அத்தியாயம் 9
“நீ படிச்ச பொண்ணுதானே! அறிவில்லையா உனக்கு… என் மேல இருக்கற நம்பிக்கையில உன் அண்ணன் ராயன் உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போகச் சொல்லியிருக்கான். நீயெல்லாம் வல்லவராயன் தங்கச்சினு சொல்றதுக்கு தகுதியான பொண்ணு கிடையாது. அவன் பால்பண்ணையில வேலை பார்க்கற பொண்ணுங்களை தன் வீட்டுப் பொண்ணுங்க போல பார்ப்பான் தெரியுமா. பொண்ணுங்க கண்ணைத் தவிர அவன் பார்வை அனாவசியமா வேற எங்கயும் போகாது. கட்டுகோப்பான அண்ணனுக்கு இப்படி ஒரு அலைஞ்சான் கேஸ் தங்கச்சி” என்று முகம் சுளித்தவன்
“உன்னை பிடிக்கலைனு சொன்னதுக்கப்புறம் ஏன் டி என் பின்னால நாய் போல சுத்துற. இங்க பாரு எனக்கு நட்பு மட்டும்தான் முக்கியம் ஒரு காலமும் நான் உன்னை லவ் பண்ண மாட்டேன் புரிஞ்சுதா? இன்னொரு முறை இப்படி ஒரு அசிங்கமான காரியத்தை பண்ணமாட்டனு நினைக்குறேன் ஒழுங்கா படிப்பை முடிச்சு வீட்டுல பார்க்குற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்குற வழியை பாரு” என்றான் கண்ணீர் கோடுகளுடன் தன்னையே விரைப்பாக பார்த்துக்கொண்டிருக்கும் நதியாவிடம்.
“பேசி முடிச்சிட்டீங்களா சார் நான் இப்போ பேசப்போறதையும் நீங்க நல்லா காது கொடுத்து கேட்டுக்கோங்க உங்க நட்புக்கு எப்படி உங்களால துரோகம் பண்ண முடியாதோ அதுபோலத்தான் என் லவ்வுக்கும் என்னால துரோகம் பண்ணமுடியாது என் காதல் எனக்கு பெரிசு! இந்த ஜென்மத்துல உங்களை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். மணமேடை வரை போனாலும் பூச்சி மருந்தை குடிச்சு செத்துப்போவேனே தவிர யாரு கையாலும் தாலி வாங்கமாட்டேன்…” என்று கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.
பாலாஜி நதியாவின் பேச்சில் கோவம் கொண்டு கண்கள் சிவக்க அவளை முறைத்து பார்த்தான்.
“ஐ லவ் யு பாலாஜி” என்று பாலாஜியின் கண்களை அழுத்தமாக பார்த்து வீம்பாக பேசினாள் நதியா.
கோமளத்தின் மகள் என்பதை நிரூபித்தாள் அடவாதத்தில்.
“உனக்கு நெஞ்சழுத்தம் அதிகம்தான் உன்னை அடிக்க கூட என் விரல் உன் மேல படாது” என்றவனோ நதியா மேல் உள்ள கோபத்தை காரை வேகமாக ஓட்டுவதில் காண்பித்தான்.
“ரெண்டு பேரும் செத்தாலும் ஒன்னாவே செத்துப்போவோம் பாலாஜி இன்னும் கொஞ்சம் வேகமா போங்க” என்றாள் திமிராக.
பாலாஜியோ “உன்னை பார்க்கவே எனக்கு அருவருப்பா இருக்குடி” என்று வெடுக்கென பேசினான் அவளை காயப்படுத்துவதற்காகவே.
அவளோ “என்னை கல்யாணம் பண்ணிக்கோடா பழக பழக வெறுப்பு விருப்பா மாறிடும்” என்று கண்ணைச்சிமிட்டியவளை கண்டு அவனுக்கு ஆத்திரம் தலைதூக்கியதில் மீண்டும் காரை ஓரமாய் நிறுத்தி ஓங்கி அறைய கையை தூக்கிவிட்டான்.
“உரிமைபட்டவன்தான் என்னை அடிக்க முடியும் அடிங்க புருசா” என்றாள் அடங்காதவளாக.
“ச்சே ச்சே இப்படியொரு பொண்ணை நான் பார்த்ததே இல்லைடி” என்று அவள் பேச்சில் சலித்துக்கொண்டு காரை ஓட்டினான்.
ராயன் வீடு வந்து காரை நிறுத்தியதும் அவள் இறங்கிய அடுத்த நொடி பாலாஜியின் கார் புயல் வேகத்தில் பறந்தது.
“போ பாலாஜி போ நீ எவ்வளவு வேகமாக போனாலும் கடைசியா என்கிட்ட வரவைப்பேன் காலம் முழுக்க என் முகத்துலதான் நீ முழிச்சாகணும்” என்ற நதியாவோ பாலாஜியின் கார் மறையும் வரை பார்த்திருந்தாள்.
“தீட்டு நேரத்துல சமையல்கட்டுக்குள்ள வரக்கூடாது முல்லை” என்றதும் “அம்மா பசிக்குது” என்று கண்ணை சுருக்கினாள் முல்லை.
“வீட்டு ஆம்பிள்ளைங்க சாப்பிட்டதும் நாம சாப்பிடணும்டி” என்றார் சிறு முறைப்புடன்.
கல்யாணத்துக்கு முன்பு தங்கள் தோட்டத்து வீட்டில் இரவு சாப்பாடு அவளாக செய்து எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டு ஒன்பது மணிக்கு படுத்துவிடுவாள் முல்லை. இன்றோ மணி ஒன்பது ஆகியும் சாப்பிடவில்லை.
அடுத்த நாள் பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தவள் மணியை பார்த்தாள் ஒன்பது ஆனதும் கீழே வந்தவளை வீட்டு ஆண்பிள்ளைகள் சாப்பிட்டதும் சாப்பிடணும் என்றதும் அவளுக்கு கோபம் வந்துவிட்டது.
“ம்மா சின்னய்யா வர பத்து மணிக்கு மேல ஆகும் போலயே நேத்து சாப்பாடு போட்டீங்க இன்னிக்கு ஏன் சாப்பாடு சின்னய்யா வந்த பிறகு சாப்பிடணும்னு சொல்றீங்க” என்றாள் சிணுங்கியபடியே.
தையல்நாயகி அங்கே வந்தவர் “கண்ணு சாப்பிடுறியா?” என்று வாய் நிறைய கேட்கவும்
“பசிக்குது அத்தை சாப்பிடுறேன்” என்றாள் அமுதாவை முறைத்து பார்த்தபடியே.
“அமுதா சில சமயம் ராயன் வீட்டுக்கே வரமாட்டான் அவனுக்காக ஏன் முல்லை சாப்பிடாம காத்து இருக்கணும் அவ சாப்பிடட்டும்” என்று தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக தோசை வார்த்து மருமகளுக்கு தட்டில் போட்டுக் கொண்டு வந்து கொடுக்கவும் “தேங்க்ஸ் அத்தை” என்று ஒரு வாய் தோசையை பிய்த்து சாப்பிட ஆரம்பித்தாள் முல்லை.
கழுகுக்கு மூக்கு வேர்த்தது போல அங்கே வந்த கோமளமோ “ராயன் வரும் வரை காத்திருந்து சாப்பிட தெரியாதா உனக்கு அப்படி என்ன அடக்க முடியாத பசி” என்றார் வெடுக்கென வார்த்தைகளால் கோமளம்.
“அக்கா சாப்பிடுற பிள்ளையை இப்படியா பேசுவாங்க… ராயன் வர தாமதம் ஆகும்னு எனக்கு போன் போட்டு சொல்லியிருந்தான். அதான் நான் முல்லைக்கு தோசை ஊத்திக் கொடுத்தேன் சாப்பிடட்டும் விடுங்க” என்றார் மருமகளுக்கு சப்போர்ட்டாக.
“அடடா இத்தனை நாள் என் பேச்சுக்கு மறுவார்த்தை பேச மாட்ட நாயகி புதுசா மருமக வந்ததும் என்னை எதிர்த்து பேசுறியா. இனிமே நான் எதுக்கு இந்த வீட்ல இருக்கணும் இப்பவே நான் வீட்டை விட்டு வெளியே போயிடறேன்” என வீம்புக்கு நின்றார் கோமளம்.
“பெரியம்மா நா.நான் அப்பறம் சாப்பிட்டுக்குறேன் நீங்க வீட்டை விட்டு போக வேணாம்” என்று தட்டை பதட்டத்துடன் நின்ற அமுதாவிடம் கொடுத்து விட்டு கோமளத்தின் கையை பிடித்துக்கொண்டாள் முல்லை.
“கையை விடு முதல நானும் நாயகியும் இத்தனை வருசத்துல ஒருநாள் கூட சண்டை போட்டுக்கிட்டது கிடையாது ஆனா இன்னிக்கு உன்னால எங்க ரெண்டு பேருக்கும் சண்டை வந்துருச்சு நீயெல்லாம் நல்லா வருவடி” என்று முகத்தில் அடித்தாற் போல பேசி முல்லையின் கையை வெடுக்கென விலக்கிவிட்டார்.
அமுதாவோ “அம்மா முல்லை சின்னப் பொண்ணு அவ ஏதோ பசிக்குதுனு சாப்பிட வந்துட்டா என் பொண்ணை மன்னிச்சிடுங்க” என்று மகளுக்காக கோமளத்திடம் மன்னிப்புக் கேட்டார்.
அழகம்மை கோமளத்தின் சத்தம் கேட்டு அங்கே வந்தவர் நடந்ததை தெரிந்துக் கொண்டு “அண்ணி இதெல்லாம் ஒரு பெரிய விசயம்னு கண்ணு, காது, மூக்கு வச்சு பேசுறீங்க ராயனுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவான்” என்றார் கவலையாக.
“என்னமோ பண்ணுங்கடி நான் எதிலையும் தலையிடல என் குடும்பத்துக்கு மருமக வந்ததும் பாருங்க நான் எப்படி கட்டுக்கோப்போ நடத்துறேன்னு” என்று முல்லையை முறைத்து விட்டுச் சென்றார்.
முல்லையோ தேம்பி தேம்பி அழுதவண்ணம் நிற்க அழகம்மையும் நாயகியும் அவளை சமாதானப்படுத்தி சாப்பிட வைக்க முயன்றனர்.
“எ.எனக்கு சாப்பாடு வேணாம் அத்தை, அம்மா எ.எனக்கு தூக்கம் வருது” என்று அழுதுக் கொண்டே அவளது அறைக்கு ஓடிவிட்டாள்.
பாயில் படுத்துக்கொண்ட முல்லையோ “இந்த வீட்ல சாப்பிட கூட எனக்கு உரிமையில்லையா. அதென்ன ஆம்பிள்ளைக சாப்பிட்ட பிறகுதான் பெண்கள் சாப்பிடணும்னு சொல்றாங்க சின்னய்யா நைட் முழுக்க வரலைனா அப்போ நான் விடிய விடிய சாப்பிடாம இருக்கணுமா! இந்த பெரியம்மா ரொம்ப பண்ணுறாங்க என்னால சண்டை வரக்கூடாதுனு சின்னய்யா சொல்லியிருக்காங்க அதுக்காகத்தான் நான் பெரியம்மாவை எதிர்த்து பேசாம வந்துட்டேன் ஆனா எனக்கு பசிக்குது” என்று வயிற்றை தடவியவளோ “சின்னய்யா வரும்வரை நாம சாப்பிடாம இருக்கணும் இதுல பீரியட்ஸ் பெயினும்கூட வந்துருச்சு” என்று அவளுக்குள் பேசிக்கொண்டே கண்ணீருடன் உறங்கிவிட்டாள்.
அழகம்மையும் நாயகியும் ராயன் அறைக்குள் தோசைதட்டுடன் சென்றவர்கள் முல்லை உறங்கிக்கொண்டிருப்பதை கண்டு “பாவம் அண்ணி முல்லை சாப்பிட வந்த புள்ளையை சாப்பிடவிடாம பண்ணிட்டாங்க பெரிய அண்ணி இவங்களை பத்தி ராயன் கிட்ட சொன்னா அவனுக்கு முணுக்குனு கோபம் வந்து கோமு அண்ணியை எதிர்த்து சண்டை போடுவான் பொம்பளைக்களுக்குள்ள நடக்குற சண்டை ஆம்பிள்ளைங்க காதுக்கு கொண்டு போக கூடாதுனு பார்க்குறேன் அண்ணி!” என்றார் சலிப்பாக.
“கோமளா அக்கா இன்னிக்கு வீட்டை விட்டு போறேனதும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல தெரியுமா இனிமே நைட் டிபனுக்கு ராயனை சீக்கிரம் வரச்சொல்லிடறேன் புள்ள பசியோட படுத்து தூங்குறாளேனு கவலையா இருக்கு” என்றார் பெரும்மூச்சுடன் தையல்நாயகி.
ராயன் பால்பண்ணையில் இன்ஸ்பெக்ஷன் முடித்து வீட்டுக்கு வரும்போது மணி பதினொன்று ஆகியிருந்தது.
கதவை தட்டவும் தையல்நாயகிதான் கதவை திறந்தார்.
“ஏன் ராயா நான் ரொம்ப நேரமா போன் போட்டுக்கிட்டே இருந்தேன் நீ போன் எடுக்கலையேப்பா” என்றவரிடம்
“நம்ம பால்பண்ணையில நாம தயாரிக்குற பொருட்களில கலப்படம் பண்ணுறோம்னு சோதனை போட கவர்மென்ட்ல் இருந்து வந்துட்டாங்கம்மா நாம கலப்படம் எதுவும் பண்ணலைனு உறுதிப் படுத்திட்டேன் உங்களை பத்தி தவறான தகவல் எங்களுக்கு வந்திருக்குனு மன்னிப்பு கேட்டு போனாங்க மேலதிகாரிங்க” என்றான் கையை தலைக்கு மேல் தூக்கி சோம்பல் முறித்தபடியே.
“நம்ம மேல யாரு கண்ணு கவர்மெண்ட் அதிகாரிங்ககிட்ட புகார் கொடுத்திருப்பாங்க?” என்றார் ஐயத்துடனே.
“என்னோட நேரடியா மோதாம இப்படி என் முதுகுக்கு பின்னால இருந்து மோதுறான் பைத்தியக்காரன் தென்னரசு” என்றவன் கண் சிவந்துவிட்டது கோபத்தில்.
“சத்தம் போட்டு பேசாத கண்ணு உன் மாமன் அத்தை காதுல விழுந்துச்சுனா அவங்க மனசு சங்கடப்படும்ல” என்றார் கவலையாக தையல்நாயகி.
“அத்தைக்காகவும் பூங்கொடிக்காகவும் தான் பார்க்குறேன்மா அந்த கோட்டிபயல் பண்ணுற காரியத்துக்கு அவன் தோலை உரிச்சு உப்புக் கண்டம் போட்டிருப்பேன்” என்றான் ஆத்திரத்தோடு.
“அப்படியெல்லாம் பண்ணிப்புடாத ராஜா” என்றார் ஆயாசமாக.
“நான் பார்த்துக்குறேன் நான் பால்பண்ணை கேண்டீன்ல சாப்பிட்டு வந்துட்டேன் முல்லை சாப்பிட்டாளா?” என்றான் மனைவியின் மேல் உள்ள அக்கறையோடு தன் அறையில் மேல் நிமிர்ந்து பார்த்தான்.
“அ.அது அவ சாப்பிடாமலே தூங்கிட்டா கண்ணு… புள்ள தலைக்கு குளிச்சிருக்கால அசதில கண்ணசந்துட்டா நான் இரண்டு தோசை சூடா சுட்டுத்தரேன் நீ கொண்டு போய் கொடுக்குறியா ராயா?” என்றார் வீட்டில் நடந்த சண்டையை மகனிடம் மறைத்து விட்டார்.
“மணி என்னாச்சு இன்னுமா சாப்பிடாம இருக்கா..? பெரியவங்க எதுக்கு வீட்ல இருக்கீங்க முல்லையை சாப்பிட சொல்ல வேண்டாமா நான் தான் போன் பண்ணி அவளை சாப்பிடச் சொல்லுங்கனு சொன்னேனே?” என்று தாயிடம் சண்டைக்கே வந்துவிட்டான் ராயன்.
“இனிமே சாப்பிட வைக்குறேன் ராயா சத்தம் போடாதே” எங்கே கோமளம் எழுந்து வந்து ராயனிடமும் வம்பு வளர்ப்பாரோவென்று கூட்டுக்குடும்பம் களைந்து விடக்கூடாதென அச்சப்பட்டு மகனை சமாதானப்படுத்த முயன்றார் தையல்நாயகி.
“சரி சீக்கிரம் சுட்டுக்கொடுங்க” என்று சோபாவில் அமர்ந்துக் கொண்டான்.
அவரசமாக மூன்று தோசையை சுட்டு தட்டில் போட்டு கொஞ்சம் தக்காளிச் சட்னியும் வைத்து ராயன் கையில் கொடுத்தார்.
தோசைத் தட்டை வாங்கியவன் “பெரியம்மா முல்லையை ஏதும் பேசினாங்களா அம்மா?” என்றான் புருவம் நெறித்து.
“அ.அதெல்லாம் ஒண்ணும் பேசல கண்ணு நீ மருமகளை எழுப்பி தோசையை சாப்பிடச் சொல்லு நாளையிலிருந்து கொஞ்சம் வீட்டுக்கு விரசா வர பாரு” என்று பூசி மொழுகினார் தையல்நாயகி.
“எதையோ மறைக்குறீங்கம்மா என்கிட்ட” என்றவனோ “உங்க மகன் அராசங்க வேலை பார்க்குறான் பாருங்க நேரமே வீட்டுக்கு வருவதற்கு எனக்கு கீழ ஆயிரம் குடும்பம் வேலை பார்க்குறாங்க. தொழிலாளி போல நானும் வேலை பார்க்கணும் மா” என்றவனை ஏதும் சொல்லமுடியாமல் அமைதியாகிவிட்டார் தையல்நாயகி.
ராயன் மாடிப்படியில் ஏறி அவன் தலை மறையும் வரை நின்றவர் பெரும்மூச்சுவிட்டு அவரது அறைக்குள் சென்றார்.
காலைக்குறுக்கிக்கொண்டு ஃபேன் கூட போடாமல் வியர்த்துப்போய் படுத்திருந்தவளை கண்டவன் மனது சுக்கு நூறாய் உடைந்து போனது.
“கண்டிப்பா பெரியம்மா எதாவது சொல்லியிருக்கணும்” என்று பெரும்மூச்சுவிட்டு தோசைதட்டை டேபிள் மீது வைத்து விட்டு குளியலறை சென்றவன் அவசரமாக குளியலை போட்டு வந்தவன் வீட்டுக்குள் இருக்கும்போது மட்டும் பனியன் நைட் பேண்ட் போட்டுக்கொள்வான் ராயன்.
முல்லையின் பக்கம் அமர்ந்தவன் அவளது நெற்றியில் பூத்திருந்த வியர்வையை விரலால் துடைத்துவிட அவளோ “பசிக்குது” என்றாள் தூக்க கலக்கத்தின் உளறலாக.
ராயனுக்கு ஐந்துயிரும் பற்றிக்கொண்டு வந்தது. “ச்சே என்னோட பால்பண்ணையில வேலைபார்க்குறவங்களுக்கு மதியம் சாப்பாடு ஃப்ரீயா கொடுக்குறேன் என்னோட பொண்டாட்டி வீட்டுல சாப்பிடாம பட்டினி இருக்காளே” என்று பெரும் கவலை கொண்டான் வல்லவராயன்.
“கொடி எழுந்திருமா” என்று அவளது கன்னத்தை தட்டவும்
“ம்ம் எனக்கு தூக்கம் வருது” என்று அவனது கையை தட்டிவிட்டாள்.
“கொடிமா எழும்புடி” என்று அவளது தலையை நீவிவிட்டான். மெதுவாய் கண்திறந்து பார்த்தவள் பனியனுடன் அவள் முன்னே அமர்ந்திருந்த ராயனை பார்த்ததும் “எ.எப்போ வந்தீங்க சின்னய்யா சாப்பிட்டீங்களா?” என அக்கறையோடு கேட்டபடியே எழுந்து உட்கார்ந்தாள்.
“ம்ம் நான் சாப்பிட்டேன் நீ சாப்பிட்டியா?” என்றான் அவளது கண்களை பார்த்தவாறே.
“எ.எனக்கு பசியில்லை நீங்க வந்ததும் உங்ககூட சாப்பிடலாம்னு படுத்துட்டேன்” என்றாள் கண்ணை உருட்டி.
அவள் பொய் பேசுகிறாளென்று அறிந்தவன் “நான் சாப்பிட்டு வந்துட்டேன் உனக்கு அம்மா தோசை சுட்டு கொடுத்து விட்டிருக்காங்க சாப்பிடு” என்று டேபிள் மேல் இருந்த தட்டை எடுத்து நீட்டவும் அவளுக்கு பசியே போயிருந்தது.
“எனக்கு இப்போ பசியில்ல வேண்டாம் சின்னய்யா” என்று சிணுங்கினாள்.
“வயிறு வலி இருக்குனு சொன்னில்ல சாப்பிடாம வெறும் வயித்துல படுத்தா உடம்பு என்னத்துக்காகும்டி” என்று குரலை உயர்த்தினாலும் தோசையை சட்னியில் தொட்டு முல்லையின் வாயருகே கொண்டுச் சென்றான்.
“பீரியட்ஸ் டைம்ல நீங்க எனக்கு ஊட்டக்கூடாது” என்று அவனிடமிருந்து தள்ளி அமர்ந்தாள்.
“இது என்ன பழக்கம் கொடி நான் உன்னை தொட்டா என்ன ஆகும் இந்த மூடபழக்க வழக்கங்கள் எல்லாம் பார்க்க கூடாது. ஒழுங்கா நான் ஊட்டுறதை சாப்பிடு” என்று அவன் அதட்டல் போடவும் அவள் வாய் தானாக திறந்துக் கொண்டது.
மூன்று தோசையும் ஊட்டிவிட்ட பிறகு தட்டில் கைகழுவியதும் “நான் கழுவி வைக்குறேன் கொடுங்க” என்று தட்டை வாங்கப்பார்த்தாள்.
“ஏன் நான் கழுவி வைக்கக்கூடாதா புருசன் சாப்பிட்ட தட்டை பொண்டாட்டி கழுவும்போது பொண்டாட்டி சாப்பிட்ட தட்டை புருசன் கழுவலாம்டி” என்று அவளிடம் பேசியவாறே அறையில் இருந்த வாஷ் பேஷினில் தட்டை கழுவி வைத்து தண்ணீர் பாட்டிலை முல்லைக்கு எடுத்துக்கொடுத்தான் ராயன்.
அவளோ தண்ணீரை குடித்து விட்டு “சி.சின்னய்யா எனக்கு ஒண்ணு தோனுது பண்ணட்டுமா?” என்றாள் உதடுகடித்து.
“என்ன பண்ண போற?” என்றான் நெற்றியை சுருக்கி.
“அ.அது உங்க கன்னத்துல முத்தம் கொடுக்கத் தோணுது” என்றாள் அவன் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்து.
அவன் கன்னக்குழி தெரிய சிரித்தவனோ “கொடுத்துக்கோ” என்றான் கண்ணைச்சிமிட்டி அவனுக்கும் வெட்கம் வந்துவிட்டது.
“உங்களை போல புருசன் கிடைக்க நான் போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருக்கணும்” என்றவளோ சட்டென்று அவனது கன்னத்தில் முத்தம் கொடுத்து பாயில் படுத்துவிட்டாள்.
“ஏய் புள்ள நீ மட்டும் முத்தம் கொடுத்தா போதுமா நான் கொடுக்க வேணாமா எழுந்திரு” என்று அவளது கையை பிடித்து எழ வைத்தவன் “இப்போ வயிறு வலி இல்லையே” என்று அவள் பக்கம் நெருங்கி கேட்கவும் அவளுக்கு மூச்சடைத்து போனது.
“இல்ல வலிக்கல” என்று தலையை ஆட்டியதும் அவளது கன்னத்தை மெதுவாய் பற்றி அவளது உச்சியில் முத்தம் கொடுத்து “உன் உடம்பு இப்போ சரியில்லை இல்லைனா உதட்டுல முத்தம் கொடுத்திருப்பேன்” என்றதும் முல்லைக்கொடியின் கண்கள் சாசர் போல விரிந்தது.
Ayyo.. semma scene 😍
Sis story very interesting regular ud koduga plz
Very interesting story