19-புள்ளி மேவாத மான்
தனா தன் பெற்றோர் அறையில் சிறிது நேரத்திலேயே உறங்கி விட… எழில் தான் தன் காதலுக்கு இவ்வளவு தான் மதிப்பா.. தன் அன்பு கொஞ்சம் கூட அவர் மனதில் அரும்பலையா..அப்போ என் கூட வாழ்ந்தது எல்லாம் கடமைக்காக தானா..
என் காதல் மேல் நம்பிக்கை கொண்டு தான் கல்யாணம் செய்தேன். அந்த காதல் அவரின் மனதில் என்னை நிறுத்தவில்லையா.. என் அன்பில் தான் குற்றம் குறையா… என கழிவிரக்கத்தில் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் விட்டாள்.
எதுவாக இருந்த போதிலும் மனைவிங்கற ஸ்தானத்திற்கு மதிப்பில்லையா.. வாழ்ந்த வாழ்க்கைக்குஅர்த்தமில்லையா… இப்படியாக தான் இருந்தது பேதையவளின் மனதின் சிந்தனை.
தனக்கு மதிப்பில்லாத போது இங்கு எதற்கு இருக்கவேண்டும். தன்னை உணராத கணவனிடம் தன்னை இருத்திக் கொள்ள வேண்டியதில்லை என அவள் தன்மானம் விழித்து கொள்ள .. அந்த நொடி அழுகை நின்றது.
விடிந்தும் விடியாத பொழுதில் தன் அன்னைக்கு போன் செய்தாள். தன் அன்னையிடம் அழுகவில்லை ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. தனா பூங்கொடி காதல் தெரிந்த போது தன் காதல் வலியை தன்னுள் அழுத்திக் கொண்டு வலிய வைத்த சிரிப்புடன் வலம் வந்தவள்… இதற்கா அழுக போகிறாள்.
கற்பகமும் மகளை பொறுமையாக இருக்க சொன்னார்.ஆனால் எழில் பிடிவாதமாக வந்தே தீருவேன் என்று நின்ற நிலையிலேயே இருக்க…
கற்பகம் கணவரை எழுப்பி சொன்னால் மகள் மேல் உள்ள பாசத்தில் நாலு சுவற்றுக்குள் முடிக்க வேண்டியதை ஊரை கூட்டி அம்பலத்தில் ஏற்றி விடுவார் என தமிழரசனை அனுப்பி வைத்தார்.
தமிழரசன் வந்த போது தனா எழுந்திருக்கவில்லை. அவனுக்கும் கோபம் இருந்த போதும் மாமன் மேல் இருந்த மதிப்பும் தங்கையின் வாழ்க்கையும் அவனை அடக்கி வைத்திருந்தது.
தனக்கு தேவையானதை எடுத்து வைத்தவள் தனா எழுந்து வந்ததும் கிளம்பிவிட்டாள்.
தனா எழுந்து வந்தவன் பார்த்தது டிராவல் பேக்கோடு இருந்த எழிலையும் தமிழரசனையும் தான்.
தனா ‘நான் என்ன சொல்லிட்டேன். இப்படி கிளம்பி நிற்கிறா.. ராங்கிகாரி.. போடி போ..’ என எழிலின் முகத்தையே பார்த்து நிற்க..
‘ ஏன்.. என்னனு… கேட்டா தான் என்ன…திமிரு.. திமிரு அவ்வளவும் திமிரு’
மனதுக்குள் பொறுமியபடி முறைத்துக் கொண்டு நின்றாள்.
அவனும் கேட்கவில்லை. இவளும் சொல்லவில்லை. அவனை முறைத்துக் கொண்டே சென்று காரில் உட்கார்ந்து கொண்டாள்.
தமிழரசனுக்கு என்ன செய்வது என தெரியாமல் விடை பெறும் விதமாக தலையை அசைத்து விட்டு கிளம்பவிட்டான்.
எழில் வருவதற்குள் கற்பகம் முத்துக்குமாரிடம் எழில் சொன்னதை சொல்லி,
“ஏதோ புருஷன் பொண்டாட்டி சண்டை.. நாம அமைதியா இருந்தா அவங்களே சரியாடுவாங்க.. நீங்க தலையிட்டு பெரிசு பண்ணிடாதிங்க..”
“மசக்கை சமயத்துல கூட புருஷன விட்டு வரமாட்டேனு இருந்தா.. இப்ப அவளுக்கு பார்த்து செய்து அனுப்புவோம்”
“மறுபடியும் சொல்றேன் நீங்க அமைதியா இருங்க..”
மனைவி சொன்னதற்கு அமைதியாக கேட்டு கொண்டாலும் உள்ளுக்குள் தனாவின் மேல் கோபம் இருக்கத்தான் செய்தது.
எழில் வந்து இரண்டு நாட்களாகி இருக்க… தனாவும் போன் பண்ணவில்லை. இவளும் பேசவில்லை. இருவரும் வீம்புடன் இருந்தனர்.
எழில் சென்றது தெரியாமல் தேவி மீன் சமைத்து அதை கீர்த்தியிடம் கொடுத்துவிட… தனா பேக்டரிக்கு சென்றிருக்க…இருளாயி பாட்டி வருத்ததுடன் எழில் சென்றதை சொல்லிவிட..
கீர்த்தி சென்று சொன்னதும் சுந்தரம் தனாவை வீட்டுக்கு அழைத்து,
“என்ன சண்டை உங்களுக்குள்ள”என்று எவ்வளவு கேட்டும் பேசவில்லை.
சொல்வதற்கு விருப்பம் இல்லாமல் அமைதியாக.. அழுத்தமாக நின்றான்.
கேட்டு சலித்து போய்”எதா இருந்தாலும் இரண்டு நாளில் பேசி கூட்டிட்டு வந்திடு..”என்றார் கோபத்துடன்.
ஒரு நான்கு நாட்கள் விரைப்பாக இருந்தவனால்.. அதற்கு மேல் முடியவில்லை. வீட்டின் தனிமையும் அவளின் அன்பான கவனிப்பும் இல்லாமல் இருக்க முடியவில்லை.இரவோ கொடுமையிலும் கொடுமை..
அன்று எழிலின் ஞாபகம் அதிகமாக இருக்க.. மாலை மானஜேரிடம் சொல்லி கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான். சிறிது நேரத்தில் மானேஜர் ஏதோ பைல் தேவை என ஆள் அனுப்ப.. அதை எடுக்கும் போது அங்கு ஒரு மூலையில் அன்று அவன் எறிந்த எழிலின் டைரி இருந்தது.
ஆளை அனுப்பி விட்டு வந்து தங்கள் அறையில் டைரியோடு வந்தவன்
வசதியாக முதுகுக்கு ஒரு தலையணை வைத்து சாய்ந்து அமர்ந்து அன்று விட்டதில் இருந்து படிக்க ஆரம்பித்தான்.
அக்டோபர் மாதம்:
மாமா காலேஜ் சென்று நான்கு மாதங்கள் கழித்து தீபாவளிக்கு வந்திட்டு ஒரு வாரம் இருந்துட்டு போயிட்டாங்க… அப்ப நானும் ஊருக்கு போயிட்டேன். மாமாவ பார்க்கல..அதுக்கு பிறகு மாமா ஊருக்கு வரல..
அத்தைக்கு தினமும் போன் பண்ணுவாங்க..சில சமயம் நான் இருக்கும் போதும் பேசுவாங்க.. அத்தை மாமா பேசினது எல்லாம் சொல்வாங்க.. எனக்கு அதை கேட்டு கேட்டு மாமா மேல என்னையும் அறியாம ஒரு பிடித்தம்..ஜெய் மாமா… அப்படி எனக்குள்ள சொல்லும் போதே.. தித்திப்பா மனசு இனிக்கும்.
அவன் பக்கங்களை புரட்ட எழுதாத பக்கங்களில் எல்லாம் ஜெய் மாமா லவ் யூ என்று மந்திரம் போல் எழுதி இருந்தாள்.
ஒருவருடத்திற்கு பிறகு:
மாமா அடுத்த தீபாவளிக்கு தான் வந்தாங்க….ஹப்பா..பா…ஆஆஆ.. ஏற்கனவே ஹைட்டு.. இப்ப இன்னும் ஹைட்டா…வாட்டசாட்டமா..முறுக்கு மீசை வச்சிட்டு.. நல்லா கலரா இருப்பாங்க.. இப்ப இன்னும் செவசெவனு ஹிந்தி பட ஹுரோ மாதிரி ரொம்ப ஸ்மார்ட்டா இருந்தாங்க…
கீழே அவன் மீசையை அழகாக வரைத்திருந்தாள்.
இந்த தடவை நான் ஊருக்கு போகல..அம்மா அப்பா எல்லாரும் மலையனூர் வந்திட்டாங்க.. அதனால தான் மாமாவ பார்க்க முடிந்ததது..
மாமாவ பார்த்ததும் மனசு படபடப்பா…ஏதோ சில்லுனு இறங்கற மாதிரி.. மிதக்கற மாதிரி ஒரு பீலிங்..ஏதோ ஒரு சிலிர்ப்பு…என்னனு சொல்ல தெரியல எனக்கு. ஆனா மாமாவ பார்த்துகிட்டே இருக்கனும் போல இருந்துச்சு.. அப்படி பார்க்கறதும் தப்புன்னும் தோனுச்சு..
சடுதியில் மாறியது என் உலகம்
உன்னை கண்ட விநாடி…
நான் ஏன் இப்படி இருக்கேன்.. கெட்ட பொண்ணாகிட்டனா.. அழுகையா வந்துச்சு.. அந்த அழுகையும் பிடிச்சிருந்துச்சு… நான் ஏன் இப்படி இருக்கறேனு எனக்கே புரியல…
மாமா அத்தைகிட்ட தவிர யாருகிட்டயும் அதிகம் பேசமாட்டாங்க.. ஆனா என்னை பார்த்தும் என்ன படிக்கற கேட்டாங்க.. என் மனசுல அப்படி ஒரு சந்தோஷம் மாமா என்கிட்ட பேசினதுல… இறக்கை இல்லாம வானத்துல பறக்கற மாதிரி இருந்துச்சு..
மாமா கிளம்பி போனதும் மனசு பொசுக்குனு போயிடுச்சு.. ஏதோ கலரா இருந்த உலகம் வெளுப்பா ஆன மாதிரி..மனசுல ஏதோ அழுத்தற மாதிரி…
கங்குலான என் உலகை
உன் வருகை
வானவில்லாக
ஆயிரம் வர்ணங்களை
பாய்ச்சுகிறது.
அதுக்கு பிறகு மாமா தினமும் அத்தைக்கு போன் பண்ணும் டைமுக்கு அத்தை வீட்டுக்கு போயிடுவேன். அததை பக்கத்துல இருந்து கேட்கறதும்.. பேசிட்டு அத்தை மாமா சொன்னத சொல்லறத கேட்கவும்…
மாமா ஒரு நாள் அத்தைகிட்ட பேசலைனாலும் எனக்கு அழுகையா வரும்..மாமா மேல கோபமா வரும் ஏன் பேசலைனு…
மாமா வரும் போது என் சந்தோஷமும் வரும் போகும் போது என் சந்தோஷமும் அவர் கூடவே போயிடும்.
என் உள்ளமதில் உன் வாசம்
நீ வாசம் செய்யும் நெஞ்சை
ஆயிரம் பூக்கள் கொண்டு
அர்ச்சிக்கிறேன்.
கவிதைக்கு கீழே இவன் கண்கள் இரண்டையும் வரைந்து வைத்திருந்தாள்.
மேலும் ஒரு வருடம் கழித்து:
மாமா தேர்ட் இயர் செம் லீவுல வந்தாங்க.. அப்ப நான் டென்த் எக்ஸாம் முடித்து லீவுல இருந்தேன். அடுத்த வருடம் ப்ளஸ் ஒன் எங்க ஊரில் படிச்சிகலாம்னு அப்பா சொல்லிட்டாங்க..
இனி இது போல மாமாவ பக்கத்தில் இருந்து பார்க்க முடியாதே என மனசுல ஒரே தவிப்பா இருந்துச்சு.. அதனால அத்தை வீடே கதினு இருந்தேன். எனக்கு நல்லாவே புரிஞ்சுது நான் மாமாவ லவ் பண்றேனு..
ஆனால் ஒரு பயம் இந்த வயசுல இது தப்போனு… யாருக்கும் தெரியாம என் காதல பொக்கிஷமா எனக்குள்ளயே வச்சுகிட்டேன். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு.. இன்னும் கொஞ்சம் பெரிய பொண்ணானதும் நானே மாமாகிட்ட சொல்லுவேன். அதுவரைக்கும் யாருக்கும் தெரியாம இருக்கனும்.
நெஞ்சாகூட்டில்
பொதித்து வைத்து
பொக்கிஷமாய்
போற்றி பூட்டி
வைத்தேன்
உன் வரைபடத்தை..
தனாவின் கண் காது மூக்கு மீசை உதடு என தனி தனியாக வரைத்திருந்தாள்.
நெஞ்சில் உள்ள வரைபடத்தை தாளில் கொண்டு வர எனக்கு தெரியவில்லை.
படிக்க… படிக்க… தனாவிற்கு இந்த அடாவடிக்குள்ள இப்படி ஒரு பப்பி லவ்வா… என தோன்றியது. அந்த காலகட்டத்தில் தனாவின் நினைவு பெட்டகத்தில் எங்கும்
எழில் இல்லை.எழிலை போல தனா ரசனையான பார்வை என்ன ஆராய்ச்சி பார்வை கூட பார்த்தது இல்லை.
மாமா லீவ் முடிந்து காலேஜ் போகும் முன்னாடியே… எங்க அப்பா என்னையும் பாட்டியையும் ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. ஊருக்கு போகும் முன்ன அத்தையை கட்டிகிட்டு தேம்பி தேம்பி அழுதேன்.
ஆனா இந்த ஜெய் மாமா நான் அழுகறத பார்த்து சிரிச்சாரு… போய்யானு முணுமுணுத்து உதட்டை சுழித்து நொடித்து கொள்ள.. மாமா முறைச்சு பார்த்தாங்க..
படித்ததும் சட்டென சிரித்துவிட்டான் தனா..
மாமா படிப்பு முடிந்து ஊருக்கு வந்த பிறகு கோயில்லயோ… பேக்டரி போற வழியிலயோ எப்படியும் காத்திருந்து பார்த்துடுவேன். நான் பார்க்கறது மாமாவுக்கு தெரியாது.
உன் நெஞ்சில்
மஞ்சம் என
தஞ்சம் கொண்டு
துயிலும் காலம்
எப்போ….
இதற்காகவே அப்பாகிட்ட சண்டை போட்டு ஸ்கூட்டி வாங்கினேன்.
ப்ளஸ்டூ ரிசல்ட் நான் நல்ல மார்க் எடுத்திருந்தேன். அப்பா என்னைய சென்னைல படிக்க சொன்னாங்க…. ஆனால் நான் பொள்ளாச்சிலயே படிக்கறேன்னு சொன்னேன் அப்பாகிட்ட… ரொம்ப சந்தோஷமா மாமாகிட்ட என் மனசுல உள்ளத சொல்லனும்னு பார்க்க போன போது மாமாவும் பூங்கொடிக்காவும் நெருக்கமா சிரிச்சு பேசிகிட்டு இருந்தாங்க..
அதை பார்த்ததும் என் மனசுல சுருக்குனு ஒரு வலி நெஞ்சு பூரா பரவி நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்துச்சு…
கரை காணாமல்
கரை கடக்காமல்
தேம்பி தேங்கி
நிற்கிறது
என் காதல்
என் காதல் அவ்வளவு தானா… என் ஜெய் மாமா எனக்கில்லையா… மாமா இல்லாம என்னால வாழ முடியுமா… எதுனா செஞ்சு செத்து போயிடலாமா… என யோசித்து யோசித்து அழுது கொண்டே இருந்தேன்.. அம்மா கேட்டாங்க… செத்து போன பாட்டி ஞாபகம் என சொல்லி சமாளித்தேன்.
இரண்டு நாட்களில் அழுதழுது காய்ச்சல் வந்திட… பத்து நாளானது படுக்கையில் இருந்து எழ.. எனக்காக துடிச்ச பெத்தவங்கள பார்த்து மனச ஆறுதல் படுத்திக்கிட்டேன்…
உன்னோடு ஊடல்கள்
கூடல் பொழுதுகள்
எதிர்கால கனவுகள்
என் காதலின் ஏக்கங்கள்
கரையும் காலங்கள்
குறையும் ஆயுள்கள்..
மாமா யாரை காதலிச்சா என்ன.. நான் மாமாவ காதலிக்கிறேன். எப்பவும் காதலிப்பேன்..என் அன்பு அவருக்கு தெரியாட்டி என்ன எப்பவும் போல எட்ட நின்று அவரை காதலிப்பேன்.
உன் நேசம் எங்கோ…
உன் பார்வை எங்கோ…
இருந்த போதும்
என் காலத்தின்.
ஒவ்வொரு நொடிப்
பொழுதும் நீயாகவே
நீ மட்டுமே…
அந்த வரிகளில் தனாவின் கண்களில் அவனை அறியாமலேயே கண்ணீர் சொட்டியது.
என்ன தான் மாமா யாரை காதலிச்சா என்னனு எனக்கு நானே சொல்லிகிட்டாலும் … அவங்க இரண்டு பேரையும் சேர்த்து பாக்கும் போது மனசு வலிக்க தான் செய்தது.
அதனால நான் சென்னைக்கு படிக்க போனேன். ஊருக்கு வரும்போது எல்லாம் மாமாவ எப்பவும் போல எட்ட நின்று பார்த்திட்டு வந்திடுவேன்.
காதல் கண்ணன் நீ
உன்னை தள்ளி நின்று
தரிசிக்கும் பக்தை நான்..
நான் ஸ்டடி லீவுக்கு வந்திருந்த போது:
பூங்கொடி அக்காவிற்கு வேறு ஒருவர் கூட கல்யாணம் ஆகிடுச்சு சொன்னாங்க.. அத்தையும் மாமாவும் பூங்கொடிக்காகவை பெண் கேட்டு போனாங்க. கோவிந்தன் பெரியப்பா அவமானப்படுத்தி அனுப்பிட்டாருனு தெரிஞ்சுது..
மாமாவ நினைச்சு எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. மாமா இதை எப்படி தாங்கிகிட்டாங்க… மாமாவ உடனே பார்க்கனும் போல இருக்கு.. பேக்டரிக்கு போனேன்.
எங்க ஊர் கல்யாணிக்காவ பார்க்கற மாதிரி போய் பார்த்தேன். மாமாவ முகம் இறுகி போயி ஏற்கனவே சிரிக்கமாட்டாங்க.. இப்ப சிரிப்பையே தொலைச்சு பார்க்கவே கஷ்டமா இருந்துச்சு..
சரியான அராத்து என்னைப் பார்க்க பேக்டரிக்கே வந்திருக்கிறாளே.. துணிச்சல் தான்…நான் சிரிக்கவே மாட்டனா.. என நினைத்து சிரித்தான்.
மூன்று மாதங்கள் கழித்து:
நான் எப்பவும் போல நைட் அம்மாவுக்கு போன் பண்ணினேன். அத்தை மாமா இறந்ததுட்டாங்க சொன்னாங்க.. என்னால தாங்க முடியல.. என் அத்தை இந்த உலகத்துல இல்லயா.. கதறி கதறி அழுதேன். மாமா.. மாமா.. இதை எப்படி தாங்குவாங்க…
மாமாவுக்கு தோள் சாய்த்து ஆறுதல் சொல்ல முடியாத என் நிலையை அறவே வெறுத்தேன்.. செமஸ்டர் சமயம் என்னால மாமவ தள்ளி நின்னு கூட பார்க்க முடியாது..
ஒரு மாதம் கழித்து:
செமஸ்டர் முடிந்து ஊருக்கு போனதும் மாமாவை முதல்ல போய்பார்த்தேன். வழக்கம் போல் எட்ட நின்று…
அநாதரவான குழந்தை போல எனக்கு தெரிஞ்சாங்க.. என் மாமாவுக்கு நான் ஆறுதலா இருக்கனும் அவருக்கு எல்லா உறவாகவும் நான் இருக்கனும்..அப்ப முடிவு பண்ணினேன் . படிப்பு முடிந்து வந்ததும் என்ன செய்தாவது மாமாவ கல்யாணம் பண்ணியே தீரனும் என…
என் சேலையும்
உன் வேட்டியும்
ஸ்பரிசிக்குமோ..
என்மஞ்சள் வாசனை
உன் சந்தன வாசனை
சங்கமிக்குமோ..
இப்படி தான் எழுதி இருந்தாள் எழில் அதில்..
அதை படித்ததும் தனாவுக்கு அழுகனும் போலவும்.. சிரிக்கனும் போலவும் .. என உணர்ச்சி குவியலாக இருந்தான்.
என்ன மாதிரியான காதல் இது. இந்த காதலுக்கு நான் தகுதியானவன் தானா… இருந்த போதும் எழிலின் காதல் அவனுக்கு கர்வத்தை தந்தது.
இந்த காதல் முன்னால் என் காதல் வெறும் கானல் நீர் தானோ.. கானல் நீருக்காக அவள் காதலை எட்டி உதைத்து விட்டேனே.. என வருந்தினான். கண்ணன் மேல் மீரா கொண்ட காதலாக அவனுக்கு எழிலின் காதல் தெரிந்தது.
டைரியை அணைத்து கொண்டு விடிய விடிய.. உறங்காமல் இருந்தான். விடிந்தும் எழிலை கூட்டி வந்திடும் முடிவில்…
ஆனால் இவன் நினைவுக்கு எழில் வடிவம் கொடுப்பாளா…..