புள்ளி மேவாத மான். – 14
புள்ளி மேவாத மான் -14
தனாவிற்கு விபத்து என கருணா போன் செய்யவும் சுந்தரம் பதறி கண்ணனையும் மற்றவர்களையும் அழைத்து சொல்ல எல்லோரும் சுந்தரம் வீட்டிற்கு வந்துவிட்டனர். ஆனால் எழிலிடம் யாரும் சொல்லவில்லை. சொல்லவில்லை என்ன யார் சொல்வது எப்படி சொல்வது என தெரியவில்லை. ஏற்கனவே தனா விபத்தே நிலை குலைய செய்திருக்க… எழிலிடம் சொல்லி அவள் நிலையை பார்க்க யாருக்கும் தைரியம்இல்லை.
ஆனால் யாராவது சொல்லித் தானே ஆகவேண்டும். திருவை காரை எடுத்திட்டு வா என சொல்லிவிட்டு தனா வீட்டிற்கு சுந்தரம், கண்ணன், திலகா ,தேவி நால்வரும் சென்றனர்.
இவர்களைப் பார்த்ததும் எழில் வாங்க என வரவேற்க… தலைநிறைய பூ வைத்து சற்றுமுன் தான் சாமி கும்பிட்டு இருப்பாள் போல அதன் விளைவாக நெற்றியில் விபூதி வகிட்டில் குங்குமம் என பார்க்க மங்களகரமாக எப்பவும் அவள் உதட்டில் நிறைந்திருக்கும் புன்னகையோடு இருந்தவளை பார்த்து சொல்ல தயங்கி ஒருவரை ஒருவர் பார்க்க…
ஆனால் அதற்கும் நேரமில்லையே மருத்துவமனைக்கு செல்லவேண்டுமே என்ற பதற்றமும் அனைவரிடமும்… இவர்கள் முகத்தை பார்த்தே ஏதோ சரியில்லை என ஊகித்தவளாக…
“என்னாச்சு மாமா.. ஏன் எல்லாரும் ஒரு மாதிரியா இருக்கறிங்க.”
கண்ணன் தான் ” ஒன்னுமில்லமா அரசி தனாவுக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட்…. ஹாஸ்பிட்டலில் இருக்கான்” என சொன்னது தான் தாமதம்…
“மாமாவுக்கா” என கேட்டவள் மயங்கி விழுந்தாள். அவளை திலகாவும் தேவியும் தாங்கிப் பிடிக்க… கண்ணன் உள்ளே சென்று இருளாயிடம் தண்ணீர் வாங்கி வந்து தெளித்து தெளிய வைக்க…
“மாமாவுக்கு ஒன்னும் இல்லை தான” என எழில் கதற அதைப் பார்த்து திலகாவும் தேவியும் அழுக.. இருளாயி பாட்டி வேற ராசா.. ராசா… என புலம்ப… சூழ்நிலையே பதட்டமாக…. எப்படி சமாளிக்க என ஆண்கள் கலங்கி முழி பிதுங்கி நிற்க… எப்பவும் போல் சுந்தரம் தான் குடும்ப தலைவனாக தன்னை நிதானப்படுத்தி கொண்டு….
“என்ன ஏதுனு தெரியாம இங்கயே இப்படியே அழுதுகிட்டு இருந்தா சரியா…அவன போய் பார்க்க வேண்டாமா…” என ஒரு அதட்டல் போட…
அது நன்றாக வேலை செய்தது. திருவும் காருடன் வந்துவிட கிளம்பி சென்றனர். போகும் வழி எல்லாம் எழில் அழுதவாறே வர… சின்னதாக என சொன்னதற்கே இப்படி இன்னும் தனாவை பார்த்தால் என்ன செய்வாளோ.. தனாவின் கவலை கூட சேர்ந்து வீட்டினரிடம் பதைபதைப்பு தான் அதிகமானது.
மருத்தவமனைக்கு சென்று ஐசியூவில் உடல் முழுவதும் கட்டுகள் டியூப்கள் என இருந்த தனாவை பார்த்ததும் மறுபடியும் மயங்கி விழுந்தாள். மயக்கம் தெளியாமல் போக இவளை ஒரு அறையில் படுக்கவைத்து டிரிப்ஸ் இறக்க… வீட்டினருக்கே ஒரு சலிப்பு. தனாவை நினைத்து கவலைப்படுவதா.. இந்த புள்ளய பார்ப்பதா என…
கருணா முத்துக்குமாருக்கும் சொல்லி இருக்க.. எழில் வீட்டாரும் அடித்து பிடித்து வந்தனர். ஐசியூ வாசலிலேயே காத்திருக்க.. சிலமணிநேரம் கழித்து வெளியே வந்த டாக்டர் சொன்னதை கேட்டு குடும்பமே கதி கலங்கி தான் போனது.
ஹெல்மெட் போட்டு இருந்ததால் தலையில் ஒன்றும் அடிபடவில்லை.ஆனால் தூக்கி எறியப்பட்டு மரத்தில் மோதி விழுந்ததில் முதுகெலும்பில் பலமாக அடிப்பட்டு ப்ராக்சர் ஸ்டீல் வைத்து ஆப்ரேஷன் செய்தாலும் இயல்பு நிலைக்கு வர மூன்று மாதங்கள் ஆகும் என சொல்ல… இதை கேட்டு வீட்டினர் நிலைகுழைந்து போக… இதில் எழிலை சமாளிக்க தான் பெரும் பாடாகியது. அழுது அழுது சோர்ந்து போய் மீண்டும் மயங்கி விடுவாளோ என பயப்படும் அளவிற்கு செய்தாள். யாருடைய சமாதானமும் எடுபடவில்லை.
ஒருகட்டத்தில் பொறுமை இழந்து கற்பகம் தான் “என்ன நினைச்சிட்டு இருக்க… இப்படியே அழுது உடம்ப கெடுத்துக்க போறியா… மாப்பிள்ளையை நினைத்து கவலைபடுவதா… உன்னய கவனிப்பதா… எத்தன தான் நாங்க இருந்தாலும் நீ தான அவர பார்க்கனும்… முதல்ல நீ தைரியமா இருந்தா தான அவர தேத்தி கொண்டு வர முடியும். அதுக்கு உனக்கு மனசுலயும் உடம்புலயும் பலம் வேண்டாமா…”என ஒரு தாயாக மகளைஅதட்டி உருட்டி மிரட்டி வழிக்கு கொண்டு வந்தார்.
அதன் பிறகே தாயின் பேச்சில் உள்ள நிதர்சனம் உறைக்க எழில் அமைதியானாள். ஆப்ரேஷன் முடிந்து தனாவை ஐசியூவில் இரண்டு நாள் வைத்து நார்மல் வார்டிற்கு கொண்டு வந்த பிறகே எல்லோரும் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
பதினைந்து நாட்கள் இடுப்பிற்கு அசைவு கொடுக்க்கூடாது என்பதாலும்… பெரும்பாலான நேரம் வலி அறியாமல் இருக்க தூக்கத்திலேயே வைத்திருக்க…. அவனிடம் பேச முடியவில்லை . அறைக்கு வந்ததும் தனா முதலில் கண்விழித்ததும் களைத்து சோர்ந்து இருந்த எழிலை கண்டு
“ரொம்ப பயந்திட்டியா எழில்…. பயப்படாதமா… எனக்கு ஒன்னுமில்ல..நான் நல்லா இருக்கேன்” தனா எழிலுக்கு தைரியம் சொல்ல..
எழிலுக்கு தான் சங்கடமாகி போனது. நாம தான் மாமாவுக்கு ஆறுதல் சொல்லி நம்பிக்கை கொடுக்கனும். மாமா நமக்கு தைரியம் சொல்லிட்டு இருக்காங்க… அவ்வளவு பலவீனமாவே இருக்கேன். அம்மா சொல்றமாதிரி நாம தான மாமாவ பார்க்கனும். அப்ப நான் தான் முதல்ல சரியா இருக்கனும் என யோசித்து தெளிந்தவள்
“மாமா உங்களுக்கு என்ன நீங்க சீக்கிரமே குணமாயிடுவிங்க… நான் இருக்கேன் என் மாமாவ பார்த்துக்க…எல்லாம் சரியாகி நீங்க ராஜா மாதிரி பழையபடி நடப்பிங்க பாருங்க…” என அவன் அடிபடாத இடது கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு நம்பிக்கை கொடுக்க அவளை பார்த்து லேசான புன்னகையோடு உறங்கி போனான்.
தனா வீடு வர ஒரு மாத காலம் ஆகிற்று. தனாவை வீட்டுக்கு அழைத்து கொண்டு தான் எழிலும் வீடு வந்து சேர்ந்தாள். அதுவரை அவளும் ஹாஸ்பிடல் வாசம் தான். குடும்பத்தினர் யாரவது ஒருத்தர் எழிலுக்கு உதவியாக வந்து இருந்து கொண்டனர்.
பதினைந்து நாட்கள் கழித்து தனாவின் உடலுக்கு
அசைவில் இருந்து படிப்படியாக மெல்ல எழுந்து உட்கார்ந்து.. நடை பழகும் குழந்தை போல வாக்கரின் உதவியோடு நடக்க ஒருமாதம் பிடித்தது. அதன் பிறகே மருத்தவமனையில் இருந்து வீடு வந்து சேர்ந்தான்.
எழிலின் கூடுதலான கவனிப்பிலும் அன்பிலும் அக்கறையிலுமே வெகு விரைவில் மீண்டு வந்தான் தனா.
அப்போதும் அவன் சில பல கண்டீசன், அறிவுரைகள் , பிசியோதெரபி , டயட் ,மருந்து மாத்திரைகள் இத்யாதியோடு தான் அனுப்பப்பட்டான்.
அதிலும் இரண்டு மாதம் கட்டாய ஓய்வு தான். குனிந்து நிமிரகூடாது… வெயிட் தூக்ககூடாது.…வண்டி ஓட்டகூடாது…தாம்பத்தியம் கூடாது…. என பல கூடாதுகள்…
மேலே படியேற முடியாததால் கீழேயே ஒரு அறையில் தனாவின் ஜாகை…
காலையில் கருணா வெற்றி வந்து அவனை குளிக்க வைத்து அவனுக்கு உடை அணிவித்து தயார் செய்தால்…. அடுத்து பிசியோதெரபிஸ்ட் வந்துவிடுவார்..அவர் ஒருமணி நேரம் எக்சர்சைஸ் என படுத்தி எடுக்க வழியில் சோர்ந்து போய்விடுவான் தனா…
அவர் சென்றதும் காலை உணவு சிறிது தூக்கம் பிறகு மதிய உணவு மீண்டும் தூக்கம்… மாலை பிசியோதெரபி… நடுவே நலம் விசாரிக்க வருபவர்கள்….பிறகு கருணா வெற்றி வந்து அன்றைய தொழில் நிலவரம் பற்றிய பேச்சு… கொஞ்சம் நேரம் வாக்கரின் உதவியோடு நடை பழக.. மீண்டும் இரவு உணவு தூக்கம்.. பகலில் தூங்கிவிடுவதால் நடுஇரவில் விழிப்பு வந்து விடும்.தேவையில்லாத சிந்தனைகள்…
கொஞ்சம் அசைந்தாலும் எழில் ஓடி வந்து என்ன மாமா.. என்ன வேணும் என்பாள்.. நடுநடுவே இதை சாப்பிடுங்க அதை சாப்பிடுங்க மாமா… அவளின் அதீத அன்பு கூட அவனுக்கு எரிச்சலாகி போனது..
ரொம்பவே மலைத்து போனான் தனா… ஒருநாள் ஓரிடத்தில் ஓய்வு எடுத்ததில்லை. நிற்காமல் ஓடும் காட்டாறு தான். விபத்து அவனை ஒரு அறையில் முடக்கி போட…. மனதில் ஒரு இறுக்கம்… இறுக்கம் அழுத்தமாகி… அந்த அழுத்தம் எந்த நிமிடம் வேணாலும் வெடித்து சிதறும் நிலையில்…..
அன்றும் வாக்கரின் உதவியோடு நடக்க…வந்து எப்பவும் போல எழில் கூடவே வந்து கொண்டு இருக்க… தீடிரென தனா தடுமாற.. பதறிப்போய் எழில் சட்டென தாங்கி பிடித்து “பார்த்து மாமா… மெதுவா நடங்க..”என சொல்ல… நடந்ததால் உண்டான வலியில் எரிச்சலில் இருந்தவன்…
“ப்ச்ச் விடு என்னைய… நான் என்ன குழந்தையா.. எனக்கு நடக்க தெரியாதா… விழுந்திடுவேனோனு பின்னாடியே வர… இதை செய் அதை செய்யாதே…. அது சாப்பிடு.. இது சாப்பிடு என நச்சரித்து கொண்டு கொஞ்ச நேரம் என்னை தனியா விடு” என கொஞ்சம் வேகமாகவே எட்டி நடந்து அறைக்கு சென்றுவிட்டான்.
அவன் பேசியதே அதிர்ச்சி என்றால் அவனின் கோப நடை எழிலுக்கு பயத்தை கொடுத்தது. கீழே விழுந்தால் ஆபத்து என டாக்டரின் எச்சரிக்கை வேற பயப்பட போதுமானதாக இருந்தது.
சிறிது நேரம் அவனை தனியாக இருக்கட்டும் பிறகு பேசலாம் என அவனுக்கு தனிமை கொடுத்து ஒதுங்கி கொண்டாள். கருணாவும் வெற்றியும் வரவும் கொஞ்சம் சகஜநிலைக்கு வந்தான் தனா. அவர்கள் சென்ற பின் இரவு உணவு கொண்டு வந்து கொடுத்தாள்.
அவளை திட்டியதால் கோபமாக…வருத்தமாக இருப்பாளா என அவள் முகம் பார்க்க எப்பவும் போல அவள் முகம் அவன் மீதான காதலில் அன்பான பார்வையை தான் தாங்கி நின்றது. அந்த பார்வை அவனுக்கு தப்பு செய்த உணர்வை தர… சாப்பிடாமல் தலை குனிந்து அமைதியாக இருந்தான்…
அவனின் எண்ணத்தை புரிந்து கொண்டவள் அவனின் தலைமுடியை பிடித்து மெல்ல அவன் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவள்
“என்ன மாமா… எதுக்கு பீல் பண்ணறிங்க…என்கிட்ட கோபப்பட உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.. நான் வருத்தப்படலாம் மாட்டேன். எதுனாலும் கொட்டித் தீர்த்திடுங்க.. ரிலாக்ஸாக இருங்க..”என தலை கோதி உச்சந்தலையில் முத்தம் வைக்க… அவளை இடையோடு கட்டி அணைத்து அவள் வயிற்றில் முகம் புதைத்து ஆறுதல் தேட….
சற்று நேரம் அவன் போக்கில் விட்டவள் “சாப்பிடுங்க மாமா” சொன்னவள் தானே சாப்பாட்டை பிசைந்துமெல்ல ஒவ்வொரு கவளமாக ஊட்டிவிட்டாள். மருந்துகளை கொடுத்து முகம் துடைத்து படுக்க உதவி செய்து விட்டு வெளியே செல்ல….
தனா அவளின் முந்தானை சேலை மெல்ல பிடித்து இழுத்து “கொஞ்ச நேரம் பக்கத்துல படுக்கறியா..” என்றான் தயங்கியவாறே…
அவனின் உடல்நிலை கருதி ஒரே அறையில் தனித்தனி படுக்கை தான். அவன் அவ்வாறு கேட்கவும் எழிலுக்கே ஐயோ என்றானது.
“சாப்பிட்டு வரவா மாமா..” என்றாள் மென்மையாக..
“ம்ம்ம்” தலையாட்டினான். தாயின் மடி தேடும் குழந்தையாக எழில் கண்ணுக்கு தெரிந்தான். சென்று வேகமாக சாப்பிட்டு எல்லாம் ஒதுங்க வைத்து வந்தவள். அவனுக்கு வலிக்காத மாதிரி லேசாக அணைத்து படுத்தாள்.
அவளின் அணைப்பில் உடனே தூங்கிவிட்டான். அவனை பார்த்துக் கொண்டே…அவனின் இன்றைய நடவடிக்கையை அசை போட்டவள் தன்னை அறியாமல் மெல்ல கண்ணயர்ந்தாள்.
பசி தூக்கம் மறந்து அவள் எண்ணம் முழுவதும் மாமனின் உடல்நலமே வியாபத்தி இருக்க… தன்னை கவனிக்க மறந்தாள். தன் உடல்நிலையை கவனிக்க தவறினாள்….
புள்ளி மேவாத மான். – 14 Read More »