ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 4

“அ.அது வ.வவவ.” என்று அவள் பேசும் முன் அவளது கன்னத்தில் பளாரென அனல் பறக்க  அறைந்திருந்தான் வல்லவராயன்.

ஒரே அறையில் கண்கள் கிறுகிறுவென வர அப்படியே மயங்கி சரிந்தவளை தாங்கிப்பிடித்து அங்கிருந்த நாற்காலியில் உட்கார வைத்து விட்டு குடிக்க வைத்திருந்த தண்ணீர் கேனிலிருந்து தண்ணீரை பிடித்து வந்து முல்லையின் முகத்தில் தெளித்ததும் மெதுவாய் கண்திறந்தவள் முன்னே அதே கோப முகத்துடன்தான் அவள் கண் முன்னே இன்னும் நின்றிருந்தான் ராயன்.

“என்ன தைரியம் இருந்தா கல்யாணப் பொண்ணை மண்டபத்தை விட்டு யாருக்கும் தெரியாம அனுப்பி இருப்ப கொஞ்சம் கூட பயம் கிடையாது புள்ள! நீ செய்த காரியம் சரியா” என்று அவளை மீண்டும் அடிக்கப்போய் விட்டான்.

அவள் கள்ளம் கபடம் இல்லா பார்வையை கண்டவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை கையை எடுத்துக்கொண்டான். 

“நா.நான் த.தப்பு பண்ணல க.கல்யாணப் பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை அவங்க பண்ணையில வேலை பார்க்குற டிரைவர் ராஜாவை லவ் பண்ணுறாங்க உங்ககிட்ட உண்மையை மறைச்சு இந்த கல்யாணம் பண்ணுறாரு பண்ணையாரு அதான் யாருக்கும் தெரியாம மண்டபத்தை விட்டு வெளியே அனுப்பி வச்சேன்” என தைரியத்தோடு பேசினாலும் அவளது கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்துக் கொண்டுதான் இருந்தது.

“கார்த்திகாவை நீ வெளியே அனுப்பி வச்சிருக்க கூடாது ரொம்ப தப்பு பண்ணியிருக்க. நான் எதுக்கு இருக்கேன் என்கிட்ட வந்து விசயத்தை சொல்லியிருக்கணும் இல்லைனா எங்கப்பா அம்மாகிட்ட சொல்லியிருக்கணும். அதை விட்டு பைத்தியகாரத்தனமா நடந்திருக்க இப்ப கார்த்திகா மண்டபத்துல இல்லைனு தெரிஞ்சதும் கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும் பொண்ணு ஓடிப்போய்ட்டானு பட்டப்பேரு வைப்பாங்க நான் வேற ப்ளான் போட்டு வச்சிருந்தேன் எல்லாத்தையும் கெடுத்து குட்டி சுவராக்கிட்ட என் கண்ணு முன்னால நிற்காத மனுசனா இருக்கமாட்டேன் நான் இதுவரை எந்த பொண்ணுகளையும் கை நீட்டி அடிச்சதில்லை இப்போ என்னையே தப்பு பண்ண வச்சிட்ட” என்று அதட்டல் போட்டதும் 

“என்னை மன்னிக்கமாட்டீகளா நா.நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன் உங்ககிட்ட வந்து கார்த்திகா அக்கா காதலை சொல்லியிருந்தா நீங்களே அவங்களுக்கு கல்யாணம் பண்ணிவச்சிருப்பீங்க எல்லாம் தப்புதேன் இந்த கிறுக்கி தெரியாம தப்புபண்ணிப்புட்டேன் என்னை மன்னிச்சிடுங்க சின்னய்யா” என்று ராயன் காலில் விழப்போனதும் “பண்ணறதை பண்ணிபுட்டு இப்போ வந்து காலுல விழுந்து மன்னிப்பு கேட்குறியா நான் உன்னை மன்னிக்க மாட்டேன்” என்று விறுவிறுவென வேகமாக மண்டபத்திற்குள் சென்றவன் போனில் பாலாஜியிடம் சில கட்டளைகளை கூறியதும் பாலாஜியோ “ஓ.கே பாஸ்” என்றிருந்தான்.

முல்லைக்கொடியின் கன்னத்தில் ராயனின் கைவிரல் ஐந்தும் செவ்வரியாக பதிந்து விட்டது. இன்னுமே அவளது கன்னம் தீயாய் எரிந்துக் கொண்டிருந்தது தண்ணீரில் முகத்தை கழுவி திரும்ப “யார்கிட்டயும் பொண்ணு காணோம்னு இப்போ சொல்லக்கூடாது. நான் பார்த்துக்குறேன்” என்று இறுகிய முகத்துடன் அங்கிருந்துச் சென்றிருந்தான் ராயன்.

அடுத்த ஒருமணிநேரத்தில் கார்த்திகாவும் ராஜாவும் ராயன் முன்னே நின்றிருந்தனர்.

“அண்ணா என்னை மன்னிச்சிடுங்க எங்க ரெண்டு பேரையும் நீங்கதான் சேர்த்து வைக்கணும் நான் கார்த்திகாவை நல்லபடியா வச்சு பார்த்துப்பேன்” என்று ராயனின் காலில் விழப்போனவனை தடுத்து நிறுத்திய ராயனோ “என்ன தைரியம் இருந்தா மண்டபத்துல இருந்து பொண்ணை கூட்டிட்டு போயிருப்ப” என்று அவனது கன்னத்தில் பளாரென அறைந்தான்.

“அண்ணா அவரை அடிக்காதீங்க நான்தான் அவரு கூட போனேன்” என்றதும் அவளுக்கும் ஒரு அறை விழுந்தது.

“கல்யாணம்னா விளையாட்டு காரியம்னு நினைச்சீங்களா எங்க குடும்பம் பத்திரிக்கை அடிச்சு ஊரு முழுக்க கொடுத்திருக்காங்க எங்க வீட்டு கௌரவம் என்னால கெடக்கூடாதுனு தான் நான் நினைப்பேன். ஏம்மா கார்த்திகா உன்னை என் வீட்டு பெரியவங்க பொண்ணு பார்க்க வரும்போது நான் எங்க பண்ணைவீட்டு டிரைவரை லவ் பண்ணுறேனு சொல்லியிருக்கணும்ல இல்ல கொஞ்ச நேரம் முன்ன ரிசப்ஷன்ல என் பக்கம் நின்னபோது என்கிட்ட உன் லவ்வை பத்தின விசயத்தை சொல்லியிருக்கணும் எதுவுமே பண்ணாம மண்டபத்தை விட்டு ஓடிப்போறது நல்ல குடும்பத்து பொண்ணுங்க பண்ண மாட்டாங்கம்மா” என்றான் அதட்டலாக.

“அச்சோ எல்லாம் என்னாலதான்” என்று கன்னத்தை பிடித்துக்கொண்டு முல்லைக்கொடி நின்றுக் கொண்டிருந்தாள். ராயனின் ருத்ர அவதாரத்தை முதன் முறை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

நதியா எழுந்ததும் “பொண்ணை காணோமே! மேக்கப் போடணுமே ரெஸ்ட்ரூம் போயிருப்பாளோ முல்லைக்கொடி எங்க போயிருப்பா அவளையும் காணலையே?” என்று குளியலறைக்கதவை பார்த்தாள் லேசாய் திறந்திருந்தது கதவு திறந்து பார்த்தாள் அங்கே இல்லையென்றதும் அவளுக்கு திக்கென்றிருந்தது.

“ரெண்டு பேரும் வாங்க” என்று மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றான் ராயன். 

பிரம்ம முகூர்த்தம் என்பதால் இருவீட்டு பெரியவர்களும் குளித்து புறப்பட்டு வந்தனர். ராயன் இருக்கும் தைரியத்தில் ராஜாவும் கார்த்திகாவும் அவன் பின்னே சென்றனர்.

பண்ணையார் ராஜபூபதியோ ராஜாவின் கையை பிடித்துக்கொண்டு நின்ற கார்த்திகாவை கண்டதும் “கோட்டி கழுதை என் மானத்தை வாங்கிப்புட்டியேடி” என்று கையை ஓங்கிக்கொண்டு வந்தார்.

“நிறுத்துங்க பொது சபையில பொண்ணை பெத்தவங்களா இருந்தாலும் அடிக்கக்கூடாது அதுக்காக உங்க பொண்ணு செய்தது தப்பு இல்லனு நான் சொல்லமாட்டேன் ஆரம்பத்துலயே பொண்ணு என்ன பண்ணுறானு கவனிச்சிருக்கணும் அதை விட்டுபுட்டு காலம் போன கடைசியிலே சங்கரா சங்கரானா சரியாய் வந்துருமா. பெரியவங்க பெரியவங்களா நடந்துக்கோங்க உங்க பொண்ணு இப்போ மேஜர் அவ விருப்பப்பட்ட வாழ்க்கையை அமைச்சு கொடுக்க பாருங்க. நான் பணக்காரன் ராஜா ஏழைனு எதாவது காரணம் சொல்லி அவனுக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்தா நான் யாருனு உங்களுக்கு தெரியும். இப்பவே இந்த மணமேடையில உங்க மகள் கார்த்திகாவுக்கும் ராஜாவுக்கும் கல்யாணம் நடக்கும் நீங்க அட்சதை போட்டு ஆசிர்வாதம் பண்ணறதும் பண்ணாததும் உங்க விருப்பம்” என்றான் அசால்ட்டாக.

பண்ணையாரோ வல்லவராயனை எதிர்த்து நிற்க முடியாதென்று கல்யாணத்திற்கு ஒப்புக்கொண்டார். 

“நன்றிங்கப்பா” என்று தந்தையின் காலில் விழுந்தாள் கார்த்திகா.

இங்கே நடப்பது கனவா நனவாவென்று பித்து பிடித்தது போல நின்றிருந்தனர் வல்லவராயன் குடும்பத்தார் அனைவரும். 

கோமளமோ இந்த முறையும் பெரியவனுக்கு கல்யாணம் நின்னுபோச்சு சன்னியாசியா போகட்டும் என் மகன் கண்ணனுக்குத்தான் எல்லா மரியாதையும் சொத்து முழுக்க எல்லாமுமே என் மகனுக்கும் மகளுக்கும்தான் என்று மனதிற்குள் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தார்.

தையல்நாயகியோ கவலையுடன் கணவனை பார்த்தார். நாம கொடுத்து வச்சது அவ்ளோத்தான் அடுத்து பொண்ணு பார்ப்போம் என்று மூச்சை இழுத்து விட மட்டுமே அவரால் முடிந்தது.

“இந்தா புள்ள கார்த்திகாவை அலங்காரம் பண்ணி கூட்டிக்கிட்டு வா” என்றான் உயர்ந்த குரலுடன் ராயன்.

கோமளோ “நம்ம வீட்டு வேலைக்காரி போய்” என்று பேச ஆரம்பிக்க வல்வராயன் பார்த்த பார்வையில் கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டார்.

பூங்கொடிக்கு மாமனுக்கு கல்யாணம் நின்றுவிட்டதேயென்று வருத்தம்… தென்னரசுவை இந்த நேரத்தில் கரித்துக்கொட்டினாள் நார வாய்க்காரன் அப்பவே உன் மாமனுக்கு இந்த முறையாவது கல்யாணம் நடக்குமானு கேலி பேசினான் என்று முரண்டிக்கொண்டாள்.

கார்த்திகாவை அலங்காரம் செய்து அழைத்து வந்தாள் முல்லைக்கொடி.

நதியாவிற்கு கார்த்திகாவின் மேல் கோபம் இன்னொருத்தரை காதலிச்சவ எப்படி அண்ணனை கல்யாணம் பண்ணுக்குறேன்னு மண்டபத்துக்கு வரலாம் என்று கார்த்திகாவுக்கு அலங்காரம் செய்து விட மாட்டேன் என்று மண்டபத்திற்குள் வந்து நின்றுக் கொண்டாள்.

வல்லவராயனுக்கு ஒருவகையில் கல்யாணம் நின்று போனது அவனுக்கு நிம்மதியே பெரியவர்களுக்காக தானே கல்யாணத்துக்கு சம்மதித்திருந்தான். 

முகூர்த்த நேரத்திற்கு தென்னரசுவும் அவனது அப்பா ராஜமாணிக்கமும் வந்திருந்தனர்.

மணவறையில் கார்த்திகாவும் ராஜாவும் மணமக்களாய் உட்கார்ந்திருப்பதை கண்டு அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. 

“அப்பா இந்த கூத்தை பார்த்தீங்களா கல்யாண மாப்பிள்ளை மணவறையில உட்காராம நின்னுக்கிட்டு இருக்கான் நான்தான் சொன்னேன்ல இவனுக்கு கல்யாண பாக்கியம் இல்லை” என்று கைகொட்டி சிரித்தான்.

வீட்டு மாப்பிள்ளை என்று ராயன் குடும்பத்தார் அனைவரும் தென்னரசுவை எதிர்த்து பேச முடியாமல் கையை பிசைந்து நின்றிருந்தனர்.

பூங்கொடி தென்னரசுவை முறைத்தாள். தென்னரசுவோ “நான் சொன்னது நடந்துடுச்சு பார்த்தியா” என்று புருவம் உயர்த்தி நக்கலாய் உதடு வளைத்தான்.

ராயனோ தென்னரவு பேசுவதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை நீயெல்லாம் எனக்கு ஒரு ஆள் கிடையாது என்று அவனை சட்டை பண்ணமால் “தாலி கட்டு ராஜா” என்றதும் ராஜா தான் வாங்கி வைத்திருந்த தாலியை கார்த்திகாவின் கழுத்தில் கட்டினான். 

கார்த்திகாவின் கழுத்தில் தாலி கட்டி முடித்ததும் பெரியவர்களின் காலில் விழாமல் முதலில் ராயன் காலில் விழுந்தனர் மணமக்கள்.

“பெரியவங்க காலுல விழுந்து கும்பிடுங்க” என்றான் ராயன்.

கார்த்திகாவும் ராஜாவும் சபையில் நின்ற பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

“புரட்சிக்காரன்ப்பா இவன் ஆனா மொட்ட பையலா கடைசி வரை சுத்தப்போறான்” என்றான் மீண்டும் ராயனை சீண்டும் விதமாக.

கை முஷ்டியை முறுக்கி கோபத்தை அடக்கியவனோ கண்மூடி திறந்து பார்த்ததும் அவன் கண் முன்னே முல்லைக்கொடி ராயன் அவமானப்படுவதை கவலையோடு பார்த்திருந்தவள் “நான் வேணும்னா உங்களை கல்யாணம் பண்ணிக்குறேன் சின்னய்யா” என்று அவள் உதடுகளை அசைத்தாள். ராயன் அவள் உதடசைவதை கண்டுக்கொண்டான்.

“இந்தா புள்ள இங்க வா” என்று கையை நீட்டி அழைத்தான் முல்லைக்கொடியை ராயன்.

முல்லைக்கொடியோ மறுபடியும் அடிக்க கூப்பிடுவாரோ என்று பயந்துக் கொண்டே ராயன் பக்கத்தில் சென்றாள்.

“என்னைய கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?” என்று அனைவர் முன்னே பட்டென்று அவளது கண்ணைப்பார்த்துக்கேட்டான்.

பழம் நழுவி பாலில் விழுந்தது போல இருந்தது முல்லைக்கொடிக்கு. ஆனால் உடனே என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற விளம்பரம் அவள் முன்னே வந்து போனது அதிர்ச்சியும் ஆசையும் அவளுக்கு போட்டி போட்டுக் கொண்டு வந்தது.

“நம்ம வீட்டு வேலைக்காரி எனக்கு மருமகளா வருவதா நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டேன்” என்று கோமளம் சபை முன்னே குரலை உயர்த்தினார்.

ராயனோ “உங்களுக்கு பிடிக்குதா பிடிக்கலையானு நான் கேட்கல பெரியம்மா கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்கு என்னை பிடிச்சிருக்கானு கேட்டேன்” என்றான் கம்பீர குரலில்.

தையல்நாயகியோ மகனுக்கு கல்யாணம் ஆனால் சரி என்று நினைத்து “சமையல்காரினு ஒருநாளும் முல்லைக்கொடியை பார்த்தது கிடையாது நம்ம வீட்டுல ஒரு பொண்ணாத்தான் பார்த்திருக்கேன் எனக்கு முல்லைக்கொடி மருமகளா வரதுல எனக்கு சம்மதம் கண்ணு” என்று ராயனின் கையை பிடித்தார்.

தெய்வநாயகத்தை பார்த்தான் உங்களுக்கு சம்மதமாவென்று. தெய்வநாயகமோ “எனக்கு சம்மதம் கண்ணு” என்றவுடன் நீலகண்டன் கண்ணில் சந்தோசம் தெரிந்தது. அழகம்மைக்கு முல்லைக்கொடியை பிடிக்கும் அவர் பெரிதாக அந்தஸ்து பார்க்க மாட்டார். 

முல்லைக்கொடி நம்ம வீட்டுப் பெண்ணாக வருவது சம்மதம் என்ற நிலையில் நின்றிருந்தார். பூங்கொடியோ தென்னரசுவை பார்த்து சிரித்தாள். தென்னரவுக்கு முகத்தில் ஈயாடவில்லை. 

பாலாஜியை பார்த்தான் ராயன்.

அமுதாவை அழைத்து வர ஆள் சென்றிருந்தது. “உங்களை மண்டபத்துக்கு வரச்சொன்னாங்க” என்றதும் அமுதா மகள் எதாவது கூத்து பண்ணிவிட்டாளா என்று உயிரை கையில் பிடித்துக்கொண்டு சென்றார்.

அங்கே வல்வராயன் முன்னே தலைகுனிந்து நின்றிருந்தாள் முல்லைக்கொடி.

“என்னடி தப்பு பண்ணின?” என்று மகளை அடிக்க கையை ஓங்கிய நேரம் “உங்க பொண்ணு எந்த தப்பும் பண்ணலை இப்போ நான் உங்க கிட்ட பேசணும் நான் தான் உங்களை வர சொன்னேன். எனக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களா?” என்றான் அதிரடியாக.

அமுதாவோ “அ…அது சரியா வராதுங்க தம்பி நீங்க வேற பொண்ணை பாருங்க” என கையை பிசைந்த படியே தெய்வநாயகத்தை பார்த்தார்.

“ஏன்மா சரியா வராது எல்லாம் சரியா வரும் முல்லைக்கொடிதான் எங்க வீட்டு மருமகளா வரணும்னு விதி இருக்கு அதை யாராலும் தடுக்க முடியாது நீ எங்களை நம்பி உன் மகளை எங்க வீட்டு மருமகளா அனுப்பி வை” என்றார் உறுதியான குரலில் அமுதாவிற்கு நம்பிக்கை கொடுத்தார்.

அழகம்மையோ “முல்லைக்கொடியை என் பொண்ணு போலத்தான் நான் பார்க்குறேன் அமுதா நீ தைரியமா உன் பொண்ணை என் மருமகனுக்கு கொடு” என்று அவர் பங்குக்கு கேட்கவும் 

அமுதா நீலகண்டனை பார்த்தார். அவரோ “இத்தனை பேர் சொல்லும் போது ஏன் வேண்டாம்ங்குற அமுதா என் பொண்ணு முல்லைக்கொடியை என் மருமகன் வல்லவராயனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்குறேன்” என்று முல்லைக்கொடியின் பக்கம் வந்து அவளது கையை பிடித்து வல்லவராயன் கையில் கொடுத்தார். 

அந்த வீட்டில் கோமளத்தை தவிர அனைவரும் அமுதாவை வீட்டில் வேலை பார்க்கும் பெண் என்று நினைத்ததில்லை.

முல்லைக்கொடிக்கு ஏதோ சொர்க்கத்தில் நிற்பது போல உணர்வு. தனக்கு இத்தனை பேர் உறவாக நிற்கிறார்களே என்று சந்தோசத்தில் திளைத்திருந்தாள்.

தங்கச்சங்கிலியோடு இருந்த தாலிச் சரடை எடுத்து வந்து நீலகண்டன் வல்லவராயன் கையில் கொடுத்து “என் பொண்ணு கழுத்துல தாலி கட்டுப்பா” என்றார் உறவு உரிமையோடு.

வல்வராயனோ “இந்தா புள்ள உன் வாயை திறந்து என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லு” என்றான் கர்ஜனைக்குரலில் ‘மெதுவா கேட்கலாம்ல ஏதோ இரும்பை முழுங்கியவன் போல கேட்கணுமா’ என்று மனதிற்குள் புகைந்தாலும் தாய் அமுதாவை பார்த்தாள்.

அமுதா அரைமனதாகவே இருந்தார். இருந்தாலும் உப்பு தின்ற வீட்டின் பெரியவர்கள் தன்னிடம் கேட்கும்போது அவரால் விருப்பம் இல்லையென்று கூறமுடியவில்லை.

“சம்மதம்ங்கய்யா” என்று தெய்வநாயகத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.

வல்லவராயனோ தங்கச் சங்கலியுடன்  மஞ்சள் சரடு கோர்த்திருந்த தங்கள் குலத்தாலியை முல்லைக்கொடியின் கழுத்தில் கட்டியவனோ “இனிமேதான் உனக்கு இருக்கு புள்ள” என்று அவள் காதில் பேசவும் அவளுக்கு பக்கென்றிருந்தது.

1 thought on “கடுவன் சூடிய பிச்சிப்பூ”

Leave a Reply to sowmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top