18 – புள்ளி மேவாத மான்
எழிலுக்கு ஆறுமாதங்கள் ஆன நிலையில் சற்று மேடிட்ட வயிறுடன் உடம்பு கொஞ்சம் பூசினாற் போல தாய்மை பூரிப்புடன் பார்க்கவே மிக அழகாக இருந்தாள்.
டாக்டரிடம் பிரச்சினை பண்ணிய பிறகு அடுத்த மாதம் செக்கப்பிற்கு எழில் மாமியார்கள் துணையுடன் மருத்துவமனைக்கு வந்திருக்க…
அழைத்து வந்தவனோ அமைதியாக அமர்ந்திருக்க…அவனையே முறைத்து பார்த்து கொண்டு இருந்தார் அந்த பெண் மருத்துவர்.
திலகா தான் டாக்டரிடம் சமாதானமாக பேசி சரிகட்டினார்.
எழிலுக்கு வாந்தி மயக்கம் எல்லாம் குறைந்திருந்த போதும்… பிரஷர் மட்டும் குறையவில்லை. கற்பகம் ஐந்து மாதம் முடியவும் கடினமில்லாத வேலைகளை செய்ய சொல்ல..
மாமியார்களின் உதவியை மறுத்து அவளே சமையல் மற்ற வேலைகளை மெதுவாக செய்ய.. அவர்களும் பிரசவம் சுலபமாக இருக்கும் என அதை ஆமோதிக்க..
தனா தான் புரிந்து கொள்ளாமல் எழிலிடம் சிடுசிடுத்து கொண்டு இருந்தான்.
“சித்திங்க சமைத்து தரமாட்டாங்களா… இவ்வளவு நாள் செய்தாங்கல்ல.. இன்னும் கொஞ்ச நாள் செய்யலாம்ல”
“இப்ப மார்னிங் சிக்னஸ் இல்லாம நல்லா தான இருக்கேன். மெல்ல செஞ்சுக்குவேன்”
“பாரு நாள் பூரா நின்னுகிட்டு வேலை செஞ்சா இராத்திரில கால் வீங்கி வலில தூங்கமா கஷ்டப்படற”
“அம்மா தான் சொன்னாங்க.. சின்ன சின்ன வேலை எல்லாம் செய்யலாம்னு”
“ஏது நீ செய்யறது எல்லாம் சின்ன வேலையா..ஆளுங்கள வேணாம்னுட்டு வீடு பெருக்கிற.. துணி துவைக்கற.. இதில்லாம சமைக்கற…” என அங்காலய்க்க….
“குனிந்து நிமிர்ந்து வேலை செய்தா தான் சுகப்பிரசவம் ஆகும். எனக்கு சிரமில்லை”
“ஆயாவாலயும் முடியலைல.. சமைக்க மட்டும் ஆள் வச்சுக்கலாமா..”
“நமக்கு தான சமைக்கறது பெரிசா இல்லை. முடியாத போது பார்த்துக்கலாம்” என்றிட…
தனா மனதில் பொறுமிக்கொண்டே அமைதியாக அவனால் முடிந்த உதவிகளை எழிலுக்கு செய்தான். எழிலோ தனாவின் அன்பில் உருகிப் போனாள்.
பூங்கொடி வாழ்க்கையை நினைத்து கோவிந்தன் கவலை பட்டு நிலை குழைந்து போனார். ஊரார் எள்ளல் பேச்சு ஒருபுறம்.. தன்னைப் பார்த்து பார்த்து தந்தை கவலைப்பட்டு உடலை கெடுத்துக் கொள்வது கண்டு பூங்கொடி மௌனமாக கண்ணீர் வடிக்க..
அதை தந்தை பார்த்தால் அவருடைய வருத்தம் அதிகமாகும் என மறைக்க.. மனதுக்குள் போட்டு அழுத்த… அழுத்தம் தாங்காமல் பைத்தியம் பிடிக்கும் நிலையில் …வினையின் வீபரிதம் அறியாமல்… தவறான முடிவை எடுத்தாள்.
காலையில் அறையில் முடங்கிய மகள் மதிய உணவுக்கும் வராமல் போக.. அழைக்க சென்ற கோவிந்தன் மகளின் நிலை கண்டு சத்தமிட்டு கதறி துடிக்க…
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பூங்கொடியை மருத்துவமனையில் அனுமதித்தனர். வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்திருந்தாள்.
பெரிய போராட்டத்திற்கு பிறகே அவளை காப்பாற்ற முடிந்தது. மகளைப் பார்த்து கோவிந்தன் மிகவும் மனமொடிந்துப் போனார்.
இது தனாவின் காதுகளுக்கும் சென்றது.எழிலிடம் சொல்லாமல் பூங்கோடியை பார்க்கச் சென்றான். பார்த்தவுடன் மனதில் பாரம் ஏறிக் கொண்டது.
கொஞ்ச நாள் தந்தையாகும் சந்தோஷத்தில்.. எழிலின் மேலேயே கவனம் இருக்க..அவன் அடிமனதில் அமிழ்ந்து போயிருந்த குற்றவுணர்வு மனைவி பிள்ளை பாசத்தை பின்னுக்கு தள்ளி.. நீர்குமிழி போல மேலெழும்பி வெடித்து கிளம்பியது.
எதிலும் கவனம் வைக்காமல்.. எழிலையும் சட்டை செய்யாமல்… தன் பழைய காதலுக்கு பரிகாரம் தேடும் சிந்தனையில் மூழ்கி போனான்.
வீட்டை விட்டு வெளியே செல்லாததால் எழிலுக்கு தெரியவில்லை தனாவும் எழிலிடம் சொல்ல சங்கடப்பட்டு சொல்லவில்லை.
தனாவை எழிலும் கவனித்து கொண்டு தான் இருந்தாள். ஏதோ தொழில் சிக்கல் என நினைத்து கொண்டாள். இரண்டு நாட்களாகியும் அவன் முகம் தெளியாமல் போக என்ன என கேட்க ஒன்றுமில்லை என மழுப்பிவிட்டான்.
கட்டாந்தரையில் நெல் காய வைத்து கொண்டு இருந்த பெண்கள் புறணி பேசியதில் விபரம் அறிந்து கொண்டாள் எழில்.
தனாவிடம் சென்று கேட்க…
“பூங்கொடிக்கா மருந்து குடிச்சிட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்காங்களா…”
“ஆமாம் உனக்கு யார் சொன்னா..”
“கட்டாந்தரையில் வேல செய்யறவங்க பேசிகிட்டாங்க…”
தனா ஆமாம் எனும் விதமாகதலையாட்டினான். அடுத்து அவள் கேட்ட கேள்வியில் கொஞ்சம் தடுமாறி சமாளித்தான்.
“நீங்க போயி பார்த்திங்களா..அதான் கவலையா இருக்கறிங்களா..”
ஒருநிமிடம் என்ன சொல்வது என தடுமாறி.. பின்பு சுதாரித்து அவசர அவசரமாக இல்லை என தலையாட்டினான்.
இல்லை என சொல்லி பெரிய தவறை செய்தான். போனேன் என உண்மையை சொல்லி இருந்தால் கூட எதார்த்தமாக எடுத்து கொண்டு அமைதியாக இருந்திருப்பாள்.
அவன் பேச்சில் வேறு ஏதோ கவலை போல என சமாதானம் ஆகிவிட்டாள்.
பத்து நாள் மருத்துவமனையில் இருந்து விட்டு பூங்கொடி வீடு திரும்பினாள். அவளை பார்க்க வீட்டிற்கே சென்றான் தனா.
வாய் குடல் எல்லாம் புண்ணாகி சாப்பிட முடியாமல் மிகவும் இளைத்து கருத்திருந்தவளை பார்த்தவனுக்கு மனம் இதுக்கு நீதான் காரணம் என ஓலமிட்டது.
அவளிடமும் கோவிந்தனிடமும் ஆறுதலாக சிறிது நேரம் பேசிவிட்டு வீடு வந்தான்.
தான் மட்டும் சந்தோஷமாக வாழ.. அவள் கஷ்டப்படுகிறாள் என நினைத்து நினைத்து உள்ளுக்குள் மறுகினான். அந்த மறுகலே எழிலை நெருங்க விடாமல் தடுக்க.. எழிலை தவிர்த்தான்.
இரவு வேலை எல்லாம் முடித்துவிட்டு வந்த எழில் கண்டது ஏதோ வீரிய சிந்தனையில் இருந்த கணவனை தான்.
என்னாச்சு.. இன்னும் கவலையா யோசிச்சிட்டு இருக்காங்க.. இன்னும் இவங்க பிரச்சினை தீரலையா என எண்ணிக் கொண்டே..
கணவனின் அருகில் வந்து அவனை நெருங்கி அவன் நெஞ்சில் தலை சாய்ந்தாள். அதை கூட அவன் உணரவில்லை.
தன் தலையை உயர்த்தி தனாவின் முகம் பார்த்து,
“ஏன் மாமா என்ன ப்ராப்ளம். ஏன் எப்பவும் யோசனையா ஒரு மாதிரி இருக்கிறிங்க.. என்கிட்ட கூட சொல்லமாட்டறிங்க…”
அவளிடம் சொல்ல முடியாமல் எரிச்சலாகி “எல்லாம் உன்கிட்ட சொல்லனுமா.. நை நைனு மனுசன நச்சு பண்ணாம தள்ளி படு” என கோபப்பட்டான்.
சட்டென எழிலின் முகம் கூம்பி.. கண்களில் நீர் கரை கட்டி நிற்க.. வேகமாக நகர்ந்து படுத்தாள். தலையணையில் முகம் புதைத்து மௌனமாக அழுதவள் சற்று நேரத்தில் தூங்கிவிட்டாள்.
இதை எதையும் அறியாமல் தன்னுள் மூழ்கி போனான். மறுநாள் காலை எழுந்தும் அவன் பாராமுகமாக இருக்க.. தன்னை சமாதனப் படுத்த ஏதாவது பேசுவான் என அவன் முகம் பார்த்து ஏமாந்து போனாள்.தன்மானம் சீண்டப்பட.. எழிலும் அவனிடம் பேசாமல் அவனின் தேவையை மட்டும் கவனித்தாள்.
அவனோ எழிலுக்கு செய்யும் சின்ன சின்ன உதவிகளை கூட மறந்து தன் போக்கில் இருந்தான். அவனின் உதவிகளை விட இரவில் அவன் தன் பாதம் தாங்கி மென்மையாக பிடித்து விடும் சுகத்திற்காக பெரிதும் ஏங்கினாள்.
இதேநிலை ஒருவாரம் நீடிக்க… அவன் வருவதும் சாப்பிடவும் போகவும் இருக்க… தொழிலில் தான் பெரிய பிரச்சினையோ.. இல்ல வேற எதாவதா.. என யோசித்து குழம்பினாள்.
என்ன என தெரிந்தே ஆகவேண்டும். யாரை கேட்டால் தெரியும். வெற்றியை கேட்கலாம் என முடிவு செய்து வெற்றிக்கு போன் செய்தாள்.
“சொல்லுங்க அண்ணி”
“தம்பி உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் வீட்டுக்கு வாங்க” என சொல்லி வைத்துவிட்டாள்.
வெற்றி என்ன ஏது என தெரியாமல் கொஞ்சம் பதறி தான் வந்தான்.
வந்தவனிடம் எந்த முகாந்திரம் இல்லாமல் நேரடியாகவே விசயத்திற்கு வந்துவிட்டாள்.
“உங்க அண்ணன் பத்து நாளாவே ஏதோ கவலையா இருக்காரு.. என்னனு கேட்டால் சொல்லவே மாட்டேங்கறாரு.. தொழில்ல ஏதாவது சிக்கலா.. “
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை அண்ணி” என்றான் கொஞ்சம் தயக்கமாக..
அவனுக்கு தான் தெரியுமே.. தனா பூங்கொடியை பார்த்து விட்டு வந்ததும்.. பூங்கொடியை பத்தி கருணாவிடம் புலம்பியதும்.. அதற்கு கருணா தனாவை கடிந்து கொண்டதையும்…
அதை எழிலிடம் சொல்லலாமா.. வேணாமா… என தடுமாறி பார்க்க..
அவனின் முகத்தை பார்த்ததும் புரிந்து விட்டது விஷயம் வேற என..
“எதா இருந்தாலும் சொல்லிடுங்க தம்பி. உங்க அண்ணன் அவரா இல்லை.. சதா நேரமும் ஏதோ கவலையோடு யோசனையாவே இருக்காரு.. என்னால பார்க்க முடியலை” என சொல்லும் போதே கண்கள் கலங்கி விட..
பதறி போய் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான். கேட்டவளுக்கோ பூங்கொடியின் தற்கொலை தெரிந்த விஷயம் தான். ஆனால் அதற்காக கணவன் தன்னை தவிர்த்ததை எண்ணி மனசு வலித்தது.
வெற்றிக்கு அண்ணியின் முகத்தை பார்க்க
பரிதாபமாக இருந்தது. தனா மேல் கோபமும் வந்தது. செய்வதறியாது சொல்லி கொண்டு கிளம்பிவிட்டான்.
இத்தனை காலம் தான் காட்டிய அன்புக்கு அர்த்தமில்லாமல் போய்விட்டதே… இன்னும் கணவன் மனதில் அவள் தான் இருக்கிறாளா.. என நினைக்க நினைக்க அவள் காதல் அடிவாங்கியது.
வெகு நேரம் தன்னுள் உழன்று கொண்டு இருந்தவளுக்கு தனா வந்தது கூட தெரியவில்லை. தனா அழைத்து பார்த்து விட்டு தோள் தட்டவும் தான் உணர்வு பெற்றாள்.
“எழில் என்ன சிந்தனை.. வா வந்து சாப்பாடு எடுத்து வை” என சொல்ல..
எதுவும் பேசாமல் பரிமாற அவள் அமைதியை கண்டு மனம் கொஞ்சம் பயப்பட தான் செய்தது. அவன் உள்மனசு ஏதோ பெரியதாக நடக்க போகிறது என மணியடிக்க..
சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு சென்றுவிட்டான்.எழிலும் சாப்பிட்டு எல்லாம் எடுத்து வைத்து விட்டு அறைக்கு வந்து கதவை அடைத்தவள் தனாவை பார்த்து
“உங்களுக்கு என்ன பிரச்சினை எதுக்கு இப்படி இருக்கறிங்க”என தன்மையாக தான் கேட்டாள்.
“இல்லையே எனக்கு எதும் இல்லையே”
அவளுக்கு தெரிந்து விட்டது என அறியாமல் பொய் சொன்னான்.
அவனின் பொய்யில் உள்ளுக்குள் கனன்ற கோபத்தை அடக்கி கொண்டு
“அப்ப ஏன் ஒருமாதிரி குழப்பமா இருக்கறிங்க… மாமா”
“அப்படி எல்லாம் இல்லை நான் நல்லா தான் இருக்கேன்” சுழட்டி அடிக்க போகும் புயலை அறியாமல் மீண்டும் பொய்.
பொங்கி வந்த கோபத்தை பல்லை கடித்து அடக்கி கொண்டு..
“பூங்கொடிக்காவை போயி பார்த்திங்களா..”
“இல்லை நான் போகலை”
அவ்வளவு தான் அடக்கி வைத்த கோபம் எல்லாம் வெடித்து சிதற..
“நீங்க போய் பார்க்கவே இல்லை. ஏன் மாமா பொய் சொல்லறிங்க…”
“நீங்க இரண்டு தடவை போய் பார்த்து இருக்கறிங்க.. அதை என்கிட்ட மறைக்க வேண்டிய அவசியம் என்ன..”
“ஆமாம் போய் பார்த்தேன். அதுக்கு இப்ப என்னங்கற..”
அவள் தெரிந்து கொண்டே கேள்வி கேட்கிறாள் என்ற எரிச்சலில் பதில் சொன்னான்.
“அப்போ அவங்கள நினனைச்சு தான் இத்தனை நாளா என்கிட்ட பேசாம இருந்திங்களா..”
“என்னைய காதலிச்ச பாவத்துக்கு அவ வாழ்க்கையை இழந்துட்டு நிக்கறா…”
“அது அவங்க தலைஎழுத்து.. அவங்க புருஷன் சரியில்லை அதுக்கு நீங்க என்ன பண்ணமுடியும்”
“நான் தான் ஏதாவது பண்ணனும். அவ அப்படி இருக்கும் போது .. நான் சந்தோஷமா பொண்டாட்டி பிள்ளைனு இருக்கறது ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி மனச அறுக்குது..”
அவன் பேச்சு மனசளவில் அவளை நோகடிக்க…
“உங்களுக்கு என்ன மனச அறுக்குது. அப்ப இன்னும் உங்க மனசுல அவங்க நினைப்பு இருக்கா அந்த நினைப்போட தான் என்கூட குடும்பம் நடத்துனிங்களா”என கோபத்துடன் கேட்க..
“ஏய் புரியாம பேசாத. என்னால தான் இப்படி ஆகிடுச்சோனு உள்ளுக்குள்ள குடையுது”
“அவங்க வாழ்க்கையை சரி பண்ண பெத்தவரு சொந்தபந்தம் இருக்கு. நீங்க அனாவசியமா தலையிடாம இருந்தா போதும்”
“என்னால அப்படி எல்லாம் இருக்கமுடியாது”
“ஏன்….ஏன்.. இருக்கமுடியாது. இருந்து தான் ஆகனும். இனி போய் பார்க்கறது .. கவலைபடறது எல்லாம் இருந்திங்க.. நான் சும்மா இருக்கமாட்டேன் பார்த்துங்க” என சத்தமிட..
“என்ன பண்ணுவ நீ.. என்ன மிரட்டறியா… நான் அவ வாழ்க்கைக்கு ஏதாவது பண்ண தான் போறேன். அத நீன்னு இல்ல யாரு சொன்னாலும் கேட்கமாட்டேன்.”
“நான் முக்கியமா..இல்ல அந்த சிறுக்கி முக்கியமா. இப்பவே முடிவ பண்ணுங்க”
“மரியாதை இல்லாம பேசின பல்லப் பேத்துடுவேன்”
“ஓ..ஓ..ஓ..அவளுக்காக என்ன அடிப்பிங்களா…எங்க அடிங்க பார்க்கலாம்”என சிலிர்த்து கொண்டு நின்றாள்.
அவள் எதிர்க்க.. இவனுக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது. கோபத்தில் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசி வைத்தான்.
“நான் பூங்கொடிய விரும்பினேன் தெரிஞ்சிருந்தும்… கல்யாணத்துல விருப்பம் இல்லாம இருந்தவன் பின்னாடியே அலைஞ்சு தான கட்டிகிட்ட..உனக்கு எல்லாம் அவள பேசற தகுதி கிடையாது” என மூர்க்கமாக கத்த…
அவனின் சுடு வார்த்தைகள் மிக சரியாக அவள் காதல் நெஞ்சை குறிபார்த்து தாக்க..தன் காதலை கொச்சைப்படுத்தி விட்டவனை வெறித்த பார்வை பார்த்தாள்.
அவளை பார்க்க பிடிக்காமல் “ச்சை’என்று வெறுப்பாக தன் பெற்றோர் அறையில் புகுந்து கொண்டான்.
அவனின் சுடுசொல்லையும் வெறுப்பையும் தாங்காமல் மௌனமாக கண்ணீர் வடித்தவள் விடியலுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறினாள்.
கொட்டிவிட்டால் நெல்லை அள்ளலாம்.சொல்லை அள்ளமுடியுமா..
ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் . இதை அறியாமல் தனா சொல்லிய சொற்கள் அவன் வாழ்க்கையை வினாவுக்கு உள்ளாக்கியது
Thappu pannittey dhana
Next ud sekkaram podunga
asmiYpUCt
wlLrghoIkdKQVM
lFiJejnfPtH
copnBuPkaIvtAEe