ATM Tamil Romantic Novels

6. மோக முத்தாடு அசுரா

6. மோக முத்தாடு அசுரா

முல்லையை பரிசோதித்த டாக்டர் “இவங்கள உடனே அட்மிட் பண்ணுங்க ஒழுங்கா சாப்டறது இல்லையா? .. ரொம்ப அனிமிக்கா இருக்காங்க.. இப்ப இன்ஜக்சன் போட்டிருக்கேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல கண் முழிச்சுடுவாங்க.. கண் முழிச்சதும் நான் வந்து செக் பண்ணுறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றவர் பின்னால் சென்ற சிம்மனோ “டாக்டர் என் தங்கச்சிக்கு வேற ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே” என்று தவித்து போய் சிம்மன் கேட்க

“வேற எந்த ப்ராப்ளமும் இல்லை.. பயப்படாதீங்க சிம்மன்” என்று அவன் தோளை தட்டிக்கொடுத்துச் சென்றார்.

இனியா அழுது அழுது சிம்மனின் தோளில் தூங்கிவிட்டது.. வஞ்சியிடம் போக மறுத்துவிட்டது.. வஞ்சிக்கொடி முல்லை அருகே உட்கார்ந்து கொண்டாள்.. சிம்மன், இனியாவை தோளில் சுமந்தபடி நடப்பதை பார்த்த வஞ்சிக்கொடி கேட்கலாமா? வேண்டாமா? என்று சிம்மனையே பார்த்திருந்தாள்.

வஞ்சியின் முகத்தைப் பார்த்தவன்.. “என்ன வேணும் உனக்கு ஏதோ சந்தையில ஆடு திருடினது போல பார்த்திட்டிருக்க” என்று அவளை நக்கலாக கேட்க.

யோவ் உனக்கு ரொம்ப குசும்புதான்.. என்று மனதில் நினைத்து “ச்சே..ச்சே” அப்படியில்லை சாரே.. நீங்க பாப்பாவ தோள்லையே வச்சிருங்கீங்களே.. உங்களுக்கு சிரமமா இருக்கும்ல.. கொஞ்ச நேரம் நான் வாங்கி மடியில வச்சிக்கவான்னு கேட்கலாம்னு பார்த்தேன்” என்று இழுத்து ராகம் போல கேட்க.

“என்னோட பொண்ண நான் விடிய விடிய கூட சுமப்பேன் உனக்கென்ன வந்தது.. நீ வாய வச்சிகிட்டு சும்மா இருந்தீனா அதே போதும்.. மயக்கத்துல இருக்க பொண்ணக் கூட நீ பேசியே மயக்கம் தெளியவச்சிடுவ.. முதல நீ வீட்டுக்குப் போ” என்று அவளிடம் எரிந்து விழுந்தான்.. உண்மையில் முல்லை மயங்கி விழுந்ததும் அவளை தூங்கிட்டு வரும்போது வஞ்சியும் அழுதுவிட்டாள்.. காரில் வரும்போது கார் கண்ணாடியில் பார்த்துட்டுதானே வந்தான் சிம்மன்.. வஞ்சி மீது எங்கே காதல் வந்துவிடுமோ.. என்று பயந்துதான் அவளிடம் காய்ந்து விழுகிறான்.

“சார் உங்களுக்கு போய் பாவம் பார்த்தேன் பாருங்க என்னைய சொல்லோணும்” என்று முகத்தை வெட்டிக்கொண்டு.. இதழைக் கோணி வஞ்சி இது உனக்கு தேவைதானா என்று தனக்குள் பேசிக்கொண்டிருந்தாள்.

இனியா தூக்கத்திலேயே சிணுங்க ஆரம்பிக்க சிம்மன் தட்டி தட்டிக்கொடுக்க..

‘சும்மா தட்டிக்கொடுத்தா குழந்தை வயிறு நிரம்பிறுமா என்ன? பாப்பா பாவம் இனி நம்மள திட்டினாலும் பரவால’ என்று நினைத்து தைரியத்தை வரவழைத்து..

“சார் பாப்பாக்கு பசிக்கும் போல அதான் சிணுங்குறா.. பால் வாங்கிட்டு வாங்க.. நான் இனியாவ வச்சிருக்கேன்” என்று அவனிடம் இப்போதும் தைரியமாக கேட்டுவிட்டாள்.

“சரி நீ நல்லா சம்மணம் போட்டு உட்காரு இனியாவ உன் மடியில படுக்க வைக்குறேன்” என குழந்தையை வஞ்சியின் மடியில் படுக்க வைக்கும் போது அவனது கைவிரல் அவளது விரலோடு உரசி வாங்க.. அவளோ ஜிக் ஜாக்காக உடலை நெளிக்க..

அவனது கைவிரல்கள் அவளது தொடையில் உரசிட அவளுக்கு கூச்சம் ஏற்பட்டு உடம்பை எக்கி உட்கார்ந்து தொண்டைக்குழியில் எச்சில் விழுங்கினாள்.. ஆனால் குழந்தையை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள்.. அவளது முகத்தை அவனும் அப்போதுதான் பார்த்தான்.. சட்டென்று கையை எடுத்துக்கொண்டு வேறு பக்கம் பார்த்து “சாரி தெரியாம கைப்பட்டிருச்சு” என்று தாடையை தேய்த்து வேக எட்டு வைத்து பால் வாங்கச் சென்றுவிட்டான்.

கேரள மாநிலம் பாலக்காடு போலீஸ் ஸ்டேசனுக்குள் ஒருவன் மீசையை முறுக்கி விட்டு “ஏடா பட்டி போட்ட மகனே! நீ ஒரு சாதுவான அம்மையோட தாலி மாலைய பொட்டிச்சி எடுத்துட்டு வந்தது எந்து தைரியத்தினாலோடா” என்று அவன் கன்னத்தில் ஓங்கி மாறி மாறி அடிவிழ அவன் குட்டிக்கரணம் போட்டு சுவற்றோடு பல்லி போல ஒட்டிக்கிடந்தான்.

“ஞான் காளிங்க வர்மன் டே” என சட்டை பட்டனை திறந்து விட்டு சுவற்றில் பல்லி போல ஒட்டிக்கிடந்தவனின் சட்டையைப் பிடித்து இழுத்து அவன் நெஞ்சில் காலை வைத்து மிதித்தவன்

“நீ பொட்டிச்ச மாலை எவடே” என லத்தியால் ஓங்கி அடிக்கப் போக..

காளிங்க வர்மனின் அடியை இனியும் தாங்க முடியாமல் “அய்யோ சாரே இதே மாலை” என்று திருடன் பாக்கெட்டிலிருந்து மாலையை எடுத்து காளிங்கவர்மன் கையில்.. திருடன் கைகள் நடுங்கியபடி கொடுத்தான்.
மாலையை வாங்கியவன் “அம்மே இதா நிங்களோட மாலை” என்றதும்..

அந்த மூதாட்டி மாலையை வாங்கிப் பார்த்து விட்டு “இதே” என்று கையில் வைத்துக்கொண்டார்.

“ஏடே பட்டி” என்று அவனை மீண்டும் லத்தியால் அடித்தான் காளிங்க வர்மன் .

“சாரே இனி அவன அடிக்கண்டா” என்று அந்த மூதாட்டி லத்தியை பிடித்துக்கொண்டார்.

“இது போல கள்ளனை விடக்கூடாது” என்று அவனை தூக்கி உட்கார வைத்து கான்ஸ்டபிளிடம் தண்ணீர் கொடுத்து சாப்பாடு வாங்கிக்கொடுக்கச் சொன்னான்.

“வளர நன்றி மோனே” என்று அந்த மூதாட்டி காளிங்க வர்மனுக்கு நன்றி சொல்லி கிளம்பியதும்..

எனக்கு இதுக்கு மேல மலையாளம் வரல.. அதனால தமிழையே வர்மனை பேச சொல்லலாம். காளிங்கனுக்கு எல்லா மொழியும் அத்துபடி..

காளிங்க வர்மனின் ஊர் பாலக்காடுக்கு அருகில் கல்பாத்தி கிராமம்.. அவனது தந்தையும், தாயும் அவன் சிறு வயதிலேயே இறந்து விட சித்தப்பா வீட்டில்தான் வளர்ந்தான்.. அவனுக்கு சிறுவயதிலிருந்து போலீஸ் ஆக வேண்டுமென்று ஆசை.. அதுவும் நேர்மையான போலீஸ் ஆபிஸராக இருக்கணும் என்று விருப்பப்பட்டு இப்போது ஏ.எஸ்.பி யாக இருக்கிறான்.. அவன் மனைவி பார்வதி இவனுக்கு ஒரு மகன் அஜய் வர்மன் மூணு வயது.. காளிங்க வர்மன் என்றாலே பாலக்காடு நடுநடுங்கும்.. அவன் ஜீப்பில் ஏறி உட்காரும் அழகே தனி.. மீசையை முறுக்கி விடும் அழகும் இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கத்தூண்டும்.. படிக்கட்டு தேகம்… திருடன் அவனிடம் தப்பித்து ஓடும் போது அவனை எட்டி நடந்தே பிடித்துவிடுவான் கால்கள் அவ்வளவு நீளம்.. அவன் கைகள் மொறமொறவென காப்பு காய்த்து இருக்கும்.. ஒரு அறை விட்டால் நாலு நாள் எழுந்திருக்க முடியாது.. சரியான முன் கோவக்காரன்… ஆனால் போலீஸ் ஸ்டேசன் தாண்டி வீட்டுக்குள் ஜீப்பை நிப்பாட்டியதும் அவனின் மகன் அஜய் அச்சான்னு ஓடி வரும் போது “என் சக்கரகட்டி மகனே” என்று தூக்கி வைத்து கொஞ்சுவான்.. அவன் கோபம் எல்லாத்தையும் ஸ்டேசனிலேயே மறந்துவிடுவான்.

அவனது மனைவி பார்வதியை அவ்வளவு விரும்பினான்.. மூவரும் சந்தோசமாகதத்தான் இருந்தனர்.. தீடிரென பார்வதிக்கு வயிற்று வலி வர ஹாஸ்பிட்டல் கூட்டிச்சென்றான்.. அவளை பரிசோத்த டாக்டர் வயிற்றில் கட்டி இருக்கு.. இவங்க உங்ககிட்ட சொல்லாம விட்டுட்டாங்க.. அது இப்ப பெரிசா ஆகிட்டிச்சு.. இவங்கள சென்னைல இருக்க ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போங்க.. எனக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காங்க என்று கூற.. பார்வதியை தன்னிடம் உண்மையை மறைத்து கோவம் கொண்டு முறைத்து பார்த்து மனைவி மேல் அவனுக்கு கோபம் தான் அதைக் காட்ட இது நேரமில்லை.. என அப்போதே சென்னைக்கு அழைத்து வந்து டிரீட்மெண்ட் பார்த்து கூட்டி வந்து விட்டான்.. இன்று மாலை தான் பார்வதிக்கு ஆப்ரேசன்.. பார்வதியை கூட்டிக்கொண்டு சென்னை கிளம்பும்போது ஐ.ஜி ஆபிஸிலிருந்து காளிங்கனுக்கு போன்வர.. அவன் போக வேண்டிய கட்டாயம் இருக்க.. தாடை தடவி காளிங்கன் யோசிக்க..

“சேட்டா நீங்க கிளம்புங்க .. அப்புறம் போலாம்” என்று பார்வதி அவள் வலியை மறைத்து அவள் பேச

பார்வதியின் நெற்றியில் முத்தமிட்டு “கவலைப்படவேண்டாம்டி.. நான் சீக்கிரம் வரேன்” என்று அவனது சித்தப்பாவுடன் அனுப்பி வைத்தான்.

“பார்வதி போகும் போது திரும்பி பார்த்து “அஜய பத்திரமா பார்த்துக்கோங்க” என்று சொல்லியவள் ஓடி வந்து காளிங்கனின் கையை பிடித்து கொண்டாள்

“லூசு என்ன பேசுறமா நீ.. நீங்க முன்ன போங்க அஜயை நான் ஈவ்னிங் கூட்டிட்டு வரேன்” என்று யூனிபார்முடன் மனமே இல்லாமல் கடமைக்காக ஐ.ஜி ஆபிஸ் கிளம்பினான்.

பார்வதியும், காளிங்கனின் சித்தப்பாவும் சென்னைக்கு செல்ல ப்ளைட்டில் ஏறினர்.. அவளுக்கு ரொம்ப வயிறு வலி இருக்குன்னு டிரைன்ல போனா நேரம் ஆகுமென ப்ளைட் புக் செய்திருந்தான்.

இருவரும் சென்னை ஏர்போட்டிலிருந்து கிளம்ப ஹாஸ்பிட்டலுக்கு கால் டாக்சியில் வர அது ஹாஸ்பிட்டல் முன்னே டயர் வெடித்து அங்கே இருந்த பெரிய மரத்தில் மோதி நின்றது.. காளிங்கனின் சித்தப்பா அந்த இடத்திலேயே இறந்துவிட.. பார்வதிக்கு உயிர் இருந்தது..

குழந்தைக்கு பால் வாங்கச் சென்ற சிம்மன் கார் ஆக்சிடெண்ட் ஆனது கண்டு அங்கே ஓடிச்சென்றான்.. அனைவரும் காரின் பக்கம் போகாமல் போலீஸ் கேஸ் ஆகிவிடும்.. என்று நின்று வேடிக்கை பார்க்க.. டிரைவர் மயக்கம் போட்டு கிடந்தான்.

சிம்மன் கார் கதவை திறந்து பார்க்க.. காளிங்கன் சித்தப்பாவின் உயிர் இல்லை தலை தொங்கி கிடந்தது.. உயிருக்கு போராடும் பார்வதியை தூக்கிக் கொண்டு வெளியே வந்தவன்.. ரோட்டில் நின்று வேடிக்கை பார்ப்பவர்களை பார்த்து.. “உங்க வீட்டு பொண்ணுக்கு இது போல ஆச்சுன்னா சும்மா பார்த்துட்டு இருப்பீங்களா” என்று அவர்களை இரண்டு வார்த்தை நறுக்குகென்று கேட்டுவிட்டு ஹாஸ்பிட்டலுக்குள் சென்றான்.

பார்வதியை ஹாஸ்பிட்டலில் சேர்த்து விட்டு திரும்பி ஆக்சிடெண்ட் நடந்த இடத்துக்கு வர.. டிரைவரையும், காளிங்கனின் சித்தப்பாவும் தூக்கிக்கொண்டு வந்தனர்..

டிரைவருக்கு தலையில் அடி.. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.. டிரைவரை ஐ.சி.யுவினுள் சேர்த்துவிட்டனர்..
காளிங்களின் சித்தப்பாவை பற்றி ஏதும் தெரியவில்லை என்று அவரை மார்ச்சுவரியில் படுக்க வைத்திருந்தனர்.. சிம்மன் ஆக்சிடெண்ட் நடந்த இடத்திற்கு மீண்டும் சென்று பார்க்க அங்கே ஓரிடத்தில் கிடந்த போன் அடித்துக்கொண்டிருந்தது..

போனை எடுத்து காதில் வைத்து “ஹலோ இந்த போன்” என்று சிம்மன் பேச வாயெடுக்க..

“பாரு நான் சென்னை வந்துட்டேன்மா” என்று காளிங்க வர்மன் பேச சிம்மனுக்கு அந்த குரல் என்னோட வர்மன் குரல் போல இருக்கு.. அப்படினா இது என்னோட வர்மன் என்று சிம்மனின் மனதிற்குள் சுனாமியே சுழண்டு கொண்டிருந்தது..

“ஹாலோ பாரு என்னாச்சுமா”

“ஹா நான் சிம்மன் பேசுறேன்.. இந்த போன் வை.வைச்சிருந்தவங்களுக்கு ஆ.ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு” என்று கூறும்போது சிம்மனுக்கு கொஞ்சம் வியர்த்துதான் போனது.. எப்போதும் தில்லாக நிற்பவன் இன்று வியர்த்து விறுவிறுத்து நின்றான்.

“சார் எ..என்னோட வொய்ப், சித்தப்பாக்கு எதுவும் ஆகலையே” என்று காளிங்கன் பதறி திணறி கேட்க.

“நீங்க சீக்கிரம் வாங்க சார்” என்று போனை அணைத்துவிட்டு தலையை பிடித்துக்கொண்டான்..

சிம்மனும், வர்மனும் இரட்டை பிறவிகள் போல இணைந்தே இருப்பார்கள்.. ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒருவன் இழுத்து தந்த தம்பை மற்றொருவன் இழுப்பான்.. சரக்கு கூட இருவரும் சேர்ந்துதான் அடிப்பார்கள்.. சிம்மனின் மார்பிலே குழந்தை போல படுத்துகிடப்பான் வர்மன்.. அவனது குரலை எப்படி மறந்து போவான்.. சிம்மன் மண்டைக்குள் இரயில் ஓடியது.

சிம்மனின் போன் அடிக்க.. அப்போது தான் குழந்தைக்கு பால் வாங்க வந்ததே அவனுக்கு நினைவு வந்தது.. போன் ஆன் செய்து “சொல்லு வஞ்சி” என என்றான் அடிபட்ட குரலில்.. முதன்முறை வஞ்சிக்கொடியை பெயர் சொல்லி அழைத்தான்.. அவனுக்கு யாரிடமாவது இப்போது வர்மனை பற்றி சொல்லியாகணும்..
“சா.. சார் எங்க இருக்கீங்க இன்னும் வரல.. பாப்பா பசிக்குதுன்னு அழுதா நான் பழம் நறுக்கி கொடுத்துட்டேன்.. என்கிட்ட இருக்கமாட்டேன்கிறா.. சிம்மா எங்கன்னு அடம்பிடிக்குறா நீங்க சீக்கிரம் வாங்க” என்றதும்.. பால் வாங்கிக்கொண்டு அறைக்கு ஓடினான்.

இனியா சிம்மனை கண்டதும் ஓடி வந்து அவனை கட்டிக்கொள்ள.. அவன் குழந்தையை தூக்கிக் கொள்ள.. அவன் தோளில் சாய்ந்து “சித்தா அம்மா எப்போ கண்ணு முழிக்கும்” என்று விசும்ப ஆரம்பிக்க.. அவனுக்கும் குழந்தைக்கு என்ன ஆறுதல் சொல்வோம் என்றே விளங்கவில்லை சிம்மனுக்கு.. போனில் பேசியது அவனது வர்மனா.. என்று வேற அவனுக்கு ஒரே குழப்பம் மண்டையை வண்டாய் குடைந்து கொண்டிருந்தது.

நண்பனை பார்ப்பதா? இல்லை நண்பனின் மனைவி மயங்கி கிடக்கிறாள் அவளிடம் உன் கணவன் வந்துவிட்டான் நீ உன் கோலத்தை கலைத்து விடு என்று சொல்வேனோ” குழந்தையிடம் உன் அப்பன் இங்கதான் இருக்கான் என்று சொல்வேனோ என அவன் உள்ளம் கடலில் ஆடும் ஓடம் போல தத்தளித்து இருந்தது.

“சித்தா” என்று குழந்தை அவன் தோளை தட்ட..

“ இனியா குட்டி அம்மாக்கு தூங்கறதுக்கு ஊசி போட்டிருக்காங்க காலையில கண்ணு முழிச்சிடுவாங்க.. நீங்க இப்ப பால் குடிங்க” என்று அவன் குழப்பத்தை கலைந்து பக்கத்திலிருந்த கட்டிலில் உட்கார்ந்து இனியாவை மடியில் உட்கார வைத்து பக்கத்தில் கையை பிசைந்து நின்றிருந்த வஞ்சியை பார்த்து “வஞ்சி ப்ளாஸ்க்ல இருக்க பாலை டம்ளரல ஊத்திக்கொடு” என்றான்.

வஞ்சிக்கொடி பாலை டம்ளரில் ஊத்திக் கொடுக்க.. சிம்மன் குழந்தைக்கு பாலை புகட்ட பாலைக்குடித்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டது.

ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்த காளிங்கவர்மன் அஜயை தூக்கிக்கொண்டு வேக நடைபோட்டு ரிசப்சனில் கேட்க.. ஐ.சி.யுவில் இருப்பதாக கூற.. வெளியே அவனது கவலையை காட்டிக்கொள்ளவில்லையென்றாலும் உள்ளுக்குள் நொறுங்கித்தான் சென்றான் அந்த காவலன்.

ஐ.சி.யு வின் பக்கத்து அறையில்தான் முல்லைக்கொடி அட்மிட் ஆகியிருந்தாள்.. காளிங்க வர்மன் புரவியை போல வேகமாக வந்தவன்.. முல்லை இருந்த அறையை தாண்டித்தான் ஐ.சி.யுவிற்குள் போக வேண்டும்.. கதவு லேசாக திறந்திருக்க வர்மன் கதவை திறந்து விட்டான்..

சிம்மன் பட்டென்று குழந்தையுடன் எழுந்து நிற்க.. சிம்மனுக்கு சர்வ நாடியும் நின்று போனது போல இருந்தது.. “வ..வர்மா நீ” என்று காளிங்க வர்மன் பக்கத்தில் கையை நீட்டிக்கொண்டு போக.. காளிங்கன் அப்படியே நின்று விட்டான்..

அதே நேரம் முல்லை “வ.வர்மா” என்று உதடு அசைக்க.. சிம்மன், முல்லையை பார்த்துவிட்டு உடனே சுதாரித்து “உங்க வொய்ப் பக்கத்துல ஐ.சி.யுவில இருக்காங்க” என காளிங்கனிடம் கூற..

இனியா, சிம்மனின் தோளில் தலை சாய்த்து படுத்திருந்தது.. காளிங்க வர்மனை பார்க்கவில்லை.. சிம்மனுக்கு இப்போது குழந்தையை அவனிடம் காட்ட விரும்பவில்லை.. அப்படியே நின்றிருந்தான்..

காளிங்கவர்மன் கதவை சாத்திவிட்டு வெளியே வந்து பக்கத்தில் உள்ள ஐ.சி.யுவிற்குள் கால்கள் நடுங்க சென்றான்.. என்ன தான் போலீஸாக இருக்கட்டும் அவனது மனைவிக்கு ஆக்ஸிடன்ட் ஆகி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தால் எப்படியிருக்கும் தூங்கிக்கொண்டிருக்கும் மகனிடம் என்ன சொல்வான் காளிங்கன்.. அங்கே பார்வதியின் மூக்கில் ஒயர்கள் சொருகியிருக்க.. அவள் விழித்துக்கொண்டு தான் இருந்தாள்.. காளிங்கன் வரட்டும் என்று அவளது உயிரை இழுத்துப் பிடித்து வைத்திருந்தாள்.

“பார்வதி” என்று அவன், அவள் பக்கம் சென்று தலையை வருடி விட.. அவன் விரல்கள் நடுங்கியது..
திருடர்களையும்.. அராஜகம் பண்ணுபவர்களையும் அடித்து நொறுக்குபவனின் கைவிரல் இந்த நிலையில் பார்க்க முடியாமல் பார்வதியை தொட நடுக்கம் வந்தது.

“அஜய் பத்திரம்.. அஜய பார்த்துக்கோங்க.. எ..என்னை இந்த நி.நிலைமைல அவன் பார்க்க வேண்டாம்.. அவன வெளியில யார் கிட்டயாவது கொ..கொடுத்துட்டு வாங்க” என்று பார்வதி திக்கி திணறிப் பேச..

“ஏய் உனக்கு ஒண்ணும் ஆக விடமாட்டேன் பார்வதி.. உன்ன காப்பாத்திருவான் இந்த காளிங்கன்” என்று சொல்லும் போதுஅவன் குரல் உடைந்து போனது.. அவன் கண்களில் கண்ணீர் வந்து விட அதை பார்வதி பார்க்கும் முன் தலையை திருப்பி உள்ளிழுந்துக்கொண்டான்.

“இரு.. இரு நான் குழந்தையை வெளியில ஒருத்தர் கிட்ட கொடுத்துட்டு வரேன்” என்று வெளியே வர.. சிம்மன் அறை வாசலிலே நின்றான்.

“சார் என் பையனை கொஞ்சம் வச்சிருங்க..அவன் அம்மாவ இந்த நிலைமையில பார்க்க வேண்டா..ம்” என்றதும் சிம்மனுக்கு, வர்மனை கட்டிப் பிடித்து நானிருக்கேன்.. என்று சொல்ல அவனது கைகள் துடித்தது.. ஆனால் நாம ஒன்று சொல்லப் போய் காளிங்க வர்மனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்று பயந்தவன் அத்தனைஉணர்வுகளையும் அடக்கி வைத்து கண் மூடி திறந்தவன் குழந்தையை வாங்கி மடியில் வைத்துக்கொண்டான்.

ஐ.சி.யுவிற்குள் சென்றவன் ஐந்தே நிமிடத்தில் “பார்வதி” என்று கத்தி அழ.. உறங்கிக்கொண்டிருந்த குழந்தை அழுவான்.. என்று முல்லை இருந்த அறைக்குள் சென்று தூங்கிக்கொண்டிருந்த இனியாவின் பக்கம் அஜய்யை படுக்க வைத்து விட்டு வஞ்சியிடம் விசயத்தை கூறிவிட்டு நண்பனுக்கு ஆறுதல் கூற ஐ.சி.யுவிற்குள் நுழைந்தான்.

சிம்மன் உள்ளே நுழைந்ததும்.. “சார் பார்வதி மரிச்சு போயி” என்று சிம்மனின் கைப்பிடித்து கதறி அழுதான் ..

“வர்மாஆஆஆஆ அழாதடா உன் நண்பன் நான்னிருக்கேன்டா.. என்று அவனை இறுக்கமாக கட்டிகொண்டான் சிம்மன்.

நண்பனாக இருந்து அவனது குடும்பத்தை பாதுகாத்து வந்தவன் இன்று நண்பனை தாய் போல அணைத்து நின்றான் சிம்மன்.

ஆனால் காளிங்க வர்மனுக்கு சிம்மன் யாரென்று தெரியவில்லை.

1 thought on “6. மோக முத்தாடு அசுரா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top