4. மோக முத்தாடு அசுரா
முல்லையோ , இனியாக்கு ஆபத்து வந்துவிடும் என அஞ்சி தன் மார்புக்கூட்டோடு இறுகிப்பிடித்துத்திருந்தாள்.. சிம்மன் இருக்கும்போது இனியாவை யாரும் எதுவும் செய்து விட முடியாதுதான்.. இருந்தாலும் முல்லைக்கு பயம் கவ்விக்கொண்டது.
“முல்லை பாப்பாவ வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போ” என அதட்டல் போட்டு இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை கையிலெடுத்து சத்தம் காட்டாமல் அந்த உருவத்தின் பக்கம் சென்றான்.
முல்லை வீட்டுக்குள் போக பார்க்க.. “ம்மா வீட்டுக்குள்ள போக வேணாம்.. அந்தக் கல்லை எடுத்து திருடன் மண்டையில நாம போடலாம்” என்று இனியா, வர்மன் வாரிசென காட்டி தைரியமாக பேசியது.
சிம்மனின் காதில் இனியா பேசுவது கேட்டுக்கொண்டுதானிருந்தது.. எதிரியை தாக்கப்போகும் நேரத்தில் கூட என்னோட நண்பன் வர்மன் வாரிசு சோடை போகல.. என்று மெலிதான சிரிப்புடன் அந்த உருவத்தை நெருங்கி போய் தன் கைவளைவில் கொண்டு வந்து கத்தியை அந்த உருவத்தின் கழுத்தில் வைத்துவிட்டான்.
அந்த உருவம் உடல் முழுவதும் எண்ணெய் பூசியிருந்தது.. சிம்மனின் பிடியிலிருந்து நழுவப் பார்க்க.. கழுத்தில் கத்தியை இன்னும் அழுத்த.. அந்த உருவம் துவண்டு போக அப்படியே வெளிச்சத்துக்கு இழுத்துக்கொண்டு வந்துவிட்டான். அது ஒரு ஆண்தான்.. அதற்குள் சிம்மனின் ஆட்கள் ஓடிவர.. தூணில் நிற்க வைத்து கழுத்திலிருந்து கத்தியை நகட்டி எடுக்க.. அவன் இரும ஆரம்பித்தான்..
“டேய் தண்ணி கொண்டு வாங்கடா” என்றதும் தண்ணீர் பாட்டிலை ஒருவன் நீட்ட தண்ணீர் பாட்டிலை அவன் முன் நீட்டி “தண்ணீயை குடிச்சிட்டு நீ யாருங்குற உண்மைய சொல்ற” என்று சர்ட்டை மடித்து விட்டான் சிம்மன்.
அவனோ தண்ணீரை வாங்கிக்குடித்துவிட்டு “நான் சொல்ல மாட்டேன்” என்று தலையை ஆட்டினான்.
“அடிங்க யாருகிட்ட நீ மாட்டியிருக்க தெரியுமா?” நாக்கை கடித்துக்கொண்டு “நீ இப்ப உண்மைய சொன்னீனா உன்ன விட்டிருவேன்.. இல்ல கண்டத்துண்டமா வெட்டி ஆத்துல போட்டிருவேன்” என்று கத்தியை எடுத்து அவன் கழுத்தில் வைத்து கோடிலிழுக்க..
இப்போது கொன்னிடுவாங்களோ என அச்சம் அவனுக்கு வர.. “சொ..சொல்றேன்” என்று அவன் தடுமாறி பேச
“இத முதல்ல சொல்ல வேண்டியது தான” என்று முல்லையின் இடுப்பில் இருந்த இனியா இதழை கோணித்து காட்டியது
“சிம்மா நான் உன்கிட்ட வரேன்” என்று சத்தம் கொடுத்தது இனியா ..
அந்த நபரின் கழுத்திலிருந்த கத்தியை எடுத்துவிட்டு “இவனை பிடிச்சு கட்டிப்போடுங்கடா” என்று முல்லையின் பக்கம் வந்து இனியாவை தூக்கி வைத்துக்கொண்டான் ..
“சிம்மா, நான் இவன ஒரு அறை விடட்டா” என்று காதோரம் குசு குசுவென பேசியது
“இனியாஆஆ” என்று முல்லை சத்தம் போட்டதும் ..
“ஏன் முல்லை குழந்தையை சத்தம் போடுற என்னோட பொண்ணு தைரியமா இருக்கான்னு பெருமைபடு”
“அண்ணா ஏற்கனவே நான் என்னோட உசிரை தொலைச்சிட்டு தவிக்குறேன்.. இவ எனக்கு வேணும்” என்று கண் கலக்கியவள் சிம்மனின் தோளில் இருந்த இனியாவை பார்த்து “வாடி அப்பனை போல துள்ளிக்கிட்டு இருக்கா” என்று குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள்.
முல்லையின் அங்கலாய்ப்பை புரிந்து கொண்டவன் பெரும்மூச்சுவிட்டு அந்த நபரை நோக்கி திரும்பினான்.
“சொல்லுடா யாரு உன்னை அனுப்பினா?” என் அவனின் கையை பிடித்து முறுக்க
“நா.. நான் சொல்லுறேன்.. என்னை எம்.எல்.ஏதான் அனுப்பினாரு.. அவங்க பொண்ணு குழந்தைய கடத்திட்டு வரச்சொன்னாரு.. எனக்கு அவ்ளோதான் தெரியும்.. என்னை விட்டிருக்க நான் புள்ளை குட்டிக்காரன்” என்று திக்கி திணறி பேசினான் .
சிம்மன் எம்.எல்.ஏ சந்தானத்திற்கு போன் போட்டு “என்ன சந்தானம் என்னை பத்தி தெரிந்தும் நீ உன்னோட நொட்ட புத்தியை காட்டுறீயா.. இந்த சிம்மன் பவர் என்னன்னு தெரியும்ல.. குடும்பத்தோட தூக்கிடுவேன் பார்த்துக்கோ.. இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங்.. இன்னொரு முறை இந்த மாதரி கேவலமான செயலை செய்தீனா இந்த சிம்மனோட இன்னொரு முகத்தை நீ பார்க்க வேண்டியிருக்கும்” என்று சிங்கம் போல கர்ஜித்து போனை அணைத்தான்.
“ச்சே இந்த சிம்மனை எதுவும் பண்ண முடியலையே” என்று சரக்கை குடித்துக்கொண்டிருந்த கண்ணாடி கிளாசை போட்டு உடைத்தான் சந்தானம்.. தன் பேத்தியை கூட்டிட்டு வந்துவிட்டால் முல்லை வந்து தான் ஆகணும்.. அவளுக்கு அரசியலில் முக்கிய புள்ளியாக இருக்கும் தர்மனுக்கு கல்யாணம் செய்துவிடலாம்.. அரசியலில் அடுத்த நிலைக்கு போக வேண்டும்.. என்று எண்ணித்தான் குழந்தையை கடத்த சொன்னான்.. அது நடக்கவில்லையென்றதும் சந்தானம் சிம்மன் மீது ஆத்திரப்பட்டான்.. சிம்மன் இருக்கும் வரை இனியாவையும் முல்லையையும் ஒன்றும் செய்ய முடியாதென சந்தானத்திற்கு தெரியவில்லை.
சந்தானத்திடம் போன் பேசி வைத்து விட்டு “டேய் இவன் வெறும் கூலிக்கு மாறடிப்பவன் இவன விடுங்கடா” என்றவன் அவன் அடித்த மயக்கத்தில் மயக்கி விழப் போக.. அவனை தாங்கிப்பிடித்து “இவனுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்து அனுப்பிவிடுங்கடா” என்று வீட்டுக்குள் சென்றான் சிம்மன்.. சிம்மனின் குணமே இதுதான்.. சாப்பாடு போட்டு அடிவாங்கியவர்கள் ஏராளம்.
வீட்டுக்குள் சென்றதும் முல்லை அறையின் கதவை தட்ட “அவ தூங்கிட்டா அண்ணா.. நீங்க சாப்பிட்டு படுங்க” என முல்லை கடுப்பாக குரல் கொடுத்தாள்
“சிம்மா நான் தூங்கல” என்று முல்லையின் அணைப்பிலிருந்து குழந்தை எழுந்து ஓடி வந்து அவன் காலை கட்டிப்பிடித்துக்கொண்டது. முல்லைக்கு கண்ணீரே வந்து விட்டது..
தன் குழந்தை தன்னை விட சிம்மனிடம் ஒன்றிவிடுகிறாளே என்று முல்லைக்கு சிம்மனின் மீது கோவம்தான்.. என்ன செய்வது சிம்மனின் பாதுகாப்பு அவளுக்கு கர்ணனின் கவச குண்டலமாய் இருப்பதில் தான் நல்லது என்று அமைதியாய் இருந்தாள்..
இரவில் தூங்கப்போகும் முன் குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுக்காமல் சிம்மனுக்கு தூக்கம் வராது.. அதனால்தான் சிம்மன் முல்லையின் அறையின் முன் நின்றான்.. முல்லை, சிம்மன் இந்த குழந்தைக்கு ரவுடிசியத்தை கத்து கொடுத்துவிடுவானோ.. என்று சிம்மன் மேல் அதீத கோவத்தில்தான் குழந்தை தூக்கிட்டா என்று சொல்லிவிட்டாள்.
இனியாவை தூக்கிக்கொண்டு சோபாவில் அமர்ந்து இருவரும் கிரிக்கெட் மேட்ச் பார்க்கத் தொடங்கினர்.. சிறிது நேரத்தில் இனியா தூங்கிவிட முல்லை ஹாலுக்கு வந்தவள்.. “அண்ணே சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க இனிமே அவகிட்ட கொஞ்சம் தள்ளியே இருங்க.. என் ப்ரண்ட் அமெரிக்கால இருக்கா.. நான் அங்க இனியாவ கூட்டிட்டுப் போயிடுறேன் எங்களை அனுப்பி விடுங்க” என்றாள் மெல்லிய குரலில் ..
“ஏன் முல்லை என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா.. என்னோட நண்பன் இல்லாத குறைய என் பொண்ணு இனியா தான் தீர்த்து வைக்குறா.. இன்னிக்கு நடந்த சம்பவத்த வைச்சு பாப்பாவ என்கிட்டயிருந்து பிரிக்க நினைக்காதம்மா.. அது உன்னால முடியாது.. அதைவிட நீயும் இனிக்குட்டியும் என் பொறுப்புல இருக்க வரைத்தான் பாதுகாப்பு.. உங்களை எங்கயும் அனுப்பமாட்டேன்” என்று குழந்தையை தூக்கி முல்லையின் அறைக்குள் சென்று படுக்க வைக்க குழந்தை தூக்கத்தில் கன்னத்தில் குழி விழ சிரிக்க “வர்மா உன் நியாகம் என் நெஞ்சிலே இருந்துட்டே இருக்குடா” என்று மெலிதாக புன்னகைத்து இனியாவின் கன்னத்தில் முத்தமிட்டு வெளியே வந்தான்.
வாசல் கதவை தாள் போட போன முல்லை வெளியே நின்றிருந்த பெண்ணைக் கண்டு “யாரும்மா நீ இன்னேரத்துல வந்திருக்க” என்று கேட்டுக்கொண்டிருந்தாள்
“நா.நான்.. சிம்மன் சார பார்க்க வந்திருக்கேன்” என்று கூறினாள்.. வந்திருப்பது வஞ்சிக்கொடிதான்.
எந்த நேரத்திலும் முல்லைக்கு யாராலும் ஆபத்து வரலாம் எண்ணிய சிம்மன் “முல்லை நீ உள்ளார வாம்மா” என்றவன் கதவை நோக்கி வேகமாக வந்தான்.. அங்கே காலையில் பார்த்த வஞ்சிக்கொடித்தான் நின்றிருந்தாள்.
“சார் என்னை தெரியுதா” என்று சிம்மன் பேசும்முன் வீட்டுக்குள்ளே வந்துவிட்டாள்..
“ஏய் உன்னைத்தான் ஹாஸ்டல விடச்சொன்னேன்ல.. இங்க எதுக்கு வந்த” என்று வஞ்சியிடம் எரிந்து விழுந்தான்.
“சார் அந்த ஹாஸ்டல இருக்க பொம்பள பிள்ளைங்க என்னப் பார்த்து பட்டிக்காடுன்னு கிண்டல் பண்ணுறாங்க.. வாட்ச்மேன் கிட்ட உங்க பெயர சொன்னேன் அவரு உங்க வீட்டுக்கு போக வழி சொன்னாரு.. அதான் நான் இங்க வந்தேன்… நீங்க ஏன் வந்தேன்னு வையுறீங்க” என்று இதழ் பிதுக்கி அழ ஆரம்பித்தாள்
“இம்சை.. அழ ஆரம்பிச்சிட்டா இனி விளங்கின மாதிரி தான்” என்று பல்லைக்கடித்தவன்..
“வா.. உன்னை யாரு பட்டிக்காடுனு கிண்டல் செய்தாங்கன்னு நான் வார்டன் கிட்ட கேட்குறேன் போலாம் . என்று அவள் கையைப் பிடித்தான்
முல்லையை அவர்கள் இருவரும் பேசுவது புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்..
“அக்கா.. அக்கா.. இவ்ளோ பெரிய வீட்ல எனக்கு ஒரு வேலை போட்டுக்கொடுங்களேன்.. அந்த ஹாஸ்டல் எனக்கு பிடிக்கல.. நான் இங்கயே தங்கிக்குறேன்” என்று முகத்தை அப்பாவி போல வைத்து முல்லையின் கையை பிடித்துக்கொண்டு கேட்டாள் வஞ்சிக்கோடி
வஞ்சியை பார்க்க பாவமாக இருந்தது முல்லைக்கு..
“அக்கா என்ன பேசாம நிற்குறீங்க.. எனக்கு கொஞ்சூண்டு இந்த வீட்ல இடம் கொடுங்க.. இந்த வீட்டை பெருக்குறது, துடைக்கறது.. அப்புறம் சாப்பாடு குழம்பு எல்லாம் சூப்பரா செய்வேன்.. எங்க ஊர்ல விசேஷம்னா என்னை தான் சாப்பாடு செய்ய கூப்பிடுவாங்க.. ஒரு ஊருக்கே சாப்பாடு செய்துபுடுவேன்” என்று கையை விரித்து கதையாய் சொல்லிக்கொண்டிருந்தாள் வஞ்சிக்கொடி.
“இந்தா பொண்ணு உன்பேரு என்ன”
“ஹா வஞ்சிக்கொடி நான் ரெண்டு மூணு முறை காலையில சொன்ன.. நீங்கதான கவனிக்கல” என்று இதழை கோணிக் காண்பிக்க.
“அடிக்கழுதை.. இங்கயெல்லாம் உன்ன தங்க வைக்க முடியாது வா உன்னை ஹாஸ்டல விடுறேன்” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து வெளியே வந்தான்.
“அச்சோ நான் போகல.. போகல” என்று அவன் கையை உதறிவிட்டாள் ..
முல்லை வெளியே வந்தவள் “அண்ணே அந்தப் பொண்ணு இங்கயே இருக்கட்டும்.. மங்கா அடிக்கடி ஊருக்குப் போயிடுறா.. எனக்கும் துணையா இருக்கட்டும்” என்றவுடன்
“இவ யாருன்னு தெரியாம நம்பக்கூடாதுமா.. காலையில வண்டியில வந்து விழுந்தா.. ரெண்டு பேர் இவள பார்த்து ஓடி வந்தானுக.. என்னோட கார பார்த்து ஒடிட்டானுங்க.. ஏன் அவனுங்க இவ வைத்த ஆளா கூட இருக்கலாம்” என்று வஞ்சிக்கொடியை முறைத்துப்பார்த்தான்
“அச்சோ சாரே.. என் பாட்டி மேல சத்தியமா! என்னை அந்த காவாலி பயலுக துரத்தித்தான் வந்தாக என்னை நம்புங்களேன்” என்று நிலத்தில் கீழே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.
வஞ்சி அழுவதை பார்த்து பாவமாக இருக்க “அண்ணே எனக்கு இந்தப் பொண்ண பார்த்தா கெட்டவங்க போல தெரியல” என்று சிம்மனிடம் கூறியவள்
“நீ வாம்மா” என்று வஞ்சியின் கைப்பிடித்து தூக்கி வீட்டுக்குள் கூட்டிச்சென்றாள்.
உள்ளே போக தலையை திருப்பி “எப்படி” என்று புருவம் உயர்த்தி சிம்மனிடம் பழிப்பு காட்டிச் சென்றாள்.
“போடி போ.. இந்த சிம்மன் கிட்ட உன்னோட பப்பு வேகாது.. இன்னும் ஒருவாரத்துல உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்புறேன்”என்று கோவத்துடன் கதவை லாக்செய்து உள்ளே வந்தான்.
முல்லை அவளது அறைக்குள் கூட்டிச்சென்று படுக்க பாயை விரித்து “இன்னிக்கு இதுல படுத்துக்கோம்மா நாளைக்கு கட்டில் கொண்டு போடச் சொல்லுறேன்” என்று காபோர்டில் இருந்த பெட்சிட் எடுத்து வஞ்சியின் கையில் கொடுத்தாள் ..
வஞ்சியோ கட்டிலில் உறங்கும் இனியாவின் பக்கம் சென்று “இந்த பாப்பா யாரு அழகாயிருக்கு” என்று கூறி குழந்தையின் நெற்றியில் முத்தம் வைத்தாள்.
“என்னோட குழந்தைதாம்மா” என்று மெல்லிய புன்னகையுடன் கூற..
“அப்ப வெளியே இருக்கறவங்க உங்க அண்ணாவ” என்று துருவி துருவி கண்ணை விரித்து ஆவலாக கேட்டாள்.
“இப்பவே எல்லாம் சொல்ல முடியாதுமா அது பெரிய கதை.. நீ இங்க தான இருக்கப் போற நீயே தெரிஞ்சுக்குவ இப்ப தூங்கு” என்று கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டாள் முல்லை.
“எல்லாம் மர்மமா இருக்குப்பா.. நமக்கென்ன மூணு வேளை சோறு.. தீபாவளி பொங்கல்னா புது பாவாடை தாவணி” என்று தாடையை கன்னத்தில் இடித்து விட்டு பாயில் படுத்துவிட்டாள்.
அதிகாலையில் எழுந்த வஞ்சி குளித்துவிட்டு தன் பையில் வைத்திருந்த பாவாடை தாவணியை போட்டுக்கொண்டு முல்லையை பார்த்தாள்.. அவள் நெற்றியில் பொட்டில்லாமல் இருப்பதையும் அவள் கழுத்தில் தாலி இல்லாததையும் பார்த்து இந்த சின்ன வயசுல இவங்களுக்கு இந்த நிலைமையா.. என்று பெருமூச்சு விட்டு வாசல் தெளிந்து கோலம் போட வெளியே சென்றாள்.
அங்கே காவலுக்கு இருந்தவரிடம் “அண்ணே இங்க மாட்டு சாணம் கிடைக்குமா” என்று கேட்க.. அவர் ஒரு நிமிடம் யோசித்து பக்கத்தில் மாட்டுக்கொட்டகையில் இருந்து சாணம் கொண்டு வந்து கொடுக்க வாசல் தெளித்து கோலம் போட்டு சாணியில் பிள்ளையார் பிடித்து தோட்டத்திலிருந்து பூவை பறித்து வந்து பிள்ளையாரில் சொருகி வைத்து திருப்பினாள்
சிம்மன் தோட்டத்தில் உள்ளே ஜிம் வைத்திருந்தான்.. காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது அவனது பழக்கம்.. இன்றும் எழுந்து வெளியே வந்தவன் சாணியில் கால் வைக்க டைல்ஸ் தரை வழுக்கிக் கொண்டு போக அவன் தடுமாற..
“அச்சோ சார்” என்று கையிலிருந்த பக்கெட்டை கீழே வைத்துவிட்டு சிம்மனின் கையைப் பிடிக்க இருவரும் புல் தரையில் விழுந்தனர்.. உடற்பயிற்சி செய்யத்தான் போறோம்.. என அவன் கையில்லாத பனியனுடன் வெளியே வந்திருந்தான்.. சிம்மன் மேல் வஞ்சி படுத்திருக்க அவள் எழும்ப பேலன்ஸ் தவற அவனது புடை போட்ட நெஞ்சத்தில் வஞ்சியின் பட்டு ரோஜா இதழ் பசக்கென்று பதிந்து போக.
“ஏய் எழுந்திரிடி” என்று அவளின் வெற்றிடையில் அழுந்த கைப்போட்டு தள்ளி விட்டு எழுந்து நின்று
“அறிவு கெட்டவளே டைல்ஸ் தரையில யாராவது சாணி போட்டுத்தெளிப்பாங்களா” என்று அவளை அடிக்க கையை ஓங்கினான்
“என்ன பொட்டப்புள்ளைய அடிக்க கையை ஓங்குறீங்க.. இதுதான் உங்க ஊரு பழக்கமா.. வீட்ல சாணி தெளித்து கோலம் போட்டா லட்சுமி தங்கும்னு பெரியவங்க சொல்வாங்க.. அதான் சாணிதெளித்து கோலம் போட்டேன்” என்று தாவணியை உதறி இடுப்பில்சொருக.. அவள் இடையில் விழுந்த மடிப்பு அவன் கண்ணுக்கு தெரிந்தது
இந்த இம்சை வேற என்னை ஒரு வழி பண்ணுது என்று வாய்க்குள் முனகியவன் ..
“இனி இந்த மாதிரி லூசு போல வேலையெல்லாம் செய்யாத.. அப்புறம் கழுத்த புடிச்சு வெளியே தள்ளிருவேன் பார்த்துக்க” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு ஜிம்முக்கு சென்றான் சிம்மன் .