ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 25

நதியா பாலாஜியுடன் போவதை கண்டு மனம் ஆற்றாமையுடன் “ஏன் நதிப்பாப்பா என்கிட்டயாவது உன் காதலை சொல்லியிருக்கலாம்ல நான் அண்ணா காதுக்கு கொண்டு போய் இருப்பேனே! இப்ப நம்ம குடும்பத்தை தலைகுனிஞ்சு நிற்க வச்சிட்டியே” என்று தங்கை மேல் கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் அவள் இரண்டு அண்ணன்கள் இருந்தும் இப்படி நிராதவராய் பாலாஜியுடன் போகும் நதியாவை கண்டு பெரும்மூச்சு விட்டான் கண்ணன்.

ராயன் இத்தனை நேரம் ஆவேசத்துடன் நடந்துக் கொண்ட விதமும் நதியாவுக்கு பாலாஜியை கல்யாணம் பண்ணி வைத்ததையும் கண்ட தீபாவோ “கூட பொறந்த அண்ணனை ஒரு வார்த்தை கூட கேட்காமல் உங்க ராயன் அண்ணா எப்படி கண்ணா நதியாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் உங்களுக்கு இந்த வீட்டுல மதிப்பு அவ்வளவுதானா?” என்றாள் முறைப்புடன். 

“எங்க வீட்டோட ஆணிவேர் ராயன் அண்ணாதான் அவரை மீறி நான் எந்த முடிவும் எடுக்கமாட்டேன்! அப்படி எடுத்தாலும் அண்ணாவை டிஸ்கஸ் பண்ணாம அந்த விசயத்தை பண்ணமாட்டேன். நதியா அம்மாவுக்கு பயந்துக்கிட்டு எங்க யார்கிட்டயும் அவ காதலை சொல்லாம மறைச்சுட்டா ! அவ பாலாஜியை லவ் பண்ணியதுக்காக அண்ணா நதி பாப்பா கூட பேசாம இல்ல. நதியா அவ காதலை அண்ணாகிட்ட மறைச்சு இப்போ நம்ம குடும்ப கௌரவம் கெடும்படி நடந்ததால அண்ணாவுக்கு கோபம் அதான் அவகிட்ட பேசாம இருக்காரு தீபா! எங்க தங்கச்சியை எங்கேடோ போகட்டும்னு விடமாட்டோம். பாலாஜி அண்ணா நல்ல கேரக்டர் அவர் நதியாவை நல்லபடியா பார்த்துப்பாருனு நம்பிக்கை இருக்குடி! நீதான் கிராமத்து வாழ்க்கை எனக்கு பிடிக்கும்னு சொன்ன இங்க இருந்து பாரு” என்றான் சிறிய இதழ் விரிப்புடன்.

“நீங்க வேணா உங்க அண்ணாவுக்கு கட்டுப்பட்டு நடக்கலாம். நான் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லையே என்கிட்ட உங்க ராயன் அண்ணா ரூல்ஸ் எதுவும் போடக்கூடாது அப்புறம் நான் யாருனு காட்ட வேண்டியிருக்கும்” என்றாள் வெடுப்பாக.

“எங்கண்ணாவுக்கு யார்கிட்ட எப்படி பேசணும்னு தெரியும்டி! அவரை நீ எதிர்த்து பேசற அளவு வச்சிக்கமாட்டாரு சின்னபுள்ளத்தனமா! அண்ட் எங்கண்ணாகிட்ட மரியாதை குறைவா பேசக்கூடாது இந்த நிமிசம் உனக்கு நான் ரூல்ஸ் போடுறேன்” என்றான் அவளது கண்களை பார்த்தவாறே அழுத்தமாக. 

அவளோ “நீ இப்படி எல்லாம் பேசுவியா கண்ணா! கல்யாணத்துக்கு முன்னே இப்படியெல்லாம் என்கிட்ட பேசலையே டா” என்றாள் ஆயாசமாக. 

“அது கல்யாணத்துக்கு முன்னே இப்போ கல்யாணத்துக்கு பின்னேடி ஜில்லு” என்றான் ஒற்றைக்கண்ணைச் சிமிட்டி.

“என்னடா இப்படியெல்லாம் பேசி என்னை பயமுறுத்துற?” என்றாள் கண்ணைஉருட்டி.

“நீயும் உன் அப்பாவும் எங்க வீட்டு சொத்தை ஆட்டைய போடலாம்னு எங்க வீட்டுப் பொண்ணு நதியாவை கல்யாணம் பண்ணலாம்னு நினைச்சீங்க ஆனா இப்போ நதியாவுக்கு பாலாஜி கூட கல்யாணம் ஆனதும் என்னை மிரட்டிப்பார்க்குறியா உன்னை விரும்பித்தான் கல்யாணம் பண்ணியிருக்கேன்டி அதுக்காக உன்னோட தாளத்துக்கு நான் ஆட மாட்டேன் பார்த்துக்கோ” என்றான் கண்டிப்போடு.

“நானும் அப்பாவும் பேசியது உனக்கு எப்படித்தெரியும்?” என்றாள் எங்கப்பன் குதிருக்குள்ளே என்றவிதமாக.

“அப்போ உங்கப்பா ப்ளான் பண்ணித்தான் உன்னையும் எனக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்துருக்காராடி?” என்றான் கோபம் கொண்டு அவளை முறைத்தபடியே.  

“இப்போ நாம எதுவும் பேச வேணாம் கண்ணா தனியா இருக்கும் போது நான் உனக்கு எல்லாம் சொல்லுறேன் எனக்கு டயர்டா இருக்கு” என்று கண்ணைச்சுழட்டினாள்.

“ஏய் நான் கிராமத்தான்னு என்னை ஏமாத்துலாம்னு பார்க்குறியா அப்படி நினைச்சா உனக்குதான் டேன்ஜர்” என்று நக்கலாக சிரித்தான்.

பரமசிவம் நதியாவை தன் வீட்டு மருமகளாக்கி ராயன் வீட்டு பணத்தை ஆட்டையை போடலாம் என்ற திட்டம் பாழ் ஆகிவிட்டதே என்று கோபத்தில் இருந்தாலும் இப்போது ராயனிடம் சண்டைக்குச் சென்றால் மகள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமே என்று தன் குமுறலை மனதிற்குள் போட்டு அடைத்துக்கொண்டு கையை கட்டிக்கொண்டு அமைதியாக நின்றார்.

பிரனேஷோ ‘அப்பாடா இந்த கிராமத்து ரௌடிகிட்டயிருந்து தப்பிச்சிட்டோம் எங்கிருந்தாலும் வாழ்க’ என்று பாட்டு பாடினான்.

பரமசிவம் முன்னால் வந்த ராயனோ “என்னை மன்னிச்சிடுங்க மாமா எங்க வீட்டுப்பொண்ணு” என்று அவன் பேசமுடியாமல் தயங்கவும் “இன்னார்க்கு இன்னார்னு எழுதியிருக்கு அதன் படிதான் கல்யாணம் நடக்கும் மாப்பிள்ளை நான் எதுவும் நினைக்கல கொஞ்சம் வருத்தம் தான் இல்லைனு சொல்லல பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தோம்னா உறவு இன்னும் பலமாக இருக்கும்னு நினைச்சேன் எல்லாம் நல்லதுக்குத்தான் விடுங்க” என்று தன் மனத்தாங்கலை மறைத்துவிட்டார்.

“எங்களை புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றிங்க மாமா” என்று கையெடுத்து கும்பிட்டான்.

கண்ணனுக்கு ராயன் பரமசிவத்திடம் கையெடுத்து மன்னிப்பு கேட்டது குறையாக பட்டது.

“அண்ணா நாம என்ன நிச்சயம் பண்ணிட்டோமா என்ன சும்மா கல்யாணம் பேச்சு வார்த்தைதானே எதுக்கு மன்னிப்பு கேட்கணும்?” என்றதும்

“இல்லடா நாம வாக்கு கொடுத்து அது நடக்கலைங்கற போது நாம மன்னிப்பு கேட்கணும் அதுதான் முறை கண்ணா நம்ம வீட்டுக்கு கிளம்புங்க நான் மண்டபத்து வேலையை முடிச்சிட்டு வரேன்” என்று தம்பியிடம் மன இறுக்கத்தை கைவிட்டு பேசினான்.

முல்லையோ ராயனை பார்த்துக்கொண்டேயிருந்தாள் தன்னை பார்த்துவிடமாட்டானா என்று ஏக்கத்துடன்.

ராயனோ முல்லையை பார்க்கவே இல்லை சோர்ந்து போய்விட்டாள். மயக்கமாக வரவும் நீலகண்டனோ பக்கத்தில் இருந்த அமுதாவிடம் “புள்ளைக்கு ஜுஸ் எடுத்து வா” என்றதும் 

அமுதாவோ “நீங்க கிளம்புங்க நான் என் மகளை பார்த்துக்குறேன்” என்றார் தயக்கத்துடன்.

அழகம்மையோ “நாங்க எப்படி கிளம்ப முடியும் அமுதா? ராயன் முல்லை மேல கோபமா இருக்கான் அவன் பக்கம் முல்லையை விட்டு போனா அவ்ளோதான் புள்ளையை முறைச்சே ஒருவழி பண்ணிடுவான் ஜுஸை குடிக்கவச்சு நாம அழைச்சிட்டு போயிடலாம்” என்றார் படப்படப்பாக.

அமுதாவோ “அக்கா நாம முல்லையை மண்டபத்துல விட்டுட்டு போனா ராயன் தம்பி முல்லையை பார்த்துக்குவாரு ரெண்டு பேரும் தனிமையில பேசிக்கிட்டா சரியாகிபோயிடும் அதுவுமில்லாம இன்னிக்கு கர்ப்பத்தை உறுதி படுத்திட்டு வரதுக்கு ராயன் தம்பி முல்லையை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போவாருல” என்றார் ராயனின் மனம் அறியாமல்.

நீலகண்டனோ “ராயனை பத்தி தெரிஞ்சும் முல்லையை இங்க விட்டு போகமுடியாது. அவன் கோபம் இப்போதைக்கு தெளியாது நாம புள்ளையை வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டு சாய்ந்தரம் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ட்டு வந்துரலாம்” என்றார் ஆதங்கத்துடனே.

முல்லையோ “நா.நான் மச்சான் இல்லாம ஹாஸ்பிட்டல் வரமாட்டேன்ப்பா” என்றாள் கண்ணீருடன்.

“மாசமா இருக்கற பொண்ணு அழக்கூடாது” என்றார் அழகம்மை கண்டிப்புடன்.

மண்டபத்தின் கணக்கு பார்த்து வேலை பார்த்தவர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த ராயனை பார்த்த முல்லையோ “அப்பா நான் மச்சான்கூடதான் வருவேன் நீங்களெல்லாம் கிளம்புங்க” என்றாள் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே.

“நீ என்ன நினைச்சிட்டிருக்க முல்லை அப்பா சொல்றதை கேட்கமாட்டியா? என் மருமகனை பத்தி உனக்கு தெரியாது நானும் கிளிப்பிள்ளைக்கு சொல்றது போல சொல்லுறேன் நீ பிடிவாதமா இருக்க. இந்த வீட்டோட வாரிசை சுமந்துக்கிட்டு இருக்க இப்படி அழுதுக்கிட்டேயிருந்தா வயித்துல இருக்க கருவுக்குத்தான் கஷ்டம் பார்த்துக்கோ” என்று நீலகண்டன் அதட்டவும்

“நா.நான் அழுகலைங்கப்பா ஆனா நான் மச்சானை விட்டு வரமாட்டேன்” என்று விசும்பியவளை என்ன பண்ணுவது என்று தெரியாமல் விழித்தனர் பெரியவர்கள்.

ராயனோ மண்டபத்தின் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாலும் மனைவியின் ஆர்ப்பாட்டத்தை கவனிக்காமல் இல்லை. மாசமா இருக்க பொண்ணை அழவைக்குறோம் என்று அவனுக்கு குற்றஉணர்ச்சியாக இருக்கவும் நீலகண்டனுக்கு போன் போட்டான்.

“மாப்பிள்ளை முல்லை உன்கூடத்தான் வீட்டுக்கு வருவேன்னு ஒரே அழுகை எங்களால ஒண்ணும் பண்ண முடியலை ராயா, நீ வந்து கொஞ்சம் பேசுப்பா மாசமா இருக்க பொண்ணை கஷ்டப்படுத்தாதே” என்று மருமகனிடம் வருத்தப்பட்டு கூறவும் 

“போனை அவகிட்ட கொடுங்க மாமா” என்றான்  வேகமான குரலில்.

“இந்தா கண்ணு ராயன் பேசுறான்” என்றதும் போனை வாங்கிக்கொண்டு சற்று தள்ளிச் சென்று “ம.மச்சான் நான்…” முல்லைக்கு பேச்சு வரவில்லை வாய் குழறியது. 

“பண்ணறது எல்லாம் பண்ணிட்டு இப்போ அழுது என்ன நாடகம் போடலாம்னு இருக்கியா? ஒழுங்கா வீட்டுக்கு போற வழியை பாரு உன்னை பார்க்க பார்க்க எனக்கு ஆத்திரமா வருது என் கண்ணு முன்னாடி நிற்காதே அடிச்சாலும் அடிச்சுடுவேன் என் முன்னாடி நிற்காதே” என்று எரிந்து விழுந்தான்.

அவன் முதன் முறை இப்படி பிடிக்காத தன்மையுடன் பேசியதும் 

“நா.நான் போயிடறேன் மச்சான் நீங்க கோபப்படாதீங்க அ.அதுக்கு முன்ன நான் சொல்றதை காதுகொடுத்து கேளுங்களேன்” என்றாள் கெஞ்சுதலாக.

“நீ என்கிட்ட பேசியதெல்லாம் போதும் இங்க இருந்து என்னை டென்ஷன் பண்ணாம கிளம்புடி” என்றான் பல்லைக்கடித்துக்கொண்டு.

“மச்சான் நா.” என்று விசும்பவும் போனை அணைத்துவிட்டான்.

இதழ்பிதுக்கி நின்றவளை ஒருமுறை பார்த்துவிட்டு முகத்தை வெடுக்கென திரும்பிக்கொண்டான்.

வேறுவழியில்லாமல் நீலகண்டனுடன் வீட்டுக்கு கிளம்பினாள் முல்லை. 

கல்யாண வீடு களையிழந்து இருந்தது ஆரத்தி எடுக்க வேண்டியவள்தான் காதலித்தவன் பின்னே சென்றுவிட்டாளே! 

“அக்கா பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் நம்ம நாச்சி பொண்ணை ஆரத்தி எடுக்க சொல்லட்டுமா?” என்றார் தயங்கியபடியே தையல்நாயகி.

“யாரும் என் மகனுக்கு ஆரத்தி எடுக்க வேணாம் நானே என் மகனுக்கும் மருமகளுக்கும் ஆரத்தி எடுக்குறேன் ஆரத்தியை கரைச்சுட்டு வா நாயகி” என்றார் அதிகாரமாக.

தையல்நாயகியோ பெரும்மூச்சு விட்டு ஆரத்தியை கரைத்து எடுத்து வந்தவர் கோமளத்தின் கையில் கொடுத்தார். 

கண்ணனும் தீபாவும் சேர்ந்து நிற்க “இந்த வீட்டோட புகழை நீதான் கட்டி காப்பாத்தணும் மருமகளே” என்றவரோ இருவருக்கும் ஆரத்தியை சுற்றி இருவருக்கும் திலகம் வைத்து தையல்நாயகியிடம் ஆரத்திதட்டை கொடுத்தார். அவரும் ஆரத்தியை வெளியே ஊற்றி விட்டு வீட்டுக்குள் வந்தவர் தீபாவை விளக்கேற்ற பூஜையறைக்கு அழைத்துச் சென்றார்.

கண்ணனுக்கு நதியா இப்போது இங்கே  இருந்து தங்களுக்கு ஆரத்தி எடுக்க வில்லையே என்றும் தங்கை இருந்திருந்தால் இந்த வீட்டில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காதே என்று அவன் மனம் சுணங்கியது. 

தீபாவுக்கு கடுகடுவென முகத்தை வைத்திருக்கும் கோமளத்தை கண்டு “இந்த குண்டம்மா ரொம்ப வாய் பேசுது அடக்கி வைக்குறேன் பாரு” என்று முகத்தை சுளித்தவள் சாந்த முகத்துடன் தீப்பெட்டியை கையில் கொடுத்து விளக்கேத்துமா என்ற தையல்நாயகியை பார்த்ததும் பிடித்து விட்டது புன்னகையுடன் தீபெட்டியை வாங்கி விளக்கேற்றினாள்.

மணமக்களுக்கு பால் பழம் சம்பிரதாயம் முடிந்ததும் “கண்ணா எனக்கு இந்த சேலையோட இருக்க கசகசனு இருக்கு உன் ரூம் எங்க இருக்கு?” என்று மேலே மாடியை சுற்றிப்பார்த்தாள்.

“இப்ப என்னோட ரூமுக்கு அனுப்பி வைக்கமாட்டாங்கடி கொஞ்சம் நேரம் அம்மா ரூம்ல இரு நைட்தான் உன்னை என்னோட ரூமுக்கு அனுப்பி வைப்பாங்க அஜஸ்ட் பண்ணிக்கோடி” என்றான் மெதுவான குரலில்.

“எந்த காலத்துல இருக்கீங்க கண்ணா இதெல்லாம் சில்லியா தெரியலையா?” என்றாள் கண்களை சுழட்டிக்கொண்டு.

கோமளமோ “தீபா என்னோட ரூம்ல போய் குளிச்சிட்டு ரெடியாகு உன் புருசன் கிட்ட அப்புறம் பேசலாம்”  என்றார் வெடுப்பாக.

தீபாவுக்கோ புசுபுசுவென கோபம் வந்துவிட்டது. கண்ணன் அவளது கையை பிடித்து “அமைதியா இருடி” என்று கண்ணை காட்டினான்.

அவளோ “இந்த முறை உங்கம்மாவை எதிர்த்து பேசாம போறேன் அடுத்த முறை நானும் பேசுவேன்” என்றவளோ கோமளத்தை ஓரக்கண்ணால் பார்த்து முறைத்துச் சென்றாள்.

கோமளத்திற்கு நதியா தன்னை ஏமாற்றி பாலாஜியுடன் சென்றது கவலையாக இருந்தாலும் மகளின் காதலை பற்றி தன்னிடம் முல்லை ஒரு வார்த்தை கூறியிருந்தால் மகளை அடைகாக்கும் கோழியாக காத்து வைத்திருப்பேனே வேலைக்கார சிறுக்கி வரட்டும் வீட்டை விட்டு துரத்தி விடறேன் பாரு என்று வாசலில் நாற்காலியை போட்டு அமர்ந்திருந்தார்.

நீலகண்டன் காரில் வந்திறங்கிய முல்லை அழுதுக் கொண்டே வீட்டுக்குள் போக முற்பட்டவளை “ஏய் நில்லுடி” என்ற பெரும் அதட்டலில் முல்லையின் கால்கள் அப்படியே நின்று விட்டன.

எங்கே முல்லையை கோமளம் அடித்துவிடுவாரோ என்று அச்சம் கொண்டு நீலகண்டன் மகளுக்கு பாதுகாப்பாக நின்றுக் கொண்டார். அழகம்மையும் முல்லையின் பக்கம் நிற்கவும் “என்ன ரெண்டு பேரும் இவளை பெத்து வளர்த்தவங்க போல இவளுக்கு பாதுகாப்பா வந்து நிற்குறீங்க இவ இந்த வீட்டுக்குள் கால் வைக்க கூடாது என் பொண்ணு அந்த வேலைக்கார நாயை லவ் பண்ணுறானு இவளுக்கு தெரியாம போயிருக்குமா? இவ மட்டும் என் பெரிய மகனை மயக்கி கல்யாணம் பண்ணி மாளிகையில சொகுசா வாழுவா! என் பொண்ணு அந்த பிச்சைக்கார நாய்கூட வாழணுமா! இவ ஏன் என் பொண்ணு காதலைபத்தி என்கிட்ட சொல்லாம விட்டா இவளை நான் எப்படி இந்த வீட்டுக்குள்ள விடுவேன் அப்படியே ஓடிபோயிடுடி வேலைக்கார நாயே” என்று முல்லையை  வார்த்தைகளால் வதைத்தார் கோமளம்.

முல்லை கோமளத்தை எதிர்த்து ஒருவார்த்தை பேசவில்லை. தான் தவறு செய்துவிட்டோம் என்று மனம் வேதனையுடன் நின்றிருந்தாள். 

“அக்கா நீங்க பேசறது கொஞ்சம் கூட நியாயம் கிடையாது நதியா அவ காதலை பத்தி சொல்லவேணாம்னு சத்தியம் வாங்கியிருக்கா! முல்லை எப்படி நம்மகிட்ட சொல்லுவா?” காரில் வரும்போது தன்னிடம் நதியா அவள் காதலை பற்றி யாரிடமும் சொல்ல வேணாமென்று சத்தியம் வாங்கியதையும் ராயனிடம் சமயம் பார்த்து சொல்லிவிடலாம் என்றிருந்ததையும் நீலகண்டனிடம் அழுதுக் கொண்டே கூறியிருந்தாள் முல்லை.

“என்கிட்ட சொல்லாம விட்டா பரவாயில்லை தாலி கட்டின புருசன் கிட்ட சொல்லியிருக்காலாம்ல அதான் என் மகன் ராயன் உன் முகத்தை பார்க்க கூட பிடிக்காம நின்னானே நீ இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது” மருமகள் மாசமாய் இருக்கும்போது இப்படி வீட்டுக்குள்ளே வரக்கூடாது என்று சொல்லும் மாமியாரை என்னவென்று கூறுவது தன் மகள் செய்த தவறுக்கு ஊரான் வீட்டுப் பொண்ணு எப்படி பொறுப்பாக முடியும். முல்லையை காயப்படுத்தி பார்க்க வேண்டுமென்று கோமளத்திற்கு நல்ல முத்தாய்ப்பான சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது.

நீலகண்டனோ “அக்கா ராயனை தவிர முல்லையை வீட்டை விட்டு போகச் சொல்ல யாருக்கும் இந்த வீட்ல அதிகாரம் கிடையாது. ராயன் இல்லாத சமயம் கர்ப்பமாய் இருக்கும் பொண்ணை இப்படி வாய்க்கு வந்தபடி பேசறது நியாயம் கிடையாது” என்றார் ஆற்றாமையுடன்.

ராயன் மண்டபத்தில் கொடுக்க வேண்டிய செலவுகளுக்கு பணம் கொடுத்து விட்டு வீட்டுக்கு காரை விட்டிருந்தான் அவன் முகத்தில் அத்தனை களைப்பும் கவலையும் சேர்ந்து அப்பிக்கிடந்தது. 

கழுத்தை தடவிக்கொண்டே காரை விட்டு இறங்கியவன் முல்லை அழுதுக் கொண்டு நிற்பதும் கோமளம் அவள் முன்னே பத்ரகாளி போல நிற்பதையும் கண்டு இதழ் குவித்து ஊதியவன் கோமளத்தின் முன்னால் போய் நின்றவன் முல்லையை பார்க்க அவளோ கணவனின் கண்களைத்தான் பார்த்தாள். 

எங்கே கோமளத்தின் பேச்சை கேட்டு தான் செய்த தவறுக்காக தன்னை வீட்டை விட்டு அனுப்பிவிடுவானோ என்ற பயத்தில் “என்னை அனுப்பி விடாதீங்க மச்சான்” என்று இறைஞ்சுதலாக பார்த்தாள் ராயனை. 

அவனது பார்வை அவளை ஒரு முறை தீண்டிவிட்டு கோமளத்தை பார்க்க “ராயா உன் பொண்டாட்டி இந்த வீட்டுல இருக்க கூடாது” என எரிந்து விழுந்தார்.

“என் பொண்டாட்டி தப்பு செய்துருக்கா அதுக்காக அவளை வீட்டை விட்டு அனுப்பணுமா பெரியம்மா! அதுவும் என் வாரிசை வயித்துல என் பொண்டாட்டி சுமந்துக்கிட்டு இருக்கற நேரம் அவளை வீட்டை விட்டு அனுப்பினா என்னை விட பாவி யாரும் இந்த உலகத்துல இருக்க முடியாது! என் மனைவியை இன்னொரு முறை வேலைக்காரின்னும் வீட்டை விட்டு போனும் நீங்க சொல்ல கூடாது அவ சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்குறேன்” என்று கோமளத்தின் காலில் விழுந்து விட்டான். முல்லையும் கோமளத்தின் காலில் விழுந்துவிட்டாள்.

எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்கொடுக்காத கணவன் முல்லைக்கு கிடைத்தது அவள் செய்த புண்ணியம் என்று அமுதா ஆனந்தக் கண்ணீர் விட்டார். 

3 thoughts on “கடுவன் சூடிய பிச்சிப்பூ”

Leave a Reply to sowmi Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top