ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 21

“என்னை விடுங்கப்பா வாயில்லா ஜீவன்களை அழிக்க பார்த்தவங்களுக்கு தயவு தாட்சண்யம் பார்க்க கூடாது” என்று ருத்ர மூர்த்தியாக நின்றான் ராயன்.

தெய்வநாயகமோ “இப்போ கட்டையை போடு ராயா இவனை போல ஆளுங்களை உன் கையால அடிக்கிறது பாவம். அது உனக்கு வரவேண்டாம் அவன் செய்த பாவத்துக்கு கடவுள் தண்டனை கொடுத்துடுவாரு” என மகனின் கையிலிருந்த கட்டையை பிடுங்கி தூர எறிந்தார்.

ராஜமாணிக்கமோ மகா பாவத்தை செய்து விட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் தெனாவெட்டாக நின்றிருந்தார். தென்னரசுவுக்கு ராஜமாணிக்கம் பண்ணியது தவறென்று புரிந்தாலும் எப்படி என் அப்பாவை என் கண்ணு முன்னே அடிக்க வருவான் ராயன் என்று அவனுக்கு முணுக்கென்று வந்த கோபத்தில் “சேதாரம் ஆனதுக்கு காசு வாங்கிக்கோ ராயா எங்கப்பா மேல கையை வைக்குற வேலை வச்சிக்காதே அப்புறம் நானும் கையை ஓங்க வேண்டி வரும்” என்று தென்னரசுவும் சீறினான்.

தென்னரசுவின் கன்னத்தில் பளாரென இடியாய் அடியை விட்டான் ராயன். கால்கள் தடுமாறி வாசலில் இருந்த தூணை பிடித்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டான் தென்னரசு.

பூங்கொடியோ ‘இவனுங்க மனுசங்களை கொடுமை படுத்தவே தயங்கமாட்டாங்க வாயில்லா ஜீவன்களை கொடுமைபடுத்தவா பாவம் பார்ப்பாங்க நல்லா அடிவாங்கட்டும் என்று கையை கட்டி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் வாயை திறக்கவில்லை அவள்.

“என் வீட்டுக்கு வந்து என் மகனையே அடிக்கிறியாடா என்ன தைரியம்!  என்ன நாயகம் உன் மகனுக்கு நாள் குறிக்கணுமா பார்த்துக்கோ” என்று தலையை ஆட்டி உருமினார் ராஜமாணிக்கம்.

“யாருக்கு நாள் குறிக்குறீங்க இப்பவோ உங்களுக்கு நான் நாள் குறிக்குறேன்” என்று ராஜமாணிக்கத்தை சட்டையை பிடித்து விட்டான் சத்தம் கேட்டு ஊர்க்காரர்கள் கூடிவிட்டனர். ராஜமாணிக்கத்துக்கு பெருத்த அவமானமாய் போனது.

“கையை எடு ராயா” என்றார் பெரும் அதட்டலுடன் ராஜமாணிக்கம். 

தியா இவர்கள் போடும் கூச்சலில் விழித்து வீர்ரென்று அழவும் பூங்கொடி வீட்டுக்குள் இருந்து குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்துவிட்டாள். 

மாட்டுக்கொட்டகைக்கு நெருப்பு வச்சது ராஜமாணிக்கம்தான் என்று வெட்ட வெளிச்சமாக ஊர் மக்களுக்கு தெரிந்து விட்டதும் ராஜமாணிக்கத்தை புழுவை விட கேவலமாக பார்த்தனர். 

“ஏன் ராஜமாணிக்கம் உனக்கு கூறு இருக்கா நம்ம ராயன் தம்பி 1000 குடும்பத்துக்கு வேலை போட்டு கொடுத்துருக்காரு நீ ஒரு சல்லி நயா பைசா ஊர்மக்களுக்கு கொடுத்திருக்கியா. ராயன் தம்பி மேல உனக்கு பகை இருக்கலாம் அதுக்காக தம்பிக்கிட்ட நேருக்கு நேர் மோத பயந்துக்கிட்டு இப்படி கோமாளித்தனமா மாடுகளின் உயிரை பறிக்க பார்த்திருக்க உன் வீட்டுல மகாலட்சுமி எப்படி தங்கும்? ஏன்பா தென்னரசு உங்கப்பனுக்கு நீயாவது புத்திமதி சொல்ல வேண்டாமா நீ இப்படி ஒரு சம்பவத்தை பண்ணுவேன்னு நாங்க எதிர்பாக்கல ராஜமாணிக்கம்” என வருத்தப்பட்டு பேசினார் ஊர்தலைவர் ரங்கசாமி.

இன்னும் கோபக்கனலுடன் நின்ற ராயனின் பக்கம் சென்ற ரங்கசாமியோ “ராயா நீ இவங்களை பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடு சொந்தக்காரர்களுக்குள்ள பகை வேண்டாம்” என்று ஊர்தலைவர் மத்தியசம் பேசினார்.

“இப்போ இவங்களை சும்மா விட்டா நாளைக்கு இன்னும் பெரிய தப்பா பண்ணுவாங்க தலைவரே நான் இவங்களை போலீஸ்ல பிடிச்சு கொடுக்காம விடமாட்டேன்” என்று வெகுண்டெழுந்தான் ராயன். 

தென்னரசுவோ “ராயா என் அப்பா செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்குறேன் அப்பாவை போலீஸ்ல பிடிச்சுக்கொடுக்காதீங்க” என்று தடாலடியாக ராயனின் காலில் விழுந்து விட்டான்.

ராயனோ “என்னால உன் அப்பாவை மன்னிக்க முடியாது தென்னரசு நான் முடிவெடுத்தா முடிவெடுத்ததுதான்” என உச்ச ஸ்தானியில் குரல் வந்தது. 

பிரச்சனை பெரியதானதும் ராயனின் குடும்பத்தில் கோமளம் நதியா தவிர பெரியவர்களோடு முல்லையும் வந்துவிட்டாள். 

தென்னரசுவுக்கு தாய் கொடுக்கும் பாசத்தை கொட்டி வளர்த்தார் ராஜமாணிக்கம். ஊருக்கு வேண்டுமானால் அவர் கொடுமைக்காரனாக இருக்கலாம். ஆனால் மகன் மீது ராஜமாணிக்கம் அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார். ஊர்க்காரர்கள் முன்னே தந்தை தலைகுனிந்த நின்றதை தாங்க முடியாத தென்னரசுவோ “எங்கப்பாவை போலீஸ்ல பிடிச்சு கொடுத்தா பூங்கொடியை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க ராயன் நான் பூங்கொடியை தள்ளி வச்சிடுவேன்” என சற்றும் யோசிக்காமல் பேசிவிட்டான்  பூங்கொடியின் இதயம் சுக்கு நூறாக வெடித்து விட்டது.

அழும் தியாவை முதுகில் போட்டு தட்டிக்கொண்டிருந்த பூங்கொடியோ தென்னரசுவின் முன்னால் போய் நின்றவள் “என் கண்ணைப்பார்த்து சொல்லுங்க என்னை தள்ளி வைக்குறேன்னு” என்றவளின் கண்களில் கண்ணீர் வரவில்லை மாறாக கோபத்தில் சிவந்து விட்டது. தவறு செய்த தந்தைகக்காக காதலித்து தன்னை நம்பி வந்த பெண்ணை தள்ளி வைக்குறேன் என்றதும் அவளுக்கு கணவன் மேல் ஆத்திரம் பெருகியது.

தென்னரசுவோ பூங்கொடியை பார்க்க திராணியற்று புறங்கையை கட்டிக்கொண்டு எங்கோ பார்த்தபடி “ஆமா உன் மாமா என் அப்பாவை போலீஸ்ல பிடிச்சுக்கொடுத்தா நீ உன் அப்பா அம்மா கூட போயிடு” என்றான் மனதை கல்லாக்கிக்கொண்டு. 

தியாவோ “ப்பா” என்று கையை நீட்டி தென்னரசுவை கூப்பிட்டது. தென்னரசுவின் உடல் அதிர்ந்தது தியாவின் மேல் உயிரையே வைத்திருக்கிறான். தந்தைக்காக கையை இறுக்கி வைத்து நின்றிருந்தான். 

ராஜமாணிக்கமோ மார்புக்கு குறுக்கே கையை கட்டி தெனாவெட்டாக நின்றிருந்தார். நீலகண்டனோ மகள் வாழ்க்கை கேள்விக்குறியாக ஆகிவிட்டதே என்று கவலையுடன் நின்றிருந்தார். அழகம்மையோ மகள் தன் சொல் பேச்சு கேட்காமல் காதல் திருமணம் செய்துக் கொண்டாளே அதற்கு தண்டனை அனுபவிக்கிறாள் என்று கோபம் வந்தது அடுத்த நொடியே பெத்த மகள் வாழ்க்கை சூறாவளியாக மாறி விட்டதே என்றும் மகளை ஆற்றாமையோடு பார்த்தார் அழகம்மை.

தையல்நாயகியோ “ராயா நம்ம பூங்கொடிக்காக ராஜமாணிக்கத்தை மன்னிச்சு விட்டிரு” என்று மகனின் கையை பிடித்துக்கொண்டு கெஞ்சினார்.

முல்லைக்கோ இறுகிய முகத்தோடு நின்றிருந்த பூங்கொடியை கண்டு அழுகை வந்தது. ராயன் பக்கம் சென்றவளோ “மச்சான் பூங்கொடி அக்காவுக்காக ராஜமாணிக்கம் ஐயாவை மன்னிச்சு விடுங்க” என்றாள் தயங்கியபடியே ராயன் பார்த்த பார்வையில் தள்ளி நின்றுக் கொண்டாள்.

ராயனோ பூங்கொடியை பார்த்தான் அவள் கண்ணிலிருந்து கண்ணீர் ததும்பி நின்றது. ஒரு நொடி கண்ணைமூடித்திறந்தவன் “இந்த முறை மன்னிச்சு விடறேன் என் மாமன் மகளுக்காக மட்டும்தான்” என்று அழுத்தி கூறிவிட்டு முல்லையை பார்க்க அவளோ காரில் வந்து ஏறிக்கொண்டாள்.

நான்தானே பூங்கொடிக்கு கல்யாணம் செய்து வைத்தேன் அவள் வாழ்க்கை இப்படி பாதியிலேயே இருண்டு போகுமென்று தெரிந்திருந்தால் தென்னரசுவிற்கு கல்யாணம் செய்து வைத்திருக்கமாட்டேனே! பூங்கொடி என்ன முடிவு எடுக்கிறாள் என்று ராயன் மனம் உலைகளன் போல கொதித்துக்கொண்டிருந்தது.

பூங்கொடியோ நீலகண்டன் பக்கம் வந்து நின்றவள் “அப்பா என்னை உங்ககூட அழைச்சிட்டு போவீங்களா?” என்றவளின் குரல் தழுதழுத்து வந்தது.

“ராசாத்தி உனக்காக அப்பா வீட்டு வாசற்கதவு எப்போதும் திறந்திருக்கும்டா இனியும் இந்த வீட்டுல இருக்க வேணாம்” என்று மகளை அணைத்துக்கொண்டார் நீலகண்டன்.

தன்னை விட்டு எங்கே போய்விடுவாளோவென்று அச்சத்தில் அழகம்மையிடமிருந்த தியாவை தூக்கி வைத்துக்கொண்டான் தென்னரசு.

தென்னரசுவின் முன்னால் வந்து நின்ற பூங்கொடி “குழந்தையை கொடு” என்றாள் கோபக்குரலில்.

“கொடுக்கமாட்டேன் என் பிள்ளையை நான் உன்கிட்ட கொடுக்க முடியாது உன்னையும்  என்னை விட்டு போக விடமாட்டேன் என் அப்பாவை போலீஸ்ல பிடிச்சி கொடுப்பேனு சொன்னதால நான் உன்னை தள்ளி வைப்பேன்னு பேசினேன் உன்னை விட்டு என்னால இருக்க முடியாதுடி” என்றான் உறுதியான குரலில்.

“நீ வேணும்னா உன் கூட வாழறதுக்கும் நீ வேணாம்னா உன்னை விட்டு நான் போயிடணுமா நான் என்ன பொம்மையாடா  ஒழுங்கு மரியாதையா என் பிள்ளையை கொடுத்திடு நாளைக்கே என்னை வச்சு உங்கப்பனை காப்பாத்தினது போல என் பிள்ளையை பகடை காயா வச்சு உங்கப்பனை காப்பாத்துற நிலை வந்துச்சுனா என் பிள்ளையை நீ கொன்னாலும் கொன்னுடுவ” என்று அவன் மீது அமில வார்த்தையை அள்ளி வீசியவள் வெடுக்கென தியாவை பிடுங்க குழந்தையோ தந்தைக்கும் தாய்க்கும் இடையில் மாட்டிக்கொண்டு வீல் வீலென்று அழுதது.

பெரியவர்கள் புருசன் பொண்டாட்டிக்கு நடுவே போக தயங்கிக் கொண்டு நின்றிருந்தார்கள். 

ராயனால் குழந்தை அழுவதை பார்க்க முடியவில்லை. தென்னரசுவிடமிருந்து குழந்தையை வாங்கி தோளில் போட்டு தட்டி கொடுத்தவன் “என் அத்தைப் பொண்ணு கண்ணுல தண்ணி வந்துச்சுனா நான் சும்மா இருக்கமாட்டேன்னு சொன்னேன்ல நீ என்னடா காரியம் பண்ணிட்டு இருக்க உன்னை நம்பி வந்தவளை வீட்டை விட்டு எப்படி நீ போகச் சொல்லலாம். பொண்டாட்டியை வெளியே போனு சொல்லுற அளவு என் அத்தை பொண்ணு என்ன தப்பு பண்ணினா. அப்படியே தப்பு பண்ணியிருந்தாலும் அவளை வீட்டுக்குள்ள வச்சு கண்டிப்பு பண்ணனுமே தவிர இப்படி அப்பன் செய்த தப்புக்கு பொண்டாட்டியை ஊரு நடுவுல நிறுத்தி நீ காரியம் சாதிக்க பார்க்குற உன்னை நம்பி என் அத்தை பொண்ணை விட முடியாது! பூங்கொடியே உன்கூட இருக்கமாட்டேன்னு சொன்ன பிறகு பூங்கொடியை இங்க விட்டு போவேன்னு நினைக்காதே கையை விடுடா” என அதட்டல் போட்டான். 

“மாமா பூங்கொடியை அழைச்சிட்டு வாங்க” என்றவனோ குழந்தையுடன் காருக்குள் ஏறியதும் தியாவை முல்லையிடம் கொடுத்தான் ராயன்.

குழந்தையும் அழுது அழுது சோர்வில் உறங்கிவிட்டது. ராயன் காரில் பூங்கொடியும் அழகம்மையும் தையல்நாயகியும் ஏறிக்கொண்டனர். நீலகண்டனும் தெய்வநாயகமும் தென்னரசுவை முறைத்துவிட்டு காரில் ஏறினார்கள்.

ஊர் தலைவரோ “ராஜமாணிக்கம் உன்னோட கெட்ட புத்தியால உன் மகன் வாழ்க்கையே பாழ் பண்ணிட்டியே நீ ராயன் காலுல விழுந்தாலும் உன்னை வீட்டுக்குள்ள கூட விடமாட்டான் என்ன மனுசனோ போ” என்று சலித்துக் கொண்டு ஊர் தலைவரும் ஊர் மக்களும் கலைந்துச் சென்றனர்.

அழகம்மையின் தோளில் சாய்ந்து அழுதுக் கொண்டே வந்தாள் பூங்கொடி. “நான் அப்பவே தென்னரசுவை கல்யாணம் பண்ணிக்க வேணாம்னு தலைபாடா அடிச்சுக்கிட்டேன் இப்போ அழுது என்ன பிரயோஜனம் பெரியவங்க சொல்றதை காது கொடுத்து கேட்கணும்” என்றார் மகள் வாழ்க்கையை வீணடித்து விட்டாளே என்ற விரக்தியில் பூங்கொடியை வசைபாடினார்.

தையல்நாயகியோ “பிள்ளையை பேசாதே அவளே மனசு ஒடிஞ்சு போய் இருக்கா நீ சும்மா இரு அழகு” என்று அழகம்மையை அதட்டினார்.

பூங்கொடிக்கு தென்னரசு தன்னை வேண்டாம் என்று கூறிய வார்த்தையே ஒலித்துக்கொண்டிருந்தது. ‘எப்படிடா என்னை நீ வேண்டாம்னு சொன்ன! உன்னை விட்டு எப்பவும் பிரியமாட்டேன்டினு சத்தியம் செய்துதானே என் கழுத்துல தாலி கட்டின! உன் அப்பன் கேடுகெட்டவன்னு தெரிஞ்சும் என்னை அவனுக்காக வேணாம்னு சொல்லிட்டியேடா உன் முகத்தல கூட முழிக்க மாட்டேன் எனக்கு என் பிள்ளை மட்டும்  போதும்’ என்று மனதிற்குள் புழுங்கினாள் பூங்கொடி.

வீட்டிற்கு வந்ததும் தியா பாலுக்கு அழவும் குழந்தையை தூக்கிக்கொண்டு பூங்கொடி தன் அறைக்குச் சென்றுவிட்டாள் இரவு மட்டும் தியாவுக்கு இன்னும் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

“கொடி நான் வரும் வரை பூங்கொடி கூடவே இரு. மாட்டுப்பண்ணை வரை போய்ட்டு வந்துடறேன்” என்றவனோ தையல்நாயகியிடம் பார்த்துக்க சொல்லி கண்ணை காட்டி விட்டு காரை எடுத்திருந்தான்.

கோமளோ “நான் மட்டும் தென்னரசு வீட்டுக்கு வந்திருந்தேனா அவனை நறுக்குனு நாக்கை பிடுங்கிறது போல நாலு கேள்வி கேட்டுட்டு வந்திருப்பேன் அந்த வீணா போன ராஜமாணிக்கத்துக்கு என்ன கொழுப்பு இருந்தா மாட்டுகொட்டகைக்கு நெருப்பு வச்சிருப்பான் அவனை ராயன் மன்னிச்சு விட்டிருக்க கூடாது. அந்த தென்னரசு இந்த வீட்டு பக்கம் காலை எடுத்து வைக்கட்டும் காலை உடைச்சு அடுப்புல போடுறேன்” என்று அவர் பங்குக்கு ராஜமாணிக்கத்தையும் தென்னரசுவையும் கரித்துக்கொட்டினார்.

நதியாவுக்கு தென்னரசு பூங்கொடியை தள்ளி வைத்துவிடுவேன் என்று கூறியதை அவளால் நம்பமுடியவில்லை இருவரின் காதலுக்கு தூது போய் இருக்கிறாளே தென்னரசு பூங்கொடி மேல் பைத்தியமாய் சுற்றியதை நேரில் பார்த்தவளுக்கு இப்போது பூங்கொடியை வேண்டாம் என்று தென்னரசு கூறியதை அவளால் நம்ப முடியவில்லை. இரவு பெண்கள் அனைவரும் பூங்கொடியுடனே தங்கிக்கொண்டனர்.

ராயன் நெருப்புக்கு இரையாகிய  மாட்டுக்கொட்டகைகளை சுத்தம் செய்வதை கண்காணித்துக்கொண்டிருந்தான். 

பாலாஜியோ “ராயா நீ கொஞ்சம் நேரம் தூங்குடா நான் பார்த்துக்குறேன்” என அவனது தோளை தொட்டான்.

“எனக்கு எப்படிடா தூக்கம் வரும் என்னோட குலதெய்வங்கள் இந்த மாடுகள் அதுகளுக்கு ஆபத்து வந்திருக்கும்போது எனக்கு தூக்கமே வராது நீ தூங்குடா” என்று படுத்திருக்கும் மாடுகளை பார்த்து பெரும்மூச்சு விட்டான்.

மூக்காயி டீ போட்டுக் கொண்டு வந்தவர் ராயனுக்கும் பாலாஜிக்கும் கொடுத்தார். இருவரும் விடிய விடிய தூங்கவில்லை. இந்த முறை கூரை வேய வேண்டாமென்று ஆஸ்பெட்டாஸ் ஷீட் போட முடிவெடுத்து இரவோடு இரவாக மெட்டீரியல்ஸ் வந்துவிட்டது. சுத்தம் செய்து முடித்து வேலைகளை துவங்கினார்கள் ஆட்கள். அன்று முழுவதும் மாட்டுப் பண்ணையில் இருந்துவிட்டான் இடையில் முல்லைக்கு போன் செய்து “பூங்கொடியை பார்த்துக்கோங்க” என்று கூறி போனை வைக்கும் முன் “மச்சான் நீ… நீங்க சாப்பிட்டீங்களா?” என்ற மனைவியின் அக்கறை குரலில் “நான் சாப்பிட்டேன்டி நீ சாப்பிட்டியா?” என்று அவன் குரல் கரகரப்புடன்  வந்தது.

“மச்சான் எனக்கு உங்களை பார்க்கணும் போல இருக்கு எப்ப வருவீங்க! உங்க கையில நெருப்பு காயம் பார்த்தேனே மருந்து ஏதும் போட்டீங்களா?” என்றாள் அக்கறையோடு. 

“மருந்து போட்டிருக்கேன் கொடி மாட்டுப் பண்ணையில வேலை முடிச்சதும் நைட் வந்துடறேன். நீ பதட்டப்படற அளவுக்கு காயம் பெருசு இல்ல என் மனசு தான் சரி இல்லடி” என்றான் வருத்தம் தோய்ந்த குரலில். 

“மாடுகளுக்கு ஏதும் ஆகலதானே மச்சான் நீங்க ஃபீல் பண்ணாதீங்க” என்றாள் கணவன்உள்ளம் வருத்தப்படுகிறதே என்ற கவலையில். பெரியவர்கள் பக்கம் இருக்க அவளால் அவனிடம் அதிகம் பேசமுடியவில்லை.

பூங்கொடி அழுகையை நிறுத்தியிருந்தாள். பலமுறை பூங்கொடிக்கு போன் போட்டுவிட்டான் தென்னரசு. “சாரிடி என்னை மன்னிச்சுடு” என்று பல முறை மெசேஜ் தட்டினான். அவனின் எண்ணை ப்ளாக் பண்ண போனவளின் கை நடுங்கியது போனை தூக்கி மெத்தையில் விசிறினாள் போனில் ஸ்கிரின் சேவரில் தென்னரசுவின் படத்தைதான் வைத்திருந்தாள் பூங்கொடி.

முல்லையின் மடியில் விளையாடிக்கொண்டிருந்த தியாவோ பூங்கொடி விசிறிய போனை எடுத்து ஸ்கீரினில் இருந்த தென்னரசுவின் போட்டோவை கண்டு “ப்பா… ப்பா” என்று போனில் இருந்த தென்னரசுவுக்கு முத்தம் கொடுத்தது. ஊமையாக அழுதாள் பூங்கொடி.

நள்ளிரவு வீட்டுக்கு வந்த ராயன் கதவை தட்டியதும் தன்னவன் வருவான் என்று தூங்காமல் விழித்திருந்த முல்லையோ “மச்சான் வந்துட்டாரு போல” என்று ஓடிச்சென்று கதவை திறந்தாள்.

தலைமுடியெல்லாம் களைந்து கஞ்சி போட்ட தும்பை போல வெள்ளை சட்டை போட்டிருப்பவன் இன்று கசங்கிய சட்டையுடன் வந்து நின்ற கோலம் கண்டு வருத்தம்கொண்டவள் “மச்சான்” என்று அவனை அணைத்துக்கொண்டாள். அவள் அணைப்பிலேயே அவளின் தேடலை புரிந்துக் கொண்டவன் அவளின் தலையை வருடிக்கொடுத்து நெற்றியில் முத்தம் கொடுத்தவன் “பசிக்குடி” என்றான் சோர்வான குரலில். 

“அச்சோ வீட்டுக்கு வந்தவங்களை சாப்பிட்டீங்களானு கேட்காம இருக்கேனே” என்று தன்னை திட்டிக் கொண்டவள் ராயனின் கையை பிடித்து பார்த்தாள் கையில் வட்டமாய் நெருப்பு காயத்தை கண்டு கண்ணீர் விட்டாள் முல்லைக்கொடி.

“ஏய் புள்ள சின்ன காயம் தான் எதுக்கு அழற மருந்து போட்டு இருக்கேன் நாலு நாளுல காயம் தன்னை போல ஆறிடும்” என்று மனைவியின் கண்ணீரை துடைத்து விட்டு பூங்கொடியின் அறையை பார்த்தான்.

“இப்போ அழுவதை நிறுத்திட்டாங்க என்ன பேசினாலும் பதில் மட்டும் பேசுறாங்க. பூங்கொடி அக்காவை கட்டாயப்படுத்தி நானும் அழகு அம்மாவும் சாப்பிடவைத்தோம்” என்றாள் வருத்தமாக.

“சரி பண்ணுறேன் கொடி ராஜமாணிக்கத்தோட மிருக குணம் தென்னரசுவுக்கு தெரியும் போது அவனே அவன் அப்பாவுக்கு தண்டனை கொடுப்பான் அதுவரை பூங்கொடி தென்னரசுவை பிரிந்து இருக்கட்டும். ரெண்டு பேருக்கும் இந்த பிரிவு ஒரு புரிதலை கொடுக்கும்” என்றான் பெருமூச்சு விட்டு. 

“நீங்க குளிச்சுட்டு வாங்க மச்சான் நான் தோசை வார்த்து வைக்குறேன்” என்றதும் ராயனும் குளித்து வந்தவன் நாள் முழுக்க சரியாக சாப்பிடாமல் இருந்தவனுக்கு பசியாக இருக்க ஐந்து தோசையை சாப்பிட்டு எழுந்தவன் “நீ பூங்கொடி அறையில இரு”  என்றவனுக்கு கப்போர்டில் இருந்த நெருப்பு காயத்துக்கான மருந்தை போட்டு விட்டு காயத்தின் மேல் வாயை குவித்து ஊதினாள். 

“சின்ன காயம் தான் டி” என்றான் இதழ் விரிப்பு சிரிப்புடன்.

கணவனின் முகத்தில் புன்னகையை கண்டதும் தான் முல்லையின் மனது சந்தோசப்பட்டது.

“மச்சான் என்னை மாட்டுப்பண்ணைக்கு அழைச்சுட்டு போறீங்களா! எனக்கு மாடுகளை பார்க்கணும் போல இருக்கு. மாடுகளுக்கு நெருப்பு காயம் பலமா எதுவும் படலையே?” என்றாள் கண்ணைவிரித்து பரிதவிப்போடு. 

“எல்லாரும் சேர்ந்து மாடுகளை காப்பாத்திட்டோம் டி இந்த வாரம் சனிக்கிழமை கூட்டிட்டு போறேன் உன் கண்ணு தூக்கத்துக்கு ஏங்குது போடி” என்று மனைவியின் கையை பிடித்து பூங்கொடியின் அறை வரை விட்டு அவன் அறைக்குச் சென்றவன் நாள் முழுக்க தூக்கத்தை தொலைத்திருந்தவனை நித்ராதேவி ஆட்கொண்டாள். 

அடுத்து நிறைய ட்விஸ்ட் இருக்கு பிரண்ட்ஸ். 

2 thoughts on “கடுவன் சூடிய பிச்சிப்பூ”

Leave a Reply to P. Vigneshwari Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top