ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 8

முல்லையோ நதியாவை ஓரக்கண்ணால் பார்த்ததும் எதுவும் சொல்லக்கூடாதென வாய் மேல் விரல் வைத்தாள்.

ராயன் தங்கையும் மனைவியும் கண்ணால் பேசிக்கொள்வதை பார்க்கத் தவறவில்லை. முல்லை ராயனை பார்த்தாள்.

‘என்கிட்ட எதையும் மறைக்கக்கூடாதுனு சொல்லியிருக்காரே இப்போ நதி லவ் மேட்டரை சொல்லலாமா வேண்டாமா?’ என்று தீவிர யோசனையில் நின்றாள்.

“அண்ணா எக்ஸாமுக்கு நேரம் ஆச்சு எங்களை காலேஜ் கூட்டிட்டு போங்க” என்று பறந்தாள் நதியா.

“எனக்கு வேலையிருக்குமா உங்களை காலேஜ்ல விட பாலாஜியை வரச்சொல்லியிருக்கேன்” என்றவனின் போன் அடித்தது.

“நான் வந்துட்டேன் ராயா நீ கிளம்பிட்டியா?” என்று அவன் வீட்டுக்கு வராமலேயே காரிலிருந்தபடியே பேசினான்.

“வீட்டுக்குள்ள வந்து சாப்பிட்டு போலாம்ல” என்றவனிடம் 

“நான் நம்ம கேண்டீன்ல சாப்பிட்டேன்டா நீ வரச்சொன்னேனு வந்தேன்” என்றான் ஸ்டேரிங்கில் தாளம் போட்டபடியே.

“இன்னிக்கு நம்ம பண்ணை மாடுகளுக்கு ஊசி போட டாக்டர் வரேன்னு சொல்லியிருக்காரு நான் பண்ணைக்கு போகணும் முல்லையையும் தங்கச்சியையும் காலேஜ்ல விட்ரு நான் ஈவ்னிங் ரெண்டு பேரையும் பிக்கப் பண்ணிக்குறேன்” என்றான் நெற்றியை தேய்த்தவாறே.

“நான் வேணா உனக்கு பதில் பண்ணைக்கு போறேன்டா நேத்து தானே உனக்கு கல்யாணம் ஆகியிருக்கு முல்லையையும் நதியாவையும் நீ அழைச்சிட்டு போடா” என்று காரை ஸ்டார்ட் செய்தான்.

“நான் உனக்கு முதலாளியா இல்ல நீ எனக்கு முதலாளியா” என்றான் லேசான கோபக்குரலுடன்.

“இதிலென்ன சந்தேகம் நீ எனக்கு முதலாளிடா”  

“அப்போ நான் சொன்ன வேலையை பாருடா” என்றான் கணீர் குரலில்.

கோமளமோ “கம்பெனியில வேலை செய்யற கண்டவனை நம்பி நம்ம வீட்டுப் பொண்ணுகளை அனுப்பறது எனக்கு சரியா படலை ராயா” என்றார் வெடுக்கென்று. 

“பாலாஜி கண்டவன் கிடையாது பெரியம்மா என்னோட உயிர் நண்பன் அவனை நம்பி நம்ம வீட்டுப்பொண்ணை தைரியமா அனுப்பி வைக்கலாம். நம்ம வீட்டுப் பொண்ணுங்க மேல நாம நம்பிக்கையோட இருக்கணும்” என்றான் தங்கை மேல் உள்ள நம்பிக்கையில்.

முல்லை நதியாவை முறைத்தாள்.

ராயன் பேச்சில் கோமளம் அமைதியாகிவிட்டார்.

கண்ணனோ “அண்ணா என்னை ரெயில்வே ஸ்டேசன்ல இறக்கிவிட்டு போயிடறீங்களா?” என்று கூறிக்கொண்டிருந்த நேரம் தெய்வநாயகம் வாக்கிங் சென்றிருந்தவர் வீட்டுக்குள் வந்தவரிடம் “சித்தப்பா நான் சென்னைக்கு கிளம்பறேன்” என்றவனோ அவரது காலில் விழுந்தான்.

“நல்லாயிருப்பா” என ஆசிர்வாதம் செய்தார்

“உன் சின்ன மகன் லவ் பண்ணுறானாம் கல்யாணம் பண்ணி வைங்கனு நிற்குறான்பா… ராயன் பொண்ணு வீட்டை பத்தி விசாரிச்சு வச்சிருக்கானாம் அடுத்த வாரம் பொண்ணு பார்க்க போகலாம்னு சொல்லுறான் உன்கிட்ட இப்பவே சொல்லிட்டேன்” என்றார் பெரும்போக்காக.

பொண்ணு வீடு வசதி என்றதும் பொண்ணோட கோத்திரம் குலம் எல்லாம் மறந்து போனது கோமளத்திற்கு.

“நம்ம பையன் விரும்புற பொண்ணையே  கல்யாணம் பண்ணி வச்சிட வேண்டியதுதானே முறை” என்றார் புன்னகை முகத்துடனே.

“நான் பொண்ணு வீட்டை பார்த்த பிறகுதான் கல்யாணத்துக்கு ஒத்துப்பேன்னு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டிருக்கேன் நாயகம்” என்றவாறே “கண்ணா நீ அந்த பொண்ணு கிட்ட அடுத்த வாரம் பொண்ணு பார்க்க வரோம்னு விவரமா சொல்லிடு” என்றார் அழுத்தம் திருத்தமாக.

தன் காதல் கல்யாணம் சீக்கிரம் முடிவானதும் சந்தோசத்தில் “சரிங்கம்மா” என்று தலையை ஆட்டினான்.

“உன் கல்யாணத்துக்கு இணைச்சீர் நான் தான் பண்ணுவேன்… நிறைய லிஸ்ட் வைச்சு இருக்கேன் அண்ணா பொண்ணு பார்க்க போகும்போது நானும் வருவேன்” கண்ணனிடம் தனக்கு தேவையானதை பட்டியல் போட்டு கூறவும் 

“பணத்தை உன் ஜி பே நம்பருக்கு அனுப்புறேன் என்ன வேணா வாங்கிக்கோ பாப்பா” என்று காரில் ஏறி அமர்ந்தான் கண்ணன். 

ராயன் அவனது ஆடிக்காரில் ஏறியதும் முல்லையும் நதியாவும் பாலாஜியின் காரில் ஏறி அமர்ந்தனர்.

முல்லையோ ராயனை பார்த்தாள். ராயனும் பின்னால் திரும்பி பார்த்து கையை அசைத்தான். 

முல்லை ராயன் தன்னுடன் காரில் அழைத்துச் செல்வானென்று எதிர்பார்த்திருந்தாள் பாலாஜியுடன் அனுப்பி வைத்ததும் அவளுக்கு மனம் ஏனோ பிசைந்தது. கணவன் மனம் உடைந்துவிடுமோ என்று தன் கோபத்தை மறந்து கையை அசைத்தாள் முல்லை.

நதியாவோ பாலாஜியை பார்த்துக்கொண்டேயிருந்தாள் அவனோ மறந்தும் கூட பின்னால் திரும்பி பார்க்கவில்லை நதியாவை.

காலேஜ் வாசலில் பாலாஜியின் கார் நின்றதும் முல்லையும் நதியாவும் இறங்கினார்கள்.

“முல்லை நீ காலேஜ்க்குள் போ நான் பாலாஜி கிட்ட பேசிட்டு வரேன்” என்றதும் 

“அண்ணாதான் உன் லவ்வை அக்சப்ட் பண்ணலையே… நீ ஏன் டி அண்ணாவை தொந்தரவு பண்ணுற” என்றாள் முல்லை கோபத்தோடு கண்ணை உருட்டி.

“பாலாஜி என்னைய விரும்புறாரு அண்ணாவுக்கு பயந்து அவரோட லவ்வை என்கிட்ட மறைச்சு வச்சிருக்காருடி நான் பேசிட்டு தான் வருவேன்” என்று அடம்பிடித்து பாலாஜியின் அருகே போக அவனோ அவள் தன் பக்கம் வருவது தெரிந்து காரை வேகமாக எடுத்துக்கொண்டுச் சென்றுவிட்டான்.

“இப்போ  நீ போயிருக்கலாம் பாலாஜி நாளைக்கு வந்துதானே ஆகணும் உன்னை விடமாட்டேன்டா” என்றாள் இதழை சுளித்தபடியே.

“கண்ணன் அண்ணா அவரோட லவ்வை உங்க பெரிய அண்ணாகிட்ட சொல்லி கல்யாணம் பண்ணி வைக்க சொன்னாரே. அதுபோல நீயும் உங்க பெரிய அண்ணாகிட்ட உன் லவ்வை சொல்லிடு அவரே பாலாஜி அண்ணாவுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வச்சிடுவாரு” என்றாள் முல்லை. 

“கண்ணா அண்ணா லவ் பண்ணுற பொண்ணு நல்ல வசதியான குடும்பம்னு தெரிஞ்சதும்தான் அம்மா கல்யாணத்துக்கு ஓ.கே சொல்லியிருக்காங்க ஆனா பாலாஜிக்கு அம்மா, அப்பா கிடையாது ஏன் வீடே அவருக்கு கிடையாது. பால்பண்ணை ஆபிஸ் குவட்டர்ஸ்லதான் தங்கியிருக்காரு அம்மா கண்டிப்பா பாலாஜியை கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிக்க மாட்டாங்க. ஆனா எனக்கு பாலாஜியை ரொம்ப பிடிச்சிருக்கு அவரை தவிர யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன். என்னோட உண்மையான காதலை பாலாஜிக்கு புரிய வைப்பேன்டி” என்றாள் ஆவேசத்துடன்.

“நான் சின்னய்யாகிட்ட உன்னோட காதலை சொல்லத்தான் போறேன் அவருகிட்ட என்னால உண்மையை மறைக்க முடியாது நதி” பேசியபடியே எக்ஸாம் ஹாலுக்குள் வந்துவிட்டனர்.

“நீ அண்ணாகிட்ட இப்பவே எல்லாத்தையும் சொல்லி வைக்காதேடி ப்ளீஸ் பாலாஜி என்னோட லவ்வை ஏத்துக்கிட்டது பின்னாடி அண்ணாகிட்ட நானே பொறுமையா சொல்லிக்குவேன் சரியா இப்பவே அண்ணாகிட்ட உளறி வைக்காதே முல்லை” என கண்களால் கெஞ்சினாள்.

“எனக்கு என்னமோ நீ பண்றது சரியா வரும்னு தோணலைடி நதி” என்றாள் எச்சரிக்கை தொனியில்.

“எல்லாம் சரியா வரும் பாருடி நான் அதிரடியாக எடுக்கப்போற முடிவுல பாலாஜி என்னோட காதலை ஏத்துப்பாரு” என்றார் சுடிதார் காலரை தூக்கிவிட்டபடி.

முல்லையும் தங்கை காதலுக்கு எதிரியாக இருக்கமாட்டான் ராயன் என தப்புக்கணக்கு போட்டுவிட்டாள்.

எக்ஸாம் ஆரம்பித்து விட்டது மதியம் எக்ஸாம் எழுதி முடித்து மரத்தடியில் சாப்பிட்டு முடித்து நதியாவின் தோளில் சாய்ந்து படித்துக்கொண்டிருந்த முல்லையின் அடிவயிறு சுருக்கென்று வலி வர பீரியட்ஸ் ஆகிடேன் போலயே என்று வாஷ்ரூம் சென்று வந்தவள் “நதி நா.நான் பீரியட்ஸ் ஆகிட்டேன்டி” என்றாள் முகத்தை சோகமாக வைத்து.

“போன மாசம் ரெண்டு பேரும் ஒன்னாதானேடி பீரியட்ஸ் ஆனோம் இன்னும் ஒரு வாரம் இருக்கே” என்றாள் நெற்றியை சுருக்கி விரித்து.

நதியாவின் பக்கத்தில் இருந்த அவளது வகுப்பு பெண் மாலதியோ “உன் ப்ரண்டுக்கு நேத்து ஃபர்ஸ்ட் நைட் நடந்திருக்கும்டி கல்யாணத்துக்கப்புறம் பீரியட்ஸ் சைக்கிள் முன்ன பின்னே மாறுமாம் எங்க அண்ணி சொல்லியிருக்காங்க” என்றாள்.

‘ம்க்கும் எங்களுக்கு ஒன்னுமே நடக்கலையே சின்னய்யா  பக்கத்துல வந்து பேசியதுலயே சீக்கிரம் பீரியட்ஸ் வந்துருச்சு போல இவங்ககிட்ட ஃபர்ஸ்ட் நைட் நடக்கலைனு சொன்னா நம்பவா போறாங்க’ என்று சலித்துக்கொண்டு வெட்கப்பட்டு நிற்பது போல நின்றுக் கொண்டாள் முல்லைக்கொடி.

“லேசா வயிறு வலிக்குதுடி நான் இப்போ பஸ் பிடிச்சு வீட்டுக்கு போயிறட்டுமா” என்றாள் வலியில் முகத்தை சுளித்தபடியே.

“வலியோட எப்படி பஸ்ல போவ அண்ணாவுக்கு போன் போடுறேன் உன்னை அழைச்சிட்டு போவாரு” என்று போன் போட்டுவிட்டாள் ராயனுக்கு.

மாட்டுப்பண்ணைக்கு போய்விட்டு பால் பண்ணைக்கு வந்துக் கொண்டிருந்த ராயனோ தங்கையின் போன் எண்ணை கண்டதும் “சொல்லுடா பாப்பா பரீட்சை  முடிஞ்சுதா நான் வரட்டுமா?” என்று கேட்டுக்கொண்டே காரை காலேஜ் பக்கம் திருப்பிவிட்டான்.

“அண்ணா பரீட்சை முடிஞ்சது எனக்கு நோட்ஸ் எடுக்கணும் முல்லைக்கு வயிறு வலிக்குதுனு சொன்னா நீங்க வந்து அவளை அழைச்சிட்டு போக முடியுமா பிஸியா இருக்கீங்களா அப்பாவுக்கு போன் போடட்டுமா?” என்று படபடவென பொரிந்து விட்டாள். 

“நான் அரைமணிநேரத்துல வந்துடுவேன்டா உன் அண்ணி கிட்ட போனை கொடு” என்றான் அவசரமாக.

“ஏய் அண்ணா பேசுறாருடி” என்று போனை முல்லையிடம் கொடுத்தாள் நதியா.

போனை வாங்கிக்கொண்டு நதியாவின் முன்னே நிற்காமல் தள்ளிச் சென்று “சொ.சொல்லுங்க சின்னய்யா” என்றாள் காற்றுக்கும் கேட்காத குரலில்.

“என்னாச்சு திடீர்னு வயிறு வலி பீரியட்ஸ் ஆகிடுச்சா மாத்திரை ஏதும் போட்டியா?” என்றான் லேசான படப்படப்புடன்.

“வலி இருக்கு ஆனா மாத்திரை போட வேண்டியதில்லை சின்னய்யா” என்றாள் தயங்கியபடியே.

“என்கிட்ட சொல்ல என்ன தயக்கம் ம்ம்… கேட்டுக்கு வெளியே வா நான் வந்துட்டேன்” அரைமணிநேரத்தில் வருவேன் என்றவன் பத்து நிமிசத்தில் வந்து விட்டான். 

“நான் ஹெச்ஓடிகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்” என்றவளோ ஹெச்ஓடியிடம் தன் நிலையை கூறி பர்மிசன் கேட்கவும் “போய்ட்டு வா நாளைக்கு ஒரு எக்ஸாம் இருக்கு முல்லை நீ நல்லா படிக்கற பொண்ணுங்குறதுனால உன்னை இப்ப வீட்டுக்கு அனுப்புறேன்” என்று சிறு கண்டிப்புடன் அனுப்பி வைத்தார்.

கேட்டுக்கு வெளியே காரில் சாய்ந்து நின்றவனை வயிறு வலியிலும் சைட் அடித்துக்கொண்டே சென்றாள் முல்லை. 

காருக்கு பக்கம் வந்ததும் “இப்போ வயிறு வலி எப்படியிருக்கு புள்ள ஹாஸ்பிட்டல் போகலாமா?” என்று அக்கறையுடன் கேட்டவனிடம் 

“இப்போ நாம சீக்கிரமா வீட்டுக்கு போயி குளிக்கணும் சின்னய்யா” என்று அசௌகரியமாய் முகத்தை வைத்ததும் காருக்குள் உட்கார்ந்தவன் ஏசியை ஆன் செய்துவிட்டு “எல்லாம் வாங்கி வச்சிருக்கியா இல்ல ஃபார்மஸில வாங்கிட்டு போகணுமா?” என்றபடியே காரை ஸ்டார்ட் செய்திருந்தான்.

“இ.இல்ல அம்மா வீட்ல இருக்கு! நான் அம்மாவீட்ல போய் குளிச்சிட்டு மூணுநாள் அம்மாகூட இருந்துட்டு வரேன்” என்றதும் ராயன் காரை நிறுத்திவிட்டு “மாசா மாசம் பீரியட்ஸ் ஆகும் அப்போவெல்லாம் உன் அம்மாகூட தங்கிப்பியா?” என்றான் புருவம் உயர்த்தி கோபக்குரலில்.

“அ.அதுவந்து நம்ம ரூம்ல தான் எதுவும் வாங்கி வைக்கலையே அதான் அம்மாகூட தங்கிக்குறேனு சொன்னேன்” என்றாள் வயிறு வலியை பொறுத்துக்கொண்டு அவள் கண்களில் வலியை கண்டவன் “ஃபார்மஸில காரை நிறுத்துறேன் உனக்கு தேவையானதை வாங்கிட்டு வா” என்று பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து முல்லைக்கொடியின் கையில் கொடுத்தான். அவளோ பணத்தை வாங்கிக்கொண்டு தலையை குனிந்துக் கொண்டாள். 

ஃபார்மஸி வந்ததும் காரை நிறுத்தியதும் முல்லை கார் கதவை திறந்து ஃபார்மஸிக்குச் சென்ற நேரத்தில் பக்கத்தில் இருந்த ஜுஸ் கடையில் மாதுளை பழ ஜுஸ் வாங்கி வந்து காரில் உட்கார்ந்து விட்டான் ராயன். 

முல்லை அவளுக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு வந்து காரில் ஏறியதும் மாதுளை பழ ஜுஸை குடிக்கச் சொல்லி நீட்டினான்.

“குளிச்சிட்டுத்தான் குடிக்கணும்” என்றாள் அவசரமாக.

“அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது வயிறு வலிக்குதுனு சொன்னில்ல ஜுஸ் குடிச்சா தெம்பாயிருக்கும் குடி” என்று அதட்டல் போடவும் அவள் தானாக அவன் நீட்டிய ஜுஸை வாங்கி மடமடவென குடித்து விடவும் ஜுஸ் கிளாஸை வாங்கி கடையில் கொடுத்து வந்தான் ராயன்.

முல்லைக்கு வயிறு வலி கொஞ்சம் இருக்க சீட்டில் தலையை சாய்த்துக்கொண்டாள்.

ஐந்து நிமிடத்தில் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான். அவள் கண்ணை திறந்து பார்க்க வீடு வந்துவிட்டது. 

அதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்டோமா என்று கண்களை அகல விரித்தவள் காரை விட்டு இறங்கி வேகமாக வீட்டுக்குள் சென்றவள் அவர்களது அறைக்குள் சென்றாள்.

மதியம் நேரம் என்பதால் தையல்நாயகியும் கோமளமும் அசதியில் அறையில் உறங்கிக்கொண்டிருந்தனர்.

அமுதாவோ மகள் வேகமாக படியேறுவதை கண்டு ‘ஏன் காலேஜ் சாய்ந்தரம்தானே முடியும் மதியமே வந்துருக்காளே யார் கூட்டிட்டு வந்திருப்பாங்க?’ என்று ஹாலுக்கு வந்து பார்த்தார்.

ராயன் சோபாவில் அமர்ந்திருந்தவன் அமுதாவை கண்டதும் “அமுதா அக்கா முல்லை பீரியட்ஸ் ஆகிட்டா வயிறு வலிக்குதுனு சொன்னா ஜுஸ் வாங்கி கொடுத்து கூட்டிட்டு வந்திருக்கேன் இந்த மாதிரி நேரத்துல வயிறு வலிக்கு கசாயம் ஏதாவது வச்சி கொடுப்பீங்களா நான் டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போகட்டுமா?” என்று சிறு பதட்டத்துடன் கேட்கவும் அமுதாவிற்கு மனது நிறைந்து விட்டது.

“அது ரெண்டு நாளுல சரியாகிவிடுவா தம்பி ஹாஸ்பிட்டல் எல்லாம் அழைச்சிட்டு போகவேண்டியது இல்ல. நைட் படுக்கும்போது வெந்தய தண்ணியை குடிச்சிட்டு படுத்துக்கிட்டா தூங்கிடுவா” என்றார் சங்கடத்துடன்.

“அப்படியா சரிங்கக்கா எனக்கு பண்ணையில வேலையிருக்கு நான் கிளம்புறேன் முல்லையை பார்த்துக்கோங்க” என்றவனோ முல்லை வெளியே வருகிறாளா என்று பார்த்தபடியே வெளியேச் சென்றான் ராயன். முல்லையோ குளித்து விட்டு பாய் போட்டு படுத்துவிட்டாள்.

பால்வளத்துறையிலிருந்து ராயன் பால்பண்ணைக்கு திடீரென ஆய்வுக்கு வந்துவிட்டனர்.

ராயனிடம் இன்ஸ்பெக்டர் வந்ததை போனில் பாலாஜி கூறியதும் அடுத்த ஐந்து நிமிடத்தில் பால் பண்ணையில் இருந்தான். அவர்கள் கேட்பதற்கு பதிலை பட்பட் என்று சொல்லிக்கொண்டிருந்தான். 

“உங்க பால் பொருட்கள் தயாரிக்கும் இடத்தை பார்க்கணும் உங்க பால் பண்ணையில ஏதோ கெமிக்கல் மிக்ஸ் பண்ணுறதா எங்களுக்கு தகவல் வந்திருக்கு சோதனை போடணும்” என்றனர்.

“தாராளமா பண்ணுங்க” என தோளைக்குலுக்கியவன் மணியை பார்த்தான். 

மணி ஐந்தாகியிருந்தது “பாலாஜி நதியாவுக்கு காலேஜ் டைம் முடிஞ்சிருக்கும் நீ அவளை வீட்டுல விட்டுட்டு வா” என்றவனோ நின்று பார்க்காமல் இன்ஸ்பெக்டருடன் அவனது ஆபிஸிற்குள் சென்றான்.

“அச்சோ இராட்சசிகிட்ட தனியா மாட்டி விட்டானே” என்று புலம்பிக்கொண்டு நதியாவை அழைத்து வர சென்றான் பாலாஜி.

நதியாவோ பாலாஜியின் காரை பார்த்ததும் “இன்னிக்கு எப்படியாவது நம்ம காதலை பாலாஜிகிட்ட சொல்லியே ஆகணும் அவன் மாட்டேன்னு சொல்லட்டும் அப்பறம் இருக்கு ஒரு பொண்ணு வெட்கத்தை விட்டு எத்தனை முறை சாடை மாடையா காதலை சொல்லிட்டேன் பிடி கொடுக்கவே மாட்டேன்கிறானே இன்னிக்கு நானா அவனானு பார்த்திட வேண்டியதுதான்” என்று உறுதிமொழி எடுத்தவள் பாலாஜி கார் தன் பக்கம் வந்ததும் பின் கார் கதவை திறந்து விட்டான் பாலாஜி.

நதியாவோ பின் கார் கதவை அடித்து மூடிவிட்டு முன் கார் கதவை திறந்து ஏறியதும் அவள் பக்கம் திரும்பாது காரை ஓட்ட ஆரம்பித்தான்.

நதியாவோ “பாலாஜி நான் உங்ககிட்ட பேசணும்” என்று பாலாஜியின் கையை தொட்டாள்.

“நீ என்ன பேசுவனு எனக்குத்தெரியும் எனக்கு உன்னை பிடிக்காது போதுமா! அதுமட்டுமல்ல என் நண்பனுக்கு துரோகம் பண்ண என்னால முடியாது” என்றான் அவள் முகம் பார்க்காமலேயே.

“என் கண்ணை பார்த்து சொல்லுங்க என்னை பிடிக்காதுனு” என்றாள் ஆத்திரமாக.

காரை ஓரமாக நிறுத்திய பாலாஜியோ “ஓ மைகாட் உன்கிட்ட எத்தனை முறை சொல்றதுடி உன்னை எனக்கு பிடிக்கலைனு சும்மா அலையுறா” என்று வார்த்தையை விட்டு தலையை கோதிக்கொண்டான.

“நான் அலையுறேனா அப்படித்தான் அலையுவேன் உன்கிட்ட” என்று அவன் எதிர்பார்க்காவண்ணம் பாலாஜியின் இதழோடு இதழை பொருத்திக்கொண்டாள் நதியா.

“ஏய்” ஒரு நிமிடம் பாலாஜி ஆடிப்போய்விட்டான். சட்டென்று சுதாரித்து அவளை தன்னிடமிருந்து விலக்கிவிட்டு நதியாவின் கன்னத்தில் பளாரென்று அறைவிட்டான்.

2 thoughts on “கடுவன் சூடிய பிச்சிப்பூ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top