2 – புயலோடு பூவுக்கென்ன மோகம்
அதிகாலையிலேயே எழும் பழக்கம் உள்ள வீரா விடிந்து வெகு நேரம் கழித்தே கண்விழித்தான். விழித்தவன் தன் மேலே கனமாக உணர்ந்தான்.
நிகிதா.. தான் அவன் மேலே கைகால்களை போட்டு கொண்டு கட்டி பிடித்து தூங்கி கொண்டு இருந்தாள்.
“ச்சே இது வேறயா..” என எரிச்சலில் அவளை வெடுக்கென பிடித்து தள்ளி விட்டான்.
நன்றாக தூங்கி கொண்டு இருந்தவள் அவன் தள்ளிவிட்டதில்.. எழுந்து மலங்க.. மலங்க.. விழிக்க..
அதை பார்த்து வீராவுக்கு இன்னும் எரிச்சல் அதிகமானது. “முழிக்குது பாரு தேவாங்கு மாதிரி” என முணுமுணுக்க… அந்த முணுமுணுப்பில் தெளிவானவள்..
“ஏய்.. ஏய்.. என்ன..என்ன சொன்ன..”
“என்ன சொன்னேன் ஒன்னும் சொல்லலையே..”
“இல்லல்ல.. நீ என்னமோ சொன்ன.. தேவாங்கு.. ஆங்..தேவாங்குனு சொன்ன..”
“ஆமாண்டி அப்படி தான் சொன்னேன். இப்ப அதுக்கு என்னங்கற…”
“அப்புறம் இன்னொன்னு நேத்தே மரியாதை இல்லாம பேசாதேனு சொன்னேன். மறுடியும் அதே மாதிரி தான் பேசற..சொல்லிட்டு இருக்கமாட்டேன். ஒரு காட்டு காட்டிருவேன் நெனைப்பு வைச்சுக்கோ ஆமாம்”
“அப்படி தான் பேசுவேன். என்ன பண்ணுவ” என்றாள் திமிராக… வீரா ரொம்பவே மரியாதையை எதிர்பார்ப்பவன். ரோசக்காரன்.கோபக்காரனும் கூட…
கிட்ட நெருங்கியவன் அவள் கையை பிடித்து பின்புறமாக திருப்பி முறுக்க…
வலி தாளாமல் கத்த ஆரம்பித்தாள்.
“ஐயோ.. ஐயோ விடு வலிக்குது”
மேலும் கையை இறுக்கி பிடித்து முறுக்க..வலி வேதனையில் அவள் வாயிலிருந்து தன்னாலே மரியாதை வந்தது.
“வலிக்குது விடுங்க…இனி இப்படி பேசல..” என்கவும்… அவளை உதறிவிட்டு எழுந்து குளியலறைக்கு சென்றுவிட்டான்.
நிகிதா கடிகாரத்தைப் பார்க்க அது எட்டு என காட்டியது. “ஓஎம்ஜி..எயிட் ஓ கிளாக் தான் ஆகுது. இப்பவே எழுப்பி விட்டுட்டான் டெவில்” என திட்டிக் கொண்டு இருந்தவள் குளியலறை கதவு திறக்கும் சத்தத்தில் கப்பென வாயை மூடிக் கொண்டாள்.
அவள் திரு திருவென முழித்து கொண்டு இவனைப் பார்க்க.. இவ ஏன் இப்படி முழிக்கிறா.. என அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவாறே தன் உடையோடு குளிக்க சென்றுவிட்டான்.
குளித்துவிட்டு வந்து அங்கே ஒருத்தி இருப்பதை கண்டு கொள்ளாமல் தயாராகி கீழே சென்றுவிட்டான்.
இவன் கீழே சென்ற போது பாட்டி தாத்தா இருவரும் இவர்கள் அறையை பார்த்தவாறே அமர்ந்திருந்தனர். அவர்கள் முகம் கவலையாக இருப்பதை பார்த்தவன் அவர்கள் அருகில் சென்று முகத்தில் வலிய வைத்த சிரிப்புடன் அமர…
“கண்ணா சந்தோஷமா இருக்கறியா… உன்னை கஷ்டப்படுத்தறோமோ..”என வீராவின் கன்னத்தை வாஞ்சையாக தடவியவாறே கவலையுடன் கேட்க..
“அம்மாச்சி.. எதுக்கு வருத்தப்படறிங்க..எல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்றான்.
தங்களின் ஒரே பேரன்… செல்ல பேரன்… அவன் வாழ்க்கையை வீணாக்கி விட்டோமோ என்ற குற்றவுணர்வு ஏற்கனவே மனதில்… ஆனாலும் தங்கள் பேத்தியின் வாழ்க்கையை சரி பண்ண வீராவால் மட்டுமே முடியும். வேற வழியில்லையே.. என்ற சிந்தனையில் கண்கள் கலங்கி விட…
“அச்சோ அம்மாச்சி.. என்னது இது”அவர் கைகளை பிடித்து கொண்டு
“என் பியூட்டி அழுதா நல்லாவே இல்லை. பாருங்க.. நீங்க அடிச்சிருந்த ஒரு கோட் பவுடரும் கரைஞ்சிடுச்சு..” என கேலி பேச..
“போடா படவா..”என லேசாக சிரித்தவாறே சேலை தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொள்ள..
“மங்களா.. வீராவுக்கு காபி எடுத்துட்டு வா போ”என சொக்கலிங்கம் சொல்ல.. பாட்டி எழுந்து சென்றார்.
தங்கள் பேச்சு மனைவியின் காதில் விழாத தூரம் சென்றதை உறுதி படுத்திக் கொண்டு
“வீரா.. தாத்தா தப்பு பண்ணிட்டேன் நினைக்கறியா..” என சொல்ல இடையிட்டவாறு..
“தாத்தா என்ன நீங்க.. இப்படி எல்லாம்”
“வீரா உன் பாட்டி வரங்காட்டி நான் கொஞ்சம் பேசனும். பேசிடறேன் குறுக்கிடாம கேளு”
“சொல்லுங்க தாத்தா”
“எனக்கு தெரியும் உங்க மாமன் வீட்டோட மாப்பிள்ளையா வந்தது உனக்கு பிடிக்கல.. அதுல உன்னையும் அதே மாதிரி கொண்டு வந்துட்டமேனு உனக்கு கோபம்..ஆனா எனக்கு வேற வழி தெரியல..உங்க மாமன் தொழில் பின்னாடி ஓட.. உங்க அத்தையோ ப்ரண்ட்ஸ் கிளப்னு.. பிள்ளைகள இவங்க பார்க்கல.. பாசத்தை பணமா கொடுத்து அதுங்க நடவடிக்கை சேர்க்கை எதையும் கவனிக்கல..”
“நாகரிகம் சுகந்திரம்னு அதுங்க பாதை மாறி போகும் போது தான் உங்க மாமன் அதுங்கள பார்த்துக்க எங்கள ஊரில் இருந்து கூட்டிட்டு வந்தான்”
“ஏதோ எங்க கண்டிப்புலயும் பாசத்துலயும் ஓரளவுக்கு சரி பண்ணினோம். நாங்க வந்தப்ப ஆராத்யா சின்ன புள்ள அதனால நாங்க ஈசியா எங்க வழிக்கு திருப்பிட்டோம். ஆனா நிகிதா இரண்டு கெட்டான் வயசு கொஞ்சம் பிடிவாதம் என எங்களால அவள தான் சரி பண்ண முடியல.. ஆனா நல்ல புள்ள… சேர்க்கை தான் சரியில்ல..”
“வெளிய மாப்பிள்ளை பார்த்தா.. வரவன் எப்படி.. என்ன… என தெரியாது. நாங்க இருக்கற வரை இந்த குடும்பத்தை பார்த்துப்போம் எங்களுக்கு பிறகு..” என சொல்லி கொண்டே வந்தவர் தொண்டை அடைக்க..
எதுவும் பேசாமல் வீரா தாத்தாவின் கைகளை பிடித்து தட்டி கொடுக்க..
தொண்டையை செருமிக் கொண்டு “நம்ம இரத்தமா இருந்தா வேறயா நினைக்காது. ஆண்வாரிசு இல்லாத இந்த குடும்பத்தையும் உங்க மாமனையும் தொழிலையும் கவனிக்க உரிமையான உறவால தான் முடியும் னு நினைச்சு தான் உன்ன மாப்பிள்ளையாக்கினேன்”
“தாத்தா எல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க நிம்மதியா இருங்க”
“இதை தான் கல்யாணத்திற்கு முன்பு சொல்ல வந்தேன் கோபத்துல கேட்கல”என வருத்தப்பட..
அவனுக்கு இப்போதும் உள்ளுக்குள் கோபம் இருந்தது. ஆனால் வருத்தத்தில் இருக்கும் பெரியவர்களை பேசி நோகடிக்க வேணாம். இனி பேசி என்னாக போகுது என அமைதியாகிவிட்டான்.
பேரன் பேசாததிலேயே அவன் மனவோட்டம் புரிந்தவர் எதுவும் கோபமாக பேசாமல்.. தான் பேசியதையாவது காது கொடுத்து கேட்டானே.. பெரும் மூச்சுவிட்டார்.
அதற்குள் மங்களம் பாட்டி காபியோடு வர..
“அம்மாச்சி காபி கொண்டு வர இவ்வளவு நேரமா..”
“இந்த வீட்ல எது வேணும்னாலும் சொன்னா இருக்கற இடத்துக்கு வந்திடும்.அப்படி இருந்தும் உங்க தாத்தா என்னைய காபி கொண்டு வானு சொல்லும் போதே உங்கிட்ட தனியா பேச நினைக்கிறாருனு புரிஞ்சுகிட்டேன். அதான் கொஞ்சம் தாமசமா வந்தேன்”
இந்த புரிதல் இதை தானே அவனும் எதிர்பார்த்தான். எளிமையான வாழ்க்கை தன்னை புரிந்து கொண்டு தன் சம்பளத்திற்குள் குடும்பம் நடத்தும் அமைதியான மனைவி என ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கை தான் அவனின் எண்ணமாக இருக்க… அவனின் எண்ணம் எல்லாம் வண்ணமாக மாறாமல்.. அழிந்து போன கோபம் அவனின் அகத்துள்..
தன் எண்ணத்திலிருந்து விடுபட்டு பெரியவர்களை கவனிக்கலானான்.
“அம்மாச்சி உங்களுக்கு”
“நாங்க குடிச்சிட்டோம் நீ குடி பா”
அவன் குடித்து முடிக்கவும் வெங்கட் தயராகி கீழே வரவும் சரியாக இருந்தது. தன் பெற்றோரின் அருகில் அமர்ந்து இருந்த வீராவைப் பார்த்ததும் மெலிதான புன்னகையோடு
“குட்மார்னிங் மாப்ள” என்க..
“மாமா மாப்ள எல்லாம் வேண்டாம். எப்பவும் போல வீரானே கூப்பிடுங்க..”
“இருக்கட்டும் மாப்ளே…எப்ப நம்ம பேக்டரிக்கு வரிங்க.. உங்க வேலைக்கு ரிப்போர்ட் கொடுத்துட்டிங்கல்ல..”
“ம்… கொடுத்துட்டேன். இன்னைக்கே வேணாலும் வரேன்” என்றான் சற்று தயக்கமாக…
அவன் சுயமரியாதைகாரன். வீட்டோடு மாப்பிள்ளை அவனின் சுயமரியாதைக்கு பெரிய அடி. அதை ஏற்றுக் கொள்ள முடியாமல்… அதிலிருந்து விடுபடவும் முடியாமல்… அவனின் மனம் நெருப்பை போல தகதகவென எரிந்து கொண்டு இருந்தது.
“இன்னைக்கே வேணாம் மாப்ள..சடங்கு விருந்து இதெல்லாம் இருக்கு.. ”
கொஞ்சம் தயங்கியவாறே “ஹனீமூன் டிரிப் எங்கயாவது போறிங்களா.. அரேஞ்ச் பண்ணவா..”என்றார் வீராவின் முகத்தை சங்கடத்துடன் பார்த்தவாறே..
ஆமாம் அது ஒன்னு தான் குறைச்சல் என மனதினுள் நொடித்து கொண்டு”இல்ல. மாமா அதெல்லாம் எதுவும் வேணாம்” என்றான் பட்டென்று..
பேச்சை மாற்றும் விதமாக பேக்டரி சம்மந்தமாக தனக்கு தெரியாதவற்றை பற்றி கேட்டான்.
வெங்கட்டிற்கு தனது தொழில் தான் எல்லாமே குடும்பம் கூட அடுத்த நிலை தான். வீரா கேட்கவும் அவன் பேச்சை திருப்பும் வித்தையை அறியாமல் வெகு சுவராஸ்யமாக அவனுக்கு விளக்க ஆரம்பித்துவிட்டார்.
இனி இது தான் வாழ்க்கை என மனதில் நிறுத்தி கொண்டு அவனும் கர்ம சிரத்தையாக கேட்க ஆரம்பித்தான்.
அதற்குள் மங்களம் பாட்டி நிகிதாவின் அறைக்கு சென்று அவளை கிளப்பி கொண்டு கீழே இழுத்து வந்தார்.
பாட்டி சென்று பார்த்த போது நிகிதா மறுபடியும் படுத்து நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள்.
என்ன இந்த பொண்ணு இப்படி பண்றாளே.. புருஷன் எழுந்து குளித்து ரெடியாகி வந்துட்டான். இன்னும் தூங்கறாளே.. இப்படி இருந்தா எப்படி.. என வேதனைப்பட்டவர்.
“நிகிதா… ஏய் நிகிதா.. எழுந்திரு” என முதுகில் இரண்டு போட்டார்.
“ஐயோ கிரேனீ வலிக்குது” என முதுகை தேய்த்து கொண்டு எழுந்து அமர்ந்தாள்.
“எழுந்து குளிச்சிட்டு வா.. வந்து உன் புருஷன கவனி”
“நான் என்ன அவனுக்கு சர்வென்டா.. அதெல்லாம் முடியாது”
“மரியாதை இல்லாம பேசாதேன் சொல்லியிருக்கேனா இல்லையா..” என மிரட்ட..
“பாட்டிக்கும் பேரனுக்கும் இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல…மரியாதை வேணுமா.. மரியாதை” என்று அவள் முணுமுணுக்க..
“என்ன முணுமுணுப்பு… போய் குளி”என்றார் அதட்டலாக..
அவள் குளித்து வருதற்குள் அவளுக்கு ஒரு சாப்ட் சில்க் புடவையை எடுத்து வைத்தார்.
குளித்து வந்தவள் புடவையை பார்த்தும் எரிச்சலாகி..
“நான் சேரிலாம் கட்டமாட்டேன்”
“நீ புடவை தான் கட்டற..”
“எனக்கு பிடிக்கல..கட்டமாட்டேன்”
“நேத்து தானே கல்யாணம் ஆகியிருக்கு.. இன்னைக்கு வீட்ல விருந்து. சொந்தகாரங்க வருவாங்க.. புடவை கட்டி தான் ஆகனும்” என்றார் கோபத்துடன்..
“அதெல்லாம் முடியாது. முடியவே முடியாது”
“சொல்லறத கேளு கொஞ்ச நேரம் கட்டியிரு.. அப்புறம் மாத்திக்கலாம்”
“நோ வே என்னால முடியாது” என பிடிவாதமா சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
பாட்டி எவ்வளோ கெஞ்சி கொஞ்சி அதட்டி பார்த்தும் வேலை ஆகவில்லை. கடைசியில் அவர் தான் அவள் வழிக்கு செல்ல வேண்டி வந்தது.
த்ரெட் ஒர்க் பண்ணின அழகான ஒரு சுடிதாரை கையில் கொடுத்து..
“இதையாவது போடு” என்க
“இதா..”என்றவளை முறைத்து
“இதான். பின்னே எப்பவும் போல ஆம்பள புள்ள மாதிரி ஜீன்ஸ் சட்டை போடலாம்னு நினைச்சியா… இது போடு இல்லைனா புடவைய கட்டு.. என்ன பண்ற..”
நிகிதா முகத்தை சுளித்தவாறு சுடிதாரை வாங்கி கொண்டு
“நீங்க போங்க நான் ரெடியாகி வரேன்”
“இல்ல நான் பெட்ரூம்ல இருக்கேன். நீ வா.. அப்புறம் இன்னொன்னு தலைவிரி கோலமா வராதே.. பின்னல் போட்டு இந்தா இந்த பூவை வச்சுகிட்டு வா” என மல்லிகை சரத்தை கையில் கொடுத்தார்
பாட்டியை முறைத்துக் கொண்டே”இந்த ஹேர்ஸ்டைலுக்கு பின்னல் எல்லாம் போடமுடியாது” என்றாள் வெடுக்கென..
“எப்படியோ முடிய விரிச்சு போடாம அது ஏதோ… ஆங்.. கிளிப்பு போட்டு பூ வச்சுகிட்டு வா..கண்டிப்பா பூ வச்சிருக்கனும்” என்று சொல்லி விட்டு டிரஸ்ஸிங் அறையில் இருந்து வெளியேறினார்.
அவர் வெளியே சென்றதும் கதவை அடைத்தவள் “ஓல்டு லேடி டார்ச்சர் தாங்க முடியல… அந்த கருவாயனுக்காக இவ்வளவு மேக்கப் ஓவர் தான். ஓல்டிய அனுப்பிட்டு இந்த மம்மி என்ன பண்றாங்க” என்று புலம்பியவள்
எப்பவும் அவள் போடும் மேக்கப் குறையாமல்.. கிளிப் போட்டு சரமாக மல்லிகை பூவை வைத்து கொண்டு வெளியே வந்தாள்.
படுக்கை அறையில் பாட்டி இல்லை என்றதும் ஊப் என வாயை ஊதி ஒரு பெருமூச்சு விட்டவள் கீழே சென்றாள்.
ஆண்கள் மூவரும் தொழில் விசயமாக பேசி கொண்டு இருந்தனர். மெல்லிய கொலு ஒலியில் வீரா திரும்பி பார்த்தான். நிகிதா இரு தோள்களிலும் மல்லிகை சரம் தொங்க..அவள் நிறத்தை தூக்கி காட்டும் வண்ணம் கருநீல சுடிதாரில் இறங்கி வந்தவளை ஒரு நொடி அசந்து போய் தன்னை மறந்து பார்த்திருந்தான் வீரா.
அடுத்த நொடியே தலையை லேசாக உலுக்கி யப்பா… மேக்கப் கொஞ்சம் ஓவர் தான் என நினைத்து சட்டென பார்வையை திருப்பிக் கொண்டான்.
நிகிதா தாயை தேடி கிச்சனுக்கு சென்றாள். அங்கு ரோகிணி இன்றைய விருந்துக்கு சமைக்க வந்திருந்த ஆட்களை வேலை வாங்கி கொண்டு இருந்தார்.
மகளின் மம்மி என்ற அழைப்பில் திரும்பி பார்த்தவர் மகளின் அழகில் கண்கள் கலங்க அருகே வந்து கன்னம் கிள்ளி கிள்ளு முத்தம் ஒன்று வைத்தார்.
“டின்னர் ரெடியாகிடுச்சு போ எல்லோரையும் கூப்பிடு சாப்பிடலாம்”
“அவங்களுக்கு பசிச்சா வந்து சாப்பிடட்டும் நான் எதுக்கு கூப்பிடனும்”என்றாள்.
அந்த வீட்டில் யாரும் யாருக்காகவும் காத்திருக்காமல் சாப்பிட்டு விட்டு அவரவர் வேலையை பார்க்க சென்று விடுவர். தாத்தா பாட்டியை தவிர..
“நிக்கி பேபி அப்படி சொல்லகூடாது. போ கூப்பிடு”
“மீ…. ” என்று சிணுங்கியவாறு சென்றாள்.
அதற்குள் பாட்டியே ஆண்களை சாப்பிட அழைத்திட.. சாப்பிட வந்தனர். வீராவுக்கு அருகில் நிகிதாவை அமர வைத்து வெங்கட் சொக்கலிங்கம் அமர.. ஆராத்யாவும் இவர்களுடன் இணைந்து கொண்டாள்.
வேலையாளை விடுத்து மங்களமும் ரோகிணியும் பரிமாறினர்.
ஆராத்யா “கிரேனி இப்படி எல்லோரும் சேர்ந்து சாப்பிடறது கூட நல்லா இருக்குல்ல..இப்படியே தினமும் சாப்பிடலாம்”
“அதுக்கென்ன சாப்பிடலாம் ஆரா” பாட்டி சொல்ல.. வீரா ஆராத்யாவை பார்த்து சிரித்தான்.
வீராவின் பக்கத்தில் இருந்தவளோ எதையும் கண்டு கொள்ளாமல் சாப்பாட்டை கொறித்து கொண்டு இருந்தாள். அவளுக்கு வீராவின் பக்கத்தில் உட்கார வைத்த கோபம்.
இவள் என்ன இப்படி கொறித்து கொண்டு இருக்கிறாள் அதனால தான் ஒட்டடை குச்சி மாதிரி இருக்காளோ என நினைத்தவன் அவ எப்படி சாப்பிட்டா நமக்கென்ன என்று தான் சாப்பிட்டான்.
வீரா எப்பவும் கொஞ்சம் நன்றாக சாப்பிடகூடியவன். பேரனை பற்றி அறிந்த பாட்டி அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாற.. நிகிதாவோ என்ன இவ்வளவ சாப்பிடுகிறான். அதனால் தான் பாக்சர் மாதிரி இருக்கான் என நினைத்தாள்.
இருவரும் எல்லாவற்றிலுமே எதிரும் புதிருமாக இருக்க.. இவர்கள் எப்படி இணைந்து வாழ்வார்களோ…?
இயல்பும் மனமும்
எதிரெதிர் திசையில்
பயணிக்க..
எதிரெதிர் துருவங்களாய்
நிற்கும் இருவரும்
வாழ்க்கை பாதையில்
ஒரே நேர்கோட்டில்
இணைவார்களா…
பயணிப்பார்களா…
பயணம் சுகமாக
சுமூகமாக இருக்குமா…..