ATM Tamil Romantic Novels

காதல் தானடி என் மீது உனக்கு !-2 (விஷ்ணுப்ரியா )

காதல் தானடி

    என் மீதுனக்கு?

      [2]

 

 

அந்தப் பிரம்மாண்டமான வீடே அலறக் கேட்டது அந்தப் பெரியவரின் குரல்!! அது மென்னிலாவின் தாத்தாவின் குரல்!! 

“உன்னய ஆர்ருடீஈஈ.. அவ்வன் ம்மேல க்கம்ப்ளைன்ட் க்குடுக்கச் சொன்னது?” என்று கழுத்து நரம்புகள் புடைத்தெழக் கேட்ட அவளுடைய தாத்தா, 

அவர் முன்னாடி அப்பாவியாக நின்றிருந்த மென்னிலாவின் கன்னத்திற்கு ஓங்கி ஓர் அறை விட்டிருந்தார். 

ஏற்கனவே.. உடலில் இருந்து கையை துண்டிக்கப்பட்ட கோரச்சம்பவத்தைப் பார்த்து, அதிர்ச்சி தாளாமல்.. மயங்கி விழுந்ததால் சோர்ந்து நின்றிருந்தவள்,

 அவரின் அடியைத் தாங்கமாட்டாமல் நிலத்தில் சுருண்டு விழுந்தாள். 

அவள் தாத்தா “ராஜமாணிக்கம்” அடித்த அடியில், அவர் விரலில் அணிந்திருந்த நவரத்தின மோதிரத்தின் விளிம்பு கீறி.. மென்னிலாவின் இதழ்க்கடையோரம் குபுக்கென எட்டிப் பார்த்தது இரத்தம்!! 

இதழ்கள் காந்தின தான். இருப்பினும் தாத்தாவின் சொற்கள் தான் அவள் இதயத்தை இன்னும் காந்தச் செய்தது. 

மென்னிலாவுடன் வந்திருந்த நண்பன் ஹரீஷோ அந்தக் கிழவன் தன்னுடைய பேத்தியிடம் நடந்து கொள்ளுமாற்றைக் கண்டு ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தான். 

தோழி அடிவாங்கி விழுந்ததில் ஒரு பதற்றமும், அந்தக் கிழவன் மேலே ஒரு கோபம் மூள, 

“நிலா”என்று பதறியவனாக, தன்னைத் தூக்கி நிறுத்த வந்த தோழனை பாதியிலேயே நிறுத்தினாள் அவள். 

“ஹரீஷ்…” ம்” அங்கேயே நில்லு.. பக்கத்துல வராத.. எது நடந்தாலும் நானே பார்த்துக்குறேன்”என்று சொன்னவளின் கண்களில் அத்தனை வலியிலும் ஓர் நிமிர்வு இருந்தது. 

மெல்லத் தரையில் கைகள் ஊன்றி… எழுந்தமர்ந்தாள் மென்னிலா. 

அவளின் நிலையை அந்தப் பிரம்மாண்டமான வீட்டில் வெவ்வேறு பணிகளைச் செய்யும் பணியாளர்கள் எல்லாரும் பாவமாகப் பார்க்க, 

அடித்த ராஜமாணிக்கத்தின் முகம் மட்டும் கழிவிரக்கத்தைக் காட்டவேயில்லை. 

 ஹரீஷூம் கூட அது தோழியின் குடும்ப விவகாரம் என்பதால் எதுவும் பேச முடியாமல், வாயடைத்துப் போய் நின்றிருந்த தருணம்!!

மன்னார் மாவட்டத்தின், சிறுத்தோட்டத்தை அண்டியிருக்கும் அத்தனைப் பட்டியும், அவர் நடந்து வந்தாலேயே எழுந்து நின்று மரியாதை செய்யும், அவள் தாத்தா “ராஜமாணிக்கம்”, 

மென்னிலாவின் முன்னிலையில் தன் தோள் புஜங்கள் ஏறி இறங்க.. பெரும் பெரும் உஷ்ண மூச்சுக்களை வெளிவிட்ட வண்ணமே நின்றிருந்தார். 

அவரின் விழிகள் சிவந்து பயங்கரமாகத் தெரிந்தன. அவரது கழுத்தில் அவர் அணிந்திருந்த புலிநகச் சங்கிலி.. அவரை இன்னும் கொஞ்சம் கொடூரனாகக் காட்டியது. 

தாத்தா மேலும் மேலும் தன் சொற்களால் அவளைக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தார். 

 “ஏற்கனவே நம்ம குடும்பத்துக்கு பெரிய அவமானம் த்தேடித்தந்தது ப்பத்தாது? இப்போ என்ன செய்யோணும்னு நெனச்சிக்கிட்டு இப்டி ப்பண்ண? ஆர் கண்ணுல நீ பட்டுத் தொலைஞ்சிரக் கூடாதுன்னு உன்னய கடல் தாண்டி அனுப்பி வச்சேனோ.. அவ்வன் முன்னாடியே போய் நின்னுட்டு வ்வந்திருக்கியேடீஈஈ?”என்று தன் கர்ஜனைத் தொனியில் கத்தினார் ராஜமாணிக்கம். 

அவருக்கு வயது அறுபத்தைந்தைத் தாண்டியிருக்கும். ஆனால் இன்னும் ஐம்பதைக் கூட தொடாதவர் போல.. அவரது கை கால்கள் எல்லாம் ரொம்பவும் உறுதியானதாகவே இருந்தது. 

முள்ளந்தண்டு கூட இன்னும் கூன் விழாமல்.. நிமிர்ந்தே இருந்தது. அவரது வரட்டுக் கௌரவம் போல. 

அவரது கற்றை மீசைக்குள் உதடுகள் ஒளிந்திருந்தது கூட.. அவரது ஆக்ரோஷமான தோற்றத்தை இன்னும் பயங்கரமானதாகக் காட்டியது. 

தொண்டைக்குள் அடைத்ததை விழுங்கிக் கொண்டு.. கடினப்பட்டு எழுந்தாள் மென்னிலா. 

இம்முறையாவது.. தாத்தா தான் சொல்வதை காது கொடுத்துக் கேட்க மாட்டாரா? என்ற ஏக்கம் அவளது நயனங்களில் தேங்கி நின்றது. 

அவள் தாத்தா எப்போது தான் அவர் சொல்வதைக் கேட்டதுண்டு? 

உடல் சோர்வைத் தன் குரலில் காட்ட கொஞ்சமேனும் பிரியப்படாதவள், உறுதியான குரலிலேயே சொன்னாள். 

“தாத்தா… கண்ணு முன்னாடி நடந்ததை.. பார்த்துட்டு இருக்க சொல்றீங்களா? நா.. நான் அவன்… ஒருத்தனை வெட்டுறதை என் இரண்டு கண்ணாலேயும் பார்த்தேன் தாத்..”என்று அவள் உணர்ச்சி பூர்வமாக சொல்லிக் கொண்டு வந்ததை எல்லாம் கேட்கும் நிலையில் அவர் இல்லை!! 

“ப்போதும் நிறுத்துடீஈஈ.. இவ்வ.. ப்பெரிய்ய்ய கண்ணகி.. அக்கிரமத்தைக் கண்டதும் துவெண்டெழ்ந்துருச்சி.. மன்னாரையே சுட்டெரிக்க போறா…”என்றவரின் விழிகளில் இருந்து உஷ்ண ஜூவாலைப் பறந்தது. 

ஏதோ எல்லாமே வீணாகிப் போய் விட்டது போன்ற முகபாவனையுடன், இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு, ஆயாசத்துடன் நெடுமூச்சு விட்டவாறே தன் தாடையை தடவி விட்டுக் கொண்டார் ராஜமாணிக்கம். 

ஹரீஷூக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.

 ஒரு அக்கிரமத்தை நேரில் கண்ட சாட்சியாக தோழி மாறியதில் என்ன குற்றமிருக்கிறது என்று எண்ணியவனுக்கு, தாத்தாவின் பதற்றம் எத்தகையது என்பது தெரியவில்லை. 

தோழி இயலாத நிலையிலும் கூட அந்தக் கிழவரிடம், தன்னிலை விளக்கம் கொடுப்பது , மென்னிலா மீது பரிதாபத்தையே ஏற்படுத்தியது ஹரீஷூக்கு. 

 

அவரது ஆத்திரம் அப்போதும் கூட மட்டுப்படாமல் போகவே, ஓரெட்டில் தாவி, 

அவளுடைய கழுத்தைக் கைகளால் பிடித்து நெரித்தவாறு, 

“இந்த ம்மண்ணையே மிதிக்கக் கூடாதுன்னு தானே.. உன்னய கடல் தாண்டி.. லண்டனுக்கு அனுப்ச்சேன்..ர்ரெண்டு வ்வர்ஷமா…ர்ரெண்டு வ்வர்ஷமா அங்க இருக்க தெரிஞ்ச சிறுக்கிக்கு.. இப்ப என்னடி இங்க வரோணும்னு அவசரம் வேண்டிக் கிடக்கு?”என்று கேட்க, ஹரீஷ் கிழவனின் செயலில் பதற்றத்துக்குள்ளாகிப் போனான். 

அப்படியானால் தன் தோழி இரண்டு வருடங்களுக்கு முதல் லண்டன் வருவதற்கு முன்பு, ஏதோ மோசமாக நடந்திருக்கிறது என்பதை ஊகித்துக் கொண்டான் ஹரீஷ். 

ஆனால் மென்னிலாவோ.. தன் கழுத்தில் இருக்கும் கிழவனின் உடும்புப் பிடி இன்னும் இன்னும் இறுகி.. கழுத்துக் கன்றிச் சிவந்து போனாலும் கூட… ஆடாமல், அசையாமல் அப்படியே நின்றிருந்தாள்.

கிழவன் ஆத்திரத்தில் திரும்பத் திரும்பக் கேட்டதெல்லாம் ஒரே கேள்வி தான். 

“ஏன் வ்வந்த?? .. ஏன் இங்க வ்வந்த? .. எங்க குடும்ப கௌரதய குழி தோண்டி பொதைக்கோணும்னே வந்தீயா?”என்று கேட்க, அவள் முகம் செக்கச் செவேலென சிவந்து, மூச்செடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டாள் மென்னிலா. 

கிழவன் கொஞ்சம் அழுத்திப் பிடித்தாலும், தோழியை இனி உயிருடன் காண்பது அரிது என்பது அறிந்து ஹரீஷ் ஓரடி முன்னே எடுத்து வைக்க, 

என்ன தோன்றியதோ கிழவனுக்கு.. அவனே பேத்தியை தன் பிடியிலிருந்து விடுவித்தான். 

கழுத்தைத் தடவிக் கொண்டே.. ஆழ ஆழ மூச்சு விட்டவளாக இருமியவள், 

கடினப்பட்ட குரலில், “தாத்.. தாஹ்.. அம்மாவுக்குஹ்.. உடம்புஹ் சரியில்லைன்னு.. மாமாஹ் தான் சொன்னாரு.. அதான் பார்த்துட்டுப் போகலா.. ம்னுஹ்”என்று அவள் சொல்லிக் கொண்டிருந்த வேளை, மீண்டும் இடையிட்டது தாத்தாவின் குரல்!! 

“அவ ஒண்ணும் செத்துகித்துப் போகல.. இன்னும் உசுரோட தான் இருக்கா..உன் ஆத்தால ஒண்ணும் நீ பாக்க வேண்டா..செத்தா தகவல் சொல்லி அனுப்புறேன்.. இங்கேயிருந்து இப்பவே கிளம்பிப் போயிடு..”என்று சொல்ல, 

அங்கிருந்த அனைவருக்கும் தோன்றியதெல்லாம், ‘இவரெல்லாம் என்ன மனிதன்?”என்று தான். 

மகள்.. படுத்த படுக்கையாக இருக்கும் போது பார்க்க வந்த பேத்தியிடம் இப்படி அபசகுனமாக பேசுகிறாரே? 

ஆம், மென்னிலா, ஹரீஷூடன்… இதுவரை காலமும் வாசம் செய்த லண்டனை விட்டு வந்ததே.. சுகயீனமுற்றிருக்கும் அவள் தாயைக் காணத் தான்!! 

வீட்டின் நடுக்கூடம் வரை வந்து விட்டு… சுகயீனத்தால் அறையில் முடங்கிக் கிடக்கும் தாயைப் பார்க்காமலேயே அவள் செல்வதா?? 

மகளின் குரல் அந்தத் தாய்க்குக் கேட்டிருக்கவும் கூடுமோ? நிச்சயம் கேட்டிருக்கும்!! ஆனால் எழுந்து வரத்தான் முடியவில்லை அந்தப் பேதைத் தாய்க்கு. 

தாத்தா மீது அவள் வைத்திருக்கும் பயத்துக்கும் மேலாக, தாய்ப்பாசம் வந்து தைரியம் கொடுக்க, 

“மாட்டேன்.. நான் அம்மாவை பார்த்துட்டுத் தான் ப்போவேன்..”என்று சொன்னவளின் வார்த்தைகளில் இருந்த உறுதி, கிழவனையும் சற்றே அசைத்துப் பார்த்தது. 

“அப்ப ந்நீ போக மாட்ட?”- பற்களைக் கடித்துக் கொண்டே கேட்டார் அவர். 

மென்னிலாவின் கண்களில் ஓர் மன்றாட்டம் தெரிந்தது. அனுபவித்தது எல்லாம் போதும் என்ற விரக்தி மனநிலையும் அவளுள் முகிழ்த்தது. 

“தாத்தா இது என் வாழ்க்கை.. என்னை.. என் இஷ்டம் போல வாழ விடுங்க.. நான் அம்மாவைப் பார்க்க தான் வந்தேன்.. ப்பார்த்துட்டுத் தான் ப்போவேன்”என்று சொன்னவளுக்கு, உள்ளே அழுகை துளிர்த்திருக்க வேண்டும். 

அடைத்த அழுகை.. அவள் நாசியை அந்திவானத்தைப் போல சிவக்கச் செய்தது. 

இதுவரை பேத்தி தன் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசாமல் இருந்தவள், இன்று அவர் சொல்லுக்கு மாற்றமாக நடந்து கொண்டது அவருள் கடுங்கோபத்தைக் கிளப்பியது. 

அவரது முரட்டு விழிகள் இன்னும் அகன்றது. 

“ஓ!! வாழணுமோ?? உன் இஷ்டம் போல வாழணுமோ?… என் குடும்ப கவுரவத்த.. மண்ணோடு மண்ணாக்கிட்டு நீ மட்டும் வாழணுமோ??”என்று வெறி வந்தவர் போலக் கத்தியவர், 

ஈரெட்டு எடுத்து வைத்து, அந்தப் பழங்காலச் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த வேட்டைத் துப்பாக்கியை சரேலென்று உருவியெடுத்தார். 

“உன் ஆத்தா உனக்குத் தொணையா பின்னாடியே வருவா..நீ முன்னாடி போய் சேருடீஈஈ..”என்றவரது கையில் இருந்த துப்பாக்கி சரியாக, மென்னிலாவின் நெற்றிப் பொட்டை குறிவைத்து நின்றது. 

கிழவனின் கோபத்தின் வீரியம் அறிந்த அனைவரும் அந்நொடி ஸ்தம்பித்து நிற்க, துப்பாக்கி முனை நெற்றிப்பொட்டில் இருந்தும், சாவுக்கு அஞ்சாதவளாக நின்றிருந்தாள் மென்னிலா. 

 

இந்த அவல வாழ்க்கையை விடவும் சாவதே மேல் என்று அந்த அபலைப் பெண்ணும் எண்ணிக் கொண்டாளோ? 

அவரின் கை.. ட்ரிக்கரை அழுத்த முனைந்த கணம் சாவை ஏற்க நாடியவளாக, ஆழ மூச்சை உள்ளிழுத்தவளாக, விழிகளை அமைதியாக சலனமேயின்றி மூடிக் கொண்டாள் மென்னிலா. 

பதறிய ஹரீஷ்.. பொறுக்க மாட்டாமல் ஓரெட்டு முன்னே எடுத்து வைக்க, அந்த கணம் தான் யாருமே கனவிலும் நினைத்துப் பார்த்திராத ஓர் நிகழ்வு நடந்தது. 

துப்பாக்கி ஏந்தி நின்ற கொடூரத் தாத்தாவுக்கும், விழிகள் மூடி மரணத்தை ஏற்க விளைந்த பேத்திக்கும் இடையில், வந்து நின்றான் அவ்வாஜானுபாகுவான ஆண்மகன்!! 

“பரிதிவேல் வீரன்!!”. 

எங்கிருந்து வந்தான்? எப்போது வந்தான்? என்று யாருமே அனுமானிக்க முடியாதளவுக்கு, புயல் வேகத்தில் நுழைந்து.. இருவருக்குமிடையில் நின்றவனைக் கண்டு அதிர்ந்தார் கிழவர். 

பேத்தியின் நெற்றிப்பொட்டை குறிபார்த்த துப்பாக்கி முனை.. அவன் இடையிட்டதில் பரிதிவேலின் நெஞ்சில் வந்து நின்றது.

பரிதிவேல் வீரனோ, துப்பாக்கிமுனைக்கும், தன் நெஞ்சுக்கும் உள்ள தூரத்தை அரிதாக்கி, “சுடூஊஊ.. இன்னனும் ஏன் பார்த்துட்டு இருக்கவ? .. சுடூஊஊ.. சுடூஊஊன்னு சொல்றேஏஏன்ல?”என்று கத்திய தினுசில், 

விழிகள் மூடி மரணத்தை ஏற்கத் தயாரான மென்னிலா..சற்றும் எதிர்பாரமல் கேட்ட அவன் கர்ஜனையில் திடுக்கிட்டுக் கண் திறந்தாள். 

கிழவனுக்கு என்னானதோ? பரிதிவேலின் ரௌத்திர முகத்தில் அவர் எதைக் கண்டாரோ? அவரால் சுட முடியவில்லை. தன் முன்னே நிற்கும் அந்தப் பரம எதிரியை அவரால் சுட்டு வீழ்த்த தக்க தருணம் அமைந்தும், அவரால் முடியவேயில்லை. 

வந்தது அந்தக் குரூரனேயானாலும், ஏதும் அசம்பாவிதங்கள் நிகழாததால் ஆசுவாசமாகப் பெருமூச்சு விட்டுக் கொண்டான் ஹரீஷ். 

பரிதிவேலைக் கண்டதும் நடுங்கிய கைகளை மறைக்க, மெல்ல தன் துப்பாக்கியைத் தாழ்த்தினார் ராஜமாணிக்கம். 

துப்பாக்கி இறங்கினாலும் கூட, ரௌத்திரம் துளியேனும் அடங்காமலேயே நின்றிருந்தான் அவன்!! 

கை முஷ்டியை இறுக்கி, ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தியவாறே, கிழவனைப் பார்த்தவன், “அவ மேல க்கைய வைக்கணும்னா.. நீ என்னத் தாண்டித் தான் வ்வைக்கணும்..”என்றவன், நெற்றிக்கண் திறந்த சிவனின் மறு அவதாரமே தானோ?? 

அடுத்து வந்த நிமிடங்கள் மின்னல் நிமிடங்கள்!!

வெடுக்கென்று அவளை நோக்கித் திரும்பியவன், அவள் எதிர்பாராத நேரம் அவள் முன்னங்கையைப் பற்றி, 

“என் க்கூட வ்வாஆ..”என்றவன்,அவளை தரதரவென்று இழுத்துக் கொண்டு சென்றான். 

இரண்டு வருடங்களுக்கு பிறகு.. முழுமையாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவன் முகத்தை வெகு வெகு அருகாமையில் பார்க்கிறாள் மென்னிலா. 

காவல் நிலையத்திலும் அவன் முகத்தைக் கண்டாள் தான். ஆனால் இத்தகைய அருகாமை கிட்டியது என்னமோ இப்போது தான். 

அன்றிருந்தது போலவே இளமையாகவே இருந்தது அவனது பரிதி முகம்!! ஆம், பரிதிக்கு தான் முதுமை ஏது? 

அவன் செய்த கோரச்செயலுக்கு சீக்கிரமே ஜாமீன் கிடைத்து விட்டது போலும். அது தான் நேராக இங்கே வந்திருக்கிறான் என்றெண்ணிக் கொண்டவளின் முகத்தில் இகழ்ச்சி நகை பரவியது. 

அவனோடு செல்வது பிடிக்காதவள், தன் நடையை சற்றே தம் கட்டி நிறுத்தினாள் அவள். 

ஆனால் அவன் நடையோ, அவளதைப் போன்று நிற்கவில்லை.

அவளை இழுத்துக் கொண்டே அந்தப் பிரம்மாண்டமான நடுக்கூடத்தை விட்டும் நடக்க, இறுதியில், அவள் கையைப் பற்றியிருந்த.. அவன் கைக்கு சாரமாரியாக அடித்துக் கொண்டே கத்தினாள் மென்னிலா. 

“என்னால முடியாஆஆதூஊஊ.. வ்விடூஊஊ.. .. என்னை வ்விடூஊஊ.. நான் உன் கூட வர்றதுக்கு.. தாத்தா கையாலேயே செத்துப் போயிட்றேஏஏன்!!.. என்னை வ்விடூஊஊ”என்று கத்தியவள், 

இறுதியில் அவன் பிடியிலிருந்து தன்னை விடுவிப்பதற்காக, குனிந்து அவன் கையைக் கடித்தாள். 

அவன் கையில் அவளது பற்களின் தடம் நன்றாகப் பதியவே, எழுந்த வலியில் விடுக்கெனத் திரும்பி, அவளது முகத்தை அப்போது தான் உன்னிப்பாகப் பார்த்தவன் அதிர்ந்தான். 

அவனுடைய திண்ணிய கை, அவள் தாடையை நோக்கி நீண்டு, பற்றிப் பிடிக்க, அவன் தொடுகையைத் தாங்க மாட்டாமல் திமிறினாள் பெண். 

அதையெல்லாம் சட்டை செய்யாதவன், அவள் கன்னம் திருப்பிப் பார்த்து, இதழ்க்கடையோரம் இரத்தம் துளிர்த்திருப்பதைக் கண்டவனின் இடுங்கிய விழிகள் மெல்ல மெல்ல விரிந்தது. 

மென்னிலாவின் இதயம் வரை ஊடுருவும் கூரிய பார்வை பார்த்தவன், 

“க்கிழவன் உன்னய அடிச்சாஆஆனா? க்கிழவன் உன்னய அடிச்சாஆஆனா?”என்று கேட்கக் கேட்க, 

எதுவுமே காதில் விழாதவள் போல.. விழிகளைத் தாழ்த்திக் கொண்டேயிருந்தாள் நிலா. 

பரிதிவேலின் பொறுமை காற்றோடு பறக்க, “நான் தான் கேக்குறேஏஏன்ல? க்கிழவன் உன்னை அடிச்சானாஆஆ?” என்று அதட்டியவனாக அவன் கீழுதடு கடிக்க, தூக்கிவாரிப்போட்டுக் கொண்டு நிமிர்ந்தாள் அவள். 

அவள் உதடுகள் பேசாவிட்டாலும், கண்ணிமைகள் பட்டென்று ஒரு முறை மூடித் திறக்க, அவன் கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டான் பரிதிவேல் வீரன்!! 

அவளின் கையை விடுவித்தவன், நடக்கும் வேகத்தில் புயல் காற்று உண்டாகுமோ? என்று பிறர் அஞ்சுமளவுக்கு, அதிவேகத்துடன் நடந்து வந்து கிழவனை அடைந்தவன் கண்களில் அனல் தெறித்துக் கொண்டிருந்தது. 

பரிதிவேலின் வேக எட்டுக்களில் உடல் இலேசாக வெடவெடத்தாலும் காட்டிக் கொள்ளாமல் விறைப்புப் பேர்வழியாகவே நின்றிருந்தார் கிழவன். 

அவர் அருகே வந்து.. அழுக்கு படாத வெள்ளை வெளேரென்ற சட்டைக்காலரைக் கொத்தாகப் பற்றியவன், ராஜமாணிக்கத்தின் வயதை கூடப் பார்க்காமல், 

முஷ்டி மடக்கி.. மூக்குக்கே ஓர் குத்து விட்டான். 

ராஜமாணிக்கத்தின் மூக்கிலிருந்து குபுக்கென இரத்தம் எட்டிப்பார்க்க, வலியில் இரண்டெட்டுப் பின்வாங்கி விழப்போனவரை.. ஓடி வந்து தாங்கிப் பிடித்துக் கொண்டனர் பணியாட்கள். 

பரிதிவேலையே அவர் வெறித்துப் பார்க்க, இவனோ, அவரை சுட்டெரிப்பது போல சீற்றம் கக்கும் பார்வை பார்த்தவன், 

“வ்வயசானவன்றதால விட்டுட்டுப் ப்போறேன்..இல்ல இங்கன ஒரு கொலையே விழுந்திருக்கும்!!..”என்று சொன்னவன், 

இரத்தம் வழிய நின்ற தாத்தாவைக் கண்டு அதிர்ந்த மென்னிலாவை நோக்கி வந்தான். 

ஆயிரம் தான் இருந்தாலும்.. தாத்தாவை அதுவும் வயசானவரை அவன் அடித்ததில்.. அவளுக்கு ஓர் வெறுப்பு தான் மிகுந்தது. 

 

பரிதிவேல் வீரனை.. அவள் வெறுத்துப் போன பார்வை பார்க்க.. அதையெல்லாம் கணக்கிலேயே எடுக்காதவன், அவளருகே வந்து, 

“பார்த்தேல்ல.. அடின்னா இப்படி இருக்கோணும்..”என்று போலீஸ் ஸ்டேஷனில் அவள் அடித்த “கொசு அடி”யை நினைவுபடுத்தியவன், மீண்டும் அவளை அழைத்துக் கொண்டு செல்ல, தன் போராட்டத்தைத் தொடர்ந்தாள். 

ஹரீஷோ… இந்த ரவுடி பரிதிவேல் வீரனுக்கும், தன் தோழி மென்னிலாவுக்கும் என்ன தொடர்பு? 

பரிதிவேல் ஏன்.. நிலாவின் வீடு புகுந்து அடாவடியாக நடந்து கொள்கிறான்? 

மென்னிலாவைக் காய்ச்சி எடுத்த தாத்தா, பரிதிவேலிடம் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போனது ஏன்? என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் எழுந்தாலும், 

தற்போது தோழியை பரிதியிடமிருந்து மீட்டெடுப்பது நல்லது என்று தோன்ற.. தோழியின் பின்னாலேயே ஓடினான். 

மென்னிலாவை இழுத்துக் கொண்டு, வாசலை நோக்கி பரிதிவேல் நகர்ந்த கணம், வாசலில் வெள்ளை வேஷ்டி சட்டையுடன் சாந்தமாக ஓர் வாலிபன் நுழைய, 

வந்தவனைக் கண்டதும் பரிதிவேலின் நடை ஒருகணம் தடைப்பட்டு நின்றது. 

எதிரே நின்றவன் தன் வீட்டுக்குள் இருந்து பரிதிவேல் வெளியே வரக்கூடும் என்று எதிர்பாராததால் அதிர்ந்து தான் போனான்.

 பரிதிவேலைக் கண்டதும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த பொல்லாத நினைவுகள் எழ.. அந்தச் சாந்தமான வாலிபனின் விழிகளும் கூட கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டது. 

கூடவே அவன் விழிகள், பரிதிவேல் கைகளில் அடைக்கலமாகியிருந்த, தன் முறைப்பெண்ணான ‘மென்னிலாவையும்’ கண்டு கொண்டது. 

அவன்.. லண்டனில் பாதுகாப்பாக இருந்த மென்னிலாவை..இன்று இந்நொடி.. தன் வீட்டில் இருப்பாள் என்று எதிர்பார்த்தேயிருக்கவில்லை. 

மென்னிலா தன் ஊருக்கு வந்தது கூட.. யாருக்கும் தகவல் அறிவிக்காமல் தானே? அதனால் அந்தச் சாந்தமான வாலிபன், மென்னிலாவின் வருகையை எதிர்பார்த்திருக்கவில்லை. 

நிலாவைக் கண்டதும் கனிந்தன அவனது கண்கள். 

“ நீ எப்போமா வந்த..?”- அவனது விசாரிப்பில்.. உள்ளம் கரைய.. இத்தனை நேரம் அடக்கி வைத்த அழுகை கண்கள் வழியாக, மௌனமாக வெளிப்பட்டது. 

அந்த வீட்டில்.. அவள் தாயைத் தவிர கனிவாக உரையாடும் ஒரே சொந்தம்.. அவளது மாமா மாத்திரமே! 

அவளுக்கு எழுந்த கண்ணீரை அடக்கவே முடியவில்லை. 

கண்ணீருடனேயே உயிர் உருக, “மாமா..”என்று அவள் அழைத்த அழைப்பு இரு ஆடவனது நெஞ்சையுமே தாக்கியது.

ஒருவனுக்கு வெகுநாள் கழித்து அந்த ‘மாமா’ என்ற அழைப்பு கேட்கப்பெற்றதில் ஜென்மசாபல்யம் அடைந்தது போல நெஞ்சமெல்லாம் சந்தோஷம் என்றால்.. 

இன்னொருவனுக்கோ அவளுடைய “மாமா” என்ற அழைப்பில் சுருசுருவென கோபம் பொங்கியது.

பரிதிவேலின் கோபத்தின் வீரியத்தின் பலனால், அவள் மெல்லிய முன்னைங்கையில் அவன் பற்றியிருந்த அழுத்தம் ஒரேயடியாக அதிகமானது. 

முன்னங்கை என்புகள் நொறுங்கிப் போவது போல வலிக்க, கீழுதடு கடித்து, விழி மூடிக் கண்ணீர் விட்டாள் நிலா. 

நிலா அந்தக் கொடியவனிடம் படும் பாட்டைப் பொறுக்க மாட்டாமல், “நிலா..”என்று நெஞ்சம் பதற, அவள் பெயர் சொன்னான் நிலாவின் முறைமாமன். 

பரிதிவேலின் ஆத்திரம் அதிகமாக, வந்தவனைக் கவனியாதது போல, நிலாவை இழுத்துக் கொண்டு பரிதி வெளியேற முற்பட, அதற்கு விடாமல், கை நீட்டி அணை போட்டான் முறைமாமன் “சரவணன்”. 

சரவணனின் விழிகள், பரிதிவேல் வீரனின் விழிகளை நேருக்கு நேர் நோக்கியது. அவன் குரலில் அடக்கப்பட்ட சீற்றம் வெளிப்பட, 

“எங்க வீட்டுப் பொண்ண.. ஆரக் கேட்டுடா கைய பிடிச்சு இழுத்துட்டுப் போற?”என்று எதிர்த்தவன், , மென்னிலாவின் மறுமுன்னங்கையை இறுக்கமாகப் பிடித்தான். 

பரிதவேலின் கையில் ஒரு கரம் அடைக்கலமாகியிருக்க, சரவணணின் கையில் மறு கரம் அடைக்கலமாகியிருக்க, இருவருக்கும் இடையில் சூழ்நிலைக் கைதியாக நின்றாள் மென்னிலா. 

அவனிடமிருந்து.. முறைமாமன் தன்னை காப்பாற்றி விடக்கூடாதா என்ற நப்பாசையில், சரவணனின் முகத்தையே ஏக்கமாகப் பார்த்தாள் மென்னிலா. 

அவளோடு துணைக்கு வந்த ஹரீஷோ.. நடப்பதை எல்லாம் ஜீரணிக்க முடியாமல் நிற்க, 

வாய் திறந்த பரிதிவேல் சொன்ன விஷயம்.. ஹரீஷை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

அப்படி என்ன தான் சொன்னான் பரிதிவேல் வீரன்?? இதோ அவன் சொன்னவை எல்லாம் இவை தாம். 

“ஆரக் கேக்கோணும்? அவ்வ எம் ப்பொஞ்சாதி.. இப்ப வ்வழிய விடுறீயா?இல்ல உனக்கு தான் அசிங்கமா ப்போயிரும்!! ”என்று நிலாவுக்கும், பரிதிக்குமான உறவை அவன் அந்த வாசலே நடக்க சப்தமிட்டுச் சொல்ல, 

அதிர்ச்சியாகி நின்றான் ஹரீஷ் . 

என்ன நிலா அந்த முரடனின் மனைவியா? போலீஸ் ஸ்டேஷனில் ஒருவருக்கொருவர் தெரியாதது போலவே நடந்து கொண்ட இருவரும் புருஷன் – பொஞ்சாதியா?? 

ரயில்வே ஸ்டேஷனில் யாரோ ஒருவனை ஈவிரக்கமேயில்லாமல் வெட்டியவன், போலீஸ் ஸ்டேஷனில் வைத்து மென்னிலா அறைந்த போது கூட சும்மா இருந்தது அவனது மனைவி என்பதனாலா? 

சரவணனுக்கு நிலா மீது இருக்கும் உரிமையை விட.. பரிதிக்கு நிலா மீது இருக்கும் உரிமை அதிகம்!! 

சரவணன், பரிதியை தடுக்க முடியாமல் வாயடைத்துப் போய் நிற்க, உரிமையுடன் நிலாவை அழைத்துச் செல்லத் துணிந்தான் பரிதிவேல் வீரன். 

அவனோடு செல்வது பிடிக்க மாட்டாத மென்னிலாவின் கன்னத்தில் தெரிந்த கண்ணீர்க்கோடுகளை, கையாலாகாதவனாகப் பார்த்துக் கொண்டேயிருந்தான் சரவணன். 

அந்த கணம்.. வாசற்படியிலேயே நின்ற மாமாவைப் பார்த்து, ஏக்கமாக, “மாமா..திரும்பவும் என்னை இவன்கிட்ட அனுப்பப் போறீங்களா மாமா?”என்று அவன் கேட்ட கேள்வி.. சரவணனின் உயிர் வரை சென்று தாக்க, 

வலியில் துடித்த உள்ளத்துடன் நின்றான் சரவணன். 

திரும்பவும் “மாமா”என்று கேட்ட அழைப்பில் காண்டான பரிதிவேல் வீரன், 

அவள் கன்னத்துக்கு ஓங்கி ஓர் அறை விட்டிருந்தான். 

ஆப்பிள் பழம் போல புஸ்ஸென்று சிவந்து வீங்கிப் போனது அவளது ஒரு பக்கக் கன்னம்!! 

“இனியொருவாட்டி அவன மாமான்னு சொன்ன.. இங்கனயே உன்னய வ்வெட்டி ப்பொலி ப்போட்ருவேன்டீஈஈ!!”என்று அவன் வெறி வந்தவனாகக் கத்த, அவள் அந்தக் கொடியவனை… நிர்மலமான முகத்துடன் பதில் பார்வை பார்த்தான். 

அவளது போராட்டம், அடித்தல், கடித்தல் என எதுவுமே அந்த ஆக்ரோஷமான ஆண்மகனின் பிடியிலிருந்து நழுவ துணை புரியவேயில்லை. 

வலுக்கட்டாயமாக அவளை.. தன் காரில் ஏற்றியவன்… கண்மண் தெரியாத வேகத்தில்.. தன் வீட்டை நோக்கிப் பயணித்தான். 

அது வீடு என்று சொல்வதை விட.. பழைய காலத்து ராஜாக்கள் வாழ்ந்த அரண்மனை என்று சொல்வதே சாலப் பொருந்தும். 

அந்தளவு பிரம்மாண்டமாக, கலைநயத்துடன் இருந்த வீட்டை நோக்கி பயணமானது அவன் வண்டி. 

அவனது வீட்டின் பாரிய போர்ட்டிகோ அருகில் காரை நிறுத்தியவன்.. இருந்த கோபத்தில், “இறங்குடீஈஈ”என்று கத்தியவன், 

அவள் இன்னும் இறங்காமல் இருப்பதால் சீற்றம் கொண்டு.. அவள் பின்னந்தலையைப் பற்றி.. அவளை காரில் இருந்து இறக்கி, அவள் மறுக்க மறுக்க.. அவளை இழுத்துக் கொண்டு உள்ளே போனான். 

அவளை நேரே இழுத்துக் கொண்டு சென்று.. அவன் விட்டது.. அவன் தாயின் புகைப்படத்துக்கு முன்பாகத் தான். 

அவன் தாயின் மறையாத புன்னகை முகத்தைக் கண்டதும்.. இத்தனை நேரம் மறுத்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தவளின் போராட்டம் எல்லாம் அடங்கிப் போனது. 

புகைப்படத்தில் இருக்கும் பெண்மணியையே வெறிக்க வெறிக்கப் பார்த்தாள் அவள்.

 அவன் தாயின் முகத்தில் வேண்டுமானால் எப்போதும் உறைந்திருக்கின்ற புன்னை இருக்கலாம்!! 

ஆனால் இவள் முகத்தில்?? இந்தத் தாய்பெற்ற தவப்புதல்வன்.. அவள் முகத்தில் உறைந்த புன்னகையை ஏற்படுத்தியதுண்டா?? 

புகைப்படத்தைப் பார்த்த வண்ணம் திக்பிரமை பிடித்தவளாக அவள் நிற்கையில், அவள் கழுத்தில் இரண்டாம் முறையாக தாலி கட்டியிருந்தான் பரிதிவேல் வீரன்!! 

தன்னைச் சூழ ஓர் நெருக்கம் உண்டானது போல இருக்க.. திக்பிரமையிலிருந்து மீண்டவள் நிமிர்ந்து பார்த்த போது, அவனது நீண்ட கைகள் அவள் கழுத்தைச் சுற்றி வளைத்திருந்ததை உணர்ந்தாள். 

அவள் குனிந்து நோக்கிய போது.. அவள் தனங்களுக்கு இடையே தொங்கிக் கொண்டிருந்த தாலிச்சரடு!! 

மீண்டும் நிமிர்ந்த போது.. அவளது நடுவகிட்டில், அவன் தன் இருவிரல் நிறைய.. அள்ளி குங்குமம் வைத்த தினுசில்.. நெற்றியெங்கிலும் கூட குங்குமத் தூறல்கள் விழுந்திருந்தன. 

கருமணியில் கண்ணீர் அணைகட்டி நிற்க.. அவனை ஒரு அசிங்கத்தைப் பார்ப்பது போல பார்த்தாள் நிலா. 

அன்று அவன் கட்டிய அதே தாலி. அவள் வாழ்வில் சடுகுடு ஆடிய அதே தாலி!!பல நினைவுகளை சுமந்து வந்த அதே தாலி!! 

அவளது வெறுப்புப் பார்வையை கிஞ்சித்தும் சட்டை செய்யாதவன், அவளை நோக்கி மிக மிக உறுதியான குரலில், “இத ந்நீ எப்பவுமே க்கழட்டக்கூடாது..!!”என்று சொன்னவன், அவ்வறையை விட்டும் அகல, தரையிலேயே இரண்டாக மடிந்து அமர்ந்தாள் மென்னிலா. 

அவள் கதறி அழுந்த அழுகையின் அலறல்… என்ன ஏதென்று தெரியாமல், எட்டிப் பார்த்த பணியாட்களின் நெஞ்சையும் சற்றே குலுங்க வைத்தது. 

இதையா ‘அனுபவிப்ப?’ என்றான் அவன். இல்லை இன்னும் அவள் அனுபவிக்க வேண்டி இருக்கின்றதா? 

தாயைக் காண வேண்டி.. லண்டனிலிருந்து வந்தவளுக்கு.. அவளுக்கு தாய் முகத்தை ஒரு தரமேனும் காணக்கிடைக்கவேயில்லையே?? 

நோயுற்ற தாய்முகம் தான் அவள் காண்பது எப்போது?? வந்த அழுகை அதிகமாகிக் கொண்டே போனதே ஒழிய.. அழுகை நிற்கவேயில்லை. 

மன்னாரை மிதித்த கொஞ்ச நேரத்தில்…. தோழியின் வாழ்க்கை தலைகீழாக மாறும் என்று நினைத்துப் பார்த்திராத ஹரீஷ், அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் நின்றான். 

 

1 thought on “காதல் தானடி என் மீது உனக்கு !-2 (விஷ்ணுப்ரியா )”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top