புள்ளி மேவாத மான் – 11
புள்ளி மேவாத மான்-11
வெற்றி கனி திருமணம் அதன் ஆரவாரங்கள் எல்லாம் முடிந்துசில நாட்களில் பூங்கொடியின் கணவன் சந்துருவை சந்திக்க மதுரைக்கு சென்றான் தனா. அவனை சந்தித்து பேசி புரிய வைக்க வேண்டும் என முடிவு செய்திருந்தான்.
எழிலிடம் ஒரு வேலையாக மதுரை செல்வதாக கூறி விட்டு சென்றான். மற்றவர்களிடமும் அப்படி தான் சொன்னான். கூட வருவதாக சொன்ன கருணாவை வேணாம் என மறுத்துவிட்டான்.
முதலில் பூங்கொடி வீட்டுக்கு செல்லலாம் என நினைத்தவன் பூங்கொடி கணவனிடம் பேசவேண்டும். ஆனால் பூங்கொடியை வைத்துக்கொண்டு பேசினால் தனக்கும் அவளுக்கு தேவையில்லாத மனசங்கடம் எதற்கு என நினைத்து சந்துரு வேலை செய்யும் அலுவலகத்திற்கு சென்றான்.
தனா சென்ற நேரம் மதிய உணவு வேளையாக இருக்க…. அலுவலக பியூனிடம் சொல்லி அனுப்பினான். பியூன் சொல்ல யாராக இருக்கும் என வந்த சந்துருவை பார்த்தவுடன் தனாவிற்கு அவ்வளவு ஆற்றாமையாக இருந்தது.
ஆள் கறுப்பாக நோஞ்சான் உடம்பு போல ஒல்லியாக கன்னம் எல்லாம் டொக்கு விழுந்து எலும்பு துருத்திக் கொண்டு வயது முதிர்ந்து ஒரு அரைகிழவனாக இருந்தவனை பார்த்ததும் மனது ஆறவில்லை.
தனாவே தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு தனியாக பேசவேண்டும் என அழைக்க….. தனா யார் என்று தெரிந்தவுடன் சந்துரு ஒன்றும் பேசாமல் சொல் என்பது போல கை அசைத்தான்.
தனா “சார் நான் தான் பூங்கொடிய விரும்பினேன். நான் முறைப்படி பொண்ணு கேட்டேன். அவங்க அப்பாவுக்கு இஷ்டமில்ல. அதனால எனக்கு தர சம்மதிக்கல. மத்தபடி
பூங்கொடி மேல எந்த தப்புமில்ல. ரொம்ப நல்ல பொண்ணு. நீங்க தப்பா நினைச்சிட்டு சண்டை போடறதா மாமா சொன்னாரு அதான் நேருல பார்த்து நீங்க நினைக்கற மாதிரி எதுவும் இல்லை என சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்” என்றான் தணிவாக…
அவன் சொல்லி முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை சந்துரு. தனா பேசி முடிக்கவும் “ஓ…. அப்ப நீதான் லவ் பண்ண…அவ உன்ன லவ் பண்ணல… இரண்டு பேரும் வெளிய பார்த்து பேசிக்கல…. ஊர் சுத்தல…. என்னைய பார்த்தா கேனையன் மாதிரி இருக்கா… நீ என்ன சொன்னாலும் நம்பறதுக்கு…” என்று மரியாதை இல்லாமல் ஒருமையில் கோபமாக பேசினான்.
இதுவரை தனாவை யாரும் மரியாதை குறைவாக பேசியதும் இல்லை. தனாவும் யாரிடமும் தணிந்து பேசியதுமில்லை. தனாவிற்கு சந்துருவின் பேச்சால் கோபம் வந்த போதும் பூங்கொடி வாழ்க்கைக்காக பொறுத்து போனான்.
“நீங்க தப்பா நினைச்சிகிட்டு இருக்கறிங்க சந்துரு. பார்த்தோம் பேசினோமே தவிர நாங்க எல்லை மீறினதில்ல.. ஏன் நாங்க தொட்டு கூட பேசினதில்ல.. எதுவாக இருந்தாலும் கல்யாணத்துக்குப் பிறகு தான் கட்டுப்பாடோ தான் இருந்தோம். நீங்க சந்தேகபடற அளவுக்கு ஒன்னுமில்ல”
சந்துரு எகத்தாளமாக சிரித்தபடி “லவ் பண்றுவங்க எவன்டா உண்மையை ஒத்துகிட்டு இருக்கறிங்க… லவ் பண்ணாங்களாம்… ஆனா ஒன்னுமே நடக்கலையாம்…. நம்பற மாதிரியா இருக்கு கல்யாணத்துக்கு முன்னால என்ன எல்லாம் கொட்டம் அடிச்சிங்களோ… அதை எல்லாம் மறைச்சு அவ அப்பன் என் தலைல கட்டிட்டான். என்னைய என்ன எச்சிலையை நக்கற நாயினு நினைச்சியா….”
அவன் பேச்சில் தனாவிற்கு கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் சந்துருவின் சட்டையை பிடித்து “என்னடா சொன்ன.. யாரைடா எச்சிலைங்கற… பூங்கொடி எப்படிப்பட்ட பொண்ணு தெரியுமா…. ச்சீ அதைப் போய் தப்பா பேசற நீயெல்லாம் மனுசனாடா….”
“என்னடா அவள சொன்னா நீ பொங்கற… இன்னும் தொடர்பு இருக்கோ…. நான் அவள ஊருக்கு கூட அனுப்பறதில்லையே… எங்க சந்திப்பிங்க மதுரைலயேவா….இருக்காதே நாந்தான் விஷயம் தெரிஞ்சதுல இருந்து வீட்டுக்குள்ள வச்சு பூட்டி வச்சிட்டு தான வரேன்… கள்ளசாவி போட்டு திறந்து சந்திப்பிங்களோ… இருந்தாலும் இருக்கும் யார் கண்டா….”
அவனின் பேச்சில் அவனை பிடித்து கன்னத்தில் பளார் என அறைய… சந்துரு திருப்பி அடிக்க பெரிய சண்டையாகி சுற்றி இருந்தவர்கள் பிரித்து விட்டு பேசி ஆளுக்கு ஒரு புறமாக அனுப்பி வைத்தனர்.
தனாவிற்கு இருந்த கட்டுங்கடாத கோபத்தில் காரை புயல் போல ஓட்டி வந்தவன் கொடைரோடு வந்தவுடன் தலைவலி மண்டையைப் பிளக்க ஒரு ஓட்டலில் வண்டியை நிறுத்தி காபி வாங்கி குடித்து விட்டு கிளம்பினான்.
காபி குடிக்கவும் மனதும் உடலும் சற்று ஆசுவாசப்பட இன்னும் கொஞ்சம் பொறுமையாக பேசி இருக்கலாமோ…. என்ன இருந்தாலும் பூங்கொடியின் வாழ்க்கைக்காக தான் கொஞ்சம் பொறுத்து போயிருக்கலாமோ என தன்னையே திட்டிக் கொண்டான்.
என்ன செய்தாலும் சந்தேக புத்தி உள்ளவனையும் குடிகாரனையும் திருத்த முடியாது என தனா அறியவில்லை. அவன் வீடு வந்து சேர நள்ளிரவு ஆகிவிட …..
அவனை பார்த்த எழில் பதட்டத்துடன் “என்னாச்சு மாமா முகம் வீங்கியிருக்கு… சட்டை எல்லாம் கிழிஞ்சிருக்கு….”
“ஒன்னுமில்ல… உள்ள போய் பேசலாம். வாசல்லயே வச்சு தான் எல்லாம் கேட்பியா…” என்றான் எரிச்சலுடன்.
கொல்லைப்புறம் சென்று கைகால் கழுவி வந்தவன் சோர்வாக சோபாவில் சாய… எழில் அவனுக்கு பால் கொண்டு வந்து கொடுத்து அவன் அருகில் அமர்ந்தவள் அவன் குடிக்கும் வரை பொறுத்தவள் அவன் கையை ஆதரவாக பற்றி “என்னாச்சு மாமா…. ஏன் இப்படி இருக்கறிங்க” என கேட்டாள்.
அமைதியாக அவள் தோள் சாய்ந்தவனை அணைத்துக் கொண்டாள். சிறிது நேரம் கழித்து தனா நிமிர்ந்து அமர்ந்து ,
“நான் ஒரு வேலையாக மதுரைக்கு போனேன் இல்லையா அது பூங்கொடி புருஷனைப் பார்க்கத் தான்”என சொல்லி விட்டு எழில் ஏதாவது சொல்வாளா என அவளைப் பார்க்க…
எழிலோ ஏன் எதற்கு என கேட்காமல் தனாவின் முகத்தையை பார்த்திருக்க……
“ஏன் என்னனு கேட்கமாட்டியா” தனா அவளிடம் கேட்க…
“நான் எதுக்கு மாமா கேட்கனும் சொல்ல வேண்டியதா இருந்தா நீங்களே சொல்லுவிங்க…..”என்றாள் பளிச்சென்று…
எழிலின் பேச்சில் பொறாமையோ கோபமோ இல்லை மாறாக தனாவின் மீதான நம்பிக்கையே தெரிந்தது. இந்த நம்பிக்கை ஏன் பூங்கொடி கணவன் சந்துருவிடம் இல்லை என தனா யோசித்தான்.
ஒரு பெருமூச்சு விட்டவாறே எழிலிடம் பூங்கொடி தந்தை சொன்னது தன்னால் தானோ என மனம் வருந்தியது அதனால சந்துருவை பார்க்க போனது அங்கு நடந்த சண்டை என எல்லாவற்றையும் சொன்னான்.
கேட்டிருந்த எழில் தனாவிடம் “கவலைப்படாதிங்க மாமா… யோசிக்கலாம்….. ஏதாவது செய்யலாம். நேரமாகுது வாங்க வந்து படுங்க” என்றாள் ஆறுதலாக
எழிலின் புரிதலும் ஆதரவான பேச்சும் தனாவிற்கு யானைபலம் தந்தது. அதுவே ஒரு நம்பிக்கையும் கொடுத்தது. ஆனால் அந்த நம்பிக்கையும் உடைந்து போகும் நாள் வரும் அதுவும் இன்றே வரும் என அவனுக்கு யார் சொல்வது….
தனாவிடம் சண்டை போட்டு விட்டு வீட்டிற்கு வந்த சந்துருவை பார்த்ததுமே பூங்கொடிக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. முகம் அப்படி ஒரு கோரமாக இருந்தது. உதடு கிழிந்து இடது கண் வீங்கி முகமே தனா அடித்ததனால் கன்றி சிவந்து போய் இருந்தது. இதில் மூச்சு முட்ட வேற குடித்திருந்தான்.
“என்னடி பார்க்கற… இப்ப சந்தோஷமா இருக்குமே… ஆள் வச்சு அடிக்கறியா… சொல்லுடி நாயே…”
“நீங்க என்ன சொல்லறிங்க எனக்கு எதுவும் தெரியாது” என்றாள் பயத்தில் கைகால் நடுங்க…
“ஆஹா… என்ன ஒரு நடிப்பு உனக்கு ஒன்னும் தெரியாது. அதை நான் நம்பனும். நீ சொல்லாமயா அவன் வந்தான்”என்றான் ஆங்காரமாக….
“யாரு வந்தா… நிஜமாகவே எனக்கு தெரியாதுங்க”
“என்னடி தெரியாதுனு திரும்ப திரும்ப பொய் சொல்லறியா… அதான் உன் மாஜி காதலன் அந்த தனஞ்ஜெயன் வந்து என்கிட்டயே பூங்கொடி நல்லவ… ஒழுங்கா வச்சிக்கனும்னு மிரட்டறான்… அடிக்கறான்…”
“சத்தியமா எனக்கு தெரியாதுங்க” என்றாள் முகம் வெளிற…
“வாடி என் பத்தினி தெய்வம் நீ சொல்லறத நான் நம்பனுமா… அவன் நான் உன்னை கொடுமைப் படுத்தறதா சொல்றான். நீ சொல்லாம அவனுக்கு எப்படி தெரியும். உன் போன் என்கிட்ட தான இருக்கு. எனக்கு தெரியாம வேற போன் ஏதாவது வச்சிருக்கறியா…” என கேட்டுவாறே வீடு முழுவதும் பொருட்களை இரைத்துப் போட்டு தேடினான்.
ஒன்றும் கிடைக்கவில்லை என்ற ஆவேசத்தில் தன் இடுப்பு பெல்டை உருவி அடி விளாசினான்.
“வேணாங்க.. வலிக்குதுங்க.. சத்தியமா நான் எந்த தப்பும் பண்ணலைங்க..” என கெஞ்சினாள்.
“நீ சொல்லறத கேட்க நான் என்ன பைத்தியக்காரனா…”என ஆவேசம் கொண்டவனாக அவள் தலைமுடியை பிடித்து இழுத்து சுவற்றில் அடித்தான்.
சைக்கோ போல நடந்து கொண்டான்.மீண்டும் மீண்டும் சுவற்றில் அடித்தான். ஒரு கட்டத்தில் தலையிலிருந்து இரத்தம் வடிய மயங்கி விழுந்தாள் பூங்கொடி.
அவள் மயங்கி விழுகவும் முதலில் சந்துருவுக்கு ஒன்றும் புரியலை.
“ஏய் எழுந்திருடி… சும்மா நடிக்காத… எழுந்திருடி..” என அவளை அடித்து உலுக்கினான். அப்பவும் எழாமல் போக ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்தான். அவளிடம் ஒரு அசைவும் இல்லை.
அவள் எழுந்திருக்கவில்லை எனவும் சந்துருவிற்குபோதை இறங்கி இஆஈ பயம் பிடித்துக் கொள்ள… அவளைத் தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.
அது ஒரு தனியார் மருத்துவமனை டாக்டர் வந்து கேள்விகளால் சந்துருவை குடைந்து எடுத்துவிட்டார். பெண் மருத்துவர் அதுவும் அவர் பெண்ணியவாதி. சந்துருவின் முன்னுக்கு பின் முரணான பதிலால் கோபம் கொண்டு போலீஸ்க்கு தெரிவித்துவிட… போலீஸால் கைது செய்யப்பட்டான் சந்துரு.
நள்ளிரவில் கோவிந்தனுக்கு போன் வர… பதறிப்போய் என்ன செய்வது என தெரியாமல் சுந்தரத்தின் வீட்டிற்கு ஓடினார். அந்த நேரத்தில் கோவிந்தன் பதட்டத்துடன் வந்ததை பார்த்து உட்கார வைத்து தண்ணீர் கொடுத்து மெதுவாக என்ன என்று கேட்க….
கோவிந்தன் அழுதுகொண்டே விஷயத்தை சொல்ல.. கேட்டு இருந்த சுந்தரம் வீட்டினர் பதறி தான் போனர். உடனே சுந்தரம் தனாவிற்கு அழைத்துவிட்டார்.
படுத்தும் உறக்கம் வராமல் முழித்திருந்தவனின் வேதனையான முகத்தைப் பார்த்து எழில் பலவாறாக பேசி சமாதானம் செய்து அப்போது தான் இருவரும் உறங்கி இருக்க…
தனாவின் போன் சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்தனர் இருவரும். சுந்தரத்தின் அழைப்பை பார்த்தவன் இந்த நேரத்தில் என்ன என பதைப்புடன் அழைப்பை ஏற்றான்.
சுந்தரம் கூறிய விசயத்தில் தனாவிற்கோ வேர்த்து விறுவிறுத்து “இதோ உடனே இப்பவே வரேன்” என கூறியவன் எழிலிடம் சொல்லி கொண்டு சுந்தரம் வீட்டிற்கு சென்றான்.
சுந்தரம் ஊரில் சில முக்கியஸ்தர்களை அழைத்து கொண்டு தனா வெற்றி கருணாவோடு மூன்று கார்களில் மதுரைக்கு சென்றனர்.
இவர்கள் நேராக மருத்துவமனைக்கு தான் சென்றனர். அங்கு ஐசியுவில் மூக்கில் வாயில் குழாய்களோடு மூச்சு பேச்சின்றி இருந்த பூங்கொடியைப் பார்த்து கதறிவிட்டார் கோவிந்தன்.
போலீஸ் ஸ்டேசனில் இருந்து வந்து கோவிந்தனை விசாரிக்க அவருக்கே என்ன நடந்தது என தெரியவில்லை. அவர் என்ன சொல்லுவார். பூங்கொடி தான் சொல்லவேண்டும் என்ற நிலையில் அவள் கண் விழிப்பதற்காக காத்திருந்தனர்.
இரண்டு நாட்கள் கழித்து பூங்கொடி சுயநினைவு திரும்ப அவளிடம் நடந்ததை கேட்க அவள் கூறியதை கேட்டு எல்லோருக்கும் கோபம்.
பூங்கொடி சொன்னதை வாக்குமூலமாக பதிவு செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இரண்டு நாட்கள் மருத்துமனையில் இருந்து விட்டு பூங்கொடியை அழைத்து கொண்டு ஊர் திரும்பினர்.
தனா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானான். பூங்கொடியைப் பார்க்க பார்க்க தனாவிற்கு ஆற்றாமையாக இருந்தது. தன்னையே நினைத்து நொந்து கொண்டான்.
ஊர் திரும்பியதும் தனா தன் பெற்றோர் அறையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அடைக்கலமானான். தன் பெற்றோர் படத்தை பார்த்ததும் எப்பவும் போல அவர்களின் இறப்புக்கும் தன்னையே குற்றம் சாற்றி வேதனை கொண்டான்.
எழிலுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. அவளின் பேச்சுக்கள் எதுவும் தனாவிடம் எடுபடவில்லை. ஒருநாள் முழுவதும் பேசவில்லை சாப்பிடவில்லை அறையை விட்டு வெளியே வரவுமில்லை.
அடுத்த நாள் காலையில் அறையை விட்டு வந்தவன் எழிலிடம் எதுவும் பேசாமல் குளித்து பேருக்கு ஏதோ சாப்பிட்டு விட்டு ஆலைக்கு கிளம்பி சென்றான். ஆலையிலும் யாரிடமும் பேசவில்லை. யாராவது எதாவது கேட்டால் ஓரிரு வார்த்தையில் பதில். கல்யாணத்திற்கு முன்பு இருந்தது போல் தனக்குள் சுருங்கி இறுகிவிட்டான்.
எழில் தான் மிகவும் தவித்துப் போனாள். நடந்த அனைத்தையும் வெற்றி எழிலிடம் சொல்லியிருக்க… வெற்றியோடு சென்று பூங்கொடியைப் பார்த்து விட்டு தான் வந்தாள். தனாவும் இப்படி இருக்க இந்த சூழ்நிலையை எப்படி கடந்து வருவது என தெரியாமல் முழித்தாள்.
தனா பூங்கொடி காதல் தெரிந்த போது கூட என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல அவன் யாரை காதலித்தால் என்ன நான் அவனை நேசிக்கிறேன். என் இறுதி மூச்சு வரை நேசிப்பேன். அவன் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என தன் காதலை தனக்குள் பொக்கிஷம் போல பொத்தி வைத்துக்கொண்டு புன்னகை மாறாமல் வளைய வந்தவள்.
கல்யாணத்திற்கு பிறகு ஆதவன் முகம் பார்த்து மலரும் கமலம் போல வாழ்ந்திருந்தவளுக்கு தனாவின் இறுக்கம் எதற்கும் கலங்காமல் எப்பவும் முகத்தில் வாடா புன்னகையுடன் இருக்கும் எழிலை வாழ்வில் முதல்முறையாக கலக்கம் கொள்ளச் செய்தது.
இன்னும் விதி பின்னும் சதி வலை அறியும் போது எழில் அதிலிருந்து எப்படி மீண்டு வருவாள். தனாவை எப்படி மீட்பாள்…?
புள்ளி மேவாத மான் – 11 Read More »