15 – புயலோடு பூவுக்கென்ன மோகம்
நண்பனிடம் பேசியவன் கிளம்பும் முடிவை எடுத்துவிட்டான் நிமிடத்தில் ஆனால் தன்னை அணைத்து கொண்டு படுத்திருந்தவளை பார்க்கும் போது நெஞ்சம் ஒரு நிமிடம் அதிர தான் செய்தது.
ஆனால் அவளோடு மனம் இசைந்து வாழ முடியாமல் தவிப்பாக இருக்கிறதே… இந்த தவிப்பு இவளை விட்டு பிரிந்தால் ஒரு வேளை நீங்க கூடுமோ.. அவள் வாழ்க்கை தரத்திற்கு இணையான ஒரு வாழ்வை என்னால் கொடுக்க முடியாது. இந்த வசதி எல்லாம் விட்டு என்னோடு வாழ வா என அழைத்தால் வருவாளா என தெரியவில்லை.வந்தாலும் அவள் கஷ்டப்படுவாள். அதை பார்க்க.. பார்க்க.. தனக்கும் வேதனை.
இதை எல்லாம் வீட்டினரிடம் சொல்லி அனுமதி வாங்க முடியாது. நிறைய போராடினாலும் அனுமதி கிடைக்காது. அவர்கள் இது தான் இப்படி தான் என முடித்து விடுவார்கள். அதன் பிறகு அவர்களை மீற முடியாது. எனவே சொல்லாமல் செல்வதே நல்லது என முடிவு எடுத்தான்.
விடியும் வரை அவளை இறுக்கி அணைத்து படுத்திருந்தான். மறுபடியும் இப்படி அணைக்க முடியாது என நினைத்தானோ என்னவோ அவனுக்கே தெளிவில்லை. நான்கு மணி போல எழுந்து குளித்து தயாரானான். ஒரு சிறு டிராலியில் நாலு செட் டிரஸ் எடுத்து வைத்தான். அதிகம் கொண்டு போக முடியாது சந்தேகத்திற்கு இடமாகிவிடும். தேவைபடுவதை போய் வாங்கி கொள்ளலாம் என நினைத்தான். கூடவே விசா பாஸ்போர்ட் முக்கிய ஆவணங்கள் எல்லாம் எடுத்து வைத்தான்.
நிகிதா எதுவும் அறியாமல் நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள். அவளருகே சென்று அமர்ந்தவன் குனிந்து சில முத்தங்கள் கொடுத்து..
“சாரிடா… அமுல் பேபி.. உன்னைய விட்டுட்டு போறேன். என்னால இங்க மனசு ஒத்து இருக்க முடியலை.. நமக்கு இந்த பிரிவு அவசியம் தேவை. உனக்கு ஏத்தவன் நான் இல்ல.. கொஞ்சநாள் போனால் நீயே என்னை வேணாம்னு மறந்துடுவியோ என்னவோ… நானும் உன்னை விட்டு இருப்பனா தெரியலை. உன்னை விட்டு தள்ளி போனால் தான் எனக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். பார்த்து பத்திரமா இருடி.. சந்தோஷமா இருக்கனும் அமுல்பேபி” என அவள் நெற்றியில் முத்தமிட்டு விலகி நடந்தான்.
நேராக பெரியவர்களின் அறைக்கு வந்து கதவை மெல்ல தட்டினான். அப்போதுதான் எழுந்திருந்த பாட்டி கதவை திறக்க.. சத்தத்தில் தாத்தாவும் எழுந்து விட.. பெட்டியுடன் நின்ற வீராவை…
“என்னய்யா…. இந்த நேரத்துல பெட்டியோட..” என தாத்தா கேட்க..ஒரு நிமிடம் தயங்கியவன்.. சட்டென சுதாரித்து கொண்டு..
“என் ப்ரண்ட் மேரேஜ் பெங்களூருல இரண்டு நாள் போயிட்டு வந்திடறேன்”
“சரிப்பா… நிகிதாவையும் கூட்டிட்டு போலாம்ல.. நீங்க இரண்டு பேரும் எங்கயும் போனதில்லைல..” என பாட்டி கேட்க…
“இல்ல.. அம்மாச்சி…ப்ரண்ட்ஸ் எல்லாரும் ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்றோம்… யாரும் பேமிலியோட வரல..”
“சரி நிகிதா எங்க.. அவகிட்ட சொல்லிட்டல…”
“அவ தூங்கறா பாட்டி.. நைட்டே சொல்லிட்டேன்.. அவள டிஸ்டர்ப் பண்ண வேணாம்..”
“எப்படி போற..”என தாத்தா கேட்க..
“ப்ளைட்ல..”
“டிரைவர வர சொல்லிட்டயா…”
“இல்ல தாத்தா..கேப் புக் பண்ணியிருக்கேன்..”
“ஏன் நைட்டே டிரைவர கிட்ட வர சொல்லி இருக்கலாம்ல..”
“இல்ல..பரவாயில்லை..”
“சரி பார்த்து போயிட்டு வா.. ” என தாத்தா சொல்ல..
தலையாட்டி விட்டு விறுவிறுவென நிற்காமல் சென்று விட்டான். கேப் வாசலில் தயாராக நிற்க ஏறி அமர்ந்தவன்.. அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை “ஊப்” என விட்டு ஆசுவாமானான்.
ஹப்பா எத்தனை கேள்வி.. சமாளித்து வருவதற்குள் போதும் போதும் என ஆகிவிட்டது. இதில் அவளிடம் சொல்லி இருந்தால் அவ்வளவு தான் கல்யாணத்துக்கு தானே நானும் வரேன் சொன்னாலும் சொல்லுவா..என நினைத்தவாறே.. சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தடைந்தான்.
நிகிதா வீரா சென்ற சிறிது நேரத்திற்கு எல்லாம் எழுந்துவிட்டாள். அருகில் வீரா இல்லை எனவும் நேரமாக ஜாகிங் போயிட்டாங்க போல என நினைத்து கொண்டு குளித்து தயாராகி வந்தாள்.
நிகிதா கிச்சனுக்கு வரவும் பாட்டியும் பின்னோடு வந்தார்.
நிகிதா ப்ரிட்ஜில் இருந்து பாலை எடுத்து காய்ச்சி டீ போட்டு நான்கு கோப்பைகளில் ஊற்ற.. பாட்டி புரியாமல் பார்த்தார்.
“நிகிதா.. யாருக்கு இன்னொரு கப்” என கேட்க.. இப்போது நிகிதா புரியாமல் பாட்டியை பார்த்தாள்.
“ஏன் கீரேனீ உங்களுக்கு தாத்தாவுக்கு எனக்கு மாமாவுக்கும்..” என்றாள்.
பாட்டிக்கு இவளிடம் அவன் சொல்லி விட்டு செல்லலையா.. என லேசாக அதிர்ச்சி.. ஒருவேளை இருவருக்குள் ஏதாவது சண்டையா..என நினைத்தவர் அதை அவளிடம் கேட்கவும் செய்தார்.
“உங்களுக்குள்ள ஏதாவது சண்டையா.. நீ அவனிடம் ஏதாவது மரியாதை குறைவா பேசினியா..”
நிகிதாவிற்கு இன்னும் விசயம் தெரியாததால் இது எல்லாம் எதுக்கு கீரேனீ கேட்கறாங்க…நேத்து மாமா ஏதோ டென்ஷன்ல இருந்தாங்க தான்…ஆனா அதுக்கு அப்புறம் தான் என்கிட்ட அவ்வளவு காதலா… ரிலாக்ஸ் ஆகி தூங்கிட்டாங்களே..
“எதுக்கு கீரேனீ கேட்கறிங்க.. அப்படி எல்லாம் எதுவும் இல்லையே..”என மறுப்பாக தலை அசைத்தாள்.
“இல்ல..உன்கிட்ட சொல்லாம எப்படி போனான்..”
அவள் முகத்தில் சட்டென ஒரு பதட்டம் வந்து ஒட்டி கொண்டது.
“எங்க போயிட்டாங்க.. எங்கிட்ட எதுவும் சொல்லயே..”
“பெங்களூரு ப்ரண்ட் கல்யாணத்துக்கு போறேனு நாலரை மணிக்கு எங்கிட்ட சொல்லிட்டு போனானே.. கேட்டதுக்கு உன்கிட்ட நைட்டே சொல்லிட்டேனானே.. உங்கிட்ட சொல்லலையா..”
முணுக்கென கண்களில் நீர்.
பாட்டி அவளை பார்த்து கொண்டு இருந்தவர் “எதுக்கு கண்ணு கலங்கற.. நீ தூங்கிட்டு இருந்ததால சொல்லாம போயிருக்கலாம். போன் பண்ணுவான். இல்லாட்டி மெசேஜ் ஏதாவது போட்டு இருப்பான் பாரு..”
உடனே தங்கள் அறையில் இருந்த தனது போனை பார்க்க ஓடினாள்.போனை எடுத்து பார்த்தவளுக்கு ஏமாற்றமே.. மிஸ்டு கால் மெசேஜ் எதுவும் இல்லை.. அப்படியே சோர்வாக அமர்ந்து விட்டாள்.என்னவோ பெண் மனதில் சொல்ல முடியாத அலைப்புறுதல்.
எங்கிட்ட சொல்லாம போயிருக்காங்க..நைட் நடந்த சண்டை.. அதன் பிறகான சமாதானம்… அதில் சொல்ல மறந்திருந்தா கூட.. காலைல எழுப்பி சொல்லிட்டு கிளம்பியிருக்கலாமே… ஏன் சொல்லாம போனாங்க.. சொன்னால் நானும் வரேனு சொல்வேனு நினைச்சு சொல்லாத போயிட்டாங்களா.. நீ வேணாம்னு சொன்னா நான் என்ன பிடிவாதமா பண்ண போறேன்.. சொல்லிட்டு போயிருக்கலாமே…என மனதில் பல குழப்பங்கள்..
மாமாவுக்கு அழைக்கலாமா… பெங்களூரூ ரிச் ஆகியிருப்பாங்களா… எத்தனை மணி ப்ளைட்ல போனாங்களோ தெரியலையே.. என யோசித்தவள் அவனின் எண்ணிற்கு அழைக்க.. தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக அறிவிக்கவும்.. இன்னும் போய் சேரவில்லையா…என நினைத்தவள் உடனே தனது போனில் அன்றைய பெங்களூரூ ப்ளைட் அட்டவணையை பார்க்கலானாள்.
அவன் வீட்டில் இருந்து கிளம்பிய நேரத்திற்கு ரீச்சாகியிருக்கலாம். என்னவோ தெரியலையே.. ஒருவேளை ப்ரண்ட்ஸ் பார்த்ததும் போனை ஆன் பண்ண மறந்துட்டாங்க போல.. கொஞ்ச நேரம் கழித்து பார்க்கலாம் என தன்னை சமாதானம் செய்து கொண்டவள்… சிறிது நேரத்தில் அழைக்க.. சுவிட்ச்ஆப் என வர..
மதியம் வரை இப்படியே சுவிட்ச்ஆப்னு வர…இவளுக்கு வெவ்வேறு சந்தேகங்கள் எழ…
உடனே அவனது வார்ட்ரோப்பை திறந்து பார்க்க.. அங்கு அவனது பாஸ்போர்ட் சர்ட்டிபிகேட்ஸ் எதுவும் இல்லை..இல்லை பெங்களூரு செல்லவில்லை.. வேறு எங்கோ சொல்லாமல் சென்று இருக்கார்.
உடனே தன் அத்தைக்கு அழைத்தாள்.
விசாலா எடுத்ததும் “அத்தை..மாமா..உங்களுக்கு போன் பண்ணினாரா..”
“என்னடா நிகிதா கண்ணு.. மூனு நாளைக்கு முன்னாடி போன்பண்ணினான். ஏன் என்னாச்சு..”
” இல்ல ப்ரண்ட் கல்யாணத்துக்கு பெங்களூரூ போறேன்னு இங்க சொல்லிட்டு போயிருக்காரு..ஆனா பெங்களூரு போன மாதிரி தெரியல.. அதான் உங்ககிட்ட ஏதாவது சொன்னாறா..”
“இல்லையேடா கண்ணு.. எங்களுக்கு ஏதும் பண்ணலையே.. நீ பதட்டப்படாதாடா வந்துருவான்”
இவங்களுக்கு ஒன்னும் தெரியல.. இவங்கிட்டயும் சொல்லல போல.. சம்திங் ராங்..என நினைத்தவளுக்கு பதட்டம் கூடி அழுகை பொங்கி கொண்டு வர.. அறையை விட்டு படிகளில் தடதடவென இறங்கி ஓடினாள். நிகிதா இறங்கி வரும் வேகத்தை கண்டு தாத்தா பாட்டி இருவரும் என்னவோ என பதறி எழுந்து வர…
நேராக அவர்களிடம் வந்தவள் கதறி அழுது கொண்டே..
“மாமா.. பெங்களூரூ போகலை.. வேற எங்கயோ போயிட்டாங்க.. என்னை விட்டுட்டு போயிட்டாங்க..” வெடித்து கதறி அழுக…
இருவரும் அவள் சொன்னதில் திகைத்து பார்க்க..
தாத்தா”நிகிதா.. அப்படி தான சொன்னான்.. எப்படி இல்லைங்கற..”
“பொய் சொல்லிட்டு போயிருக்காங்க.. அவங்க பாஸ்போர்ட் சர்ட்டிபிகேட்ஸ் எதுவும் இங்க இல்ல… போனையும் சுவிட்ச்ஆப் பண்ணி வச்சிருக்காங்க..” அழுது கொண்டே சொல்ல.. அவள் சொன்ன விசயங்களில்பெரியவர்களும் கலங்கி போயினர்.
அப்போது பாட்டி “இது ஆடி மாசம்ல இந்த மாசத்துல யாரும் கல்யாணம் வைக்கமாட்டாங்களே.. இந்த பய நம்மள ஏமாத்திட்டானே..” என ஆதங்கப்பட..
உடனே வெங்கட்டை வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.
வீட்டுக்கு வந்த வெங்கட்டும் என்ன செய்வது என திகைத்து போனார். நிகிதாவோ விடாமல் அழுது கொண்டே இருக்க..மகளை பார்த்து பயந்து போனார்.
சொக்கலிங்கம் வெங்கட்டிடம் “போன் போட்டு விசாலாவையும் அவ புருஷனையும் உடனே வர சொல்லுடா” என கத்தினார்.
அடுத்த ஒருமணி நேரத்தில் விசாலாவும் அய்யாவும் பதறியடித்து வந்தனர்.
அதற்குள் வெங்கட் தன் செல்வாக்கை பயன்படுத்தி வீரா பெயரை சொல்லி அன்று சென்ற அனைத்து வெளிநாட்டு விமானங்களில் சார்ட் லிஸ்டில் உள்ளதா என விசாரிக்க… கனடா சென்ற ப்ளைட் பேஸஞ்சர் லிஸ்ட்ல வீராசாமி அய்யாவு என்ற பெயர் உள்ளதை கண்டு பிடித்தார். அதை கேட்டு வீட்டினர் கோபத்தில் கொதித்து போயினர்.
விசாலா தம்பதியரும் வந்துவிட.. அவர்களுக்குமே வீரா செய்தது அதிர்ச்சி தான். அந்த அதிர்ச்சியை விட நிகிதாவின் அழுகையை கண்டு பயந்து போயினர்.
அய்யாவு மூலம் வீராவின் நண்பர்களை தொடர்பு கொண்டு விசாரிக்க.. எல்லோரும் தெரியாது என சொல்ல.. ஒருத்தன் மட்டும் கல்யாணத்திற்கு முன்பே வேலைக்கும் வெளிநாடு செல்வதற்கும் எல்லா ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்ததும்.. இரண்டு வருட கான்ட்ராக்டில் கனடா சென்று இருப்பதாக சொல்ல.. மொத்த குடும்பமும் நிலை குலைந்து போயினர்.
இவர்களை பார்த்ததும் சொக்கலிங்கம் “விசாலா உம்மவன்.. பண்ண காரியத்த பார்த்தியா.. எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். பொறுப்பா எல்லாம் பார்த்துகிடுவான் தான..இப்படியா விட்டுட்டு ஓடுவான்..”
அவர்கள் என்ன சொல்வார்கள் அவர்களுமே வீரா இப்படி செய்வான் என நினைத்து பார்க்கவில்லையே…தலை குனிந்து நின்றனர். அவர்கள் பேசாமல் இருக்க.. வெங்கட்டிற்கும் கோபம் தலைக்கேற…
“அக்கா பதில் சொல்லு.. வீரா உங்ககிட்ட சொல்லிட்டு தான் போனானா.. பேசாம இருந்தா என்ன அர்த்தம்..”
அய்யாவு “வீரா பொறுப்பில்லாதவன் இல்ல.. அவன் இப்படி செய்ய.. ஏதோ காரணம் இருக்கும்..” என மகனுக்காக வக்காலத்து வாங்க..
“என்ன வேணா இருக்கட்டும் அத சொல்லிட்டே போயிருக்கலாம்ல.. எதுக்கு இப்படி சொல்லாம கொள்ளாம ஓடனும்.. ஓடறவன் என் பொண்ண கட்டிகிடறதுக்கு முன்னாடியே ஓடி இருக்கலாம்ல…”என வெங்கட் கோபத்தில் வார்த்தைகள் விட..
“மச்சான் வார்த்தைய பார்த்து பேசு..என் மகன் ஒழுக்கம் கெட்டவன் இல்ல.. வீட்டுக்கு பெரியவர் சொன்னாரேனு அவனுக்கு விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணி வச்சு தப்பு பண்ணிட்டேன்” என பதிலுக்கு திருப்பி பேச..
சொக்கலிங்கம் “பேரனுக்கு பேத்திக்கும் கல்யாணம் பண்ணி வச்சா ஒன்னுக்குள்ள ஒண்ணா போயிடும். எங்களுக்கு பிறகும் குடும்பமும் உடையாம இருக்குமேனு நினைச்சு தான் கல்யாணம் பண்ணி வச்சேன்” என ஆதங்கப்பட..
இவர்களுக்குள் சண்டை போட்டு கொள்ள…
“எல்லாம் கொஞ்சம் நிறுத்தறிங்களா..” என கூச்சலிட்டாள் நிகிதா. எல்லோரும் அதிர்ந்து பார்க்க..
“என்ன ஒருத்தரை ஒருத்தர் குத்தம் சொல்லிகிட்டு இருக்கறிங்க.. என் வாழ்க்கையே போச்சு உங்களுக்கு அதை பத்தி கவலயில்ல.. சண்டை போட்டுட்டு இருக்கறிங்க..”
“நிக்கி பேபி..” என ரோஹிணி வந்து அணைக்க.. அவரை பிடித்து தள்ளிவிட்டாள்.
வெங்கட்”நிக்கி..”என அதட்ட..
“உங்க பொண்டாட்டிய தள்ளி விடவும் இவ்வளவு கோபம் வருதா..இவங்க என்னைக்காவது வீட்ல இருந்து பொறுப்பா எங்கள வளர்த்திருங்காங்களா.. இவங்களுக்கு இவங்க ப்ரண்ட்ஸ் கிளப் இதுதான் முக்கியம்.. உங்களுக்கு உங்க பிசினஸ் தான் பெரிசா போச்சு.. ஒரு நாளாவது நாங்க சாப்பிட்டமா..படிச்சமா.. அன்பா கேட்டு இருக்கறிங்களா..”
தாத்தாவும் கீரேனியும் வரலைனா நாங்க என்னவாகியிருப்போம் நினைச்சு
பார்க்கவே பயமா இருக்கு ”
“நீங்க பொறுப்பா இருந்திருந்தா என் ப்ரண்ட்ஸால தப்பான வழிக்கு போயிருக்க மாட்டேன்.. அதனால இவங்க.. அவங்க பேரனுக்கு கட்டி வச்சிருக்க மாட்டாங்கல்ல.. ஒரு பேரண்ட்ஸா நீங்க எங்களுக்கு நியாயம் செய்யல..”
அடுத்து தாத்தா பாட்டியிடம் ” உங்க பேரன் பொறுப்பானவர் தான கட்டி வச்சிங்க… பொறுப்பானவன் இப்படி தான் பொண்டாட்டிய விட்டுட்டு ஓடுவானா..வச்சு வாழற மாதிரி இருந்தா தாலி கட்டி இருக்கனும் இல்லையா..”
அடுத்து அய்யாவுவிடம் வந்தாள். யாரையும் விட்டு வைக்கவில்லை அவளுக்கு அளவுக்கு அதிகமான கோபம் ஆத்திரம். ஒருத்தரையும் விட்டு வைக்க தயாராக இல்லை. வீரா சிக்காத கோவத்தை அனைவரிடம் காட்டி கொண்டு இருந்தாள்.
“உங்க மகனுக்கு பொண்டாட்டிகிட்ட தான் சொல்ல தான் முடியல.. பெத்தவங்கிட்டயாவது சொல்லிட்டு போகனும்னு அறிவில்ல… இப்படி ஒரு பொறுப்பில்லாதவரை தான் நம்பி என் வாழ்க்கையை ஒப்படைச்சிங்க எல்லாரும்.. இப்ப உங்களுக்கு ஒரு கஷ்டமோ நஷ்டமோ இல்லை… நான் தான என் வாழ்க்கைல அடுத்து என்ன பண்ண தெரியாம நிக்கறேன்”
சர வெடியாக வெடித்தாள்.யாரிடம் அவள் கேள்விக்கு பதிலில்லை. அவளுக்கு கேட்டது போதவில்லை. மனம் ஆறவில்லை.
நான் இவன் மேலே இத்தனை காதலாக இருக்க.. இவனுக்கு என் காதல் புரியவில்லையா.. என் நேசத்தை உணரவிலாலையா..நான் தான் இவன் மேல் பைத்தியமாக இருந்தேனா.. என நினைத்து மருகினாள்.
இப்போது தான் அவளுக்கு தெளிவாக ஒன்று புரிந்தது. என்றைக்கு என் மேல் ஆசை வந்திருக்கு.. எப்பவும் நானே தானே அவனை அணைத்திருக்கேன்.. என் ஆசையை அவனிடம் நெருங்கி பலவழிகளில் தெரியப்படுத்தினால் மட்டுமே அவன் நெருங்கியிருக்கான்.. அவனாக இதுவரை அணைத்திருக்கவில்லையே.. இப்போ மேல விழும் வேசி போல தன்னை நினைத்து அருவருத்து போனாள்.
அருவருப்பில் குமட்டி கொண்டு வர.. ஓடி சென்று வாந்தி எடுத்தாள். வாந்தி எடுக்கவும் எல்லோரும் முகத்திலும் ஆராய்ச்சி பார்வை..
வாயை கொப்பளித்து கொண்டு வந்தவளுக்கு இவர்களின் பார்வையின் அர்த்தம் புரிந்ததும் அடிவயிறு பத்தி கொண்டு வந்தது.
“என்ன .. நீங்க நினைக்கற மாதிரி.. இங்க ஒன்னும் இல்லை..” அடிவயிறை தட்டி சொன்னவள்..
“வாழ்ந்தானே இருக்கும்… வாழவே இல்லையே.. எப்பவும் உங்க பேரன் என்ன தள்ளி தான் வச்சிருந்தாரு..” என அவனாக மனைவியாக உரிமை எடுத்து கொள்ளாத ஆத்திரத்தில் சொல்ல.. பாட்டியை தவிர மற்றவர்கள் எல்லாம் இவர்களுக்குள் எந்த ஒட்டு உறவில்லை என நினைத்தனர். ஆனால் பாட்டியோ இல்லையே என் பேரன் இவளோடு குடும்பம் நடத்தியிருக்கானே.. இவள் என்ன இப்படி சொல்கிறான் ஏன குழப்பம் கொண்டார்.
வெங்கட்டோ “நிக்கி பேபி நீ கவலப்பாடதா பேபி.. அவன் இந்த உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும் நான் இழுத்து கிட்டு வரேன்”
“எப்ப நான் வேண்டாம்னு விட்டுட்டு போனாரோ.. இனி எனக்கும் அவரு வேண்டாம்..இதுநாள் வரை அவரு மனசு ஒத்து என்னோட வாழல.. இனி அவரா வந்தாலும் என் மனசு ஏத்துக்காது. எனக்கு அவரு வேண்டாம்”
“அப்ப அவன டைவர்ஸ் பண்ணிட்டு உனக்கு வேற நல்ல வாழ்க்கை அமைச்சு தரேன்”
“வெங்கட்”
“தம்பி”
“மச்சான்”
என எல்லோரும் ஆட்சேபிக்க..
நிகிதாவோ டைவர்ஸ் என்ற வார்த்தையில் ஸ்தம்பித்து போனாள்.அவன் மேல் கோபம் தான். அவன் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்ளகூடாது என நினைக்கிறாள் தான். ஆனால் ஒரே நாளில் டைவர்ஸ் என்ற வார்த்தையை அவளால் ஜீரணிக்க முடியவில்லை அதுவே இன்னும் கோபத்தை கூட்ட..
“உங்களுக்கு என்னை பார்த்தா நீங்க ஆட்டி வைக்கற பொம்மை மாதிரி தெரியுதா.. வீராவ கட்டிக்க சொன்னிங்க.. இப்ப அவன் ஓடிட்டானதும்.. இன்னொருத்தனா.. உங்களுக்கு அசிங்கமா இல்லை.. நீங்க எப்பவும் எனக்கு நல்லா அப்பாவ இருக்க போறதில்லை.. இனி இந்த வீட்ல நான் இருக்கமாட்டேன்..” என்றவள்..
யாரிடமும் எதுவும் பேசாமல் மகனின் செயலை நினைத்து சத்தமின்றி அழுது கொண்டு இருந்த விசாலாவிடம் சென்றவள்..
“அத்தை நான் உங்க வீட்டுக்கு வரட்டுமா.. ஆனால் உங்க மருமகளா இல்ல.. உங்க தம்பி பொண்ணா..எப்பவும் எதையும் எதிர்பார்க்காம நீங்க காட்ற பாசத்துக்காக தான் உங்க வீட்டுக்கு வரேன்.. உங்க மகனை பத்தி எப்பவும் பேசகூடாது அப்படினா வரேன்.. இல்லைனா நான் எங்கயாவது லேடீஸ் ஹாஸ்டல் பார்த்துகிறேன்” என்றாள்.
விசாலா என்ன சொல்ல என தெரியாமல் தன் கணவரையும் தந்தையும் பார்க்க இருவருமே நிகிதா அறியாமல் சரி சொல் என்பதாக தலை ஆட்ட..
” நான் அவன பத்தி உன்கிட்ட பேசமாட்டேன் வாடி ராசாத்தி நம்ம வீட்டுக்கு போகலாம்” என கைபிடித்து அழைக்க.. தன் உடமைகளை எடுத்து கொண்டு நிகிதா கிளம்பிவிட்டாள்.
இருபத்தியொரு மணிநேரம் பயணத்திற்கு பிறகு கனடா சென்று இறங்கினான் வீரா..இவனை விமான நிலையத்திற்கே வந்து அவன் நண்பன் அழைத்து அவனுடைய ப்ளாட்கு அழைத்து சென்றான்.
வீராவால் கனடா குளிரை தாங்க முடியவில்லை. அவன் அதிக துணிகள் கொண்டு வர முடியாததால் அவன் கொண்டு வந்த சாதாரண ஜெர்கினால் குளிர தாங்க இயலவில்லை.
குளிருக்கு ஏதாவது கதகதப்பாய் வேண்டும் என நினைத்த நொடி..நிகிதாவின் வெம்மை கொண்ட தேகமே… அவளை இறுக்கி அணைத்தால்தான் இந்தகுளிரை அடக்கமுடியும். அவனின் எண்ணம் செல்லும் பாதையை கண்டு திகைத்தான். அவளை விட்டு பிரிந்து முழுதாக இருபத்திநாலு மணிநேரம் கூட ஆகவில்லை அதற்குள் அவளை நாடும் தன் புத்தியை தானே காறி துப்பி கொண்டான்.
உறவாய் நெருங்கியவள் மனமோ வேணாம் என ஒதுக்கி செல்ல.. உறவை வெட்டி சென்றவன் மனமோ வேணும் என நினைக்க… விதி விளையாடும் விளையாட்டின் ஆரம்பம் இனி தான்..