ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 5

அந்த நிமிடம் மட்டுமே முல்லைக்கொடி ராயன் பேச்சில் அச்சம் கொண்டாள். ஆனால் கழுத்தில் தாலி ஏறிய அந்த நொடி அவளுக்கு தான் விரும்பியவன் கிடைத்துவிட்டான் என்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தாள்.

“முல்லை நெத்தியில குங்குமம் வச்சிவிடுப்பா” என்று தையல்நாயகி வெள்ளி குங்குமச் சிமிழை மகனிடம் நீட்டவும் குங்குமத்தை எடுத்து முல்லைக்கொடியின் கண்களை உறுத்து விழித்தவாறே அவளது உச்சியில் அழுத்தி வைத்துவிட்டான். இந்த குங்குமம் போல உன்கூட எப்போதும் ஒட்டிக்கொண்டேயிருப்பேன் என்னும் விதமாக. 

கோமளமோ ‘இந்த வேலைக்காரிதான் எங்க குடும்பத்துக்கு மூத்த மருமகளா! நான் ஒருநாளும் இவளை என்னோட மருமகளா ஒப்புக்கமாட்டேன். எப்படியாவது முல்லைக்கொடியை அடிச்சு துரத்திட்டு எங்க அந்தஸ்துல இருக்கப்பட்ட பொண்ணை மருமகளா கொண்டு வருவேன். அப்படி இல்லனா என் மகன் கண்ணனுக்கு பெரிய இடத்துல கல்யாணம் பண்ணிட்டு வந்து இவளை தினம் தினம் என் மருமகளுக்கு கீழ வேலை செய்து பார்க்க வச்சு நீ எப்பவும் வேலைக்காரிதான்டினு சொல்லிகிட்டேயிருக்கணும். எச்ச பாத்திரம் விளக்குறவ எல்லாம் எனக்கு சம்பந்தியா ச்சே ச்சே இந்த வல்லவராயன் புத்தி ஏன் இப்படி மட்டமா இருக்குனு தெரியலை இளவட்டபய தான் புத்தி இல்லாம இருக்கான்னா இந்த தெய்வநாயகத்துக்கு அறிவு எங்க போச்சு’ என்று முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்தார்.

தெய்வநாயகமும் தையல்நாயகியும் கண்கலங்க மகனையும் மருமகளையும் ஆசிர்வாதம் செய்தனர். 

நீலகண்டனும் அழகம்மையும் “ரெண்டு பேரும் சந்தோசமா வாழணும் சீக்கிரம் இந்த வீட்டுக்கு வாரிசை கொடுத்துடுங்க” என மனமகிழ்வோடு ஆசிர்வாதம் செய்தனர்.

தென்னரசுவும் ராஜமாணிக்கமும் ராயன் அவமானப்பட்டு நிற்பதை பார்த்து கைகொட்டி சிரிக்கலாமென்று இருந்த எண்ணத்தில் நெருப்பள்ளி கொட்டிவிட்டான் வல்லவராயன் தாங்கள் நினைத்தது எல்லாம் நடக்காமல் பாலாய் போனதென்று விசனத்தில் நின்றிருந்தவர்கள் அங்கே இருக்க பிடிக்காமல் “அப்பா நாம கிளம்பலாம்” என்றவனோ பூங்கொடியை பார்த்தவன் “சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேரு” என்று ஏதோ அந்நிய விருந்தாளி போல அங்கிருந்து நகர்ந்தவர்களை “மாப்பிள்ளை நில்லுங்க கல்யாணத்துக்கு வந்துட்டு சாப்பிடாம போனா எப்படி சாப்பிட்டு கிளம்பலாம் வாங்க” என்று தென்னரசுவின் கையை பிடித்தார் தெய்வநாயகம்.

“வேலைக்காரியை மருமகளா கொண்டு வந்த குடும்பத்துல சாப்பிடறது எங்களுக்கு கௌரவ குறைச்சல் வேணும்னா எங்க வீட்டு வேலைக்காரவங்களை வேணா சாப்பிட வரச்சொல்லுறோம்” என்றார் ராஜமாணிக்கம்  வல்லவராயன் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டுமென்று…

ராயன் வேஷ்டியை மடித்துக்கொண்டு வரவும் அவனது கையை பிடித்துக்கொண்டு பேச விடாமல் தடுத்தார் தையல்நாயகி.

“விடுங்கம்மா பேச வேண்டிய இடத்துல பேசித்தான் ஆகணும் இந்த வல்லவராயன் பொண்டாட்டியை வேலைக்காரினு இன்னொரு முறை யாரும் சொன்னாங்கனா சொந்தக்காரங்கனு பார்க்கமாட்டேன் அடிச்சு முகரைய பேத்துருவேன்” என்றான் கை காப்பை ஏத்திவிட்டபடியே ராஜமாணிக்கத்தை முறைத்தான்.

அழகம்மையின் கையிலிருந்த தியாவை வாங்கிக்கொண்டு “மாமா உங்களை போல பரந்த மனசு நான் கல்யாணம் பண்ணி போன குடும்பத்து ஆட்களுக்கு கிடையாது எங்க குடும்பம் சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்” என கண்கள் கலங்கி நின்றதும் தன் கோபத்தை குறைத்துக் கொண்டு நின்றானே தவிர அவர்களை மன்னிக்கும் நிலையில் ராயன் இல்லை. 

“உன் புருசனை கூட்டிட்டு கிளம்பிடு என் பொண்டாட்டிக்கு மரியாதை தராதவங்க என் கல்யாணத்துல நிற்க வேண்டிய அவசியம் கிடையாது என் குடும்பத்தை மதிச்சு இருக்கவங்க இங்க நிற்கலாம்… எங்க வீட்டுப் பொண்ணை கொடுத்துட்டோம்னு கையை நீட்டாம இருக்கேன் இல்லைனா அப்பன் மகன் ரெண்டு பேரையும் பொடைச்சு போட்டிருப்பேன்” என ஆத்திரத்தில் பொங்கி விட்டான்.

தென்னரசுவோ இதற்குமேல் நின்றால் ராயன் தன் மீது கையை வைத்துவிடுவான் தங்களுக்குத்தான் அசிங்கமென்று எண்ணி “ஏய் உன் மாமன் கல்யாணத்துக்கு கூப்பிட்டு வச்சு அவமானப்படுத்துறான் பாரு இந்த கூத்து எங்காவது நடக்குமா! இப்ப என்கூட நீ கிளம்பி வரலைனா நீ இங்கயே இருந்துக்க வேண்டியதுதான்” என்று அழுத்தி கூறியதும் 

அழகம்மை பதறினார். நீலகண்டனோ “மாப்பிள்ளை என்ன பேசுறீங்க” என்று தென்னரசுவின் முன்னே போய் நின்றார் மகள் வாழ்க்கை வாழவெட்டியாய் போய் விடுமோவென்று.

“அப்பா நீங்க யாரும் பதறாதீங்க நான் அந்த வீட்டுல வேலைக்காரியா இருக்கறதை விட உங்க பொண்ணாவே கடைசி வரை இருந்துட்டு போறேன்” என்று அழும் மகளை தோளில் போட்டு தட்டினாள்.

எங்கே பூங்கொடி தன்னோடு வராமல் போய் விடுவாளோவென்று அச்சப்பட்ட தென்னரசுவோ “ஏய் நான் தெரியாம வாயை விட்டுட்டேன் வா கிளம்பலாம்” என்று அவளிடம் அவசரமாக மன்னிப்பு கேட்டு பூங்கொடியின் தோளிலிருந்து மகளை வாங்கி தன் தோளில் போட்டுக்கொண்டான்.

பூங்கொடி தன் பக்கம் இருக்கும் வரைதான் தனக்கு பாதுகாப்பு என்று உஷாரான தென்னரசுவோ “அப்பா கிளம்பலாம் வாங்க” என்று கண்ணை காட்டி வேகமாய் நடந்துச் சென்றான் தென்னரசு.

“போய்ட்டு வரேன் மாமா” என்று கண்ணில் கண்ணீருடன் திரும்பி திரும்பி தன் குடும்பத்தை பார்த்துச் சென்றாள் பூங்கொடி. 

அழகம்மையோ “இதுக்குத்தான் ராயா நான் அன்னிக்கு என் பொண்ணை உன்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னேன் தென்னரசு உன்காலுல விழுந்ததும் என் பொண்ணை அவனுக்கு கல்யாணம் பண்ணிவச்சிட்ட இப்போ என் பொண்ணுதான் கஷ்டப்படுறா” என்று ராயனிடம் அங்கலாய்த்தார்.

“அத்தை நம்ம பூங்கொடி என்கிட்ட வந்து மாமா எனக்கு தென்னரசுவை கல்யாணம் பண்ணிவச்சிருங்கனு என் கையை பிடிச்சு கெஞ்சும்போது என்னால என்ன பண்ண முடியும் சொல்லுங்க இவனுங்களுக்கு நாம பயந்து போக கூடாது நம்ம பூங்கொடி அவங்களை சரிபண்ணுவா!  என்னை  அவமானப்படுத்தினா நான் பொறுத்துப்போவேன் அத்தை ஆனா என் பொண்டாட்டியை வேலைக்காரினு பேசினா நான் சும்மா இருக்கமாட்டேன்” என்றான் உச்சக்குரலில்.

மண்டபத்தில் இருந்த பெரியவர்களோ “மாப்பிள்ளையையும் பொண்ணையும் நல்ல நேரம் முடியறதுக்குள்ள வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க” என்றதும் தன்னால்தான் இந்த குடும்பத்திற்கு பிரச்சனை நடந்ததென்று பயந்த விழிகளுடன் நின்றிருந்த முல்லைக்கொடியின் பக்கம் சென்று அவளது கையை பிடித்தான் அழுத்தமாய் அதில் பயப்படாதே என்று சொல்லும் விதம் அடங்கியிருந்தது.

பண்ணையார் ராஜபூபதியோ தன்னால் தான் இந்த குடும்பத்துக்கு இத்தனை அவபெயரும் வந்துவிட்டது என மனம் தோய்ந்து போனார். தெய்வநாயகம் பரம்பரை பணக்கார குடும்பத்தார் ஒரு சிறு கௌரவம் கூட பார்க்காது தன் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை தன் மருமகளாக ஏற்றுக்கொண்ட பரந்த மனப்பான்மை கொண்டவர் முன்னே கூனி குறுகிய ராஜபூபதியோ மருமகனாக ராஜாவை ஏற்றுக்கொண்டு தெய்வநாயகத்திடம் மன்னிப்பு கேட்டார்.

“இப்படித்தான் நடக்கும்னு விதி இருக்கு நம்ம கையில என்ன இருக்கு பூபதி உங்க மருமகனையும் மகளையும் வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க” என்றார் புன்னகை முகத்துடன்.

கோமளமோ கண்ணனை தேடினார் தெய்வநாயகத்தின் காரில் போக பிடிக்கவில்லை அவருக்கு தன் வாய் சும்மா இருக்காது ஏதாவது பேசி வம்பு வளர்க்க விரும்பவில்லை கோமளம்.

“கண்ணா குமரன் கூட இருந்து மண்டபத்தை காலி பண்ணி கொடுத்துட்டு வீட்டுக்கு வந்துடு” என்ற ராயனோ முல்லைக்கொடியின் கைபிடித்து தன் காருக்கு அழைத்துச் சென்றான். ராயன் கைபிடித்து பொம்மை போல காரில் ஏறினாள் முல்லைக்கொடி.

பெரியவர்கள் ஒரு காரில் ஏறிக்கொண்டனர். நதியாவோ ‘என் நண்பி என்னோட அண்ணியா வந்துட்டா ஜாலி தான்’ என்று சந்தோசத்தில் மிதந்தாள்.

வல்லவராயனுக்கும் முல்லைக்கொடிக்கும் ஆரத்தி எடுத்தாள் நதியா.

“அண்ணே பெரிய நோட்டா போடுங்க உங்க தங்கச்சிக்கு இணைச்சீர் எல்லாம் பண்ணாம சிம்பிளா கல்யாணத்தை முடிச்சுட்டீங்க இணைச்சீர் பண்ணியிருந்தா எனக்கு பட்டுப் புடவை கிடைச்சிருக்கும் பத்து பவுனு காசு மாலை வாங்கிகொடுத்திருப்பீங்க இப்போ ஆரத்தி தட்டுகாசு போடுங்கனு நிற்குறேன்” என்றாள் சோகமான முகத்துடன்.

அப்படி போடு இன்னிக்குதான் என் மகள் போல பேசியிருக்க என்று கோமளம் நதியாவை மெச்சிக்கொண்டார்.

“உனக்கு செய்யாம நான் யாருக்கு செய்யப்போறேன்டா எனக்கு இருக்க ஒரே தங்கச்சி நீ” என்று தங்கையின் தலையை வருடிவிட்ட ராயனோ “நீ கேட்டதெல்லாம் நாளைக்கு காலையில வந்துடும்” என்றான் லேசான இதழ்விரிப்புடன்.

“அப்படியே உங்க பாட்டியோட வைர அட்டிகையை சேர்த்து கேளுடி” என்று மகளின் காதில் கிசுகிசுத்தார் கோமளம். 

அவளோ தாய் கூறியது காதில் விழுந்தாலும் கேட்காதது போல அண்ணனுக்கும் தன் உயிர் தோழி முல்லைக்கொடிக்கும் ஆரத்தி சுற்றி மணமக்கள் நெற்றியில் திலகம் வைத்துவிட்டு ஆரத்தியை வெளியே ஊற்ற சென்றுவிட்டாள்.

கோமளோ “அமுதா எனக்கு தலைவலிக்குது சூடா காபி போட்டு கொண்டு வா” என்றார் வழக்கம் போல அதிகார தோரணையோடு.

தையல்நாயகியோ இவங்களை திருத்தவே முடியாது என்று தலையை ஆட்டிக்கொண்டு முல்லைக்கொடியை பூஜையறைக்கு விளக்கேற்ற அழைத்துக்கொண்டுச் சென்றார். 

முதன்முறை பூஜை அறைக்கு வந்திருக்கிறாள். “நம்ம குலம் தழைச்சு நிலைக்கோணும்னு வேண்டிக்கிட்டு விளக்கேத்துமா” என்று தீப் பெட்டியை முல்லைக்கொடியின் கையில் கொடுத்தார்.

அவளுக்கு கைகள் நடுங்கியது. “ராயன் அண்ணா பொண்டாட்டிக்கு இப்படி கை நடுக்கம் வரக்கூடாது” என்று அங்கே வந்து நின்றாள் நதியா.

நதியா தன் பக்கம் வந்ததும் முல்லைக்கொடிக்கு தைரியம் வந்துவிட்டது. முல்லைக்கொடி விளக்கேற்றி சாமி கும்பிடும் நேரம் முல்லைக்கொடியின் பக்கம் வந்து நின்றான் வல்லவராயன். என்னதான் துடுக்குத்தனமான பெண்ணாக இருந்தாலும் கழுத்தில் தாலி ஏறியதும் ஒருவித பயம் அவளை தொற்றிக்கொண்டது. 

இன்னிக்கு நைட் சின்னய்யா அறைக்குள் என்னை தனியா அனுப்பி விடுவாங்களா சின்னய்யா என்னை திட்டுவாரா என்றெல்லாம் அவள் மனதிற்குள் ஆராய்ச்சி மணி அடித்துக்கொண்டே இருந்தது.

பால் பழம் தட்டில் வைத்துக் கொண்டு வந்த நதியாவோ முதலில் பாலை ராயனிடம் கொடுத்தாள். 

பாலை குடித்து விட்டு முல்லைக்கொடியிடம் நீட்டினான். அவளோ அவன் பார்த்த பார்வையில் நடுங்கிவிட்டாள். பாலை வாங்கி குடித்தவள் ‘என்ன இப்படி முறைக்குறாரு நான் சின்னய்யா அறைக்குள்ள போகமாட்டேன் அம்மா கூட போய் படுத்துப்பேன் நாளைக்கு வேற எக்ஸாம் இருக்கு படிக்கணும் சின்னய்யா அறைக்கு போனதும் முதலிரவு நடக்கும்னு சொல்லிட்டா நான் எப்படி எக்ஸாம்க்கு படிக்க முடியும்’ என்று அவளுக்கு குளிர் காய்ச்சல் வந்துவிட்டது போல அஞ்சினாள் சிறு பெண்.

பால் பழம் சாப்பிடும் சம்பிரதாயம் முடிந்து ராயன் அவனது அறைக்குச் சென்றுவிட்டான். கோமளமோ அமுதா போட்டு கொடுத்த காபியை குடித்துக்கொண்டு “ஏய் வேலைக்காரி உன்னோட எல்லை இதுதான் ராயன் சம்பிரதாயங்களுக்கு கட்டுப்பட்டுதான் உன்கூட இவ்ளோ நேரம் இருந்தான்னு நினைக்குறேன் வேதாந்தம் எல்லாம் வீட்டுக்கு வெளியே தான்” என்று நக்கல் சிரிப்பு சிரித்தார்.

“முல்லை உன்னை நான் அண்ணினு கூப்பிடணும் சித்தி சொன்னாங்க” என்றவள் “அண்ணி” என்று கூப்பிட்டு கண்ணைச்சிமிட்டினாள்.

“ஏய் போடி என்னை அண்ணினு கூப்பிடாதே பேரு சொல்லி கூப்பிடு” என்று சிணுங்கினாள் முல்லைக்கொடி.

“அண்ணன் பொண்டாட்டியை முறை வைச்சு தான் கூப்பிடணும் முல்லை” என்றவர் “நதிக்குட்டி முல்லைக்கொடியை உன்னோட அறைக்கு கூட்டிட்டு போய் பேசிக்கிட்டு இரு மதியம் சாப்பாடு ஆனதும் கூப்பிடறேன் சாப்பிட வந்தா போதும்” என்றார் மலர்ந்த புன்னகையுடன்.

முல்லைக்கொடியோ “அம்மா நான் சமையல் பண்ண ஹெல்ப் பண்ணுறேன்” என்று அவள் கட்டியிருந்த பட்டுப் புடவையை இடுப்பில் சொருகி நின்றாள்.

“இன்னிக்கு ஒருநாள் சமையல்கட்டு பக்கம் வரவேண்டாம் நானும் அமுதாவும் சமையலை பார்த்துக்குறோம்டா” என்று மருமகளின் இடுப்பில் சொருகியிருந்த பட்டுப் புடவையை இறக்கிவிட்டு அவளது தலையை தடவிச் சென்றார்.

மதியம் விருந்து சமையல் முடித்த அமுதாவோ அப்பளம் பொரித்துக் கொண்டிருந்த தையல்நாயகியிடம் “அம்மா முல்லைக்கொடிக்கு விபரம் பத்தாது இப்படி நடனு சொல்லிக்கொடுத்தா அப்படியே நடந்துப்பா கொஞ்சம் வாய்துடுக்கு” என்று தயங்கிப்பேசினார்.

“என்ன அமுதா நம்ம முல்லையை நான் இன்னிக்குத் தான் பார்க்குறேனா! இத்தனை நாளாய் அவளை என் பொண்ணு போல பார்த்துக்கிட்டேன் இப்போ மருமகளா பார்த்துப்பேன் நீ கவலைப்படாதே. கோமளம் அக்காகிட்ட மட்டும் அவளை பார்த்து இருக்க சொல்லிடலாம்” என்ற நேரம் “சமையல் ஆகிடுச்சா?” என்று அங்கே வந்து நின்றார் கோமளம்.

“ம்ம் ஆகிடுச்சு அக்கா” என்றார் பவ்யமாய்.

‘ரெண்டு பேரும் குசுகுசுனு பேசிக்கிட்டாங்க நான் வந்ததும் அப்படியே பேச்சை நிறுத்திக்கிட்டாங்களே என்ன பேசியிருப்பாங்க?’ என்று அவர் மூளையை கசக்கினார் கோமளம்.

அமுதாவோ சமைத்த பதார்த்தங்களை டைனிங் டேபிளில் அடுக்கினார்.

ராயன் குளித்து விட்டு போனில் “பாலாஜி  மண்டபம் காலி பண்ணியாச்சா உன் அகௌண்டிற்கு பணம் அனுப்பியிருக்கேன் பார்த்துக்கோ நான் கம்பெனிக்கு” என்று பேச ஆரம்பிக்க “இன்னிக்கு உனக்கு ஃபர்ஸ்ட் நைட்ல கம்பெனிக்கு நீ வரவேண்டாம்டா” என்று சிரித்தவனிடம் 

“பல்லை உடைப்பேன்டா பால்பண்ணைக்கு நீ முதலாளியா நான் முதலாளியா மதியம் சாப்பிட்டு பால்பண்ணைக்கு வந்துடுவேன் நீயும் வீட்ல சாப்பிட்டு கிளம்பலாம் வீட்டுக்கு வா” என்று போனை வைத்திருந்தான்.

“அப்பா இப்பவாவது சாப்பிட கூப்பிட்டானே” என்று தோளைக்குலுக்கிய பாலாஜியோ மண்டப கணக்கை முடித்து விட்டு கண்ணனுடன் வீட்டுக்குச் சென்றான்.

வல்லவராயன் சாப்பிட உட்கார்ந்ததும் முல்லைக்கொடி டைனிங் டேபிளில் உட்கார தயங்கி நின்றாள்.

“உனக்கு வெத்தலை பாக்கு வைச்சு உட்கார சொல்லணுமா ராயன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடு இன்னிக்கு மட்டும்தான் ராயன் கூட நீ உட்கார்ந்து சாப்பிடணும் நாளைக்கு எல்லாம் இந்த வீட்டு ஆம்பிள்ளைங்க சாப்பிட்டு முடித்ததும்தான் சாப்பிடணும்” என்றார் அதிகாரமாக இந்த குடும்பத்து மூத்த மருமகள் என்ற தோரணையோடு.

ராயனோ தயங்கி கையை பிசைந்து நின்ற முல்லைக்கொடியை பார்த்து வந்து உட்காரு என்று கண்ணைக்காட்டினான். அவளோ தடுமாற்றத்துடன்தான் ராயன் பக்கத்தில் உட்கார்ந்தாள் முல்லைக்கொடியால் சாப்பிட முடியவில்லை ஏதோ கடமைக்கு சாப்பிட்டு முடித்து ராயன் சாப்பிட்டு எழும்போது எழுந்து விட்டாள்.

ராயனோ கையை கழுவிவிட்டு அங்கே இருந்த துண்டில் கையை துடைத்துவிட்டுச் சென்றுவிட்டான். அவனுக்கு பின்னே கை கழுவிய முல்லைக்கொடியோ சினிமாவுல எல்லாம் ஹீரோ சாப்பிட்டு முடித்து கையை கழுவி பொண்டாட்டி முந்தானையிலதானே கையை துடைப்பாரு அப்போ என்னை பொண்டாட்டியா ஏத்துக்கலையா சின்னய்யா என்று அதிர்ந்து நின்றுவிட்டாள்.

பாலாஜி சாப்பிட்டு முடித்ததும் ராயன் பால்பண்ணை ஆபிஸிற்கு பாலாஜியுடன்   சென்றுவிட்டான். 

அமுதாவோ அவளது உடைகளை பெட்டியில் வைத்துக் கொண்டு வந்து மகளிடம் கொடுத்தவரை கட்டியணைத்துக்கொண்டு “அம்மா எனக்கு பயமா இருக்கு நான் உன்கூட வந்து படுத்துக்கிட்டுமா?” என்று விசும்பினாள்.

“கூறுகெட்டவளே தாலி கட்டின பிறகு நீ உன் புருசன் அறையிலதான் இருக்கணும்” என்று மகளை அடிக்க கையை ஓங்கியதும் அங்கே வந்த தையல்நாயகியோ “அமுதா முல்லை சின்னப் பொண்ணுனு கொஞ்ச முன்ன நீதானே சொன்ன அவளுக்கு ஒன்னும் தெரியாதுனு இப்போ நீயே அடிக்க கையை ஓங்குற ராயன் அறைக்குள் போக அவளுக்கு பயம் இல்லடா” என்றார் முல்லைக்கொடியை பார்த்து.

“ஆமா அத்தை சின்னய்யா அறைக்குள்ள நான் போகமாட்டேன் எனக்கு பயமாயிருக்கு” என்று எச்சில் விழுங்கினாள் முல்லைக்கொடி.

“என் மகன் பார்க்க முரடனாத் தெரியுறான் நீ பழகிப்பாரு அவன் பாசம் உனக்கு புரியும் கண்ணு வா நான் ராயன் அறைக்கு அழைச்சிட்டு போறேன்” என்று முல்லைக்கொடியை ராயன் அறைக்குள் அழைத்துச் சென்றார்.

முதல் இரவு பற்றி அவள் கூட படிக்கும் பெண்கள் பேசுவதை அரைகுறையாக கேட்டு இருக்கிறாள். 

“மாரியத்தா நீதான் எனக்கு துணையா இருக்கணும் சின்னய்யா என்னை இறுக்கி கட்டிப்பிடிச்சா நான் தாங்குவேனா என்னோட எலும்பு உடைஞ்சிடாதா” என்றெல்லாம் கற்பனை குதிரைகளை ஓடவிட்டிருந்தாள்.

ராயன் இரவு பத்து மணிக்கு மேல் வந்தவன் சாப்பிட்டு அவன் அறைக் கதவை திறந்த உள்ளே சென்றதும் அந்த நேரம் பார்த்து கரண்ட் கட் ஆனதும் “அம்மா” என்று அலறி அடித்துக் கொண்டு எழுந்த முல்லைக்கொடியை தன் அணைப்பில் வைத்துக் கொண்டான் வல்லவராயன். 

2 thoughts on “கடுவன் சூடிய பிச்சிப்பூ”

Leave a Reply to Nakshadhra Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top