பூ 4
டீயை முழுவதுமாய் குடித்து முடித்ததும் மயூரனின் தலைவலி கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது. இன்னொரு கல்யாணம் உனக்கு தேவையா மயூரன் என்று அவனது மனசாட்சி மறுபடியும் மண்டைக்குள் குடைந்தான். தலைக்குள் விண்ணென்று வலிக்க நெற்றியை சுருக்கி விரலால் அழுந்த தேய்த்துக் கொண்டு “கல்யாணம் பண்ணிக்கிறதுனு நான் முடிவு எடுத்துட்டேன்” என்று அவனது மனசாட்சிக்கு பதில் கூறினான்.
“அப்போ உன் மானு” என்று இளக்காரமிட்டது மனசாட்சி.
“அவ என்னோட பாஸ்ட் முடிச்சு போன அத்தியாயம் அவ்ளோதான்” என மான்வி மீதுள்ள வெறுப்பில் டீ கிளாஸை தோட்டத்தில் தூக்கி விசிறி அடித்தான். டீ கிளாஸ் இரும்பால் செய்ததா என்ன? கண்ணாடிதானே சுக்கு நூறாய் உடைந்து சிதறியது.
‘அந்த இராட்சசி என்னை இந்த கண்ணாடி டம்ளர் போல உடைச்சு போட்டுட்டு போய்ட்டா! உடைஞ்ச கண்ணாடியை மறுபடியும் ஒட்ட வைக்க முடியாது. அவ கண்ணு முன்னாடி நான் யாழினி கூட வாழப்போறதை பார்த்து வேதனைபடட்டும். அவளுக்கு நான் கொடுக்கற தண்டனை இதுதான்’ என்றவனுக்கு மான்வி மீதிருந்த கட்டுக்கடங்காத கோபத்தில் அவனது கையை பால்கனி சுவற்றில் குத்திக்கொண்டான்.
‘உன்னால மான்வியை மறக்க முடியாது. அவளை பார்த்ததிலிருந்து நீ நீயாக இல்லை. பிரசர் மாத்திரை போட்டும் உன் தலைவலி நிற்கல! உன் உடம்புல உயிர் இருக்க வரைக்கும் அவ நினைப்பு உன்னை விட்டு போகாது! நீ யாழினியை கல்யாணம் பண்ணிக்க போறியா? போடா முட்டாளே!’ என்று அவனது மனசாட்சி அவனை பார்த்து காறிதுப்பியது.
அவனால் மனசாட்சியிடம் எதிர்த்து வாதாட முடியவில்லை மீண்டும் ரயில்பெட்டி அவனது தலைக்குள் தடதடவென ஓடவும் தனியாய் இருந்தால் மானங்கெட்ட மனசாட்சி அவனை மிரட்டியே கொல்வானென்று மாடியிலிருந்து ஹாலுக்கு இறங்கி வந்துவிட்டான். கருணாகரன் டிவியில் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தார்.
“பொங்கல் முடிஞ்சு வர வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் இருக்கு. அதைவிட்டா அடுத்த வாரம் ஒரு முகூர்த்தநாள் இருக்குங்கம்மா” என்ற ஐயரிடம் “பொங்கல் முடிஞ்சு வர வெள்ளிக்கிழமையே நாள் நல்லாயிருக்கு தானே ஐயரே… அன்னிக்கே நிச்சயத்தை வச்சிக்கலாம்னு பார்க்குறேன். பொங்கல் லீவுல எல்லா சொந்தமும் நிச்சயத்துக்கு வந்து போக வசதியா இருக்கும்” என்றவரிடம் “முதல் முகூர்த்தம் தேய்பிறையில வருது அதான் யோசிச்சேன்” என்றார் ஐயர்.
“என் மகனுக்கு தேய்பிறைத்தான் அதிர்ஷ்டம் ஐயரே வர வெள்ளிக்கிழமை நிச்சயத்தை வச்சிடலாம். நீங்க வெள்ளிக்கிழமை காலையில நேரமே கிளம்பி வந்துடுங்க எங்க சொந்தங்களுக்கு அழைப்பு சொல்ல இப்பவே ஆரம்பிச்சிடறேன்” என்று ஆர்ப்பரிப்பாக கூறியவரிடம் “நல்லதுங்கம்மா நான் வெள்ளிக்கிழமை நேரமே வந்துடறேன்” என்று போனை வைத்திருந்தார் சந்திரா.
“என்னங்க நெருங்கிய சொந்தங்களுக்கு நாம ரெண்டு பேரும் நேர்ல போய் அழைப்பு சொல்லிடலாம்ங்க”
“இப்போ இந்த நிச்சயதார்த்தம் அவசியமா நடக்கணுமா சந்திரா?” என்று கேட்ட கருணாகரனின் தாடை இறுகியது.
“கல்யாணத்துக்கு முன்னே நிச்சயதார்த்தம் நடக்கணும்தானே! அதுதானே சம்பிரதாயம்! ஏன் உங்க மருமக மறுபடியும் வந்துட்டா அவளை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து என் மகனோட வாழ வைக்கலாம்னு பிளான் பண்ணுறீங்களோ!” என்றார் கடுப்பான குரலில்.
“பாழும் கிணறுனு தெரிஞ்சும் என் மருமகளை மறுபடியும் தள்ளி விட நினைப்பேனா?” என்று சந்திரமதி பக்கம் உட்கார்ந்திருந்த மயூரனை முறைத்தபடியே பேசினார் கருணாகரன்.
“ம்மா என்னோட நிச்சயதார்த்தம் கிராண்ட்டா நடக்கணும்… மூலை முடுக்குல இருக்க சொந்தம் பந்தம் எல்லாருக்கும் தகவல் அனுப்பிடுங்க” என்றவனோ அங்கேயிருந்தால் தந்தையிடம் வாக்குவாதம் செய்து விடுவோமென்று எழுந்து கருணாகரனை ஒரு பார்வை பார்த்து விட்டு “அம்மா என்னோட அறைக்கு டின்னர் அனுப்பி வச்சிடுங்க” என வெடுக்கென பேசிவிட்டு அவனது அறைக்குச் சென்றுவிட்டான்.
“நான் நிச்சயதார்த்தத்துல கலந்துக்க மாட்டேன் சந்திரா என்னை எதிர்பார்க்காதே!” என்று சூடாக பேசி எழுந்தவரின் கையை பிடித்து “நம்ம மகன் பட்டமரமா நிற்கணும்னு ஆசை படறீங்களா! நம்ம குலம் வாழையடி வாழையா தலைச்சு நிற்கறதுக்கு தடை போடுறீங்களா! நீங்க மட்டும் நிச்சயதார்த்தத்துல என் பக்கம் நிற்கலைனா என்னை உயிரோட பார்க்க முடியாது! நான் போன பிறகு உங்க மருமகளை கூட்டிட்டு வந்து சந்தோசமா இருங்க!” என்று ஆட்டம் ஆடிவிட்டார் சந்திரமதி.
“நின்னு தொலைக்குறேன்டி! ஆனா ஒரு பொண்ணு வாழ்க்கையை இருள் அடைய பண்ணிட்டு இன்னொரு பொண்ணு வாழ்க்கையில தீபம் ஏத்துறேன்னு சொல்றீயே நீயெல்லாம் பெண் ஜென்மம் கிடையாது. பெண் பாவம் பொல்லாததுடி” என்று விரல் நீட்டி எச்சரித்து ஆத்திரத்தில் பேசிச் சென்றார் கருணாகரன்.
“என்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா! சந்திரமதி எல்லார் கண்ணுலயும் விரலை விட்டு ஆட்டுவா… என்கிட்ட உங்க அதிகார பேச்சு எடுபடாது கருணா” என்று தான் நினைத்தது நடக்க போகிறதென வெற்றிக்களிப்பில் இருந்தார் சந்திரமதி.
வெங்கட்பிரபுவிற்கு வீட்டிற்குச் செல்ல மனமில்லை காரை கடற்கரைக்கு விட்டான். வெகுநேரம் கடல் அலைகளை பார்த்துக்கொண்டிருந்தான். குழந்தைகள் கடல் அலையில் விளையாடிக்கொண்டிருந்தனர். சில காதலர்கள் படகு மறைவில் துப்பட்டாவின் மறைவில் உட்கார்ந்து காதல் மொழி பேசிக்கொண்டிருந்தார்கள்.
தானும் ஒரு காலத்தில் கடற்கரை காற்றில் மாலதியின் கைபிடித்து என்ன பேசுகிறோமென்றே தெரியாமல் கடலை போட்ட காலத்தை நினைத்துக்கொண்டிருந்தான். அவனது காதல்காலங்கள் அழியாச் சுவடுகளாக அவன் மனதில் புதைந்து கிடக்கிறதே!
“மாலு! மாலு! ப்ளீஸ்டி ஒரே ஒரு முத்தம் இன்னிக்கு கோட்டாவ கொடுத்துட்டு போடி செல்லமே” என்று அவள் தரும் ஒற்றை முத்தத்திற்கு அவள் கன்னம் பற்றி கேட்டு அவள் தன் கன்னத்தில் தரும் முத்தத்தின் ஈரம் இன்னமும் இனிக்கிறதே கன்னத்தை தொட்டுப்பார்த்துக்கொண்டான். அவனது கனவுகளை கலைக்கும் வண்ணம் அவனது தாய் புவனா போன் செய்தார்.
“எங்கப்பா இருக்க பிரபு வீட்டுக்கு வர நேரம் ஆகுமா?” என்றார் அவனின் தாய் புவனா.
“இதோ அரைமணிநேரத்துல வந்துடுவேன்மா” என்றவனோ கடற்கரையை விட்டு கிளம்பியிருந்தான்.
பிரபு பரம்பரை பணக்காரன் கிடையாது விவசாயக்குடும்பம்தான் கிராமத்தில் அவனது பள்ளிப்படிப்பை முடித்தான். பிரபுவின் தந்தை கோவிந்தன் தான்தான் படிக்காத கைநாட்டா போய்ட்டேன் என் மகன் பச்சை இங்க்ல கையெழுத்து போடணுமென்று பிரபுவை சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் படிக்கவைத்தார். பிரபு கல்லூரி படிப்பு முடித்து வேலைக்கு போகும் நிலையில் கோவிந்தன் வயலில் வேலை பார்க்கும் நேரம் பாம்பு தீண்டி ஹாஸ்பிட்டல் கொண்டு போகும் வழியில் இறந்திருந்தார்.
பிரபு துவண்டுதான் போனான். அந்த கிராமத்தில் சிறு குழந்தை முதல் பல்விழுந்த வயதானவர்கள் வரை என்மகன் வாத்தியார் என்று பெருமைப்பட்டுக்கொண்ட தந்தையிடம் தான் வேலைக்கு போய் முதல் சம்பளத்தை கொடுக்கலாமென்றதெல்லாம் கனவாக போய் விட்டதே என்று பிரபுவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
புவனாவின் சித்தப்பா இராசய்யா “பேராண்டி நீயே இப்படி அழுதுக்கிட்டு இருந்தா உன் அம்மைக்கு யார் ஆறுதல் கூறுவாங்க! கடைசி காலம் வரை உன் அம்மையை கண்கலங்காம பார்த்துக்கோ இதுதான் உன் அப்பனுக்கு நீ பண்ணும் பரிகாரம்! வெயில் என் பொண்டாட்டிக்கு சேராதுனு உன் அப்பன் உன் அம்மாவை வயக்காட்டுக்கு கூட வேலைக்கு கூட்டிட்டு போக மாட்டான்! இனி உன் அம்மை உன் பொறுப்பு ஆக வேண்டிய காரியத்தை பாருங்க நான் பதினாறுக்கு வரேன்” என்று கிளம்பியிருந்தார் ராசய்யா.
பதினாறாம் நாள் காரியம் முடிந்த அன்று பிரபுவிற்கு மயூரவாஹனன் கல்லூரியிலிருந்து வேலையில் ஜாயிண்ட் பண்ண சொல்லி மெயில் வந்திருந்தது.
புவனாவிடம் “ம்மா எனக்கு சென்னையில வேலை கிடைச்சிருக்கு நீங்க தனியா இருந்து கஷ்டப்பட வேணாம் என்கூடவே சென்னைக்கு வந்துடுங்க” என்று புவனாவின் கையை பிடித்துக்கொண்டான்.
“உங்கப்பா வாழ்ந்த வீட்டை விட்டு என்னால வரமுடியாதுப்பா! உங்கப்பாவோட ஆசை நீ வாத்தியாரா ஆகணும்கிறது நீ சென்னைக்கு கிளம்பு! உனக்கு லீவு கிடைக்கறப்ப இந்த அம்மாவை வந்து ஒரெட்டு பார்த்துட்டு போ! உனக்கு கல்யாணத்தை பண்ணி பார்த்துட்டு நானும் உங்கப்பாகிட்ட போயிடுவேன்” என்று கண்ணீர் விட்ட புவனாவை அணைத்துக்கொண்டு “உங்களை என்னால தனியா விட்டு இருக்க முடியாது” என்றான் குரல் கரகரத்து.
இராசய்யாவிடம் தங்களது வயல்காட்டையும் ஆடு மாடுகளையும் அவரிடம் ஒப்படைத்து புவனாவுடன் சென்னைக்கு வந்து விட்டான் வெங்கட் பிரபு.
கிராமத்து வாழ்க்கை வாழ்ந்த புவனாவிற்கு சென்னை வாழ்க்கை ஏதுவாக வரவில்லை. இருந்தாலும் மகனுக்காக சென்னை வாழ்க்கையை வாழ பழகிக்கொண்டார். புவனாவிற்கு தன் சொந்தத்தில் அதுவும் கிராமத்து பெண்ணாக பார்த்து கல்யாணம் செய்து வைக்கணும் இந்த பட்டணத்து பொண்ணுங்க பழக்கம் வழக்கமெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஏதுவா வராது… அவங்க முகத்துல அரையடிக்கு அப்பியிருக்க க்ரீமும் உதட்டுல சாயத்தை அப்பிக்கிட்டு பார்க்கவே சகிக்கலப்பா! என்று முகம் சுளிப்பார்.
“ம்மா நான் ஒரு பெண்ணை லவ் பண்ணுறேன்” என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தான் பிரபு.
மகன் காதலை வேண்டாம் என்று கூறாமல் “பட்டணத்து பொண்ணுங்க வேண்டாம் கண்ணு! அம்மாவை மதிக்க மாட்டாங்க! நம்ம எதிர்த்த வீட்டுல குடியிருக்க ராதிகா அவ மாமியாரை மதிக்கறதே இல்லை. காலையில வேலை ஆரம்பிச்சா நைட் படுக்க பத்து மணியாகுமாம்னு ராதிகா மாமியார் செல்வி என்கிட்ட அழுது புலம்பினாங்க. இராசய்யா சித்தப்பா நம்ம உறவுல ஒரு பொண்ணை பார்த்து வச்சிருக்காராம் உன் ஜாதகம் கூட பொருந்தி வந்திருக்குனு நேத்து என்கிட்ட போன் பேசும் போது சொன்னாரு கண்ணு… இந்த பட்டணத்து பொண்ணு எனக்கு மருமகளா வேண்டாம்” என்று நாசூக்காக பேசினார்.
“ம்மா நான் லவ் பண்ணுற மாலதி நல்ல குணமான பொண்ணு அவளை நேர்ல அழைச்சிட்டு வரேன் நீங்க அவகிட்ட ஒரு தடவை பேசிப்பாருங்க உங்களுக்கு பிடிக்கும். பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து நடந்துப்பா நாளைக்கே மாலுவை அழைச்சிட்டு வரட்டுமா?” என்று புவனாவின் கன்னம் பிடித்து கொஞ்சி கேட்ட பிரபுவின் மனதை நோகடிக்க விரும்பவில்லை புவனா.
“நான் அந்த பொண்ணுகிட்ட பேசி பார்க்குறேன் எனக்கு பிடிச்சிருந்தா மட்டும்தான் அவளை நம்ம வீட்டு மருமகளா கொண்டு வருவேன்… இந்த காதல் கத்தரிக்கா எல்லாம் உன்னோட வயசு கோளாறு தம்பி..! நம்ம உறவுக்கார பெண்ணா இருந்தா காலம் முழுக்க நம்ம பேச்சை கேட்டு நம்ம காலடியில கிடப்பா பிரபு!
எனக்கென்னமோ நீ லவ் பண்ணுற பொண்ணு நம்ம குடும்பத்துக்கு செட் ஆக மாட்டானு தோணுது பிரபு” என்று அவர் பிடித்த பிடியிலேயே நின்றார்.
பிரபுவிற்கோ என்ன செய்வதென்றே புரியவில்லை புவனா தன் காதலுக்கு எதிர்ப்பு கூறமாட்டாரென்று நினைத்திருந்தவன் தலையில் பெரிய இடியை இறக்கியிருந்தார் புவனா.
மாலதியின் தந்தை சண்முகன் சமூகத்தில் பெரிய மனிதர். இவருக்கு சொந்தமாக சி.பி.எஸ்.சி பள்ளிகள் பல ஊர்களில் உள்ளது. சென்னையில் உள்ள பள்ளியை மாலதி நிர்வாகம் செய்கிறாள்.
பிரபுவும் மாலதியும் கல்லூரியில் படிக்கும் காலங்களில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவருக்கும் யார் முதலில் காதலை பகிர்ந்துக் கொள்வதென தடுமாற்றம்… மாலதிதான் முதலில் பிரபுவிடம் காதலை கூறினாள். மாலதி எதையும் நேரிடையாக பேசும் பழக்கம் கொண்டவள் சுற்றி வளைத்து பேசத்தெரியாது அவளுக்கு.
பிரபு மாலதி இருவரும் மாலை நேரம் சந்திக்கும் கடற்கரையில் மாலதியின் மடியில் படுத்திருந்த பிரபுவோ “மாலு அம்மா உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க நாளைக்கே உன்னை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்னு இருக்கேன்! அம்மா கிராமத்தில இருந்தவங்க சிட்டி பொண்ணுங்களை அவங்களுக்கு ஏனோ பிடிக்கல நீ அம்மாகிட்ட பார்த்து பேசணும்” என்றான் அவளது முக வடிவை விரலால் அளந்துக் கொண்டே.
“நான் பார்த்துக்குறேன் பிரபு!” என்றிருந்தவளின் முகம் பற்றி “தேங்க்ஸ் டி அம்மு” என்று அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தான் பிரபு.
அடுத்த நாளே பிரபு மாலதியை தன் அப்பார்ட்மெண்டிற்கு அழைத்துச் சென்றிருந்தான். மாலதி சிலக் காட்டன் சேலையில் கழுத்தில் சிம்பிளான செயினுடன்தான் சென்றிருந்தாள்.
“வாம்மா” என்றார் ஒட்டாப்புன்னகையுடன்.
மாலதியோ புவனாவை முதன் முறையாக பார்க்க போகிறோமென லேசான கரை வைத்து பட்டுப்புடவையும், பழங்களும் வாங்கிச்சென்றிருந்தாள்.
பட்டுப்புடவையை கொடுத்ததும் “எங்க வீட்டு வழக்கப்படி மாப்பிள்ளை வீடு பொண்ணுக்கு புதுப் புடவை கொடுக்கணும் நீ என்னமோ எனக்கு புடவை எடுத்துட்டு வந்திருக்க இந்த வழக்கம் சரியில்ல!” என்றார் நீட்டி முழக்கி பேச்சுடன்.
“மா மாலு உங்களுக்கு ஆசையா வாங்கிட்டு வந்திருக்கா வாங்கிக்கோங்க” என்று கண்களால் கெஞ்சினான் தாயிடம்.
மாலதி வாங்கி வந்த புடவையை வாங்கிக் கொண்டு “காபி போட்டு வரேன்” என்று சமையல்கட்டுக்குச் சென்றுவிட்டார்.
மாலதியோ “பிரபு உங்கம்மாவுக்கு என்னை பிடிக்கலை போலயே!” என்று இதழை பிதுக்கினாள்.
“எல்லாம் பிடிக்கும்டி நீ சும்மா இரு” அவளது கையில் அழுத்தம் கொடுத்தான்.
காபியை போட்டுக்கொண்டு வந்தவர் மாலதியின் கையில் காபியை கொடுக்கவும் “தேங்க்ஸ் ஆன்ட்டி” என்று புன்னகையுடன் காபியை வாங்கிக்கொண்டாள். மாலதி காதில் போட்டிருந்த வைரத்தோடு முதல் அவள் காலில் போட்டிருக்கும் கொலுசு வரை கண்களால் ஆராய்ந்தார். அவள் போட்டிருக்கும் அணிகலன்கள் அவளை வசதியான வீட்டுப்பெண் என்று கட்டியம் காட்டியது.
காபியை குடித்ததும் “ஆன்ட்டி எனக்கு சமைக்க தெரியும்! நீங்க ஒரு வேலையும் பார்க்க வேணாம்!” என்று மாலதியாகவே பேச்சைக்கொடுத்தாள்.
“ஆக்கிப்போட்டதை தின்னுட்டு சும்மா திண்ணையில உட்காருனு சொல்லுற!” என்றார் வெடுக்கென வார்த்தையில்.
புவனா மாலதியிடம் இப்படி எடுத்தெறிந்து பேசுவாரென்று பிரபு கனவிலும் நினைக்கவில்லை.
“ம்மா என்ன பேசுறீங்க” என்று பல்லைக்கடித்தான் பிரபு.
“என்னடா பேசுறேன் இந்த பொண்ணோட அம்மா அப்பாகிட்ட நாமதான் முறைப்படி பொண்ணு கேட்டு போய் பேச்சுவார்த்தை நடத்தணும். இந்த பொண்ணு என்னனா நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளை கேட்டு வந்தது போல வந்திருக்கா! இதிலிருந்து இவ நம்ம குடும்பத்துக்கு செட் ஆக மாட்டேனு தெரியலையா உனக்கு! இவ எனக்கு மருமகளா வேணாம்” என்று முகத்தில் அடித்தாற் போல பேசவும் மாலதிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது கண்கள் கலங்கியது மாலதிக்கு.
“சா.சாரி மாலதி அம்மா” என்று அவன் ஆரம்பிக்க
“நான் கிளம்புறேன் பிரபு! உங்க காபிக்கு தேங்க்ஸ் ஆன்ட்டி” என்று புவனாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டுச் சென்றாள் மாலதி.
“நீங்க மாலதியை அவமானப் படுத்தி பேசினது கொஞ்சம் கூட நல்லா இல்ல!”
“பிரபு மாலதி நம்ம வீட்டுக்கு மருமகளா வரக்கூடாது! அப்படி மீறி கல்யாணம் செய்துக்கிட்டா அம்மா ஊருக்கு போயிருவேன் நான் செத்தா கூட நீ எனக்கு கொள்ளிபோடக்கூடாது” என்று பிரபு பேசியதை காதில் வாங்காமல் கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டார்.
“அப்படியா நானும் மாலதியை தவிர எந்த பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்மா” என்று அழுத்தமாக
கூறிவிட்டான். கடைசியாக மனம் இறங்கி மாலதியை மருமகளாக ஏற்றுக்கொண்ட நேரம் மயூரனுக்கும் மான்விக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மயூரனிடம் சண்டைக்குச் சென்று விட்டாள்.
பிரபுவுக்கும் மாலதிக்குமிடையே பிரச்சனை வந்துவிட்டது. கல்யாணத்தை தள்ளிப்போடலாமென்று மாலதி கூறியதும் புவனாவோ “நான்தான் சொன்னேனே கண்ணு அந்த பொண்ணை பார்த்தாலே பணத்திமிர் பிடிச்சவனு பணக்கார புத்தியை காட்டிட்டா பாரு” என்று பிரபுவின் மூளையை மழுங்கச் செய்திருந்தார்.
அவள் நினைவில் காரை ஓட்டிக்கொண்டிருந்தவனின் விழிகளில் சாலை ஓரத்தில் மாலதி நின்றிருப்பது தெரிந்தது அவளுடன் பேசியே பல வருடங்கள் ஆகிறது. எப்போதாவது இருவரும் சந்திக்கும் நேரம் மாலதி பிரபுவை கண்டும் காணாமலும் சென்றுவிடுவாள். பிரபு மனதில் மாலதியை தவிர வேறு எந்த பெண்ணுக்கும் இடமில்லை என்று வாழ்கிறான். அவளும் பிரபுவை தவிர வேறு ஆண்மகனை நினைக்ககூட இல்லை. இருவரது மனதிலும் காதல் எள்ளளவும் குறையாமல் அப்படியேதான் வைத்திருக்கின்றனர்.
மாலதியின் கார் பிரேக்டவுன் ஆகியிருந்தது போலும் போனில் மெக்கானிக்கிற்கு போன் செய்துக் கொண்டிருந்தாள்.
“கார் பிரேக்டவுன்” என்று அவள் நிற்கும் இடத்தை கூறிக்கொண்டிருந்தாள் மாலதி.
“மேடம் நான் வெளியூர் வந்திருக்கேன் வேற யாரையாவது கூப்பிட்டுக்கோங்க” என்றதும் “ப்பா என்னோட கார் பிரேக்டவுன் ஆகிடுச்சு உங்க காரை அனுப்பி வைங்க” என்று அவள் இருக்கும் இடத்தை கூறியதும் “நான் வெளியே இருக்கேன்டா வீட்ல இருக்க காரை மணியனை எடுத்து வரச்சொல்லுறேன்” என்றார்.
“அப்பா மணி அண்ணாவை பொங்கலுக்கு ஊருக்கு அனுப்பி வைச்சிருக்கேன்ப்பா! இங்க ஒரே ட்ராஃபிக்கா இருக்கு” என்றாள் சிறு கோபத்துடன்.
“ரொம்பநாள் கழிச்சு என் நண்பனை பார்த்திருக்கேன்டா! ஒரு ஐஞ்சு நிமிசம் பேசிட்டு வந்துடறேன்” என்றவரை “நீங்க பேசிட்டு வாங்கப்பா நான் கேப் புக் பண்ணி கிளம்பிடறேன்” என்று திரும்பும் போது அவள் முன்னே நின்றிருந்தான் பிரபு.
இந்த இடத்தில் பிரபுவை எதிர்பார்க்காத மாலதியோ அங்கே ஒருவன் நிற்பதை பொருட்படுத்தாமல் அவனை தாண்டிச்சென்று போனில் கேப் புக் செய்துக் கொண்டிருந்தாள்.
“காருக்கு என்ன ஆச்சு மாலு?” என்றதில்
“நீங்க யாரு மிஸ்டர்?” என்றாள் இதழ் சுளித்து.
“மணி பத்து ஆச்சு… பொங்கல் நேரம் கேப் கிடைக்காது வா என்னோட கார்ல போகலாம்” என அவளது கையை பிடித்தான்.
“எந்த உரிமையில என் கையை பிடிக்குறீங்கனு தெரிஞ்சுக்கலாமா மிஸ்டர்?” என்றாள் நெருப்பை உமிழும் பார்வையில்.
“ஏன் நமக்குள்ள என்ன உறவுனு உனக்கு தெரியாதா டி?” புருவம் நெறித்தான்.
“வாடி போடினு பேசாதே பாதியில விட்டு போனவன்கிட்ட எனக்கு பேச விருப்பம் கிடையாது” என்றவளுக்கு கேப் வரவும் கேப்பில் ஏறிச் சென்றுவிட்டாள்.
‘யாருடி பாதியில போனது நீயா நானா’ என்று கோபத்தில் தலையை அழுந்தக்கோதிக்கொண்டு காரில் ஏறி உட்கார்ந்தான்.
அருணாச்சலத்தின் கார் அவரது பங்களாவின் முன் நின்றது. மான்வி கல்லூரி விடுமுறை காலத்தை இந்த பங்களாவில்தான் கழித்திருக்கிறாள். காரணம் பங்களாவை சுற்றிலும் பச்சைபசேலென தென்னந்தோப்பும் கரும்புகாடும்! கொய்யா, வாழை என பழத்தோட்டங்களை சுற்றி திரிவதில் அவளுக்கு அத்தனை பிரியம். தன்னவனுடன் தோட்டத்தில் மகிழ்ந்திருந்த தருணங்களை மறக்க முடியாமல் அவளது கண்ணில் கண்ணீர் உதிர்ந்தது.
கண்ணீரை விரலால் துடைத்து காரை விட்டு இறங்கியதும் “அம்மா நாங்க வந்துட்டோம்” என்று நண்டு சிண்டுகளாக அவளது மகன் நேத்ரனும் மகள் நேகாவும் ஓடி வந்து மான்வியின் காலை கட்டிக்கொண்டனர்.
குழந்தைகளுக்கு இந்த ஊரில் ஆபத்து நிறைய இருக்கிறதே என்ற பயம் அவளை ஆட்கொண்டது.
Baby iruka
👌👌👌👌👌👌👌👌👌👌