புள்ளி மேவாத மான்-13
பலநாள் தன்னுள் அழுத்திக்கொண்டு இருந்ததை கொட்டிவிட்டதால் மனசு இறகு போல லேசாகிவிட அப்படி ஒரு தூக்கம் தனாவுக்கு…
விடிந்து வெகு நேரமாகியும் தனா எழும்பவில்லை. வழக்கமான நேரத்திற்கு எழுந்த எழில் இறுக்கம் தளர்ந்து குழந்தை போல் பேபி ஸீலீப் பொசிஷனில் தூங்கும் தன் மாமனை கண்டவள் கலைந்திருந்த அவன் பெட்ஷுட்டை போத்தி விட்டு சற்று நேரம் நின்று பார்த்தவள் நேரமாவதை உணர்ந்து குளித்து கிளம்பி வந்தாள். பூஜையறையில் விளக்கேற்றி கடவுளிடம் கணவனுக்கு நிம்மதியும் அமைதியும் கொடு என வேண்டிக்கொண்டு மாமனுக்கு பிடித்ததை சமைக்க சென்றாள்.
அந்தோ பரிதாபம் கடவுள் அவள் வேண்டுதலை நிராகரித்து விட்டதை அறியாமல் மாமனின் மனதை வயிற்றின் மூலம் நிறைக்கும் வேலையில் இறங்கிவிட்டாள்.
சுற்றுச்சூழல் சத்தத்தில் விடிந்ததை உணர்ந்து எழுந்தவன் மணியை பார்த்து விட்டு அவசர அவசரமாக குளித்து கீழே வந்தான்.
அவனைப் பார்த்தும் சாப்பிட எல்லாம் எடுத்து வைத்து தட்டில் பரிமாற அவனுக்கு பிடித்ததாக இருக்கவும் எழிலின் அரவணைப்பு இரவின் நிம்மதியான தூக்கம் என எல்லாம் சேர்ந்து புது தெம்பைக் கொடுக்க…. சாப்பிட்டு விட்டு எழிலிடம் புன்னகை முகமாகவே சொல்லி கொண்டு கிளம்பினான்.
தனாவின் புன்னகை மழைநீரை உறிஞ்சி மணம் பரப்பும் நிலம் போல எழிலிடமும் உற்சாகத்தைக் கொடுக்க… மாமனுக்கு மதியம் ஆட்டுக்கறியா… கோழிக்கறியா…. எதை சமைக்கலாம் என சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள்.
அவ்வளவு தான் பெண்களின் சிந்தனைப் போக்கு. கணவனின் கோபமோ.. வருத்தமோ..சிறிதாக இருந்தாலும் பூதாகரமாக கற்பனை செய்து அதிலேயே ஒலண்டு ஒலண்டு மூழ்கிவிடுவர் சோக பதுமையாக…
ஆண்கள் தெளிந்து ஒரு புன்னகை போதும்… அடுத்த விநாடி இவர்களின் எண்ணம் அஞ்சறை டப்பாக்குள் அடங்கி விடும்.
தனா நேராக வயலுக்கு சென்று மேற்பார்வை பார்த்து விட்டு பேக்டரிக்கு சென்றான். முன்பே வந்திருந்த கருணாவும் வெற்றியும் வேலையில் இருக்க…
இவனைப் பார்த்ததும் கருணா தான் அவனின் அலுவலக அறைக்கு வந்து “வா மாப்புள்ள… இப்ப பரவாயில்லையா…. நேத்து நான் வீட்டுக்கு வந்தேன். அரசி எல்லாம் சொல்லுச்சு… நீ கண்டதையும் நினைச்சு ஒலப்பிக்காதே. நாமல்லாம் எதுக்கு இருக்கோம்… அந்த புள்ளய இப்படியேவா விட்டுருவோம். அதுக்கு ஏதாவது செய்யலாம். அதுக்காக உன்ன வருத்திக்காத… அரசி முகத்த பார்க்கவே முடியல…. நீ சந்தோஷமா இருந்தா தான் அதுவும் சந்தோஷமா இருக்கும்… உன் முகத்தப் பார்த்து வாழறவ அது முகம் வாடி போகாம பார்த்துக்க… கண்டிப்பா ஏதாவது செய்வோம் சரியா…” என ஒரு நண்பனாக தோள் கொடுத்து நிற்பேன் என நம்பிக்கை அளித்துவிட்டு சென்றான்.
கருணாவின் பேச்சு புது நம்பிக்கை கொடுக்க.. விடுப்பட்ட வேலை இழுத்து கொள்ள… மதிய உணவு நேரம் கடந்ததை கூட அறியாது மூழ்கிவிட…
அவனின் அலைபேசி ஒலிக்க எழில் தான் அழைத்திருந்தாள். எடுத்ததும் “மாமா… சாப்பிட வரல.. நேரம் தாண்டி போச்சு”
“எனக்கு இன்னும் கொஞ்சம் வேலையிருக்கு வர லேட்டாகும். நீ சாப்பிடு”
“சாப்பிட்டு போய் வேலை செய்ங்க மாமா..”
“ப்ச்ச்… முக்கியமான வேலை பாதில விட்டுட்டு வரமுடியாது”
“நான் வேணா சாப்பாடு எடுத்துட்டு வரவா”என்றாள் மிக உற்சாகமாக…
“ஒன்னும் வேண்டாம். சொன்னா கேளு… நான் வந்து சாப்பிடறேன். உனக்கு பசிச்சா நீ சாப்பிடு”என்று கடுப்புடன் போனை வைத்துவிட்டான்.
போனை வைத்தது தெரிந்ததும் “க்கும் ரொம்ப தான் பண்றாங்க… சாப்பிட தான வரச் சொன்னேன்… நான் அனுப்பற போட்டோவ பார்த்து வேலயாவது ஒண்ணாவதுனு ஓடியாறனும்…”
தட்டில் மட்டன் பிரியாணி சிக்கன் வறுவல் முட்டை என அழகுற பரப்பி அவனுக்கு வாட்சப்பில் ஒரு போட்டோ அனுப்ப… பார்த்ததிற்கான அறிகுறி காட்ட.. பதில் மட்டுமில்லை.
மாமா உங்களை…. என பல்லைக் கடித்தவள் ‘ம்கூம் எழிலு.. உன் ஸ்டைலு தான் ஒர்க்அவுட் ஆகும். எடு ஒரு ஷெல்பிய… அனுப்பு மாமாவுக்கு…’ என தட்டை தன் முன் நகர்த்தி பசியால் வாடும் பச்சபுள்ள போல முகத்தை வைத்து ஒரு போட்டோ..
முக்கியமான பர்சேஸ் கணக்கை சரிபார்த்து கொண்டு இருந்தவன் வாட்சப் ஒலியில் எடுத்து முதல் போட்டோவை பார்த்து விட்டு பேசாமல் தன் வேலையைப் பார்க்க….
அடுத்த இரண்டு நிமிடத்தில் அடுத்ததற்கான சவுண்ட் கேட்க…. எடுத்துப் பார்த்தவன் பக்கென சிரித்துவிட்டான். நேற்று தான் இருந்தது என்ன… இன்னைக்கு சிரிப்பதென்ன… இதெல்லாம் இவளால மட்டும் தான் முடியும்.
பருக பருக தெவிட்டாத அமிர்தம் தந்து மோட்சம் அளிக்கும் யட்சிணியோ… தண்மை கொண்டு வாழ்வை குளிர செய்யும் தண்ணிலவோ….. தனாவில் வாழ்வில் இல்லாததை எல்லாம் இல்லாததாகச் செய்ய இல்லாளலாக வந்தாள் எழில்.
சட்டென கணக்கை மூடி வைத்தவன் உடனே கிளம்பிவிட்டான். இவன் வீட்டிற்கு வந்த போது பார்த்தது இது தான். போனில் ஒரு பார்வை தட்டில் ஒரு பார்வை ஏக்கத்தோடு…… மீண்டும் ஒரு சிரிப்பலை தனாவிடம்.
விடுவிடுவென அவளிடம் சென்றவன் அவள் தலையில் லேசாக தட்டி “எனக்கும் தட்டு எடுத்து வை… வரேன்” என்க
“வந்துட்டிங்களா மாமா… நான் கூட நீங்க வர லேட்டான என்ன பண்றது… பிரியாணி ஆறி போயிடுமேனு பயந்தேன்”
“நான் தான் உன்னைய சாப்பிட சொன்னல்ல… சாப்பிடாம போட்டோவா போட்டு அழிச்சாட்டியம் பண்றடி…”
“போட்டோ போடவும் தான பிரியாணிய பார்த்ததும் வேலைய விட்டுட்டு ஓடியாந்துட்டிங்க… எப்பூடி எழிலோட ஐடியா..”
“அடியேய் என் மக்கு பொண்டாட்டி பிரியாணிய பார்த்துட்டு ஒன்னும் நான் வரல…. பிரியாணி திங்க முடியாத ஏக்கத்தை போட்டோ எடுத்து அனுப்பின பாரு… இந்த கேடிபுள்ள கொடுத்த பச்சபுள்ள லுக்க பார்த்து விட்டு வந்தேன்” என்றான் சிரிப்புடன்.
“கண்டுபுடிச்சிடிங்களா… என் ஜெய்மாமா புத்திசாலியில்ல”அவன் தாடையை பிடித்து கொஞ்சினாள்.
“சரிடி போதும்… நான் போய் ப்ரஷ்ஷாகிட்டு வரேன். எல்லாம் எடுத்து வை” என
தங்கள் அறைக்கு சென்றவன் உடை மாற்றி முகம் கழுவி வந்தான்.
அவன் வந்ததும் அவனுக்கு பரிமாறி பேசியபடியே தானும் உண்டாள். தனா சாப்பிட்டதும் கிளம்பிவிடுவான் என நினைத்து இவள் சாப்பிட்டதை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.
தனா மேலே சென்றவன் எழிலின் அடாவடியில் மனம் உல்லாசமாக இருக்க… எழிலின் அருகாமையை வேண்ட … படுக்கையில் சாய்ந்து கால்களை ஆட்டிக்கொண்டு எழிலுக்காக காத்திருக்க….
எழில் வருவாள் என சிறிது நேரம் பார்த்தவன் அவள் வராமல் போக “எழில்… எழில்…”என சத்தமாக அழைக்க…
அவன் சத்தத்தில் நேற்று போல எதுவோ என நினைத்து அவள் அடித்து பிடித்து மேலே ஓட.. அவன் படுத்திருந்த நிலையைப் பார்த்து கடுப்பாகி….
“எதுக்கு மாமா கூப்பிட்டிங்க”
“வா வா.. இங்க என் பக்கத்துல வா” என தன் அருகே படுக்கையில் தட்டியவாறே சொன்னான் உற்சாகத்துடன்..
“கீழ வேலையிருக்கு என்னன்னு சொல்லுங்க”
“முதல்ல மாமன கவனிடி… அப்புறம் வேலையை பார்க்கலாம்” என்றான் கள்ளத்தனமாக…
அவனை முறைத்தவாறே “இருங்க வரேன்” என திரும்பி செல்ல…
அடுத்த நொடி தனாவின் அணைப்பில் எழில். திமிறி விலகப் போனவளை தன் வலிய கரங்கள் கொண்டு அடக்கியவன் அவள் ஊடலை முடித்து வைத்து அழகான கூடலை நிறைவேற்றி கொண்டான்.
மாலை வரை நன்கு உறங்கி எழுந்தவன் பேக்டரிக்கு தயாராகி வரும் போது எழில் சமயலறையில் ஏதோ செய்து கொண்டு இருந்தாள்.
எட்டிப் பார்த்தவாறே “எழில் நான் கிளம்பறேன்”
“மாமா இருங்க வரேன்” என குரல் கொடுத்தாள் .
டீவியை போட்டுக்கொண்டு அமர்ந்துவிட்டான் தனா. சிறிது நேரத்தில் தட்டில் வடையோடும் டீயோடும் வந்த எழில்
“மாமா இத சாப்பிட்டு கிளம்புங்க….” என அவனருகே அமர்ந்த கொள்ள… இருவரும் பேசியபடியே சாப்பிட்டனர். தனா எழிலிடம் சொல்லி கொண்டு பேக்டரிக்கு கிளம்பினான்.
பேக்டரிக்கு போய் மேற்பார்வை பார்த்து விட்டு வாரகூலி நாள் என்பதால் கூலி கொடுக்க வயலுக்கு சென்றான். வண்டியை தோப்பில் நிறுத்தி விட்டு வரப்பு வழியாக நெல்லங்காட்டிற்கு நடந்து செல்ல…. அங்கே வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் இவன் வந்ததை அறியாமல்…
“ஏன்டி சரோஜா உனக்கு ஒரு சேதி தெரியுமா..”
“என்னடி வசந்தா… என்ன சொல்லறவ…”
“கோவிந்த மவ பூங்கொடி இருக்கால்ல புருஷங்கூட வாழமா வந்துட்டா…”
“என்னது… வாழாவெட்டியா வந்துட்டாலா… இத எப்ப…”
“நீ உங்க ஊரு திருவிழாவுக்கு போயிருந்தெல்ல அப்பதான்”
“சர்காரு உத்தியோகத்துல இருக்கானு சொன்னாங்க.. அவங்கூட பொழைக்க கசக்குதா..”
“இவளோட புழவாக்கு தெரிஞ்சு அடிச்சு துரத்திவிட்டுட்டான்ல…”
“இழுக்காம விளங்கச் சொல்லுடி…”
“இவ தான் நம்ம முதலாளி அய்யாகூட காடு கழனில்லாம் சுத்துனால… ஊருல அரசபுரசலா தெரிஞ்சி போயி தான கோவிந்த அவசர அவசரமா அசலூருல கொடுத்தான்”
“எத்தன நாளைக்கு தான் மூடிமூடி வைக்கமுடியு… ஒரு நாள் நாத்த தாங்காம வெளிய வரத்தான செய்யு….”
“பொஞ்சாதி கட்டிக்கறது முன்னாடி வேற ஒருத்தனோட சுத்திக்கிட்டு இருந்தா எந்த ஆம்பள தான் பொறுப்பான் அதான் தொரத்திவிட்டுட்டான் ரோசக்கார…”
இதை கேட்டு தனா ரொம்பவே துடித்துப் போனான். எந்த பழிபாவத்துக்கு அஞ்சினானோ… எந்த சொல்லுக்கு ஆளாககூடாது ஒதுங்கி போனானோ… எதை ஊர் வாயால கேட்ககூடாது என நினைத்தானோ…
அது இப்ப அவன் காது வழியா கேட்க நேர்ந்த போது நிவார் புயலை போல சுழன்று சுழன்று அடிக்க…. அவன் மனமும் புத்தியும் அங்கேயே நின்றுவிட… தன் போக்கில் வந்த வழியே திரும்பி சென்றவன் சுயநினைவின்றி எங்கே செல்கிறோம் என்பதில்லாமல் வண்டியை எடுத்து ஓட்டிக்கொண்டு வந்தவன்….
பேக்டரியின் கிளை சாலையில் இருந்து பிரதான சாலை சந்திக்கும் வளைவில் எதிரே லாரி ஒன்று வருவதை கவனிக்காமல் சென்று நேராக லாரியின் மீது மோதி தூக்கி எறியப்பட்டு சாலையின் எதிர்புறம் இருந்த மரத்தில் மோதி கீழே விழுந்தான்.
ஊரின் எல்லையிலேயே விபத்து நடந்து இருக்க… தனா மோதிய லாரியோ இவன் பேக்டரிக்கு கரும்பு ஏற்றி கொண்டு வந்த வண்டி.. தனா ஒதுங்கி கொள்வான்என டிரைவர் நினைத்திருக்க…. இப்படி நேருக்கு நேர் மோதுவான் என நினைக்கவில்லை அவர்.
பொழுது சாய்ந்து இருள் சூழ்ந்து ஜனநாட்டமும் அதிகமில்லாமல் இருக்க… இருந்த ஒரிருவரும் என்ன இப்படி வருகிறார் என நினைப்பதற்குள் தனா தூக்கி எறியப்பட்டு இருந்தான்.
அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்த போது தனா இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தான். லாரி டிரைவர் உடனே வெற்றிக்கு அழைத்து சொல்ல..
வெற்றி மில்லில் இருந்தவன் குடும்பத்தாரிடம் சொல்லக்கூட தோன்றாமல் அங்கிருந்த கருணாவை கூட்டிக்கொண்டு வர தனாவை ஆம்புலன்ஸில் ஏற்றி இருந்தனர். பார்த்ததும் இருவருமே அழுதுவிட்டனர்.
தனா ஐசியுவில் அனுமதிக்க பட்டு சிகிச்சை நடந்து கொண்டு இருக்க… கருணா தான் சுந்தரத்திற்கு அழைத்து சொன்னான்.
தனாவின் நிலையை அறிந்து குடும்பமே கதறி அழுக… சுந்தரத்திற்கோ எழிலிடமும் எப்படி சொல்வது… அதை தாங்கி கொள்வாளா.. என கவலை.
எப்படியும் சொல்லி தானே ஆகவேண்டும். கேட்ட விநாடி அதிர்ச்சியில் எழில் மயங்கி விழுந்தாள்.
தனா உயிர் பிழைத்து வருவானா… எழில் என்ன செய்யப் போகிறாள்?
So sad
ukiLSFQJac