பூ 19
மான்வியின் அதிரடி பேச்சில் அதிர்ந்து நின்றான் மயூரன். இளமாறனும் அந்த அறையில்தான் நின்றிருந்தான். மயூரனுக்கு பெருத்த அவமானமாய் போனது.
கண்களை மூடித் திறந்த மயூரனோ அருணாச்சலத்தை கோபத்துடன் பார்த்தான்.
அருணாச்சலமோ “உனக்கெல்லாம் கோபம் வரக்கூடாது டா… உப்பு தின்னவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகணும் மயூரா” என்றவரோ மான்வியின் பக்கம் திரும்பியவர் “பேத்திபொண்ணு இப்போதான் நீ சரியான முடிவு எடுத்திருக்க அடுத்த முகூர்த்தத்துல உனக்கும் இளமாறனுக்கும் கல்யாணம் பண்ணிடலாம்” என்றார் மயூரனை ஓரப்பார்வை பார்த்தபடியே.
மான்வியோ மயூரனை ஒரு பார்வை பார்த்து தலையை குனிந்துக் கொண்டாள். அவளுக்கு கோபம் அடங்கவில்லை தன்னை ஐந்து வருடமாக பார்க்க வராதவன். இப்போது என் பொண்டாட்டி எனக்கு வேணும்னு வந்து நின்னா என்ன அர்த்தம்… அடுத்தவனுக்கு நான் சொந்தம் ஆகிடுவேனோனு உனக்குள்ள குத்தியிருக்கு. அதான் என்னை தேடி வந்திருக்க… நான் உன்கிட்ட வருவேன்னு கனவு கூட காணாதேடா என்று அடங்காத சினத்துடன் நின்றிருந்தாள் மான்வி.
மான்வி என்னோடவள் அவளை யாருக்கும் தரமாட்டேன்! மயூரன் மண்டைக்குள் யாரோ சம்மட்டியால் அடித்ததை போல உணர்வு தலைவலி இடியாய் இடித்தது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.
அவனது மனசாட்சியோ ‘மான்வி உன்னை விட்டு போகமாட்டானு நினைச்சல்ல. உன்கிட்டயிருந்து ரெண்டு குழந்தைகளை மறைச்சுட்டானு சும்மா வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சல்ல. நீ எனக்கு வேணாம்டினு டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டு போனல்ல இப்போதான் மான்வி உனக்கு சரியான தண்டனை கொடுத்திருக்கா… இதோ உன் கண்ணு முன்னால நிற்குறானே இளமாறன் அவன் கூட மான்வி சந்தோசமா வாழுறதை பார்த்து பொறாமையில பொங்குடா’ என்று அவனது மனசாட்சி அவனை பார்த்து எக்காளமிட்டு சிரித்தது.
“நோ! நோ! என்னோட மானு எனக்குதான் மானுவை நான் யாருக்கும் தரமாட்டேன்” என்று மனதிற்குள் புலம்பியவனுக்கு கண்ணைக்கட்டிக் கொண்டு வந்ததில் மான்வியை பார்த்துக்கொண்டே ஆறடி ஆண்மகன் தரையில் சரிந்தான்.
மான்விக்கோ மயூரன் கல்லாக நிற்பதை கண்டு அவளுக்கு ஏதோ தவறாய் பட்டது. மயூரன் நிலத்தில் விழவும் மான்வியின் இதயம் வேகமாக துடித்தது.
“மயூ என்னாச்சு?” என்று பதறி தரையில் விழுந்து கிடக்கும் மயூரன் பக்கம் உட்கார்ந்து அவனது தலையை பிடித்து தன் மடியில் வைத்து “மயூ கண்ணை திறந்து பாருங்க நான் உங்க கிட்ட பேசினது தவறுதான் நா.நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் என்னை பாருங்க மயூ இந்த ஜென்மத்துல நீங்க மட்டும் தான் என்னோட புருசன் கண்ணு முழிங்க மயூ” தன்னவனுக்கு ஏதோ ஆகிவிட்டதென்று பயந்து அவன் கன்னத்தில் தட்டினாள் அவனோ எழுந்தபாடில்லை.
இளமாறனோ மயூரனை தூக்கி அருணாச்சலத்தின் அறைக்குள் படுக்க வைத்ததும் “தாத்தா மாமா இன்னும் கண்ணு முழிக்கலையே எனக்கு பயமா இருக்கு தாத்தா டாக்டரை கூப்பிடுங்க! ஏன் மயங்கி விழணும் காலையில சாப்பிட்டு வரலையோ இல்லை நான் பேசினதுல ஹர்ட் ஆகிட்டாரோ! அச்சோ இத்தனை நாள் பொறுமையா இருந்தேனோ இப்போ நானே என் மயூவை இப்படி படுக்க வச்சிட்டேனே” என்று படபடப்புடன் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் மான்வி.
மயூரனோ சட்டென கண்விழித்தவன் தன்னை சுற்றி நின்ற இளமாறனை பார்த்து “நான் என் பொண்டாட்டிக்கிட்ட தனியா பேசணும் வெளியே போங்க” என்றான் இறுக்கமான குரலுடன்.
இளமாறனோ அருணாச்சலத்தை பார்க்க அவரோ “வெளியே போகலாம் வாங்க தம்பி! ரெண்டு பேரும் மனசு விட்டு பேசட்டும் இந்த தருணத்திற்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன்” என்று பெரும்மூச்சு விட்டு இளமாறனுடன் வெளியே வந்ததும் மயூரன் கட்டிலிலிருந்து கீழே இறங்கியவன் அறைக்கதவை லாக் போட்டு விட்டு திரும்பி மான்வியின் பக்கம் அழுத்தமான காலடிகளுடன் நடந்து வந்தான்.
அவளோ பதட்டப்படாமல் “இப்போ எதுக்கு கதவை லாக் பண்ணுனீங்க! மயக்கம் தெளியாதது போல நடிச்சிருக்கீங்க… என்னை உங்க கூட தனியா கூப்பிட்டா நான் வரமாட்டேன்னு மயங்கினது போல நடிச்சிருக்கீங்க தாத்தா அறைக்குள்ள வந்துருக்கீங்க… உங்களோட குணம் இதுதான் மயூரன்” என்று எரிந்து விழுந்து இதழை சுளித்தவளின் தாடையை பிடித்தான்.
“என்னடி சொன்ன இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிப்பியா! இன்னொரு முறை என்கிட்ட சொல்லு” என்று அவளது தாடையை இறுக பற்றினான்.
“கையை எடுடா நீ கல்யாணம் பண்ணும் போது நான் கல்யாணம் பண்ணக்கூடாதா?” என்றாள் ஊசி குத்தும் விழிகளுடன் கண்கள் தெறித்து விழும் அளவிற்கு மயூரனை முறைத்தாள்.
“என்னடி டா போடுற மரியாதையா பேசு”
“அப்படித்தான் டா பேசுவேன் எப்போ நீ என்கிட்ட டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டு போனீயோ அப்பவே நீ எனக்கு ஹஸ்பண்ட் இல்லைனு ஆகிடுச்சு… அப்புறம் எதுக்குடா உனக்கு மரியாதை கொடுக்கணும்?” என்று கண்ணை அகல விரித்து ஆத்திரத்துடன் பல்லைக் கடித்துக்கொண்டு பேசினாள்.
“அப்போ நான் கட்டிய தாலியை கழட்டிக்கொடுடி” என்றான் இன்னும் அடங்காதவனாய் அவள் தாலியை கழட்டித்தரமாட்டாள் என்ற நம்பிக்கையிலும்தான்.
“நீ கட்டின தாலியை நான் ஏன்டா கழட்டணும்? நீயே கழட்டிக்கோடா… எப்போ நீ என்மேல நம்பிக்கையில்லாம என் கழுத்தை பிடிச்சு போடினு அனுப்புனியோ அப்பவே உன் பொண்டாட்டி உன்கிட்ட இருந்து விலகி போய்ட்டா. இப்போ முழுசா உன்னை விட்டு விலகணும்னு முடிவு பண்ணிட்டேன்” என்று அழுத்தம் திருத்தமாக கூறியவள் மயூரன் கட்டிய தாலியை மாராப்பின் உள்ளே இருந்து எடுத்து வெளியே போட்டாள் அவனது கண்களை ஆங்காரமாக பார்த்துக்கொண்டு.
“நான் உன்னை ஜெகதீஷ் கூட பேசக்கூடாது! அப்படி பேசினாலும் அளவோடு பேசு! எனக்கு தெரியாம அவன் கூட எங்கேயும் போக வேணாம் அப்படி போறதா இருந்தா என்கிட்ட சொல்லிட்டுதான் போகணும்னு சொல்லியிருந்தேன்லடி… நீ என்ன பண்ணி வச்ச நான் சொன்னதை கேட்காம அவன் கூட போயிட்டு வந்ததாலதானே பிரச்சனை வந்துச்சு… உன்னை ஒருநாளும் சந்தேகப்படமாட்டேன் அது உனக்கே தெரியும்டி அம்மா வெளியே போயிட்டு வர லேட் ஆனதும் உன்னை திட்டியிருப்பாங்க வழக்கம் போல உனக்கு கோபம் வந்திருக்கும் நீ அவசரப்பட்டு அம்மாவை கத்தியை எடுத்து குத்தியிருப்ப… அந்த சமயம் நான் வரலைனா அம்மா இப்போ இல்லாம போயிருப்பாங்கல்ல டி! அதனாலதானே நாம பிரிய வேண்டிய கட்டாயம் வந்துச்சு” என்று அவளது தோளை அழுத்திபிடித்தான்.
அவனது கையை வெடுக்கென தட்டிவிட்டவள் “பொண்டாட்டி புருசனோட சரிபாதினு சொல்லுவாங்க உனக்கு பொண்டாட்டியோட அருமை புரியலடா! நான் உன்னை விட்டு போன நாளுல இருந்து நீ என்னை நினைச்சு வேதனைப் பட்டுருப்பனு நினைச்சேன்… நீ என் பின்னாடி மானு மானு -னு சுத்துனியே அதெல்லாம் என்னோட உடம்புக்காகத்தானே! நான் உனக்கு ஈசியா கிடைச்சிட்டேன். அதான் யூஸ் பண்ணிட்டு தாய் தகப்பன் இல்லாத பொண்ணுனு டிஸ்ஸு பேபபர் போல தூக்கி எறிஞ்சுட்ட…
உன் அம்மாவை கத்தியால குத்திட்டேன்னுதானே என்னை கொலைகுற்றவாளி ஆக்கி வெளியே அனுப்பின… கொலைக்குற்றம் செய்தவங்களுக்கு கூட எதனால கொலை செய்தீங்கனு கோர்ட்ல குற்றவாளியை கேட்பாங்க ஆனா நீ என்னை பேச விடலயேடா நாயே! உன்னை நம்பி என் இதயத்தை கொடுத்தேன்! அடுத்த படியா உன்னை கல்யாணம் பண்ணி என்னையே முழுசா உனக்கு தாரை வார்த்தேன்.
ஆனா நீ எனக்கு மனசு முழுக்க ரணத்தை மட்டுமே அனுபவிக்க வச்சடா… உன்னை கல்யாணம் பண்ணின நாளிலிருந்து உங்கம்மா என்னை பேசின பேச்செல்லலாம் உனக்கு தெரியுமா? நான் இல்லாத குடும்பத்து பொண்ணாம் என்னை பிச்சைக்காரினு சொல்லிருக்காங்கடா! அதெல்லாம் நான் பெருசா எடுத்துக்கவே இல்ல…
தாய் தகப்பனை முழுங்கிட்டு இங்க வந்திருக்கானு பேசுவாங்க!! உனக்காக உங்கம்மா பேசியதெல்லாம் பொறுத்துக்கிட்டேன்!! உங்கம்மா இப்படி பேசினாங்கனு உன்கிட்ட கம்ப்ளைட் சொல்லியிருக்கேனா இல்லையேடா! அன்னிக்கு என்ன நடந்துச்சுனு தெரியுமா இப்பவாவது நான் சொல்றதை காது கொடுத்து கேளுடா நாயே!” என்று மயூரனின் சட்டை காலரை பிடித்தாள்.
அவள் என்ன பேசப்போகிறாளென்று மனம் பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான் மயூரன்.
அவனோ “சொல்லுடி” என்ற விதமாக கண்ணை மூடித்திறந்தான்… தன்னவள் மனதில் உள்ளதை முழுதாக கொட்டட்டும் என்று அமைதியாக கேட்டிருந்தான்.
“உன் அண்ணன் ஜெகதீஷை உங்க குடும்பத்துல எல்லாரும் குடிகாரன் பொறுப்பில்லாதவன்னு எல்லாரும் ஒதுக்கி வச்சீங்க அவரை பார்க்கவே எனக்கு பாவமா தோணுச்சு. அவன் என்னோட மாமா மகன்தானே அந்த அக்கறையில அவரோட அறைக்கு சாப்பாடு கொண்டு போனேன். என்னோட அண்ணனா நினைச்சுத்தான் அவன்கிட்ட பேசினேன் பழகினேன்… நான் ஜெகதீஷ் கூட பேசறது உனக்கும் தெரியும்தானேடா! ஆனா ஜெகதீஷ் ஒரு குள்ளநரினு எனக்கு தெரியா போச்சேடா! என்னோட பொண்டாட்டி எனக்கு வேணும் மான்வி நீ வந்து பேசினா நதியா என் கூட வாழ வந்துடுவானு என்னை வற்புறுத்தி அழைச்சிட்டு போனான்.
அவங்க வீட்டுக்குள்ள போனதும் ஜெகதீஷ் மாமனார் உங்கண்ணாவை ஒரு மனுசனா கூட மதிக்கல… உன் தம்பி பல காலேஜை உருவாக்கியிருக்காரு. நீ உனக்கு கொடுத்த காலேஜை இழுத்து மூடுற அளவு கொண்டு வந்து விட்டுட்ட… நீ செல்லாக்காசு என் மகளை உன்னை நம்பி எப்படி அனுப்பறது. நீயே உன் தம்பி நிழலில் வாழுறவன் என் பொண்ணு உன் கூட வாழ வரமாட்டானு நீங்க கிளம்புங்கனு உங்கண்ணா முகத்துல அடிச்சாப்போல பேசியவரு என்னை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா?
இந்த பொறுக்கி கூட ஏன்மா தனியா வந்தனு கேட்டாரு. நான் அப்ப கூட ஜெகதீஷை தவறா நினைக்கல. ஆனா ஆனா… நம்ம வீட்டுக்குள்ள வந்ததும் என்னோட அறைக்குள்ள போயிட்டேன்… கதவு லாக் பண்ணாமதான் இருந்தேன். அந்த பொறுக்கி ராஸ்கல் உங்க மேல இருக்க கோவத்துல நான் சே.சேலை க.கழட்டும் நேரம் அறைக்குள்ள வந்து என்னை ஹக் பண்ண பார்த்தான். நான் டேபிள் மேல இருக்க பொருளை எடுத்து அவன் மேல் போட்டேன் அவன் என்கிட்ட நெருங்கி வந்து
‘உன் புருசன் உன்னால அவமானப்பட்டு நிற்கணும்டி எனக்கு காலேஜ் நிர்வாகம் பண்ண பிடிக்கல… பிஸ்னஸ் பண்ண பணம் கேட்டேன் அப்பா கிட்ட அவரு தரமாட்டேன்னு சொல்லிட்டாரு. உன் புருசன் கிட்ட பணம் கேட்டா அவன் என்னமோ என்கூட வா உனக்கு நிர்வாகம் பண்ணறது எப்படினு சொல்லிக்கொடுக்கறேனு சொல்றான்.
என் எச்சிபாலை குடிச்சு வளர்ந்தவன் என்னை மதிக்காம நான் தான் காலேஜை உருவாக்கினேன்னு பெருமை பீத்திக்கிட்டான்ல இப்போ உன்னை நாசம் பண்ணப்போறேன்டி மயூரன் அவமானப்பட்டு நிற்கறதை நான் பார்க்கணும்’ என்று மான்வியின் சேலையை பிடிக்க வந்தவனை “அடேய் உன்னை என் அண்ணா போல நினைச்சுதானே உன்கிட்ட பழகினேன். உன் அத்தை பொண்ணுடா நான் என்கிட்ட இப்படி கீழ்த் தரமா நடக்காத மயூ வந்தார்னா உன்னை கொன்னு போட்டுருவாரு ஜாக்கிரதை! இங்கிருந்து ஓடிப்போய்டுனு மிரட்டினேன்.
அவனோ வெளியே போகாமல் என்னோட முந்தானையை பிடிக்க வந்தான். அவனை தள்ளி விட்டு வெளியே ஓடி வந்து உங்கம்மா மேல விழுந்துட்டேன் அவங்க நான் வந்து நின்ன கோலத்தை பார்த்துட்டு என் பின்னாடி உன் அண்ணன் சட்டை மேல் பட்டனை திறந்து விட்டு வெளியே வந்ததையும் பார்த்தவங்க என் மகனுக்கு துரோகம் பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு… என் பெரிய மகன் கூட ப… வாய் கூசாம என்னை பேசினாங்க எந்த பொண்ணுதான் அப்படி பேசினா பொறுத்து நிற்பாடா…
என்னால உங்கம்மா சொன்ன வார்த்தையை ஜீரணிக்கவே முடியலை அதுவும் நீ இல்லாத சமயம் என்னை நடு ஹாலுல நிற்க வச்சு கேள்வி கேட்குறாங்க உங்க அண்ணா சிரிச்சிட்டு நிக்குறான். அதான் அங்கிருந்த கத்தியை எடுத்து ஜெகதீஷை குத்த போனேன். அவன் தப்பிச்சு ஓடிப்போய்ட்டான். உன் கார் சத்தம் கேட்டதும் அவங்களா கத்தியை வயித்துல குத்திக்கிட்டாங்க. உங்கம்மா என் மகன்கிட்டயிருந்து உன்னை பிரிக்க இது ஒரு சந்தர்ப்பம்டி… நீதான் என்னை குத்தினதா சொல்லி விடுவேனாங்க! நான் உங்கம்மாவை குத்தலடா! நான் கொலைகாரி இல்ல… நீ வந்து பார்த்த போது நான் உங்கம்மா வயித்துல கத்தியை எடுக்க பார்த்தேன் அவ்ளோதான். உன் கண்ணுக்கு நான் குற்றவாளியா மாட்டிக்கிட்டேன் நான் கொலைகாரி இல்லை மயூரன் நான் கொலைகாரி இல்லை!” என்று அவன் மேலேயே விழுந்து குலுங்கி குலுங்கி அழுதவளுக்கு மயக்கமே வந்துவிட்டது.
தன்னவளை தாங்கிப்பிடித்து அப்படியே தூக்கிக்கொண்டு மெத்தையில் படுக்க வைத்து அவள் முகத்தில் தண்ணீரை தெளித்ததும் அவள் மெதுவாக கண்களை திறந்தாள். தன் கண் முன்னே மயூரன் உட்கார்ந்திருந்ததை கண்டவளுக்கு ஆத்திரம் வந்து “என் பக்கம் உட்கார உனக்கு ரைட்ஸ் கிடையாது எழுந்து போடா” என்று அவனது தோள்பட்டையை பிடித்து தள்ளினாள்.
மயூரனோ அவளது கால்களை பிடித்து கண்ணில் வைத்துக்கொண்டு “அம்மா என்கிட்ட இது வரை பொய் பேசினது கிடையாதுடி! அவங்க வயித்துல சொருகியிருந்த கத்தியை நீ பிடிச்சிருந்ததையும் அம்மா வயித்துல வந்த இரத்தத்தை பார்த்ததும் எனக்கு என்ன தோணும்டி… அம்மாவும் மான்விதான் என்னை கத்தியால குத்திட்டானு சொன்னதும் உன் மேல ஆத்திரம்…
நிறைய முறை என் கண்ணு முன்னாலயே நீ அம்மாவை எடுத்தெறிஞ்சு பேசியிருக்கடி! கோபத்துல நீதான் தப்பு பண்ணியிருக்கணும்னு முட்டாள்தனமா உன் மேல பழிபோட்டு தண்டனை கொடுத்துட்டேன். எனக்கு நீ என்ன தண்டனை வேணா கொடு. மறுபடியும் நாம புது வாழ்க்கையை ஆரம்பிப்போம்” என்றான் கண்ணீருடன் உருகும் குரலில்.
“என்னது உன்கூட வாழணுமா என் கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளினியே அ.அப்போ நான் கன்சீவ்வா இருந்தேன்டா ஹாஸ்பிட்டல் போகணும்னு உனக்கு மெசேஜ் போட்டேன் நீ மெசேஜ் பார்க்கல. குழந்தையை சுமந்து இருந்தவளை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளுவன் கூட நான் மறுபடியும் எப்படி சேர்ந்து வாழ முடியும்டா! உன் அம்மா சொன்னதை நம்பியவன் உன் பொண்டாட்டிய நம்பாம போனது உன்னோட தவறு.
வயித்துல குழந்தைகளை சுமந்துக்கிட்டு நான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன் தெரியுமா! என்னையே வேண்டாம்னு சொன்னவன் என்னோட வயித்துல வளர்ந்த குழந்தையை வேணாம்னு சொல்லிட்டா நான் என்னடா பண்ணுவேன்!
என்னால உயிரோட இருக்கவே முடியாது அதான் இந்த ஊரை விட்டு போகலாம்னு முடிவு எடுத்தேன். என்னை கொல்லக்கூட தயங்கமாட்டாங்க உங்கம்மா சந்திரமதி. உங்கம்மாவை குறை சொன்னா உனக்கு பிடிக்காதே! அதான் வயித்துல இரட்டை பிள்ளையை சுமந்து சாப்பாடு, தண்ணி இல்லாம ரயில் ஏறினேன் டெல்லிக்கு. டெல்லிக்கு போய்ட்டேன்டா ஆனா எங்க போறதுனு திக்கு தெரியாம பசி தாகத்துல நடு வீதியில மயங்கி விழுந்துட்டேன்டா பாவி! எல்லாம் உன்னால ஏதோ எங்கம்மா எங்கப்பா பண்ணிய புண்ணியத்தால சாந்தியம்மாவும் ஜெயசீலன் அப்பாவும் என்னை ஹாஸ்பிட்டல சேர்த்து என்னை அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போனாங்க!
ஆறு மாசத்துல கர்ப்பபை வாய் விரிவாகிடுச்சு ஸ்டிச் போட்டு குழந்தை பிறக்க வரை அப்படியே பெட்லதான் படுத்திருக்கணும் சாந்தியம்மா அவங்க பொண்ணு போல பார்த்துக்கிட்டாங்க திரும்பி கூட என்னால படுக்க முடியாது. ஒவ்வொரு முறையும் ஹாஸ்பிட்டல் செக்கப் போகும் போது உன் ஹஸ்பண்டை வரச்சொல்லுங்கனு டாக்டர் சொல்லும்போதெல்லாம் நான் அவரு பிஸி வரமுடியாதுனு பொய் சொல்லிட்டு வருவேன்டா. அவங்க கிட்ட என் புருசன் என்னை சந்தேகப்பட்டு கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிட்டான்னு சொல்லவா முடியும் ரெண்டு குழந்தைகளையும் பெத்து இரண்டு பேரையும் கண்ணுக்குள்ள வைச்சு வளர்த்தேன்டா நீ என்னமோ என் குழந்தைனு மார்தட்டி நேகாவை தூக்கிட்டு போயிட்ட.
நேத்ரன் சமத்தா தூங்கிடுவான்டா நேகா என்னோட ஒட்டி படுக்கலைனா அவ தூங்கவேமாட்டா. நேகா பிறந்ததும் மஞ்சள் காமாலை வந்துருச்சு அவளுக்கு துடிச்சு போயிட்டேன். குழந்தை பால் குடிக்க முடியாம கஷ்டப்பட்டது இன்னும் என் கண்ணை விட்டு விலகாம இருக்கு. நீ என் குழந்தைனு கெத்தா தூக்கிட்டு போனியே என் குழந்தை ஒரு நிமிசம் கூட என்னை தேடாம இருந்திருக்க மாட்டாளே! ஏன்னா நான் என்னோட தாய்ப்பாலோட சேர்த்து பாசத்தை கொட்டி வளர்த்திருக்கேன். அவங்களுக்கு உன் அப்பா இவர்தான்னு உன் போட்டோவை காட்டி காட்டி வளர்த்தேன்டா. ஏனனா அவங்க நாளைக்கு என்னை ஏன்ப்பா வந்து பார்க்கலைனு கேட்கணும்…
அதை கேட்டு நீ துடிக்கணும் அதுக்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன்! என் பிள்ளை உன்னை நிற்க வச்சு கேள்வி கேட்டிருப்பானு எனக்கு தெரியும்… நேத்ரனுக்கு உன்னை மாதிரி கோபம் வரும் மனசுக்குள்ள வச்சிப்பான் ஆனா நேகா என்னை போல படபடனு பட்டாசு போல வெடிச்சுடும் என் பொண்ணு ஒரு நாள் உங்க வீட்ல இருந்ததற்கே அவங்களால அவளை சமாளிச்சிருக்க முடியாது. உங்கம்மா கண்ணுல கரண்டியை விட்டு ஆட்டியிருப்பா!” என்றவளோ மூச்சு விட்டு
“ஏன் டா என்னை ஒரு நாள் கூட தேடி வரணும்னு உனக்கு தோணலையா டா! இப்போ கூட நான் ஏன் வந்தேன் தெரியுமா உன் சட்டையை பிடிச்சு கேள்வி கேட்கும் நாளுக்காகதான் வந்தேன் இன்னிக்கு கேள்வி கேட்டுட்டேன்… உன்னால என் வாழ்க்கை அழிஞ்சது இல்லாம மாலதியோட வாழ்க்கையும் கேள்விக் குறியாக்கி வைச்சிட்ட!! நீ பண்ணின பாவம் என் பிள்ளைகளுக்கு வர கூடாதுனு வெங்கட் அண்ணாவையும் மாலதியையும் சேர்த்து வைச்சிருக்கேன்டா” என்று இன்னமும் அவளுக்கு ஆத்திரம் அடக்கவேயில்லை. அவள் பேச்சில் ஒவ்வொரு வார்த்தையும் அனல் பறந்தது.
மயூரனின் கன்னத்தில் பளார் பளாரென தீபாவளி பட்டாசு வெடிக்கும் சத்தத்துடன் அவனது கன்னத்தில் அறைந்தாள் அவளது கோபம் தணியும் வரை.
மயூரன் தான் எவ்ளோ பெரிய மாபெரும் தவறு செய்து விட்டோமென்று வருத்தப்பட்டான். கண்கள் கலங்கியவனுக்கு கண்ணீர் வெளியே வந்தது. அவனால் தரையில் நிற்க கூட முடியவில்லை.
அவனோ தன்னவள் அடிக்கும் அடியை வாங்கிக்கொண்டவன் இன்னும் அடிக்கறதுனாலும் அடிச்சுக்கோ என்றவாறு அப்படியே நின்றிருந்தான்.
Intresting epiiiii ❤️❤️❤️❤️❤️
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Semma👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
intresting sis sema super