23 – புள்ளி மேவாத மான்
எழில் சமாதானம் ஆகி சமரசம் கொண்டு சரசம் ஆடிய பின்பு மேற்கொண்டு இரண்டு நாட்கள் சென்றிருந்தது. அந்த இரண்டு நாளும் அவ்வப்போது எழிலின் முகத்தையே சில நிமிடங்கள் விடாது பார்ப்பான். என்னவென்று எழில் கேட்டால் ஒன்றுமில்லை என தலை அசைத்துவிடுவான்.
அவன் விழிப் பார்வையில் ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.முதலில் எழிலுக்கு அந்த பார்வையின் அர்த்தம் புரியவில்லை. சற்று யோசித்து பார்த்தப் பொழுது அந்த பார்வை தன்னிடம் எதையோ கேட்கிறது இல்லை எதிர்பார்க்கிறது என புரிந்து கொண்டாள்.
அன்று இரவில் தங்கள் அறையில் இருந்த பொழுதும் அதே பார்வை. தனாவை கேட்க மழுப்பலாக பதில் சொல்ல… விடாது இழுத்து வைத்து கேட்டாள் எழில்.
“மாமா.. எதுக்கு இப்படி பார்க்கறிங்க…”
“ஒன்னுமில்லை நீ தூங்கு”
“இப்ப சொல்லப் போறிங்களா.. இல்லையா..”
“ம்கூம்.. சொல்லமாட்டேன். நீயே கண்டுபிடி”
“எங்கிட்ட ஏதோ எதிர்பார்க்கறிங்க..கேட்காமேயே அத நான் செய்யனும்னு நினைக்கறிங்க..”
எதுவும் பேசாமல் அவள் முகத்தையே பார்த்திருக்க…
“அப்படி தானா… ஆனா என்னன்னு தெரியலையே..”அழகாக உதடு பிதுக்கினாள்.
அவள் பாவனையில் இவன் சொக்கி தான் போனான். அவளை காதலோடு பார்க்க…
“என்ன்னு சொல்லுங்க மாமா..எனக்கு தெரியல.. மண்டயே வெடிச்சிடும் போல இருக்கு.. ப்ளீ…ஸ்..”என அவன் தாடையை பிடித்து கொஞ்சலாக கெஞ்சினாள்.
அள்ளி அணைத்திட துடித்த கைகளை கடினப்பட்டு கட்டுப்படுத்தினான்.அவள் கொஞ்சல் மொழியில் மனம் இரங்கி தன் வலக்கை நீட்டி தா என்பது போல பார்த்தான்.
என்ன தரனும் என புரியாமல் “என்ன மாமா..என்ன தரனும்” முழித்தாள் சிறு குழந்தையாக…
அவள் செய்கை எல்லாம் அவனை பித்தனாக்கியது. அவளை ஆண்டு விட துடித்த உணர்வுகளை அடக்கி வைத்தான். அவளிடம் தனக்கு வேண்டியதை பெற்ற பிறகே மற்றது எல்லாம் என அவளை தீர்க்கமாக பார்த்தவாறே..
“என் கிப்ட் எல்லாம் கொடுடி”என்றான் அவள் முன் கையை நீட்டினான்.
“மா..மா..”என்றாள் அவனை ஆச்சரியமாக பார்த்தபடி..
எல்லாம் எனக்கு தெரியும் என்பதாக லேசாக தலை அசைத்து இமைமூடி திறந்தான்.
மாமாவுக்கு தெரிந்திருக்கா… தன் காதலை சொல்லாமல் தனக்குள்ளேயே பொத்தி வைத்திருக்க.. அந்த காதல் சொல்லாமலேயே தன் மாமனுக்கு தெரிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு இருந்தவளுக்கு தன் காதல் பரிசுகளும் சொல்லாமலேயே தெரிந்ததில்..லேசாக கண் கலங்க.. அதை துடைக்க கூட மறந்தவளாக.. சென்று தன் அலமாரியில் வைத்திருந்த சற்றே பெரியதான அலங்கார மரப்பெட்டியை தூக்கி கொண்டு வந்தாள்.
வேகமாக சென்று அவளிடம் இருந்து வாங்கி வந்து படுக்கையில் வைத்தான்.
அதன் சிறு பூட்டை சாவி கொண்டு திறந்தாள். அந்த பெட்டி பரிசுப் பொருட்களாலும் வாழ்த்து அட்டைகளாலும் நிரப்பப்பட்டு இருந்தது.
ஒரு வாழ்த்து அட்டையை எடுத்து”இது தான் நான் உங்களுக்கு பர்ஸ்ட் பர்ஸ்ட் வாங்கின பர்த்டே கார்டு. நீங்க காலேஜ் போய் ஒரு வருசம் கழிச்சு வந்திங்கல்ல.. அதுக்கப்புறம் வந்த உங்க பர்த்டேவுக்கு நான் வாங்கினது. கொடுக்க தைரியமில்லா வச்சுகிட்டேன்.”
அந்த கார்டை வாங்கி பார்த்தான். அதில் உள்ளே ‘ஹாப்பி பர்த்டே மாமா” என எழிதியிருந்தது. அதை தவிர அதில் ஒன்றும் பெரிதாக இல்லை.
ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் அவள் கொடுக்காமல் வைத்திருந்தில் ஒன்றில் அழகான இதயம்.. மற்றொன்றில் கொஞ்சி கொள்ளும் லவ்பேர்ட்ஸ்.. இன்னொன்றில் அவளுடைய உதடும் பக்கத்தில் அவன் மீசையும் என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக வரைந்திருந்தாள். பத்து வருட காதலில் பத்து பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள்.
சில காதலர் தின வாழ்த்து அட்டைகளும் அவன் கையில் இருந்தன.அதை பிரித்து படித்தவனால் சத்தியமாக அவனால் நார்மலாக இருக்க. முடியவில்லை. எதையோ இழந்து விட்டதாகவும்…ஏதோ கிடைத்தற்கரிய பொக்கிஷம் கிடைத்தது போலவும் இரு வேறு உணர்வுகளுக்கு ஆட் கொண்டான்.
காதல் பேதை என்னை
ஒரு மையல் பார்வை
பாரடா என் காதல் தேவா
அந்த பார்வை போதும்
என் காதல் வாழ…
அந்த காதலை உயிராக
கொண்டு நான் வாழ்ந்திடுவேன்.
என ஒரு வாழ்த்து அட்டையில்..
இன்னொன்றில்….
உன் மீசையும்
அதில் மறைந்திருக்கும்
உன் உதட்டில் பளீரிடும்
உன் வெண் சிரிப்பும்
எனை பித்து கொள்ள செய்கிறதடா…
இப்படி சில கவிதைகளும் இருந்தன.
அதை எல்லாம் பார்க்க.. பார்க்க.. அவனை பேச்சற்ற மௌனமே ஆட்சி செய்தது.
ஒவ்வொரு பரிசு பொருளாக கையில் கொடுக்க ஆரம்பித்தாள்.
“உங்களை நான் லவ் பண்றேனு தெரிஞ்ச அந்த வருடம் நான் ஸ்கூல் டூர் கேரளா போயிருந்த போது உங்களுக்காக நான் வாங்கியது”என அவன் கைகளில் வைத்தாள் சந்தன மரத்தில் அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு பேனா.
“இது நான் அத்தை கூட உங்க பர்த்டேவுக்கு டிரஸ் எடுக்க போன போது பார்த்தேனா.. பிடிச்சிருந்தது. யாருக்கும் தெரியாம அடுத்த நாள் ஸ்கூல் இருந்து போய் வாங்கிட்டு வந்தேன்” என கொடுத்தாள் சாண்டில் கலர் சட்டை ஒன்று.
“குவாலியர்ல ரொம்ப குளிரும்னு அத்தை சொன்னாங்களா.. அதான் ஒரு ஸ்வெட்டர் வாங்கினேன். ப்ப்ச் கொடுக்க தான் இல்லை” என்றாள் ஒரு ஸ்வெட்டரை எடுத்து..
“நீங்க காலேஜ்ல கோல்டு மெடல் வாங்கினதுக்காக ஏதாவது கொடுக்கனும்னு தோனுச்சா.. கோல்டு மெடல்ங்கற போது.. பெரிசா ஒர்த்தா கொடுக்கனுமில்ல..அதான் ஏதாவது தங்கத்தில கொடுக்கலாம்னு யோசிச்சு என் தோட்டை வித்து இதை வாங்கினேன்”என ஒரு மோதிரத்தை கொடுத்தாள்.
அவள் கண்களில் காதல் மின்ன.. மின்ன.. ஒவ்வொன்றாக சொல்லி எடுத்து கொடுக்க தன்னை மறந்து அவளிடமே லயித்து இருந்தவன்.
“அடிப்பாவி தோட்டை வித்துட்டயா..உங்க வீட்ல ஒன்னும் கேட்கலையா..”
“கேட்டாங்க.. கேட்டாங்க.. கேட்காம இருப்பாங்களா.. அதான் யோசிச்சு முன்னாடியே ஒரு பிளான் பண்ணிருந்தேன்”
“என்னாது அது”
“ஸ்கூல் விட்டு வரும் போது யாரும் இல்லாத ரோட்ல சைக்கிளை மறிச்சு கத்திய காட்டி ஒரு திருடன் கேட்டான். பயத்துல கழட்டி கொடுத்துட்டேனு சொல்லிட்டேன் ஐயோ பாவம் புள்ளனு விட்டுட்டாங்க ” என்றாள் கண்களை சிமிட்டி..
“அடிப்பாவி.. நீ பெரிய கேடியா இருப்ப போல இருக்கே..” என வாய் மேல் கை வைத்து கொண்டான் தனா.
அடுத்தடுத்த சில பொருட்களை கையில் கொடுத்து “நீங்க பூங்கொடிக்காவ லவ் பண்ணறிங்கனு தெரிஞ்சும் இதெல்லாம் வேஸ்ட் இனி வாங்க வேணாம்னு தான் நினைச்சேன். ஆனால் என்னால உங்கள மறந்து உங்களுக்கு வாங்காம இருக்க முடியல.. அதான் என் காதல் எங்கும் தோற்காது என என்னோடவே பொத்தி பொக்கிஷமா வச்சுகிட்டேன்” என்றாள். சொல்லும் போதே கண்களில் சிறுவலி வந்து போனது.
அவளின் காதலில் மிரண்டு தான் போனான் தனா. அவளை தாவி அணைத்து கொண்டான். அவள் காதல் உன்னதத்தை புரிந்து கொள்ளாமல் தான் செய்த மடத்தனத்தை நினைத்து இப்போதும் தன்னையே திட்டிக் கொண்டான் மனதோடு..
அந்த பொருட்களை எல்லாம் பெட்டியில் அடுக்கி எடுத்து கொண்டு போய் தன் அலமாரியில் வைத்து விட்டு வந்தான்.
படுக்கையில் அவளருகே வந்து அவள் மடியில் தலை வைத்து படுத்து அவள் வயிற்றில் முகம் புதைத்து இடுப்பை கட்டிக் கொண்டான்.
எதுவும் பேசாமல் எழிலும் தலை கோதி கொடுக்க..சிறிது நேரத்தில் தன் சேலையில் ஈரம் உணர்ந்தவள்பதறி போய் தனாவின் முகத்தை திருப்ப முயற்சிக்க.. பிடிவாதமாக முகம் திருப்ப மறுக்க..
“என்னாச்ச மாமா.. ஏன் அழுகறிங்க.”
“உன் காதலுக்கு நான் தகுதியானவனே இல்லை தான”
“ஐயோ.. மாமா.. ஏன் அப்படி நினைக்கறிங்க..முதல்லயே என் காதலை நான் உங்கிட்ட சொல்லியிருந்தா.. நீங்க என்னைய தான லவ் பண்ணியிருப்பிங்க.. சொல்லாத காதலுக்கு ஏது மாமா மதிப்பு” என்றாள் ஏக்கத்தோடு..
உடனே வாயை பொத்தி”அப்படி சொல்லாதடி உன் காதலை எல்லாம் காதல்னு சொல்லகூடாது. தெய்வீக அன்பு அப்படி தான் சொல்லனும் சும்மா என்னை சமாதானம் செய்ய எதுவும் சொல்லாத பேசாம இரு.”மீண்டும் அமைதியாக கட்டிக்கொள்ள..
எழில் மீண்டும் தலை கோதிவிட.. அவனுடைய பாப்புகுட்டியோ தந்தையின் கன்னத்தை உராய்ந்து உராய்ந்து கவலையை போக்கியது.
மகவின் பாசத்தில் ” பாப்புகுட்டி.. பாப்புக்குட்டி..” என முத்தமிட..
தந்தை பாசத்தில் அவனோ மீசை உரச முத்தமிட.. எழிலுக்கோ மீசை உரசலில் அவஸ்தையாக நெளிந்தாள்.
அவள் நெளியவும்”ப்ப்ச் என்னடி”என அவள் முகத்தை பார்க்க..அவள் கண்களில் தெரிந்த மையலில் தந்தை வேசத்தை கலைத்து காதலன் பதவிக்கு மீண்டுவிட்டான்.
அதன் பிறகு அவளின் காதல் மழையில் நனைந்தவன் அவளை மோக மழையில் குளிப்பாட்டினான்.
அன்றிலிருந்து தனா எழில்.. எழில்.. என எழில்தாசனாகி போனான். எழுந்தது முதல் தூங்கும் வரை எழிலின் பின்னாலேயே சுற்றி திரிந்தான்.
அவளின் காதல் பொக்கிஷத்தை தனக்குள் வாங்கி கொண்டவன். தன் காதல் தேவதையை தினம் தினம் ஆராதித்தான்.
பகல் எல்லாம் எழில் என்றால் இரவில் பாப்பு குட்டி என வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தான்.
மாதங்கள் தள்ள தள்ள.. எழிலால் எந்த வேலையும் சுறுசுறுப்பாக செய்ய முடியவில்லை. எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் இருப்பதை விட இவள் வயிறும் சற்று பெரியதாகவே இருக்க.. வேலை செய்தால் மேல் மூச்சு வாங்கியது.
கற்பகமோ வீடு பெருக்கு.. துணி துவை குனிந்து நிமிர்ந்து வேலை செய் என போன் செய்து சொல்லவும்… அவளால் முடியாவிட்டாலும் சுற்று வேலைக்கு வரும் பெண்ணை நிறுத்தி விட்டு மெது மெதுவாக செய்ய..
தனாவோ எழில் கஷ்டப்படுவதை கண்டு மாமியாரிடம் போன் செய்து சண்டைக்கு போக.. அவரும் மருமகனிடம் பொறுமையாக எடுத்து சொன்னார்.
எங்கே அதெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை தனா. அந்தளவுக்கு எழிலின் காதலுக்கு அடிமையாகி இருந்தான்.
எழிலையும் வேலை செய்ய விடவில்லை. இதை அறிந்த கற்பகம் வழக்கம் போல திலகாவிடம் பஞ்சாயத்து வைக்க…
அன்று மாலையே திலகாவும் தேவியும் தனா வீட்டிற்கு வந்தனர். தனாவும் வீட்டில் தான் இருந்தான்.வெற்றி மூலம் அதை அறிந்து தானே வந்திருந்தனர்.
இப்போழுது எல்லாம் சரியாக பேக்டரில அவன் இருப்பதே இல்லை. சமையல் கூட எழிலை செய்ய விடுவதில்லை. இருளாயியால் முடியவில்லை என வயலில் வேலை செய்யும் பெண்களில் ஒருவரை சமையலுக்கு வைத்திருந்தான்.
காலையில் எழுந்து அந்த பெண்ணை இதை செய் அதை செய் என படுத்தி எடுத்து.. அதை எல்லாம் அவளுக்கு மூச்சு முட்டி போகும் அளவுக்கு சாப்பிட வைத்து மாத்திரைகள் கொடுத்து என அவன் பேக்டரி கிளம்பவே பதினொரு மணி ஆகிவிடும்.
சென்ற ஒருமணி நேரத்தில் வந்துவிடுவான். தன் கையாலேயே ஏதாவது பழஜீஸ் எடுத்து அருகில் இருந்து குடிக்க வைத்து விட்டு செல்வான். அடுத்த ஒருமணி நேரத்தில் மதியசாப்பாட்டிற்கு வந்துவிடுவான்.
அவளை சாப்பிட வைத்து தானும் சாப்பிட்டு இருவரும் ஓய்வாக தூங்கி எழுந்து என மாலை ஐந்து மணிக்கு தான் செல்வான்.அடுத்த ஒரு மணிநேரம்.. அடுத்த ஒருமணி நேரம் என பேக்டரிக்கும் வீட்டுக்கும் காவடி எடுப்பான் . இரவு ஏழு மணிக்கு எல்லாம் வீடு வந்துவிடுவான் வேலை இருந்தாலும் இல்லை என்றாலும்.. வெற்றி கருணாவிடம் சொல்லி கொண்டு…
திலகா “தனா.. சொல்றத கேளு..எழில் குனிஞ்சு நிமிர்ந்து வேலை செஞ்சா தான் பிரசவம் சுபலமா இருக்கும். சுகப்பிரசவம் தான் நல்லது.சிசேரியன் பண்ணா எழில் தான் கஷ்டப்படுவா..பெரியவங்க எங்களுக்கு தெரியாதா.. நாங்க சொல்லற படி எழில் இருக்கட்டும். நீ அமைதியா இரு”
எப்பவும் போல பேசாமல் இறுகிய முகத்துடன் இருந்தான் தனா.
அதில் கடுப்பான திலகா “வேணா அடுத்த மாதமே வளைகாப்பு வைச்சு அவங்க வீட்டுக்கு அனுப்பிச்சிடலாமா..”என கேட்க
தனா பதறி போய் “வேணா.. வேணாம்.. நீங்க சொல்றபடியே செஞ்சுகிறோம்”
அதில் திலகா அது என கெத்தாக ஒரு பார்வை பார்த்தார். தேவி வந்த சிரிப்பை அடக்கி கொண்டார்.
பின்னே எழிலை ஏழாம் மாதம் வளையல் போட்டு அழைத்து கொள்ள முத்துக்குமார் கேட்டிருக்க.. தனா தான் ஒன்பதாம் மாதம் அனுப்புவேன் பிடிவாதமாக சொல்லிவிட்டான்.
அதைக் கொண்டு தான் தனாவை மடக்கினார் திலகா. சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பிவிட.. இவன் புலம்பிக் கொண்டே இருந்தான்.
“அவங்களுக்கு என்ன சொல்லிட்டு போயிட்டாங்க..எனக்கு தான் நீ வேலை செய்யறத பார்த்தா கஷ்டமா இருக்கு..”
“பார்த்துக்கலாம் விடுங்க மாமா.. மெதுவா மெதுவா செய்யறேன்” என தனாவை சமாளித்தாள்.
ஆனால் அதற்காக தனா அமைதியாக எல்லாம் இருந்து விடவில்லை. அவன் செய்த அழும்புகள் சொல்ல முடியாதவை.
தனாவிற்காக எழில் சுற்றிய காலங்கள் போய் தனா எழில் பின்னாடி சுற்றுவதை கண்டு.. தனா குடும்பத்தில் உள்ள கல்யாணமான பெண்கள் எல்லாம் எப்படி இப்படி.. எங்களுக்கும் சொல்லு.. என எழிலை நச்சரிக்க ஆரம்பித்தனர்.
ஒருபடி மேலே போய் கனியோ இதற்கென ஒரு வாட்சப் குரூப் ஆரம்பித்தாள். அதில் ஓயாத மெசேஜ் தான். அதில் எப்படி ஒற்றுமையா.. காதலாக… வாழ்வது என கேட்டு நச்சரித்தனர். எழிலுக்கு தான் வெட்கமாகி போனது.
தன் காதலை மெல்ல பட்டும் படாமல் சொல்ல.. அதற்கே ஆஹா.. ஓஹோ என கேலியும் கிண்டல் தான். கனி வாட்சப் குரூப்பிற்கு தனா எழில் படத்தை வைத்து அன்றில் பறவைகள் என பெயரிட்டாள்.