பூ 3
வீட்டுக்கு வந்த யாழினியோ மல்லிகை சரத்தை தொடுத்துக்கொண்டிருந்த சந்திரமதியின் தோளில் சாய்ந்தவளின் கன்னம் பற்றி “இன்னிக்கு பொங்கல் செலிபரேஷன்ல நீ ஆடுன டான்ஸ் சூப்பர் தங்கம்… கதிரவன் என் போனுக்கு வீடியோ அனுப்பி இருந்தான். ஒரு இடத்துல என் மகனும் நீயும் சேர்ந்து நிற்குறதை பார்த்ததும் எனக்கு உச்சி குளிர்ந்து போச்சு! ரெண்டு பேரையும் மாலையும் கழுத்துமா பார்த்துட்டா என் மனசு நிறைஞ்சு நிம்மதியாகும். என் அண்ணாவுக்கு செய்து கொடுத்த சத்தியமும் நிவர்த்தியாகிடும்” என்றார் பெரும்மூச்சுடன்.
யாழினியோ “அத்தை மயூரன் மாமாவுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்காது” என்றாள் பொலிவிழந்த குரலில்.
“வாயில ரெண்டு போடப்போறேன் பாரு யாழுமா! தை பொறந்ததும் உங்க நிச்சயதார்த்தம் நடத்தலாம்னு நான் நம்ம குலதெய்வ கோவில்ல பூ போட்டு கேட்டு வந்திருக்கேன்! நீ என்னமோ கல்யாணம் நடக்காதுனு அபசகுனமா பேசிக்கிட்டு இருக்க. உனக்கு என்ன சின்னப் பொண்ணுனு நினைப்பா? 27 வயசு ஆச்சு! நம்ம சாதிசனம் ஒவ்வொருத்தரும் ஏன் சந்திரா உன் அண்ணன் மக யாழினியை முதிர்கன்னியா வீட்டுக்குள்ள வச்சு அழகு பார்க்க போறியா! ஊரான் வீட்டு பொண்ணுனு அலட்சியமா இருக்கனு என்னை நாக்கை பிடுங்கிட்டு சாகுறது போல கேள்வி கேட்குறாங்க யாழுமா… நான் ஒவ்வொரு நாளும் வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்கேன் தெரியுமா?” என்று மருமகளை கண்டனம் கொண்டு ஆதங்கத்துடன் கடிந்துக் கொண்டார் சந்திரமதி.
“அ.அத்தை நம்ம மான்வியை அருணாச்சலம் தாத்தா அழைச்சிட்டு வந்திட்டாரு! மயூரன் மாமாவும் மான்வியும் மறுபடியும் சேர்ந்து வாழணும் அதுதான் நியாயமும் கூட… எங்க கல்யாணத்தை நிறுத்திடலாம்! மான்வியை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடலாமே!” என்றவளை உறுத்து விழித்த சந்திரமதியோ “உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருக்கா யாழினி! அவ என்னை கொல்லப்பார்த்தவ! நாலு நாள் செத்து பிழைச்சு மறு ஜென்மம் எடுத்து வந்திருக்கேன்! இன்னொரு முறை அவ இந்த வீட்டுக்குள்ள வந்தா என்னோட பிணம்தான் வெளியே போகும்! நீதான் இந்த வீட்டோட மூத்த மருமக எனக்கு அடுத்து இந்த பெரிய குடும்பத்தை கட்டி ஆளபிறந்தவ நீதான் யாழுமா. திமிர்பிடிச்ச கழுதையை என் மகன் வாழ்க்கைக்குள்ள வர அனுமதிக்க மாட்டேன்.. நீ அவளுக்காக உன் வாழ்க்கையை தியாகம் செய்ய வேணாம் யாழினி நாளைக்கு பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் வாங்கணும் கிளம்பு” என்று கட்டிய பூவை யாழினியின் கையில் கொடுத்துவிட்டுச்சென்றார் சந்திரமதி
பூவை எடுத்து முகர்ந்து பார்த்த யாழினி மனதிற்குள் ‘இந்த பூவை என் மாமா மயூரன் கையால வச்சிவிடும் நாள் வருமா!’ என்றவளின் எண்ணம் நிறைவேறுமா? மயூரனின் வாழ்வில் ஊனோடும் ஊயிரோடு கலந்து வாழ்ந்து விதியின் சதியால் அவனை விட்டு பாதியில் பிரிந்துச் சென்றவளை மீண்டும் அவனிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது விதி!
யார் யாருடன் இணைவார்கள் என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.
அறைக்குள் சென்ற சந்திரமதிக்கோ மான்வியின் வரவு அவரது மனதில் நெருஞ்சி முள்ளாய் குத்தியது.
“கல்யாணமே வேண்டாம்னு இருந்த என் மகன் மனசை படாத பாடுப்பட்டு கரைச்சு இப்பதான் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்கேன்! மறுபடியும் என் மகனை தேடி வந்துட்டாளா அந்த சிறுக்கி மக மான்வி! இந்த முறையும் என் மகனை உன்கிட்ட கொடுத்து ஏமாந்து நிற்க மாட்டா இந்த சந்திரமதி!” என்று வன்மம் கக்கினார்.
அந்நாளில் வாழவேண்டிய பெண்ணை தந்திரம் செய்து மகன் கையாலே மான்வியின் கழுத்தை பிடித்து வெளியே தள்ள வைத்திருந்த சந்திரமதி அவள் வந்துவிட்டது தெரிந்ததும் தன் மகன் மீண்டும் மான்வியிடம் சென்றுவிடுவானோ என்ற அச்சம் சந்திரமதியை ஆட்டி படைக்க ஆரம்பித்தது.
மயூரன் அவனது அறையிலேயே சுழற்நாற்காலியில் கண்ணை மூடாமல் சுற்றிக்கொண்டே இருந்தான். கண்ணை மூடினால் மான்வியின் முகமே வந்து போகிறதே.
“இத்தனை நாள் நிம்மதியா இருந்தேன்டி இராட்சசி! என் நிம்மதியை கெடுக்கவே வந்துட்ட” என்று வாய்விட்டே முணகினான்.
அவனது மனசாட்சியோ ‘நீ நிஜமா மான்வியை மறந்துட்டியா! உன்னால அவளை மறக்கமுடியுமா! இப்ப அவளை பார்த்ததும் உன் மனசு என்ன சொல்லுச்சு… மை மானு வந்துட்டானு உன் மனசு துள்ளி குதிக்கல! அவளை இறுக்கி கட்டிபிடிச்சு ஆழமா அவளோட இதழுக்குள்ள புதையணும்னு உன் மூளை உனக்கு ஆர்டர் போட்டுச்சு தானேடா! உன் போலி கோப முகத்தை வெளியே காண்பிச்சு அனைவரையும் ஏமாத்தலாம் ஆனா நான் உன் மனசாட்சி என்னை ஏமாத்த முடியாதே’ என்று அவனை பார்த்து கேலி செய்து கை கொட்டி சிரித்தது.
“நோ! நோ! இந்த உலகத்துல அவளை மட்டும்தான் வெறுக்கறேன்!” என்று அந்த அறையே அதிரும் படி கத்தி டேபிள் மேல் இருந்த பைல்களை எல்லாம் தூக்கி போட்டான் மதம் பிடித்த யானை போல.
ஆசையாய் காதலித்து அவளை விட்டு பிரிய காரணம் அவனது அம்மா சந்திரமதி மட்டும் இல்லையே! அவன் மனதை கரையான் போல அரித்துக் கொண்டிருக்கும் விசயம் இன்னொன்றும் இருக்கிறதே… நெஞ்சை நீவிக்கொண்டு தற்காலிகமாக அவனது பிரஷரை குறைக்கும் மாத்திரையை எடுத்து போட்டுக்கொண்டு தண்ணீரை குடித்து அங்கிருந்த சோபாவில் குப்புறப்படுத்து கண்ணை மூடினான்.
‘டேய் மயூ மச்சான் உன் மானு உன்கிட்ட வந்துட்டேன் என்னை அணைச்சிப்பியா?’ என்று அவள் கண்ணீரோடு இரு கையையும் நீட்டி நிற்பது போல அவன் கண்முன்னே நின்றாள்.
“போடி! போடி! மாட்டேன்! அணைச்சிக்க மாட்டேன்!’ அவள் கையை தட்டி விட அவளோ ‘நான் உன்னோட மானு மச்சான்! என்னை கைவிடமாட்டேன்னு என் நெத்தியில குங்குமம் வச்சிவிட்டியே! ஆனா ஆனா நீ என் உயிரை பிடுங்கித்தானே அனுப்பி வச்ச இப்போ உன்னை தேடி வந்துட்டேன் என்னை சேர்த்துக்க மச்சான்! ப்ளீஸ் மச்சான்’ என்று அவளின் கெஞ்சும் குரல் அவனை சுற்றியே ஒலித்துக்கொண்டிருந்தது.
“ஆஆ” என்று வெறி பிடித்த வேங்கையாக எழுந்து உட்கார்ந்து தலை முடியை பிடித்துக்கொண்டான்.
“நீ வேண்டாம் நா.நான் யாழினியை கல்யாணம் பண்ணிக்குறேன்னு வாக்கு கொடுத்திருக்கேன்! நீ வேண்டாம் ஏன் டி மறுபடியும் வந்த! ஏன் டி வந்த?” என்று மீண்டும் மீண்டும் நெஞ்சில் குத்திக்கொண்டான்.
நண்பன் மனம் குழம்பித் தவிப்பானே என்று ஆதங்கத்துடன் இருந்த வெங்கட் பிரபுவோ மாணவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்து மயூரனின் அறைக்குள் வந்தவன் தான் யூகித்த படியே தலை முடியை பிய்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவனை கண்டு அதிர்ந்து ஓடிபோய் தோள் கொடுப்பான் தோழன் என்பதை பறைசாற்றும் வகையில் நன்பனை தன் தோளில வாகாக சாய்த்துக்கொண்டான்.
மயூரனோ “அவ மறுபடியும் எதுக்கு வந்தா… என்னை பைத்தியம் பிடிக்க வைக்க வந்துருக்காளா! நாளைக்கு அவ இங்க வந்தானா! நான் மனுசனா இருக்கமாட்டேன். அவளை என் கண்ணுல படாம இருக்க சொல்லு! அப்படி கண்ணுல பட்டா அவளை என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது வெங்கட் ” என்று பற்களை நறநறவென்று கடித்தான் மயூரவாஹனன்.
“இப்போ எதுக்கு இத்தனை கோபம் வருது உனக்கு சொல்லுடா… அவளை உனக்கு பிடிக்கலைனுதானே விரட்டி அடிச்ச… அவ எங்க வேலை செய்தா உனக்கு என்னடா… மான்வி உன் கண்ணுல விழாம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு சரியா… அந்த பொண்ணை பார்த்தியாடா எப்படி இருந்த பொண்ணு… அந்த பொண்ணு கண்ணை பார்த்தியா? கருவளையம் விழுந்து ஏதோ பஞ்சத்துல அடிப்பட்டு பத்து நாளு சாப்பிடாத பொண்ணு போல வந்திருக்கா! அவ கிட்ட போய் பாய்ஞ்சு உன் வீரத்தை காட்டியிருக்க நீயெல்லாம் மனுசனாடா!” நண்பனாய் இருந்தாலும் அவன் மான்வியிடம் நடந்துக் கொண்டது தவறு என்று கோடிட்டு சுட்டிக்காண்பித்தான் வெங்கட் பிரபு.
“அவளுக்கு வாக்காலத்து வாங்கி பேசாதே! அவளை பத்தின உண்மைகள் யாருக்கும் தெரியாது… அவ நடிப்புக்காரி… நடிப்பால ஜாலம் காட்டுவா… மாயக்காரி மந்திரம் பண்ணி அவளை சுத்தி இருக்கவங்களை மயக்கிடுவா” என்றான் எரிச்சலான குரலில்.
“மஞ்சள் காமாலை கண்ணுக்கு பார்க்கறதெல்லாம் மஞ்சளாதான் தெரியும்னு சொல்லுவாங்கடா!” என்றவனை முறைத்த மயூரனோ “நீ எனக்கு நண்பனானு சந்தேகமா இருக்கு நான் யாரையும் நம்பறது கிடையாது நீ இங்கிருந்து கிளம்புடா” என்று கடுப்பாய் பேசி எழுந்து விட்டான்.
“அப்பா சாமி என்னை நீ நம்பவே வேணாம்பா! காலேஜ்ல ஒரு ஈ, காக்கா கூட இல்ல எல்லாரும் கிளம்பியாச்சு வீட்டுக்கு கிளம்பலாம் வா” என்று மயூரனின் கையை பிடித்துக்கொண்டு அவனது அறையை விட்டு வெளியே வந்தவனின் கையை உதறி விட்டு “அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டல்ல உன்கிட்ட எனக்கு பேச்சு கிடையாது” என்று முகத்தை ஒரு முழத்திற்கு தூக்கி வைத்து விறுவிறுவென நடந்துச் சென்றவனை கண்டு சிரிப்புதான் வந்தது வெங்கட் பிரபுவிற்கு.
போர்டிக்கோவில் நின்ற காரை வேகமாக எடுத்துச் சென்றவன் கேட் பூட்டியிருக்க ஹாரனை அழுத்தி பிடித்தான். வாஷ்ரூம் சென்றிருந்த செக்யூரிட்டியோ ஓடிவந்து “சாரி சார்” என்று சல்யூட் அடித்து கேட்டை திறந்து விட்டதும் செக்யூரிட்டியை முறைத்துக்கொண்டே “பொங்கல் முடிச்சு வந்து உங்களை கவனிக்குறேன்” என்று கண்ணால் மிரட்டிச்சென்றான்.
செக்யூரிட்டியோ பொங்கலுக்கு போனஸ் கொடுப்பார்னு நினைச்சிருந்தேன் என் வேலைக்கே வேட்டு வைப்பாரோ என்று தலையில் அடித்துக்கொண்டு கேட்டை பூட்டும் வேளையில் வெங்கட்பிரபுவின் கார் சத்தம் கேட்டு கேட்டை பூட்டாமல் சல்யூட் அடித்தார்.
“என்ன ஆறுமுகம் அண்ணா செகரட்டரி சார் கிட்ட போனஸ் கிடைச்சுதா?” என்றான் சின்னப்புன்னகையுடன்.
“ஏங்க சார் பொங்கல் முடிச்சு கவனிக்குறேன்னு கண்ணை உருட்டி மிரட்டிட்டுப்போயிருக்காரு” என்று பாவமாய் விழித்தார் ஆறுமுகம்.
“ஹாஹா உங்க வேலை போகாம நான் பார்த்துப்பேன் கவலைப்படாதீங்க… உங்க பொங்கல் போனஸ் பிடிங்க” என்று பணம் இருக்கும் கவரை நீட்டினான்.
“ரொம்ப நன்றிங்க சார் என் பொண்ணு பொங்கல் முடிச்சதும் செமஸ்டர் ஃபீஸ் கட்டணும்னு சொல்லியிருந்தா இந்த பணத்தை வச்சு கட்டிடறேன்” என்றார் சந்தோசச் சிரிப்புடன்.
“உங்க பொண்ணு நித்யா போன செமஸ்டர்ல 100 பர்சன்ட்டேஜ் எடுத்திருக்கா அவளுக்கு ஃபீஸ் கட்டத்தேவையிருக்காது ஆறுமுகம் இந்த பணத்துல உங்க பொண்ணுக்கு புது ட்ரஸ் எடுத்துக்கொடுத்துடுங்க” என்றான் இதழ் விரிப்பு புன்னகையுடன்.
“ரொம்ப நன்றிங்க தம்பி நீங்க புள்ளை குட்டியோட சந்தோசமா வாழணும்” என்று ஆறுமுகம் கையெடுத்து நன்றி கூறியதும் அதற்கும் புன்னகையை பரிசாக கொடுத்துச் சென்றான் வெங்கட் பிரபு.
“புள்ளை குட்டியா எனக்கும் மாலதிக்கும் நடக்க வேண்டிய கல்யாணம் நடத்திருந்தா எங்களுக்கு ஒரு பொண்ணோ பையனோ இருந்திருக்கும்… என்னோட கோபத்தால எல்லாம் போச்சு… என்னோட மாலு என்னை விட்டு போய்ட்டாளே… கொஞ்சம் நிதானமா பேசி இருக்கலாம்” என்று ஸ்டேரிங்கை குத்திக் கொண்டான் தன் மேல் உள்ள கோபத்தால்.
“உன்னை விட எனக்கு என் நண்பன் தான் முக்கியம் மாலதி” என்றான் கர்ஜனையாய்.
“அப்போ எனக்கும் என் பிரண்ட் மான்வி முக்கியம் பிரபு குட்பை” என்று நகர்ந்தவளின் கையை பிடித்து நிறுத்தி “அப்போ நம்ம கல்யாணம்?” என்று அழுத்தமாய் கேட்டான்.
“நீங்களும் உங்க நண்பன் போல என்னை உங்க லைஃப்ல இருந்து பாதியில அனுப்பிட்டா! எனக்கு டைம் வேணும் கொஞ்ச நாள் தள்ளி வைப்போம்” என்று நிதானமாய் அவனது கண்களை பார்த்து பேசினாள் மாலதி.
“கையை விடு பிரபு எல்லா ஆண்களும் சுயநலவாதிகளா இருக்கீங்க. இப்போ ரெண்டு பேரும் சரியான மனநிலையில் இல்ல என்ன பேசினாலும் விதண்டாவாதமாதான் முடியும். நாளைக்கு பேசிக்கலாம்” என்று பொறுமையாக பேசி அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்து அங்கிருந்து நகர்ந்தவளின் கையை பற்றி “இப்போவே பேசி முடிச்சுக்கலாம்” என்றான் அவள் கல்யாணம் வேண்டாம் என்று கூறிய கோபத்திலும் எங்கே தன்னை விட்டு பிரிந்து விடுவாளா என்ற அச்சத்திலும்.
“நான் சொல்றேன்ல பிரபு கல்யாணத்தை தள்ளி வைக்கலாம்னு” என்றவளின் கன்னம் பற்றி “என்னடி பணக்காரின்னு ஆட்டிடியூட் காட்டுறியா? நீ இல்லனா எனக்கு பொண்ணு கிடைக்காதா என்ன… பணக்கொழுப்புல பேசுறடி நீ… நாங்க எங்க சொந்தக்காரவங்களுக்கு பத்திரிக்கை கொடுத்தாச்சு… இப்போ வந்து கல்யாணத்தை தள்ளி வைக்கலாம்னு சொல்லுற! எங்க மானம் சந்தி சிரிக்கும்! எங்க அம்மா அப்பவே சொன்னாங்க பணக்கார பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டா நம்ம நெருங்கிய உறவுல பொண்ணு பார்த்து கட்டி வைக்குறேன்னு… நான் லவ் பண்ணி தொலைச்சுட்டேன்! அவளை தான் கல்யாணம் பண்ணனும்னு எங்க அம்மாகிட்ட ஒத்த காலுல நின்னது தப்பு” என்று நெற்றியில் அடித்துக்கொண்டு ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் வார்த்தையை அள்ளி வீசியிருந்தான்.
மாலதியின் கண்ணில் கண்ணீர் வடிந்தது. “இப்போவாவது என்னை பத்தி உன் மனசுல என்ன நினைச்சிருந்தனு எனக்கு காட்டின ரொம்ப தேங்க்ஸ் பிரபு! நீ எனக்கு வேணாம்! நாம சேர்ந்து வாழ முடியாது” என்று அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை அவனை விட்டு அழுதுக் கொண்டே ஓடியது அவன் கண் முன்னே வந்து போனது.
வீட்டுக்குச் சென்ற மயூரவாஹனனோ ஷவரை திறந்து விட்டு தனது கோபம் தீர குளிர்ந்த நீரில் நின்றிருந்தான். குளிர்ந்த நீரிலும் அவனது கோபம் அடங்கவில்லை.
பொங்கலுக்கான பொருட்களை வாங்கிக்கொண்டு வந்த சந்திரமதியோ யாழினியிடம் பொருட்களை சமையல் அறையில் வைக்கச் சொல்லிவிட்டு மகனின் அறைக்குச் சென்றார்.
உடைமாற்றி திரும்பிய நேரம் “மயூரா இப்பதான் வந்தியாப்பா” என்று மகனின் தோளை தொட்டார் ஆதுரமாக.
“ம்ம் இப்பதான் வந்தேன்மா தலைவலிக்குது காபி வேணும்” என்றான் தலையை பிடித்தபடியே.
“என்ன தலைவலிக்குதா இரு தலைவலி தைலம் தேய்ச்சு விடறேன்” என்றவரோ அவனது அறையில் இருந்த இன்டர்காமில் வள்ளியிடம் “இஞ்சி தட்டி போட்டு டீ கொண்டு வா வள்ளி” என்று ஆர்டர் போட்டு கபோர்ட்டில் வைத்திருந்த தைலத்தை எடுத்து வந்தவர் சோபாவில் உட்கார்ந்திருந்த மகனின் நெற்றியில் தைலத்தை தேய்த்து விட்டதில் அவனது கண்கள் மூடவும் அப்போதும் அவன் கண் முன் வந்து நின்றாள் மான்வி.
“ஆஆ” என்று அலறியவனை “என்னாச்சு கண்ணா ரொம்ப தலைவலிக்குதா டாக்டரை வரச்சொல்லட்டுமா?” என்று பதறிய தாயின் கண்களில் வழிந்த போலிக்கண்ணீரை கண்டு மனம் துடித்த மயூரனோ “ம்மா இன்னிக்கு வெயில்ல கொஞ்சம் அலைச்சல் அதிகம்ல அதான் தலைவலிக்குது சூடா டீ குடிச்சா சரியாகிடும்” என்றான் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்.
“உனக்கு ஒண்ணுன்னா இந்த அம்மா மனசு தாங்காது ராஜா” என்றார் நெஞ்சை பிடித்துக்கொண்டு.
“உங்க மகனுக்கு என்ன திடகாத்திரமா இருக்கான் பாருங்க எனக்கு உங்க நிம்மதிதான் வேணும்” என்றான் சந்திரமதியை அணைத்துக்கொண்டு.
“என் நிம்மதியை கெடுக்கத்தான் ஒருத்தி வந்துட்டாளேமா” என்றார்.
“யாரு வந்தா நமக்கென்ன ம்மா பல்லை பிடுங்கின பாம்பு நம்மளை என்ன பண்ண முடியும்?” என்றான் எளக்காரமான இதழ் வளைப்பில்.
“அவள் காலை சுத்தின பாம்பு ராஜா” என்றார் முணகலாக.
மயூரன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டி டீயை எடுத்துச் சென்ற வள்ளியிடம் “அக்கா நான் டீ கொண்டு போறேன் நீங்க சமையலை கவனிங்க” என்று டீயை வாங்கிக் கொண்டாள் யாழினி.
டீயுடன் வந்த யாழினியோ டீயை சந்திரமதியிடம் கொடுத்தாள்.
“தலைவலி மயூரனுக்குத்தான் யாழினி” என்றதும் “மாமா உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருதுல ஹாஸ்பிட்டல்ல ஒரு செக்கப் பண்ணிடலாம் சாதாரண தலைவலிதான் சும்மா விடக்கூடாது!” என்றாள் அக்கறையாக.
“எனக்கு கூட இந்த யோசனை தோணலை யாழினி! என் மருமகள் புத்திசாலி பொண்ணு மயூராஉன் மேல அனுசரணையா இருக்கா பாரு ” என்றபடியே யாழினியின் கையிலிருந்த டீயை வாங்கி மயூரனிடம் கொடுத்தார் சந்திரமதி.
மயூரனோ “சாதாரண தலைவலிக்கு ஹாஸ்பிட்டல் போக வேண்டியதில்லை யாழினி” என்றான் அழுத்தமாக.
“சாதரண தலைவலியா இருந்தா ஏன் மாமா கண்ணெல்லாம் சிவந்து போகுது உங்களுக்கு ஒரு செக்கப் பண்ணிடலாமா?” என்றாள் உரிமையாக.
“அவசியம் இருந்தா பண்ணிக்கலாம்” என்றதோடு நிறுத்திக்கொண்டான் மயூரன்.
சுந்திரமதியோ “ராஜா உங்க நிச்சயத்தார்த்தம்” என்று அவர் மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.
“ஐயரை பார்த்து நாள் குறிச்சிடுங்க” என்றவனோ டீக்கப்பை எடுத்துக்கொண்டுச் பால்கனிக்கு சென்றான்.
சுந்திரமதியோ தான் நினைத்ததை சாதித்துவிட்டோமென்ற மமதையில் ஐயருக்கு போன் போட்டுக்கொண்டிருந்தார்.