்தியுடன் நடந்துகொண்டான்.
குருமூர்த்தியின் அறைக்குள் சென்றதும் கிருஷ்ணா, சாவித்ரியின் கையில் இருப்பதைக் கண்டு குருமூர்த்தியின் மனம் குளிர்ந்து போனது.. ஒரு சிலர் அவரிடம் உனக்கு வரப்போற இரண்டாம் தாரம் கிருஷ்ணாவை நல்லா பார்த்துக்குவானு நிச்சயம் சொல்லமுடியாது.. அந்தப் பொண்ணுகிட்ட நீ கராரா பேசிடு.. என்று அறிவுரை கூறியிருந்தனர்.. அதற்கு அவசியமேயில்லை என்று சாவித்ரி, கிருஷ்ணாவை மார்போடு அணைத்து தூக்கி வந்து அறையில் இருந்த தொட்டிலில் படுக்க வைத்து குருமூர்த்தியின் அருகே வந்தார்.
“சாவித்ரி குழந்தையோட இருக்க என்னக் கல்யாணம் பண்ணிக்க எப்படி சம்மதிச்ச.!!”
“நான் உங்கள ஒரு முறை கோவில்ல பார்த்திருக்கேன்.. உங்களப்பத்தி ஊருக்குள்ள ரொம்ப நல்ல மனுசன் உதவின்னு கேட்டா மறுக்காம செய்வீங்க.. நிறைய பேருக்கு தொழில் ஆரம்பிச்சு கொடுத்திருக்கீங்கன்னு சொல்லியிருக்காங்க.. நீங்க கைக்குழந்தையோட கஷ்டப்படுறீங்கனு பேசிகிட்டாங்க.. எனக்கு, உங்களைப் பார்த்ததும் உங்களை பிடிச்சுப்போச்சு” என்று வெட்கப்பட்டு தலைகுனிந்தாள்.
“சாவித்ரி, நானும் கனகாவும் ஒருவருசம் வாழ்ந்தாலும் இரண்டு பேரும் நிறைவாத்தான் வாழ்ந்தோம்.. அந்த நினைவுகள் இன்னும் எனக்குள்ள இருக்கு.. எனக்கு கொஞ்சநாள் டைம் கொடு.. கிருஷ்ணா எப்பவும் உன்னோட குழந்தையா பார்த்துக்கணும்” என்று அவள் கையைப் பிடித்துக்கொள்ள..
“கிருஷ்ணாவ நான் எப்ப கையில எடுத்தேனோ அப்பவே அவன் என்னோட பையன்ங்க” என்று ஆசையாய் கூறியவள்.. “உங்களுக்கு என்மேல எப்ப விருப்பம் வருதோ அப்போ நாம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்” என்று கூறி விட்டு கீழே கிருஷ்ணாவின் தொட்டிலுக்கடியில் மெத்தை விரித்து படுத்துக்கொண்டாள் சாவித்ரி.
கிருஷ்ணாவை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டாள் சாவித்ரி.. கிருஷ்ணா முதன் முதலில் சாவித்ரியை “அம்மா” என்றழைத்ததும் அவளுக்கு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது.. அவனுக்கு நடைபழக சொல்லிக்கொடுத்து தினமும் இரவில் மொட்டை மாடியில் நிலாச்சோறு ஊட்டிவிட்டுவாள்.. அவனுடன் பொழுதை கழிக்க ஆரம்பித்தாள்.. குருமூர்த்திக்கு பணிவிடை செய்யவும் அவள் தவறவில்லை.. கிருஷ்ணா பேசிப்பழ சொல்லிக்கொடுக்க.. சாவித்ரியை “சாவி.. சாவி” என்று ஆசையாக கூப்பிடுவான்.. கிருஷ்ணா சாவித்ரியை விட்டு ஒரு நிமிடம் பிரியமாட்டான். அவன் பள்ளி செல்லும் நாளும் வந்தது.. மூன்று வயதானதும் பள்ளி செல்ல சாவித்ரியே கூட்டிச்சென்றார்.. அதில் சில பெண்கள்.. இவளுக்கு ஒரு பிள்ளை வர வரைக்கும் கிருஷ்ணாவ நல்லா பார்த்துப்பா.. இவளுக்கு ஒரு பிள்ளை வந்துட்டா கிருஷ்ணாவ கொடுமை பண்ண ஆரம்பிச்சிருவா.. என்று சாவித்ரி காது பட பேச அங்கேயே அழுதுவிட்டாள்..
குருமூர்த்தியும் சாவித்ரியும் கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்திருந்தனர்.. தனக்கென குழந்தை வேண்டாமென்று முடிவு செய்தாள்.. சாவித்ரியால் இரண்டு வருடமே குழந்தை பிறப்பை தள்ளி போட முடிந்தது.. கிருஷ்ணாவுக்கு ஐந்து வயதாக அப்போது சாவித்ரியின் வயிற்றில் காயத்ரி உருவாக ஆரம்பித்தாள்.. கர்ப்பம் தெரிந்தால் எல்லா பெண்களும் கர்ப்பமாய் இருப்பதை எண்ணி ஆனந்தப்படுவார்கள்.. ஆனால், சாவித்ரி கவலைப்பட்டார்.. வாந்தி வருவது போலிருக்க வாயை பொத்திக்கொண்டு ஓட குருமூர்த்தி கண்டுகொண்டார் அவருக்கு சந்தோசமே.. கிருஷ்ணாவுக்கு ஒரு தங்கை வரட்டும் என்று எண்ணினார்.. பெண் குழந்தை பிறக்க அவரது குலதெய்வம் அம்மனிடம் வேண்டுதலும் வைத்தார்.
சாவித்ரியிடம் கர்ப்பம் பற்றி குருமூர்த்தி ஆசையாய் அவரிடம் கேட்க. “என்னங்க இந்தக் குழந்தை வந்தா.. நான் கிருஷ்ணா மேல வச்சுருக்கற பாசம் குறைந்து போயிரும்னு எனக்கு பயமாயிருக்கு.. எனக்கு இந்தக் குழந்தை வேணாம்” என்று கண்ணீர்விட..
“உன்னால கிருஷ்ணாவ விட்டு இருக்க முடியாது சாவிமா.. உன் வயித்துல வளர குழந்தையை விட கிருஷ்ணா மேலதான் உனக்கு பாசம் இருக்கும்” என்று அவர் சிரிக்க..
“சிரிக்காதீங்க” என்று குருமூர்த்தியிடன் செல்லமாக சண்டையிட.. பள்ளியிலிருந்து வந்த கிருஷ்ணா “அம்மா” என்று சாவித்ரியை வயிற்றோடு தாவி அணைத்துப்பிடிக்க..
“தம்பி, அம்மா வயித்துக்குள்ள பாப்பா இருக்கு.. அம்மாவ இப்படி” கட்டிக்க கூடாது என்றவுடன் கிருஷ்ணாவின் முகம் வாடிப்போனது.
“என்னங்க இது.. குழந்தை முகம் வாடிப்போச்சு.. கிருஷ்ணாவின் உயரத்திற்கு குனிந்து நீ அம்மாவ பிடிச்சிக்கோ” என்று அவனை அணைத்துக்கொள்ள..
“அம்மா.. வயித்துக்குள்ள பாப்பா எப்படி தூங்கும் எப்படி சாப்பிடும்” என்று நிறைய கேள்வி கேட்டு.. பாப்பா வெளியே வந்தா நான் தூக்கி வச்சிப்பேன்.. என்கூட ஸ்கூல்க்கு கூட்டிப்போவேன்” என்றெல்லாம் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டான்.. சாவித்ரிக்கு நிறை மாதம் ஆன போதும் கிருஷ்ணாவை விடாமல் கவனித்துக்கொண்டாள்.
நாகா அவ்வப்பபோது வந்து சாவித்ரியிடம் விசயத்தை தூவிவிட்டு போவார்.. நாகா கூறுவதை ஒரு போதும் அவள் காதுகொடுத்து கேட்க மாட்டாள்.
சாவித்ரிக்கு காயத்ரி பிறந்துவிட்டாள்.. குழந்தையின் பிஞ்சு விரல் பிடித்து பார்த்து “அம்மா பாப்பா விரல் பஞ்சு போல இருக்கு.. நான் குழந்தையா இருக்கும்போது என்னோட விரலும் இப்படித்தான் இருந்துச்சா என்று கேட்பான்” கிருஷ்ணா கேட்கும் கேள்விக்கு சாவித்ரியால் பதில் கூற முடியாது.
அந்த நேரம்தான் குளத்தின் மீன்கள் ஏலம் வந்தது.. நாகா குருமூர்த்தியிடம் எனக்கு இந்தக் குளத்து மீன்கள் வேணும்.. வெளிநாட்டுக்கு அனுப்பினா நல்ல லாபம் கிடைக்கும்.. என்று குருமூர்த்தியிடம் கேட்க.. அவர் முடியாது என்று மறுத்துவிட்டார்.
குளம் ஏலம் விடப்பட்டது.. குருமூர்த்தியே ஏலம் எடுத்தார்.. அதற்கான ஒப்பந்த பத்திரம் குருமூர்த்தியிடம் இருந்தது.. குளம் ஏலத்தில் கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் சாவித்ரியிடம் வந்த நாகா “சாவி அந்த குளத்துப்பத்திரம் எனக்கு வேணும்” என்று தங்கையிடம் கேட்டான்.
“எதுவாயிருந்தாலும் என்னோட வீட்டுக்காரர் கிட்ட கேளுங்க” என்று சாவித்ரி சொல்லிவிட.
“என்ன தங்கச்சி.. உன் புருசனும், உன்னோட ஆசைப்பையன் கிருஷ்ணாவும் உயிரோடு இருக்க வேணாமா” என்று அவளை பயமுறுத்த.
“அண்ணே உன்னோட பூச்சாண்டித்தனத்தை என்கிட்ட காட்டாத” என்று சாவித்ரியும் பயப்படாமல் பேச.
“அப்படியா.. என்று போனை எடுத்த நாகா டேய் இப்ப குருமூர்த்தி பையன் கிருஷ்ணா பள்ளிக்கூடம் போய்ட்டு வர காரை லாரியைவிட்டு மோத விடுங்கடா” என்று சாவித்ரியை பார்த்து “என்ன முடிச்சிர சொல்லவா” என்று எகத்தாளமாக கேட்க,
“அச்சோ கிருஷ்ணாவ ஒண்ணும் பண்ணிடாத.. நான் பத்திரம் எடுத்துவந்து கொடுக்குறேன்” என்று காயத்ரியை தோளில் போட்டுக்கொண்டு பத்திரத்தை எடுத்துவந்து கைகள் நடுங்க கொடுத்துவிட்டு “என் பிள்ளைய எதுவும் பண்ணிடாத” என்று கெஞ்சினார்.
ஆனால் தோட்டத்தில் வேலை செய்யும் ஒருவர் பத்திரத்தை கொடுப்பதை மட்டும் பார்த்துவிட்டார்.
கிருஷ்ணா நீ வயித்துல பாத்து மாசம் சுமந்து பெத்த புள்ளையா இவ்ளோ துடிக்கிற நாக்கில் நரம்பில்லாமல் பேசி.. இதைப்பத்தி உன் புருசன் கிட்ட ஏதாவது ஏடா கூடமா சொன்ன தொலைச்சிகட்டுப்புடுவேன்” என்று சாவித்ரியை எச்சரித்துவிட்டு போனான்.
குருமூர்த்தி வெளியூர் சென்றிருக்க.. அவருக்கு சாவித்ரி குளத்து பத்திரத்தை எடுத்து அவங்க அண்ணாகிட்ட கொடுத்த செய்தி அவர் காதுக்கு போனது… அவசரமாக ஊருக்கு வர பஞ்சாயத்து கூட்டினர்.. பஞ்சாயத்து தலைவரே குருமூர்த்திதான். ஊருக்குள் பேசிக்கொண்டனர்.. மனைவி செய்த தவறுக்கு அவர் என்ன தண்டனை கொடுப்பாரென்று பார்த்து நின்றனர்.
குருமூர்த்தி சாவித்ரியிடம் “ஏன்மா இப்படி பண்ணின.. இப்ப நான் பஞ்சயாத்துல என்ன முடிவு சொல்லட்டும்.. என்னை இக்கட்டுல கொண்டுவந்து விட்டியே” என்று தலையை பிடித்துக்கொள்ள..
நாகா, கிருஷ்ணாவை கொன்று போடுவேன் சொன்னதால தான் பத்திரம் எடுத்துக்கொடுத்தேன்ங்க.. என்று அழுக ஆரம்பித்தார்.. “எனக்கு பஞ்சாயத்துல என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குறேன்ங்க.. நீங்க என்னால தலைகுனிஞ்சு நிற்க வேண்டிய அவசியமில்லை” என்றதும்.
“ஊர்காரர் சொல்வதை நாம கேட்டுத்தான் ஆகணும் சாவித்ரி” என்று பஞ்சாயத்துக்கு கூட்டிட்டுப் போக.. கிருஷ்ணா ஸ்கூலுக்கு சென்றிருந்தான்.
பஞ்சாயத்தில் நியாயம் நடக்க ஆரம்பிக்க.. “ஐய்யா நீங்க எங்களுக்கு நல்லது செய்யறீங்கனு நினைச்சிருந்தோம்.. ஆனா உங்க மனைவி நீங்க இல்லாத நேரம் பார்த்து குளத்து பத்திரத்தை எடுத்து அவர் அண்ணாவுக்கு கொடுத்தது தப்புதான.. அதை நம்பி எத்தனை பேர் இருக்காங்க” என்று வாதம் வைக்க..
“என் மனைவி செய்தது தப்புதான்.. அதற்கான நஷ்டஈடு நான் கொடுத்திடறேன்” என்றதும்.
“இல்லங்க ஐய்யா.. எங்களுக்கு அந்தக் குளம் வேணும்.. நீங்கதான் போராடி வாங்கித்தரணும்” என்று ஊர்மக்கள் கூற.
சாவித்ரியை பார்க்க.. அவளோ காயத்ரியை தோளில் போட்டு தட்டிக்கொடுத்துக் கொண்டு எனக்கு தெரியாது.. என்று கண்ணீருடன் கூற.
“எல்லாரும் கூட்டு சதி பண்ணுறாங்க.. இன்னேரம் வேறயாராவது தப்பு பண்ணியிருந்தா அவங்கள ஊரைவிட்டு தள்ளி வைச்சிருப்பாங்க.. ஆனா குருமூர்த்தி, சாவித்ரி தன்னோட மனைவின்னு பாரபட்சம் பார்க்குறாரு” என்று அவதூறாக பேச.
“நிறுத்துங்க!! வாய் இருக்குன்னு என்ன வேணும்னாலும் பேசாதீங்க.. இதோ குளம் உங்களுக்குத்தான்” என்று நாகாவை அடித்து இழுத்து வந்தான் குருமூர்த்தியின் வீட்டில் வேலைசெய்யும் மணி..
“பஞ்சாயத்தில் ஊர்மக்களை பத்தி தெரிந்து கொள்ளணும்” என்றுதான் இவ்வளவு நேரம் பேசினார் குருமூர்த்தி.
“இந்தாங்கய்யா பத்திரம்” என்று குருமூர்த்தியின் கையில் மணி கொடுக்க.. பத்திரத்தை வாங்கி ஊர்மக்களிடம் கொடுத்து “இனிமேல் இந்த குளத்தை பற்றி என்கிட்ட யாரும் பேச வரக்கூடாது.. நாகாவ நீங்க என்ன பண்ணினாலும் எனக்கு கவலையில்லை.. நீங்களே பார்த்துக்குங்க” என்று சாவித்ரியுடன் சென்றுவிட்டார்.
நாகாவை ஊர்மக்கள் “ச்சே நீயெல்லாம் ஒரு பெரிய மனுசனா.. ஏழைங்க வயித்துல அடிக்க பார்க்குற” என்று நாகாவை மானம்கெட பேச.. கூனிக்குறுகி சென்றான்.
இதற்கெல்லாம் காரணமான குருமூர்த்தியின் மீது ஆத்திரப்பட்டு உன்னை குடும்பமா வாழ விடமாட்டேன்.. என்று எண்ணினான் நாகா.
இரண்டே நாளில் மீண்டும் சாவித்ரியிடம் “நீ குருமூர்த்தி கூட வாழக்கூடாது நம்ம வீட்டுக்கு வா.. அவன் என்னை அவமானப்படுத்திட்டான் நீ வரலன்னா.. நான், கிருஷ்ணாவை கொன்றுவிடுவேன்” என்று மீண்டும் பயமுறுத்த..
“முடியாது.. உன்னால பண்ணுறத பண்ணு என்று தைரியமாக பேசிவிட்டார் சாவித்ரி.
நாகா அன்று மாலை பள்ளியிலிருந்து வரும் கிருஷ்ணாவை கடத்திவிட்டான்.
விசயம் தெரிந்து குருமூர்த்தி போலிசில் புகார் கொடுக்க.. கண்டுபிடிக்க முடியவில்லை கிருஷ்ணாவை.. குருமூர்த்தி போலிஸோடு தேடிக்கொண்டிருக்க.. சாவித்ரிக்கு போன் பண்ணிய நாகா.. “நீ இப்ப என்னோட வீட்டுக்கு வந்தீனா இப்பவே கிருஷ்ணா விடறேன்.. இல்லைனா கழுத்தை நெரித்து கொன்று விடுவேன்” என்று மிரட்ட.
“அச்சோ நீயெல்லாம் ஒரு அண்ணனா?” என்று அவனை காரிதுப்பாத குறையாகப் பேச.
“ஏய் அதிகமா பேசினா.. உன்னையும் உன் கையிலிருக்க குழந்தையும் கொன்னிடுவேன்” என்று மனசாட்சியில்லாமல் பேசினான்.
“இப்ப என்ன நான் உன் வீட்டுக்கு வரணும் அவ்ளோதான” என்க.
“ஆமா”
“வரேன்” என்று அந்த வீட்டிற்குப் போக தன் வீட்டு வாசற்படியை தாண்டினாள்..
அப்போது குருமூர்த்தியின் கார் வீட்டுக்குள் வர..கிருஷ்ணா காருக்குள் உறங்கியிருந்தான்.. “நாகா போன் செய்து என்ன உன் பையன் வந்துட்டானா.. இன்னும் என்ன நிற்குற.. வீட்டை விட்டு வெளியே வா” என்று போனில் மிரட்ட.
குருமூர்த்தி காரை விட்டு இறங்கி சாவித்ரியிடம் போனில் பேசுவது..நாகாதான் என்று தெரிந்து “சாவித்ரி அவன் சொல்றத கேட்காத.. நாம வேற ஊருக்குப் போயிடலாம் வந்திடு” என்று அவள் கையைப் பிடிக்க.
“இல்லங்க அண்ணாவ பத்தி உங்களுக்குத் தெரியல நான் போறேன்” என்று வாசற்படியை மிதிக்க.. அதுவரை காரில் உறங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணா எழுந்து பார்க்க சாவித்ரி வாசற்படியை தாண்டி விட்டார்.
கிருஷ்ணாவோ அம்மா எங்கயோ போறா என்று தெரிந்து கார் கதவை வேகமாக திறந்து வெளியே ஓடி வந்தவன் வாசலில் பார்க்க.. “அம்மா போகாத.. சாவி போகாத” என்று பின்னாலேயே ஓடினான்.
சாவித்ரிக்கு கண்ணீர் ஆறாய் பெருகியது.. திரும்பி பார்த்தால் கிருஷ்ணாவைவிட்டு என்னால போக முடியாது.. என்று எண்ணியவள் வேகமாக நடக்க.. நாகாவின் கார் வந்து நின்றது.. “வா வந்து ஏறு” என்று கர்ஜித்து கூற வேறு வழியில்லாமல் காருக்குள் ஏறினாள்.
கிருஷ்ணா அம்மா அம்மா என்று ஓடியவன் மயங்கி விழுந்துவிட்டான்.. குருமூர்த்தி ஓடிச்சென்று கிருஷ்ணாவை ஹாஸ்பிட்டல் கூட்டிச்செல்ல அங்கே அவனுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து வீட்டுக்கு கூட்டிட்டுவந்தார்.. கிருஷ்ணா அழுதுகொண்டேயிருந்தான்.. அங்கே வந்த பெண்மணி ஒருவர் “அவ உன்ன பெத்த அம்மா இல்ல.. உன்ன பெத்தவ இதோ இவதான்” என்று கனகாவின் போட்டோவை எடுத்து வந்து காண்பித்தார்..
“போங்க நீங்கெல்லாம் பொய் சொல்றீங்க.. எங்க அம்மா சாவித்ரிதான் ஐய்யா அம்மாவை வரச்சொல்லுங்க” என்று மீண்டும் அழுக ஆரம்பித்தான்.. குருமூர்த்தி மகனை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துப்போனார்.. வேறுவழியில்லாமல் “கனகாதான் உன் அம்மா” என்று கூறிவிட.
கிருஷ்ணா சிறு வயது பாலகன் மனம் உடைந்து போனான்.. “அப்போ அவங்க என்னோட அம்மா இல்லையா.. அதனாலதான் என்னை விட்டு போய்ட்டாங்களா ஐய்யா.. என்கிட்ட பாசமதான இருந்தாங்க.. ஏன் என்னை விட்டு போனாங்க” என்று குருமூர்த்தியை கட்டிக்கொண்டு அழுதான்..
“தம்பி அழக்கூடாது அப்பா நானிருக்கேன் உனக்கு.. நீ எனக்கு இருக்க.. அதுவே போதும்” என்று மகனை தட்டி கொடுத்து தூங்க வைத்தார்.
நாகா, சாவத்ரியை வீட்டை விட்டு வெளியே விடவேயில்லை.. வீட்டுக்குள் பூட்டி வைத்துக்கொண்டான்.. கிருஷ்ணாவிற்கு சாவித்ரியின் நியாபகம் குறையவில்லை.. அவர் மீது கொண்ட பாசமும் குறையவில்லை.. தன்னைவிட்டு சென்ற கோபம் தான் அவனுக்கு இன்னமும் இருக்கிறது.
குருமூர்த்தியும் தன் மனைவியை கூட்டிட்டு வந்தால் கிருஷ்ணா அவர்களை ஏதாவது சொல்லிவிடுவான்.. என்றும் அவள், நான் சொல்லியும் கேட்காமல் போனால் அல்லவா.. அவள் தண்டனை அனுபவிகட்டும்.. என்றும் எண்ணியே இவ்வளவு நாள் இருந்துவிட்டார்.
ஆனால் நாகாவின் பையன் வேலன் தன்பெண்ணிடம் தவறாக நடந்துகொள்கிறான்.. என்று தெரிந்தவுடன் மனைவியையும் பொண்ணையும் தன்னுடன் இருக்கட்டும் என்று முடிவுசெய்து விட்டார்..
இத்தனையும் சொல்லி முடிக்க தங்கமீனா கணவன் பட்ட பாடு அறிந்து துடித்துப்போய்விட்டாள்.. என்னை இப்பவே ஊருக்கு கூட்டிட்டு போங்க மாமா.. “நான் பெரிய தப்பு செய்திட்டேன்” என்று குருமூர்த்தியிடம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டாள்.
அதே நேரம் குளத்து ஏலம் ஆரம்பித்துவிட்டது.
