ATM Tamil Romantic Novels

காதல் தானடி என் மீது உனக்கு!-5&6 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு? 

      [5]

 

மன்னார் மருத்துவமனை… 

அவள் முன்னாடி கறுப்பு நிற பேன்ட்டும், நீல நிற வண்ண அரைக்கைச்சட்டையும், இலங்கையின் கடற்படையினரின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியும் என, இலங்கை நேவியில் பணிபுரியும் அக்மார்க் ஸ்ட்ரிக்ட் ஆபிசராக நின்றிருந்தார் அந்தக் கேப்டன்!! அவரின் முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. 

வசனங்கள் வேறு கோபத்தில் தாறுமாறாக வெளிவந்து கொண்டிருக்க, ‘இக்தியோலஜிஸ்ட் மென்னிலா”வைக் கிழிகிழியென கிழித்துக் கொண்டிருந்தார் கேப்டன். 

ஆக்ரோஷமான விழிகளுடன், அவளைப் பார்த்தவர், “ஹூ கேவ் பர்மிஷன் டு கோ தேர்? யாரைக் கேட்டு போனீங்க..?

 கடலுக்குள்ள போறதுக்கு பர்மிஷன் லெட்டர் வைச்சிருக்கீங்களா? 

ஒரு ‘மெரைன் பயலாஜிஸ்ட்டா’ இருந்துக்கிட்டு… ஹயர் அபீஷியல்க்கிட்டேயிருந்து பர்மிஷன் கூட.. வாங்காமல் கடலுக்குள்ள போனா எப்படி? 

அட்லீஸ்ட் நிவ்ஸ்ல சுறாவோட அச்சுறுத்தலைப் பத்தியாச்சும் பார்த்திருக்க வேணா? நாங்க வரலைன்னா உங்க நிலைமை??? .. உங்களைக் காப்பாத்த வந்த.. உங்க ஹஸ்பன்ட்டோட நிலைமை? வை யூ கீப் கொயட்?? ஸ்பீக் அப்..!!!”என்று அவர் கத்த, 

அந்த அதிகாரியின் முன்னிலையில் இருந்த கட்டிலில்.. கைகளை கோர்த்த வண்ணம் சாய்ந்து அமர்ந்திருந்தவள் மறந்தும் கூட கேப்டனை நிமிர்ந்தும் பார்த்தாளில்லை. 

ஆம், அது அவளது தப்புத் தானே??..

 ஒரு கடல் உயிரியல் நிபுணருக்கு.. கடலுக்குள் செல்லும் போது.. அது சம்பந்தமான உயரதிகாரியிடம் இருந்து, உத்தியோகபூர்வமான அனுமதிக் கடிதம் வாங்க வேண்டும் என்று தெரிந்திருந்தும்… வீம்புக்கு அவள் கடலுள் சென்றது தப்புத் தானே?? 

அவள் அனுமதிக்கப்பட்ட அறையில் ஓர் மயான நிசப்தம் நிலவியது!! 

இத்தனை நேரம் அவளைத் திட்டிக் கொண்டிருந்த அதிகாரியும் அவளை மேற்கொண்டு ஒரு வார்த்தை சொல்லவில்லை; இவளும் அந்த அமைதியைக் குலைக்க நாடவில்லை. 

தன் தவறு அடி நெஞ்சுக்குள் மெல்ல நெருட, அவரை நிமிர்ந்து பார்த்தவள், “ஸா.. ரி சார்..இனி இப்படி நடக்காது”என்று மட்டும் சொன்னாள். 

அவள் காலம் கடந்து சொன்ன “ஸாரி”யை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாத போதிலும் மெல்ல தலையாட்டினார் கேப்டன். 

“ஒருவேளை நாங்க வராம இருந்திருந்து உங்களுக்கு ஏதாவது ஆகியிருந்திச்சுன்னா?? .. ‘நாட்டோட கடற்பரப்பு எல்லைய பாதுகாக்கத் தெரியலை.. ரெண்டு உயிர் போயிருக்கு.. நீங்க வேஸ்ட் கார்டா, கோஸ்ட் கார்டா?’ன்னு கேட்டு.. மேலிடத்துல இருந்து எங்க தலை தான் உருண்டிருக்கும்!! 

உங்க ஸாரியை ஏத்துக்கிட்டு.. ஐ கான்ட் லீவ் இட் எனிமோர்..!!”நீங்க எங்க கூட இன்குயரிக்கு வர வேண்டி இருக்கும்.. நீங்க பண்ணது சட்டப்படி குற்றம்!! .. பெனால்ட்டியில இருந்து ஜெயில் தண்டனை வரை எங்களால வாங்கிக் கொடுக்க முடியும்..” என்று அவள் முன்னாடி நின்ற ஆபிசர் பேசிக் கொண்டே போனவர், 

‘மென்னிலாவுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்’ என்ற வைராக்கியத்துடனேயே தான் இருந்தார் என்பது அவரது வார்த்தைகளில் நன்கே புரிந்தது. 

அவளுக்குமே பரிதிவேல் வீரனின் குகைக்குள் சிக்குண்டு கிடப்பதை விட, சிறைவாசமே மேலெனத் தோன்றியதோ என்னவோ அமைதியாக எதுவுமே மறுத்துப் பேசாமல் அமர்ந்திருந்தாள் மென்னிலா. 

அந்த கணம் ஆபிஸரின் செல் ஒலிக்க, பேன்ட் பாக்கெட்டில் கையிட்டவர், செல்லை எடுத்துப் பேச, இதுவரை அவரிடமிருந்து வந்து கொண்டிருந்த அதிகாரத் தொனி அப்படியே மாறிப் போனதை அவதானித்தாள் மென்னிலா. 

மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ? இம்முனையில் இருந்தவரோ“, ஓகே சார்.. ஓகே சார்.. இல்லை.. லோகல் போலீஸ் ஸ்டேஷன்ல.. எந்த எஃப். ஐ. ஆர்ரும் ஃபைல் பண்ணலை.. ஓகே சார்.. விட்டுர்றேன் சார்..” என்று சொல்லிக் கொண்டே போக , அவரையே பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வை மெல்லக் கூர்மையானது. 

இவ்வளவு கம்பீரமாகப் பேசிக் கொண்டிருந்தவரை, ‘தலையாட்டி பொம்மையாக மாற்றியது எது?’என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே.. அழைப்பை துண்டித்து விட்டு, மென்னிலாவைப் பார்த்த கேப்டன், 

“மினிஸ்டர் கிட்டேயிருந்து கோல் வந்ததால் விட்டுட்டுப் போறேன்.. இனி இந்த மாதிரி கிறுக்குத்தனம் பண்ணீங்கன்னா கண்டிப்பா உங்க மேல ஆக்ஷன் எடுப்பேன்!!..” என்று விட்டு, அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டே, அங்கிருந்து நகர்ந்து செல்லக் கதவைத் திறந்த போது, 

சரியாக அந்தத் தருணம் பார்த்து உள்ளே வந்தார் பரிதியின் வலது கையான வாசு மாமா. 

கேப்டனின் பார்வையோ, வாசு மாமாவை சீற்றத்துடன் ஏற இறங்க ஒரு தரம் பார்த்து விட்டு, அங்கிருந்து அகல, அதைச் சட்டை செய்யாதவராக, மென்னிலாவை நோக்கி பதற்றத்துடன் ஓடி வந்தார் வாசு மாமா. 

அவர் கண்கள் தன் மருமகனின் மனைவியை உச்சாதி பாதம் வரை நோக்கியது.

 ‘பரிதிக்கும், மென்னிலாவுக்கும் சுறாவின் தாக்குதல்’என்பதையறிந்ததும், அவருள் இயல்பாகவே இழையோடிய பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் உடல் நடுங்கத் தொடங்கியது. 

நீரிழிவு நோய்க்காரர் அல்லவா? பரிதியின் இரண்டு விரல்கள் துண்டானதைப் பார்த்ததும் தாங்க முடியாமல் தலையே சுற்றிப் போனது அவருக்கு. 

‘மருமகன் நலம்’ என்பதைக் கண்ட பிறகு தான், மென்னிலாவின் நினைப்பு வர, அவளைத் தேடி ஓடி வந்தவர் அவளிடமும் கனிவாகவே பேசினார். 

‘இப்ப என் மாப்ள ரெண்டு விரல் போய் படுத்துக் கெடக்கான்.. சந்தோஷமா?’ என்று ஆத்திரத்துடன் கேட்க, ஏனோ அவரால் மனம் வரவேயில்லை. 

மாறாக பரிதியைக் கண்ட போது இருந்த பதற்றம் குறையாமல், “யம்மாடி உனக்கு ஒண்ணும் ஆகல்லேல்ல? ரொம்ப ஏசிப் போட்டானா அந்தப் பய…?”என்று ‘கேப்டனை’ வேறு அவர் திட்ட, அவளோ வாசு மாமாவின் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை!! 

ஏனோ பழைய நினைவுகளின் தாக்கம் எழுந்து.. அவரது முகத்தைப் பார்க்க முடியாதபடி ஓர் திரையை ஏற்படுத்தியது அவளுக்கு!! 

அவள் விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி, யாரும் என்னை திட்டவில்லை என்பது போல, “ம்ஹூஹூம்!! ” என்று மட்டும் அவள் தலையாட்ட, அவளருகே நின்று கொண்டே பல கதைகள் கதைக்கவாரம்பித்தார் வாசு மாமா. 

அந்தக் கதையில் தான்.. எப்படி இவ்வளவு நேரமும் திட்டிக் கொண்டிருந்த கேப்டன், அந்த ஒற்றை செல்லை அழைப்புக்குப் பிறகு, ஏன் பவ்யமாகப் பேசிவிட்டுப் போனார் என்று புரிந்தது அவளுக்கு!! 

“அந்தப் பய.. உன் மேல ஆக்ஷன் எடுப்பேன்னு ஒத்தக்கால்ல நின்னுப் போட்டான்மா.. நான் தான்.. நம்ம கடல்வளத்துறை மினிஸ்டருக்கு கால் பண்ணி.. விஷயத்த சொன்னதும்.. அவர் ‘நான் பார்த்துக்கிடுறேன்’னு சொன்னாரு.. அப்படியே பரிதியைப் பார்க்க வரேன்னு சொன்னாப்டி.. நானு தான்.. வேண்டாமுன்னு சொல்லி, நீங்க வந்தா கூட்டம் கூடும்ன்னு சொல்லி.. தடுத்து வைச்சிருக்கேன்…”என்று சொல்ல, அப்படியானால் கேப்டனுடன் செல்லில் பேசியது கடல்வளத்துறை அமைச்சரா?? என்று வியப்பாக இருந்தது மென்னிலாவுக்கு!! 

அவர் தன்னைக் கம்பியெண்ணுவதிலிருந்து காப்பாற்றி விட்டார் என்பதற்காக, வாசு மாமாவை அவள் நன்றிப் பெருக்கோடு எல்லாம் பார்க்கவேயில்லை. 

மாறாக தன்னருகிலேயே இருக்கும் அவரும், அவரது கனிவான பேச்சும் அவளுக்கு எரிச்சலைக் கொடுக்க, அவர் பேசிக் கொண்டிருந்த போதே, கட்டிலில் இருந்து , தரையில் கால் பதித்து எழுந்தவளுக்கு சற்றே தரை நழுவுவது போல இருந்தது. 

தட்டுத் தடுமாறி விழப் போனவள், கட்டிலின் கால்மாட்டினைப் பிடித்துக் கொள்ள, பதறிப் போன வாசு மாமா, 

ஓடி வந்து அவளது கைச்சந்தைப்பற்றி, அவளுக்கு உதவி புரிய எத்தனிக்க, அவர் கை தன் மீது படுவதே தீது என்று கொண்டாளோ அந்த ராட்சசியும்?? 

தன் கையை உதறியவளாக.. அவர் கையைத் தட்டிவிட்டவள், அவரை அருவெறுப்பு ஓடும் ஓர் பார்வை பார்த்தாள். 

அந்த ஒற்றைப் பார்வையில் வாசு மாமாவின் மனம் காயம்பட்டுப் போக, உள்ளுக்குள் வருத்தம் தோய்ந்த குரலில், “இந்த நிலமையில எங்கம்மா கெளம்பிட்ட..??” என்று கேட்க,

அவர் முகத்தைப் பாராமல், புறமுதுகு காட்டியவளாகவே பதில் சொன்னாள். 

“நரகத்துக்கு?? புரியலை?? உங்க வீட்டுக்கு” என்று மிடுக்குடன் கூறியவள், அறையின் கதவை நாடி நகரப் போக, அதற்கு விடாமல், உடனே அவள் முன்னாடி வந்து தடுத்தார் வாசு மாமா. 

அவள் பார்வை.. அவரை சீற்றம் கொண்ட கழுகுக் கண்களைப் போல கூர்மையுடன் பார்த்தது. அவள் ஏதும் பேசா விடினும், அவள் கடைப்பிடித்த மௌனமே.. அவரைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. 

ஆனால் அவளது தவிடுபொடியாக்கும் பார்வையை எல்லாம் கிஞ்சித்தும் கணக்கில் எடுக்காதவருக்கு, பரிதிவேல் பற்றிய நினைப்பே ஊறியது.

அவள் கண் விழித்ததும் இவளைத் தான் தேடுவான் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்த வாசு மாமாவும், “யம்மாடி.. தயவு பண்ணி அவன் கண்ணு முழிச்சதும் போம்மா..”என்றார் அவளைத் தடுக்கும் வழிவகை தெரியாத இயலாமை நிறைந்த குரலில். 

அவள் காதுகளில் வாசு மாமா சொன்னது நன்றாகவே விழுந்தாலும், அதைக் காது கொடுத்துக் கேட்கப் பிரியப்படாதது போல அங்கிருந்து நகரத் துணிய, சட்டென அவள் கைகளைப் பிடித்துக் கொண்டார் அவர். 

அவர் பார்வையில் ஒரு மன்றாட்டம் தெரிந்தது;ஒரு கெஞ்சல் தெரிந்தது!!

அவையெல்லாம் என்னை ஒருதுளியேனும் பாதிக்காது என்பது போல நெஞ்சு நிமிர்த்தியே நின்றாள் மென்னிலா. 

அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு, தன்மானமிழந்து போனவராக, அந்தக் கொடியவளிடம் கெஞ்சத் தலைப்பட்டவர், 

“யம்மாடி.. நான் சொல்றதை ஒருக்கா கேளுமா.. அவன் கண்ணு முழிச்சதும் உன்னய தான்மா தேடுவான்.. அப்போ நீ அவன் பக்கத்துல இருந்தீன்னா.. அவன கட்டுக்குள்ள கொண்டார முடியும்!!..இல்லீன்னா ரொம்ப கஷ்டமா போயிடும்மா.. யம்மாடி நான் உனக்கு சித்தப்பன் மொறைமா.. இந்த சித்தப்பா சொல்றதை ஒருக்கா கேளும்மா.. உன் கையவே காலா புடிச்சு கேட்டுக்கிடுறேன்மா” என்று அவர் தன்னை விட வயதில் சின்னப் பெண்ணிடம் கெஞ்ச.. அந்தக் கல்நெஞ்சுக்காரியோ அதனைக் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. 

அவள் கீழிமைகள் குபுக்கென சிவந்து போனாலும் கூட, அவரை மனம் வெறுத்துப் போனவளாக பார்த்தவள், உணர்ச்சிகளேயற்ற குரலில், 

“நானும் அன்னைக்கு இப்படித்தான் கெஞ்சினேன்.. உங்க காலைப் பிடிச்சுக் கெஞ்சினேன்!! ..அப்போ உங்க சித்தப்பா-மகள் பாசமெல்லாம் எங்கே போச்சு மிஸ்டர். வாசு??”என்று அவள் கேட்க, அவரது கெஞ்சல் எல்லாம் தடைப்பட்டு நின்று போனது. 

 அவரது தொடுகையைத் தன்னிலிருந்தும் உதறிவிட்டவளாக, கதவை நோக்கி நேர்கொண்ட பார்வையுடன் நடந்தவளின் நடை ஒருகணம் தடைப்பட்டு நின்றது. 

மென்னிலா மனம் மாறித் தான் திரும்ப வர விழைகிறாள் என்று தப்புக் கணக்குப் போட்ட வாசு மாமாவின் முகம்.. மெல்ல மெல்ல மலர்ந்தது. 

ஆனால் அவளோ, வாசு மாமாவை நோக்கித் திரும்பாமல், கணீர்க் குரலில், “உங்க அருமை மாப்பிள்ளை… அவன் செத்தாலும் ஒண்ணு.. பிழைச்சாலும் ஒண்ணு.. ஏன்னா.. எனக்கு அவன் எப்போவோ செத்துட்டான்..!!”என்று சொல்லி விட்டு அறைக்கதவைத் திறந்து அவள் வெளியேற, மூடப்பட்ட கதவையே வெறித்துப் பார்த்துக் கொண்டே திக்பிரமைப் பிடித்தாற் போன்று நின்றிருந்தார் வாசு மாமா. 

அவருடைய அருமை மாப்பிள்ளை.. இவளுக்காக தன் உயிரையும் ஈய்ந்தளித்து.. இவள் உயிரைக் காப்பாற்றியிருக்க.. நாவில் நரம்பேயற்றவளாக இப்படிக் கூறி விட்டுச் செல்கிறாளே இந்தப் பெண்?? 

இவள் பெண்ணா? இல்லை பெண்ணுருவில் இருக்கும் அரக்கியா?? என்று அதிர்ந்தவராக நின்றிருக்க, அவர் யாருக்கும் காத்திராமல் வீட்டை நோக்கிப் பயணமானாள். 

அவள் ஹாஸ்பிடலை விட்டும் வெளியே நடந்த கணமும் சரி.. ஹாஸ்பிடலின் பார்க்கிங் ஏரியாவில் நின்றிருந்த முருகனுடன் காரில் ஏறி அவள் பயணித்த போதும் சரி… அவள் மனம் அந்தப் பொல்லாத நினைவுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. 

அந்த நினைவுகளின் உஷ்ணத்தில்.. அவளது அழகிய நயனங்களில் இருந்தும் சரேலென சத்தமேயின்றி வழிந்தது கண்ணீர்!! 

‘நினையாதே மனமே.. நினையாதே.. அவை எல்லாம் உன் வாழ்வில் நீ வெறுத்து ஒதுக்க வேண்டிய விடயங்கள்.. எஞ்ஞான்றும் நினைவு கூரவே முடியாத விடயங்கள்!!’என்று எவ்வளவோ இடித்துரைத்தது மனம். 

ஆனால் ஓர் நிலையில் நில்லாத அவளுடைய பாழும் மனமோ, திரும்பத் திரும்ப அந்த நினைவின் சாரல்களையே அவள் மேல் தெளிக்க முனைந்தது. 

கண் மூடி காரின் ஸீட்டில் சாய்ந்தவளின் காதுகளில் கேட்டது.. முரட்டுக் காளை மாடுகளின் குழம்புச் சத்தமும், அவற்றின் கழுத்தில் ஆடும் மணிகளின் சத்தமும்!! 

கூடவே தன் முத்து மூரல்கள் வெள்ளை வெளேரென பிரகாசிக்க… சிரித்துக் கொண்டு நிற்கும் பரிதிவேலின் கம்பீரமான வதனமும் ஞாபகத்துக்கு வர… அவளுள் எழுந்த வலி அதிகமானது. 

அவன் வீட்டு போர்ட்டிகோவில் கார் நுழைந்ததும் தான் தாமதம், காரில் கிடந்த.. தான் கடலுக்குச் சென்ற போது எடுத்துச் சென்ற ஹேன்ட் பேக்கினையும் எடுத்துக் கொண்டு, எதையுமே யோசியாதவளாக தன்னறைக்குள் நுழைந்தவளுக்கு அழுகைப் பொத்துக் கொண்டு வந்தது. 

அறையின் கதவை அடைத்தவள், ஹேன்ட்பேக்கை மஞ்சத்தில் விட்டெறிந்து விட்டு, கதவின் முதுகிலேயே தன் முதுகு சாய்த்தவளாக அழுதாள்;கண்ணீர் விட்டுக் கதறி அழுதாள். 

அந்த நினைவுகள்.. அந்த நினைவுகள் தந்த வலி.. இதயத்தில் கிடுக்கிப்பிடி பிடித்தாற் போன்று வலியைத் தர.. இதழ்கள் குவித்து, “ஊஃப்.. ஊஃப்”என்று மூச்சை வெளிவிட்ட வண்ணமே தான் அனுபவிக்கும் வலியை சமாளிக்க முயன்றாள் அவள். 

அந்த கணம்.. அவள் அனுபவித்துக் கொண்டிருந்த மானசீக வலியில் இருந்து, அவளை டைவர்ட் பண்ணுமுகமாக.. தெய்வாதீனமாக சிணுங்கியது ஹேன்ட் பேக்கினுள் இருந்த அவளுடைய கைப்பேசி. 

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தவள், மஞ்சத்தின் மீதிருந்த செல்லை எடுக்க முனைந்த கணம், அதன் சிணுங்கல் முற்றாக ஓய்ந்திருந்தாலும் கூட, அடுத்த கணம் ஒரு முறை சிணுங்கி அடங்கியது அவளது செல்!! 

அது ஒரு மெசேஜ்.. அவளுடைய மாமாவிடமிருந்து வந்திருந்த ஒரு மெசேஜ்!!

அப்படியானால் அழைப்பெடுத்திருந்தது கூட அவனே தானா? ஆம், அவளுடைய மாமா சரவணனே தான் அந்த அழைப்புக்குச் சொந்தக்காரன்!! 

“வீட்டு கொல்லைப்பக்கம் வா..” என்று அந்த மெசேஜில், அவன் தங்கிலீஷ் மூலம் தகவல் அனுப்பியிருப்பது புரிய, நிலாவின் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் தோன்றவாரம்பித்தன. 

அப்படியானால் அவளது மாமா.. வீட்டுக்கு பின்புறம் அவளுக்காக காத்திருக்கின்றானா?? அவளுக்கே அவளுக்காக என்று காத்திருக்கிறானா?? 

உடலினுள் ஓர் அன்பு சிலிர்த்தடங்க.. ஓடிச் சென்று திரைச்சீலை, விளக்கி, சாளரம் வழியாக வீட்டு பின்புறத்தை எட்டிப் பார்த்தாள் மென்னிலா. 

அந்தப் பிரம்மாண்டமான வீட்டின் பாரிய தாழ்வார மதிலைத் தாண்டி, பின்புறம் இருந்த புதர்ப்பற்றைப் பக்கம், இடுப்பில் கைவைத்த வண்ணம் நின்றிருக்கும் சரவணன் மாமாவை கண்டு கொண்டன மென்னிலாவின் மிருதுவான விழிகள்!! 

மாமாவைக் கண்டதும் அவளுடைய அஷ்டகோணலாக வளைந்த இதழ்களில், அத்தனை வலியிலும் ஓர் மென்னகை எட்டிப் பார்க்க, அவனை நோக்கி ஓடப் பரபரத்தன அவள் கால்கள்!! 

அந்தி சாயும் நேரத்தில்… வீட்டிலுள்ள அத்தனை பணியாளர்களின் கண்களிலும்.. மண்ணைத் தூவி விட்டு வீட்டின் பின்னாடி பக்கம் சென்று.. அந்தப் புதர்ப்பற்றைகளுக்குள் நின்றிருந்த தன் மாமனை அவள் துலாவிய போது கேட்டது அக்குரல். 

“நிலாஆஆ”என்று ஊனுருக, உயிர்க்கரைய கேட்ட ஓர் கம்பீரக் குரல்!! 

அது அவள் எஞ்ஞான்றும் கேட்க விரும்பும் அவனது மாமனின் குரல்!! 

சரவணனின் அழைப்பு, அந்த மெல்லியளாளின் செவி வழி கடந்து, இதயம் நுழைந்து.. உடல் முழுவதையும் தளையச் செய்ய, சத்தம் வந்த திசை நோக்கி ஆதுரத்துடன் திரும்பினாள் நிலா. 

அவள் முன்னே அவளுடைய உயிருக்குயிரான மாமா!!! அவளுக்கென்றிருக்கும் ஓரே கனிவான சொந்தம் அவளுடைய மாமா!! 

காயம்பட்ட குழந்தை தாயைக் கண்டதும் இன்னும் கொஞ்சம் உரத்து அழுமல்லவா?? அது போல மாமாவைப் பார்த்ததும்..உள்ளுக்குள் கிடந்த வலி அதிகமாக… அடக்கி வைத்த கண்ணீர்.. வெடித்துச் சிதறலானது. 

அவள் அழுவதைத் தாங்க மாட்டாமல், “ந்நிலாஆஆ” என்ற வண்ணம் உடல் தளர, உருக்கமாக அழைத்தவன், சட்டென அவளைத் தாவி அணைத்துக் கொண்டான் அவளுடைய மாமா.

அந்த அணைப்பில் அவளுடைய தாயணைப்பின் இதம் வந்து போக.. இன்னும் கொஞ்சம் சரவணனின் மார்போடு ஒனறலானாள் மென்னிலா. 

சரவணனின் கைகள் அவள் பின்னந்தலையை காதலுடன் தடவிக் கொடுக்க, அவனும் சற்றே உணர்ச்சி வசப்பட்டுத் தான் இருந்தான். 

சுறாவுக்கு இரையாகி மீண்டு வந்திருக்கிறாள் என்ற நினைவில் அவன் அணைப்பின் இறுக்கம் இன்னும் கொஞ்சம் கூடியது. 

அந்த அணைப்பில் அவளைக் கிடத்திக் கொண்டே, “நடந்தது எல்லாம் கேள்விப்பட்டேன்.. உனக்கு ஒண்ணும் ஆகல்லீய்யேமா? ஏன் கடலுக்குப் போன.. உனக்கு ஏதாவது ஆகியிருந்தா உன்னயவே நினைச்சிட்டிருக்க என் கதி..?”என்று பதற்றத்துடன் அவன் கேட்ட.. அந்தக் கேள்வியில் பட்டெனக் கண் விழித்தவளுக்கு, தான் தன் மாமாவை அணைத்தபடி நின்றிருக்கும் நிதர்சனம் புரிந்தது!! 

உள்ளுக்குள் ஒரு குற்றவுணர்வு விரவிப் பரவ, சட்டென அவனின் அணைப்பிலிருந்து விலகி வெளியே வந்தவள்,தன் கண்ணீரைப் புறங்கையால் அழுந்தத் துடைத்தவளாக, 

“இப்போ நான் இன்னொருத்தன் பொண்டாட்டி.. தயவு செஞ்சு இப்படி என்னைத் தொட்டுப் பேசுறதை நிறுத்துங்க”என்று சொல்ல, சரவணனின் முகம் அடிபட்டாற் போன்று வாடி வதங்கிப் போனது. 

அவன் கைகளில் ஓர் விலங்கினை மாட்டியது போல ஒரு தோற்ற மயக்கம் தோன்ற.. அவள் வாடிய முகத்தை தொட்டுத் தேற்ற முனைந்த மனதைக் கடினப்பட்டு அடக்கிக் கொண்ட சரவணனுக்கு, அவளது விடுக்கென்ற பேச்சுக்கு காரணம் வேறொன்றாகவே தோன்றியது. 

அவளைக் காதலுடன் பார்த்தவன், “நிலா நீ வர முதல்ல.. அத்த சவத்தை எடுத்துட்டோம்னு கோவமாடா?? .. பரிதி தான் ‘அவள் வரமாட்டா’ன்னு சொன்னதுக்கு அப்புறம் எங்களுக்கு வேற வழி தெரியலைடா..”என்று அவள் வருமுன்பு இடுகாட்டில் கொள்ளி மூட்டிய கதையை அவன் சொல்ல, குனிந்திருந்த அவள் தலை விருட்டென்று நிமிர்ந்தது. 

 அப்படியானால் அவள் ஊகித்தது சரி தான். பரிதி தான் வேண்டுமென்றே தகவல் சொல்லக்கூடாது என்று மறைத்திருக்கிறானா?? 

என்ன கேவலமான மனிதப் பண்பு அது?? 

அவன் கண்களோ தரை பார்த்துக் குனிந்த கணம்.. எதேர்ச்சையாக அவள் கையை நோக்கித் திரும்ப, அதிலிருந்த கட்டை கண்டு கொண்டதும் சரவணனின் முகம் சொல்லொணா வலியைக் கடன் வாங்கிக் கொண்டது!! 

அவனையும் மீறி உணர்ச்சி வசப்பட்டவனாக அவள் கையைப் பற்றிக் கொண்டவனின் கண்களில், நீர் துளிர்க்கவாரம்பிக்க, “இது எப்ப?”என்று பதற்றத்துடன் கேட்டான் சரவணன்!! 

தனக்காக கண்ணீர் விடும் மாமாவின் கண்ணீர் அவளைத் தீயாய்ச் சுட்டது. 

அவனிடமிருந்து தன் கையை உள்ளிழுத்துக் கொண்டவள், குரூரமாக முகத்தை மாற்றிக் கொண்டு, 

“இனி நீங்க இங்கே வராதீங்க.. இது நீங்க நினைச்சிட்டிருக்க நிலா இல்லை.. என் பாதை இனி தனியான பாதை.. இனி என் மைன்ட்ல வேற எந்த உணர்ச்சிகளுக்கும் இடமில்லை.. அவனைப் பழி வாங்குறதைத் தவிர!!..”என்றவள்,

தன் மாமாவிடம் மேற்கொண்டு ஏதும் பேசாமல் அவள் திரும்பி நடக்க.. இயலாமையுடன் அவளது புறமுதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான் சரவணன். 

மிருதுவாக இருந்த அவனது அத்தை மகள் மென்னிலாவா.. இன்று பழிவெறி சுமந்த கண்களோடு அவனிடம் உரையாடி விட்டுச் சென்றது?? 

இந்தப் பூ.. புயலாக மாற இவனும் ஓர் காரணமோ? அன்றே அனைத்தையும் தடுத்து.. அவளைத் தனக்கு சொந்தமாகியிருக்க வேண்டுமோ? என்றே தோன்றியது அவனுக்கு!! 

திரும்பவும் யார் கண்ணிலும் படாமல் தன்னறையை வந்தடைந்தவளுக்கு, மனதிற்குள் பழிவாங்கும் உணர்ச்சி மட்டுமே மேலோங்கிப் போயிருந்தது. 

வெறி!! பழிவெறி!! தன் கைகளால் அவனைக் குத்திக் கிழித்து இரத்தம் பார்க்கும் வெறி!! அவளை வாழ்வின் எந்த எல்லைக்கும் இட்டுச்செல்ல தயாராக இருந்தது. 

கண்கள் ரௌத்திரத்தில் பளபளக்க, மனதுக்குள்ளோ ஏதேதோ திட்டங்கள் மன உருக்களாக ஓடியது. 

அம்மாவின் சமாதி முன்னிலையில் அவள் எடுத்துக் கொண்ட சத்தியம் அவளது செவிகளுக்குள் திரும்பத் திரும்ப ஒலித்தது. 

இறைவன் உணர்ச்சிகளுக்கு எல்லாம் மனித ரூபம் கொடுக்க நாடினானேயானால், பழி உணர்ச்சிக்கு ஏற்ற ரூபமாக மென்னிலாவையே தேர்ந்தெடுத்திருப்பான். 

அந்த மிருதுவான விழிகளில் அப்படியொரு கொடூரம்.. தலைதூக்கியிருந்தமையானது…அவளை மனதளவில் இன்னும் இன்னும் குரூரியாக மாற்றிக் கொண்டிருந்தது. 

 அவள் மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டே சாளரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே… தீவிர யோசனையில் இருந்த சமயம், அவளது அறைக்கதவு திடீரென திறக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, அவளது நாடி, நரம்பு முதுகந்தண்டு வடம் என அனைத்தும் ஜில்லிட்டுப் போகக் கேட்டது, 

“ந்நிலாஆஆ” என்ற அவனுடைய குரல்!! 

ஏதோ அவளது உயிர் தான் போய் விட்டதோ என்று ஐயுற்றவனாக பதறும் அவனுடைய குரல்!! அந்தக் குரலில் அவளுள் இருந்த பழியுணர்ச்சி இன்னும் அதிகமாக, அவனை நோக்கி சடாரெனத் திரும்பினாள் மென்னிலா!! 

 

மென்னிலாவின் மதிவதனத்தில் என்ன தெரிந்ததோ? அந்தச் சுட்டெரிக்கும் பரிதிவேலின் முகம் பாகாய் உருகியது!! 

அவள் முகத்தில் வெகுநாள்க் கழித்து.. அவன் காணாததைக் கண்டான்!! அந்த முகத்தில்.. எதைக் காண வேண்டுமென்று தவியாய்த் தவித்தானோ அதைக் கண்டான்!! 

ஆம்.. மென்னிலாவின் முகத்தில் அவன் கண்டது காதலை.. பழைய தீராத காதலை!! 

அந்தக் காதல் பார்வையோடு மாத்திரம் நின்றாளா அவள்?? அவளது மையல் கொண்ட கண்கள்.. அவனை உச்சாதி பாதம் வரைத் தழுவியது!! 

சோர்ந்து போன விழிகளேயானாலும்.. அந்த விழிகளில் மலையளவு கொட்டிக் கிடந்தது காதல்!!

 தன் தோள்புஜங்கள் ஏறி இறங்க மூச்செடுத்த வண்ணம்.. இடது கையில் விரல்கள் அற்ற இடத்தில் கட்டுடன்… அவளையே மையல் கொண்டவனாகப் பார்த்துக் கொண்டிருந்தான் பரிதி!! 

அவள் கால்கள் பரபரக்க, சட்டென ஓடி வந்து தன் உயிரைக் காப்பாற்றிய தன் ஆசைக் கணவனின் முதுகை இரு கைகளாலும் கட்டிக் கொண்டாள் அவள். 

அவனது பரந்த மார்பில் அடைக்கலமானது அவளது சின்னத்தலை!! அவனது வலிய முதுகை இறுக்கிக் கட்டிக் கொண்டது அவளது மெல்லிய கைகள்!! 

இன்னும் இன்னும் சிறுகுழந்தை போல அவன் நெஞ்சாங்கூட்டில் புதைந்து போனவள், அவன் காதுகுளிரச் சொன்னாள். 

அந்த இரும்பிதயமும் உருகும் வண்ணம் சொன்னாள். அவன் கல் மனதில் வேர் விட்ட பசுமரத்தின் வேர் போலச் சொன்னாள்.

“மாமாஹ்.. உனக்குஹ் ஒண்ணும் ஆகலையேஹ் மாமாஹ்?”என்று பிதற்றியவளின் கண்ணீர்.. அவன் அணிந்திருந்த உள்பெனியனின் இதயப்பகுதியை நனைத்தது. 

கூடவே அவனது இதயமும் நனைந்தது. 

அவளது அழைப்பு… “மாமா”என்ற அவளது ஒற்றை அழைப்பு!! இத்தனை காலமும் அந்த முரடனுக்குள் தூங்கிக் கொண்டிருந்த காதலனை எழுப்பி விடவே செய்தது. 

அந்த சுறாவின் தாக்கத்தில் இருந்து விடுபட முடியாதவளாக, மென்னிலாவோ, அவன் மார்பிலிருந்து தலை தூக்கியவனாக, . 

“அந்த சு.. சு.. சுறா.. ரொம்ப பெ.. பெ.. பெருசு மாமா..”என்றவள், துண்டான அவன் இடது கையை கைகளில் ஏந்திய வண்ணம், அடுத்தது பேசக்கூட முடியாமல் தொண்டையை அடைக்க விம்மி விம்மி வந்தது அழுகை!!

அவளது அழுகை அது அவனுக்கானது அல்லவா? அது அவன் மீது இருக்கும் காதலால் அல்லவா? என்று தோன்றியதுமே.. தன் மனையாளின் கண்ணீர்.. வலியைக் கொடுக்கலானது அவனுக்கு!! 

அவள் அழுவதைப் பார்க்க பரிதிவேல் வீரனால் ஏனோ அதைத் தாங்க முடியவில்லை. 

அவளுடைய கன்னத்தைக் கையில் ஏந்தியவன், “ஒண்ணுமில்லைமா.. நான் நல்லா தான் இருக்கேன்.. நான் வந்துட்டேனுல்ல? .. உனக்கு ஒண்ணும் ஆகலையே..?”என்று அவன் கேட்டுக் கொண்டே அவள் கண்ணீரைத் துடைத்தான். 

நா தழுதழுக்க, “உங்க உசுரைத் துச்சமா மதிச்சு… என்னைக் கா.. காப்பாத்தினது எல்லாமே எனக்காகத் தானா மாமா?”என்று அந்த இராவணனின் மனதையும் கரைத்த நவீன சூர்ப்பனகையென.. இவளும் கேட்க, அவளின் அக்கறையில் மொத்தமாக வீழ்ந்தே போனான் பரிதிவேல் வீரன். 

அவன் தலை மெல்ல ஆட, “ம்… எல்லாமே உனக்காகஹ்…” என்று சொன்னவனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்திருக்க, அதை இன்னும் பன்மடங்காக்கும் வண்ணம்.. அவனது வலிமையான கழுத்தோடு கையிட்டு.. சற்று எம்பி.. அவனது முரட்டுக்கன்னம், தாடை, நெற்றி எங்கும் அதிரடியாக முத்தமழை பொழிந்து கொண்டே போனாள்!! 

அவனது முரட்டுக்கன்னங்களில்.. அவளது மென்மையான சிவந்த இதழ்கள் அழுந்தப்பட்டதால் ஏற்பட்ட குறுகுறுப்பில் இதயம் கனிந்தவனாக அவன் நிற்க, இவள் அவனுடைய தாடையை தன் உள்ளங்கையில் ஏந்தியவளாக, 

அவன் இதயத்தைக் கொள்ளை கொள்ளுமளவுக்கு விழி மலர்த்தி, “என்னை அவ்வளவு பிடிக்குமாஹ் மாமாஹ்??..”என்று கேட்டாள். 

மனைவியின் நெருக்கத்தில்.. வேறு எதைப்பற்றியும் சரிவர யோசிக்க மனமில்லாதவன் அவளது சிற்றிடையூடு கையிட்டுத் தன்னை நோக்கி இன்னும் அழுத்தியவன், 

அந்தச் சுகத்தில் திளைத்தவனாக ஹஸ்கி குரலில், “ஹேய் ஆண்டாளுஹ்… உன்னை மட்டும் தான்டி புடிக்கும்..”என்று சொல்ல, அவனது கண்களையே மையல் கமழப் பார்த்துக் கொண்டேயிருந்தாள் மென்னிலா. 

ஹாஸ்பிடலில் கண் விழித்ததும்.. டாக்டர் சொல்லச் சொல்லக் கேட்காமல்… அவளைக் கண்டால் தான் என் சுவாசம் அமைதி எய்தும் என்பது போல… ஆவேசமாக வீட்டை நோக்கி வந்தவனை சமாளிக்க முடியாமல்… மாடிப்படியேறி வந்த வாசு மாமா, மென்னிலா தன் மாப்பிள்ளையை அணைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டு அதிர்ந்தவராக நின்று விட்டார்

நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த.. வாசு மாமாவுக்கு, “உங்க அருமை மாப்பிள்ளை… அவன் செத்தாலும் ஒண்ணு.. பிழைச்சாலும் ஒண்ணு.. ஏன்னா.. எனக்கு அவன் எப்போவோ செத்துட்டான்..!”என்று ஈவிரக்கமேயற்று சொன்னவளா இது? என்ற சந்தேகம் வலுத்தது. 

அவரது சந்தேகம் நொடிக்கு நொடி அதிகமாக, இடுங்கிய விழிகளுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவருக்கு, தோன்றியதெல்லாம் கீழுள்ளவை தாம். 

“இந்தப் பெண் தற்போது என்ன நாடகமாட விழைகிறாள்..?”-என்பதேயாம்!!

இதை எதையுமே அறியாத பரிதிவேல் வீரன்.. அவளது கண்மை அஞ்சன விழிகளை.. மையலுடன் இமைக்க மறந்து பார்த்த வண்ணமே நின்றிருந்தான். 

காதல் தானடி என் மீதுனக்கு? 

        [6]

 

அன்றிரவு பரிதியின் அறையில்… 

அவளுக்குப் புறமுதுகிட்டபடி படுத்திருந்தான் மென்னிலாவின் முரட்டுக் கணவன் பரிதிவேல் வீரன். 

அவளுடைய உறங்காமல் விழித்திருந்த கண்களோ, எந்த சட்டையும் போடாமல் வெறும் உள்பெனியனுடனும், வேஷ்டியுடனும் ஒருக்களித்துப் படுத்திருந்தவனின் மீது பதிந்தது. 

அவனுடைய திண்ணிய புறமுதுகு!! … முறுக்கேறிய தோள்புஜங்கள்!! 

அவற்றிலே மணிமணியாகப் பூத்திருந்த வியர்வைத் துளிகள்!!

என்று அனைத்தும் நிர்மலமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வை இறுதியில் வந்து நிலைத்தது அவனது துண்டான கைவிரல்கள் மீது!!. 

அந்த கணம் அவளுடைய சிந்தையில்.. ஆழமான ஆழ்கடலில் கோரப்பற்களை விரித்துக் கொண்டு வந்த சுறாவும், கீழே அடர்த்தியான ஆழத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுறா கடித்த அவனுடைய விரலும் ஞாபகத்துக்கு வர, 

அவளுள்ளே எழுத்தில் விவரிக்க முடியாத ஒருவித தவிப்புணர்வு உடல் முழுவதிலும் எழுந்து பரவுவதை… எத்தனைப் பிரயத்தனங்கள் செய்தும் தடுக்க முடியவில்லை. 

அப்படி எழுந்த தவிப்பு ‘ பொய்யோ!!’ என்று அஞ்சத்தக்களவுக்கு, அடுத்த நொடி அவள் கண்கள் வன்மத்தையும், குரோதத்தையும் கடன் வாங்கிக் கொண்டது.

‘இதோ உன் எதிரே படுத்திருப்பவன் உன்னைக் கொண்டவன் அல்ல.. உன்னைக் கொன்றவன்!இரத்தமின்றி, ஆயுதமின்றி உன் இதயத்தைப் பெயர்த்தெடுத்து ஆயிரம் சுறாக்களுக்கு இரையாக்கியவன்!இவனது கரிசனத்தை நீ நம்பப் போகிறாயா?’என்று அவளுடைய பொல்லாத மனம் கேள்வி கேட்க, அவளுள் தோன்றிய தவிப்பு முற்று முழுதாக அவளை விட்டும் அகன்றே போனது!! 

‘அவனைத் தன் வசப்படுத்துவது எப்படி? அவனை நம்ப வைத்துக் கழுத்தறுப்பது எப்படி?’என்ற யோசனைகள் அவளுடைய மனதை.. இரண்டறக் குடைந்து கொண்டிருந்தது. 

அவள் செய்து முடிக்க வேண்டிய காரியத்தில்.. தன் தாய்க்கு அவள் செய்து கொடுத்த சத்தியத்தில்.. அவளது ஐம்புலன்களும் விழிப்புணர்வுடன் இருந்தது. 

அடுத்த நாழிகை, மெல்ல மேலெழுந்த அவளது மென்மையான கரங்களில் ஒன்று, அவனுடைய கைச்சந்தினூடாகக் கையிட்டு, அவனுடைய உரமேறியிருந்த வயிற்றில் ஊர்ந்தது. 

அவள் கை அவனது வெற்று மார்பைத் தடவிய கணம்… பெண்ணாய்ப் பிறந்த அவளுக்குமே உள்ளுக்குள் ஜிலீரென்ற ஓர் உணர்வு படரத்தான் செய்தது. 

இருப்பினும் அந்த திண்ணிய மார்புகளைத் தடவும்… அவளுடைய கைகளின் அசைவை மட்டும் அவள் நிறுத்தவேயில்லை. 

தூக்கமின்றி.. தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்த பரிதிக்கோ… மார்பில் ஏதோ ஊர்வது போல இருக்க.. தலையைக் குனிக்காமல், பார்வையை மட்டும் குனித்துப் பார்த்தவன்.. இனிமையாக அதிர்ந்தான். 

அவனது மார்பில் ஊருவது அவளது கைகள் அல்லவா?? அதன் தடவலில் ஏதோ ஒன்று புரிய… பரிதிவேலின் முரட்டு உடல் சட்டென விறைக்கவாரம்பித்தது. 

அவனுக்கும் சட்டெனத் திரும்பி.. அவள் மதிமுகம் காண வேண்டும் என்ற வெறி உள்ளுக்குள் தீயாய் கனன்றது!!! 

இருப்பினும் தன் ‘ஆண்டாள்’தூக்கத்தில் கையிட்டிருந்தால்?? இவன் சடுதியாக அவளை நோக்கித் திரும்புகையில், அவள் தூக்கத்தை விட்டும் விழித்துக் கொண்டாள்?? என்ற கேள்விகள் மேலெழும்ப… அசையாது கல்லாய் நின்றான் பரிதிவேல் வீரன்!! 

ஆனால் அவனைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் ராட்சசிக்கோ… அவனது விறைத்த உடலைக் காணவும் கண்கள் விஷமத்துடன் விரிந்தன. 

அவனை இன்னும் கொஞ்சம் நெருங்கிப் போய், அவனது வலிய முதுகைத் தன் பலம் கொண்ட மட்டும், தன் தனங்களால் அழுத்தி அவன் காதோரம் கிசுகிசுப்பாக, “மாமாஹ்” என்றாள் உலகத்திலுள்ள ஒட்டுமொத்த தாபத்தினையும் தன்னில் தேக்குபவள் போல. 

அந்த முரட்டு சூரியனுக்குள்ளோ.. ஆயிரம் பட்டாம்பூச்சிகள் அட் அ டைமில் பறந்தது போன்ற ஓர் இதமான குளுகுளு உணர்வு இதயம் எங்கும் எழுந்து பரவ, என்னே அதிசயம்!!! 

முரடனின் முரட்டுக்கண்கள்.. ஒருவித அழகிய மென்மையைப் பூசிக் கொண்டனவே?? 

உள்ளத்தோடு உடலும் கனிய, பட்டென அவளை நோக்கித் திரும்பியவனின் இதழ்கள், தாறுமாறாக உரசிக் கொண்டது அந்தச் செவ்விதழ்களோடு!! 

மறை மேகமும், நேர் மேகமும் உரசிக் கொள்ளும் போது.. மின்னல் வெட்டி.. இடி இடிக்குமேயானால்.. இரு இதழ்கள் பட்டும் படாமல் உரசிக் கொண்ட தினுசில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்?? 

உண்மையில் அந்தத் திடீர் இதழ் உரசல்.. அவளுக்கு அருவெறுப்பையே கொடுத்தது. 

அவனுடைய அபிமானம் பெற வேண்டுமே? அதற்காகப் பொறுத்துக் கொண்டாள்!! 

இல்லை இல்லை அதை சுகித்து இன்பம் கொள்வது போல, மென்னகை புரிந்து பக்காவாக நடித்தாள் மென்னிலா. 

அவனுடைய காந்தக்கண்கள் அவளுடைய நகைத்த கண்களோடு இரண்டறக் கலக்க.. அவனது கண்கள்.. அந்தக் கண்கள் இரண்டு வருடங்கள் கழித்து தன் மனையாள் பார்க்கும் பார்வையில்… அவ்விரவில் மின்மினிப்பூச்சியாய் ஒளிர்ந்தன. 

இவளோ அது தான் சந்தர்ப்பமென்று, அவனை ஆசைத்தீ மூட்டும் பார்வை பார்த்தவள், வேண்டுமென்றே சோகம் இழையோடும் குரலை வரவழைத்துக் கொண்டு, 

“ரொம்பஹ் நாள் கழிச்சுஹ்… உங்க “ஆண்டாளுஹ்” உங்க பக்கத்துல இவ்வளவு நெருக்கமா படுத்துட்டிருக்காஹ்.. நிஜமாவே உங்களுக்கு ஒண்ணுமே தோணலையாஹ் மாமாஹ்? இல்லை நீங்க என்னை வெறுக்குறீங்களா மாமாஹ்?? ..”என்று மரியாதைப் பன்மையில் அவனுடன் பேச, 

அவளுடைய “உங்க ஆண்டாளுஹ்” என்ற ஒற்றை வாசகத்தில்… அவள் மடியில் அவன் குப்புற விழுந்து விடாத குறை ஒன்று தான்!! 

‘ஆண்டாள்’.. ஆமாம்.. மென்னிலா அவனுடைய ஆண்டாளே தான்!! இந்த நவீன கண்ணனுக்கு அவள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே தான்!! 

அவனது வலிய விரல்கள்.. தன் மார்பு தடவும் அவளுடைய மெல்லிய விரல்களைப் பற்றி தன் நெஞ்சோடு இறுக்கி அழுத்தியது. 

அப்போது அந்த ஆதவனின் நெஞ்சில் தகித்துக் கொண்டிருந்த சூடு அவளைச் சுட்டது!! கூடவே அந்த நடிப்பைத் தொடர முடியாமல் அவள் கைகளை வெடுக்கென்று எடுத்துக் கொள்ளப் போக, அதற்கு விடாமல் அவன் கை, அவளதை அழுந்தப் பற்றியிருந்தது. 

“ஆண்டாளுஹ்!!.. “என்று கிறக்கத்துடன் அழைத்தவனின் குரலில் தெரிந்தது உச்சபட்ச தாபம்!! 

‘ஆண்டாள்’ என்ற அழைப்பைக் கேட்கும் போது அவளுக்குக் குமட்டிக் கொண்டு வருவது போல இருந்தாலும்.. அந்த இருட்டில் தன் உணர்ச்சிகள் தெரியாத வண்ணம் மறைத்தவள், மெல்லக் குரலுயர்த்தி, “ம்?”என்றாள். 

சூரியனின் பிரகாச முகம், நிலாவின் தண்ணொளியான முகத்தை நோக்கியது. அந்த அறையில் ஏகாந்தமாக ஒலித்தது அவனுடைய கம்பீரமான குரல்!! 

அவன் கேட்டதை எண்ணி உலகத்தில் உள்ள அத்தனை பெண்களும் அவன் மேல் உயர்ந்த அபிமானம் கொள்ள, இவள் மட்டும் அதை வெறுத்தாள்;அடியோடு வெறுத்தாள். 

அந்த வீரமான முரடன் அழகாகக் கேட்டான். “நான் உன்னைய தொட.. உனக்கு இஷ்டம் தானா?”என்று. 

என்ன மாதிரியான ஆண்மகன் இவன்? .. இரண்டு வருடம் மனைவியைப் பிரிந்திருந்தும், மனைவி உறவுக்காக அழைப்பது புரிந்திருந்தும்.. 

 ‘காய்ந்த மாடு கம்பில் விழுந்தது போல’ பாய்பவர்கள் மத்தியில்… கண்ணியம் காக்கும் இவன் எப்பேர்ப்பட்ட ஆண்மகன்??

அப்படி அவள் எண்ணியிருப்பாளா என்ன? நிச்சயமாக இல்லை!! 

அவனது கேள்வியில்.. பழிவெறியில் ஊறிப் போயிருந்தவள், அந்த முரட்டுக் காளையின் மனம் மயக்கும் வண்ணம்… அழகாக மொட்டு நகையொன்று புரிந்தாள். 

அதில் அந்த முரடனின் உள்ளம் பாகாய் உருகிப் போக… சற்றே குனிந்து அவளது விரிந்த அதரங்களை அப்படியே புயல் வேகத்தில் கவ்விக் கொண்டான் நிலாவின் பரிதி. 

அம்முரடனின் அதிரடியில் அதிர்ந்து போனாள் மென்னிலா.தன் மெல்லிய இதழ்கள் முழுவதையும், அவனது முரட்டு இதழ்கள் ஆக்கிரமித்துக் கொண்டது போன்ற உணர்வு அவளுள் ஏற்பட்டது!! 

‘சிப்பி திறக்காத முத்து போல’ அவள் தன் இதழ்களை அழுந்த மூடிய வண்ணம் நிற்க, அந்த இதழ்களின் போராட்டத்துக்கு மத்தியில், அவளது சிவந்த இதழ்களின் பிளவில் நுழைய முயற்சித்தன அவன் நாவு. 

அவள் இதழ்கள் பிளந்து வழிவிடாமல் தன் இதழ்களை இறுக மூடிய வண்ணமே இருக்க, உள்கோட்டைக்குள் நுழைய முயன்று தோற்றவன், மெல்ல அவளிலிருந்தும் விலகிக் கொண்டவன், ஒருவித ஏக்கத்துடன் அவளது விழிகளைப் பார்த்தான்.. 

“ஏன்? பிடிக்கலையா ஆண்டாளுஹ்?”- தீர்க்கமாக வெளிவந்தது அம்முரடனின் குரல்!! 

அவளோ தன் அருவெறுப்பை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு, இமை தாழ்த்தியவள், ஈனஸ்வரத்தில், 

“எ.. எல்லாமே பு.. புதுசு.. மாதிரி இருக்கு!!! .. ப.. பயமா இருக்கு..!” என்று தயங்கியவளாப அவள் சொல்ல, அவனது இதழ்களில் அழகாய் படர்ந்தது ஒரு குறுநகை. 

பரிதி சிரிக்கிறான்!!! முரட்டுக்காளை பரிதிவேல் வீரன் சிரிக்கிறான்!!

முத்து மூரல்கள் அவன் சிரித்ததில் மின்னல் போல வெட்ட, அவன் சிரித்ததையும் கூட நிர்மலமான முகத்துடனேயே பார்த்தாள் அவள்!! 

அவளுடைய நாடி பற்றி நிமிர்த்தியவன், அதே முரட்டுத் தொனியில், “அப்படீன்னா , ‘கடலுக்குள்ள மீனா இல்லை’ன்னு நீ சொன்னது பொய் தானே ஆண்டாளு??” என்று அவன் கேட்க, கை தேர்ந்த நடிகை போல வெட்கப்பட்டுத் தலை குனித்தாள் கண்ணனின் ஆண்டாள். 

அந்த ஒற்றைக் கேள்வியின் பின்னாடி ஆயிரம் கற்பனைகள் தொக்கி நின்றது!! அவளது ஒற்றை பதில்.. இரண்டு வருடங்களாக கண்ணனுக்காக காத்திருந்தாள் ஆண்டாள் என்பதை பறைசாற்றப் போகிறது!! 

“ம்!!” என்று மீண்டும் அவள் ‘உம்’ கொட்ட, அவளைத் தன்னை நோக்கி இழுத்தவன்.. அந்த இதழ்களை மீண்டும் கவ்விக் கொண்டான் அசுரவேகத்துடன். 

அவளிறுத்த பதிலின் காரணமாக விளைந்த, சந்தோஷத்தில் அவளுடலில் அலை பாய்ந்த அவனது முரட்டுக் கைகள் தந்த அழுத்தம் வலித்தது; இருப்பினும் பொறுத்துக் கொண்டாள் அவள். 

இரண்டு வருடங்களின் பின்னர் மனைவியின் அருகாமை… அதுவும் அவள் சம்மதத்தோடு தரும் அழகிய விருந்து அது!! விடுவானா பரிதி!! 

அவளது இதழ்களில் வழிந்த தேனை சொட்டு விடாமல் அருந்தியவன், காதல் பித்து முற்றிப் போனவனாக, அவளது இதழ்களை விட்டும் இறங்கி… எங்கெல்லாமோ ஊர்ந்து, அவன் இதழ்கள் தஞ்சமடைந்த போது… அவைகளின் ஈரத்தில் வெந்து தணிந்தது அவள் உள்ளம். 

கண்மூடி கைப்பாவையாக மஞ்சத்தில் கிடந்தவளின் கீழிதழ்கள் அவளையும் அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக சுழிக்கத் தொடக்க, அவளது மதிமுகத்தை நாடி மீண்டும் வந்தான் பரிதிவேல் வீரன்!! 

அந்த முகத்தைக் கண்டதும் பொல்லாத நினைவுகள் பீய்ச்சியடிக்க, கையிட்டு… அவனது முகத்தைத் தள்ளிவிட தானாக எழுந்தது அவளது கைகள்!!! 

இந்த நொடி.. அவளுள் எழும் அருவெறுப்புக்கு அவள் முக்கியத்துவம் அளிப்பாளேயானால்.. அவள் தீட்டியிருக்கும் திட்டங்கள் அனைத்தும் பாழாய்ப்போகும் என்ற உணர்வு அவளுள் தீவிரமாகத் தலை தூக்கியிருக்க, 

கைகளால் படுக்கையின் விரிப்பை இறுக்கிப் பற்றிக் கொண்டாள் அவள். 

அவளுள்… பழியுணர்வும், ஆக்ரோஷ வெறியும் சுட்டெரித்த தருணம் எல்லாம்.. விரிப்பைப் பற்றிய அவள் கைகளின் அழுத்தம் இன்னும் இன்னும் அதிகமாகிக் கொண்டே போனது. 

மனைவியின் உள்ளுணர்வுகளையும், அதன் கோரத்தன்மையும் அறியாதவன், அவள் தன்னைத் தந்தது காதலுடன்!! 

அதுவும் சுறாவிடமிருந்து அவனைக் காப்பாற்றவும்.. விளைந்த மனம் திருந்திய காதலுடன் என்று எண்ணிக் கொண்டது தான் அவனுடைய துரதிர்ஷ்டம்!! 

அந்தக் கூடலின் முடிவில், “என் நிலாஆஆஹ்.. எனக்கே எனக்கான நிலாஆஆஹ்!!” என்று பிதற்றிக் கொண்டே, அவளுடைய மலை முகடுகளில் தன் கன்னங்கள் அழுந்திப் பிதுங்க இளைப்பாறலானான் அவன்!! 

வெகுநாள்க்கழித்து மனைவியின் அருகாமை தந்த உச்சக்கட்ட மகிழ்ச்சியின் விளைவாக அவன் ரொம்ப ரொம்ப சந்தோஷமாயிருந்தான். 

அந்த சந்தோஷம் காரணமாக.. அவளை இழுத்து தன் மார்பு மீது கிடத்தியவனுக்கு, அவள் மீது அதிமிதமான காதல் பெருக்கெடுக்க, அவள் உச்சந்தலையில் நொடிக்கொரு தரம் முத்தம் வைத்துக் கொண்டேயிருந்தான் பரிதிவேல் வீரன்!! 

  அவன் நீண்ட நாள்களுக்குப் பிறகு சுகமான உறக்கத்துக்கு ஆட்பட்டிருக்க, அவன் மார்பில் தலை சாய்த்திருந்தவள் அவனது இதயத்துடிப்பையே, அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். 

ஆனால் பழிவெறி சுமந்த அவள் மனமோ பலவித எண்ணங்களைக் கற்பனை செய்து கொண்டிருந்தது. 

அதோ டிராயர் மீதிருக்கும் பழத்தட்டிலுள்ள கத்தியை எடுத்து, துடிக்கும் அந்த இதயத்தை சதக் சதக் என்று குத்தினால் தான் என்ன? என்ற தீவிரமான எண்ணம் வலுத்தது அவளுள். 

‘கத்தியை எடு.. தாமதிக்காதே.. எடு.. குத்து.. உன்னால முடியும்!!’என்று அவளை உற்சாகப்படுத்தவும் செய்தது ஓர் குரல்!! 

ஆனால் நம்ப வைத்துக் கழுத்தறுப்பதில் உள்ள சுகத்தை சுகிக்க வேண்டும் என்று ஆசை கொண்டாள்!! 

தன்னைச் சூழ.. இரு தேக்கு மரம் விழுந்தாற் போன்று அணைத்தபடியிருந்த அவனுடைய கைகளை சற்றே கடினப்பட்டு அப்புறப்படுத்தியவள் மஞ்சத்தை விட்டும் எழுந்து கொண்டாள்!! 

அவளுடைய வெற்றுடலில், ஆங்காங்கே ஒளிந்து கிடந்தன அவன் பதித்த சிவந்த பற்தடங்கள்!! அவற்றைத் தொட்டுப் பார்த்தவளின் முகம்… குரூரத்தின் வீரியத்தால் அடர் சிவப்பு நிறமாக மாறியது. 

கண்களோ சத்தமேயெழுப்பாமல் கண்ணீர்த்துளிகள் சிந்திக் கொண்டிருந்தன. 

கூடலின் வேகத்தில் எங்கெங்கோ விழுந்த கிடந்த உள்ளாடைகளை எடுத்து, அணிந்து கொண்டவள், ஆர்ம் சேரில் இருந்த தன் துப்பட்டாவை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டு, பால்கனிக் கதவுப் பக்கம் போனாள். 

அவள் முகத்தில் பட்டுத் தெறித்த இரவு நேர ஊதல்க் காற்று.. ‘சுதந்திரம் இன்னும் தூரமில்லை!!’ என்று சொல்லாமல் சொல்வது போல இருந்தது. 

பால்கனியில் நின்றிருந்தவள்.. பார்ப்பதற்கு கோடை விடுமுறையைக் கழிக்க… கடலில் சூரியக் குளியல் எடுக்கும் மேலை நாட்டவள் போலவே இருந்தாள். 

அடுத்தடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று அவள் மனம் உருப்போடத் தொடங்க.. அவள் முகம் இராட்சசத்தனமாக மாறியது!! 

வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா. 

பழியுணர்வு.. அவளின் கெட்ட குணங்களுக்கு உரம் கொடுக்க, ‘அவனை நம்ப வைக்க வேண்டும்’ என்பதில் மட்டும் குறியாக இருந்தாள் அவள். 

அதற்காகவென்றே, கூடலில் இரண்டறக் கலந்தவளுக்கு, கணவனோடு இணைந்த திருப்தி மட்டும் கிடைக்கவேயில்லை. மாறாக வெறுப்பு!! வெறுப்பு!! வெறுப்பு மாத்திரமே!!! 

ஏனோ ஒரு வெறுமை அவள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கலானது. 

சட்டென்று அவள் நினைவுகளில் அவள் மறக்கத்துடிக்கும் சம்பவங்கள் சிலவும், தாய் முகமும் மாறி மாறி ஞாபகத்துக்கு வந்து போக, எழுந்த வெறுமையைத் துரத்தியடிக்க ஆழ ஆழ மூச்சுக்களை எடுத்து விட்டுக் கொண்டாள் மென்னிலா. 

அங்கணம்.. அவளுடைய ஆலிலை வயிற்றோடு, திரையேதுமின்றி ஊர்ந்த இரு திண்ணிய கைகளின் ஸ்பரிசத்தில், ஒரு தரம் மயிர்க்கூச்செறிந்தது அவளுக்கு. 

வந்திருப்பது யாரென்று புரிந்தது!! அவன் கைகளைத் தட்டி விட எத்தனித்தாலும், சட்டென முகபாவனையை மாற்றிக் கொண்டு புன்னகைக்க பகீரதப் பிரயத்தனம் செய்தாள் அவள். 

உறக்கம் கலைந்து எழுந்து வந்திருந்தவனோ, மெல்லக் குனிந்து அவளுடைய கார் குழல் மறைத்த அழகிய செவியை தன் இதழ்களால் துலாவியவனாக.. அதன் நுனிப் பகுதியைக்.. கவ்விக் கொண்டான். 

குளிரான காற்றில்.. சூடான அவன் எச்சில்பட்ட தினுசில், உள்ளுக்குள் திமிறித் தள்ளிவிட வேண்டும் என்று தோன்றிய போதும் அமைதியாகவே இருந்தாள் அவள். 

அவள் காதுக்குள் தன் நுனிமூக்கு நுழைத்தவன், ஹஸ்கி குரலில், “தூங்கலையாஆஆ ஆண்டாளுஹ்?” என்று கேட்டான் பரிதிவேல் வீரன்.

“ம்ஹூஹூம் தூக்கம் வரலை..!!!”- உடல் விறைக்க.. இறுக்கமான குரலுடனேயே சொன்னாள்.

அதில் அவன் முகம் சற்றே குழம்பிப் போக, கொஞ்சம் கீழிறங்கி.. பின் தோள்வளைவில் குட்டி குட்டி முத்தங்கள் இட்டவனாக, “நான் ரொம்ப முரட்டுத்தனமா நடந்துக்கிட்டேனோ?”என்று அவளிடமே சந்தேகமாகக் கேட்டான். 

அவள் அதற்கு பதில் சொல்லவில்லை. மாறாக சட்டெனத் திரும்பி, அவள் அவன் இதயத்தின் ஓரத்தில், ஒரு பக்க கன்னம் சாய்த்து, ஒருக்களித்துப் பதுங்கிக் கொண்டாள். 

அவன் தன் மனைவியை உரிமையோடு அணைத்துக் கொண்டான். அவன் தாடை அவள் உச்சந்தலையை உரசிக் கொண்டிருந்தது. 

கோபத்தை அவள் முகம் காட்டினாலும், வெகு வெகு சுந்தரமான குரலில், “இன்னைக்கு நிலா ஏன் வானத்துல இல்லை தெரியுமா?”என்று கேட்டாள் மென்னிலா. 

அந்த முரடன் சந்தோஷத்தில் இருந்ததாலோ என்னவோ, கொஞ்சம் தளர்ந்த குரலில், “ஏன்னா அந்த நிலா அவளோட சூரியன் கூட இருக்கா..”என்று அவன் வானத்து நிலாவாக தன் மென்னிலாவை உருவகித்துச் சொல்ல, அந்தப் பதில் கொஞ்சம் எரிச்சலை மூட்டினாலும், அதை இரசிப்பது போல நகைத்தாள் மென்னிலா. 

அவள் தொடர்ந்து சொல்லலானாள். 

“நான் படிச்ச றுஹூணு கேம்பஸ் ஃபுல் என்ட் ஃபுல் சிங்கள ஏரியா.. அங்கே அமாவாசை வரும் போதெல்லாம்.. சிங்கள மக்கள் ஒரு கதை சொல்வாங்க..”என்றாள் அவள். 

“என்ன கத ஆண்டாளு?” – காதல் விழிகளுடன் கேட்டான் அவன். 

அவள் குரல் மந்தகாசத்துடன் வெளிவந்தது. 

வானில் மிளிர்ந்த நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டு, “ஒரு ஊருல ஒரு இளவரசன் இருந்தானாம்.. அவன் தெனம் ராத்திரி நிலாவ பார்த்து ஆசை வைச்சானாம்.. அந்த வானத்து நிலா… என்னுடைய காதலியா.. ஆக மாட்டாளான்னு… தெனம் ராத்திரி ஏங்கினானாம்.. மகனுக்கு கல்யாண ஆசை வந்தது தெரிஞ்சு மகாராணியும்… பூமியில இருக்கற… அத்தன அழகான பொண்ணுங்களயும்.. அவன் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தினாங்களாம்.. ஆனா அந்த இளவரசன் யாரையுமே தன்னோட மனைவியா ஏத்துக்க ஆசைப்படலை…”என்று சொன்ன அந்தக் குரல்… எப்பேர்ப்பட்ட முரடனையும் கட்டிப்போடும் இசைகானமாகவே ஒலித்தது. 

“அப்படீன்னா அவன் கடைசி வரை கட்டப்பிரம்மச்சாரியாவே இருந்துட்டானா??”-என்று கேட்டவனின் குரலில் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடிப் போயிருப்பதை அவதானித்தாள் மென்னிலா. 

இருப்பினும் அமைதியாகத் தொடர்ந்தாள். 

“இல்லை.. அதுக்கப்புறம் தான் கதையே ஆரம்பிச்சது.. தினம் ராத்திரி.. இளவரசன் தன்னை பார்த்து காதலிக்கறதை.. புரிஞ்சுக்கிட்ட அந்த நிலாவுக்கும்… இளவரசன் மேலே காதல் வந்ததாம்.. ஒரு நாள் நிலா.. தன்னோட விம்பத்த மட்டும் வானத்துல விட்டுட்டு.. தன்னோட உண்மையான ரூபத்துல அந்த இளவரசனைப் பார்க்க பூமிக்கு வந்தா.. அப்போ அவ அழகுல மயங்கி இளவரசன் நின்னான்.. 

நிலா சொன்னாளாம், ‘பலரும் என்னை பார்த்து இரசிக்க தான் செஞ்சாங்க.. ஆனா நீ.. முதல் முறையாக.. என்னை காதலியா அடையணும்னு ஆசை வைச்ச.. அதனால உன்னோட காதலை நான் மதிக்கிறேன்.. இனி தினம் ராத்திரி உன்னை சந்தோஷப்படுத்த நான் வருவேன்.. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை.. விடியுறதுக்குள்ள நான் போயே ஆகணும்..இதுக்கு சம்மதமா?’ன்னு கேட்டாளாம்..”என்றது இந்நிலவு!! 

“அந்த நிலா அழகுல மயங்கியிருந்த இளவரசனும் அதுக்கு ஒத்துக்கிட்டானா??”- இதைக் கேட்டது சாக்ஷாத் பரிதிவேல் வீரனே தான்!! 

பெருமூச்சு விட்டவாறே, “ம்.. ஆமா.. ஒத்துக்கிட்டான்… நிலா தினம் ராத்திரி.. தன்னோட விம்பத்தை.. வானத்துல விட்டுட்டு தன்னோட பூமிக்காதலனைப் பார்க்க வந்தா.. விடியுறப்போ திரும்பவும் வானத்துக்கே போயிருவா.. இப்படியே இவங்க காதல் போய்ட்டிருந்தது.. 

அப்போ ஒரு நாள் அந்த இளவரசனுக்கு.. ஒரு யோசனை வந்தது.. நிலாவ தன்னோட பூமியலேயே தக்க வைச்சிக்கணும்னு ஆசைப்பட்டான்.. தன்னை பார்க்க வந்த நிலாக்கிட்ட ‘நாளைக்கு மட்டும் நீ..உன்னோட விம்பத்தையும் எடுத்துக்கிட்டு.. முழுசா என்னோட வரணும்’னு இளவரசன் கேட்டுக்கிட்டான்.. 

நிலாவும் இளவரசன் பண்ணப்போற சூழ்ச்சி தெரியாம.. அவன் மேல வைச்ச நம்பிக்கையில்.. தன்னோட விம்பத்தையும் எடுத்துக்கிட்டு… அடுத்த நாள் ராத்திரி அவன் கிட்ட வந்தா.. இது தான் சந்தர்ப்பம்னு அவள பேசி மடக்கி.. இருண்ட குகைக்குள்ள கூட்டிப் போன இளவரசன்… நிலாவுக்கே தெரியாம சாமர்த்தியமா அந்தக் குகை வாயிலை அடைச்சிட்டான்.. 

இரவெது, பகலெதுன்னு தெரியாத அந்த இருட்டில இளவரசனும், நிலாவும் சந்தோஷமா.. இருந்தாங்களாம்.. ‘இருள் இன்னும் விலகலை’ன்னு.. நிலா நினைச்சிட்டிருந்தா..

 அப்போ தான் அவ.. குகைக்குள்ள.. வித்தியாசமா மினுங்குற மின்மினிப் பூச்சியப் பார்த்தா.. அதைப் பின் தொடர்ந்து போனப்போ.. குகை வாயிலை அடைச்சிருந்த கல்லோட சின்ன இடுக்கு வழியா.. சூரிய ஒளி படுறதைப் பார்த்தா.. அதைப் பார்த்த நிலாவுக்கு இளவரசன் அவளை ஏமாத்திட்டான்னு புரிஞ்சது.. 

தன்னோட சக்தியப் பயன்படுத்தி குகை வாயிலை அடைச்சிட்டிருந்த கல்லை.. தூள் தூளா தகர்த்த நிலா ஆக்ரோஷத்தோட.. வெளியே வந்தா.. 

தன்னோட தப்ப உணர்ந்த இளவரசன் அவள் கிட்ட மன்னிப்புக் கேட்க.. நிலா அதை ஏத்துக்கற நிலைமையில் இல்லை.. 

‘இனி எப்போவுமே.. நீ எனக்காக காத்திட்டே இரு!!’ன்னு சாபம் கொடுத்திட்டு நிலா தன்னோட வீடான வானத்துக்கே திரும்ப போயிட்டா..”என்று அவள் அந்தக் கதையை முடித்த அடுத்த கணம் கேட்டது பரிதியின் குரல். 

“அப்புறம் என்னாச்சி…??”

“அப்புறம் நிலா.. திரும்பி பூமிக்கு வரவே இல்லை.. அந்த இளவரசன் தான் நிலாவுக்காகவே பூமியில காத்திட்டிருக்க… நிலா வந்தா மட்டும் மலர்ற அல்லிப் பூவா ஆனான்..

 நிலாவோட கோபத்துல.. தூள் தூளான கல் தான்.. சந்திரகாந்தக் கல்.. நிலா தன்னோட விம்பத்தோட பூமிக்கு வந்த நாள் தான் அமாவாசை!! .. 

அந்த நாள்ல.. பூமியில இருக்கற மானிடப் பிறவியால.. தான் ஏமாத்தப்பட்டதை நினைச்சு… நிலா பூமியைப் எட்டிப் பார்க்க வர்றதையே நிறுத்திட்டா.. அதான் அமாவாசைன்னு சிங்கள மக்கள் சொல்வாங்க..”என்று அவள் அழகுற அந்தக் கதையை முடித்து விட்டு, தன் சூரியனை அண்ணாந்து பார்த்தாள். 

அவனோ ஏதோ மந்திரத்திற்குகு கட்டுப்பட்டவன் போல அவளது முகத்தையே மையல் மின்னப் பார்த்தவனாக, “அமாவாசைக்கு பின்னாடி.. இவ்வளவு பெரிய கதை இருக்கா??”என்று கேட்டான் அவன்.

“நிலாவுடைய நிபந்தனையை அல்லிப் பூ இளவரசன் மீறினதால.. கடைசி வரை அவனுக்கு நிலா.. கிடைக்காமலேயே போயிட்டா..??” என்றவளுக்கு பழைய நினைவுகள்… அந்தக் கதையோடு பின்னிப் பிணைந்து எழுவது போல இருந்தது. 

அந்த நினைவுகளின் வெம்மையில் அவள் தவித்துக் கொண்டு நிற்க, 

அவனோ“முட்டாள் இளவரசன்…. நான் அந்த நிலாவோட இளவரசனா இருந்திருந்தா.. குகை வழியா தெரிஞ்ச இடுக்கும் தெரியாத மாதிரி குகை வாசலை அடைச்சிருப்பேன்!! அப்ப இன்னும் விடியலைன்னு நினைச்சிக்கிட்டு நிலாவும்.. என் கூடவே இருந்திருப்பா”என்றவன் அவளே எதிர்பாராத வண்ணம் பட்டென்று தன் இரு கைகளிலும் ஏந்தியிருந்த பரிதிவேல் வீரன் சொன்னான். 

அப்படியானால் நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்காக பண்ணனும் என்று இவன் சொல்ல விழைகிறானா?? என்ற கேள்வி பிறக்க, அதை மேற்கொண்டு யோசிக்க முடியாமல்.. செய்தது அவனது செயல்கள்!! 

சட்டென அவளை மஞ்சத்தில் கிடத்தியவன்.. அவள் மேல் படர்ந்து.. அவளது கள் வெறியேற்றும் இதழ்களை ஆவேசத்துடன் மீண்டும் கவ்விக் கொண்டான்.

நாடாள விளைந்த இளவரசனை… நகரக்கூட முடியாத ஓர் அல்லிப்பூவாக்கும் ஓர் நாள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தது ஓர் ஆக்ரோஷமான நிலவு!! 

 

1 thought on “காதல் தானடி என் மீது உனக்கு!-5&6 (விஷ்ணுப்ரியா)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top