1- ஆடி அசைந்து வரும் தென்றல்
சி.கே டிரேடர்ஸ் சென்னையின் மையப் பகுதியில் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு நடுவே ஐந்து அடுக்கு மாடிகட்டிடமாக கம்பீரமாக வியாபித்து இருந்தது. அங்கு மூன்றாவது தளத்தில் கான்ப்ரன்ஸ் ஹாலில் நீளமான டேபிளின் இருபக்கமும் ப்ரொடக்ஷன் அண்ட் சேல்ஸ் டிப்பாரட்மெண்ட்களில் வேலை செய்யும் முக்கிய நபர்கள்அமர்ந்திருக்க டேபிளின் வலது பக்கம் நடுநாயமாக அனிவர்த்சிதம்பரம் அமர்ந்திருந்தான்.
அந்த மாதத்திற்கான மாதாந்திர உற்பத்தி மற்றும் விற்பனைக்கான ரிப்போர்ட்கள் வாசிக்கப்பட… தீர்க்கமான பார்வையோடு அதை கவனித்து கொண்டு இருந்தான் அனிவர்த் சிதம்பரம். அப்போது அவன் இடது பக்கம் டேபிள் மேல் இருந்த மொபைல் வைப்ரேசனில் அதிர்ந்தது. சிறிதும் அலட்டிக்காமல் கண் விழியை மட்டும் இடது புறம் திருப்பி பார்க்க… திரையில் மாம் காலிங் என ஒளிர… அதை சட்டை செய்யாது தனது பார்வையை மாற்றி மீட்டிங்கில் கவனத்தை செலுத்தினான்.
அவனது மொபைல் மீண்டும் மீண்டும் ஒளிர.. ஒரு கட்டத்தில் அதை அணைத்து வைத்துவிட்டான். மீட்டிங் முடிந்து தனது அறைக்கு வந்தவன் மீட்டிங்கில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை எப்படி எக்ஸ்கியூட்டிவ் பண்ணுவது பற்றிய சிந்தனையில் தனது லேப்டாப்பில் மூழ்கி போனான். தனது மொபைலை உயிர்ப்பிக்கவும் மறந்தான். தன் தாய் அழைத்ததையும் மறந்துவிட்டான்.
மேலும் ஒரு மணிநேரம் சென்ற நிலையில் அவனின் அறை கதவு அவனின் அனுமதிக்காக தட்டப்பட….
“எஸ்..” என அவன் அனுமதிக்கவும்…
உள்ளே வந்த அவனது பி.ஏ அசோக் அனிவர்த்தை பார்த்து தயங்கி நிற்க….
லேப்டாப்பில் இருந்து நிமிர்ந்து என்ன என்பது போல புருவத்தை உயர்த்தி கேட்க..
அசோக் “பாஸ்” என்று வார்த்தையை மென்று முழுங்க..
அவன் என்ன சொல்ல வந்துள்ளான் என அறிந்திருந்த அனிவர்த்..
“ம்ம் சொல்லு.. என்னசொன்னாங்க..”
“அம்மா.. கோவிலில்..”
நிறுத்து என்பது போல கையை உயர்த்தியவனுக்கு தெரியும் அவன் அம்மா என்ன சொல்லி இருப்பார் என…
நான் எத்தனை பேரை தெறிக்க விடறேன். இவங்க என்னயவே தெறிக்க விடுவாங்க.. என பல்லை கடித்து கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்று முடியாமல் தனது வாட்ச்சில் மணியை பார்க்க..அது மணி மூன்று என காட்ட..
மேலும் கோபம் அதிகரிக்க.. தனது மொபைலையும் கார் கீயையும எடுத்து கொண்டு தனது வேக நடையுடன் அறையை விட்டு வெளியேறினான்.
அடுத்த நிமிடம் அசோக்கின் அலைபேசி அடித்தது. திரையை பார்த்தும் ஜெர்காகினான். கங்காம்மா என திரையில் காட்ட..
உடனே அட்டென்சன் பொசிஷனுக்கு வந்து அலைபேசியை காதில் வைத்தவுடன் இவன் ஹலோ சொல்லும் தேவையின்றி எடுத்த எடுப்பிலேயே…
“ஏன்டா அசோக்கு உங்க பாஸ் இன்னும் கிளம்பலையா.. பாஸாம் பாஸ்.. கொள்ளகூட்டத் தலைவன கூப்பிடற மாதிரி… ஏன்டா நா கேட்டுட்டே இருக்கேன்.. பதில் சொல்லாம புத்திய என்ன புல் மேய விட்டுட்டியா…”
ஐயோ.. கேப் விடாம பேசினா நான் எப்படி தான் சொல்லறது.. டேய் தகப்பா நல்ல லூசு குடும்பத்துல என்ன சிக்க வச்சுட்டு நீ மட்டும் ரம்பா ஊர்வசியோட செட்டில் ஆகிட்ட.. என மேலே அண்ணாந்து பார்த்து புலம்பினான்.
அதற்குள் கங்கா “டேய் லூசுப்பயலே.. லைன்ல இருக்கறியா…”
ஏதூ.. நான் லூசா.. உங்களுக்கு வாக்கப்பட்டா நான் லூசா தான் திரியனும்.. என்னது வாக்கப்பட்டாவா ஐயோ அசோக் லூசாவே ஆகிட்டியா… இல்லவே இல்ல.. ஆக்கிட்டாங்கடா… மைண்ட் வாய்சில் புலம்ப… அடுத்து கங்கா பேசியதில் அசோக்கிற்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது.
“டேய் மங்கூஸ் மண்டையா.. இருக்கறியா.. மண்டைய போட்டுட்டியா…” என கேட்டுட்டு…
“அச்சோ பகல் பூரா இவன டார்ச்சர் பண்றதால… எனக்கு சேதாரம் கம்மியா இருக்கு… இவனும் போயிட்டான்னா நா பெத்த மகராசன் என்னை டார்ச்சர் பண்றத முழு நேர ஹாபியா வச்சுக்குவானே.. முருகா என்னை மட்டும் காப்பாத்து ” என தனக்கு தானே புலம்ப… கேட்டிருந்த அசோக் நெஞ்சை பிடித்து கொண்டு அங்கிருந்த சோபாவில் பொத்தென அமர்ந்தான்.
“ஹலோ.. ஹலோ.. நிசமாவே போயிட்டான் போல..”என போனை வைத்துவிட்டார் கங்கா.
அதிர்ச்சியில் பேச முடியாவிட்டாலும் கங்கா சொல்வதை எல்லாம் கேட்டிருந்தவன் “இந்த பொழப்பு உனக்கு தேவையா.. இந்த பொழப்புக்கு ஊருல போய் கருவாட்டு கடை வச்சு கூட பொழச்சுக்கலாம் டா..” என அவனை அவனே இரண்டு கன்னத்தில் மாற்றி மாற்றி அடித்துக்கொள்ள…
அப்போது எம்டியிடம் சைன் வாங்க வந்த ரஷிகா.. அசோக்கை பார்த்து கையில் வைத்திருந்த பைலை கீழே போட்டு விட்டு பயந்து போய் ஓடிவிட்டாள்.
“இந்த ஆபீஸ்ல என்னை சைட் அடிச்ச ஒரே பிகரையும் ஓட வச்சுட்டாங்களே.. நல்ல குடும்பம் டா நீங்க மட்டும் நல்லா இருங்க…” என தலையை கைகளால் தாங்கி கொண்டு பொருமினான்.
தனது தாயின் மேல் இருக்கும் கோபத்தை எல்லாம் காரை ஓட்டுவதில் காண்பித்து ஒரு மணி நேரத்தில் வர வேண்டிய கோவிலுக்கு அரை மணி நேரத்தில் வந்து இருந்தான் அனிவர்த்.
தாறுமாறாக காரை பார்க் செய்தவன் தாயை தேடியவாறு உள்ளே வேகமாக வந்தான். அவன வந்த வேகத்தில் எதிரே வந்த சிறுமியின் மேல் இடித்து விட்டு இருந்த கோபத்தில் கவனிக்காமல் செல்ல..
“ஹலோ மிஸ்டர்.. இடிச்சிட்டு சாரி கூட கேட்காம போறிங்க.. பேசிக் மேனர்ஸ் கூட தெரியாதா…”
யாரது என திரும்பி பார்க்க.. அந்த சிறுமி கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்து அனிவர்த்தை பார்த்து முறைத்து கொண்டு நின்றது.
“ஓய்.. என்ன..”என மிரட்ட..
“ஏய் மேன் நீ இடிச்சுட்டு என்னை மிரட்டறியா..”
“இப்படி தான் ரெஸ்பெக்ட் இல்லாம பேசுவியா… உங்கம்மா உனக்கு பெரியவங்ககிட்ட எப்படி பேசனும்னு சொல்லி தரலையா…”
“உங்கம்மா தப்பு செஞ்சா சாரி கேட்கனும்னு சொல்லி தரலையா…” என அந்த சிறுமியும் பதிலுக்கு பதில் வாயாட..
அனிவர்த்தின் கோபமோ எல்லை கடந்து கொண்டு இருந்தது.உன்கிட்ட எனக்கு என்ன பேச்சு என எண்ணி அனிவர்த் நகர..
“சாரி கேளு..” என ஆர்ட்ர போட்டது வாண்டு.
குட்டி சாத்தானா இருக்கும்போல.. இதுகிட்ட பேச நேரமில்ல..என நினைத்தவன்..
“சாரி” என்றான் எரிச்சலான குரலில்..
“இட்ஸ்..ஓகே..” என்றது போனா போகுது பாவனையில் கையை அசைத்து..
“ஹேய்… கிரேசி..”லேசாக சிரித்துவிட்டான்.
அவன் கோபத்துடன் வந்ததது என்ன.. இப்போ சிரிப்பது என்ன…
சின்ன சிரிப்போடு அங்கிருந்து நகர்ந்தான்.
கோவில் மண்டபத்தில் பரிகார பூஜை செய்வதற்கான ஏற்பாட்டோடு அந்த கோவிலின் அர்ச்சகர் ஓமகுண்டத்தின் முன் அமர்ந்திருக்க… அவரின் அருகில் பயபக்தியோடு கங்கா அமர்ந்திருந்தார்.
அனிவர்த்கு தன் அன்னையை பார்த்தும் குறைந்திருந்த கோபம் டாப் கியரில் எகிறியது. வேகமாக அன்னையின் அருகே சென்றவன் “என்ன பண்ணிட்டு இருக்கறிங்க…” என அடிக்குரலில் சீறினான்.
‘போடா உன் பூ்ச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்படுவனா..’என நினைத்தவர்.. அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு..
“என்ன அனிவர்த்.. உன்கிட்ட காலையிலேயே சொன்னேன்ல..” என கண்ணை சிமிட்டி சிமிட்டி பேச..
“உங்க டிராமாவை நிறுத்தறிங்களா..” என்றான் கடுப்போடு…
“ஏங்கம்மா இவர் தான் உங்க புள்ளையாண்டானா.. வாங்கோ வந்து மனையில் அமருங்கோ..ரொம்ப நாழியாயிடுத்து..”என அர்ச்சகர் சொல்ல..
இப்போ அன்னையை விடுத்து அர்ச்சகரை முறைத்து பார்த்தான்.
அவனின் பாசப் பார்வையில் அர்ச்சகர்அமைதியாகி விட.. திரும்பி அன்னையை பார்த்தவன்…
“நீங்க இன்னும சாப்பிடல தான…”
“ஆமாம்..”என முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டார்.
“உடம்புல சுகர் பிரசர்.. ஹார்ட் ப்ராப்ளம் என ஆயிரத்தெட்டு கம்ப்ளைண்ட்… டைம்கு சாப்பிடாம…மெடிசன் எடுக்காம.. இங்க என்ன பண்ணறீங்க…”
“காலையிலேயே சொன்னேன்ல அனிவர்த்… இப்படி கேட்கற…”
“உங்களுக்கு சொன்னா புரியாதா…எனக்கு மேரஜ் லைப்ல இன்டரஸ்ட் இல்லைனு சொல்லறேன்ல…”
“அடியே கங்கா.. உனக்கு கடைசி வரைக்கும் மருமகளோட சண்ட போடற பாக்கியம் இல்லடி.. இல்லவே இல்ல.. பக்கத்து வீட்டு பங்கஜம் இரண்டு மருமகளோட தினமும் சண்டையும் ச்ச்சரவுமா.. நல்ல என்டர்டெயினோட என்ஜாய் பண்றா.. நீ இப்படியே பினாத்தியே காலம் போயிடும் போல..” என சத்தமாகவே அனிவர்த் காதில விழவேண்டும் என்றே பேச…
“போதும்..இப்ப உங்களுக்கு நான் என்ன பண்ணனும் .. அங்க உட்காரனும் அவ்வளவு தான… வாங்க முதல்ல இங்க பக்கத்தில் இருக்கற ஹோட்டல்ல ஏதாவது சாப்பிட்டு வந்து இதை பார்க்கலாம்..”
“நீ மனைல உட்காரு நான் சாப்பிடறேன்..”
அனிவர்த் கங்காவை உறுத்துப் பார்க்க.. தனது பேகில் இருந்து ஒரு டப்பாவை எடுத்து காட்ட..
“எல்லாம் பக்காவா ப்ளான் பண்ணி ஒரு செட்டப்போட தான் வந்திருக்கறிங்க.. போய் உட்காருகிறேன்..” நெற்றயில் அடித்துக கொண்டு போய் மனையில் அமர…
அர்ச்சகரோ.. “வேஷ்டி கட்டிண்டு வாங்கோ..” என்க..
அவரை டெர்ர் லுக் விட.. ‘அம்பி பெரிய பிஸ்தாவோ இருப்பான் போல..’கப்பென வாயை மூடிக் கொண்டார்.
அவ்வ் என வடிவேலு பாணியில் முகத்தை வைத்து கொண்ட கங்கா..
“சாமி ஆரம்பிங்கோ.. “ என சொல்லி விட்டு.. அங்கேயே தூணில் சாய்ந்து அமர்ந்து டப்பாவில் இருந்த லெமன் ரைஸை ஸ்பூனால அள்ளி சாப்பிட ஆரம்பித்தார் நல்லா எண்ணெய் உப்பும் நிறைந்த ஊறுகாயோடு…
இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தவன்… ‘என்னை பண்ற டார்ச்சர்ல இவங்கள மாதிரியே எனக்கும் சுகர் ப்ரசர் எல்லாம் வந்துடும்.. ‘ மனதுள் பொருமியவாறு.. கங்காவை பார்த்தான்.
வாய் நிறைய சோறோடு ஹீஹீ… என கங்கா சிரிக்க… கோப மிகுதியில்… அர்ச்சகர் கொஞ்சம் கொஞ்சமாக ஹோமத்தீயில் போட சொன்ன சமத்துக் குச்சிகளை மொத்தமாக போட்டுவிட்டான்.இவனை போலவே அதுவும் புகைய.. அனிவர்த்கு கண்கள் எரிச்சலாடு.. இருமலும் வர..இன்னும் இன்னும் காண்டானான்.
எல்லாம் முடிந்து அனிவர்த் கையால ஒரு ஏழை பெண்ணிற்கு தாலி தானம் செய்ய.. அதை அந்த பெண்ணின் பெற்றோர் பெற்றுக் கொண்டு நன்றி சொல்ல..அதை கண்டு கொள்ளாமல்..
“கிளம்பலாமா..”என கங்காவிடம வந்து நின்றான். முழங்கால் வலியோடு தட்டு தடுமாறி எழ கை பிடித்து தூக்கிவிட்டான். பாதங்கள் மறுத்து போயிருக்க.. தூணை பிடித்து கொண்டு கால்களை மாற்றி மாற்றி உதறினார் கங்கா..
எங்கிருந்தோ ஓடி வந்தாள் அதே சிறுமி. கங்காவின் அருகே குத்து காலிட்டு அமர்ந்து கங்காவின் பாதங்களை தன் பிஞ்சு விரல்களால் நீவிவிட்டது்.
“எங்க பாட்டிக்கும் இப்படி தான் ஆகிடும். நான் பிடிச்சு விட்டா சரியாகிடும்.. சரியா..”என்று கங்காவை அண்ணாந்து பார்த்து சொன்னது. அந்த குழந்தையின் பேச்சிலும் செயலிலும் கங்காவின் கண்கள் கலங்கிவிட்டது.
கருவறையில் இருந்த அம்மனை பார்த்து கங்கா… என் காலம் முடிவதற்குள் இது போல பேரப்பிள்ளைகளை தொட்டு தூக்கும் பாக்கியம் கொடுமா.. தாயே.. என வேதனையோடு வேண்டுதல் வைத்தார்.
“இப்ப மெதுவா வாக் பண்ணுங்க..”என சொல்லி விட்டு நிற்காமல் ஓடிவிட்டாள் அந்த சிறுமி.