புள்ளி மேவாத மான் – 3
3 – புள்ளி மேவாத மான்
அலுவலக அறைக்கு வந்தவனுக்கு கொஞ்ச நேரம் வேலை மேல் கவனம் செல்லவில்லை . பெண் பார்க்க என்று அழைத்து சென்று கட்டாயமாக திருமணத்தை உறுதி செய்ததே அதிர்ச்சி. தனஞ்ஜெயன் வாழ்க்கையில் எழிலரசி அதிரடியாக வந்ததையே அவன் மனம் ஏற்க தடுமாறி கொண்டு இருக்கும் நிலையில், அவனுக்கான அவகாசம் கொடுக்காமல் மனதிலும் அதிரடியாக உள்ளே நுழைய முயற்ச்சிக்க வெகுவாக தடுமாறி போனான் .
அவன் மனம் எழுதாத கரும்பலகையாக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் ஏற்கனவே ஒரு பெண் எழுதி அழித்து விட்டு சென்ற தடயம் இருக்க , இவளின் வரவை ஏற்க மனம் திண்டாடி போனான் . அவனின் தாய்க்கு பிறகு’ வந்தாயா சாப்பிட்டாயா ‘ என்ற அன்பான உபசரிப்புகள் இல்லை . கேட்பார்கள் தான் அது சம்பிரதாய வார்த்தைகளாக தான் இருந்தது . எழிலரசியின் உரிமையான பேச்சு மனசுக்கு இதமளித்தாலும் , அதையும் மீறி மனம் சஞ்சலமடைந்தது .
சிந்தனையிலிருந்து விடுபட்டு ஒரு பெருமூச்சோடு வேலையை தொடங்கிய சிறிது நேரத்திலேயே போன் அடிக்க எடுத்து பார்த்தவனோ பல்லை கடித்தவாறு இவளை என்ன பண்றது என மனதில் வசை பாடியவாறே போனை காதில் வைக்க
“மாமா மதிய சாப்பாடு சாப்பிட்டிங்களா….”
” மணி ஒன்னு தான் ஆகுது சாப்பிட இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும்” கோபத்தை அடக்கி கொண்டு பேசினான்
“அச்சோ…. மாமா நேரத்துக்கு சாப்பிடணும் போங்க போங்க போய் சாப்பிட்டு வந்து வேல செய்ங்க..” என சொல்லி போனை வைத்துவிட்டாள்.
எரிச்சலுடன் போனை வைத்து விட்டு வேலையை செய்ய ஒரு அரைமணி நேரம் கழித்து மீண்டும் போன் செய்தாள் எழிலரசி .
திரையில் அவளின் படத்தை பார்த்தவுடன் சைலண்டில் போட்டு விட்டு வேலையை பார்த்தான் இரண்டு மூன்று முறை அடித்து ஓய்ந்தது . ஒரு ஐந்து நிமிடம் போன் அமைதியாக இருக்கவும் நிம்மதி பெருமூச்சு விட்டான்
மில்லை கவனித்து கொள்ளும் காரியதரிசி தயங்கியவாறு இவனின் முன்னால் வந்து நின்றார்
வேலை செய்து கொண்டு இருந்தவன் நிமிர்ந்து “சொல்லுங்கண்ணா ”
“தம்பி அரசி போன் பண்ணுச்சு…. நீங்க போய் சாப்பிட்டு வாங்க தம்பி நான் இருக்கேன்ல…”
வந்த கோபத்தை அடக்கி கொண்டு ஒன்றும் சொல்லாமல் வீட்டிற்கு கிளம்பி சென்றான் . வீட்டிற்குள் நுழையவும் கீர்த்தி தன் அன்னை கொடுத்த கறிகுழம்பை இருளாயி பாட்டியிடம் கொடுத்து விட்டு வந்தவளை பிடித்து கொண்டான் தனஞ்ஜெயன்.
“கீர்த்தி நில்லு ”
“என்ன அண்ணா”
” என்ன வேலை பண்ணி வச்சிருக்க … ”
“நான் எதும் பண்ணலண்ணா என்ன சொல்லறிங்க எனக்கு புரியல ” அப்பாவியாக அவனையே திருப்பி கேட்க
சுருசுருவென வந்த கோபத்தை ஒரு நிமிடம் கண்களை மூடி நிதானித்தவன் “நீ தானே என் போனை வாங்கி எழிலரசியிடம் கொடுத்து அவ நம்பர் போட்டோ சேவ் பண்ணி என் நம்பர அவளுக்கு கொடுத்து என்ன பண்ணி வச்சிருக்க… உன் வயசுக்கு ஏத்த வேலையா இது ” என மிரட்ட…..
அவனின் மிரட்டலில் கண்கள் கலங்கி “நானா ஏதும் பண்ணலண்ணா… வெற்றியண்ணா , கருணா மச்சான் எல்லாம் சொன்னதால தான் ” என உதடு பிதுக்கி அழுகைக்கு தயாராக……
தங்கையின் அழுகையில தன்னையே நொந்து கொண்டு “அழாதே அண்ண ஏதோ டென்ஷன்ல பேசிட்டேன் மனசுல வச்சுக்காத” என கன்னத்தில் தட்டி சமாதானம் செய்து விட்டு உள்ளே சென்றுவிட்டான்.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் எழிலரசி போன் பண்ணினாள்
“மாமா சாப்பிடிங்களா …” அவ்வளவு தான் அடுத்த வார்த்தை அவள் பேசும் முன் ….
“என்னடி நினைச்சிட்டு இருக்க சும்மா போன் பண்ணி நைநைனு மனுசன தொந்தரவு பண்ணிட்டு இருக்க…. இவ்வளவு நாளா நீங்க சொல்லி தான் நாங்க சாப்பிட்டமா… இனி போன் பண்ண தொலைச்சுப்புடுவேன் பார்த்துக்க …. ” என திட்டிட்டு போனை வைத்துவிட்டான்.
இந்த பக்கம் கேட்டு கொண்டு இருந்த எழிலரசிக்கு கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் . அவன் திட்டியதால் வருத்தத்துடன் வந்த அழுகை என நினைத்தால் அது தவறு பார்க்கமாட்டாமோ பேசமாட்டோமா என ஏங்கிடந்த மனதிற்கு அவனின் திட்டுக்கள் பூமாரியாக பொழிந்தது.
அதற்கு பிறகு அவள் போன் பண்ணவில்லை இரவு வீடு வந்தவுடன் அவனுடைய போனில் வாட்சப் மெஸேஜ் ரிங்காரமிட எடுத்துப் பார்த்தான்.
‘வீட்டுக்கு வந்துட்டிங்களா மாமா …. வரப்பனி பெய்யுது பச்ச தண்ணீ வேணாம். சூடு தண்ணீல குளிங்க …..’
‘ஆளுங்கள வச்சு வேவு பார்ப்பாளோ ‘ என நினைத்தவாறே குளிக்க சென்றான்.
குளித்து வந்து சாப்பிட்டு விட்டு டீவியில் செய்தி சேனல் பார்த்து கொண்டு இருக்க மறுபடியும் வாட்சப்பில் மெஸேஜ் எடுத்துப் பார்த்தான் .
மீண்டும் எழிலரசியே , ‘சாப்பிடிங்களா மாமா…. தூங்கலையா..… டீவி பார்க்கறிங்களா… ‘ படித்தவன் லேசாக அதிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தான் எங்கயவாது ஆள் வச்சு வேவு பார்க்கிறாளா என,
மீண்டும் வாட்சப்பில் பார்த்தவனுக்கு மேலும் அதிர்ச்சி இவர்களின் நிச்சயதார்த்தின் போது எடுத்த இருவரின் படத்தை முகப்பு படமாக வைத்திருந்தாள்
அடுத்தடுத்து மெஸேஜ்
‘ தூங்கலையா …. ‘
‘ ரொம்ப நேரம் முழிச்சிருக்காதிங்க ….’
‘ தூக்கம் கெடாம காலாகாலத்துல தூங்குங்க மாமா ‘
‘ குட் நைட் ‘
‘ நான் குட் நைட் சொன்னேன்ல பதிலுக்கு நீங்களும் எனக்கு சொல்லுங்க மாமா ‘
இவளின் அடாவடியில் லேசாக சிரிப்பு கூட வந்தது தனஞ்ஜெயனுக்கு
‘ போடீ … ‘ என பதில் அனுப்பினான்
உடனே எழிலரசி உதட்டை சுழித்து முகத்தை நொடித்து கொள்ளும் குழந்தை படம் ஒன்றை அனுப்பி வைத்தாள்
‘ குட் மார்னிங் மாமா ‘ காலையில் தனஞ்ஜெயன் எழுந்தவுடன் வந்த முதல் மெஸேஜ்
சற்று நேரத்திற்கு எல்லாம் இடைவெளி விட்டு அடுத்தடுத்து
‘மாமா வாக்கிங் போயிட்டு வந்துட்டிங்களா….’
‘இன்னைக்கு கோயிலுக்கு போகலையா…. ‘
‘சாப்பிடிங்களா.…. ‘
‘ வயலுக்கு கிளம்ப்பிடிங்களா …. ‘
அன்று நாள் முழுவதும் இதுவே தொடர இரவு படுக்கைக்கு வந்தவனுக்கு ‘குட் நைட் மாமா ‘ எனற மெஸேஜ் வர பார்த்தவனுக்கு யோசனை .
‘இவ இன்னைக்கு போன் பண்ணவே இல்லையே … ‘ என யோசிக்க..
‘ஓ.. அம்மணி போன் பண்ண மாட்டாங்களோ நாம நேத்து திட்னதுக்கு தான் இந்த ரியாக்ஷனா ….’
சிரிப்பு தாளாமல் உடனே இவனே அவளுக்கு அழைத்தான்
போனில் ‘ஜெய் மாமா ‘ என்ற அழைப்பை பார்த்தவுடன் எடுத்ததும் அவனை பேசவிடாமல் ஆர்பாட்டமாக “சொல்லுங்க மாமா இன்னும் தூங்கலையா ….”
“ஏன்டி போன எடுத்தவுடனே ஹலோ சொல்லனும் யார் பேசறது என கேட்கனும் இதெல்லாம் உனக்கு தெரியாதா ” என்றான் உல்லாசமாக
“அது புதுசா பேசறவங்களுக்கு தான் நமக்கெதுக்கு மாமா ”
“ஓஹோ அப்டியா அம்மணி எத்தன நாளா எங்கிட்ட பேசிட்டு இருக்கிங்க … ”
“போங்க மாமா சும்மா கிண்டல் பண்ணிகிட்டு … ”
“எதுக்கு மெஸெஜா போட்டு தள்ளற….”
“அது போன் பேசினா திட்டுனிங்களா அதான் ”
“திட்டவும் பயந்துட்டியா.. ” பயந்துட்டா போல என நினைத்து கனிவாக கேட்க
“ச்சேச்சே அப்படி எல்லாம் தப்பு கணக்கு போடாதிங்க மாமா போன் பண்ணி டென்ஷன் பண்ண வேணாமேனு தான் ”
” பின்ன எப்ப பாரு சாப்பிடயா வந்தயா தூங்குனியானு கேட்டுகிட்டே இருந்தா மனுஷனுக்கு கோபம் வராதா ….”
“நேரத்துக்கு சாப்பிடிங்களா தூங்குனிங்களா உங்களுக்கு கேட்க யாரு இருக்காங்க இனி நான் தான் மாமா கேட்கனும் ”
அவளின் பேச்சு இவன் மனதை ஏதோ செய்தது தொண்டை அடைத்து கொண்டு பேச வரலை
அதற்குள் இவள் “மாமா… மாமா ….. ” என இரண்டு மூன்று முறை அழைத்திருக்க …..
தன்னை சரி செய்து கொண்டு “ஹாங் சொல்லு ”
“நான் போன் பண்ணுவேன் நீங்க எடுத்து பதில் சொல்லனும் சரியா …”
“ம்ம்ம்…”
“சரினு சொல்லுங்க மாமா”
“சரிடி போனை வச்சிட்டு தூங்கு போ”
“நீங்களும் தூங்குங்க” என சொல்லி போனை வைத்து விட்டு
வாட்சப்பில் ‘ ஒரு குட்நைட் ‘ மெஸெஜ் போட்டு விட்டு மாமானோடு பேசியதில் மனசு நிறைந்திருக்க படுத்தவுடன் தூங்கிவிட்டாள்.
இங்கு தனஞ்ஜெயனோ தூங்காமல் யோசித்து கொண்டு படுத்திருந்தான் பார்த்த இரண்டுநாள் மட்டுமே ஆகியிருந்த ஒருத்திக்கு தான் போன் பண்ணியது மட்டுமில்லாமல் அவளிடம் சரிக்கு சரி வாயாடியது ஆச்சரியமாக இருக்க , தன் தாய்க்கு பிறகு யாரிடமும் இப்படி பேசியதில்லை.
ஏன் தான் காதலித்த பூங்கொடியிடம் கூட இப்படி பேசியிருக்கமா என யோசிக்க இல்லை என்றே தோன்றியது என்னை ஏதோ செய்யறா ‘ மாயக்காரி ‘ என சிரித்து கொண்டே தூங்கிவிட்டான்.
நிச்சயம் செய்து பத்து நாள் ஆகியிருக்க எழிலரசி வீட்டார் எழிலரசியோடு மாப்பிள்ளை வீடு பார்க்க வந்தனர். இந்த பத்து நாளில் எழிலரசி போனில் பேசி பேசியே தனஞ்ஜெயனோடு மனதளவில் கொஞ்சம் நெருங்கி இருந்தாள்
போனில் இவள் செய்த சேட்டைகள் ஏராளம் தனஞ்ஜெயனும் இவள்சேட்டைகளை ரசிக்க பழகி கொண்டான் காலையில் ‘ குட் மார்னிங் ‘ ஆரம்பித்து ‘ குட் நைட் ‘ என சேட்டிங்கிலும் போனிலும் பேசி பேசியே நெருங்கினாள்.
தனஞ்ஜெயன் சாப்பிட்டான் என தெரிந்த பிறகு தான் இவள் சாப்பிடுவாள் அதை அவனிடம் சொல்லியும் இருந்தாள் அப்படி இருந்தும் சில சமயங்களில் வேலை காரணமாக சாப்பிட தாமதமானால் உடனே ஒரு செல்பி எடுத்து அனுப்புவாள்.
சாப்பாட்டு மேஜையில் தன் முன் தட்டில் சாப்பாடு வைத்து அதை சோகமாக பார்த்து கொண்டு இருப்பது போல படம் எடுத்து அனுப்புவாள்.
அதைப் பார்த்ததும் தனஞ்ஜெயன் சிரித்து கொண்டே ‘ சேட்டைகாரி ‘என அலுத்து கொள்வான். உடனேயே சாப்பிட கிளம்பிடுவான்
எழிலரசி தனஞ்ஜெயன் வீட்டிற்கு மிகவும் ஆர்வத்தோடு வலது காலை எடுத்து வைத்து வந்தாள். வீட்டை பார்த்தவளுக்கு கொஞ்சம் முகம் சுருங்கி விட்டது.
வீட்டை இவள் கண்கள் ஏக்கத்துடனும் முக வாட்டத்துடனும் பார்த்தன . இதை எல்லாம் தனஞ்ஜெயன் கவனித்து கொண்டு தான் இருந்தான் .
பூஜையறையில் விளக்கேற்றி அங்கிருந்த சாமி படங்களை இருவரும் ஜோடியாக வணங்கி அடுத்து தனஞ்ஜெயன் பெற்றோர் படத்தையும் வணங்கினர். அப்போது எழிலரசியின் கண்கள் கலங்கி கண்ணீர் தளும்பி நின்றது .
தனஞ்ஜெயன் எழிலரசியின் கைகளை ஆறுதலாக பற்றி கொண்டு அழாதே என்பதாக தலை அசைத்தான் . எழிலரசி அவனை பார்த்து முயன்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டு முறுவலித்தாள் .
பெரியவர்கள் எல்லாம் ஒருபுறம் பேசி கொண்டு இருக்க இளைய பட்டளாங்கள் ஓரிடத்தில் ஒன்று கூடினர் . அரசியை வைத்து தனஞ்ஜெயனை ஓட்டிக் கொண்டு இருந்தனர் .
கருணாகரன் முதலில் ஆரம்பித்தான் .
” ஏம்மா அரசி எப்படிமா ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபிசர இப்படி சிரிப்பு ஆபிசர மாத்தின …. ”
உடனே வெற்றி “ஆமாம் அண்ணி சட்டைக்கு போடற கஞ்சிய எங்க அண்ணன் உடம்புக்கும் போட்ட மாதிரி விறைப்பா இருப்பாரு அவரை அடியோட சாச்சுப்புட்டிங்களே ”
கருணாவின் மனைவி வசந்தி “எல்லாம் சும்மா எங்கண்ணனை கிண்டல் பண்ணாதிங்க ” என சொல்லி விட்டு
தன் கணவனைப் பார்த்து “இவரு ரொம்ப உத்தமரு …. கல்யாணத்துக்கு முன்னாடி என்னை பார்க்க கொல்லப் பக்கம் சுவரேறி குதிச்சு வந்தவரு தான”
“தப்பு தங்கம் இப்படி எல்லாம் பப்ளிக்ல புருஷனோட இமேஜ டேமேஜ் பண்ணகூடாது” என வசந்தியின் தாடையை பிடித்து கொஞ்ச..
“பப்ளிக்ல ப்ரீ ஷோ ஓட்டாதிங்க மச்சான் கன்னி பசங்க சாபம் பொல்லாதது ” என வெற்றி சகோதரர்கள் கூச்சலிட
இதை எல்லாம் அமைதியாக ரசித்து கொண்டு இருந்த தனஞ்ஜெயனை ரசித்து கொண்டு இருந்தாள் எழிலரசி அவளின் பார்வையை உணர்ந்து அவளை திரும்பி பார்த்தவனின் கண்களும் அவளின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டது.
இதை பார்த்த கருணா “டேய் மாப்பிள்ளைகளா என்ன சொன்னிங்களே அங்க உங்க அண்ணன பாருங்கடா …..” சொல்லி கைதட்டி சிரிக்க ….
தனஞ்ஜெயன் கருணாவை இழுத்து முதுகில் இரண்டு வைக்க என சிரிப்பும் கும்மாளமாக இருந்தனர்.
சிறிது நேரம் கழித்து கீர்த்தியை வீட்டை சுற்றிப் பார்க்கனும் வா என அழைத்தாள் எழிலரசி எல்லோரும் ஹாலில் அமர்ந்திருக்க
“நான் காமிக்கறேன் வா” என தனஞ்ஜெயன் எல்லோர் முன்பும் சொல்லியே கூட்டி சென்றான்.
“எங்க அண்ணன் தைரியம் உங்களுக்கு வருமா நீங்க கள்ளத்தனமா சுவேரேறி குதிச்சு வந்தவர் தான ” வசந்தி கருணாவை வார டக்குனு கருணா தலையை தொங்க போட இளசுகள் அடக்கமாட்டால் சிரித்தனர் .
எல்லோரும் இருந்த ஹாலைத் தாண்டி இருவரும் உள் அறைக்கு சென்றனர்
“மாமா இங்க தான முற்றம் இருந்துச்சு நானும் அத்தையும் கயித்து கட்டில்ல படுத்துகிட்டு நட்சத்திரத்த எண்ணுவோம்”
“இங்க தாழ்வாரத்துல ஊஞ்சல் இருந்துச்சுல அதுல என்னை உட்காரவச்சு தான் அத்த சடை பின்னி விடுவாங்க ”
பின்பக்கம் தோட்டத்திற்கு சென்றவள் மாட்டுத் தொழுவத்தைப் பார்த்து விட்டு “மாமா செல்லா கன்னு குட்டி இன்னும் இருக்கா…”
அவளை அழைத்து கொண்டு தொழுவத்திற்குள் போனவன் செல்லாவை காட்டினான் அது ஒரு கன்று ஈன்று கறவையாக நின்று கொண்டு இருந்தது.
” செல்லா ! ஏய் ! செல்லா… என்னை தெரியுதா ..” என அதன் உடலை வாஞ்சையாக தடவி கொடுக்க இவளின் குரலோ இவளின் ஸ்பரிசமோ ஏதோ ஒன்று இவளை இனம் கண்டு கொண்டு இவளை செல்லமாக முட்டி விளையாண்டது .
“மாமா என்னைய இன்னும் ஞாபகம் வச்சிருக்கு பாருங்க …”
“இப்படி தான் என்கூட முட்டி விளையாடும் ”
“இதுக்கு செல்லானு பேரு கூட நான் தான் வச்சேன் ”
கண்கள் மின்ன பேசிய இவளின் பேச்சுக்களை கேட்டவன் மலைத்து போனான் என்ன ஒரு நாலு வருடம் இந்த ஊரில் இருந்திருப்பாளா …அதுவும் விவரமறியாத வயதில்…. இன்னும் ஞாபகம் வைத்து ஒவ்வொன்றையும் சொல்கிறாளே …. என இவளின் செயல் பேச்சு எல்லாம் அவனை ஸ்தம்பிக்க வைத்தது .
மங்கை பருவத்திலேயே
மன்னவனிடம்
மையல்கொண்டாள்
மன்னவனை மட்டுமா
நேசித்தாள்
மன்னவனோடு சேர்ந்து
அவனின் இல்லம்
இல்லத்தாரையும் நேசித்தாள்
அதை அவனும் அறியவில்லை
அவன் இல்லத்தாரும் அறியவில்லை
புள்ளி மேவாத மான் – 3 Read More »