3 – புயலோடு பூவுக்கென்ன மோகம்
சென்னையில் நிகிதா வீட்டில் விருந்து முடிந்து காஞ்சிபுரம் தாமரையூர் சென்றனர் வீரா நிகிதா தம்பதியர்.
அங்கு இரண்டு நாள் விருந்து. குடும்பமே கிளம்பி இருந்தனர். வீடு மிக எளிமையான கான்கிரீட் வீடு தான். இரண்டு படுக்கையறை சின்ன சமயலறை ஒரு ஹால் முன்னால் கொஞ்சம் வாசல். பின்புறம் கிணறு பாத்ரூம் சிறிய தோட்டம் என இருந்தது.
சொக்கலிங்கத்திற்கு பக்கத்து ஊர் தான். அங்கு அவருக்கு வீடு நிலபுலன் எல்லாம் உண்டு. வெங்கட் சில வருடங்களுக்கு முன்பு தான் ஓட்டு வீட்டை இடித்து நவீன வசதிகளோடு கூடிய இரண்டு அடுக்கு வீடாக கட்டியிருந்தார்.
இருந்த போதும் அனைவரும் வீரா வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்து கிளம்பி வந்திருந்தனர்.
அய்யாவுக்கு தான் அவர்களுக்கு வசதி போதுமா என்று பெரிய கவலை. ஆனால் விசாலாவிற்கு தன் தம்பி வெகு வருடங்களுக்கு பிறகு குடும்பத்தோடு தன் வீட்டிற்கு வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
நிகிதாவிற்கு அந்த வீட்டை பார்த்ததும் பிடிக்கவில்லை. அவளால் அங்கு இருக்க முடியவில்லை. அட்டாச்டு பாத்ரூம் இல்லை. வெஸ்டர்ன் டாய்லெட் இல்லை. ஏசி இல்லை என எத்தனையோ இல்லைகள்.இதை அனைத்தையும் ரோகிணியிடம் தான் சொல்லி புலம்பிக் கொண்டு இருந்தாள்.
சென்னையில் இருந்து கிளம்பும் போதே சொக்கலிங்கம் சொல்லிவிட்டார் வீரா வீட்டில் தான் தங்குவது என..
மங்களமும் வீரா அறியாமல் ரோகிணியிடமும் பேத்திகளிடமும் வீடு வசதி குறைவாகதான் இருக்கும் பொறுத்து போக வேண்டும் என கண்டிப்புடன் சொல்லிவிட.. வேறு வழியின்றி யாரும் அறியாமல் தாயிடம் எரிச்சல் பட்டாள்.
வந்ததும் அனைவருக்கும் வீட்டின் பின்புறம் உள்ள தென்னையில் இளநீர் சீவி குடிக்க கொடுத்தார் அய்யாவு. உள்ளூரிலேயே இருக்கும் பொன்னியும் வந்துவிட விருந்து வீட்டிலேயே தடபுடலாக பெண்களே செய்தனர்.
ரோகிணியும் அவர்களோடு இணைந்து கொள்ள..பேச்சும் சிரிப்புமாக சமையல் வேலை நடந்தது
வீட்டில் இருந்து சிறிது தொலைவில் அய்யாவின் தறிப்பட்டறை இருந்தது. பெரிதாக இல்லை பத்து கைத்தறி ஆட்கள் போட்டு இவரும் கூட செய்வார்.சொக்கலிங்கத்தையும் வெங்கட்டையும் பட்டறைக்கு கூட்டி கொண்டு சென்றார் அய்யாவு.
நிகிதாவிற்கு தான் பிடிக்கவில்லையே தவிர ஆராத்யாவிற்கு அந்த வீடும் ஊரும் மிகவும் பிடித்தது.வீட்டையே சுற்றி சுற்றி வந்தாள்.
விசாலாவிற்கு தன் தம்பி மகளே மருமகளாக வந்ததில் அவ்வளவு ஆனந்தம். அவருக்கு சிறு வயதில் இருந்தே நிகிதா மேல் பிரியம் அதிகம்.
யாருடனும் ஒட்டாமல் தனியாக போனோடு இருந்த நிகிதாவிடம்
“நிகிதா.. தங்கம் ஏன்டா தனியா இருக்க..”
நிகிதா அவர்களிடம் அதிக ஒட்டுதல் இல்லை என்பதால் என்ன சொல்ல என தெரியாமல் அமைதியாக இருக்க..
“காருல வந்தது களைப்பா இருக்கா.. கொஞ்ச நேரம் ஓய்வா படுத்துக்கறியா..” என்றார்.
எவ்வளவு நேரம் தான் சும்மா இருப்பது பேசாமல் தூங்கலாம் என அவளும் சரி என தலையாட்ட..
வீராவின் அறைக்கு கூட்டி சென்று படுக்க வைத்தவர்
“நிகிதா கண்ணு எது வேணாலும் கூச்சப்படாம அத்தைகிட்ட கேட்கனும் சரியா..” என்று குழந்தையிடம் சொல்லும் பாவனையில் சொல்ல.. அதற்கும் அவள் தலையசைப்பையே பதிலாக தந்தாள்.
அவள் உறங்குவதற்கு தேவையானதை செய்து கொடுத்து கதவை மூடி விட்டு சென்றார்.
ஆராத்யா வீராவிடம் “மாமா..கிணத்துல தண்ணி இறைச்சு காமிங்க” என்க
வீரா லுங்கியை மடித்து கட்டி கொண்டு நீர் இறைக்க.. அதை பார்த்து குதூகலித்தவாறே..
“மாமா..மாமா.. நான் இறைக்கவா..”
“ம்ம்ம்.. சரி” என்றிட..
கிணற்றில் நீர் ஒரு தடவை இறைப்பதற்குள் சின்ன பெண்ணின் மென்மையான கை கயிற்றை இறுக்கி பிடித்தில் காந்தல் எடுத்து விட்டது.
வீரா தான்”போதும் ஆரா உள்ள வா”என்க..
ஆனால் ஆராவிற்கு தான் ஆர்வம் குறைந்தபாடில்லை.
“மாமா.. இந்த கிணத்துல ஸ்விமிங் பண்ணாலாமா.. நீங்க பண்ணுவிங்களா..”
“எனக்கு ஸ்விமிங் பண்ண தெரியும். ஆனால் இது வீட்டு கிணறு சின்னது இதுல பண்ணமுடியாது. இங்க குளம் இருக்கு அதுல நீச்சலடிப்பேன்”
“ஹை.. சூப்பர்… சூப்பர்.. வாங்க இப்பவே போலாம் நானும் ஸ்விம் பண்றேன்” என்றாள் ஆர்வமாக..
“ஆரா..ஆ.. இப்ப வெயில் நேரம். நாளைக்கு காலைல கூட்டிட்டு போறேன் ஓகே வா”
சற்றே ஏமாற்றத்துடன் “சரி மாமா” என்று உள்ளே சென்றவள் உடனே பாட்டியிடம்
“கிரேனீ.. மாமா என்னை நாளைக்கு ஸ்விம் பண்ண குளத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருக்காங்க..” என்றாள்.
மங்களத்திற்கு பேத்தியின் சந்தோஷத்தை பார்த்து அவரின் உள்ளம் கனிந்து போனது.
“சரிடி ராஜாத்தி”என கன்னம் வலித்து கொஞ்சினார்.
தறிபட்டறையில் இருந்து மூவரும் வரவும் விருந்தும் தயராகி இருந்தது.வரும் போதே அய்யாவு பதநீரில் நொங்கு போட்டு வாங்கி வந்திருந்தார்.பொன்னியின் கணவன் கணேசனும் வந்திட..
பந்தி பாய் விரித்து தரையில் அமர்ந்து ஆண்கள் அனைவரும் சாப்பிட.. நிகிதாவை வீராவின் அருகில் அமர வைத்தனர். அவளால் பழக்கம் இல்லாததால் தரையில் அமர்ந்து குனிந்து இலையில் சாப்பிட மிகவும் சிரமப்பட்டாள்.
வீராவிற்கு அதைப் பார்க்க அவள் மேல் இன்னும் எரிச்சல் கூடியது.அவளை பார்த்து முறைக்க..
ஏற்கனவே அந்த வீடு சூழ்நிலை பழக்கவழக்கம் எல்லாம் ஒவ்வாமையாக இருக்க…அவனின் முறைப்பும் சேர்ந்து கோபத்தை கிளப்ப.. சாப்பிடாமலேயே எழுந்து கொண்டாள்.
விசாலா பதறி கொண்டு”ஏங்கண்ணு சாப்பாடு புடிக்கலையா..ஏன் எந்திரிச்சிட்ட.. வேற எதாவது செய்து தரவா..” என கவலையுடன் கேட்க..
ஒன்றும் பேசாமல் முகத்தை திருப்பி கொண்டு நின்றாள்.தன் தாயை அவமதிக்கிறாள் என நினைத்த வீரா பெரியவர்கள் முன் எதுவும் பேச முடியாமல் பல்லை கடித்து பொறுத்துக்கொண்டான்.
அவளின் செயல் யாருக்கும் பிடிக்கவில்லை என்பதை அவர்கள் முகமே சொன்னது.ரோகிணிக்கோ மகளை என்ன செய்வது என தெரியாமல் முழித்தார்.
மங்களம் பாட்டி”ஏய் நிகிதா இப்ப எதுக்கு பாதி சாப்பாட்டுல எந்திரிச்சா.. அத மொதல்ல சொல்லு”
அதற்கு கொஞ்சம் பயந்தவாறு”இல்ல கிரேனீ கொஞ்சம் காரமா இருக்கு.. “என்று இழுக்க..
காரம் அதிகம் சாப்பிடாத பிள்ளைகள் என்பதால் உண்மை என நம்பினர்
“நீ போய் ரெஸ்ட்டு எடு கண்ணு”என விசாலம் அனுப்பி வைத்தார்.
“ஆமாம் இவ என்ன வெட்டி முறிச்சா.. இந்தம்மா… ரெஸ்ட் எடுக்கசொல்லுது” என வாய்குள்ளே முனுமுனுத்தான்.
அவள் வீராவின் அறையில் சென்று முடங்கி கொண்டாள். எல்லோரும் சாப்பிட்டு முடிக்க.. விசாலா எல்லோருக்கும் நொங்கு சிறு துண்டுகளாக சீவிப் போட்ட பதநீர் கொடுத்தார்.
ஆராவுக்கு அதன் சுவை பிடித்துப் போக அதை தெரிந்து கொள்ள அத்தனை கேள்விகள் கேட்டாள் அய்யாவுவிடம்.
விசாலா நிகிதாவிற்கும் கொண்டு போய் கொடுத்தார்.
“நிகிதா கண்ணு.. இந்தா கண்ணு பதநீரு சாப்பிடுமா..” என்க
அவர் கையில் இருந்த கிண்ணத்தை வாங்கி ஒரு ஸ்பூன் சாப்பிட்டு விட்டு
“உவ்வே… தூ..தூ… ச்ச்சீ..நல்லாவே இல்லை. எப்படியோ ஸ்மெல் அடிக்குது”என்றாள் முகத்தை சுழித்து..
உடனே விசாலா முகம் வாடிவிட்டது.
“ஏங்கண்ணு இதுவும் பிடிக்கலையா…உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு.. அத்தை செஞ்சு தரேன்”
“எனக்கு எதுவும் வேணாம்” என்றுவிட்டாள் பட்டென்று..
விசாலா மருமகள் சரியாக சாப்பிடாததால்.. மனம் சுணங்க வெளியே வந்தார்.
தனது சார்ஜரில் போட்டு இருந்த போனை எடுக்க வந்த வீரா தன் அறைவாசலில் நின்று எல்லாம் கேட்டு கொண்டு தான் இருந்தான்.
விசாலா வீராவிடம் “இந்த பொண்ணு எதுவுமே சாப்பிடமாட்டேங்குது தம்பி.அதுக்கு நம்ம சாப்பாடு புடிக்கல போல..காஞ்சிபுரம் டவுனுல இருந்து அதுக்கு பிடிச்சமாதிரி எதாவது வாங்கியாறியா..” என்றார்.
அம்மாவின் முகவாட்டம் வீராவுக்கு நிகிதாவின் மேல் இன்னும் கோபத்தை அதிகரிக்க செய்தது.
“அம்மா நான் பார்த்துக்கறேன். நீங்க போங்க”என்று அனுப்பி வைத்தவன் உள்ளே வந்து நிகிதாவை தீப்பார்வை பார்க்க..
அவனை அலட்சியமாக பார்த்துவிட்டு தனது போனை எடுத்து அதில் தலையை நுழைத்து கொண்டாள். அவளின் செயல் அவனை அவமானப் படுத்த…கோபத்துடன் அவளை நெருங்க…
அவனுக்கு முன்பு பாட்டி அவளின் முன்னால் வந்து நின்றார்.
“ஏய்.. என்ன.. திமிரா…எதுவும் சாப்பிட மாட்டேங்கற..இழுத்து வச்சு இரண்டு அப்பு அப்புனேன் வையி.. கன்னம் பழுத்து போயிடும் பார்த்துக்க”
பெற்றவர்கள் செல்லத்தால் பிடிவாதகுணம் நிகிதாவிடம் அதிகம்.எப்போதும் பாட்டி தான் மிரட்டி அதட்டி என அவளை வழிக்கு கொண்டு வருவார். அதனால் பாட்டியிடம் அவளுக்கு கொஞ்சம் பயமுண்டு.
“விசாலா சாப்பாடு கொண்டு வருவா.. சாப்பிடற நீ அவ்வளவு தான்”
வெளிப்புறம் திரும்பி “விசாலா” என குரல் கொடுக்க.. விசாலா உணவுத் தட்டோடு வந்தார்.
“அம்மா நீங்க போங்க.. நான் பார்த்துக்கறேன்” விசாலா சொல்லிட..
பாட்டியும் பேரனும் நிகிதாவை எரித்து விடுவது போல பார்த்து விட்டு வெளியேறினர்.
ரோகிணி இதை எல்லாம் பார்த்தும் பார்க்காது போல இருந்து கொண்டார். மகளின் கஷ்டம் புரிந்தும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. மகளின் ஒரு செயல் தான் சரியாக பிள்ளைகளை கவனிக்கவில்லையோ என குற்றவுணர்ச்சி அதுமட்டுமின்றி மகள் வாழ்க்கைக்கு இது தான் சரி என அமைதியாக இருந்து கொண்டார்.
விசாலா நிகிதாவிடம்”ஏங்கண்ணு சாப்பாடு காரமா இருக்கா..அதுக்காக சாப்பிடமா இருப்பியா.. தயிர் சாதம் பிசைஞ்சு எடுத்துட்டு வந்திருக்கேன் சாப்பிடறியா”
கோபத்தில் எழுந்து வந்துவிட்டாளே தவிர அவளுக்கு நல்ல பசி.எதுவும் சொல்லாமல் வாங்கி அமைதியாக சாப்பிட்டாள்.
அதற்கு பிறகு எது செய்தாலும் விசாலா மருமகளை கேட்டு கேட்டு அவளுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தார்.
பதினைந்து வயதான ஆராவிற்கு வீட்டில் எப்பவும் தனிமை தான். தந்தை பிசினஸ் என இரவு வெகு தாமதமாக தான் வருவார். ரோகிணி ப்ரண்ட்ஸ் கூட மீட்டிங் கிளப் என வெங்கட் வரும் தாமதமாகத் தான் வருவார். நிகிதாவும் காலேஜ் வீட்டு வீடு வந்து சிறிது நேரத்தில் ப்ரண்ட்ஸ் கூட ஷாப்பிங் சினிமா மால் வீக் எண்ட் பப் என அவள் பொழுதுகள்…
பாட்டி தாத்தா வீட்டில் இருந்தாலும் அவளுக்கு என சில ஏக்கங்கள் உண்டு. வீரா வீட்டில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சிரிப்பும் கொண்டாட்மாக இருப்பது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
கலகலப்பாக பேசும் பொன்னியோடும் ஆயிரம் கேள்விகள் கேட்டு வீராவோடு ஒட்டிக் கொண்டாள்.
நிகிதா எவரோடும் ஒட்டாமல் ப்ரண்ட்ஸ் கூட பேசுவதும் சாட் பண்ணுவதும் என ஒதுங்கியே இருந்தாள்.
வீரா அறையில் இருந்தது சராசரியான டபுள்காட் கட்டில் இருவருக்கும் படுக்க இடம் போதவில்லை. ஒருவரை ஒருவர் இடித்து கொண்டு முறைத்துக் கொண்டு படுத்திருந்தனர்.
நிகிதாவிற்கு எப்பவும் டெட்டிபேர் கட்டி பிடித்து தூங்கினால் தான் தூக்கம் வரும்.அட்லீஸ்ட் கட்டிபிடிக்க ஒரு தலையணையாவது வேணும். தூக்கம் வராமல் கைகாலை உதறிக் கொண்டு படுத்திருக்க…
இவள் அழிச்சாட்டியத்தால் வீராவிற்கு தூங்க தொந்தரவாக இருக்க.. சிறிது நேரம் பொறுத்தவன்.. எழுந்து அமர்ந்து..
“எதுக்குடி இப்படி நெளிஞ்சுகிட்டே இருக்கே.. மனுசன் தூங்க வேணாம்”
எப்பவும் அவனிடம் ஏட்டிக்கு போட்டியாக பேசுவது போல இப்பவும்
“நான் அப்படி தான் பண்ணுவேன். உனக்கு டிஸ்டர்ப்பா இருந்தா கீழே போய் படு”
“மரியாதை இல்லாம பேசாதேனு சொல்லிஇருக்கேன்ல.. வந்ததுல இருந்து யாரையாவது மதிச்சு பேசியிருக்க.. தனியா வந்து உட்கார்ந்துகிட்டு உன்னை தேடி தேடி வந்து எல்லோரும் பேசனுமோ பெரிய மகாராணி இவங்க..”
“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் ராணி தான் என் பேரண்ட்ஸ் என்னை அப்படி தான் வெச்சிருக்காங்க..இந்த ஓல்டி பேச்சை கேட்டுகிட்டு உனக்கு கட்டி வச்சிட்டாருஎங்க அப்பா.. இதை ஒன்னு தான் எனக்கு பிடிக்காம அவங்க செஞ்சது”
“ஏன் செஞ்சாங்க.. நீ பண்ணி வச்ச வேலை அப்படி… ஏன்டி ஒரு பொம்பள புள்ள செய்யற காரியமா நீ செஞ்ச..”
“எங்கம்மா பதநீர் கொண்டு வந்து கொடுத்தா பிடிக்கலைனு துப்பற… நல்லா குடிச்சிட்டு வந்து நடுவீட்டில் மட்டையாகி கீழே விழுந்த உனக்கு பதநீர் புடிக்கலைனா ஆச்சரியம் தான்டி.. ஒரு வேளை சுண்ணாம்பு தடவாம கள்ளா கொடுத்து இருந்தா குடிச்சிருப்பியோ..”
“ஏய்… நான் ஒன்னும் வேணும்னே அப்படி குடிக்கல.. அது ப்ரண்ட்ஸ்குள்ள ஒரு போட்டி… அதான் அப்படி..” என இருக்க இருக்க அவள் பேச்சில் ஸ்ருதி குறைந்தது.
“என்னடி ஏய்.. சொல்ல சொல்ல மரியாதை இல்லாமல் பேசற..”
“போட்டியாம் போட்டி.. இல்லைனா மட்டும் இவ குடிக்கவே மாட்டா..”
“சும்மா என்னை மொடா குடிகாரி மாதிரி பேசாத.. நான் முதல்ல மொஜீட்டோ தான் குடிச்சிட்டு இருந்தேன். என் ப்ரண்ட்ஸ் தான் இதுல கொஞ்ச கொஞ்சம் ரம் கலந்து காக்டெய்ல் மாதிரி குடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னாங்க.. அது அப்படியே பழகி எப்பாவது கொஞ்சம் ஒயின் சாப்பிடுவேன். அதுவும் ஓயின் சாப்பிட்டா அழகா இருப்போம்னு தனுஷாவும் ரூபேஷீம் சொன்னாங்க அதான்”
“அது ஒரு குத்தம்னு உன்னைய போய் கட்டி வச்சிட்டாங்க.. என் கலர்க்கு அழகுக்கும் கொஞ்சம் கூட மேட்சாகாத உன்னைய என் லைப் பார்ட்னரா.. நினைச்சாவே டிஸ்கஸ்டிங்கா இருக்கு”
அவள் குடித்தது குற்றமே இல்லை என்பது போல விளக்கம் கொடுத்ததிலேயே கோபத்தில் இருந்தவனுக்கு தன்னை தரக் குறைவாக பேசுவும் சுருசுருவென ஏறவும்..
“ஏன்டி குடிச்சதை தப்பில்லைனு பேசினது மட்டுமில்லாம..என்னையவே டிஸ்கஸ்டிங்னா சொல்ற” என பளார் என அறைந்தான்.
அவன் அடிப்பான் என எதிர்பார்க்காதவள்.. அவன் அறைந்ததில் அதிர்ச்சியாகி அப்படியே அவனை பார்க்க.. கண்ணில் இருந்து கண்ணீர் கரகரவென இறங்கியது.
“ஆம்பள குடிக்கறதே தப்புனு நினைக்கறவன் நான்.. எனக்கு இப்படி ஒருத்திய கட்டி வச்சிடாங்க..நான் அமைதியா நிம்மதியான வாழ்க்கை தான் ஆசைப்பட்டேன்.ஆனா எனக்கு உன்னோடு மல்லுகட்டியே காலம் போயிடும் போல..”
“பெண்களே அடிக்கறது பாவம்னு நினைப்பேன். ஆனா அப்படி பட்ட என்னையவே அடிக்க வச்சிட்ட.. இருந்தாலும் நான் அடிச்சது தப்பு தான்… சாரி…சாரி… வெரி சாரி..” என சங்கடத்துடன் சொல்லி விட்டு திரும்பி படுத்து கொண்டான்.
இதுவரை அவளை யாரும் அடித்ததே இல்லை. ஏன் குடித்து மயங்கி விழுந்த போது கூட யாரும் அடிக்கவில்லை. பெற்றவர்கள் மகளின் நடவடிக்கையில் வருத்தம் தான் கொண்டனர். பாட்டி தாத்தா தான் திட்டி தீர்த்தனர்.
நிகிதா எதுவும் பேசாமல் சுவற்றின் பக்கம் ஒருக்களித்து கைகாலை குறுக்கி கொண்டு விசும்பியபடியே படுத்திருந்தாள். இருவரும் வெகு நேரம் வரை உறங்கவில்லை.
பொருந்தா வாழ்வில்
பொருத்தி வைத்து
சேர்த்து வாழ
கட்டாயப்படுத்தினால்
கட்டாயத்தினால்
காதல் மலருமா..
வாழ்வு சிறக்குமா…